ஆத்ம ருசி

வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெரு முனையிலுள்ள கோயில் வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள்க்கடை, நயினார்குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து, ‘தொளதொள’வென வெள்ளைக் கதர்ச் சட்டையும், நாலு முழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே, வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாகக் கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்க வரும் போது, மதியப் பொழுதில் சிறிது நேரம் கட்டையைச் சாய்க்கும் போது என அபூர்வமான தருணங்களில்தான், அந்தத் துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்ட வெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள் தாடி, நிரந்தரமாக கந்தையா பெரியப்பா முகத்தில் உண்டு. 

எல்லோருமே அவரை ‘பெரியப்பா’ என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு பழைய சுண்ணாம்புச் சுவர் வீட்டில்தான் எல்லோரும் குடியிருந்தார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களைத்தான் குடியிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களையும், அப்படி சொல்லலாம்தான்! 

கந்தையா பெரியப்பாவுக்கு வாரிசு இல்லை. மூன்று தம்பிகளின் குழந்தைகளையும் கூட்டிப் பார்த்தால் எப்படியும் ஒரு பன்னிரெண்டு, பதிமூன்று பேர் தேறுவார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கந்தையா பெரியப்பாதான் வளர்த்தார். பிள்ளைகளை மட்டுமல்ல. பிள்ளைகளின் தகப்பன்களையும்தான். தன் தம்பிகளுக்கும், கந்தையா பெரியப்பாவுக்கும் நிறையவே வயது வித்தியாசம். அண்ணன் சொல்லைத் தட்டாத தம்பிகள். தம்பிகள் அனைவருக்கும் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து கந்தையா பெரியப்பாதான் திருமணம் செய்து வைத்தார். தனக்கு பிள்ளைகள் இல்லை என்கிற குறையை தன் மனதுக்குள் புதைத்து விட்டு, தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்த்தார். கந்தையா பெரியப்பாவின் மனைவி மங்கையர்க்கரசியும் கணவருக்கு இணையாக, தம் கொழுந்தனார்களின் பிள்ளைகளை சீராட்டினார்.

எல்லாப் பிள்ளைகளும் சிறுவயதிலிருந்தே, தங்கள் அப்பாவையோ, அம்மையையோ தேடியதில்லை. எல்லாவற்றிற்கும் பெரியப்பா, பெரியம்மைதான்.

‘கந்தையா பெரியப்பா வீட்டுப் பிள்ளேளு, வாயத் தொறந்து பேசுன மொத வார்த்தயே பெரியப்பாதானடே!’

திருநெல்வேலி ஊரில் இப்படி சொல்லிக் கொள்வார்கள்.

தன் தம்பிகளின் பிள்ளைகள் அனைவரும் ‘பெரியப்பா, பெரியப்பா’ என்றழைப்பதால், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் அந்த வீடே ‘கந்தையா பெரியப்பா வீடு’ என்று அடையாளம் சொல்லப்படலாயிற்று. அண்டை வீட்டுக்காரர்கள், மைத்துனிகளின் உறவினர்கள் என உற்றார் உறவினரில் தொடங்கி, ஊரில் இருக்கும் அனைவருக்குமே ’பெரியப்பா’ ஆனார், கந்தையா.

‘நீங்க மிலிட்டரில இருந்தது, நெசந்தானா, பெரியப்பா?’

பழக்கடை மந்திரம் ஒருமுறை கேட்டான்.

‘நெசம் இல்லாம, என்ன? பென்ஷன் வருதுல்லா! ஆனா, நீ நெனைக்குற மாரி டுப்பாக்கிய தூக்கிட்டு போயி சண்டல்லாம் போடல. எலக்ட்ரீஷியனா இருந்தேன். தம்பிங்க படிச்சு நிமிர்ற வரைக்கும் பல்லக் கடிச்சுட்டு இருக்க வேண்டியதாயிட்டு. பெரிய தம்பிக்கு முனிசிபாலிட்டில வேல கெடச்ச ஒடனேயே காயிதம் போட்டுட்டான். போங்கலெ, ஒங்க ரொட்டியும், சப்பாத்தியும்னு வடக்கே பாக்க ஒரு கும்பிடு போட்டுட்டு, அன்னைக்கே திருநவேலிக்கு ரயிலேறிட்டம்லா’.

கந்தையா பெரியப்பா ஓர் உணவுப்பிரியர். வாயைத் திறந்தால் சாப்பாட்டுப் புராணம்தான். எதையும், எவரையும் உணவோடு சம்பந்தப்படுத்திதான் பேசுவார்.

‘தீத்தாரப்பன் பாக்கதுக்குத்தான் உளுந்தவட மாதிரி மெதுவா இருக்கான். ஆனா, மனசு ஆமவட மாதிரிடே. அவ ஐயா செத்ததுக்கு பய ஒரு சொட்டு கண்ணீர் விடலயே!’

அத்தனை உணவுப்பிரியரான கந்தையா பெரியப்பா ஏனோ ஹோட்டல்களில் சாப்பிட விரும்புவதில்லை..

‘போத்தி ஓட்டல என்னைக்கு இளுத்து மூடுனானோ, அன்னைக்கே வெளிய காப்பி குடிக்கிற ஆச போயிட்டுடே!’

ஆனால், கல்யாண விசேஷ வீட்டு பந்திகளில் சாப்பிடுவதில் அலாதிப் பிரியம்.

‘செய்துங்கநல்லூர்ல ஒரு சடங்கு வீடு. நான் கைநனைக்காம பஸ் ஏறிரணும்னுதான் நெனச்சேன். ஏன்னா சடங்கான பிள்ளைக்கு அப்பன்காரன், ஒரு கொணங்கெட்ட பய, பாத்துக்கோ. ஆனா அவன் பொண்டாட்டி, நல்ல பிள்ள. எப்ப வீட்டுக்குப் போனாலும், ஒண்ணும் இல்லேன்னாலும் சின்ன வெங்காயத்த வதக்கி, கூட ரெண்டு கேரட்ட போட்டு கண்ண மூடி முளிக்கறதுக்குள்ள ரவையைக் கிண்டி சுடச் சுட உப்புமா தயார் பண்ணிருவா. சாப்பிட்டு முடிக்கதுக்குள்ள,  கருப்பட்டி காப்பியும் போட்டிருவா. அவ மனசுக்கேத்த மாரியே, ஆக்குப்புரைல இருந்து வந்த கொதி மணமே சுண்டி இளுத்துட்டு. அப்புறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தவிசுப்பிள்ளைக்கு ரவணசமுத்திரமாம்’. 

எங்கு சாப்பிட வேண்டும், எங்கு சாப்பிடக்கூடாது என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது. 

ஆரெம்கேவியில் வேலை பார்க்கிற ராமலிங்கம் ஒருநாள் கொதிப்புடன் சொன்னான்.

‘நம்ம லெச்சுமணன் தங்கச்சி கல்யாணத்துக்குன்னு லீவ போட்டுட்டு, நாங்குனேரிக்கு போனேன் பெரியப்பா. போற வளில பஸ்ஸு வேற பிரேக்டவுணாகி, நல்ல பசில போயி சேந்தேன், கேட்டேளா! . . . மண்டபத்த சுத்தி தெரிஞ்ச மனுஷாள் ஒருத்தரயும் காணோம். லெச்சுமணப்பய மணவறைல நிக்கான். கையக் கையக் காட்டுதென். திரும்பிப் பாப்பெனாங்கான். சரி, தாலி கட்டுறதுக்குள்ள காலைச் சாப்பாட்ட முடிச்சிருவோம்னு பந்திக்குப் போனேன். ஒரு பய எலையப் போட்டான். தண்ணி தெளிக்கதுக்குள்ள, இன்னொரு பய வந்து எலைய எடுத்துட்டுப் போயிட்டான், பெரியப்பா’.

இதை சொல்லி முடிப்பதற்குள் அழுதேவிட்டான், ராமலிங்கம்.

‘அட கூறுகெட்ட மூதி. அந்த லெச்சுமணன், சந்திப்பிள்ளையார் முக்குல டீ குடிக்கும் போதே, யாரும் பாத்திருவாளோன்னு அவசர அவசரமா வேட்டிக்குள்ள சம்சாவ ஒளிச்சு வச்சுத் திங்கற பயல்லா. நீ அவன் வீட்டு கல்யாணத்துக்குப் போனதே, தப்பு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு கெளவி சும்மாவா சொல்லிட்டுப் போயிருக்கா. யார்யார் வீட்டு விசேஷங்களுக்குப் போகணும்னு ஒரு கணக்கு இருக்குடே’.

