’ஊர்ல என்ன நடக்குன்னு தெரியாம அப்படி என்னவே தூக்கம் வேண்டிக்கெடக்கு, எந்திங்க’.
எங்கள் வீட்டு தார்சாவில் படுத்துக் கிடந்த என்னையும், தம்பியையும் ராமையா பிள்ளை உலுக்கினார். அதிகாலைத் தூக்கம் கலைந்த எரிச்சலில் ‘ஏன், காலங்காத்தால வந்து உயிர வாங்குதிய?’ என்றபடியே கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தேன்.
‘நெல்லையப்பர் கோயிலுக்கு சினிமா நடிகர்கள்லாம் வந்திருக்காங்களாம்வே’.
ராமையா பிள்ளையின் குரலில் ஒருவித பரபரப்பும், உற்சாகமும் தெரிந்தது. அவையிரண்டும் சட்டென்று என்னையும் தொற்றிக் கொள்ள உடனே அவருடன் கிளம்பினேன். தம்பி அசைவதாயில்லை.
ஓட்டமும், நடையுமாக இருவரும் நெல்லையப்பர் கோயிலை நெருங்கவும் அதற்குள் விஷயம் தெரிந்து ஆங்காங்கே ஜனக் கூட்டம். வழக்கமாக மாலை நேரம் மட்டுமே நிறைந்திருக்கும் இருட்டு லாலாக்கடை வாசலில் பலரும் நின்றபடி, உட்கார்ந்தபடி, சாய்ந்தபடி கோயில் வாசலையே பார்த்து நின்றனர்.
‘ரஜினிகாந்தும் வந்திருக்கானாம்லா?’
‘கமலஹாசன் வரலயால?’
‘அந்தப் பயதான் சாமி கும்புட மாட்டானெ’.
‘நடிகைங்க யாரும் வரலயாடே’.
‘அங் . . . சிலுக்கு வந்திருக்காளாம்’.
‘எல, இங்கன காத்துகெடக்கதுக்கு உள்ள போலாம்லா?’
‘ஏ மூதி. இன்னைக்கு அம்மாவாசல்லா! குளிக்காம கொள்ளாம கோயிலுக்குள்ள போலாமால! கேக்காம் பாரு.’
மெல்ல ஆளோடு ஆளாக நானும், ராமையா பிள்ளையும் போய் நின்றோம். கோயிலுக்குள்ளிருந்து சப்பரப் புறப்பாடு மாதிரி சிறு கூட்டம் சூழ நடிகர்கள் வெளியே வந்தனர். எல்லோரும் காவியுடை அணிந்திருந்தனர். யாரையுமே எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. சிரித்தபடியே ஒரு சிவத்த பெரியவர் முன்னே வந்தார்.
‘ஏ, அன்னா பாரு நம்பியாரு’.
ஜனங்கள் போட்ட சத்தம் எம்.என்.நம்பியாரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சாந்தமாகவே இருந்தது அவரது முகம். அவருக்குப் பின் நிறைய ஐயப்ப சாமிகள். சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டு சேது அண்ணன் கண்களுக்கு நடிகர் பாலாஜி சிக்கினார். அவருக்குப் பின்னாலேயே போய் அவரது முகத்தைப் பார்த்து சிரித்து வணங்கி கைகொடுத்துவிட்டு வந்தான். எல்லோருக்கும் கைகாட்டி விட்டு நடிகர்கள் அவர்கள் வந்த பஸ்ஸில் ஏறிச் சென்ற பிறகுதான், தான் பார்த்தது நடிகர் பாலாஜி அல்ல, ஸ்ரீகாந்த் என்பது சேது அண்ணனுக்குத் தெரிய வந்தது.
‘அதனால என்னய்யா? ஏதோ ஒரு நடிகருக்கு கை குடுத்தாச்சுல்லா! அதுவும் தங்கப்பதக்கத்துல சிவாஜி கூட நடிச்ச ஆளு!’
தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான் சேது அண்ணன்.
எனக்கும், ராமையா பிள்ளைக்கும் நம்பியாரைப் பார்த்ததே போதுமானதாக இருந்தது. அதற்கு பிறகு எப்போது வாக்குவாதம் வந்தாலும் என் தம்பியை மட்டம் தட்டி வந்தார் ராமையா பிள்ளை.
‘நீரு என்னத்த பேசி என்னத்துக்குவே? ஒமக்குத்தான் அம்மாவாசையும் அதுவுமா குருசாமிய பாக்க குடுத்து வக்கலையே!’
தேர்தல் பிரச்சாரத்துக்கு பாக்யராஜ் திருநெல்வேலிக்கு வந்த அன்றுதான் கமிஷன் கடை சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும் என்பது எனக்கு தெரிய வந்தது. ‘வேகு வேகு’வென்று மூச்சிரைக்க அழுத்திக் கொண்டு என்னையும் பின்னால் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். சந்திப் பிள்ளையார் முக்கில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. தளவாய் முதலியார் வீட்டுக்கும் காந்தி சதுக்கத்துக்கத்தும் இடையே ஒரு அவசர மேடை போட்டிருந்தார்கள்.
‘வர நேரம் ஆகும்னு நெனைக்கென். போஞ்சி குடிப்போமாடே!’
சோடாவில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொஞ்சம் ஐஸ்சும், உப்பும் போட்டு போஞ்சியை ரசித்து உறிஞ்சிக் குடித்து விட்டு காத்திருந்தோம். கூடியிருந்த ஜனங்கள் கலையத் தொடங்கிய பின் கொளுத்தும் உச்சி வெயில் பொழுதில் வந்து மேடையேறினார் பாக்யராஜ். தளவாய் முதலியார் வீட்டு பழைய பால்கனியில் நின்று கொண்டிருந்த பெண்களுடன் மேலும் சிலர் வந்து சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர். அப்போது அ.தி.மு.கவில் இருந்த பாக்யராஜ், அப்போது தி.மு.கவில் இருந்த டி.ராஜேந்தரை வம்புக்கிழுத்து கேலியாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு இறங்கிச் சென்றார்.
‘சினிமால பாக்கற மாதிரி அப்படியே இருக்கானெடே!’
பாக்யராஜைப் பார்த்து விட்ட திருப்தியில் வீட்டுக்குத் திரும்பும் போது சுந்தரம் பிள்ளை பெரியப்பா சொன்னார்.
‘மகனே, பாக்யராஜ பாத்தத ஒங்க பெரியம்மைக்கிட்டெ சொல்லிராதெ, என்னா!
ஏன் பெரியப்பா?
வேற ஒண்ணுமில்ல, என்னய ஏன் கூட்டிட்டு போகலேம்பா.’
அம்மன் சன்னதி தெருவில் அதிகாலையில் தன் வீட்டு மாடி ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து தெய்வு மாமா ‘ஹிந்து’ பேப்பர் படிக்கும் காட்சியை இன்றைக்கும் திருநெல்வேலிக்குப் போனால் பார்க்க முடிகிறது. ஐ.ஓ.பியில் வேலை பார்க்கும் தெய்வு மாமாவுக்கு நண்பர்கள் குறைவு. ரோட்டில் தெய்வு மாமா இறங்கி நடந்து போகும் போது முன்பின் அறிமுகமில்லாதவர்களால் கூட அவரை ஒரு வங்கி ஊழியராக அடையாளம் சொல்லி விட முடியும்.
‘நாமளும்தான் துணியெடுத்து தச்சு போடுதோம். அதென்னடே இந்த பேங்க்’காரங்களுக்குன்னு தனியா துணி தைக்கானுவோ. ஐ.ஓ.பி தெய்வு, ஸ்டேட் பேங்க் துரை இவனுவ எல்லாரும் ஒரே மாதிரி சட்டை போடுதானுவொ. கவனிச்சியா?’
