உச்சிமாளி

மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைனி மஹாகாளி எப்படி திருநெல்வேலி வந்து சேர்ந்தாள் என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் அனேகமாக எல்லாத் தெருக்களிலும் ஒரு உஜ்ஜைனி மஹாகாளி கோயிலைக் காணலாம். ஆனால் உஜ்ஜைனி மஹாகாளியை உச்சினிமாகாளியாக்கி, பின் தாம் சொல்வதற்கு சௌகரியமாக உச்சிமாளியாக்கிக் கொண்டார்கள் நெல்லைவாசிகள். (திருநெல்வேலியை திருநவேலியாக்கியது போல) நூறாண்டுகளுக்குள்தான் உச்சிமாளி நெல்லை வந்து சேர்ந்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்து அம்மன் சன்னதியில் ஒரு உச்சிமாளி, கீழப்புதுத்தெருவில் ஒன்றுக்கு இரண்டு, தாமிரபரணி ஆற்றுக்குப் போகும் வழியில் திருப்பணி முக்கில் மற்றொருத்தி. பெரும்பாலும் பிராமணர்களல்லாதவரே உச்சிமாளி கோயில் விசேஷங்களில் கலந்து கொள்வர். குறிப்பாக வேளாளர்கள். அதற்காக பிராமணர்கள் உச்சிமாளியைக் கும்பிட மாட்டார்கள் என்றில்லை. போகிற போக்கில் உச்சிமாளியைப் பார்த்து ‘சௌக்கியமா’ என்று கேட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.

ஒவ்வொரு உச்சிமாளிக்கும் ஒரு சாமிகொண்டாடி உண்டு. பூசாரியும் உண்டு. கீழப்புதுத்தெரு உச்சிமாளியை கிருஷ்ணபிள்ளைதான் போஷித்து வந்தார். கிருஷ்ணபிள்ளையின் பெரிய தொந்திக்கு நடுவே உருண்டையாகக் கோலிக்காய் சைஸில் தொப்புள் இருக்கும். காய்ச்சல், மன உளைச்சல், வாந்தி பேதி, பேய் பிடித்தல் இவை எல்லாவற்றிற்கும் கிருஷ்ணபிள்ளையிடம் மருந்து உண்டு. முனிசிபாலிட்டிக் குழாயில் பிடித்து சொம்பில் வைத்திருக்கும் அசல் தாமிரபரணித் தண்ணீர்தான் அந்த மருந்து. சொடக்கு போட்டுக் கொண்டே ஒரு பெரிய கொட்டாவியை விட்டு புளீரென நோயாளியின் முகத்தில் செம்பிலிருந்து உள்ளங்கையில் சாய்த்த தண்ணீரை எறிவார். எல்லா வியாதியும் அந்தத் தண்ணி எறிதலில் ஓடிப் போகும். கிருஷ்ணபிள்ளைக்குப் பிறகு, அவள் மகளைக் கட்டின மருமகன், மாமனார் மாதிரியே தண்ணி எறிந்து வந்தார். கிருஷ்ணபிள்ளைக்கு நினைத்த மாத்திரத்தில் கொட்டாவி வரும். தன் மாமனார் போல எவ்வளவோ முறை முயன்றும் மருமகனுக்கு கொட்டாவிக்கு பதில் இருமல்தான் வந்தது. அவர் அளவுக்கு இவர் எறிதல் அவ்வளவு சுகமில்லை என்பதால் கீழப்புதுத் தெரு மக்கள் ராதாகிருஷ்ணன் டாக்டரிடம் போய்க் காட்டி ஊசி போட்டுக் கொண்டார்கள். இப்போது கிருஷ்ண பிள்ளையின் பேரன் தண்ணி எறிகிறான். தாத்தாவைப் போலவே இவனும் பெரிய தொந்திக்காரன். அந்த கோலிக்காய் தொப்புள்தான் இல்லை.

ஆற்றுக்குப் போகும் வழியில் உள்ள உச்சிமாளியை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டவர் பரமசிவம் பிள்ளை. அவர்தான் பூசாரி, சாமி கொண்டாடி, தர்மகர்த்தா எல்லாமே. கொடை விழாவின் போது தீச்சட்டியும் அவரே எடுத்து வலம் வருவார். உச்சிமாளியின் பிரதம பக்தரான பரமசிவம் பிள்ளைக்கு லட்சுமி தியேட்டர் பக்கம் ஒரு ஆசை நாயகி இருப்பதாக ஒரு பேச்சு உண்டு. அந்தப் பெண்மணி, முனிசிபாலிடியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்யும் பேச்சியம்மை என்பதும் மற்ற பக்தர்கள் பொருமிக் கொண்டே அன்றாடம் கிசுகிசுக்கும் விஷயம். அவர்களது ரகசிய உறவு ஒரு கொடையின் போது வெளிச்சத்துக்கு வந்தது. மீனாட்சிதான் விவரம் சொன்னான்.

‘சித்தப்பா, பரமசிவம் பிள்ளை வைப்பாட்டி நம்ம கோயில் கொடைல வந்து முன்வரிசைல நின்னுட்டா கேட்டேளா! பொம்பளையள்ளாம் முணுமுணுன்னாளுவொ. அவ ஒருத்தரைப் பத்தியும் கவலப்படாம பிள்ளைவாள் சாமியாடிக்கிட்டிருக்கும் போது அவாள் களுத்துல முறுக்கு மாலை போட்டுட்டா.’

‘பெரிய பிரச்சனையாயிருக்குமேலெ? பிள்ளைவாள் கேவலப்பட்டிருப்பாரே!’

‘நீங்க வேற . . பரமசிவம் பிள்ளையைப் பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அவர் மண்டக்காரரு . . . வெவரமா சமாளிச்சிட்டாரு.’

‘அப்படி என்னல பண்ணினாரு?’

‘முறுக்கு மாலையில இருந்து ஒரு முறுக்கை எடுத்து கடுக்கு மொடுக்குன்னு கடிச்சு தின்னு எல்லார் வாயிலெயும் மண்ணப் போட்டுட்டாருல்லா.’

அம்மன் சன்னதி உச்சிமாளி எங்கள் வீட்டுக்கு நேரெதிரில் இருக்கிறாள். நான் சிறுவனாக இருந்த போது உச்சிமாளிக்கு முகம் மட்டுமே இருந்தது. அதன் பிறகு எங்கள் பெரியப்பாவின் முயற்சியால், வெங்கடாசல ஸ்தபதியின் கரங்களினால் உச்சிமாளிக்கு உடம்பு கிடைத்து இப்போது இருப்பவள் முழு உச்சிமாளி. பிறகு கோயிலைச் சுற்றி நிறைய சிற்பங்கள் அமைத்து வண்ணம் பூசினார்கள். அவற்றில் ஒன்றாக இடுப்பு வளைந்த முருகப்பெருமான் கொஞ்சம் கவர்ச்சியாக நிற்பார். அப்போதெல்லாம் உச்சிமாளிக்கு ‘குருக்களையாத் தாத்தா’ என்று நாங்கள் அழைக்கும் கோமதிநாயக தேசிகர்தான் பூஜை பண்ணி வந்தார். உச்சிமாளி கோயிலுக்கு முன்னால் முன்னங்கால்களை மடித்து அமர்ந்த நிலையில் ஒரு கருப்பு சிங்கமும், பளபளவென எண்ணெய்ப் பிசுக்குடன் வட்டமான ஒரு பீடமும் உண்டு. குருக்களையாத் தாத்தா அந்த பீடத்தில்தான் உச்சிமாளிக்கான நைவேத்தியத்தை வைப்பார். தாத்தா நைவேத்தியத்தை வைப்பதற்கு முன் உச்சிமாளி காத்திருப்பாளோ இல்லையோ, பேராச்சியக்காள் வளர்த்த ‘ஜம்பு’ என்ற குட்டைக் கருப்பு நாய் காத்து நிற்கும். நைவேத்தியத்தை தாத்தா பீடத்தில் வைத்த மறு நிமிடம் ஜம்பு ஜம்மென்று பீடத்தில் ஏறி நைவேத்தியத்தை நக்கி சாப்பிடும். ஜம்புவின் நாக்கினால் பீடமும் சுத்தமாகிவிடும். ஆரம்பத்தில் ஜம்புவை நைவேத்தியம் சாப்பிட விடாமல் எல்லோரும் விரட்டி வந்தார்கள். நான்கைந்து பேரின் தொடைகளை ஜம்பு பதம் பார்த்தது. விளைவு, கோயிலிலேயே ஒரு நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும் ஆரம்பப் பள்ளியாசிரியரான வள்ளிநாயகம் ஸார்வாள் ‘உச்சிமாளியேல்லா நெதமும் சாப்பிட வாரா’ என்று சொல்லி ஜம்பு என்கிற ஆண் நாயை உச்சிமாளியாக்கினார். வேறு வழியில்லாமல் ஜம்பு என்ற உச்சிமாளியை நைவேத்தியத்தை சாப்பிட அனுமதித்தார். கடைசியாக அவர்தான் ஜம்புவிடம் கடிபட்டிருந்தார்.

வள்ளிநாயகம்பிள்ளை எப்போதுமே படபடப்புடன் இருப்பார். பள்ளி விட்டு வந்தவுடன் வீட்டுக்குப் போய் காபி குடித்துவிட்டு கோயிலுக்கு வந்துவிடுவார். வேக வேகமாகவே எல்லா காரியங்களையும் செய்வார். ஞாயிற்றுக்கிழமையன்று கூட ஓய்வெடுக்க மாட்டார். கேட்டால் ‘அவ எங்கெ நம்மள வீட்டுல இருக்க விடுதா’ என்று உச்சிமாளியைச் சொல்வார். சாமிகொண்டாடி அருணாசலம் பிள்ளையும் இப்படித்தான். நாவல்டி ரெடிமேட்ஸில் துணி கிழிக்கும் வேலை செய்யும் அவரும் கடை அடைத்து வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு நேரே உச்சிமாளி கோயில்தான். (இதே போல் சென்னை வடபழனி பாஷா பேப்பர் மார்ட்டில் இன்றைக்கும் வேலை செய்யும் வேம்பு அண்ணன், பங்குனி மாதம் நடைபெறும் கீழப்புதுத் தெரு உச்சிமாளி கோயிலின் கொடைவிழாவில் சாமி ஆடுவதற்காக எப்படியாவது திருநெல்வேலி சென்று விடுவான்.) அருணாசலம் பிள்ளைக்கு முன்பல் பாதி உடைந்திருக்கும். சாமி வந்து ஆடும் போது அவர் அந்தப் பல்லை இளித்து நாக்கைத் துருத்திக் கொண்டு முறைப்பார். அப்போது உச்சிமாளியே வந்து ஆடுவது போல இருக்கும். குழந்தைகள் பயப்படுவர். ஆடும் போது குறியும் சொல்லுவார். ஆசிரியர் வள்ளிநாயகம் ஸார்வாள் க்கு பத்து வயதில் ஒரு பெண் இருந்தாள். அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டி உச்சிமாளியிடம் கோரிக்கை வைத்தார். உச்சிமாளியும் ஒரு கொடையின் போது சாமி கொண்டாடி அருணாசலம் பிள்ளை ரூபத்தில் வந்து ‘அடுத்த வருடம் உனக்கு ஆண்பிள்ளை பிறக்கும்’ என்று குறி சொன்னாள். அடுத்த வருடம் வள்ளிநாயகம் ஸார்வாளுக்கு ராஜலட்சுமி பிறந்தாள். மனம் தளறாமல் பிள்ளைவாள் மேலும் முயல அதற்கு அடுத்த வருடம் காந்திமதி அவதரித்தாள். அதன் பிறகு வள்ளிநாயகம் ஸார்வாள் குறி கேட்பதை(யும்) நிறுத்தினார்.

தீச்சட்டி எடுத்து வலம் வரும் போது தெருவே நின்று வணங்குவதால் அருணாசலம் பிள்ளை கம்பீரமாக நடந்து வருவார். உடம்பெங்கும் மாலைகள். வீட்டுக்கு வீடு அவரை நிறுத்தி உடலிலும், காலிலும் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றுவார்கள். மற்ற நேரமென்றால் பிள்ளைவாளுக்கு ஜன்னி வந்துவிடும். அப்படி ஒன்றும் அவர் பலசாலியல்ல. ஆனால் ஊரே தன்னை வணங்கும் தெம்பில் அவர் உடம்பு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும். அதுவும் அவரைவிட வயதில் மூத்தவர்கள், வசதி படைத்தவர்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் காலில் விழுந்து எழுந்திருப்பார்கள். நாவல்டி ஸ்டோர்ஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சாதாரண ஊழியரான பிள்ளைவாள் அவர் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் அடைவது அந்த சொற்பத் தருணத்தில்தான். அன்று அவர் மனம் அடைந்த நிறைவை அவரது முகம் நமக்குக் காட்டும்.

அருணாசலம் பிள்ளை சாமியாடும் போது அவருக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ரைஸ்மில்லில் வேலை செய்த நடராஜனும் ஆடி வந்தான். இவர்கள் ஆடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் காசியா பிள்ளையின் மகன் பிச்சையாவும் இருந்தான். பிச்சையாவுக்கு அருகில் இருந்த வின்ஸென்ட் கண்ணன் சமயம் பார்த்து பிச்சையாவை சாமி ஆடும் இடத்துக்குள் தள்ளி விட, குப்புற விழுந்த அவமானத்தை சமாளிக்கும் விதமாக உடனே எழுந்து பிச்சையா கண்டபடி ஆடினான். அருணாசலம் பிள்ளை பிச்சையாவை உச்சிமாளிதான் கொண்டு வந்து தன்னிடம் சேர்த்திருப்பதாக அறிவித்தார். பிச்சையாவின் சட்டை பறிக்கப் பட்டது. உடம்பெங்கும் சந்தனம் அள்ளிப் பூசப்பட்டு கையில் மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. அன்றிலிருந்து பிச்சையாவும் சாமி கொண்டாடி ஆனான்.

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு திருநெல்வேலி போயிருந்தேன். அம்மன் சன்னதியில் நானும், குஞ்சுவும் நடந்து செல்லும் போது தன் வீட்டு வாசலில் தளர்ந்து உட்கார்ந்திருந்த அருணாசலம் பிள்ளையைப் பார்த்தேன். அருகில் போய், ‘தாத்தா, சும்மா இருக்கேளா’ என்றேன். காற்றில் கைகளை அலைய விட்டு, ‘யாரு, பெரிய வீட்டுப் பேரப் பிள்ளையா? மெட்ராஸில இருந்து வந்திருக்கேரா? பேத்தி சும்மாருக்காளாவே?’ என்று குஞ்சு இருந்த திசை பார்த்து கேட்டார். அருணாசலம் பிள்ளைக்கு கொஞ்ச நாட்களாகவே கண்பார்வை சரியில்லை என்றார்கள். நாவல்டி ரெடிமேட்ஸிலும் கணக்கு முடித்து அனுப்பி விட்டார்களாம். வீட்டிலேயேதான் இருக்கிறார். சாயங்காலமானால் வீட்டு வாசலில் இப்படி உட்காருவதோடு சரி.

‘இவாளாவது பரவாயில்லெ. வள்ளிநாயகம் ஸார்வாள் வெளியவே வாரதில்ல. அப்படியே வாரதா இருந்தாலும் கம்பு ஊனிக்கிட்டுதான் வாரா’ என்றான் குஞ்சு.