கந்தையா பெரியப்பாவின் ருசிப் பழக்கம், அவர் தாயாரிடமிருந்து தொடங்கியிருக்கிறது.

‘எங்கம்மை ஒரு புளித்தண்ணி வப்பா, பாரு. ரெண்டு சீனியவரக்காய நறுக்கி போட்டு, தொட்டுக்கிட எள்ளுப் போல பொரிகடலத் தொவயலயும் வச்சு, சோத்த உருட்டி குடுப்பா.  தின்னுட்டு, அந்தாக்ல செத்துரணும் போல இருக்கும்வே. அதெல்லாம் அவளோடயே போச்சு, மாப்ளே.’

மாப்பிள்ளை என்று அவரால் அழைக்கப்படுகிறவர்களுமே கூட, ‘அப்படியா, பெரியப்பா?’ என்றே கேட்பார்கள். ஆக, ‘பெரியப்பா’ என்பது கந்தையா போல திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒரு பெயராகியே போனது.

கல்யாண வீட்டுப் பந்திகளில் கந்தையா பெரியப்பாவின் தலை தென்பட்டு விட்டால் போதும். ‘தவிசுப்பிள்ளை’ வீரபாகு அண்ணாச்சி தானே பரிமாற வந்து விடுவார்.

‘தண்ணிப் பானைல நன்னாரி வேர் கெடக்கும் போதே நெனச்சேன், தவிசுப்பிள்ளை நீதான்னு.’

கந்தையா பெரியப்பா சாப்பிட்டு முடிக்கும் வரை வீரபாகு அண்ணாச்சி அவரது இலையை விட்டு அங்கே இங்கே நகர மாட்டார்.

‘நீ பரிமாறினேன்னா, ஒண்ணும் சொல்லாம சாப்பிடலாம்! வேற யாரும்னா பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே, ரசத்த கலக்காம ஊத்து, தயிர்ப்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறி மாறி சொல்லிக்கிட்டேல்லா இருக்கணும்! சமையல் படிச்சா மட்டும் போதுமாவே! பருமாறவும் தெரியணும்லா! என்ன சொல்லுதே?’

பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டேதான் சொல்வார், கந்தையா பெரியப்பா. வீரபாகு அண்ணாச்சி பதிலேதும் சொல்ல மாட்டார். அவரது கவனம் முழுக்க, கந்தையா பெரியப்பாவின் இலை மீதுதான் இருக்கும். என்ன காலியாகியிருக்கிறது, என்ன வைக்க வேண்டும் என்கிற யோசனையிலேயே இருப்பார்.

சாப்பிட்டு முடித்து, கைகழுவி வெற்றிலை பாக்கு போட உட்காரும் போது, கந்தையா பெரியப்பா சொல்வார்.

‘நம்ம பளனியப்பன் மனம் போல அவன் வீட்டு கல்யாணச் சாப்பாட்டுல ஒரு கொறையுமில்ல’.

இப்படித்தான் கந்தையா பெரியப்பா சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார்.

எல்லோருக்கும் இப்படி அவர் சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கிருஷ்ணபிள்ளையின் கடைசி மகள் கல்யாணத்திற்காக, மதுரையிலிருந்து ‘கேட்டரிங் சர்வீஸ்காரர்களை’ வரவழைத்து, தடபுடலாக விருந்துச் சாப்பாடு போட்டார். வழக்கமான கல்யாணச் சாப்பாட்டில் பார்க்க முடியாத வெஜிடபிள் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், விதம் விதமான ஐஸ்கிரீம்கள், பீடா என அமர்க்களப்படுத்தியிருந்தார். இவை போக சம்பிரதாயச் சாப்பாடும் இருந்தது. கந்தையா பெரியப்பா பெயருக்குக் கொஞ்சம் கொறித்து விட்டு சட்டென்று பந்தியை விட்டு எழுந்து விட்டார்.

கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை ஒன்றுமே பேசவில்லை. சாயங்காலம் கல்பனா ஸ்டூடியோ திண்ணையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருக்கும் போது சொன்னார். அப்போதுமே கூட சொல்லியிருக்க மாட்டார். கிருஷ்ண பிள்ளை வீட்டுக் கல்யாணச் செய்தி, மாலை முரசில் வந்திருந்தது. பேப்பரை மடித்து வைத்து விட்டு சொன்னார்.

‘மந்திரி வந்தாராம்லா, மந்திரி! எவன் வந்தா என்னத்துக்குங்கேன்! பந்தில ஒண்ணையாவது வாயில வக்க வெளங்குச்சா! எளவு மோருமாய்யா புளிக்கும்!’

கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர் தொடர்ந்தார்.

‘புது பணக்காரம்லா! அதான் பவுசக் கொளிக்கான். பெத்த அம்மைக்கு சோறு போடாம பட்டினி போட்ட பய வீட்டு சாப்பாடு எப்பிடி ருசியா இருக்குங்கேன்!’

கந்தையா பெரியப்பா அப்படி சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பிடும் உணவின் ருசிக்கும், அதற்குப் பின்னணியிலுள்ள மனிதர்களின் ஆத்மாவுக்கும் சம்பந்தமுள்ளது என்பார். 

‘ஒலயக் கொதிக்க வச்சு, அதுல அரிசிய யாரு போட்டாலும் அது வெறும் சோறாத்தான் ஆகும். அது அன்னமா ஆகுறது, பொங்குற மனுஷி கைலயும், மனசுலயும்தான் இருக்கு’. 

அந்தநம்பிக்குறிச்சியில் கற்குளத்தம்மா இறந்த  பதினாறாவது நாள் விசேஷத்துக்குப் போயிருந்த போது, பந்தி முடிந்தவுடன் சொன்னார்.

‘கற்குளத்தம்மா ஆளுதான் கருப்பு. மனசு பூரா தங்கம்லா! எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா! இன்னைக்கு இங்கெ இருக்கெற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்தா அளுக அளுதாங்கங்கே! இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்தத் தின்னுதானெவே வளந்துது! அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே!. கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே!’

நூற்றுக்கு நூறு கந்தையா பெரியப்பா சொன்ன வார்த்தைகளை எல்லோராலுமே உணர முடிந்தது. நல்ல வேக்காடில் வெந்த அரிசிச் சோறு, உருக்கின பசுநெய், பதமாக வெந்த பருப்பு, மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார், வெள்ளைப் பூண்டின் நெடி முகத்தில் அடிக்காத ரசம், சம அளவில் வெங்காயமும், வாழைக்காயும் சரியாகக் கலந்த புட்டு, தேங்காயை தாராளமாக போட்டு வைத்த அவியல்,கடலைபருப்பு போட்டு செய்த தடியங்காய்க் கூட்டு, அரிசி பாயாசம், பொரித்த அப்பளம் என அனைத்துமே அத்தனை ருசி.

வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள கந்தையா பெரியப்பா வீட்டில் அவரது பதினாறு நாள் விசேஷத்தின் பந்தி முடிந்ததும், எல்லோருமே சொன்னார்கள்.

‘கந்தையா பெரியப்பா ஆத்மா அந்த மாரில்லா! அதான் சாப்பாடு இந்த ருசி ருசிக்கி’.

புகைப்படம்: கார்த்திக் முத்துவாழி

திருநெல்விருந்து

திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில் முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு. அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து, களைத்து விடுவதுண்டு.

திருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல் விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட முடியுமா?’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரும் கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச் செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’ சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின் வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின் அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என் மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி, தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து, பறித்து சாம்பாரில் போடுவாள், ஆச்சி.

ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண் அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும் சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில் தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம், வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும் வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும்.

திருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு. இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில் ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி, ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும் உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல் உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு. சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும் ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு தாத்தா.

திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப் பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா? சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும்.

‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர் ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’.

‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா வேண்டாங்கான் தெரியுதா? அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப் பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல கொற சொல்லுதான்.’

திருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசேஷ வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு.

