மார்கழி மாதம் பிறக்கும் முன்பு, கார்த்திகை மாதத்தின் இறுதியிலேயே பொங்கல் பண்டிகைக்கான ஆயத்தங்கள்ஆரம்பமாகிவிடும். அவற்றில் முக்கியமானது வெள்ளையடிக்கும் பணி. வெள்ளையடிக்கும் மட்டைகளைச் சுமந்த இரும்பு வாளிகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஆட்கள் நடமாடுவார்கள். பெரும்பாலும் பழைய பேட்டை, பாட்டப்பத்து பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களே வெள்ளையடிப்பு வேலைக்கு வருவார்கள். ராமையா பிள்ளை தனது சிஷ்யர்கள் இரண்டு பேரை எங்கள் வீட்டு வெள்ளையடிப்புக்கு அனுப்புவார். அவர்கள் இரண்டு பேரின் பெயர்களுமே முருகன். முருகா என்றால் இயல்பாக இருவருமே திரும்பிப் பார்ப்பார்கள். வித்தியாசத்துக்காக சின்ன முருகன், பெரிய முருகன் என்றழைப்பதை அவர்கள் இருவரும் அனுமதிப்பதில்லை. இருவரில் யார் பெரியவன் என்பதில் எப்போதுமே ஒரு குழப்பம் நிலவி வந்தது. அதனால் அவர்கள் இருவரும் அறியாத வண்ணம் உருவ அமைப்பின்படி சீனா.முருகன், பேனா.முருகன் என்றழைக்கப்பட்டனர்.

புறவாசலில் தொழுவத்துக்கு அருகிலுள்ள தொட்டியில் சுண்ணாம்பு நீற்றும் போது குமிழ் குமிழாகக் கொப்பளித்து வருவதைப் பார்ப்பதற்காகவே சின்னப் பிள்ளைகள் நாங்கள் போய் நிற்போம். ஆச்சி இருக்கும் வரை அந்தத் தொட்டி, மாடுகளின் கழனித் தொட்டியாக இருந்தது. ஆச்சிக்குப் பிறகு மாட்டுத் தொழுவத்தில் நாய்களே வசித்தன. குறைந்தது ஒருவாரகாலம் சீனா.முருகனும், பேனா.முருகனும் எங்கள் வீட்டு வெள்ளையடிப்பில் ஈடுபட்டிருப்பார்கள். உயரமான பகுதியில் வெள்ளையடிக்கும் போது கீழே ஏணியைப் பிடிக்கும் வேலையை ஏற்றுக் கொள்பவன் ’நெட்டை’ அம்பி. அம்பிக்கு உயரமென்றால் பயம். ஏணியைப் பிடிக்கும் போதும் கூட தலை குனிந்து உடல் நடுங்கியே நிற்பான். இது தெரிந்து வேண்டுமென்றே இரண்டு முருகன்களும் அம்பியை வம்புக்கிழுக்கும் விதமாக ஏதாவது பேச்சு கொடுப்பார்கள். அப்போதும் நிமிராமலேயே பதில் சொல்வான் அம்பி. அதற்கு வேறொரு காரணமும் உண்டு. . . . நிற்க. மற்றொரு காரணம். அசந்து மறந்து அம்பி மேலே பார்த்தால், தற்செயலாக மட்டையைத் தெளிப்பது போல அம்பியின் முகத்தில் சுண்ணாம்பபிஷேகம் செய்து விடுவான் சீனா.முருகன்.