இப்போது உச்சிமாளி கோயிலைச் சுற்றி மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலில் முகம் தெரியாத புதியவர் கூட்டம். நிறைய உபய விளம்பரங்கள். மைக் ஸெட், வண்ண வண்ண விளக்குகள் என ஏக தடபுடல். ஆடம்பர அலங்காரத்தில் உச்சிமாளியே அடையாளம் மாறியிருக்கிறாள். வயதாகிவிட்டதாலோ என்னவோ அருணாசலம் பிள்ளையையும், வள்ளிநாயகம் ஸார்வாளையும் அவள் தொந்தரவு செய்வதில்லை.

(அ)சைவம்

இன்றைக்கும் நான் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, ‘திரைப்படத்துறையில் இருந்து கொண்டு எப்படி நீங்கள் சைவமாக இருக்கிறீர்கள்?’. திரைப்படத்துறையில் நுழையும் போதே அசைவ உணவு சாப்பிடவும், மது அருந்தவும், எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிற மற்றொன்றை பழகவும் வகுப்பெடுப்பார்கள் என்றே பலரும் நம்புகிறார்கள். திரைத்துறையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலரும் நான் சைவ உணவுக்காரன் என்பதை ஆச்சரியமாக பார்ப்பார்கள். எனது வாத்தியார் பாலு மகேந்திராவும் கேட்டிருக்கிறார். அவரது சந்தேகம் கொஞ்சம் அதிகம்தான். ‘ஒரு மனிதன் சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா என்ன?’. புதுச்சேரியில் அவருக்காக நல்ல அசைவ உணவைத் தேடி நாங்கள் இருவருமே நள்ளிரவில் அலைந்து கண்டுபிடித்த ஒரு உணவுவிடுதியில் அவர் மீனையும், நான் பழச்சாறையும் அருந்தும் போது இதை கேட்டார்.

பொதுவாக அசைவம் உண்பவர்கள் அந்த உணவின் மீது எந்த அளவுக்கு பிரியம், காதல், வெறி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தாலே அதிலும் கலோரி இருக்கிறது உடம்புக்கு ஆகாது என்று அநியாயத்துக்கு மற்றவர்களை பயமுறுத்துகிற நண்பர் ஜெயமோகனை சிக்கன் பெயரைச் சொல்லி ஏழிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை நடத்தியே கூட்டிச் சென்றுவிடலாம். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் திடீரென்று தானும் என்னை போலவே சைவமாகிவிட்டதாக சொன்னார்.அசைவம் சாப்பிட்டு சலித்துவிட்டதனாலேயே சைவத்துக்கு மாறிவிட்டதாகக் காரணமும் சொன்னார். ‘சரி, எத்தனை நாட்களுக்கு சைவமாக இருப்பீர்கள், உங்கள் மேல் நம்பிக்கை இல்லையே’ என்றேன். ‘அது என் கையில் இல்லை. சைவ உணவு வகைகளின் கைகளில் உள்ளது. என்னை திருப்தியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவைகளின் பொறுப்பு’ என்றார். சரியாக ஒரு மண்டலத்தில் சைவ அணியிலிருந்து கௌரவமாக விலகி தாய்க் கழகத்துக்கே திரும்பி விட்டார்.

சைவம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அசைவம் உண்பவர்கள் அருகில் உட்கார்ந்து உணவருந்துவதில் எனக்கு எந்த சிக்கலுமில்லை. அதற்கு காரணம் சிறுவயதிலிருந்தே அசைவம் சாப்பிட்டு வருகிற நண்பன் குஞ்சுதான். திருநெல்வேலியில் குஞ்சு போய் விரும்பி அசைவம் சாப்பிடும் கடையின் பெயர் ‘வைர மாளிகை’. திருநெல்வேலி சைவ வேளாளர்கள் மற்றும் குஞ்சுவைப் போன்ற சுத்தமான பிராமணர்களின் ஏகோபித்த ஆதரவினால் வைர மாளிகைக்கு இப்போது பாளையங்கோட்டையில் ஒரு கிளை திறந்துவிட்டனர்.

எனக்கு தெரிந்து திருநெல்வேலியிலும், இலங்கையிலும் மட்டுமே ‘சொதி’ என்னும் குழம்பு உள்ளது. முழுக்க முழுக்க தேங்காய்ப் பாலில் தயாராகும் சொதி, திருநெல்வேலி சைவ வேளாளர் வீட்டுத் திருமணங்களில் தவறாமல் இடம்பெறும். திருமணத்துக்கு மறுநாள் மறுவீட்டுப் பந்தியில் சொதி பரிமாறப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ‘அதென்ன, கல்யாணத்துக்கு வந்துட்டு சொதிச் சாப்பாடு சாப்பிடாம போறிய?’ என்று திருமண வீட்டார் உறவினர்களிடம் சொல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதற்கு வெள்ளைவெள்ளேரென்று காணப்படும் சொதியில் கேரட், உருளைகிழங்கு மற்றும் முருங்கைக்காய் போட்டிருப்பர் . தொட்டுக் கொள்ள கண்டிப்பாக இஞ்சிப் பச்சடி உண்டு. அப்போதுதான் சொதி ஜீரணமாகும். சென்னைக்கு வந்த புதிதில் எழுத்தாளர் வண்ணநிலவன், வாத்தியார் இருவருடனும் சென்று சரவணபவன் போய் இடியாப்பமும், சொதியும் சாப்பிட்டிருக்கிறேன். (வண்ணநிலவன் ‘ சொதி ‘ என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியுள்ளார்). வாத்தியார் எனக்காக ஒருமுறை வீட்டில் அவர் துணைவியாரை சொதி வைக்கச் சொன்னார். ஆசையுடன் சாப்பிடப் போனேன். ஆனால் சாப்பிடத்தான் முடியாமற்போயிற்று. அகிலா அம்மையார் நன்றாகத்தான் சொதி வைத்திருந்தார்கள். இரண்டே இரண்டு மீன் துண்டுகளை அதில் போட்டிருந்தார்கள்.

அசைவ உணவுவகைகளின் மத்தியில் அமர்ந்து சைவம் சாப்பிடுவதில் சங்கடப்படாத என்னால் மீனின் வாடையை மட்டும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சாலிகிராமத்தில் ஒரு மீன் மார்க்கெட் உள்ளது. அதை கடந்து செல்லும் போதெல்லாம் எனக்கு குமட்டிக் கொண்டுவரும். முன்பெல்லாம் அதைத் தாண்டி செல்லும் போது கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு, முகத்தையும் வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விறுவிறுவெனச் செல்வேன். இப்போது அப்படி செல்வதில்லை. காரணம், ஒரு முறை அப்படி செல்லும் போது கவனிக்காமல் நேரே மீன் வாங்க வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் மீது மோதிவிட்டேன். பார்ப்பதற்கு கல்லூரிக்குச் செல்லும் நவநாகரீகத் தோற்றத்தில் இருந்த அந்தப் பெண், சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாங்கமே தாராளமாக அனுமதித்திருக்கிற பிரத்தியேக வசைச் சொல்லான அந்த மூன்றெழுத்து வார்த்தையை சொல்லி என்னை திட்டினாள். அதற்கு பதிலாக நான் போய் ஒரு கிலோ
மீனே வாங்கியிருக்கலாம்.

நண்பர் சீமானின் குழுவினர் அசைவம் உண்பதை கிட்டத்தட்ட ஓர் யாகம் போலவே செய்வர். பொழுது போகவில்லையென்றால் உடனே அசைவ விருந்துக்கு ஏற்பாடு நடக்கும். சமைப்பதற்கு ஒரு தெருவும், பின் சாப்பிடுவதற்கு ஓர் ஊரும் திரண்டுவரும். அவர் வீட்டுத் தோட்டத்தில் முதலில் ஒரு பெரிய அண்டா வந்து இறங்கும். பின் ஊர்வன, பறப்பன இத்யாதிகள். மீனுக்கு ஒரு இடம், ஆட்டுக்கு வேறு இடம், கோழிக்கு தனியாக மற்றொரு இடம் என்று தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளிலிருந்து எல்லாம் வந்து சேரும். சீமானே எல்லோருக்கும் தொலைபேசியில் அழைத்துச் சொல்வார். என்னிடம் ‘அய்யா மகனே . . உங்களுக்கு மட்டும் சிறப்பா சைவ உணவு தயாரா இருக்கு வந்திருங்க . ‘ என்பார். (சைவ உணவு என்றால் வேறொன்றுமில்லை. கொஞ்சம் அப்பளம் பொரித்திருப்பார்கள். அவ்வளவுதான்). மற்றவர்களுக்கு ‘மறக்காம மதிய உணவுக்கு வந்திருங்க. இன்னிக்கு நம்ம வீட்டுல உப்புக்கறி’. மேற்படி உப்புக்கறி வைப்பதில் சீமானின் தம்பிமார்களில் ஒருவனான ஜிந்தா நிபுணன். பார்ப்பதற்கு செக்கச்சிவப்பாக இருக்கிற அந்த உப்புக்கறியை கண்கலங்க மூக்கைத் துடைத்துக் கொண்டே அனைவரும் உண்டு மகிழ்வர். அமரர்கள் ஏவி.மெய்யப்பச் செட்டியார், எல்.வி.பிரசாத், நாகிரெட்டியார் போன்ற பெரியவர்களைத் தவிர சீமான் வீட்டு உப்புக்கறியை ருசி பார்க்காத திரையுலகப் பிரபலங்களே இல்லை எனலாம்.

இன்னதானென்றில்லாமல் என்னவெல்லாமோ சீமானின் வீட்டில் சமைக்கப்படும். கௌதாரிப் பறவையிருந்து பன்றி வரை அவர்கள் மெனுவில் வஞ்சகமில்லாமல் எல்லா உயிரினத்துக்கும் இடமுண்டு. ஒரு முறை கேட்டேன்.

‘ஏன் அராஜகம் . . எல்லா எளவையும் சாப்பிடுறியளே. . . விதிவிலக்கே கிடையாதா’. .

‘என்ன இப்படி கேட்டுட்டியெ அய்யா மகனே . . மனுசக் கறி சாப்பிடுறதில்லையே . . . சட்டப்படி தப்புங்குற ஒரே காரணத்துக்காகத்தானே இவனையெல்லாம் விட்டு வச்சிருக்கோம் . . . வெட்டி சாப்புட்டா தம்பி நல்லாத்தான் இருப்பான்’ . .

படுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஜிந்தாவைப் பார்த்து சொன்னார். அடுத்த வாரத்தில் ஜிந்தா தன் ஜாகையை மாற்றிக் கொண்டான்.

அசைவப் பிரியரான நண்பர் செழியனை சீமானின் விருந்தோம்பல் ஒருமுறை தலைதெறிக்க ஓட வைத்தது. காலையில் சீமானை சந்தித்துவிட்டு கிளம்பிய செழியனிடம் சீமான் அன்பொழுகச் சொல்லியிருக்கிறார்.

‘செல்லம் . .. மதியம் சாப்பிட வராம போயிறாதீய . . . உங்களுக்காக கொரங்கு

வத்தல் வறுக்கச் சொல்லியிருக்கேன்’.

சந்திராவின் சிரிப்பு

திருநெல்வேலியில் நான் இருக்கும் வரை எந்த சினிமாவுக்குப் போவது என்பதிலிருந்து எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்பது வரை எல்லாவற்றையும் எப்போதுமே குஞ்சுதான் முடிவு செயவான். பதின்வயதின் இறுதியில் ஓர் இலக்கில்லாமல் கண்ணில் தென்படுகிற பெண்களையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்தோம். இப்படியே போனால் சரியில்லை என்று ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் காதலிக்கத் தொடங்குவோம் என்றான் குஞ்சு. அப்படி அவன் தேர்ந்தெடுத்த பெண்தான் சந்திரா. சந்திரா எங்கள் காதலியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை குஞ்சு என்னிடம் சொன்னவுடனேயே நான் அவளைப் பார்க்கத் துடித்தேன். ‘அவசரப்படாதே, சாயங்காலம் நாலரை மணிக்கெல்லாம் எங்க வீட்டு வாசல்ல நிப்போம். கரெக்டா க்ராஸ் பண்ணுவா. அப்போ காட்டுதென்’ என்றான். சொல்லிவைத்த மாதிரி சரியாக நாலரை மணிக்கு கல்லணை ஸ்கூல் இள,கருநீல பாவாடை தாவணி யூனி·பார்மில் இரட்டை ஜடை போட்டு சிரித்தபடியே நடந்து வந்த சந்திராவை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன். இருந்தாலும் இந்த முறை பார்த்த போது காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருந்தது. இருந்தாலும் அவள் இனிமேல் எங்கள் காதலி அல்லவா? கோதுமை நிறத்திலிருக்கும் அவள் எங்களைக் கடந்து செல்லும் வரை ரொம்ப நாட்கள் பழகியவள் போல, கன்னத்தில் குழி விழச் சிரித்தபடியே சென்றாள். எனக்கு ஆரம்பமே நல்ல சகுனமாகத் தோன்றியது.

எங்கள் தெருவுக்கு மிக அருகில்தான் சந்திராவின் வீடு இருந்தது. இத்தனை நாளும் அந்த வீட்டை கவனிக்காமல் போனோமே என்றிருந்தது. ஆனாலும் கொஞ்சம் உதறல் எடுத்தது. காரணம், சந்திராவின் தகப்பனார் ராமையா பாண்டியன். அவர் ஒரு வஸ்தாது. கட்டப்பஞ்சாயத்துகளில் அதிக நேரம் செலவழிப்பவர். சொளவு சைஸில் கையில் பெரிய மோதிரம் போட்டிருப்பார். அதில் முத்தமிழறிஞர் சிரித்துக் கொண்டிருப்பார். ராமையா பாண்டியனுக்கும் அவரது ஆசைநாயகிக்கும் பிறந்த மகளே சந்திரா. அடிக்கடி சந்திராவின் வீட்டில் ஆசாரி வேலை நடந்து கொண்டிருக்கும். அவ்வப்போது ஒரு புது வாசற்கதவைப் பொருத்துவார் ஆசாரி. நள்ளிரவில் குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டும் ராமையா பாண்டியனுக்கு கதவைத் திறப்பதில்லை சந்திராவின் அம்மா. உடனே கதவை அடித்து நொறுக்கி உடைத்து உள்ளே சென்று விடுவார் ராமையா பாண்டியன். இத்தனைக்கும் அந்தக் கதவுக்கான சாவி அவர் சட்டைப்பையில்தான் இருக்கும்.