சென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல்.

நன்றி: விஜயபாரதம்

புகைப்பட உதவி: தினமலர், நெல்லை

சுளுக்கு . . .

இந்தமுறை திருநவேலி வாசம் ஒரு வாரத்துக்கு மேல் எடுத்துக் கொண்டது. கவிஞர்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஒரு மழைநாளில் சில்லென்று சிலிர்த்தபடி தூறலும், சாரலுமாக திருநவேலி என்னை வரவேற்றது’. போய் இறங்கிய நாளிலிருந்து தொடர் பயணம். முதல் இரண்டொரு தினங்களில் ‘அசுரன்’ திரையரங்குகளுக்கும், மீதி நாட்களில் திவ்ய தேசம், நவ திருப்பதி, திருச்செந்தூர், சித்தூர் தென்கரை மகராஜா திருக்கோயில் மற்றும் அம்மையப்பன் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோயில் என சுற்றியபடியே இருந்தேன். இதில் நெல்லையப்பர் கோயிலைத் தவிர மற்ற கோயில்களுக்கும், ஊர்களுக்கும் காரில் பயணம் செய்ததால், சென்னைக்குக் கிளம்பும் முந்தைய நாளில் கடும் உடல்வலி. ஏற்கனவே ‘அசுரன்’ பட இறுதிக்கட்ட பணிகளுக்காக இரண்டு மாதங்களாக ஒரே அறைக்குள் ஒரு பிரத்தியேக நாற்காலியில் அமர்ந்தபடியே இரவுபகலாக வேலை செய்ததன் பலன் முதுகில் மெல்ல மெல்ல இறங்கியிருந்தது. கூடவே இந்தத் தொடர்பயணம் மேலும் வலியை வலுவாக்கியது. படுத்து உறங்க இயலவில்லை. மல்லாக்க, ஒருச்சாய்த்து எப்படி படுத்தாலும் வலி குறையவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க இயலாமல் தங்கையின் கணவரை ஃபோனில் அழைத்தேன். அவர்தான் என்னை நவதிருப்பதிக்கு அழைத்துச் சென்று பெருமாளை சேவிக்க வைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டவர்.

‘மாப்ளே! நம்ம ஊர்ல கோட்டக்கல் வைத்திய சாலை எங்கன இருக்கு?’

வலியில் முனகினேன்.

‘என்ன விஷயம் அத்தான்? சிரிச்சுக்கிட்டே கேக்கேளே! ஏன்?’

தங்கை கணவரென்பதால் வலியையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ‘கடுமையான முதுகு வலி மாப்ளே. அங்கனன்னா சுளுக்கு கிளுக்கு தடவுவாங்கல்லா?’

‘முதுகு வலியா? இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே? இரிங்க. அரை மணிநேரத்துல வாரென்’.

சொன்ன படியே ஒரு மணிநேரத்தில் கையில் ஒரு புட்டியுடன் வந்து சேர்ந்தார், மாப்பிள்ளை. அதன் மேல் ஓர் அழுக்குத்தாளில் மங்கிய எழுத்துகளில் கேரள ஆயுர்வேத சாலை என்று தமிழ் போன்ற மலையாளத்தில் எழுதியிருந்தது. 

‘இதுக்குப் போய் அங்கன போய் முன்னப்பின்ன தெரியாத மலையாளத்தான்கிட்ட முதுகக் காட்டுவேளாக்கும்?! சட்டயக் கெளட்டுங்க. நானே தடவி விடுதென்’ என்று சொன்ன கையோடு என் மேல் பாய்ந்து சட்டைப் பித்தான்களைக் கழட்ட ஆரம்பித்தார். 

‘இரிங்க மாப்ளே. நானே களட்டுதேன்’. 

‘ச்செரி.அப்பம் நான் போயி ஸ்டூலைக் கொண்டு வாரென்’.

மாப்பிள்ளை வருவதற்குள் சட்டையைக் கழட்டி விட்டு வேஷ்டியுடன் அமர்ந்திருந்தேன். ஸ்டூலுடன் வந்த மாப்பிள்ளை, ‘வாங்கத்தான். இதுல வந்து உக்காருங்க’ என்று ஸ்டூலைக் காட்டினார். உட்காரப் போன என்னைப் பிடித்து நிறுத்தி சட்டென்று இடுப்பில் கை வைத்தார். 

‘மாப்ளே! என்ன இது? என்ன இருந்தாலும் நான் ஒங்க அத்தான். அத மறந்துராதிய.’ 

கோபத்தில் முறைத்தபடி சொன்னேன்.

‘அட நீங்க ஒரு ஆளு. வேட்டிய அவுருங்கய்யா’.

‘மாப் . . .ளே’

‘துண்ட உடுத்திக்கோங்க. கொண்டாந்துருக்கெம்லா!’

துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தேன். அழுக்கு புட்டியிலிருந்த தைலம் என்னும் திரவத்தை கையில் ஊற்றிக் கொண்டார் மாப்பிள்ளை. நறுமணத்தில் மயக்கம் வந்தது. முதலில் தோள்பட்டையில் தைலத்தை வடிய விட்டார். மிதமான சூடு. நேரடியாக மூக்கில் மணம் அடித்து தலையைத் துவளச் செய்தது. 

‘ஆங்! தலையத் தொங்கப் போடாதிய’. பட்டென்று பிடரியில் அடி விழுந்தது. அடிகளின் பிள்ளையார்சுழி அது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தோளிலிருந்து மாப்பிள்ளையின் முரட்டுக்கரங்கள் நடு முதுகுக்கு இறங்கி அங்கு சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு இடுப்புக்குச் சென்றது.

‘அங்கனதான் அங்கனதான் மாப்ளே. குறுக்குலதான் வலி’.

‘ஆமாமா. திண்டு கணக்கால்லா ரத்தம் கெட்டியிருக்கு. இரிங்கொ’.

புட்டியிலிருந்து இன்னும் கொஞ்சம் தைலத்தை கைகளில் ஊற்றிக் கொண்டார். தைலக் கைகளோடு ‘சளத் சளத்’ என இடுப்பில் வைத்து சாத்தினார். என் கேவல் ஒலி மாப்பிள்ளையின் காதுகளை எட்டவே இல்லை. அவர் தியானம் பண்ணுவது போல மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு என் இடுப்பில் கைகளால் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தார். 

‘துண்டை லேசா தூக்குங்கொ’.

அம்பாசமுத்திரத்திலிருந்து அந்தக் காலத்தில் டிரங்க் காலில் ஒலிக்கும் குரல் போல மாப்பிள்ளையில் குரல் எங்கோ கேட்டது. நான் சுயநினைவுக்குத் திரும்புவதற்குள் மாப்பிள்ளை என் தொடைகளில் தைலத்தை வழிய விட்டார். அடி அங்கும் பலமாகத்தான் விழுந்தது. பாதம் வரைக்கும் வழிந்த தைலம் சின்ன வாய்க்கால் போல அறையெங்கும் ஓடியது. ஆனாலும் திருப்தியடையாத மாப்பிள்ளை மேலும் புட்டியைக் கையில் கவிழ்த்து தைலத்தை ஏந்தினார்.

‘போதுமே மாப்ளே! அதான் நல்ல்ல்லா தேச்சுட்டேளே!’

‘சும்ம கெடைங்கத்தான். எறநூறு ரூவா குடுத்துல்லா வாங்கியிருக்கென். முளுசா கவித்திருவோம்.’

மாப்பிள்ளையின் கரங்களிலிருந்து நான் விடுபடும் போது வெளியிலும், எனக்குள்ளும் இருட்டத் துவங்கியிருந்தது. 

‘நல்லது மாப்ளே! ஒங்களுக்கு ஆயிரம் சோலி கெடக்கும். ஒங்கள வேற சங்கடப்படுத்திட்டென். நீங்க கெளம்புங்க’.

‘நல்ல கதயா இருக்கெ! வெந்நி போடச் சொல்லியிருக்கென். ஒங்களுக்கு முதுகு தேச்சுக் குளிப்பாட்டிவிட்டுட்டுத்தான் கெளம்புவென். எண்ணெ போணும்லா!’

நான் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். உடம்பு வலியும், மனவலியும் சேர்ந்து கொண்டு பரிசாக அளித்த சோர்வு. 

‘எத்தான் . . . . எத்தான்’.

