கிறிஸ்டி டீச்சர் வீட்டுக்கு டியூஷனுக்குப் போகும் போதெல்லாம் டெட்டால் வாசமடிக்கும். டீச்சரின் தகப்பனார் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்தார். அதனால்தான் டெட்டால் வாசம். இத்தனைக்கும் என் கண்ணுக்கு டெட்டாலோ, வேறேதும் மருந்துகளோ தட்டுப்பட்டதேயில்லை. ராதாகிருஷ்ணன் டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்குக் காட்டப் போகும் போது அங்கு கிறிஸ்டி டீச்சர் வீட்டுவாசமடித்தது. அப்போதுதான் அது ஆஸ்பத்திரி வாசம் என்று எனக்கு பிடிபட ஆரம்பித்தது. ஹைஸ்கூலுக்குப் போன பிறகு நான் கிறிஸ்டி டீச்சரைப் பார்க்கவேயில்லை, இன்றுவரை. ஆனால் ஒவ்வொரு ஆஸ்பத்திரி வாசத்திலும் காட்டன் புடவையணிந்த, ஒல்லியான, எப்போதும் பவுடர் பூசிய கிறிஸ்டி டீச்சரின் முகம் என் நினைவுக்கு வந்து போகிறது.

நண்பன் குஞ்சுவின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறது, இருட்டு லாலாக்கடை மாமாவின் வீடு. அவர் வீட்டுக்கு அருகேயே இன்னொரு வீட்டில்தான் இருட்டுக் கடை அல்வா தயாராகிறது. குஞ்சுவின் வீட்டைத் தாண்டும் போதே நெய்கலந்த ஒரு இனிப்பு வாசம் சுற்றிச் சுற்றி வரும். பழக்கப்பட்டு விட்டதால் அங்குள்ள ஜனங்கள் அந்த வாசத்தை சட்டை பண்ணுவதில்லை. அந்த வாசத்தைக் கடந்து செல்பவர்களில் யாரேனும் ‘ஏ எப்பா, என்னமா மணக்கு’ என்று மூச்சை இழுத்துச் சொல்லி வாசம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்து சென்றார்களானால் அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்று எங்களுக்கு தெரிந்துவிடும். இருட்டு லாலா மாமாவிடம் ஒரு நாளும் அல்வா வாசமடித்து நாங்கள் பார்த்ததில்லை.

வேறொரு லாலாக்கடையில் சரக்கு போடும் நண்பன் சந்திரஹாஸன் தூரத்தில் வரும்போதே டால்டா வாசம் நம் மூக்கை வந்து முட்டும். ‘எல, கட்டையன் வாரான் போலுக்கு’ என்பான் குஞ்சு. இத்தனைக்கும் சந்திரஹாஸன் வேலை முடிந்து வீட்டுக்குப் போய் நன்றாகக் குளித்து முழுகி வேறு உடை அணிந்துதான் வருவான். டால்டா வாசம் அவன் உடம்புடனே தங்கிவிட்டது. ‘எல, இவன் என்னத்தெ குளிச்சாலும் இந்த டால்டா வீச்சம் போக மாட்டக்கெ’. அவன் காதுக்குக் கேட்டால் கஷ்டப்படுவான் என்பதால் நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக் கொள்வோம்.

சுருட்டு வாசத்தை எங்களுக்கு முதன்முதலில் காண்பித்தது சண்முகம் பிள்ளை. பேப்பர் போடும் சண்முகம் பிள்ளை நடந்தே திருநெல்வேலியைச் சுற்றி வருபவர். திருநெல்வேலியின் எல்லா தெருக்களிலும் அவரை பார்க்கலாம். மடித்து கட்டிய வேட்டியும், மேல் துண்டும் அணிந்திருப்பார். நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருக்கும் பேப்பர், புத்தகங்கள். அவர் மார்போடு மார்பாக எங்களின் நாயகர்களான இரும்புக்கை மாயாவி, ரிப் கிர்பி, டெஸ்மாண்ட், மந்திரவாதி மாண்ட்ரேக், லொதார், சுட்டிக் குரங்கு கபிஷ், வேட்டைக்காரன் மாத்தையா என எல்லோரும் சாய்ந்திருப்பர். சண்முகம் பிள்ளையின் வாயில் எப்போதும் சுருட்டு புகைந்து கொண்டிருக்கும். அதை பாதியைச் சவைத்துத் தின்றிருப்பார். பக்கத்தில் வந்தால் நாற்றம் முகம் சுளிக்க வைக்கும்.