அவரவர் வசதிக்கேற்ப சில வீடுகளில் காவியும், வெகு சிலர் வீடுகளில் டிஸ்டெம்பரும், அநேக வீடுகளில் நீலம் கலந்த சுண்ணாம்புச் சுவர்கள் ஊரெங்கும் மினுங்கத் தொடங்கும். வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக பொங்கலை ஊருக்குள் கொணர்பவை பனங்கிழங்குகள். பனங்கிழங்கின் வாசனை பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் வரை ஊரை விட்டு லேசில் போகாது. அவிக்கப் பட்ட, அவித்து காய வைத்து பின் உரலில் போட்டு இடிக்கப்பட்ட, ஆச்சிமார்களின் கைவண்ணத்தால் தேங்காய், இஞ்சி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பனங்கிழங்குகள் இன்னும் இன்னும் என் நினைவில் மின்னுகிறவை.( ஒரு வாரம் வரை பல்லில் சிக்கியிருக்கும் பனங்கிழங்கின் நாரும் இதில் அடக்கம்.) பனங்கிழங்குகளின் பலாபலன்களும் விசேஷமானவை.

‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’

பிற்பாடு சென்னையில் ஒரு டிஸம்பர் மாதத்தில் வாத்தியார் பாலுமகேந்திராவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது வடபழனி மார்க்கெட் அருகே ‘ நிறுத்து நிறுத்து’ என்றார். டிரைவரும் காரை நிறுத்தினார். ‘என்ன ஸார்?’ முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவன் குழப்பமாகத் திரும்பிப் பார்த்தேன். ‘பனங்கிழங்குடா’ என்று இறங்க முற்பட்டார். அவர் இறங்குவதற்குள் நான் கடையை நோக்கிப் பாய்ந்தேன்.

திருநெல்வேலியில் பொங்கலையொட்டி கரும்புகளின் குவியல் பெருகியிருக்கும் போது ஓலைகளின் வருகை ஆரம்பமாகியிருக்கும். பொங்கலுக்கு முதல் நாள் சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகள் மற்றும் மண்பானைகளுக்கு மத்தியில் கைப்பிள்ளைக்கு பால் கொடுத்தபடி ஒரு பெண்மணி வியாபாரம் செய்து கொண்டிருப்பாள். வருடாவருடம் அவள் மடியில் உள்ள கைப்பிள்ளை மாறிக்கொண்டேயிருக்கும்.

‘ஏம் முப்பிடாதி! போன வருசத்த விட இப்பொ அநியாயமால்லா வெல சொல்லுதே!

நீங்களும் போன வருசம் சொன்னதையேதானே சொல்லுதியெ!’

சாமர்த்தியமான வியாபாரப் பேச்சுகளில் முப்பிடாதி மூழ்கியிருப்பாள். அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும், பானைகளையும் கொண்டு வந்து போட்டு விட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவனின் குரல் எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

பொங்கலுக்கு முந்தைய நாளில் திருநெல்வேலி டவுண் மார்க்கெட்டில் நுழைந்து வெளியே வருவது என்பது வீரதீரச் செயல்களில் ஒன்று. ஆண்களும், பெண்களுமாகக் கூட்டம் நிரம்பி வழியும். ஒரு முறை நண்பன் குஞ்சுவை அவன் வீட்டில் மார்க்கெட்டுக்குப் போய் இலை வாங்கி வரச் சொல்லி விட்டார்கள். வழக்கம் போல என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் சென்றான் குஞ்சு. மற்ற நேரங்களில் லேசாக கை பட்டாலே ‘எல, ஒடம்பு என்னமா வருது?’ என்று முறைக்கும் பெண்கள், தங்கள் மேல் வந்து மோதி உரசி அழுத்திச் செல்லும் ஆண்களை கண்டுகொள்வதற்கான அவகாசமில்லாமல் பொங்கல் சாமான்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார்கள். உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மூச்சு திணறி நான் தொலைந்து போய் விட்டேன். குஞ்சுவை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். மதியம் கணேசண்ணன் மஞ்சள் குலை வாங்க மார்க்கெட்டுக்குப் போகும் போது ‘தம்பி நீயும் வாயேன்’ என்று இழுத்துச் சென்றான். மார்க்கெட்டின் நுழைவிலேயே உள்ள புகாரி ஸ்டோர்ஸ் பக்கம் செல்லும் போது உள்ளுக்குள்ளிருந்து வேர்க்க விறுவிறுக்க குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தான். ஆச்சரியம் தாங்காமல் ‘ஏல, இன்னுமா நீ எல வாங்கிக்கிட்டு இருக்கே?’ என்றேன். ‘சே, பாத்தியா, மறந்தே போயிட்டேன்’ என்றபடி சந்தோஷமாக மீண்டும் கூட்டத்துக்குள் புகுந்தான் குஞ்சு.