கவனம் கலைந்து, ‘சொல்லுங்க மாப்ளே’.

‘வெந்நி சுடதுக்குள்ள இந்தாக்ல ஒரு செல்ஃபி எடுக்கிடுவோமா?! இந்த மாரில்லாம் அமையாது பாத்துக்கிடுங்க’.

காந்திமதித்தாயின் அருளால் தங்கை அங்கு வந்து சேர்ந்தாள்.

‘எய்யா! வெந்நி சுட்டுட்டு. கூட்டிட்டு வாருங்கொ’.

‘மாடு குளுப்பாட்டுன கையால அண்ணன போட்டு என்னா பாடு படுத்துட்டியோ!’

தங்கையின் முணுமுணுப்பை மனக்காது கேட்க மறுத்தது. மாப்பிள்ளை இயற்கை விவசாய ஆர்வலர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்றவர். அவர் மாடு குளிப்பாட்டும் விவரம் அறிந்த பின்னும் அவர் கைகளினால் குளிப்பாட்டப்பட சென்றேன்.

கொதிக்கக் கொதிக்க சுடுநீரை முதுகில் ஊற்றித் தேய்க்கத் துவங்கினார். மாப்பிள்ளையின் கரங்களில் வைக்கோல் இருப்பதாகவே என் மடமுதுகு உணர்ந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் ஈனஸ்வரத்தில் ‘மா . . .ப் . . .ளே’ என்று என் உதடு பிரிந்து லேசாக சத்தம் வந்தது. மாப்பிள்ளையின் காதுகளில் அது எட்டியதொ இல்லையோ அறியேன். ஆனால் அவராகவே, ‘சவம் எண்ணெ போவெனாங்கு. மலயாளத்தான் எண்ணெல்லா’ என்றபடி மேலும் தேய்த்தார்.

குளித்து முடித்து மாடிப்படிகளில் தவழ்ந்து சென்று நான் படுக்கையில் விழுந்த போது, மாப்பிள்ளை விடைபெறும் குரல் கேட்டது.

நா . . .  ன் ரா . . . த்த்த் . . . திரி வா . . . ரேன் . . . அத்தான். தூ . . . ங்கு . . . ங்கொ. தா . . . வல ஆ . . . யி . . .ரு . . .ம்.’

சில நிமிடங்களில் முதுகு வலி குறைந்ததை உணர்ந்தேன். ‘மாப்ளெ சொன்ன மாரி என்ன இருந்தாலும் மலயாளத்தான் எண்ணெல்லா!’ என்று மனதுக்குள் சிலாகித்து முடிப்பதற்குள், இடுப்பிலிருந்து கால் வரைக்கும் பேயாக வலி பரவுவதை உணர்ந்தேன். இந்த முறை மறந்தும் மாப்பிள்ளையை அழைக்காமல் குத்துமதிப்பாக யாரையோ அழைத்து அலறினேன். கொஞ்ச நேரத்தில் காதருகில் ஓர் அறிந்த குரல்.

‘யண்ணே! சும்ம இருக்கேளா?’ மந்திரம்லா வந்துருக்கென்’.

சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்திருக்கும் மந்திரத்தின் குரல். அதாவது மந்திரத்தின் சிறு வயதைலிருந்ந்தே. சின்னஞ்சிறுவனாக அம்மன் சன்னதியில் ஒரு நடமாடும் இஸ்திரி வண்டி வைத்து துணிகளைத் தேய்த்துக் கொடுக்கும் காலத்திருந்தே மந்திரத்தின் குரல் மாறவில்லை. உருவத்தில் ஒரு பெரிய மனிதர் நின்று கொண்டிருந்தார்.

‘மந்திரம்! ஆளே அடையாளம் தெரியலயடே!’ என்றபடி சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.

அருகில் அமர்ந்த மந்திரம் என் கைகளைப் பிடித்து கண்களை மூடிக் கொண்டு ‘நாடி’ பார்த்தான். 

‘இடுப்புலதான் சுளுக்கு இருக்கு. கரண்டக்கால் வரைக்கும் ஒளைச்சல் இருக்குமெ!’

‘ஆமா மாந்திரம். தாங்க முடியல.’

‘துண்டக் கட்டிக்கிட்டு நில்லுங்க. தடவி விட்டு உப்பு கட்டி அடிச்சிருவொம். பத்தே நிமிசத்துல சரி ஆயிரும்.’

தீர்க்கமாக ஒலித்த மந்திரத்தின் குரல் திருமந்திரம் போல ஒலித்தது. பாதிவலி குறைந்த மாதிரி இருந்தது. 

துண்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். கையில் ஒரு புட்டி. அதே புட்டி. அதே என்றால் அதே. கேரள வைத்தியசாலை புட்டி. மனம் மிரள குமுறி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘இது எதுக்குடே?’ என்றேன்.

‘ஒங்க மாப்பிள்ள சொல்லிட்டுப் போனாவொ. எறநூறு ரூவா குடுத்து வாங்கியிருக்காக. வம்பாப் போயிரக்கூடாதுல்லா!’

மாப்பிள்ளையை மனதுக்குள் காதலிக்க ஆரம்பித்தபடி, ‘ஸ்டூல் வேண்டாமாடே?’ என்றேன்.

‘அதெதுக்கு? சுவத்தப் புடிச்சுக்கிட்டுத் திரும்பி நில்லுங்கொ’

சுவரைப் பிடித்தபடி நிற்கவும், கண்ணிமைக்கும் நேரத்தில் ‘அது’ நிகழ்ந்தது. விருட்டென்று என் இடுப்பில் உடுத்தியிருந்த துண்டை உருவினான், மந்திரம்.

‘கிருஷ்ணாஆஆஆஆஆஆஆ’ என்று அலறினேன். 

‘காசியாபிள்ள மவன் கிட்ணன் செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சுல்லா. ஹார்ட் அட்டாக்கு’ என்றான், மந்திரம்.

எதையும் கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. ‘எல்லாம் போச்சு. இனிமேல் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.

தேய்த்து முடித்த பின் மந்திரம் துணியில் கல் உப்பைக் கட்டி வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடுக்கத் துவங்கினான். அந்த சோகத்திலும் சுகமாகத்தான் இருந்தது.

வேலையை முடித்தபின், ‘அப்பொ நான் வாரென்’ என்றான், மந்திரம்.

திரும்பாமலேயே, ‘ம்ம்ம்’ என்றேன். 

‘இன்னும் ஏன் சொவத்தப் புடிச்சிக்கிட்டெ நிக்கியோ?’ என்றான் மந்திரம்.

‘கொஞ்ச நேரம் சொவத்தப் புடிச்சுக்கிட்டு நின்னா சொகமா இருக்கு. நீ கெளம்பித் தொலடே. நல்லாயிருப்ப’ என்றேன்.

இரவு டாக்டர் ராமச்சந்திரன் மாமா வந்து பார்த்தார். ‘இப்பந்தான் க்ளினிக்கச் சாத்திட்டு வாரென். ஊசி போட்டிருதென். அப்பதான் தூங்குவிய. மருமகன் ஊசிக்கு பயப்பட மாட்டேளே!’ என்றார்.

‘அதெல்லாம் இல்ல மாமா. கத்தாம லேசா அளுவென். அவ்வளவுதான்’ என்றேன்.

‘சரி. வேட்டிய எறக்குங்க’, என்றார். ‘சரி இது மாமாவின் முறை போல’ என்று நினைத்தபடி, திரும்பி நின்றேன். மாப்பிள்ளையின் கரங்களும், மந்திரத்தின் உப்பு ஒத்தடமும் ‘எதையும் தாங்கும் பின் புறத்தை’ எனக்கு வழங்கியிருந்ததால் வாழ்க்கையில் முதன் முறையாக ஊசிக்குக் கண்ணீர் சிந்தாமல் கல்லாய்ச் சமைந்து நின்றேன்.

இரவு ஆழ்ந்த உறக்கம். காலையில் எல்லாம் சரியானது. குஞ்சுவின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். சின்ன தாத்தா வீட்டு வாசலில் தனது இஸ்திரி வண்டியை நிறுத்தி துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த மந்திரம், என்னைப் பார்த்ததும் பாசத்துடன் பாய்ந்து அருகில் வந்து, ‘எங்கண்ணெ கெளம்பிட்டியொ? குஞ்சண்ணனப் பாக்கவா? இப்பமும் ஒரு மட்டம் சுளுக்கு தடவி விட வரணும்லா நெனச்சென். துணி நெறய சேந்துட்டு’ என்றான்.