‘அண்ணாச்சி, இந்த நாத்தத்தை எப்படி குடிக்கியெ? சை . . .’

மூக்கைப் பொத்திக் கொண்டு கேட்போம்.

‘நாத்தம் ஒங்களுக்குத்தானடே!’

சுருட்டின் நுனியைச் சவைத்துக் கொண்டே சொல்வார்.

வாழ்க்கையில் காபி குடித்து பழக்கமில்லாத எனக்கு காபி வாசமென்றால் அது ஆறுமுகச் சித்தப்பாதான். நரசுஸ் காபிக்கடையின் மேனேஜராக நீண்ட நாட்கள் வேலை பார்த்த ஆறுமுகம் சித்தப்பாவை நாங்கள் அழைப்பதே ‘நரசுஸ் சித்தப்பா’ என்றுதான். அந்த காலத்தில் நெல்லையில் புகழ் பெற்ற நாடக நடிகர். கலாட்டா கல்யாணம் படத்து சிவாஜி சாயலில் இருப்பார். பெரும்பாலும் வேட்டி சட்டைதான் உடையென்றாலும் பேண்ட் ஷர்ட்டும் அணிவதுண்டு. பெயருக்கேற்ப சித்தப்பாவின் வேட்டி சட்டையெங்கும் காபி மணக்கும். அதுவும் நரசுஸ் காபி. ‘சித்தப்பாவை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு ஒரு தம்ளர்ல சூடா வெந்நி குடிச்சாலும் காபி குடிச்சாப்புல இருக்கும்லா’. நைஸாகச் சீண்டுவான் கணேசண்ணன். ‘ஆனா ஒன்கிட்ட வந்தாலே கிரகப்பிரவேசத்துக்குப் போன மாதிரிலாடே இருக்கு’ என்பார் நரசுஸ் சித்தப்பா. கணேசண்ணன் நன்றாகப் படித்து ஏதேதோ வேலை பார்த்து இப்போது வீடுவீடாக வெள்ளையடித்து வருகிறான். சுண்ணாம்பு, பெயிண்ட் என கலந்து கட்டி எப்போதும் ஒரு புது வீட்டுவாசம் அவன் மீது அடிக்கும்.

கோடை விடுமுறைக்கு ஆழ்வார்குறிச்சியில் அம்மையின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நெல் அவித்துக் கொண்டிருப்பார்கள். வெயிலோடு இந்த புழுங்கல் வாடையும் சேர்ந்து கொண்டு ஒருவித கதகதப்பான மணம் வீசும். இப்போது அங்கு நெல்லெல்லாம் அவிப்பதில்லை. ஆனால் அந்த வாசம் மட்டும் அந்த வீட்டிலேயே தங்கிவிட்டதாகத்தான் தெரிகிறது. கல்யாண வீடுகளின் ஆக்குப்புரைகளில் வீசும் சோற்று வாசமும், குழம்புக் கொதியின் வாசமும் எனக்கு ஏனோ நெல் அவிக்கும் வாசத்தோடு சேர்ந்து ஆழ்வார்குறிச்சியின் ஞாபகத்தை ஏற்படுத்தும்.