ராமையா பாண்டியனின் மகளை, அதுவும் அவர் ஆசைநாயகிக்குப் பிறந்தவளை நாம் காதலிப்பது நமக்கு சரிப்பட்டுவருமா என்று கவலையுடன் குஞ்சுவிடம் கேட்டேன். ‘காதல்ன்னு வந்துட்டா வேற எதப் பத்தியுமே யோசிக்கக் கூடாது’ என்றான். சரி நடப்பது நடக்கட்டும் என்று சந்திராவைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினோம். தினமும் காலையில் அவள் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பும் போது சரியாக அவள் வீட்டுக்கருகில் ஆளுக்கொரு சைக்கிளில் காத்து நிற்போம். நாளடைவில் நாங்கள் நிற்கிறோமா என்பதை சந்திராவே தேட ஆரம்பித்தது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. பின்னர் சைக்கிளை உருட்டியபடியே அவளுக்குப் பின்னாலேயே சென்று கல்லணை ஸ்கூல் காம்பவுண்ட் சுவர் வரை அவளை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு பிறகு சைக்கிளில் ஏறி நாங்கள் பள்ளிக்குச் செல்வோம். மாலையில் அவசர அவசரமாக பள்ளியிலிருந்து வேகமாக சைக்கிளை மிதித்து கல்லணை ஸ்கூல் பக்கம் மூச்சிரைக்கப் போய் நிற்போம். எங்களைப் பார்த்து சிரித்தபடியே சந்திரா வருவாள். அன்றைய இரவு இதைப் பற்றிய பல நினைவுகளோடு கழியும்.
சுமுகமாகச் சென்று கொண்டிருந்த எங்கள் காதலில் ஒரு வில்லன் புகுந்தான். அம்மன் சன்னதி பஜனை மடத்தில் சாய்ந்தபடி நானும், குஞ்சுவும் எங்கள் காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றிய தீவிரமான யோசனையில் இருந்தபோது லாரி ஓனர் சண்முகம் பிள்ளையின் மகன் மஹாதேவன் வந்தான். மஹாதேவன் பார்ப்பதற்குக் கொஞ்சம் போல்தான் ஆண் போல் இருப்பான். நடக்கும் போது ஆங்கில எழுத்து S போல ஒருமாதிரி வளைந்து நடப்பதால் அவனை S மஹாதேவன் என்றே அழைத்து வந்தோம். அவனது உண்மையான இனிஷியலும் S என்பதால் நாங்கள் அவனை கேலி செய்கிறோம் என்பதை அவன் உணர்ந்ததே இல்லை. நேரே எங்களிடம் வந்த S.மஹாதேவன் ‘ஏல, சந்திரா பின்னால சுத்துறத விட்டுருங்க’ என்றான். குஞ்சு எழுந்து நின்றான். ‘என்ன சொல்லுதெ’ என்றான். ‘நான் அவளுக்கு கவிதல்லாம் எளுதிருக்கென். அவளுக்கு என்ன ரொம்பப் புடிக்கும்’ என்று தொடர்ந்து சொன்னான். ‘இத எதுக்குல எங்கக்கிட்ட வந்து சொல்லுதெ’ என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டான் குஞ்சு. ‘எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைச்சேளோலெ. ஆள வச்சு உங்க ரெண்டு பேரையும் அடிச்சு போடுவேன்’ என்று S மஹாதேவன் சொல்லவும் குஞ்சு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். என் பங்குக்கு நானும் அவனை ஒரு அறை அறைய, எதுவும் பேசாமல் திரும்பிச் சென்ற S மஹாதேவன் கொஞ்ச தூரம் சென்று எங்கள் இருவருக்கும் இல்லாத எங்கள் மூத்த சகோதரிகளைத் திட்டிவிட்டு, ‘என்ன நடக்கப்போதுன்னு பொறுத்திருந்து பாருங்கலெ’ என்றான்.
இனிமேலும் நாம் தாமதிக்கக் கூடாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற குஞ்சு ஒரு வாழ்த்து அட்டை வாங்கினான். புதுவருட வாழ்த்து அட்டை அது. அதில் அழகாக தானும் கையெழுத்திட்டு, என்னையும் கையெழுத்து போடச் சொன்னான். ஸ்டைலாக என் பெயரை எழுதினேன். சந்திராவின் வீட்டு முகவரிக்கு போஸ்ட் பண்ணினோம். மறுநாளே அவளுக்குக் கிடைத்த விஷயம் எங்களுக்குத் தெரிய வந்தது. அன்று மாலை எங்களைக் கடந்து செல்லும் போது குவியலாக நாங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டையை எங்கள் முன்னே கீழே போட்டுவிட்டு எங்களைப் பார்த்து சிரித்துவிட்டும் சென்றாள் சந்திரா. நான் மனமுடைந்து போனேன். இந்த விஷயத்தில் எங்களுக்கு சீனியரான கணேசண்ணனிடம் போய் குஞ்சுவும்,நானும் கேட்டோம். ‘அட கூறுகெட்ட குப்பானுகளா! ஏல, அவ என்ன பாஞ்சாலியா, ரெண்டு பேரும் அப்ளிகேஷனப் போட்டா அவ என்னல செய்வா? கிளிச்சுதான் போடுவா’ என்றான் கணேசண்ணன். கணேசண்ணன் சொன்னதையும் விட வேதனையான விஷயம் அடுத்தமாதமே நடந்தது. வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு S மஹாதேவனுடன் சந்திரா ஊரை விட்டே ஓடிப் போனாள். பல ஊர்களில் சுற்றியலைந்து கொண்டிருந்த அவர்களை ஒருமாதிரியாக அவர்கள்வீட்டார் தேடி பிடித்தனர். சந்திராவின் படிப்பு நிறுத்தப்பட்டது. அடுத்த ஒருசில வருடங்களில் இருவீட்டாரின் சம்மதத்துடன் S மஹாதேவன் – சந்திராவின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. அன்று நாம் ஊரில் இருக்கக் கூடாது என்று என்னை குஞ்சு கன்னியாகுமரிக்கு இழுத்துச் சென்று விட்டான்.

கன்னியாகுமரியில் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்து கண்ணீர் விட்டபடி ‘வாள்க்கைங்கறது . . . .’ என்று ஆரம்பித்து ‘அந்தப் பிள்ள நம்மகூட எப்படியெப்படில்லாம் இருந்தா’ என்றான். அவள் எங்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லையே என்று குழம்பினேன். இன்னும் என்னவெல்லாமோ குஞ்சு உளறினான். எனக்கும் அழுகை பொங்கி பொங்கி வந்தது. கால ஓட்டத்தில் நான் சென்னைக்கு வந்துவிட, குஞ்சு அவனது தொழிலில் மும்முரமாக, இருவருக்குமே திருமணமாகி பிள்ளை பிறந்து ஏதேதோ நடந்து விட்டது. சென்ற வருடத்தில் திருநெல்வேலி சென்றிருந்த போது எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு ஒரு பெண்மணி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வர வர அந்த பெண் என்னையே பார்த்தபடி வருவதை உணர்ந்தேன். தன் குழந்தையை டியூஷன் அழைத்துச் செல்கிறாள் போலத் தெரிந்தது. என்னை நெருங்கவும் என் முகத்தைப் பார்த்து சிரித்தாள். சந்திராவேதான். அதே சிரிப்பு. அந்த கல்லணை ஸ்கூல் யூனிஃபார்மும், ரெட்டை ஜடையும் மட்டும்தான் இல்லை. நான் சந்தேகத்துடன் அவளது பார்வையைத் தவிர்த்து ஓரக்கண்ணால் பார்த்தேன். எவ்விதத் தயக்கமுமின்றி என்னைப் பார்த்து நன்றாக சிரித்தபடியே கடந்து சென்றாள். வீட்டுக்குள்ளிருந்து யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டேன். தெருமுனை திரும்பும் போது ஒரு முறை திரும்பி மீண்டும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள் சந்திரா. குஞ்சு அப்போது அவனது அலுவலகத்தில் இருந்தான். தாமதிக்காமல் உடனே அவனுக்கு ஃபோன் பண்ணினேன்.

‘எல, நம்ம சந்திரா என்னயப் பாத்துச் சிரிச்சுக்கிட்டே போனா’ என்றேன்.

‘எந்த சந்திரா?’ என்று கேட்டான் குஞ்சு.

பிரமநாயகத் தாத்தாவும், விஜயலலிதாவும்

சென்னைக்கு வந்த புதிதில் சாலிகிராமத்தின் காந்தி நகரில் குடியேறினேன். அம்மா அப்போது இருந்தாள். எங்கள் வீட்டோடு இன்று வரை இருந்து சமையல் வேலைகளை கவனித்துக் கொள்ளும் செல்வராஜ் அண்ணன் பரபரப்பாக சாமான்களை இறக்கி அடுக்க, வீட்டை சுத்தப்படுத்த, பால் காய்ச்ச என்று அம்மாவுக்கு ஒத்தாசையாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். நான் வழக்கம் போல சும்மா இருந்தேன். அந்த பெரிய வீட்டின் வாசலில் ஒரு நீள சிமெண்ட் பெஞ்ச் உண்டு. அதில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, கேட்டைத் திறந்து கொண்டு ஒரு பெரியவர் ‘உள்ள வரலாமா?’ என்று கேட்டபடி நின்று கொண்டிருந்தார். யாரென்றே தெரியாத அவரை ‘வாங்க வாங்க’ என்றழைத்தபடி எழுந்து நின்றேன். அடிப்பிரதட்சணம் செய்வது போல் நடந்து என்னருகில் வந்தார். உடல்நலமில்லாதவர் என்பது தெரிந்து, ‘உக்காருங்க’ என்றேன். ‘நாராயண நாராயண’ என்று முனகியபடி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

நெற்றியில் காய்ந்து அழிந்திருந்த திருநீறு திட்டு திட்டாக ஒட்டியிருந்தது. முழுக்கைச் சட்டையை மடிக்காமல் பட்டன் போடாமல் விட்டிருந்தார். கறுப்பாக, குட்டையாக இருந்தார். முகத்திலும், தலையிலும் ஒருசில முடிகளே. களைப்பாக மூச்சு வாங்கியபடி இருந்ததால் அவராகப் பேசட்டும் என்று அமைதியாக அவரைப் பார்த்தபடி இருந்தேன். கொஞ்ச நேரம் குனிந்தே அமர்ந்திருந்தவர், சற்று நேர ஆசுவாசத்துக்குப் பின் நிமிர்ந்து என் முகம் பார்த்து சிரித்தபடி பேச ஆரம்பித்தார். ‘அம்மன் சன்னதி பெரிய வீட்டுப் பிள்ளதான நீங்க? எனக்கும் திருநவேலிதான்’ என்றார். சென்னைக்கு வந்த முதல் நாளே ஊர்க்காரரைப் பார்த்துவிட்ட சந்தோஷத்துடன் ஆச்சரியமும் சேர்ந்து கொள்ள ‘ஆமா. ஒங்களுக்கு எங்கெ?’ என்றேன்.

‘ஒங்க எதுத்த வீட்டுல தெய்வநாயகம் இருக்காம்லா, ஐ ஓ பில வேல பாக்கானெ?’

‘ஆமா. தெய்வு மாமா.’

‘அவன் அம்மை எனக்கு மதினில்லா?’

‘யாரு, ஆராம்புளியாச்சியா?’

‘அவளேதான்’.

நான் அவரை தாத்தா என்றழைக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து பிரமநாயகத் தாத்தாவை நான் பார்க்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இரவு வெகுநேரம் கழித்து வந்து படுத்திருக்கும் என்னை காலையில் பிரமநாயகத் தாத்தாவின்‘நாராயண நாராயண’தான் எழுப்பும். எழுந்து வாசலுக்கு வருவேன். சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர், என்னைப் பார்த்ததும் ‘ராத்திரி ரொம்ப லேட்டாயிட்டோ?’ என்றபடி படித்துக் கொண்டிருந்த பேப்பரை ஒழுங்காக மடித்து என்னிடம் நீட்டுவார்.

பிரமநாயகத் தாத்தாவின் மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். இதய நோயாளியான தாத்தாவுக்கு அதன் பிறகு இரண்டாம் மனைவியின் மூலம் மேலும் நான்கு மக்கட்செல்வங்கள். காந்தி நகரில் என் வீட்டுக்குப் பக்கத்து வீடான தாத்தாவின் வீடு எப்போதும் ஜேஜேயென்று இருக்கும். சமையலும், சாப்பாடும் எந்நேரமும் நடந்து கொண்டேயிருக்கும். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முழுகி, பூஜை பண்ணி சாப்பிட்டுவிட்டு தாத்தா நேரே என் வீட்டுக்கு வந்து சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொள்வார்.

பிரமநாயகத் தாத்தாவுக்கு என்மீது ஊர்ப்பாசம் போக நான் சினிமாவில் இருப்பதால் ஒரு தனியீர்ப்பு இருந்தது. அது குறித்து என்னிடம் அதிகம் பேசுவதில்லையென்றாலும் நான் உணரும் வண்ணம் மனதுக்குள் பேசிக் கொண்டுதான் இருந்தார். தாத்தாவுக்கு சினிமா மீதும், அதைவிட அதிகமாக சினிமா நடிகைகள் மீதும் இருக்கும் அலாதி பிரியம் மெல்ல தெரிய வந்தது. அந்த பிரியம் அவர் தகப்பனாரிடமிருந்து அவருக்கு வந்திருக்க வேண்டும்.

‘நம்ம ஊர் அரசுப் பொருட்காட்சில ஒரு மட்டம் நாடகம் போட்டான். மெட்ராஸ்ல இருந்து ஒரு நடிகை வந்து நடிச்சா. அந்த காலத்துல் ஒண்ணு ரெண்டு சினிமால நடிச்ச பொம்பள அவ. எங்கப்பா அவள எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டால்லா’.

குதூகலத்துடன் சொன்னார்.

‘ஆனா நான் யாரையும் பெருசா பாத்ததில்ல. ஒரே ஒருமட்டம் நம்ம கீள்ப் பாலத்துல கே.பி.சுந்தராம்பாள் அம்மா கார்ல வந்தா. முன்னாடி கொண்டு போயி சைக்கிள விட்டுட்டேன்’.

‘அப்புறம் என்னாச்சு?’ கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டேன்.

‘அந்த அம்மா கண்ணாடிய எறக்குனா. நீங்க எனக்கு திருநாறு பூசுனாத்தான் இந்த எடத்த விட்டு போவேன்னுட்டென். சிரிச்சுக்கிட்டெ பூசிவிட்டா.’

பெரிதாகச் சாதித்து விட்ட களிப்பில் சொன்னார்.

காந்தி நகரில் நாங்கள் குடியிருந்த தெருவுக்கு அருகேதான் நடிகை விஜயலலிதாவின் வீடும் இருந்தது. போகும் போதும், வரும் போதும் அந்த வீட்டைக் கடந்துதான் நான் செல்வேன். பெரும்பாலும் வாசலிலோ, பால்கனியிலோ விஜயலலிதா நிற்பார். தாத்தாவின் மகன்களும் வேலைக்குப் போகும் போதும் வரும்போதும் அவரைப் பார்த்தபடி வந்ததை தன் தந்தையிடம் சொல்வார்கள்.

‘எனக்குத்தான்டே குடுத்தே வைக்கலெ’.

வருத்தத்துடன் ஒரு நாள் தன் இளைய மகனிடம் தாத்தா சொன்னது என் காதுகளில் விழுந்தது.

‘பைபாசுக்கு முன்னாடின்னா நானே நடந்து போயிருவேன். ஒங்க யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்.’

குரலில் கடுமையான துயரம் சொட்டியது.