‘வேண்டாம்டெ. தாவல ஆயிட்டு. வரட்டுமா? தேங்க்ஸு’. மந்திரத்தின் கண்களைத் தவிர்த்தபடி குஞ்சுவின் வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

குஞ்சுவின் தகப்பனாரிடம் ஆசியும், குஞ்சுவின் மனைவியிடம் ஏச்சும் வாங்கி விட்டு குஞ்சுவை இழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன். தாமிரபரணிக்குச் செல்லும் வழியில் நாங்கள் வழக்கமாகக் காதல் கடிதங்கள் எழுதுகிற குறுக்குத் துறை ரோட்டுக்குச் சென்றோம்.

வழக்கம் போல புத்திசாலித்தனமாகத் துப்பறிவதாக நினைத்துக் கொண்டு, மருத மரங்களைப் பார்த்துக் கொண்டு, என் முகம் பார்க்காமல், ‘யாருல அவ?’ என்றான், குஞ்சு.

‘கோட்டிக்காரப்பயல. அவ இல்லல. அவன். அவன் கூட இல்ல. அவன்கள்’ என்றேன்.

‘என்னல சொல்லுதெ?’ முகம் சுளித்தபடி என் கண்களைப் பார்த்துக் கேட்டான், குஞ்சு. நான் கற்பிழந்த கதையை ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.

‘இனிமேல் வாள்க்கைல நீ என்ன டிரஸ் போட்டாலும் நம்ம மந்திரம் கண்ணுக்குத் தெரியாது’ என்றான், குஞ்சு.  

திருநவேலி இன்று . . .

கடந்த மாதத்தில் பாதி நாட்கள் திருநவேலியில் இருக்க வாய்த்தது. நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு. அநேகமாக எல்லா நாட்களின் இரவுணவு, திருநவேலியின் பல்வேறு ரோட்டுக் கடைகளில்தான். அதற்காக விஞ்சை விலாஸுக்கும், விசாக பவனுக்கும் போகாமல் இல்லை.

வழக்கம் போல இந்த முறையும் பழைய, புதிய மனிதர்களின் சந்திப்புதான் விசேஷம். ஊருக்குப் போன அன்றைக்கே தேரடிக்கு எதிரே உள்ள மணீஸ் அல்வா கடையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது குஞ்சு தோளைத் தொட்டுச் சொன்னான், “யார் வாரா பாரு”. தூரத்தில் காந்தி அத்தான் வந்து கொண்டிருந்தான். முழு பெயர் காந்திமதிநாதன். கட்டையான சிவத்த உடம்பு. உருண்டையான அவனது தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. அவன் அருகில் வருகிற வரைக்கும் பால் குடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வரவும், “என்னத்தான்! எப்படி இருக்கே?” என்றேன். “என்னை மறந்துட்டியோன்னு நெனச்சேன்டா, மாப்ளே!” என்றான், வழக்கமான கரகரத்த குரலில். சிகரெட் குடித்து குடித்து அவன் குரல் அப்படி ஆகியிருந்தது. “உன்னை நான் எப்படி மறப்பேன்த்தான்! அநியாயத்துக்கு மெலிஞ்சுட்டே. நெஜமாவே அடையாளம் தெரியல,” என்றேன். அருகில் நின்ற குஞ்சுவைப் பார்த்து, “நீ சொல்லலியா, மாப்ளே! அத்தான் பைபாஸ் பண்ணிட்டெம்லா!” என்றான். சட்டையின் மேல் பித்தான்களை நீக்கிக் காட்டினான். குழப்பமும், வருத்தமுமாகப் பார்த்தேன். ஆனால் அத்தான் முகத்தில் அப்படி ஒரு பெருமை. சமூகத்தில் சொல்லிக் கொள்ளுமளவுக்கான ஓர் அந்தஸ்தை அடைந்து விட்ட  கர்வத்துடன் ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் ஸ்டைலில் கொஞ்சம் சாய்வாக நின்றபடி என்னை ஏளனமாகப் பார்த்தான். பார்வையில் “என்னை என்ன சொல்லிடா பாராட்டப் போறே, மாப்ளே?” என்ற கேள்வி காத்திருந்தது. சில நொடிகள் யோசித்து ஒன்றும் சிக்காமல் “காந்தி அத்தான் காந்தி அத்தான்தான்!” என்றேன். “இதச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா?” என்றவன் தொடர்ந்து “வேற ஏதாவது புதுசா சொல்லுவேன்னு எதிர்பாத்தேன், மாப்ளே” என்றான். குரலில் ஏமாற்றம் தெரிந்தது. “ஒன்னப் பாத்த அதிர்ச்சிலேருந்து இன்னும் அவன் மீளலத்தான். அதான்,” என்று சொல்லி சமாளித்தான் குஞ்சு. “புரியுதுடா மாப்ளே!”. இருவரையும் புன்முறுவலுடன் பாராட்டி விட்டு காந்தி அத்தான் கிளம்பும் போது கையிலுள்ள மிச்சப் பால் ஆறியிருந்தது. “இன்னொரு பால் சொல்லுல,” என்றேன், குஞ்சுவிடம்.

நண்பர் கோலப்பன் சொல்லுவார். “எங்க ஊர்ல மதுசூதனன் மாமாவுக்கு பைபாஸ் ஆகி வீட்டுல கெடந்தாரு பாத்துக்கிடுங்க. முருகண்ணன் வந்து சொல்லுகான். எல கோலப்பா! நம்ம மசூதம் மாமாக்கு நெஞ்சுல ஜிப்பு வச்சு தச்சிருக்குல்லா! வா, போயி பாத்துட்டு வருவோம்”.

திருநவேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முழுவதுமாக இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி வருவதாகச் சொன்னார்கள். ஏற்கனவே அறிந்த செய்தி அது. ஆனால் டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட்டும் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி ஆகிறதாம். “நீ எளுதியிருப்பெல்லா நம்ம மார்க்கெட்ல நான் எலை வாங்கப் போன கதய. அதப் படிச்சுத்தான் நம்ம மார்க்கெட் எப்பிடி இருந்ததுன்னு இனிமேல் தெரிஞ்சுக்கணும்.” குஞ்சு சொன்னான். “அப்பம் அங்கெ உள்ள லைப்ரரி எங்கெ போகும்?” எப்படியும் குஞ்சுவிடம் அதற்கான பதில் இருக்காது என்பதால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். மார்க்கெட்டுக்குள்ள போவோமா என்று குஞ்சு கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் மனதுக்குள் காய்கறி, தேங்காய், விபூதி, குங்குமம், ஊதுபத்தி, எலுமிச்சை, மாங்காய், சப்போட்டா, பெருங்காயம், சூடன், சாம்பிராணி, மூக்குப்பொடி, மாட்டுச் சாணம், சுருட்டு, காப்பித்தூள், சந்தனம், குல்கந்து என கலவையான வாசனையை நுகர்ந்தபடி நேதாஜி போஸ் மார்க்கெட் வழியாக நடந்து போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, அதன் பக்கத்தில் உள்ள ‘அளவெடுத்து செருப்பு தைக்கும் கடை’ யைப் பார்த்தபடி மேலரதவீதியில் இருக்கும் டிப்டாப் ரெடிமேட் கடையில் போய் முட்டி நின்றேன்.

என்னுடைய திருநவேலி என்பது நான்கு ரதவீதிகளும், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் ஒரு சில தெருக்கள் மட்டும்தான். இன்னும் நான் சொல்லாத மனிதர்கள் எத்தனையோ பேர் அங்கு உள்ளனர். அம்மன் சன்னதி நந்தி டாக்கர் வீட்டின் புகழ் பெற்ற மர பெஞ்ச் காலப்போக்கில் காணாமல் போனது, அம்மன் சன்னதிக்காரனான எனக்கு சொல்ல முடியாத இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் பெரியவர்கள் ‘நந்தி டாக்கர், அவரது பிள்ளைகள் சுப்பன், ராமுடு, ராதாகிருஷ்ணன் ஸார்வாள் (குஞ்சுவின் தகப்பனார்), குளத்து ஐயர்’ உட்பட பல பெரியவர்கள் சாய்ந்து கிடந்தபடி போகிற வருகிற பெண்களை வேடிக்கை பார்த்த அந்த மர பெஞ்சில் நான் உட்கார்ந்தது கூட இல்லை. நந்தி டாக்கரின் பேரன் தூஜா, “என்னடே எப்பிடி இருக்கே?” என்ற போதுதான் அப்படி ஒருவனை எனக்குத் தெரியும் என்பதே என் மண்டைக்கு உறைத்தது.