நண்பன் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் சாம்பிராணி வாசமடிக்கும். அவனது ஆச்சிக்கு சாம்பிராணி வாசமில்லையென்றால் வீட்டில் இருக்கவே பிடிக்காது என்பார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் ஏதோ ஒரு மூலையில் கொளுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாம்பிராணியின் புகை வீடு முழுக்க தவழ்ந்து வரும். இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். வீட்டின் முகத்தைத் திருத்தி உள்ளேயும் ஏதேதோ வாஸ்து மாற்றங்கள் செய்து பழமையை இழந்து அந்த வீடு அதே இடத்தில் வேறொரு வீடாய் நின்றுகொண்டிருக்கிறது. உள்ளே சாம்பிராணி வாசம் அடிக்கிறதா என்று போய் பார்க்கவில்லை.

திருநெல்வேலியில் அப்போதெல்லாம் கையிலுள்ள டேப்பைத் தட்டி பாடியபடியே ஒரு சாய்பு வருவார். நீண்ட தாடியுடன் அநேகமாக பச்சை நிற நீள அங்கியும், கூம்புவடிவக் குல்லாவும் அணிந்து கொண்டு வீடு வீடாக வந்து வாசலில் நின்று பாடுவார். காசு கொடுத்தவுடன் தன் தோள்ப்பையிலிருக்கும் விதவிதமான குச்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து சிறுவர்களுக்குக் கண்மை வரைந்து விட்டு செல்வார். நெருக்கமாக அவரிடம் கண்மை வரைவதற்கு கண்ணைக் காட்டிக் கொண்டு நிற்கும் போது ஒரு வாசமடிக்கும். அப்போது அது என்ன வாசமென்று தெரியவில்லை. ‘கண்மைசாய்பு’ வாசம் என்றுதான் அதற்கு பெயர் வைத்திருந்தோம். பின்னர் வெகுகாலத்துக்குப் பின் சர்வோதய சங்கத்தில் ஜவ்வாது வாங்கியபோதுதான் ‘கண்மைசாய்பு’ வாசத்தின் உண்மையான பெயர் தெரிய வந்தது.

குட்டிக்குரா பவுடரை இப்போது நான் எங்குமே பார்க்கவில்லை. சின்ன வயதில் அந்தப் பவுடரின் வாசத்துடனேயேதான் வளர்ந்தேன். ஸ்டேட் பேங்கில் வேலை பார்க்கும் எனது பெரியண்ணன் குட்டிக்குரா பவுடர்தான் போடுவான். எல்லோரையும் போல முகத்துக்கு மட்டுமல்ல. முகம், கழுத்து, கை, கால் என குட்டிகுராவில் குளித்து எழுவான். அவன் பேங்க் முடிந்து தெரு முக்கு திரும்பும் போதே ‘பெரியண்ணன் வாரான்’ என்று சொல்லிக் கொள்வோம். வயதாக ஆக அவனது முடி முழுதும் கொட்டிப் போக பிறகு குட்டிக்குரா அவனது தலையிலும் இடம் பிடித்து விட்டது. அண்ணனின் புண்ணியத்தில் இத்தனை ஆண்டுகளில் இப்போது நினைத்தாலும் குட்டிக்குரா பவுடரின் வாசத்தை என்னால் உணர முடிகிறது.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று என் வீட்டுக்கு வந்த உதவி இயக்குனர் தியாகு ‘ஸார், கீழே யார் வீட்டிலயோ இன்னைக்கு மீன் கொழம்பு’ என்றான். குஞ்சுவும் இப்படித்தான். யார் வீட்டில் உப்புமா கிண்டினாலும் தெருவில் நடந்து போகும் போதே சொல்லிவிடுவான். இதைவிட கொடுமை, எங்காவது கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தாலே அவன் மூக்கு கண்டுபிடித்துவிடும். அந்த விதத்தில் அவன் ஒரு உசத்தியான நாய். தாமிரபரணியில் குளிக்கும் போது யார் யார் என்னென்ன சோப் போடுகிறார்கள் என்பதை பார்க்காமலேயே சொல்லும் திறன் அவன் மூக்குக்கு உண்டு. மீனாட்சி ஒரு படி மேல். ‘சித்தப்பா, அந்த அக்கா தலைக்கு வேப்பெண்ணெ தேச்சிருக்கா’ என்பான். தாமிரபரணியை நினைவு கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், லை·பாய் சோப் வாசத்தோடுதான் தாமிரபரணி என் கண்முன் ஓடுகிறது. கூடவே கோபால் பல்பொடி வாசமும். மேலுக்கும், வேட்டிக்கும் லை·பாய் சோப்பையே பயன்படுத்தும் மனிதர்களை நான் அதிகம் தாமிரபரணியில் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டில் கிறிஸ்டி டீச்சரைப் பார்த்ததாக குஞ்சு சொன்னான். முன்னை விட இப்போது டீச்சர் குண்டாகியிருப்பதாகவும், உடன் வளர்ந்த இரண்டு பையன்கள் இருந்தனர் என்றும் சொன்னான். தன்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லையென்பதால் தான் போய் அவர்களிடம் பேசவில்லை என்றான். ‘நீ எப்பவும் சொல்லுவியே, ஆஸ்பத்திரி வாட. அது அவங்ககிட்டெ இல்லயே’ என்ற குஞ்சுவிடம், ‘அப்படின்னா அது கிறிஸ்டி டீச்சர் இல்ல’ என்றேன்.