ஒரு நாள் அவசர அவசரமாக பிரமநாயகத் தாத்தாவின் மகன்களில் ஒருவன் சைக்கிளை ஏறி மிதித்தபடி வந்தான். ‘எப்பா, சீக்கிரம் வாங்க. அந்த அம்மா அவங்க வீட்டு வாசல்ல நிக்காங்க’ என்றான் மூச்சிரைத்தபடி. வாயெல்லாம் பல்லாக தாத்தா தத்தித் தத்திச் சென்று சைக்கிளின் கேரியரில் உட்கார்ந்து கொண்டார். மகன் சைக்கிளை கவனமாக மிதிக்க, கொஞ்சம் வெட்கமும், சிரிப்புமாக பின்னால் கெட்டியாகப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த தாத்தா என்னைப் பார்த்து ‘போய் பாத்துட்டு வந்திருதேன்’ என்றபடி போனார்.
போன வேகத்தில் வாடிய முகத்துடன் தந்தையும், மகனுமாகத் திரும்பினர். இவர்கள் செல்வதற்குள் விஜயலலிதா வீட்டுக்குள் போய் விட்டாராம். ‘இன்னைக்கில்லேன்னா இன்னோரு நாள் பாத்துக்கிட்டா போச்சு’. தன்னைத் தானே தாத்தா சமாதானப் படுத்திக் கொண்டார். ஒரு நாள் யதார்த்தமாக தாத்தாவிடம்,’எலந்த பளம் பாட்டுக்கு அந்த அம்மாதானெ ஆடுவாங்க’ என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். தாத்தாவின் முகம் அவ்வளவு கடுமையாக மாறியதை அன்றுதான் பார்த்தேன்.

‘என்ன பேரப்பிள்ள, வெவரமில்லாம கேக்கியெ? அது விஜயநிர்மலால்லா?’ என்றார். ‘என்னத்த நீங்க சினிமால இருக்கியெ? சே . . .’ என்று அலுத்துக் கொண்டார். தாத்தாவின் முகபாவத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி ஃபெயிலான மாதிரி கூனிக் குறுகிப் போனேன்.

இத்தனை சினிமா ஆசை இருந்தாலும் தாத்தா கண்டிப்பான சில விருப்பு வெறுப்புகள் கொண்டிருந்தார். குறிப்பாக மைக்கேல் ஜாக்ஸன், பிரபுதேவா இருவரது நடனத்தையும் குடும்பப் பெண்கள் பார்த்தால் கெட்டுப் போவார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார். அதற்கு அவர் ஒரு அந்தரங்கமான காரணமும் சொன்னார்.

‘மேற்படிய பிடிச்சுக்கிட்டெ ஆடுதானுவொ. இத பொம்பளப் பிள்ளைய பாக்கலாமா. நீங்களே சொல்லுங்க’.

நேரடியாக தாத்தா என்னிடம் என் தொழில் சார்ந்த விஷயங்களைப் பற்றி விசாரிக்காமல் கவனமாக இருந்தார். ஒரே ஒருமுறை அவரது கட்டுப்பாட்டையும் மீறி ‘குஷ்புவ நீங்க நேர்ல பாத்திருக்கேளா?’ என்று கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

நான் காந்தி நகருக்கு வந்த ஒன்றிரண்டு வருடங்களிலேயே தாத்தா குடும்பச் சூழல் காரணமாக திருநெல்வேலிக்குப் போய்விட்டார். போகும் போது என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கினார். எனக்குமே அது தாங்க முடியாத பிரிவாகத்தான் இருந்தது. திருநெல்வேலிக்கு அருகில் மேலப்பாளையத்தில் வாடகை குறைவாக உள்ள ஒரு பழைய பெரிய வீட்டில் குடியேறிவிட்டதாகக் கடிதம் எழுதினார். எப்படியும் இரண்டு வாரங்களுக்கு ஒரு கடிதம் வரும். ஒவ்வொரு கடிதத்திலும் மறக்காமல் என்னை மேலப்பாளையத்துக்கு அழைப்பார்.

தாத்தா மேலப்பாளையத்துக்குப் போய் சுமார் ஆறேழு மாதங்கள் கழித்து நான் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். எதிர் வீட்டு தெய்வுமாமா மூலம் தாத்தாவுக்கு விஷயம் தெரிந்து விட்டது. தன் மகனை சைக்கிளில் அனுப்பினார். ‘நாளைக்கு மத்தியானம் ஒங்களுக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு. அப்பா சொல்லிட்டு வரச் சொன்னா’. கண்டிப்பாக வருவதாகச் சொல்லி அனுப்பிட்டு மறுநாள் மேலப்பாளையம் சென்றேன். கார் அவர்களின் தெருவுக்குள் நுழையும் போதே தாத்தா வாசலில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கார் நெருங்கி வரும் போது தன் மனைவியின் தோளைப் பிடித்துக் கொண்டு தாத்தா எழுந்து நின்றார். முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க காரிலிருந்து இறங்கிய என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

அமாவாசை தர்ப்பணம் பண்ணும் போது சாப்பிடுவது மாதிரியான விசேஷச் சாப்பாடு ஏற்பாடாயிருந்தது. பெரிய வாழை இலை போட்டு உப்பு வைத்து, அதன் மீது சுண்டவத்தல் பரப்பி, பொரியல், துவரம், அவியல், மசியல், கூட்டு என முறையான பரிமாற்று முறை. பருப்பு வைக்கும் போது கவனமாக அதை இலையின் வலது கீழ்ப்பகுதியில்தான் வைக்கிறார்களா என்று தாத்தா உன்னிப்பாகப் பார்த்தார். சோறும், அப்பளமும் வைத்த பின் ‘பாயாசமும், வடையும் யாரு வப்பா?’ என்று கொஞ்சம் உயர்த்தின குரலில் கேட்டார். அவை வந்த பின் தாத்தா நைவேத்தியம் பண்ணி முடிக்கும் வரை பொறுமையாக சோற்றில் கைவைக்காமல் காத்திருந்தேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் தாத்தா விட்டுவிடவில்லை. ‘போலாம் போலாம். இப்ப என்ன அவசரம்? இரிங்க’ என்றபடி நாற்காலியில் என்னை அமரச் செய்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு விஜயலலிதாவின் பக்கம் திரும்பியது.

‘அத ஏன் கேக்கிய பேரப் பிள்ள! நம்ம கோமு இருக்காம்லா? நீங்க பாத்திருப்பிய! வளுக்கத் தல.’

‘ஆமாமா. டைட்டா சட்ட பொடுவாளெ. அவாள்தானெ?’

‘அவனேதான். கரெக்டா சொல்லிட்டேளே. அவனும் அன்னைக்கு எலந்த பளம் பாட்டுக்கு ஆடுனது விஜயலலிதாங்காம்யா. இவனுவளையெல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்ண? சவத்து மூதியெ’.

நான் பதிலே சொல்லவில்லை. நான் காந்தி நகரிலிருந்து சாலிகிராமத்துக்குள்ளேயே வேறு பகுதிக்குச் சென்று விட்டதை மட்டும் தாத்தாவிடம் சொன்னேன். தாத்தாவுக்கு ரொம்பவும் வருத்தமாகப் போய்விட்டது.

‘நல்ல ஏரியால்லாய்யா அது? அத விட்டுட்டு ஏன் போனியெ?’

‘நீங்க இங்கெ வந்துடேள்லா? அதான்.’

சமாளிக்கும் விதமாகச் சொன்னேன். தாத்தா இதற்கு ஏதும் சொல்லவில்லை. ஆனால் மனதுக்குள் ‘நான் வந்துட்டா என்ன? அதான் விஜயலலிதா இருக்காளெ?’ என்று சொன்னார் என்றுதான் நினைக்கிறேன். அவர் முகம் அப்படித்தான் இருந்தது. இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நான் மீண்டும் காந்தி நகருக்கே வந்துவிட்டேன். அதுவும் விஜயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே. நைட்டி அணிந்தபடி வாசலிலும், பால்கனியிலும் நின்று கொண்டு தன் வீட்டுக்கு எதிரே துணிகளை இஸ்திரி போடுபவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் விஜயலலிதாவை தினமும் பார்க்கிறேன். பிரமநாயகத் தாத்தா இருந்திருந்தால் சொல்லியிருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பார்.

கயத்தாறு

கயத்தாற்றில் கீரைப் பாத்திகள் நிறைய உண்டு. அங்கு விளையும் கீரை, விற்பனைக்காக திருநெல்வேலிக்கு வந்து மூடை, மூடையாக குவியும். கயத்தாற்றிலிருந்து லாரியில் ஏற்றப்பட்ட கீரை மூடைகள் திருநெல்வேலி ஜங்ஷனில் கொண்டு வந்து இறக்கிப் போடப்படும். பின் அவற்றை தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு கீரைக்காரர்கள் என்று சொல்லப்படும் கீரை வியாபாரிகள் திருநெல்வேலி டவுணுக்கு வருவார்கள். முதல் நாள் இரவு வரும் மூடைகளிலுள்ள கீரை, மறுநாள் அதிகாலை தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு திருநெல்வேலித் தெருக்களில் விற்பனை செய்யப்படும்.

கயத்தாற்றுக் கீரைக்காரர்கள் சேசுமணி, ராஜேந்திரன், சேசுராஜ் போன்றவர்கள் டவுணில் ஆளாளுக்கு தெருக்களைப் பிரித்துக் கொண்டு கீரை விற்று வந்தார்கள். இவர்களில் ஒருவர் விற்கும் பகுதிக்கு மற்றவர் செல்வதில்லை. அப்படி ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் அவர்களுக்கிடையே இருந்தது. இம்மூவரும் இரவு கீரை மூடையுடன் தங்குமிடம், அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீடு. முப்பது பேர் படுக்கக்கூடிய விஸ்தாரத்துடன் உள்ள வாசல்வெளியில் இவர்கள் படுப்பதற்கு வசதியாகக் குளிர்ச்சிக்காக தரை முழுதும் தண்ணீர் ஊற்றி வைத்திருப்போம். அவர்கள் வந்து படுக்கும் நேரம் தரை நன்கு காய்ந்திருக்கும்.

இம்மூவரில் சேசுமணி வயதில் பெரியவர். உடம்பெல்லாம் முடியாக, குட்டையாக இருப்பார். கருத்த முகத்தில் மெலிதான பென்ஸில் மீசை உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராஜேந்திரன் சேசுமணிக்கு இளையவர். ஆரம்பகால ரஜினிகாந்தின் ஹேர்ஸ்டைலுடைய ராஜேந்திரன், அவ்வப்போது தலையை சிலுப்பி தன் தலைமுடியை சரி செய்து கொள்வார். அவருக்கும் இளையவனான சேசுராஜ் எங்கள் தோழன். கழுத்தில் சிலுவை டாலரும், கையில் மேரிமாதா உருவம் பொறித்த பிளாஸ்டிக் மோதிரமும் அணிந்திருப்பான். ‘தும்’ என்று கீரை மூடைகளைக் கீழே போடும் சத்தம், இந்தக் கீரைக்காரர்களின் வருகையை எங்களுக்கு தெரிவிக்கும்.

ராஜேந்திரனும், சேசுராஜும் முன்னதாகவே வந்து விடுவார்கள். அகல கேரியர் வைத்த லோடு சைக்கிளில் கீரை மூடையை கட்டி ஓட்டி வருவர். சேசுமணி தாமதமாகவே வருவார். தலைச்சுமையாக மூடையைச் சுமந்து கொண்டு ஜங்க்ஷனிலிருந்து டவுண் வரை வியர்வையில் குளித்தபடி வந்து சேர்வார்.

‘என்னடே, இன்னைக்கு நேரமாயிட்டு?’ என்று கேட்கும் ஆச்சிக்கு, ‘ராலிக்காரன் கொஞ்சம் சொணக்கிட்டான்’ என்று பதில் சொல்லிக் கொண்டே துண்டால் உடம்பு, முகமெல்லாம் துடைத்தபடி தரையில் உட்காருவார் சேசுமணி. (அவர் ராலி என்று சொல்வது லாரியை). லாரிக்காரன் மீது சேசுமணி வீண்பழி போடுகிறார் என்பது ஆச்சிக்குத் தெரியும். கூடவே சேசுமணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்ற விஷயமும் தெரியும். ஆனால் கேட்க மாட்டாள். தன் பக்கத்திலேயே வைத்திருக்கும் செம்புத் தண்ணீரை எடுத்து கொடுப்பாள்.
கொஞ்ச நேரம் ஆச்சியிடம் ஊர் மற்றும் குடும்பக்கதைகள் பேசிக்கொண்டிருப்பார் சேசுமணி. ராஜேந்திரனும், சேசுராஜும் என்னையும், என் தம்பியையும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டு கபடியும், கண்ணைக்கட்டியும் விளையாடுவார்கள். ஆடிக் களைத்த பின் சாப்பிட உட்காருவார்கள். அவர்கள் கொண்டு வந்த சோற்றுக்கு எங்கள் வீட்டு அடுக்களையிலிருந்து அவர்கள் கேட்காமலேயே தொடுகறியும், குழம்பும் வரும். துணியில் சுற்றி வைத்திருக்கும் சோற்றுப் பொட்டலத்தை அவர்கள் பிரிக்கும் போது துணி கிழிவது போன்ற சத்தம் கேட்கும். ஆனால் கிழியாது. அருகில் கிடக்கும் கீரை மூடைகளிலிருந்து மண்ணும், இலையும் கலந்த ஒரு வாசனை பரவ, பல இரவுகளில் எங்கள் இரவுச் சாப்பாடு அவர்களுடனே கழிந்திருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை போக கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்று கீரைக்காரர்கள் வருவதில்லை. நாள், கிழமைகளை அவற்றை கடைப்பிடிக்கும் திருநெல்வேலிக்காரர்களை விட கீரைக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

‘எம்மா, வார பொதன்கெளமதானெ அம்மாசி? கொஞ்சம் கேலண்டர் பாத்து சொல்லுங்களேன்.’

காலண்டரில் மிகச்சரியாக புதன் கிழமையன்று அமாவாசை என்று வட்டக்கறுப்புக்குறி போடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகவேண்டுமென்பதால் அன்றைக்கு அவர்கள் விற்பனைக்கு வருவதில்லை.

ஆச்சி காலத்துக்குப் பிறகும் கீரைக்காரர்கள் எங்கள் வீட்டில் கொண்டு வந்து மூட்டைகளைப் போட்டுத் தங்கிக் கொண்டுதானிருந்தார்கள். தனது வருமானத்தில் சொற்பத் தொகையை சேசுமணி அவ்வப்போது அம்மாவிடம் கொடுத்து வருவார். வருடத்துக்கு ஒருமுறை வரும் மாதா கோயில் திருவிழாவையொட்டி ஜவுளி எடுப்பதற்காகவே இந்த சேமிப்பு. கயத்தாற்றிலிருந்து அவரது மனைவியும், மகனும் வருவார்கள். ஆரெம்கேவியில் போய் துணி எடுத்துவிட்டு அம்மாவிடம் கொண்டு வந்து காட்டிவிட்டே பஸ் ஏறுவார்கள். கரும்பச்சை, ரத்தச்சிவப்பு போன்ற வண்ணங்களிலேயே உடைகளைத் தேர்வு செய்வார்கள்.

‘நீங்களே சொல்லுங்கம்மா. போன திருளாக்குத்தானெ மாம்பளக்கலர் சட்ட எடுத்து குடுத்தோம். இந்த வருசமும் அதையே கேக்கான். இந்த திக் ரோஸ்கலர் அவனுக்கு வேண்டாமாம். இப்பல்லாம் பிள்ளைய இந்த மாதிரிதான் போடுது. மூதிக்கு புரிய மாட்டெங்கு’.
மூக்கின் பாதியை மறைத்து மூக்குத்தியணிந்திருக்கும் சேசுமணியின் மனைவி சொல்வார். சேசுமணிக்கு டிரவுசர், சட்டையணிந்தால் எப்படி இருப்பாரோ, அதே சாயலில் உள்ள பெரிய காதுகளையுடைய அவரது மகன் கலங்கிய கண்களுடன் அம்மா முன் உட்கார்ந்திருப்பான்.

‘பிஸ்கட் திங்கியாலெ?