சிறுவயதுப் பொங்கல் நினைவுகளில் முதல் இடம் பிடிப்பது பொங்கல் வாழ்த்து அட்டைகளே. ஏர் உழவன், பொங்கல் பானை, நெற்கதிர்கள், கரும்புத் தோரணம், வணங்கியபடி நிற்கும் நல்லதொரு குடும்பம், வர்ணம் பூசப்பட்ட கொம்புகளுடன் கூடிய காளை மாடுகள், தவிர்க்கவே முடியாத எம்.ஜி.ஆர், சிவாஜி, ப்ரூஸ் லீ, ரஜினிகாந்த் படங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளைத் தாங்கிய கடைகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மொய்த்திருப்பர். எங்கிருந்தோ பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள், அத்தைகள், அவர்தம் மக்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு வரும் தபால் காரரை அன்றைக்கும் மட்டும் மதிக்கத் தோன்றும். எனக்கு எத்தனை, உனக்கு எத்தனை என்று அண்ணன் தம்பிகள் வீட்டில் போடும் சண்டைகள், அம்மாக்களுக்கு சந்தோஷம் தருபவையே. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து தாய் மாமாவின் மகனும், மகளும் தங்கள் பிஞ்சு விரல்களால் ‘அன்புள்ள அத்தானுக்கு . . .’ என்றெழுதி வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். காரணமில்லாமல் கண்ணீர் வரவழைத்த அட்டைகள் அவை. இப்போது பொங்கல் வாழ்த்தட்டைகள் இருக்கின்றனவா?

பொங்கலுக்கு முந்தைய நாள் இரவில் எங்கள் வீட்டின் பரந்த வாசல் முழுவதும் பொங்கல் பானைகள், சூரியன், கரும்பு, பூக்கள் என சித்திர வேலைகள் ஆரம்பமாகும். அம்மாவின் மேற்பார்வையில் விடிய விடிய நடைபெறும் இவ்வேலைகளில் பார்டரில் காவியடிக்கும் வேலையை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். எவ்வளவு கவனமாக செய்தாலும் முக்கிய சித்திரத்தில் காவி கலக்கச் செய்து எல்லை தாண்டி விடுவேன்.

‘ஒனக்குத்தான் ஒரு கோடு கூட போடத் தெரியாதெ! ஒன்ன எவன் இதெல்லாம் செய்யச் சொன்னான். போய் அங்கெ உக்காந்து பேசாம வளக்கம் போல வேடிக்க பாரு’.

இரவெல்லாம் விழித்திருந்து அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பூஜைமணிச் சத்தத்துடன், அம்மாவின் குலவைச் சத்தமும் சேர்ந்து கொண்டு காதுகளில் ஒலிக்கும். பொங்கல் தினத்தன்று காலையில் பொங்கப் படி கொடுக்கும், வாங்கும் படலம் ஆரம்பமாகும். தபால்தந்தி, தொலைபேசி ஊழியர்கள் தொடங்கி துப்புரவு தொழிலாளர்கள் வரை பொங்கல்படி வாங்க வருவார்கள். வழக்கமாக அணியும் யூனிஃபார்மில்லில்லாமல் புத்தாடையுடுத்தியிருப்பதால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமாயிருக்கும். பெரியவர்கள் தயாராக சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள். சின்னப் பிள்ளைகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து திருநீறு பூசி பொங்கப் படியாக ஐம்பது பைசாவில் தொடங்கி இரண்டு ரூபாய் வரை பெற்றுக் கொள்வார்கள். வசதியானவர்கள் பத்து ரூபாய் வரை கொடுப்பார்கள். ஒரு முறை சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி அத்தை எனக்கு பொங்கல் படியாக நூறு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ரொம்ப நாட்களுக்கு அந்த நூறு ரூபாயைத் தாளை வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