[email protected]

2 thoughts on “வாசம்

  1. எஸ்.கெ பொற்றேகாட் எழுதிய ஒரு தேசத்தின்றெ கதா[ தமிழில் ஒரு கிராமத்தின் கதை. சாகித்ய அக்காதமி. சி ஏ பாலன் மொழியாக்கம்] நூலில் ஒரு சம்பவம். இரவில் ஸ்ரீதரன் ஒரு தெருவில் நின்றிருக்கிறான். பக்கத்து பங்களாவில் இருந்து டயர் எரியும் வாசனை. அய்யோ என்று பதறினால் கூட இருந்த ரிக்ஷாக்காரர் சிரித்தபடி ”ஆகா டாக்டர் சாகிபுக்கு மூடு வரும் நேரமாச்சே என்கிறார்”

    அதை அவர் விளக்குகிறார். டாக்டர் சின்னப்பையனாக இருந்தபோது முதமுதலாக உறவு வைத்துக்கொண்டது ஒரு நரிக்குறத்தியிடம். அவள் அப்போது டயரை எரித்து சமையல்செய்துகொண்டிருந்தாள். இவர் மனதில் அந்த வாசனையும் அனுபவமும் ஆழமாக தங்கிவிட்டது. பின்னாளில் கொஞ்சம் டயர் எரியும் வாசனை வந்தால் நன்றாக மூட் செட் ஆக ஆரம்பித்தது. வயதானபின் டயர் எரியும் வாடை இல்லாமல் முடியாது என்றாகிவிட்டது. அது ஒருவகை நறுமணம்.

    கல்பற்றா நாராயணனின் கவிதைவரி

    அனைவருக்குமே இருக்கும்
    பிடித்த ஒரு துர்வாசனை
    பிடித்த ஒரு அவலட்சணம்
    நறுமணங்களையும் அழகையும் விட மேலானதாக

  2. எனக்கு பச்சைமீன் வாசனை பிடிக்கும். இப்போது அது ஏன் என நினைத்து பார்க்கிறேன்.

    நான் பிறந்து வளர்ந்தது சென்னை, திருவல்லிக்கேணியில். கடற்கரை எங்கள் விளையாட்டு மைதானம். மீனவர்கள் மாலை மீன் கொண்டுவரும்போது வேடிக்கை பார்த்தவாறு நின்றிருப்போம்.

    ஒரு கவலையும் இல்லாத ஆனந்தமயமான இளமைக் காலத்தை இப்போதுகூட எங்கிருந்தாவது மீன் வாசனை வந்தால் நினைவுகூர்வதாலேயே அந்த வாசனை பிடிக்கும் என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

Comments are closed.