ஆல்பர்ட் சித்தப்பா அடிக்கடி வியப்புடன் சொல்லும் விஷயம் இது.
திரைப்படத்துறைக்கு நான் வந்த பிறகு ஊருக்குப் போகும் போதெல்லாம் தெய்வு மாமா ‘ஏ மாப்ளே, எப்பொ வந்தே? சும்மா இருக்கேல்லா?’ என்று கேட்கத் தவறுவதில்லை. ஒருபோதும் நின்று பேசியதில்லை. வேலைக்குச் செல்லும் அவசரத்திலும் ஒருமுறை என்னைப் பார்த்த தெய்வு மாமா அதிசயமாக நின்று பேசினார்.
‘மாப்ளே, நான் போன வாரம் ஒரு ஜோலியா மெட்ராஸ் வந்திருந்தென். மைலாப்பூர்ல வச்சு டெல்லி கணேஷப் பாத்தென். . . . . . . சாதாரணமா நடந்து போனான்’ என்றார். முகத்தில் அத்தனை ஆச்சரியம்.
ஒரு கோடைவிடுமுறையில் சென்னைக்கு ஒருவாரம் சென்ற குஞ்சு பெருமிதத்தோடு திரும்பி வந்தான். ஏதோ ஒரு களிப்பு தெரிந்தது அவனிடம். பஜனை மடத்தின் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்து மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தோம்.
‘என்னமோ நடந்திருக்கு. என்ன விஷயம்ல சொல்லு’.
நண்பர்கள் பலரும் வற்புறுத்திக் கேட்ட பிறகு முற்றிலுமாக நாங்கள் இருந்த திசையைப் புறக்கணித்து விட்டு வானத்தைப் பார்த்தபடி சொன்னான்.
‘மெட்ராஸ்ல நான் ஒரு நடிகர பாத்தென், ரொம்பப் பக்கத்துல’.
‘நடிகரை’ என்று அவன் சொன்னது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
‘சரி, நடிகர் யாரு? அதச் சொல்லு’.
இப்போது நாங்கள் அவனிருக்கும் திசையைத் தவிர்த்தோம்.
‘சண்முகசுந்தரம்’ என்றான் குஞ்சு. ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவுக்கு அப்பாவாக வருவாரே, அவர்தான். அதற்குப் பிறகு சண்முகசுந்தரம் நடித்த எந்தப் படம் பார்த்தாலும் குஞ்சு எங்களிடம் வறுபட்டான்.
நெல்லை மாவட்ட சினிமா ரசிகர் சங்கம் என்றொரு அமைப்பு இருந்தது. தாலுகா அலுவலக ஊழியரான வேலாயுதம் அண்ணன்தான் அதன் நிறுவனர். டி.வி.எஸ் 50யில் எப்போதும் ஊர்ந்து செல்லும் வேலாயுதம் அண்ணனுக்கு சஃபாரி உடைதான் கவச குண்டலம். குளிக்கும் போது கூட அவர் சஃபாரி உடையைக் கிழற்றுவது இல்லை என்றொரு வதந்தி நெல்லையில் உலவியது. வேலாயுதம் அண்ணன் நெல்லை மாவட்ட சினிமா ரசிகர் சங்கத்தின் சார்பாக சென்னையிலிருந்து திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து ஆண்டுதோறும் விமரிசையாக விழா நடத்துவார். காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து நடத்திய ஓர் ஆண்டு விழாவுக்கு நானும், குஞ்சுவும் சென்றோம். லூஸ் மோகன், குண்டு கல்யாணம், பிந்துகோஷ், ராக்கெட் ராமனாதன் போன்ற நடிகர்களைப் பார்க்க முடிந்தது. வருடாவருடம் விழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் மேற்குறிப்பிட்ட நடிகர்கள்தான். இத்தனை நட்சந்திரங்களுடன் பழக்கம் உள்ள கர்வம் கொஞ்சமும் இல்லாமல் வேலாயுதம் அண்ணன் நெல்லைவாழ் மக்களுடன் எளிமையாகவே பழகி வந்தார்.