வருடங்கள் செல்ல சென்னை வாசத்துக்குப் பழகியபிறகு பொங்கல் பண்டிகை மெல்ல மெல்ல விலகி விடை பெற்றுக் கொண்டது. பத்தாண்டுகளுக்கு முன் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களை ஒரு பொங்கல் தினத்தன்று பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு நானும், கவிஞர் அறிவுமதி அண்ணனும் சென்றோம். அப்போது வண்ணதாசன் மேற்கு மாம்பலத்தில் குடியிருந்தார். வீட்டுக்குள்ளே நாங்கள் நுழையவும் சிரித்தபடி ‘பால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சான்னு பாக்க வந்தீங்களாக்கும்’ என்று வரவேற்றார். திருநெல்வேலிப் பகுதியில் இப்படி விசாரிப்பதுதான் வழக்கம். எனக்கு ஒரு நிமிடம் திருநெல்வேலியில் இறங்கிய மாதிரி இருந்தது. பிறகு அந்த கொடுப்பினையும் இல்லாமல் போனது. வண்ணதாசன் அண்ணாச்சி திருநெல்வேலிக்கே போய்விட்டார். கொடுத்து வைத்த மகராசன்.

இந்த வருடம் பொங்கலன்று முதல் நாள் இரவில் எனது நண்பர் அழகம்பெருமாளிடம் பேசியபோது, ‘எங்க ஊர்ல ஒரு வாரத்துக்கு முன்னாடியே கொண்டாட்டம் ஆரம்பமாயிரும். வீடு பூரா கரும்பு குமிஞ்சு கெடக்கும், பாத்துக்கிடுங்க. இந்தா பாரும். எம்ஜியார் நகர்ல ஒத்தக் கரும்புக்கு வெல பேசிக்கிட்டிருக்கென். தலையெளுத்த பாத்தேரா’ என்று அங்கலாய்த்தார். நாகர்கோவில்காரரின் நியாயமான புலம்பலைப் புரிந்து கொள்ள முடிந்தது. மறுநாள் நான் வழக்கம் போல காலையில் எழுந்து, கேஸ் அடுப்புக் குக்கரில் வைத்த பொங்கல் பானையை வேண்டா வெறுப்பாக வணங்கிச் சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தேன். திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கைபேசியில் நண்பரொருவர் அழைத்து ‘ஸார், ஹேப்பி பொங்கல்’ என்றார். தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்து விட்டு ‘விஷ் யூ த ஸேம்’ என்றேன்.

11 thoughts on “பொங்கப்படி

 1. Suka,
  Your words on the greeting cards of Pongal brought back memories the effort we used to put in selecting the cards to the likings of friends and relatives,calculating the number of days it will take for postal delivery and posting at the right time,etc..

  Really gone are those days,and the sharing of affection..

  Arunkumar

 2. வண்ணதாசன் அண்ணாச்சி திருநெல்வேலிக்கே போய்விட்டார். கொடுத்து வைத்த மகராசன்

  உண்மைதான் வெளியே வந்தால்தான் தெரிகிறது ஊரின் அருமை.

  இராமச்சந்திரன்

 3. மத்தவங்க பொங்கலுன்னா மஞ்சள், கரும்பு போவாக. நம்ம ஊரிலதான் பனங்கிழங்கு என்ன, சிறுகிழங்கு என்னன்னு சும்மா ஊரே மணக்கும். சிறுகிழங்கை பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்லாம விட்டுட்டீயளே!!