குனிந்த தலை நிமிராமல் ‘வேண்டாம்’ என்ற தலையசைப்பு.

‘பாக்கெட் முளுசும் ஒனக்குத்தான்’.

அம்மாவிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டை வாங்கும் போதே அவன் கண்ணீர் மறைந்திருக்கும். பிஸ்கட் தின்னும் போது சிரிப்பை அடக்க முயல்வான். மாதா கோயில் திருவிழாவின் போது யார் நடித்த படம் போடுவது என்பது குறித்த சண்டை ராஜேந்திரனுக்கும், சேசுராஜுக்கும் ஆரம்பமாகிவிடும். ரஜினி ரசிகரான ராஜேந்திரனுடன், சிவாஜி ரசிகனான சேசுராஜ் மல்லுக்கு நிற்பான்.

‘வருசா வருசம் எங்கள் தங்க ராஜாவே பாத்திக்கிட்டிருக்க முடியுமா? இந்த வருசம் யார் என்ன சொன்னாலும் சரி. நான் போட்ட சவால்தான்.’

ராஜேந்திரன் அடித்துச் சொல்வார். வயதில் சிறியவனான சேசுராஜால் ஒன்றும் செய்ய முடியாது.

‘எனக்கென்ன. ஜிவாஜி படம் பாக்குறதுக்கு எங்களுக்கு கொட்டாயியா இல்ல. ராயல் டாக்கீஸ்ல இப்பொ கூட சங்கிலி போட்டிருக்கான். போய் பாத்துக்கிடுவென். எக்கேடும் கெட்டு போங்க.’

சிவாஜியை ஜிவாஜி என்றே உச்சரிக்கும் சேசுராஜ் சும்மா உட்கார்ந்திருக்கும் போது அவரது படப்பாடல்களைப் பாடி மகிழ்வான். மகிழ்ச்சி அவனுக்கு மட்டுமே. காரணம், அவன் பாடும் வரிகள்.
உதாரணம்
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாளவைப்பான் என்று பறந்து சென்றாள்.’

சேசுமணிக்கு பெரிதாக சினிமாவில் ஆர்வமில்லை. அவரது ஆர்வமெல்லாம் கோயில் கொடைகளில்தான். அதுவும் இரவு விடியவிடிய நடைபெறும் கும்பக்குட (கரகாட்டம்) ஆட்டத்தில் அவருக்கு தீராத மோகம். திருநெல்வேலி டவுணில் எந்தப்பகுதியில் கோயில் கொடையென்றாலும் அன்று இரவு அங்கு சேசுமணியைப் பார்க்கலாம். அது ராஜேந்திரனோ, சேசுராஜோ கீரை விற்கும் பகுதியாக இருந்தாலும் கும்பக்குடத்துக்காக சேசுமணி ஒப்பந்தத்தை மீறுவார். ஒருநாள் தேரடிப்பக்கம் ஒரு கும்பக்குட ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. பலமாக விசிலடித்தபடி கும்பக்குடக்காரியுடன் மேல்துண்டை இறுக்கமாகத் தலையில் தலைப்பாகையாகக் கட்டியிருந்த ஒரு மனிதர் ஆடிக் கொண்டிருந்ததை தூரத்திலிருந்தே நானும், கணேசண்ணனும் பார்த்துவிட்டோம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் சென்று நின்று கொண்டோம்.. ஆட்டத்தின் நடுவே தற்செயலாக நாங்கள் நிற்பதை கவனித்துவிட்ட சேசுமணி, சிக்கென்று தன் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டார். ஆட்டம் மட்டும் நிற்கவேயில்லை.

அம்மா இருக்கும் வரை கீரைக்காரர்களுக்கும், எங்களுக்குமான உறவு தொடர்ந்து வந்தது. பிறகு மெல்ல குறைந்து பின் சுத்தமாக தொடர்பே இல்லாமல் போய்விட்டது. மதுரையிலிருந்து காரில் திருநெல்வேலி செல்லும் போது வலது பக்கத்தில் கம்பீரமாக நிற்கும் நடிகர் திலகம் சாயலிலுள்ள கட்டபொம்மன் சிலையைப் பார்க்கும் போது கயத்தாறு வந்து விட்டது தெரியவரும். புதிதாக திருநெல்வேலிக்கு வருபவர்கள் காரை நிறுத்தி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் அவரது சிலையை அண்ணாந்து பார்த்தபடி சிறிது நேரம் அங்கு செலவிடுவார்கள். ஒருசிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதுமுண்டு. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் மூலம் தாங்கள் அறிந்து வைத்திருக்கிற கட்டபொம்மனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போவார்கள். அவர்களுக்கெல்லாம் கயத்தாறென்றால் நிச்சயமாகக் கட்டபொம்மன்தான் நினைவுக்கு வருவார். எங்களுக்கு கீரைக்காரர்கள்.

பாலாபிஷேகம்

சுவாமி நெல்லையப்பனும், காந்திமதியம்மையும் குளிப்பதற்கு தினமும் தாமிரபரணியிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இரண்டு குடங்களுடன் மேளதாளம் முழங்க பட்டர்கள் இருவர் அம்மன் சன்னதி வழியாக ஆற்றுக்குச் செல்லும் போது அவர்களுடன் துணைக்கு நெல்லையப்பர் கோயில் யானையும் செல்வதை இன்றைக்கும் பார்க்கலாம். அம்மன் சன்னதியில் ஏதேனும் துஷ்டி விழுந்தால் மட்டும் அன்றைக்கு அம்மைக்கும், அப்பனுக்கும் குளியல் கிடையாது. மற்றபடி நித்தமும் தாமிரபரணிக் குளியல் உண்டு. இதுபோக சந்தனக் குளியல், தேன்குளியல், விபூதிக் குளியல் என்று ரகவாரியானப் பல குளியல்களுள் பாலாபிஷேகம் என்னும் பால்குளியலும் உண்டு.

சுத்தமாக விளக்கி சந்தன குங்குமமிட்ட பித்தளை பானையை இடுப்பில் சுமந்து கொண்டு சந்திப்பிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போட்டுவிட்டு அதிகாலையில் கல்யாணி ஆச்சி கிளம்புவாள். முன் கொசுவம் வைத்த கைத்தறிப் புடவையும், நெற்றி நிறைய திருநீறும் அணிந்திருக்கும் கல்யாணி ஆச்சிக்கு பழம்பெரும் நடிகை சி.டி.ராஜகாந்தத்தின் சாயல். நான்கு ரதவீதியிலும், பின்னர் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியிலும் வீடு வீடாகச் சென்று அவரவர் சக்திக்கேற்ப தரும் பாலை தன் பானையில் ஊற்றிக் கொள்வாள். தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வரும் வரை நெல்லையப்பர் காத்திருக்கிறாரோ இல்லையோ, கல்யாணி ஆச்சி கொண்டு வரும் பல வீட்டுப் பாலுக்குக் கண்டிப்பாகக் காத்திருப்பார்.

காலையில் அபிஷேகம் முடிந்து தீபாராதனையும் காட்டிய பிறகு காலிப் பானையுடன் எங்கள் வீட்டுக்கு வரும் கல்யாணி ஆச்சி, பானையை கழுவி ஓரமாகக் காய வைத்து விட்டு அம்மாவின் கையால் இட்லியோ, தோசையோ சாப்பிட்டுவிட்டு எங்கள் ஆச்சியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்வாள். கல்யாணி ஆச்சி எங்கள் ஆச்சிக்கு தங்கை முறை. நெல்லையப்பனுக்குச் செய்ய வேண்டிய கடமை முடிந்த பின் தன் அக்காவுடன் பொழுதைக் கழிப்பதுதான் அவள் வேலை. குடும்ப விவகாரங்கள், பொது விஷயங்கள் என அக்காளும், தங்கையும் அலசி ஆராய்வார்கள். வயதில் தன்னை விட சிறியவளாக இருந்தாலும் தங்கை சொல்லும் யோசனைகளுக்கு பெரும்பாலும் எங்கள் ஆச்சி மறுப்பு சொல்வதில்லை.

கல்யாணி ஆச்சி ரொம்பவும் பாஸிட்டிவான பெண்மணி. எதையும், யாரையும் நல்ல கண்ணுடன்தான் பார்ப்பாள். தன் பிள்ளைகள் பற்றி ஆச்சி என்றைக்காவது புலம்புவாள்.

‘ஏ கல்யாணி, நேத்து இந்த நடுவுல உள்ள பய ரொம்ப பேசிட்டான் கேட்டியா? மனசுக்கு ரொம்ப வேதையா போயிட்டு. . .’

பொறுக்க முடியாமல் கலங்கிய கண்களுடன் சொல்வாள் ஆச்சி.

‘சந்தோஷப்படுக்கா. கஷ்டப்பட்டு வளத்து படிக்கவச்சதுக்கு, எவ்வளவு அளகா நம்ம பிள்ளைய நம்மளையே ஏசுது. அத ரசிப்பியா . . . அத விட்டுட்டு . . . . குடுத்துல்லா வச்சிருக்கணும்.’

நிஜமாகவே இதை கல்யாணி ஆச்சி சொல்லும் தொனியில் எப்பேர்ப்பட்ட வருத்தமும் பறந்து போய்விடும். இத்தனைக்கும் கல்யாணி ஆச்சி ரொம்பவே கெடுபிடியானவள். காலை ஆட்டியபடி உட்கார்ந்திருந்தால் ‘எய்யா, காலாட்டினா வாலாட்டி தங்காது’ என்பாள். விசிலடிப்பதையும் அனுமதிப்பதில்லை. ‘சீட்டியடித்தால் வீட்டுக்காகாது’ என்று பயமுறுத்துவாள். திருநீறு இல்லாத நெற்றியை அனுமதிப்பதே இல்லை. ‘நீரில்லா நெத்தி பாள்லா’ என்பாள்.

கண்ணில் படுபவரிடமெல்லாம் குசலம் விசாரிக்கும் பண்பு அவளிடம் இருந்தது. ‘எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ! ஒன் தம்பியப் பாக்கும் போதெல்லாம் கேக்கணும் கேக்கணும்னு நெனைப்பேன்’. வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் உண்மையாகவே கல்யாணியின் ஆச்சியின் விசாரிப்பில் அன்பு தெரியும். அநேகமாக திருநெல்வேலியில் எல்லோரையும் கல்யாணி ஆச்சிக்கும், எல்லோருக்கும் அவளையும் தெரிந்திருந்தது.

‘எத்தை, நீங்க மட்டும் எலக்ஷன்ல நின்னா அன்னபோஸ்ட்ல ஜெயிச்சுருவியெ’. அம்மா கேலியாகச் சொல்வாள்.

‘நின்னுட்டா போச்சு. யார் போட்டாலும் மாமியாளுக்கு நீ போடுவியாக்கும்?’.

அடக்க முடியாமல் சிரித்தபடி பதில் சொல்வாள் ஆச்சி.

அந்தக் காலத்திலேயே ரயிலில் காசி சென்று வந்தவள் கல்யாணி ஆச்சி. அந்த பிரயாணத்தை எத்தனை முறை கேட்டாலும் புதிதாகச் சொல்வது போல சலிக்காமல் சொல்வாள். யாரையுமே நெருக்கமாகப் பழகுபவர் போலவேதான் ஆச்சியால் சொல்ல முடியும். ஒருமுறை சொன்னாள்.

‘சாவடிப் பிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குத்தான் அவாள் வந்திருந்தா. ஆனா நான் அவாள அங்கெ வச்சு பாக்கல. நம்ம மார்க்கெட்ல வச்சுத்தான் பாத்தேன். பக்கத்துல போயி கும்பிட்டேன். பச்சப் புள்ள மாதிரி சிரிச்சுக்கிட்டெ அவாளும் பதிலுக்கு கும்பிட்டா’.

‘அவாள்’ என்பது திருநெல்வேலியில் பிரியமானவர்களை மரியாதையுடன் விளிக்கும் சொல். கல்யாணி ஆச்சி ‘அவாள்’ என்று சொன்னது மஹாத்மா காந்தியை.

கல்யாணி ஆச்சியின் கணவர் காலமான பிறகு தனியாக வசித்து வந்தாள். அருணகிரி பெரியப்பா என்று நாங்கள் அழைக்கும் ஆச்சியின் மகன் சங்கரன்கோயில் சங்கரநயினார் – கோமதியம்பாள் கோயிலில் அலுவலராக பணி புரிந்து வந்தார். எப்போதும் சடை விழுந்த முடியுடன் காட்சியளிக்கும் அவர், தூக்கிய முன்பல்லுடன், ‘எல அய்யா, சும்மா இருக்கியா’ என்று அருகில் வந்து கேட்கும் போதெல்லாம் சிறுவனான நான் பயந்து அழுதிருக்கிறேன். ‘பெரியப்பாமாரு அப்பப்போ வந்துபோயி இருந்தாதானே பிள்ளைகளுக்கு அடையாளம் தெரியும். நீ கோமதியம்மையே கெதின்னு கெடக்கே. காந்திமதியம்மையையும் மனுஷின்னு நெனச்சு வரணும்லா’. அதிகம் தன்னை வந்துப் பார்க்காத மகனை கடவுள் பெயரால் சாந்தமாகச் சொல்லிக் காட்டுவாள் ஆச்சி.

கல்யாணி ஆச்சியின் வீடு காந்தி சதுக்கத்துக்கு அருகில் இருந்தது. சிவாஜி கணேசனைப் பார்ப்பதற்காக கல்யாணி ஆச்சியின் வீட்டுக்கு அம்மாவுடன் ஒருமுறை போயிருந்தேன். சந்திப் பிள்ளையார் முக்கில்தான் மேடை போட்டிருந்தார்கள். சின்னஞ்சிறு வீட்டில் இருந்த கல்யாணி ஆச்சி ஓடிப் போய் வடையும், கலரும் வாங்கி வந்தாள். காலையிலிருந்தே சிவாஜிக்காகக் காத்திருந்தோம். மதியத்துக்கு மேல்தான் வந்தார். ‘பிள்ளைகளே’ என்று துவக்கி இரண்டே நிமிடங்கள் பேசிவிட்டு கைகாட்டிவிட்டு இறங்கிவிட்டார். சிவாஜி கணேசனை கிட்டத்தில் பார்த்த சந்தோஷம் எங்களுக்கு இருந்தாலும், கல்யாணி ஆச்சிக்கு ஏனோ ஏமாற்றமாகவே இருந்தது. ‘இதா கணேசன், இதா கணேசன்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். ஆச்சிக்குத் தெரிந்ததெல்லாம் ‘திருவிளையாடல்’ மற்றும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ சிவாஜி. கழுத்தில் பாம்பும், தலையில் கங்கையும் கொண்ட சிவாஜி இல்லையென்றாலும், குறைந்த பட்சம் கிரீடமும், வாளும் இல்லாத சிவாஜியை அவளால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ‘என்னளா, வட்டக் களுத்து ஜிப்பா போட்ட ஆள போயி கணேசன்னு சொல்லுதே?’. நம்ப முடியாமல் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு பெரியர்கள் காலில் விழுந்து வணங்கி திருநீறு பூசிக் கொள்ள சின்னப் பிள்ளைகள் நாங்கள் அலையாய் அலைவோம். யாரேனும் பெரியவர்கள் வாசலில் வருவது தெரிந்தாலே, பூஜையறைக்கு ஓடிப்போய் திறுநீற்று மரவையை எடுத்து வருவோம். ஆசீர்வாதத்துக்குப் பின் அவர்கள் கொடுக்கும் பணத்துக்குத்தான் இத்தனை மரியாதை. கல்யாணி ஆச்சியிடமும் திருநீறு பூசுவோம். ‘தீர்க்காயுசா இருக்கணும்’ என்று சொல்லி ஆசீர்வதித்து திருநீறு பூசுவாள். வறுமையில் உள்ள கல்யாணி ஆச்சிக்கு நாங்கள்தான் பணம் கொடுப்போம்.