“தூஜா ஆள் அப்படியே இருக்கானாலே?” குஞ்சுவிடம் கேட்டேன்.

“ஆமாமா. பேரன் பேத்தி எடுத்துட்டான்னு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். இன்னும் வக்கனையா சாப்பிடுதான். அவ்வளவு சொத்து இருக்கு. ஆனா வருசத்துக்கு ரெண்டு வேட்டி, ரெண்டு சட்டதான் எடுப்பான். டெய்லி காலைலயும், சாயங்காலமும் நெல்லேப்பர் கோயில்ல ஒரு சுத்து. வாக்கிங் ஆச்சு. இன்னும் அவனைப் பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர். இருட்டுக்கட ஹரிசிங் மாமா இவனப் பாத்த ஒடனேயே அம்பது அல்வாவை எலைல மடக்கிக் குடுத்துருவா. அன்னைய நாள் அதோட ஓவர். தந்தி பேப்பர் கூட படிக்க மாட்டான். டி.வி. பாக்க மாட்டான். நாட்டு நடப்பு எதைப் பத்தியும் அவனுக்குக் கவலையில்ல. அப்புறம் ஏன் ஆளு அப்பிடியே இருக்க மாட்டான்?” குஞ்சு சொல்லி முடிக்கவும் ஏக்கப் பெருமூச்சுடன் தூஜாவைப் பார்த்தேன். அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேக வேகமாக அம்மன் சன்னதி மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

திருநவேலிக்குப் போய்விட்டு மீனாட்சியைப் பார்க்காமல் எப்படி? வழக்கம் போல சென்னையில் இருந்து கிளம்பும் போதே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவனது சௌகரியம் போல வந்து சேர்ந்தான்.

“நைட் எங்கெ சாப்பிடப் போணும், சித்தப்பா?”

“நீதானல கூட்டிட்டுப் போகணும்?”

“இல்ல. குஞ்சண்ணன் ஏதாவது பிளான் வச்சிருக்கானா? அதுக்குத்தான் கேட்டேன்.”

“மீனாட்சி வந்ததுக்கப்புறம் எனக்கென்னடே ப்ளான் இருக்கப் போது? நீ சொல்லுத கடைக்குப் போவோம்” என்றான், குஞ்சு.

புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ரோட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. அரையிருட்டில் இரண்டு பெஞ்சுகள், ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல்கள் போடப்பட்டிருந்தன. இட்லிக் கொப்பரையில் ஆவி வந்து கொண்டிருந்தது. தோசைக் கல்லில் சின்ன வட்டங்களாக குழிழ் தோசைகள். ஒரு சட்டியில் பூரிக் குவியல். கிழங்கு, சாம்பார், சட்னி சட்டிகள்.

“அண்ணாச்சி! டேபிள விட எல பெருசா இருக்கு பாருங்க. இத எடுத்துட்டு சின்ன எல போடுங்க”. மீனாட்சி ஆரம்பித்தான். குஞ்சுவிடம் கண்ணைக் காட்டினேன். “நாம சாப்பிடதுக்கு மட்டும் வாயத் தொறந்தா போதும். மத்தத அவன் பாத்துக்கிடுவான்” என்றான், குஞ்சு. அடுத்தடுத்து மீனாட்சியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது சூழல்.

“ஏற்கனவே அவிச்சு தட்டி வச்சுருக்க இட்லி வேண்டாம். வெந்ததா எடுங்க. வெய்ட் பண்ணுதோம்”.

“காரச் சட்னி வைக்காதிய. வெங்காயம் சோலி முடிஞ்சு போச்சு. தேங்கா எளசோ! சவம் இனிக்கல்லா செய்யுது.”

“மொளாப்டி வச்சிருக்கேளா? . . . என்ன அண்ணாச்சி டால்டா மாரி இருக்கு?! சருவச்சட்டி பக்கத்துல நல்லெண்ண பாட்டில் வச்சிருப்பெளே! அத எடுங்கய்யா. . . ரெண்டே ரெண்டு கரண்டி போதும். . . பூரிக்கு கெளங்கு வேண்டாம். சாம்பாரே போதும் . . .”

சாப்பிட்டு கை கழுவியதும், “சித்தப்பா! புட்டாரத்தி அம்மைக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என் பின்னால வாங்க” என்று நடையைக் கட்டினான். “தாயளி எங்கென கூட்டிட்டுப் போறான்னு தெரியலியே! சரி சரி வா, போயிப் பாப்போம்” என்றான், குஞ்சு. லாலா சத்திர முக்கும், தொண்டர் சன்னதியும் இணையும் வளைவில் சின்னதாக ஒரு பால் கடை இருந்தது. பால் கடை என்றால் அல்வாவும் இருக்கும் வழக்கமான திருநவேலி கடை. தாழ்வான கடைக்குள் வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைப் பார்த்ததும், “என்னா? ஆளயே காங்கல?” என்றார். “நேத்து ஒரு நாள்தானேய்யா வரல? அம்பது அம்பது மூணா வெட்டுங்க” என்றான், மீனாட்சி. என்னிடம், “சித்தப்பா! அவாள் அல்வா வெட்டும் போது பாடி லேங்குவேஜ கவனிங்க. ஒரு ஸ்டெப் கீள போயி வெட்டுவா” என்றான். அவன் சொன்னபடியே அண்ணாச்சி அல்வா வெட்டும் போது, முட்டியை ஒரு நொடி மடக்கி நிமிர்ந்தார். குஞ்சு சிரிப்பை அடக்கிக் கொண்டு, “இந்தக் கடைல இன்னைக்குத்தான்டே அல்வா சாப்பிடுதென்” என்றான். “வாய்ல போடவும், தொண்ட, வயித்தத் தாண்டி வளுக்கிக்கிட்டுப் போயி பிருஷ்ட நுனில உக்காந்திரும், குஞ்சண்ணே”. மீனாட்சி சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அல்வாவை விழுங்கிய குஞ்சுவின் முகம் ஏதோ சொன்னது. “பால் வேண்டாம் , அண்ணாச்சி” என்று சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் லாலா சத்திர முக்கை நோக்கி நடந்தான், மீனாட்சி. “எல சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போ”. பின்னால் சென்ற எங்கள் குரலை அவன் கவனிக்கவில்லை. பழக்கடை ஒன்றின் முன் நின்றபடி, கோழிக்கூடு பழங்களைக் காட்டினான். “கோளிக்கூடு சப்பிடணும்னா இங்கதான் வரணும். கனிஞ்சும் கனியாம மெத்துன்னு இருக்கும். அன்னா பாத்தேளா, சேந்து முடிஞ்சதுக்கப்புறம் வீட்டம்மா கெடக்கற மாரி கோளிக்கூடு கெடக்கு பாருங்க” என்றான். அவனது உவமையில் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை கவனித்த குஞ்சு சொன்னான். “இப்பிடி பேச்செல்லாம் கேக்கறதுக்காகவாது மாசம் ஒரு மட்டம் ஊருக்கு வால”.

ஒவ்வொரு முறையும் திருநவேலி பயணத்தை இனிதாக்குபவை, கோயில்களும், சந்திக்கும் மனிதர்களும், விதம் விதமான சாப்பாட்டுக் கடைகளும்தான். ‘தாயார் சன்னதி’ தந்த நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் போக பிரதோஷ வழிபாட்டுக்கு சென்ற கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில், பரமேஸ்வரபுரம் முத்தாரம்மன் கோயில், குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயில், பண்பொழி திருமலை முத்துக்குமாரஸ்வாமி கோயில், தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கோபாலசமுத்திரம் பெருமாள் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மற்றும் வெட்டுவான் கோயில், சமணப்படுகைகள் என மனதை நிறைத்த பயணம் அமைந்தது.