 4. திரு ஜெ.மோ. தளம் வழியாக நேற்று எதேச்சையாக உங்கள் பதிவுத்தளத்துக்கு வந்தேன். ஒரே மூச்சாக அனைத்துப் பதிவுகளையும் படித்து முடித்தேன். என்னுடைய மனைவியின் ஊரும் பாளையங்கோட்டைதான். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியப்பயணத்தில் நெல்லை வரும்போது அவசியம் பனங்கிழங்கு வாங்கி வரும் பனங்கிழங்குப் பிரியன் நான். மேலும், பாளையங்கோட்டை மார்க்கெட்டின் சுத்தத்தையும் நேர்த்தியையும் கண்டு வியந்து போயிருக்கிறேன். அங்கே, பித்தளை அண்டாக்களில் அடுக்கி விற்கப்படும் கைமுறுக்குகள், சீடைகள், அற்புதம். சுவாரஸ்யமான சேக்காளிகள் மற்றும் உறவினர்கள் கிடைக்கப்பெற்ற எத்தனை பேர் இப்படி எழுதுகிறார்கள்? ரசிகமணி குழுவில் இருந்திருக்க வேண்டியவர் நீங்கள். உங்களது கட்டுரைகள், கோபல்ல கிராமத்தையும் ஸ்ரீரங்கத்து தேவதைகளையும் நினைவு படுத்துகின்றன. நிறைய எழுதுங்கள்.
  — பாஸ்கி
  http://baski-reviews.blogspot.com

 5. உங்க வாத்தியாரின் ஒவ்வொரு
  படமும் கவிதை.உங்களின் பதிவுகள் நீங்கள் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் என்பதை கட்டியம் கூறுகின்றன

 6. நல்லாருந்தது.

  பொங்கப்படின்னதும், பொறந்த வீட்லருந்து பொண்ணுகளுக்கு வருசா வருசம் கொடுப்பாங்களே அதுனு நினைச்சிட்டேன்.

 7. //‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’//
  :)))

  //ஆச்சரியம் தாங்காமல் ‘ஏல, இன்னுமா நீ எல வாங்கிக்கிட்டு இருக்கே?’ என்றேன். ‘சே, பாத்தியா, மறந்தே போயிட்டேன்’ என்றபடி சந்தோஷமாக மீண்டும் கூட்டத்துக்குள் புகுந்தான் குஞ்சு.//
  :)))
  மனசு விட்டு சிரிக்க வைக்கறிங்க.

  //ஒரு முறை சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி அத்தை எனக்கு பொங்கல் படியாக நூறு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ரொம்ப நாட்களுக்கு அந்த நூறு ரூபாயைத் தாளை வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.//

  முன்னாடி இவங்க எங்க வீட்டுக் கல்யாணம் எல்லாத்துக்குமே சீப் கெஸ்ட்டா வருவாங்க.ஒரு முறை ப்ளேன் ஆக்சிடெண்ட்ல இவங்க மட்டும் எந்த சேதாரமும் இல்லாம அப்படியே உட்கார்ந்த சேர் உட்கார்ந்த வாக்குல தப்பிச்சாங்கலாமே,எங்க தாத்தா சொல்வார்.பாறைப்பட்டி தானே இவங்க! விவசாயப் போராட்டம் நாராயணசாமி நாயுடுவோட மகள் , சாத்தூர் எஸ்.ஆர் நாயுடு காலேஜ் கூட இவங்க ஆரம்பிச்சது தான் இல்லையா?

  ரொம்ப நல்லா இருக்கு உங்க பதிவுகள்.

 8. dear nanbar,
  reading your PONGAPPADI, my nostalgia went back to yesteryears.so far,i have celebrated pongal in PULIYARAI one or two times.after reading your PONGAPPADI especially PONGAL GREETINGS, I,being a RAJINI FAN,my maternal uncle used to send me RAJINI PHOTOS every year.also some of my friends used to send me the same.just thinking over those happy moments.BYE.

 9. அழகான சொல்லாடல்கள்..இருபது வயது வரை வாழ்ந்தது தான் வாழ்க்கை..இப்பொழுது வாழ்வது சூழலுக்கேற்ற நடிப்பாகி விட்டதுங்க அண்ணா..!

Comments are closed.