‘இந்த ஆச்சி மட்டும் திருநாறு பூசி துட்டு வாங்குதாங்க. குடுக்கவே மாட்டக்காங்க’.

விவரம் அறியாத குழந்தைகள் யாராவது சொன்னால் அதற்கும் ஆச்சி சந்தோஷமாகச் சிரித்தபடிதான் பதில் சொல்லுவாள்.

‘நாளைக்கு ஒன் பிள்ளைகளுக்கு நீ சொல்லலாம்லா, இப்படி ஒரு ஆச்சிட்ட நாங்க திருநாறு பூசி துட்டு குடுப்போம்னு’.

கல்யாணி ஆச்சியுடன் தெப்பம் பார்க்க போயிருக்கிறேன். அப்போதெல்லாம் தெப்பத் திருவிழா நடைபெறும் போது வெளித்தெப்பத்தில் ஒரு ஆச்சி கையில் விளக்கொன்றை ஏந்தியபடி நீந்தி வருவாள். (காவிச் சேலை அணிந்து தெப்பத்தைச் சுற்றிச் சுற்றி நீந்தி வரும் அவளைப் பற்றி எழுத்தாளர் வண்ணதாசன் எழுதியுள்ளார்.) தெப்பத்திலிருக்கும் சாமியுடன் சேர்த்து நீந்தும் ஆச்சியையும் கும்பிடுவாள் கல்யாணி ஆச்சி. ‘இந்த அக்கால்லாம் நிச்சயம் சொர்க்கத்துக்குத்தான் போவா.’ என்பாள்.

வீடு வீடாகச் சென்று பால் சேகரித்து தினமும் நெல்லையப்பருக்கு அபிஷேகம் பண்ணும் கல்யாணி ஆச்சியின் செயல் திருநெல்வேலிக்காரர்களுக்கு ஆச்சரியமாகவே இல்லை. பார்த்து பார்த்து அவர்களுக்கு பழகிவிட்டது. கல்யாணி ஆச்சியுமே அதை ஒரு பெரிய சேவையாகவோ, செயலாகவோ கருதவில்லை. உள்ளார்ந்த பக்தியுடன் ஒரு கடமை போலவேதான் செய்து வந்தாள். ஜூனியர் விகடனில் பால் குடத்துடன் இருக்கும் கல்யாணி ஆச்சியின் புகைப்படத்தை பிரசுரித்து செய்தியாக வெளியிட்டபோது கூட அவள் அதை பெருமையாகக் கருதவில்லை. எங்களுக்குத்தான் சந்தோஷமாக இருந்தது.

கல்யாணி ஆச்சி இப்போது இல்லை. இன்றைக்கும் திருநெல்வேலியில் இரண்டு பட்டர்கள் குடமேந்தி தினமும் தாமிரபரணிக்குச் செல்கிறார்கள். மேளத்துணையுடன் யானையும் உடன் செல்கிறது. துஷ்டிக்குக் குளிக்காத வழக்கத்தை இன்னமும் நெல்லைப்பர் கடைப்பிடிக்கத்தான் செய்கிறார். சந்தனம், தேன், விபூதி என குளியல்களுக்கும் குறைச்சலில்லை. கத்தரிக்கப்பட்ட விதவிதமான பாக்கெட் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.

இடுக்கண் களைவதாம்

நண்பன் குஞ்சரமணி அப்போது கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தான். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸ்டிரைக் என்று சொல்லி திருநெல்வேலிக்கு வந்துவிடுவான். அப்படி வந்திருந்த ஒரு நாளில் என்னை அவனுடனேயே இருக்கச் சொல்லி வற்புறுத்தினான். வீட்டுக்குள்ளும் செல்லாமல் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு யார் வரவையோ எதிர்பார்த்து காத்திருந்தான்.

‘யாருல வரப்போறா’ . . . .

‘இரு . . சொல்லுதேன்’.

அம்மன் சன்னதி மண்டபம் வழியாக போஸ்ட்மேன் வருவது தெரிந்தது. அவர் எங்களுக்கு அருகில் வருவதற்குள் என்னையும் இழுத்துக் கொண்டு அவரிடம் சென்றான். ‘ எனக்கு ஏதும் லெட்டர் வந்திருக்கா’. வெயிலில் வந்த களைப்பும், சலிப்புமாக ‘ வந்தா வீட்டுல கொண்டு தர மாட்டேனா’ என்று சொல்லியபடி எரிச்சலோடு பைக்குள் பார்த்து ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்து கொடுத்தார் போஸ்ட்மேன் .

பஜனை மடத்தின் உட்திண்ணை நிழலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வாயெல்லாம் பல்லாக என்னிடம் அந்த இன்லேண்ட் லெட்டரை கொடுத்து பிரிக்கச் சொன்னான். ‘ வாள்க்கைல எனக்கு வர்ற மொத லவ்லெட்டரை நீதாம்ல பிரிக்கணும் ‘. என்னதான் உயிர் நண்பனாக இருந்தாலும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால் அதை பிரித்த வேகத்தில் படிக்கத் துவங்கினேன். அதில் குஞ்சுவுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. அவனுக்கு தேவையெல்லாம் எனது பொறாமை ஒன்றே என்பதால் ஒரு போலி பெருந்தன்மை மூஞ்சியை வைத்துக் கொண்டு என்னை ஒரு புண்ணாக்கு பார்வை பார்த்தான். எனக்கு மட்டுமே தெரிந்த இவனது அக்கிரமங்களையெல்லாம் வீர பராக்கிரமங்களாக அந்த முட்டாள் பெண் புகழ்ந்து எழுதியிருந்தாள். பின் வழக்கம் போல தத்துபித்தென கவிதை.

‘தித்திக்கும் முத்தம் நீ தந்தாய்
பத்திக்கும் முத்தம் நான் தந்தேன்
எத்திக்கும் செல்லும் நம் காதல் எண்ணம்
யார் புத்திக்கும் புரியாத கவிதைச் சின்னம் ‘

‘இதுக்கு பதிலா அவ அசந்து போற மாதிரி ஒரு கவிதையை நீதாம்ல எளுதணும்’ என்றான் குஞ்சு. அந்த பிள்ளைக்கு முத்தமெல்லாம் கொடுத்திருக்கிறானே என்று தாங்க முடியாமல் உடனே சொன்னேன்.

‘தித்திக்கும் முத்தத்தை நீ சம்மதித்தால்
உன் சித்திக்கும் தருவேனடி பேதைப் பெண்ணே’

‘ஒன் கவித மயிர நீயே வச்சுக்கோ வயித்தெரிச்சல் புடிச்ச பயலே’ என்று லெட்டரை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போனான்.

பாளையங்கோட்டையிலுள்ள அந்த பெண்ணின் அண்ணனுக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்து குஞ்சுவைத் தேடி வந்துவிட்டான். அம்மன் சன்னதி வந்தவனுக்கு குஞ்சுவை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து கொண்டு போகிற வருகிற பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்த்திருக்கிறான். சட்டை போடாத பூணூல் போட்ட ஒல்லியான உடல்வாகுடைய அவரிடம் போய், ‘ இங்கெ குஞ்சிதபாதம் வீடு எங்கே இருக்கு’ என்று விசாரித்திருக்கிறான். அதற்கு அந்த பெரியவர், ‘நோ நோ ஹி இஸ் நாட் குஞ்சிதபாதம். குஞ்சரமணி, மை சன்’ என்று சொல்லி வீட்டுக்குளிருந்த குஞ்சுவை அழைத்து அவனிடம் பெருமிதம் பொங்க ஒப்படைத்து விட்டார். குஞ்சுவுக்கு அவனை பார்த்தவுடனேயே அவன் யார் என்பது தெரிந்து போய்விட்டது. ‘பஸ்ஸ்டாண்டுக்கு வா தனியாக பேச வேண்டும்’ என்று அழைத்தவனிடம் ‘நீ போ பின்னால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு என்னை பார்க்க வந்துவிட்டான்.

அன்றைக்கு சரஸ்வதி பூஜை. புத்தகங்கள், தம்பூரா, ஹார்மோனியம், மிருதங்கம் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு சர்க்கரைப் பொங்கல், பூம்பருப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பதற்றத்தை மறைத்தபடி குஞ்சு வந்து பஸ்ஸ்டாண்டுக்கு அழைத்தான். பாதிவழி போகும் போதுதான் யாரை பார்க்க போகிறோம் என்று கேட்டேன். விஷயத்தை அவன் சொன்னவுடன் வயிற்றுக்குள் சர்க்கரைப் பொங்கலும், பூம்பருப்பும் சண்டை போட ஆரம்பித்தன. ஆனால் நாம் நேரே அந்த பெண்ணின் அண்ணனைப் பார்க்க போகவில்லை. அதற்கு முன் கோ-ஆப்டக்ஸ் ஷங்கரை பார்த்து அவனையும் உடன் அழைத்துச் செல்ல இருக்கிறோம் என்றான் குஞ்சு. நான் நிம்மதியடைந்தேன். ஷங்கர் பார்ப்பதற்கு அப்படியே ராதாரவி மாதிரி இருப்பான். அவனுடைய தகப்பனார் கோ-ஆப்டக்ஸில் மேலாளராக இருந்ததால் அவன் கோ-ஆப்டக்ஸ் ஷங்கர். ஷங்கருக்கு உள்ளூர் ரௌடிகள் அனைவரும் நண்பர்கள். அவர்களுடன் ஷங்கர் பல அடிதடிகளில் கலந்து கொண்டதாக செவிவழிச் செய்திகள் உண்டு. அந்த தைரியத்தில் ‘ ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்ல ‘ என்றேன் குஞ்சுவிடம்.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டான் ஷங்கர். ‘அந்த பொண்ணு உன்னை காதலிக்கிறது உண்மைதானா’ என்றான் குஞ்சுவிடம். நான் ‘ அவ இவனுக்கு எழுதின லெட்டர படிச்சேன். அவ அண்ணன் ரொம்ப பேசுனான்னா நாம இத சொல்லுவோம். வா ஷங்கர்’ என்றேன். நடந்து போகும் தூரத்தில்தான் பஸ்ஸ்டாண்ட் இருந்தது என்றாலும் ஷங்கர் ஒரு ஆட்டோ பிடித்தான். எங்களுக்கு புரியவில்லை. இதில் ஏதோ சமயோசித சாதுர்ய யுத்த யுக்தி இருக்கிறது என்று யூகித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினோம். முரட்டு உடல்வாகுடைய ஷங்கர் இருக்கும் தெம்பில் இருந்த என் கண்ணுக்கு முதலில் தென்பட்டது அந்த பெண்ணின் அண்ணனுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபர்தான். ஷங்கருக்கு மாமா மாதிரி இருந்த அவர், தாராசிங் கருப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத குஞ்சு இரண்டு வீரர்கள் ஆட்டோவில் இருக்கிற தைரியத்தில் இறங்கிச் சென்றான்.

பத்தடி தூரத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருந்ததாலோ, என்னவோ முதலில் சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டார்கள். திடீரென்று டப்டப்பென்று சத்தம் கேட்டது. இவன் அவனை அடிக்க, அவன் இவனை அடிக்க கட்டிப் பிடித்து தரையில் உருண்டார்கள். சட் சட்டென்று பக்கத்து கடைகளின் ஷட்டர்கள் இறக்கப்பட்டன. நாங்கள் உட்கார்ந்திருந்த ஆட்டோ லேசாக ஆடத் துவங்கியது. கோ-ஆப்டக்ஸ் ஷங்கர் பதற்றத்தில் குலுங்கிக் கொண்டிருந்தான். அந்த பெரிய குலுங்கலுக்குள் எனது சின்னக் குலுங்கல் அமுங்கிப் போனது. அடித்து சட்டையைக் கிழித்து உருண்டுக் கொண்டிருந்த இருவருக்கருகிலும் தலையைப் பிடித்தபடி அந்த தாராசிங் மாமா உட்கார்ந்து கொண்டு பெண்குரலில் ‘அய்யோ இப்படி கெடந்து அடிச்சிக்கிறாங்களே யாராவது வந்து விலக்குங்களேன்’ என்று கதறினார்.

ஒருமாதிரியாக அவர்களாகவே களைப்படைந்து விலகி குஞ்சு வந்து ஆட்டோவில் ஏறினான். ஆட்டோ கிளம்பி நகர ஆரம்பித்ததும் கோ-ஆப்டக்ஸ் ஷங்கர், ‘எல . . மேல கைய வச்சிட்டேல்லா . . பாருல . . இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள உன்ன தூக்குதோம்’ என்று ஓவராக சவுண்ட் விட்டான். நானும் என் பங்குக்கு அவனை விட சத்தமாக மனதுக்குள் சத்தம் போட்டேன். அம்மன் சன்னதிக்கு வந்ததும் குஞ்சுவிடம் ‘ரொம்ப அடி பட்டிருச்சா’ என்றேன். ‘ஒங்கள கூட்டிக்கிட்டு போனதுக்கு பதிலா ரெண்டு நாயை கூட்டிக்கிட்டு போயிருந்தாலாவது மேல விளுந்து கடிச்சிருக்கும்’ என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கி ரத்தம் வருகிறதா என்று குஞ்சு பார்த்தான்.

பன்மொழிப்புலமை

கமலஹாசன் அவர்களிடம் ஒரு முறை கேட்டேன். ஏழெட்டு மொழிகள் தெரிந்த நீங்கள் வேற்று மொழி கற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன் என்று. கொஞ்சம் முயற்சியும், நிறைய ஆர்வமும் இருந்தால் எந்த பாஷையும், எத்தனை பாஷையும் கற்றுக் கொள்ளலாம் என்றார். அது உண்மைதான். என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது. தமிழையே ஒழுங்காகக் கற்றுக் கொள்ளவில்லை என்கிற தாழ்வுணர்ச்சி இன்று வரை உண்டு. அது போக கொஞ்சம் உடைந்த ஆங்கிலம் தெரியும். அதாவது எங்காவது போனால் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு தங்க, குளிக்க, சாப்பிட முடியும். அது போதாதா. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தமிழ், ஆங்கிலம் தவிர ஹிந்தி எழுதப்படிக்கத் தெரியும். தொடர்ந்து ஆர்வமுடன் பார்த்த மலையாளப் படங்களின் புண்ணியத்தில், யார் என்னிடம் மலையாளத்தில் பேசினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும். முக்கியமான மலையாள ஜோக்குகளை நண்பர் ஜெயமோகன் என்னிடத்தில் மலையாளத்திலேயே சொல்வார். மோகனுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் தவிர சமஸ்கிருதப் பரிச்சயமும் உண்டு. சகோதரி அருண்மொழிக்கும் தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் தெரியும் என்றே நினைக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்த ஹிந்தியில் ‘க’ ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமே நினைவில் இல்லை.1996 ஆம் வருடம் என் ஆசான் திரு.பாலு மகேந்திரா அவர்கள் ஒரு ஹிந்தி படம் எடுக்க முடிவு செய்தார். நான் அவருடைய அஸோஸியேட் டைரக்டர். படப்பிடிப்பு தேதி நெருங்க நெருங்க, எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஹீரா என எனக்கு நன்கு பழக்கமான தென்னிந்திய நட்சத்திரங்கள்தான் நடிக்கிறார்கள் என்றாலும் வசனம் சொல்லிக் கொடுக்க வேண்டுமே. அங்குதான் சிக்கல். பொதுவாகவே நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் முறையில் திருப்தி அடைந்து காமிராவிலேயே அமர்ந்து விடுவார் என் வாத்தியார். பாடல்கள் பற்றி முடிவு செய்ய இளையராஜா அவர்களைப் பார்க்க போய் அவருக்காகக் காத்திருந்த போது மெல்ல வாத்தியாரிடம் விஷயத்தை சொன்னேன். என்ன சொல்றே. உனக்கு ஹிந்தி தெரியாதா என்றார். ‘நமஸ்தே’ங்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றேன். பிறகு ஹிந்தி தெரிந்த உதவியாளர்களை வைத்துக் கொண்டு சமாளித்தோம். இளையராஜா அவர்களும் எனக்குத்தெரிந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம்,தெலுங்கு பேசுவார். ஹிந்தியும் புரிந்து கொள்வார். வாத்தியாருக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலைமை உண்டு. சிங்களமும் தெரியும். மலையாளம் பேச மாட்டார். புரிந்து கொள்வார்.