நந்தி டாக்கர் வீட்டு தூஜா, மீனாட்சி, அல்வாக்கடைக்காரர், காந்தி அத்தான் போக கலாப்ரியா மாமாவை சந்தித்தது, நீண்ட நாள் சிநேகிதி, வாசகி, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் திருமதி ராமலக்‌ஷ்மி ராஜன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக அவர்களை சந்தித்துப் பேசியது, ஹலோ பண்பலை அலைவரிசையில் காதலர் தினத்துக்கான ஒலிபரப்பில் கலந்து கொண்டது, “அண்ணே! ஒரே ஒரு மட்டம் உங்க கன்னத்தைக் கடிச்சுக்கிடட்டுமா?” என்று கேட்பானோ என்று பயப்படும் அளவுக்கு என்னைக் காதலுடன் கவனித்துக் கொண்ட அன்புத் தம்பி கணபதிக்கு என்னுடைய புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தது, மூத்த உறவுகளுக்கான முழுமையான குடியிருப்புகளை உருவாக்கி சிறப்புற நடத்தி வருகிற ‘நங்கூரம்’ அமைப்பினரை சந்தித்தது, நாறும்பூநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரை மற்றும் அந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்த முத்தமிழ் தம்பதியர், சகோதரர்கள் ரமணி முருகேஷ், தாணப்பன் கதிர், கவிஞர் சுப்ரா, டாக்டர் ராமானுஜம், பால்ய தோழர் ஸ்டேட் பாங்க் கணபதி, ஆறுமுகம் அண்ணன், வாசகர் பிரமநாயகம், அதைத் தொடர்ந்து தென்காசியில் விநாயகர் சிலை பரிசளித்து “இப்பதான் நாறும்பூ ஸார் நிகழ்ச்சில உங்க ஸ்பீச் யூ டியூப்ல கேட்டேன். என்னால நம்பவே முடியல. சங்கரன் மாமாவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்ல” என்று வியந்து, சிரித்து, தயங்கி உபசரித்து மகிழ்ந்த சகோதரி ராணி கணபதிசுப்பிரமணியன் என நிறைய அனுபவங்களைத் தந்த மனிதர்கள்.

திருநவேலி கீழ்ப்பாலத்தை ஒட்டி அமைந்திருக்கிற ‘முத்து மெஸ்’ என்கிற சாப்பாட்டுக் கடையின் அமோகமான மதிய சைவ உணவும், மாலை நேரத்தை விசேஷமாக்கிய விசாக பவனின் அசத்தலான உளுந்த வடை, ஃபில்டர் காப்பியும், இரவுணவை இதமாக்கிய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள சாலையோர இட்லிக் கடைகளும், அனிதா பால் கடையின் கல்கண்டு பாலும் இந்த முறை திருநவேலி விஜயத்தின் சுவையைக் கூட்டியவை. இரண்டு முறை விஞ்சை விலாஸுக்கும் செல்ல வாய்த்தது. பழைய விஞ்சை விலாஸ் அல்ல. புத்தம் புதிதாக எடுத்துக் கட்டப்பட்டிருக்கும் பளபள விஞ்சை விலாஸ். தோற்றத்தில் கவராமல் அந்நியமாக உணர வைத்தாலும், பழைய சுவை குன்றாமல் பார்த்துக் கொண்டது. முதலாளியும், அவரது மகனும் என் தலையைப் பார்த்ததும் ஓடோடி வந்து உபசரித்தார்கள். அவர்களது அதீத அன்பும், கவனிப்பும் கூச்சத்தைத் தரவே அடுத்தடுத்து அங்கு செல்ல நாக்கு இழுத்தாலும், மனசு தடை போட்டு விட்டது.

பெரும்பாலும் இரவுணவு வெளியேதான். பின் ஒரு சின்ன சுற்று. அப்படி ஓர் இரவுணவுக்குப் பின் காலாற நயினார் குளக்கரையை ஒட்டி நடந்து வந்து, ஆர்ச் பக்கம் திரும்பி சுவாமி சன்னதியில் நானும், குஞ்சுவும் செல்லும் போது, தற்செயலாக தெப்பக்குளம் பக்கம் உள்ள ‘நெல்லை கஃபே’ போர்டு கண்ணில் பட்டது. ஆச்சரியம் தாங்காமல் குஞ்சுவிடம் கேட்டேன். “எல! நெல்லை கபே இன்னும் இருக்கா? பரவாயில்லையே!” கடை திறந்து வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது. அழுக்கு உடையும், சிக்கு பிடித்த தலைமுடி, தாடியுடனும் யாரோ ஒரு மனிதர் கடை வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார். கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கைகளில் போடவும், உடம்பு முழுவதையும் வளைத்து, குனிந்து அந்த மனிதர் பொட்டலத்துடன் நகர்ந்து எங்களுக்கு எதிர்திசையில் நடந்தார். “திருநவேலில கோட்டிக்காரங்களுக்கும் கொறச்சல்லில்ல. அவங்களுக்கு சாப்பாடு போடறவங்களும் கொறயல. நெல்லை கபேல்லாம் இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்ல” என்றேன். “அது வாஸ்தவம்தான். அந்தக் கோட்டிக்காரன் யாருன்னு தெரியுதா?” என்றான், குஞ்சு. எதிரே உள்ள ஏதோ ஒரு நடைப்படியில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கோட்டிக்காரனை உற்றுப் பார்த்தேன். ஏதோ பிடிபட ஆரம்பித்து மனம் குழம்பி, பின் தெளிய ஆரம்பிப்பதற்கு முன் குஞ்சுவே சொன்னான். “சொல்ல சங்கடமாத்தான் இருக்கு. நம்ம சிவாதான். அதாம்ல சாப்ட்டர் ஸ்கூல்ல நம்ம க்ளாஸ்மேட்டு. நீ இன்னைக்குத்தான் பாக்கெ. நான் டெய்லி பாக்கென்”.

ரஹ்மான் என்ற ராஜசேகர் . . .

‘வணக்கம் ஸார்! நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே அண்ணன் சொன்னாவொ!’

ரயிலிருந்து இறங்குவதற்கு முன்பே கையிலுள்ள பெட்டியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வார் ரஹ்மான். மேலப்பாளையத்து இளைஞன். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கான திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் ‘லொக்கேஷன் மேனேஜர்’ ஜே கே’யின் உதவியாளர். கருத்த மினுமினுக்கும் மேனி. தொங்குமீசை.  படிய வாரியும் அடங்காமல் கலைந்து நிற்கும் சிகை. மினுமினுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் சட்டை அணிந்திருப்பார்.

‘ஸார்!சூட்டிங் வரும் போதுதான் இப்படி வாரான். கல்யாண வீட்டுக்குல்லாம் அவாள் போற தோரணயப் பாக்கணுமே! கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய?’ ஜே.கே சொல்வார்.

தூரத்தில் வரும் போதே   புனுகு வாசம் வீசி ரஹ்மானைக் காட்டிக் கொடுக்கும் வாசனைத் திரவியம்.

 

 

 

‘இந்த புனுகு செண்ட்டை மாத்தவே மாட்டியாடே?’

‘ஸார்! இது சவ்வாதுல்லா! நம்ம சர்வோதயாதானே சப்ளை! ’

திருநவேலியின் வட்டார வழக்கு சொற்களை அதன் மாறா ராகத்துடன் ரஹ்மான் பேசும் போது கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்கும்.

படப்பிடிப்புக்குத் தேவையான ‘Crowd’ ஏற்பாடு பண்ணும் பொறுப்பை பெரும்பாலும் ரஹ்மானிடம்தான் கொடுப்பார், ஜே கே. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமத்து ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி வகுப்பை மட்டம் போடும் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவார் ரஹ்மான்.

‘படிக்கிற பிள்ளேள ஷூட்டிங்குக்குக் கூட்டிட்டு வரலாமாடே? தப்புல்லா?’

‘ஸார்! நம்ம என்ன மாட்டக் கூட்டிட்டுப் போற மாரி க(ட்)ச்சிக் கூட்டதுக்குக்காக் கூட்டிட்டுப் போறோம்?! அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது!’

படப்பிடிப்பின் போது மைக்கில் யாரை பெயர் சொல்லி அழைத்தாலும் ஓடோடி வந்து முதலில் நிற்பது ரஹ்மான்தான். ‘ஸார் கூப்ட்டேளா?’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார்! சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார்?’ என்று கேட்கும் போது நாம் எதற்காக அழைத்தோம் என்பது மறந்து போயிருக்கும்.