திருநெல்வேலி டவுண் சொக்கப்பனையடி முக்கில் பால்கடை நடத்தி வந்த மணி என்பவரும் சினிமா ரசிகர் சங்க ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்ற போது அதில் ஒரு காட்சியில் நடித்த பெருமை அவருக்கு இருந்தது. கையில் ஒரு அல்சேஷன் நாயைப் பிடித்தவாறே வாக்கிங் செல்லும் நடிகர் மணி, இன்னொரு திரைப்படத்தில் நடிகை காந்திமதியுடன் ஒரு காட்சியில் இணைந்து நடித்திருந்தார். அந்த காட்சியில் நடிகை காந்திமதியை கட்டிப் பிடித்தபடி அவர் இருக்கும் புகைப்படம் அவரது பால்கடையின் முகப்பை அலங்கரித்து வந்தது. கடைக்கு பால் குடிக்க வருபவர்கள் அந்த புகைப்படத்தை கவனிக்கிறார்களா என்று பால் ஆற்றும் போது ஓரக் கண்ணால் நைஸாகப் பார்ப்பார்.
அம்மன் சன்னதி முக்கில் ஒரு நாள் மாலையில் ஜேஜே என்று கூட்டம். வாகையடி முக்கில் நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்வி.ஜெயலலிதா கீழப்புதுத்தெரு வழியாகச் செல்வதாக ஏற்பாடு. எங்கள் வீட்டு வாசலில் நின்றாலே ஜெயலலிதா செல்வதைப் பார்த்து விட முடியும். குஞ்சு வந்தான். ‘இது ரொம்ப அவசியமா? வா, வெளியே போவோம்’ என்றான்.
‘பத்து நிமிஷம் பொறேம்ல. பாத்துட்டு போவோம்’ என்று நான் சொன்னதை அவன் கேட்பதாக இல்லை.
‘ஏன் மத்தவங்கள மாதிரி நீயும் கெடந்து அலையுதெ? படிச்சவன் மாதிரி நடந்துக்கொ’.
ஏகத்துக்கும் அட்வைஸ் செய்தான்.
இந்த குஞ்சுதான் ஒருமுறை காணாமல் போனதற்காக அவன் அப்பா டவுண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து ஊரெல்லாம் தேடினார்கள். கடைசியில் இவன் ஷாஃப்டர் ஸ்கூல் மைதானத்தில் எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது பிடிபட்டான். அதையும், சென்னையில் சண்முகசுந்தரத்தைப் பார்த்த பெருமையில் இவன் நடமாடியதையும் ஞாபகப் படுத்தினேன்.
‘எல, அது வெவரம் தெரியாத வயசுல நடந்த விஷயம். சின்னப் பிள்ளைல இத விட என்னென்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணிருக்கோம். அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்கோம்? பெரிய மயிரு மாதிரி பேசிக்கிட்டிருக்காதெ. இப்ப வரப் போறியா, இல்லையால?’.
கடும் கோபமாகப் பேசினான்.
சரி, இனி கிளம்பவில்லையென்றால் அடித்தே விடுவான் என்று அவனுடன் கிளம்பினேன். சர் சர்ரென்று கார்களின் சீற்றச்சத்தம். தொடர்ந்து ஒலிபெருக்கி அலறல். ‘உங்கள் பொன்னான வாக்குகளைக் கேட்டு இதோ வருகிறார்’. கூட்டத்தை விலக்கி பாய்ந்து முன்னே சென்ற குஞ்சு ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று அவர் கார் கடந்து செல்லும் போது இரட்டை விரலைக் காண்பித்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.