நண்பர்களில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் படிப்பார்.தெலுங்கு புரிந்து கொள்வார். ‘நான் கடவுள்’ படத்தில் பணியாற்றியவரும், இசை விமரிசகரும், ஏ.ஆர்.ரஹ்மானின் நண்பருமான எழுத்தாளர் ஷாஜிக்கு எட்டு பாஷைகள் எழுதப் படிக்க தெரியும். நாஞ்சில் நாடன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மராட்டி என ஐந்து மொழிகள் தெரியும் என்றே கருதுகிறேன். பாரதி மணி பாட்டையாவுக்கும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என பல பாஷைகளில் புலமை உண்டு. எங்களைப் போன்ற நெருக்கமானவர்களிடம் அவர் பேசும் பிரத்தியேக பாஷை பற்றி பொதுவில் சொல்ல இயலாது.

என் வீட்டம்மாவுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகள் தெரியும். இதில் தமிழில் மட்டும்தான் கொஞ்சம் புலமை கம்மி. தனக்குத் தெரிந்த எல்லா பாஷைகளிலும் என்னை சராமாரியாக அவர்கள் தாக்கும் போதெல்லாம் எல்லா கணவர்களுக்குமான பொது மொழியாகிய மெளனமொழியில் பதிலடி கொடுப்பேன். நிலைகுலைந்து போவார்.

ஹிந்தி தெரியாமல் ஜெயமோகன், ஆர்தர் வில்ஸன், ஆர்யா உட்பட நாங்களனைவரும் நாற்பது நாட்கள் காசியில் பட்ட பாட்டை ஒரு தனி புத்தகமாகவே எழுதலாம். ரயிலில் நாங்கள் பயணிக்கும் போது எங்களுடன் நான் மிகவும் மதிக்கும் கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வந்தார். ஜி.வி.ஐயர், எம்.டி.வாசுதேவன் நாயர், பரதன் போன்ற ஜாம்பவான்களுடன் பல மொழிப் படங்களில் பணியாற்றிய மேதை அவர். இந்தியா முழுதும் சுற்றியவர். இரண்டு நாட்களும் ரயிலில் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டே சென்றோம். பேச்சுவாக்கில் நான் கிருஷ்ணமூர்த்தி ஸாரிடம் உங்களுக்கு ஹிந்தி தெரியும்தானே ஸார் என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். மனிதருக்கு மூக்கின் மேல் கோபம் வந்துவிட்டது. என்ன ஸார் கேக்குறீங்க.? எனக்கு எப்படி ஹிந்தி தெரியாமல் போகும் என்றார். நான் பதறிப் போய் அவர் கைகால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். ஜெயமோகனும் இதுதான் சாக்கென்று ‘அவருக்கிருக்கும் அனுபவத்திற்கு அவரிடம் போய் இப்படி முட்டாள்தனமாகக் கேட்கலாமா’ என்று என்னை வறுத்தெடுத்து விட்டார். அதன் பிறகு காசிக்குப் போய் சேரும் வரை கிருஷணமூர்த்தி ஸாரிடம் ஒரு சேவகன் போல் பணிவுடன் நடந்து கொண்டேன். ‘மோகன், நாம் காசியியில் எங்கு சென்றாலும் கிருஷ்ணமூர்த்தி ஸாருடனே செல்வோம். அதுதான் நமக்கும் நல்லது’ என்று ஜெயமோகனிடம் சொன்னேன். அவரும் ஒத்துக் கொண்டார். காசியில் போய் இறங்கியதும் போலீஸிடம் மாட்டிக் கொண்டோம். ஒற்றைக் கடுக்கன் போட்டிருக்கும் ஆர்தர் வில்ஸனும், பச்சை கண்கள் கொண்ட ஆர்யாவும் சந்தேகத்துக்கிடமின்றி தீவிரவாதிகள் என்றே உத்திரப் பிரதேச போலீஸார் நம்பினர். கிருஷ்ணமூர்த்தி ஸார் எங்களுக்கு முன்பே காரில் ஹோட்டலுக்குச் சென்று விட்டதால் எங்களை காப்பாற்ற ஹிந்தி தெரிவார் யாருமில்லை. அப்புறம் ஒரு வழியாக எங்கள் தயாரிப்பு நிர்வாகி லோகு வந்து இன்ன பாஷை என்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு பாஷையில் பேசி உ.பி.போலீஸை குழப்பி திகிலுக்குள்ளாக்கி எங்களை விடுவித்தார்.

கிருஷ்ணமூர்த்தி ஸாரிடம் போய் விஷயத்தை சொன்னோம். சே. . . . நான் இல்லாமல் போனேனே என்று வருந்தினார். அதன் பிறகு காசியில் கிருஷ்ணமூர்த்தி ஸாரை தொந்தரவு செய்யாமல் நாங்களே ஒரு மாதிரியாக சமாளித்துக் கொண்டோம். காரணம் வேறொன்றுமில்லை. ‘கிதர் ஹே’ என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த ஒரு ஹிந்தி வார்த்தையும் அவர் பேசி அந்த நாற்பது நாட்களில் நாங்கள் யாருமே கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் கங்கைக் கரையில் விறுவிறுவென நடந்து வந்து கொண்டிருந்த என்னிடமே ஒரு பேனரை காட்டி ‘ஈ கேலரி கிதர் ஹே’ என்று கிருஷ்ணமூர்த்தி ஸார் கேட்டதுதான் அதில் உச்சம்.

பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமிருந்தாலும் எனக்கும், கவிஞரும், ஒளிப்பதிவாளருமான என் நண்பர் செழியனுக்கும் தெரிந்ததென்னவோ தமிழும், ஆங்கிலமும்தான். இதுபோக இப்பூவலகில் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மூன்றாவது மொழியைப் பேசும் அந்த மூன்றாவது நபர் இப்போது உயிருடன் இல்லை.

அந்த நபர் காலஞ்சென்ற திரு.யாகவா முனிவர். மொழி இனான்ய மொழி.

காதல் மன்னன்

மந்திரமூர்த்தியின் வீட்டை டாக்டர்பிள்ளை வீடு என்றுதான் எல்லோரும் அடையாளம் சொல்வர். மந்திரமூர்த்தியின் பூட்டனார், அதாவது தாத்தாவின் தகப்பனார், அந்த காலத்தில் புகழ் பெற்ற டாக்டராக இருந்திருக்கிறார். அவர் கட்டிய வீடு என்பதால் டாக்டர்பிள்ளை வீடு. மந்திரமூர்த்தியின் தகப்பனார், தனது இரண்டு சகோதரர்களுடன் ஒரே குடும்பமாக அந்த பெரிய வீட்டில் வசித்து வந்தார். பள்ளியில் ஒன்றாகப் படித்த நாட்களிலிருந்து இன்றுவரை மந்திரமூர்த்தி என் தோழன். என்னைப் போலவே நல்ல நிறம். ஒடிசலாக, உயரமாக இருப்பான். மனமெங்கும் தாழ்வு மனப்பான்மையும், கூச்ச சுபாவமும் உடையவன். தெருவில் நடந்து செல்லும் போது தூரத்தில் நான்கு பையன்கள் நின்று பேசிக் கொண்டிருந்தாலே வா, வேறு பக்கமாகப் போகலாம் என்று நம்மை இழுத்துச் செல்பவன். ஆனால் காதல் விஷயத்தில் மட்டும் உறுதியானவன்.

முதலில் மந்திரமூர்த்தி காதலித்தது தன்னை விட இரண்டு வயது மூத்தவளான பாத்திமாவை. பாத்திமாவின் அண்ணனும், மந்திரமூர்த்தியின் அண்ணனும் கிளாஸ்மேட்ஸ். அவள் சினிமாவுக்குக் கிளம்பினால் எப்படியாவது தகவல் தெரிந்து கொண்டு எங்களை நச்சரித்து சினிமாவுக்கு இழுத்துச் செல்வான். தினமும் டியூஷனுக்கு போகும் அவளை பத்திரமாகக் கூட்டிச் சென்று பின் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்த்து வந்தான். ஆனால் தன் கூடவே இவன் வருவது பாத்திமாவுக்கு தெரிந்துவிடாத அளவு இடைவெளியில்தான் நடப்பான். அவளுக்கு திருமணம் ஆகும் வரைக்கும் அது தெரியாமலேயே போனதுதான் சோகம்.

பாத்திமாவின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்துவிட்டு மந்திரமூர்த்தி அடுத்து காதலிக்கத் தேர்ந்தெடுத்த பெண் மனோரஞ்சிதம். இவள் மூன்று வயது மூத்தவள். டாக்டர்பிள்ளை வீட்டுக்கு பக்கத்து வீடு. கல்லூரியில் படித்து வந்தாள். இவளை காதலித்ததில் மந்திரமூர்த்திக்கு இருந்த ஒரே சிக்கல் அவள் வேறொருவனை காதலித்து வந்தாள். அதற்காகவெல்லாம் மந்திரமூர்த்தி மனம் தளரவில்லை. எப்படியாவது மனோரஞ்சிதத்தின் காதலனை அடித்து மிரட்டி காதலிலிருந்து துரத்தி விட வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வந்தான். அழகனும், பலசாலியும், புத்திசாலியுமான மனோரஞ்சிதத்தின் காதலன் கந்தகுமார் பின்வரும் காலங்களில் எங்களுக்கு நண்பனாகிப் போனான். அப்போதெல்லாம் பழைய விஷயங்களைக் கேள்விப்பட்டு , ‘எப்பா என்னை அடிச்சுக் கிடிச்சுப் போடாதீங்கப்பா’ என்று கலாட்டா செய்வான். அந்த சமயத்தில் மந்திரமூர்த்தி, கந்தகுமார் இருவருமே மனோரஞ்சிதத்தை மறந்து விட்டிருந்தனர். அவளது கணவன் ஒரு முரடன் என்பதே அதற்கு காரணம்.

கல்லூரிக்குச் சென்றபின் மந்திரமூர்த்தி காதலித்தது உமாவை. தினமும் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் அவளை பஸ் ஏற்றிவிட்டு அதற்கு பின்பே இவன் கிளம்புவான். எங்களை விட ஒரே ஒரு வயது இளையவனான மீனாட்சி சுந்தரம்தான் மந்திரமூர்த்திக்குத் துணையாக இந்த காதலில் நின்றவன். என்னை சித்தப்பா என்றும், மந்திரமூர்த்தியை மாமா என்றும் அழைக்கும் மீனாட்சியிடம் கேட்டேன்.

எல, ஒங்க மாமன் காதலிக்கிற அந்தப் பொண்ணு நல்லா இருக்குமா?

என்ன இப்படி கேட்டுட்டீய சித்தப்பா . . செலக்கார் ஜானகியைப் பாத்தா எங்க அத்தையப் பாக்க வேண்டாம்.

சௌகார் ஜானகியை மீனாட்சி செலக்கார் ஜானகி என்றே இன்றைக்கும் சொல்வான்.

மந்திரமூர்த்தி காதலிக்கும் எல்லாப் பெண்களையும் போல உமாவுக்கும் மந்திரமூர்த்தியை யாரென்றே தெரியாது. ஆனாலும் மந்திரமூர்த்தி சும்மா இருந்துவிடவில்லை. ஒரு புத்தாண்டு தினத்திற்கு வாழ்த்து அட்டை வாங்கி அந்த பெண்ணிற்கு அனுப்ப முடிவு செய்து விட்டான். இயல்பிலேயே பயங்கரமான தைரியசாலி என்பதால் அந்த வாழ்த்து அட்டையில் கையெழுத்திடுவதற்கு வேறொருவனை தேர்ந்தெடுத்தான். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவன் குஞ்சுவின் தம்பி பாலாஜி. பாலாஜி மிகவும் மகிழ்ச்சியாக நம்மிடம் ஒருவன் கையெழுத்தெல்லாம் கேட்கிறானே என்று என்னமோ ஆட்டொகிரா·ப் போடுவது போல் போட்டு விட்டான். அதற்குப் பிறகுதான் அந்த பெண் உமாவின் தகப்பனார் போலீஸ் துறையில் வேலை பார்க்கிறார் என்னும் விவரத்தை நாங்கள் பாலாஜியிடம் சொன்னோம். விளைவு, மந்திரமூர்த்தியின் தொடர்பை துண்டித்துவிட்டு நிற்காத வயிற்றுப் போக்கின் காரணமாக ஒரு வாரம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான் பாலாஜி. அந்த வாழ்த்து அட்டை மந்திரமூர்த்தி தன் மன திருப்திக்காக எழுதி கவ¨ரெல்லாம் ஒட்டியும் தன் பெட்டிக்குள்ளேயே வைத்திருந்த விவரம் பிறகு தெரிய வந்தது. அதற்கு பிறகுதான் பாலாஜியின் உடம்பு இயல்புநிலைக்கு வந்து லேசாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல மந்திரமூர்த்தி காதலிக்கும் பெண்களின் வயது குறைய ஆரம்பித்தது. அவனது தூரத்து உறவில் மாமன்மகள் முறை வருகிற ஒரு பெண்ணை போனால் போகிறது என்று காதலிக்கத் தொடங்கினான். அந்த பெண் அப்போது ப்ளஸ்டூ படித்து வந்தாள். அந்தப் பெண் உன்னை காதலிக்கிறாள் என்று எப்படி சொல்கிறாய் என்று கேட்டதற்கு, ஒரு முறை அவள் வீட்டுக்கு குடும்பத்துடன் இவன் சென்ற போது அந்தப் பெண் சிரித்தபடியே ‘வாங்க’ என்றழைத்ததை நினைவு கூர்ந்தான். பிறகு ஒருமுறை பத்திரமாக வைத்திருக்கும் படி ஒரு புகைப்படத்தை என்னிடம் கொடுத்தான். அது அந்த மாமன் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஆல்பத்திலிருந்து உருவியிருக்கிறான் என்பது அவன் சொல்லாமலேயே தெரிந்தது. கேட்டால் எப்படியும் ஒத்துக் கொள்ளாமல் அவளே கொடுத்ததாகத்தான் சொல்வான் என்பதால் அமைதியாக வாங்கி வைத்துக் கொண்டேன். ரொம்ப நாட்கள் கழித்து அவனிடமே அந்த புகைப்படத்தை நான் திருப்பிக் கொடுத்த போது அதை வாங்கிக் கிழித்து போட்டான். இந்த முறை மந்திரமூர்த்திக்கே திருமணமாகியிருந்தது.

தற்போது ஒரு டால்கம் பவுடர் நிறுவனத்தின் ஏரியா மேனேஜராக இருக்கும் மந்திரமூர்த்தி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறான். சென்னையில் வீடுகட்டி மனைவி, மகளுடன் வசிக்கிறான். முன் வழுக்கையும், தொப்பையுமாகப் பார்ப்பதற்கு வேறு ஆளாகிவிட்டான். நீண்ட காலத்துக்குப் பின் நான், நண்பன் குஞ்சு, மந்திரமூர்த்தி மூவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். குஞ்சுதான் மெல்ல வாயைக் கிளறினான்.

அப்புறம் மந்திரமூர்த்தி சொல்லு . . வேறென்ன விசேஷம் .. .

ஒண்ணுமில்லேப்பா . . .ஏதோ போயிக்கிட்டிருக்கு . . .

ஏதாவது இருக்குமே . . . நீ காதல் மன்னனாச்சே. . .வந்து விளுவாங்களே உன் மேல . . . . சும்மா சொல்லுல . .பந்தா பண்ணாதே . . .

சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, பெயருக்கு ஒரு இழுப்பு இழுத்து புகை அனைத்தையும் வெளியே விட்டு சொன்னான்.

இங்கே சென்னை ஆ·பீஸ்க்கு நான் எத்தனை மணிக்கு போவேன்கிறது எனக்கே தெரியாது. ஆனா நான் போற நேரமெல்லாம் கரெக்டா எங்க ஆ·பீஸ் மாடில குடியிருக்கிற பொண்ணு வந்து நிக்கா. இதுக்கு என்ன அர்த்தம்?

நான் குஞ்சுவைப் பார்த்தேன். குஞ்சு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

நாத தனுமனிஷம்

‘மஞ்சரில விளாத்திகுளம் சாமியப் பத்தி வீரகேரளம்புதூர் விநாயகம் பிள்ளைன்னு ஒருத்தர் எழுதியிருக்காரு. படிச்சு பாருங்க. நல்லா இருக்கு’. வேறு ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக இதை சொன்னார் நண்பர் ஜெயமோகன். ‘மோகன், அது வேற யாருமில்ல. எங்க பெரியப்பா’ என்றேன். விளாத்திகுளம் சாமியைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மனிதர்களைப் பற்றி, எவ்வளவோ விஷயங்கள் பற்றி விநாயகத்துப் பெரியப்பா சொல்லி நான் தெரிந்திருக்கிறேன்.

விநாயகத்துப் பெரியப்பா ஒன்றும் எனக்கு ரத்த உறவு இல்லை. ஆனாலும் பெரியப்பா. இப்படி பல உறவுகள் எனக்கு உண்டு. ஐம்பதுகளில் நெல்லை சகோதரர்கள் என்றழைக்கப்பட்டு கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த எனது பெரியப்பாக்களோடு மிருதங்கம் வாசிப்பவராக அறிமுகமாகி எங்கள் குடும்பத்துக்குள் வந்தவர்தான் விநாயகத்துப் பெரியப்பா. அதன் பின் தாத்தாவுக்கும், ஆச்சிக்கும் மற்றொரு மகனாக ஆகியிருக்கிறார். எனது சொந்த பெரியப்பாக்களை விட நான் அதிகமாக பெரியப்பா என்றழைத்தது விநாயகத்துப் பெரியப்பாவைத்தான். எப்போதுமே வெள்ளை அரைக்கைச் சட்டையும், வேட்டியும்தான் உடை. மாநிறம். சற்று பருமனான உடல்வாகு. மீசையில்லாத முகத்தில் சிரிக்கும் போது சற்றுத் தூக்கலான முன்பல் இரண்டும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.

ரசிகமணி டி.கே.சி.யுடன் நெருங்கிப் பழகிய பெரியப்பாவைப் போன்ற ஒரு கலா ரசிகரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. புகழ் பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அந்த வகையில் தமிழறிஞர்கள் கி.வா.ஜ, திருக்குறள் முனுசாமி போன்றோரின் நண்பர். எந்த ஒரு சூழலுக்கும் ஒரு குறள் சொல்லுவார். ‘இதுக்கும் ஒரு கொறள் வச்சிருப்பேளே’ என்று கேட்டால், ‘என்ன செய்யச் சொல்லுதெ? அந்த பேதீல போவான் எல்லா எளவுக்கும்லா எளுதி வச்சிருக்கான்’ என்பார். மிருதங்கம், ஹார்மோனியம் போக தானே உருவாக்கிய ஒற்றைக் கம்பி வாத்தியம் ஒன்றும் வாசிப்பார். அந்த வாத்தியத்தை பத்திருபது நிமிடங்களுக்குள் உருவாக்கி வாசிப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒற்றைத் தந்தியில் அத்தனை ஸ்வரங்களையும் கொண்டு வந்து இசைப்பது அவ்வளவு எளிதில்லை.

திருநெல்வேலிக்கு பெரியப்பா வந்தால் குறைந்தது நான்கு நாட்களாவது எங்கள் வீட்டில் தங்குவார். அந்த நான்கு நாட்களும் வீடே நிறம் மாறிவிடும். காலையில் கொஞ்சம் தாமதமாகவே குளிக்கச் செல்வார் பெரியப்பா. அரைத்தூக்கத்தில் இருக்கும் என்னை ஹார்மோனியமோ, மிருதங்கமோ வந்து வருடி எழுப்பும். ஹார்மோனியம் வாசிக்கும் போது பெரியப்பாவிடம் ஒரு கனிவு தெரியும். சித்தரஞ்சனி ராகத்தில் ‘நாத தனுமனிஷம்’ கீர்ததனைதான் பெரியப்பா அடிக்கடி வாசிப்பது. சில சமயங்களில் இருமலோடு பாடுவதும் உண்டு. சித்தரஞ்சனி ஒரு சுவாரஸியமான ராகம். அதில் மேல் ஸட்ஜமத்துக்கு மேலே உள்ள ஸ்வரங்களுக்கு வேலை இல்லை. அந்தச் சின்ன ஏரியாவுக்குள் பெரியப்பா சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வாசித்துக் கொண்டிருப்பார். தூக்கம் கலையாத கண்களுடன் அவரருகில் சென்று உட்காருவேன். ஹார்மோனியத்திலிருந்து கையை எடுக்காமலேயே, அந்த சமயத்தில் தான் வாசித்துக் கொண்டிருக்கும் பிடிமானத்தை கண்களால் எனக்குக் காட்டிச் சிரிப்பார்.

பெரியப்பாவின் ஹார்மோனிய வாசிப்புக்கு நான் பலமுறை மிருதங்கம் வாசித்திருக்கிறேன். அவரது வேகத்துக்கும், லயிப்புக்கும் என்னால் ஈடு கொடுக்க முடிந்ததே இல்லை. கொஞ்ச நேரத்திலேயே நைஸாக மிருதங்கத்தை பெரியப்பாவின் பக்கம் தள்ளிவிட்டு நான் ஹார்மோனியத்தை எடுத்துக் கொள்வேன். மிருதங்கம் கையில் வந்தவுடன் பெரியப்பா ஆளே மாறிவிடுவார். அசுர பலம் வந்து வாசிப்பார். அவர் வாசிப்பில் மிருதங்கம் பேசும். அழும். சிரிக்கும். அதற்குப் பின் மிருதங்கத்திலிருந்து பெரியப்பா வெளியே வர ரொம்ப நேரம் ஆகும். ‘சாமியாடிட்டேளே பெரிப்பா’ என்பேன். ‘வாசிச்சா அப்படித்தான்யா வாசிக்கணும். இல்லென்னா அதத் தொடவே கூடாது’ என்பார். அவரைப் போலவே என்னையும் அந்த இரண்டு வாத்தியங்களிலும் தயார் செய்து விடவேண்டும் என்று பெரியப்பா விரும்பினார். நான் தான் அதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. இதில் என் மேல் அவருக்கு எப்பொழுதும் ஒரு தீராத வருத்தம் இருந்தது. ‘எல்லாருக்கும் இது வராது. ஒனக்கு வருது. ஆனா வாசிக்க ஒனக்கு வலிக்கி’. பாளயங்கோட்டையில் ஒரு கச்சேரியில் நான் மிருதங்கம் வாசித்து விட்டு திரும்பும் போது உடன் வந்திருந்த பெரியப்பா சலிப்புடன் இதை சொன்னார்.

பெங்களூர் சுந்தரம் அவர்களின் ‘ஆனந்த ரகஸ்யம்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு நானாக சில ஆசனங்களை பயின்று கொண்டிருந்தேன். ‘பொஸ்தகத்த பாத்துல்லாம் ஆசனம் போடக் கூடாதுய்யா’ என்று சொல்லி, முறையாக எனக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்த ஆசான் அவர். எனக்கு தெரிந்து அப்போதே அவர் எழுபதை நெருங்கியிருந்தார். ஆனால் அந்த வயதிலும் சிரசாசனம் உட்பட கடினமான ஆசனங்களைப் போட்டு காண்பித்து என்னை அசரடித்தார். இத்தனைக்கும் வாதம் காரணமாக அவரது இரண்டு கால்களும் சற்று வளைந்திருக்கும். அந்தக் கால்களை வைத்துக் கொண்டு அவர் நடக்கும் தூரம் நம்ப முடியாதது. பெரியப்பாவுக்கு மாலையிலும் ஒரு குளியல் உண்டு. குளித்து முடித்த பின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து நடுவகிடெடுத்து தலை வாருவார். மெல்ல நடக்க ஆரம்பிப்பார். இரண்டு மணிநேரம் கழித்து நெற்றி நிறைய திருநீறுடன் வீடு திரும்புவார். நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி வந்திருக்கும் களைப்பு அவர் உட்காரும் போது நமக்கு தெரியும்.

‘நானேதானெ இங்கெ வந்துக்கிட்டிருக்கென். நீ ஒரு நாளைக்கு வீரகேரளம்புதூர் வாய்யா’. ரொம்ப நாட்கள் சொல்லிக் கொண்டிருந்த பெரியப்பாவுக்காக ஒரு மாலையில் அங்கு சென்றேன். சந்தோஷத்தில் பெரியப்பாவின் வீட்டிலுள்ள அனைவரும் உபசரித்தார்கள். தடபுடலான இரவு உணவுக்குப் பின் சுகமான காற்றடிக்க இருவரும் சிறிது தூரம் நடந்தோம். ஊரே அடங்கிய அமைதியான பொழுதில் வீட்டு வாசலறையில் வந்து உட்கார்ந்தோம். பெரியப்பா ‘அந்த பொட்டிய எடு’ என்றார். பெரியம்மை ஒரு பழைய அழுக்குப் பெட்டியை எடுத்து கொடுக்க, அதை தன் பக்கம் நகர்த்தி உள்ளுக்குள்ளிருந்து நிறைய கேஸட்டுக்களை எடுத்தார். எல்லாமே பழையவை. ஒரு மோனோ டேப்ரிக்கார்டர் அருகில் இருந்தது. ‘எய்யா, இத கொஞ்சம் கேளேன்’. கரகரவென கேஸட் ஓடத் துவங்கியது. ஆல் இண்டியா ரேடியோவின் ஒலிபரப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. மயக்கும் குழலிசை. ‘என்ன ராகம் தெரியுதா?’. சற்று நேரம் யோசித்து விட்டு மால்கௌன்ஸ் மாதிரி இருக்கு’ என்றேன். ‘அதேதான். எப்படி வாசிச்சிருக்கான் பாத்தியா?’ பன்னாலால் கோஷ் என்னும் மேதையை அந்தப் பழைய கரகர ஒலிபரப்பில் அன்றைக்குத்தான் முதன்முறையாகக் கேட்டேன். ‘பேஸ் வாசிக்கறதுக்காக தான் விரல அறுத்து ஆபரேஷன் செஞ்சுக்கிட்ட சண்டாளன்யா இவன்’. இந்த மாதிரி ஏதாவது சொல்லும் போது உணர்ச்சி மிகுதியில் பெரியப்பாவின் குரல் உடையும். அப்போது அவர் அழுகிறாரோ என்று நமக்கு சந்தேகம் வரும். பன்னாலால் கோஷைத் தொடர்ந்து படே குலாம் அலிகானும் அன்றைய எங்களின் இரவை நிறைத்தார்.

ஜிம் ரீவ்ஸின்(Jim reeves) குரல் விநாயகத்துப் பெரியப்பாவுக்குப் பிடித்தமான ஒன்று. ‘இந்த ரீவ்ஸ் பய அடியோஸ் அமிகோஸ்னு பாடும் போது நம்ம தோள்ல கையப் போட்டுக்கிட்டு காதுக்குள்ள வந்து பாடுற மாதிரி இருக்குல்லா’ என்பார். லாரல் ஹார்டி இரட்டையர்களும் அவருக்கு பிடித்தமானவர்கள். சில வசனங்களை மீண்டும் மீண்டும் சொல்லி ஒரு குழந்தை போல ரசித்துச் சிரிப்பார். வீரகேரளம்புதூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டு இவர் எப்படி எல்லாவற்றையும் ரசிக்கிறார் என்று ஆச்சரியமாகவே இருக்கும். நான்கைந்து ஆண்டுகளாகச் சந்திக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தேன். அவ்வப்போது போஸ்ட் கார்டில் நுணுக்கி எழுதி அனுப்புவார். அதில் ஒரு குறுங்கவிதையோ, சங்கீத சமாச்சாரமோ, குற்றாலச் சாரல் பற்றிய செய்தியோ இருக்கும். அந்தச் சின்ன அஞ்சலட்டைக்குள் அதிக பட்சம் எவ்வளவு எழுத முடியுமோ, அவ்வளவு எழுதியிருப்பார். ‘முதுமை காரணமாக இப்போதெல்லாம் எங்குமே செல்ல முடிவதில்லை. வீரகேரளம்புதூரிலேயே இருக்கிறேன். நீ இங்கு வா. ஆசி’ என்றெழுதிய ஒரு கார்டு சென்ற ஆண்டில் வந்திருந்தது. ஒரு சில வாரங்களில் வீரகேரளம்புதூர் செல்லும் வாய்ப்பு வந்தது. கொஞ்சம் இளைத்திருந்த பெரியப்பா என்னைக் கண்டது எழுந்திருக்க முடியாமல் எழுந்து வந்து கட்டியணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தினார்.

‘மிருதங்கத்த எப்பவோ கைகளுவிட்டெ. ஆர்மோனியமாது வாசிக்கியாய்யா’ என்று கேட்டார். ‘அப்பப்பொ வாசிக்கென். அன்னைக்குக் கூட நாத தனுமனிஷம் வாசிச்சென்’ என்றேன். ‘நானும் அன்னைக்கு டெலிவிஷன்ல சின்னப்பா காதல் கனிரசமே பாடும் போது ஒன்னத்தான் நெனச்சுக்கிட்டென்’ என்றார். சில மாதங்களுக்கு முன் என் தம்பி என்னிடம் இனி நாம் வீரகேரளம்புதூருக்குச் செல்லும் அவசியமில்லை என்ற அர்த்தத்தில் விநாயகத்துப் பெரியப்பாவைப் பற்றிய சேதி சொன்னான். அதுவே அவனுக்கு தாமதமாக வந்த செய்தி. அன்றைக்கு முழுக்க என் மனதில் நாததனுமனிஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

[email protected]