அநேகமாக திருநவேலியைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் எல்லோரையும் ரஹ்மானுக்கும், எல்லோருக்கும் ரஹ்மானையும் தெரியும். அனைவருடனும் இணக்கமான உறவு. லொக்கேஷன் பார்க்கச் செல்லும் போது காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் திடீரென்று பரபரப்பு தெரிய வரும்.

டிரைவரிடம், ‘எண்ணே! கொஞ்சம் லெஃப்ட்ல ஒடிங்க. அங்கனதான் அந்தோணி ஸார்வாள் உக்காந்திருப்பாங்க. அவங்கக்கிட்டக் கேட்டா இன்னும் நாலு இடம் சொல்லுவாங்க!’.

‘இந்த ஊர்ல நம்ம மாமா ஒரு ஆள் உண்டு. பேரு ஞாவத்துக்கு வரல. வளத்தியா இருப்பாரு. மணிரத்னம் ஸார் படத்துக்கு நெறய எடம் காமிச்சாரு. ஓரமா நிப்பாட்டுங்க. முடி வெட்டுத கடைலதான் பேப்பர் படிச்சுக்கிட்டு இருப்பாரு.’

‘எல அவரு செத்து ஒரு வருசமாச்சு! நீ வண்டில ஏறு. அடுத்த ஊருக்குப் போவோம்’ என்பார் ஜே கே.

‘என்னண்ணே சொல்லுதிய? நல்லா பேசிப் பளகுவாரு. ஒரு வார்த்த சொல்லாமப் போயிட்டாரே! ச்சே! என்னய்யா ஒலகம் இது!’

இந்த மனிதன் சீரியஸான ஆள்தானா என்ற சந்தேகப்பட முடியாத முகபாவத்துடனே ரஹ்மானின் உதடுகள் முணுமுணுக்கும்.

படப்பிடிப்புக் குழுவினருடன் நெல்லையப்பர் கோயிலுக்குள் சென்றோம். எல்லோருக்கும் தலைமை தாங்குவது போல எங்களுக்கு முன்னால் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்த ரஹ்மானைப் பார்த்து எனக்கு திக்கென்றிருந்தது. சட்டென்று சமயோசிதம் தோன்றி ‘ராஜசேகர்! ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார்! ராஜசேகர் ஸார்! உங்களைத்தான் ஸார் கூப்பிடுதாங்க’ என்று அங்கு இல்லாத ராஜசேகர் ஸாரிடம் பேசிக் கொண்டிருக்க, எட்டி ரஹ்மானின் கையைப் பிடித்து, ‘கோட்டிக்காரப்பயலே! உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா?’ என்றேன். ஒரு மாதிரியான மகிழ்ச்சியுடன், ‘சரி ஸார்’ என்றான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்பு.

 

நான் ஏன் ரஹ்மானுக்கு ராஜசேகர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ர’னாவுக்கு ‘ரா’வன்னா சரியாக இருக்கும் என்று நினைத்தேனா அல்லது முந்தின நாள் தொலைக்காட்சியில் பார்த்த ‘திரிசூலம்’ படத்தின் திரிசூலங்களின் மூத்த சூலமான சிவாஜியின் பெயரான ராஜசேகரன் என்ற பெயர் என் மனதில் தங்கிவிட்டதா? ‘இந்த சிலைகளையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல விக்கறதும், நம்ம தாயாரைக் கொண்டு போய் விக்கறதும் ஒண்ணுதான்’ என்று நம்பியாரிடம் கர்ஜிக்கிற ‘திரிசூலம்’ ராஜசேகராகத்தான் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். குழுவினரிடமும் ரஹ்மானை கோயிலுக்குள் ராஜசேகர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். உதவி இயக்குநர் தியாகு அஜீரண முகத்துடன் அருகில் வந்துக் காதைக் கடித்தான்.

’ஸார்! தப்பா நெனச்சுக்காதீங்க! இந்த ராஜசேகர்ங்கற நேம் ரொம்ப ஓல்டா இருக்கு. எனக்கு வாய்லயே வர மாட்டேங்குது’.

‘கொஞ்ச நேரத்துக்கு நீ அவனைக் கூப்பிடாம இரு, தியாகு. படுத்தாதே’ என்றேன்.

திருப்தி இல்லாத முகத்துடன் தியாகு கடந்து சென்றான். ராஜசேகர் என்கிற புதிய பெயர் தந்த உற்சாகத்தின் காரணமாகவோ என்னவோ எல்லோருக்கும் முன்னால் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தான், ‘ரஹ்மான் என்ற ராஜசேகர்’.

நெல்லையப்பரை நெருங்கும் போது ராஜசேகர் என் பக்கம் திரும்பி, ‘ஸார்! நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே!’ என்பதாகவே இருந்தது, தியாகுவின் முகபாவம்.

தீபாராதனைத் தட்டுடன் கருவறைக்குள்ளிருந்து வெளியே வந்த கணேசப் பட்டர், விபூதியை வழங்கியபடியே வந்து ராஜசேகரைப் பார்த்ததும் சத்தமாக, ‘ஏய் ரகுமானு! ஒன்ன என்னடே ஆளயே காங்கல?’ என்றார்.

 

புகைப்படம்:ராமலக்‌ஷ்மி ராஜன்

 

 

வடம்

10412027_1438591953083812_4479874386173740702_n

ஓரங்களிலிருக்கும் அன்பர்கள், பக்தர்கள் எல்லோரும் அம்மையப்பன் தேர்வடம் பிடித்து . . . .’

தூரத்திலிருந்து காற்றில் கலந்து வரும் குரல் கேட்டு, ‘இன்னைக்குத் தேரோட்டம்லா!’ என்று திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுகிறேன். தொடர்ந்து ‘டம டம’ என்ற சத்தம். வலுவான புஜங்களைக் கொண்ட மனிதர்கள் ‘தடி’ போடுகிறார்கள். கீழ ரதவீதியின் இருபுறமும் ஜனக்கூட்டம். கழுத்துச் சங்கிலி வெளியே தெரிய, வட்டக்கழுத்து ஜிப்பா அணிந்த குஞ்சு பெண்கள் பகுதி வடத்தைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பியவாறே வடத்தைத் தூக்கிப் பிடித்து இழுக்கிறான்.

‘சித்தப்பா! இந்தப் பக்கம் வாங்க’ என்று என்னை அழைத்தபடியே, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ‘நம பார்வதி பதயே’ என்கிறான் தலைப்பா கட்டிய மீனாட்சி.

வருடத்துக்கு ஒருமுறை தேரோட்டத்தன்று மட்டுமே பார்க்க முடிகிற செல்லத்து அத்தையின் மகள், பூதத்தான் முக்கு அருகே கத்தரிப்பூ தாவணியில் வெட்கச் சிரிப்பு பூத்த முகத்துடன் தன் தாயின் முதுகுக்குப் பின் மறைந்து நிற்கிறாள்.

‘தேரோட்டம் வந்தாலே ஒரு வாசம் அடிக்கி, பாத்தியா! ஏ அப்பா! என்னா மணம்!’ என்று மூச்சைப் பிடித்து இழுத்து ரசிக்கிறான், சந்திரஹாசன்.

‘கோட்டிக்காரப்பயலெ! அது பொருட்காட்சி மணம். காத்துல இங்கெ வரைக்கும் அடிக்கி. சாயங்காலம் எல்லாரும் போயிருவோம்’ என்கிறான் கணேசண்ணன்.

‘இந்த வருஷம் சந்திரா ஜெயிண்ட் வீல்ல ஏறுனான்னா, நானும் ஏறிருதெம்ல’ என்கிறான், ராமசுப்பிரமணியன்.

‘வே மருமகனே! கலர் பாத்தது போதும். வந்து ஒரு கை வடம் பிடியும்வே’. கேலியும், உரிமையும் கலந்த குரலில் சொல்லுகிறார், ராஜாமணி பட்டர் மாமா.

‘போன வருசம் மாரி இந்த வருசம் தேரோட்டம் இல்ல, மக்கா’ என்கிறான், லெட்சுமணன்.

‘எண்ணே! குனிஞ்சு வடத்தத் தூக்கும்போது லேசா நிமிந்து தேரப் பாருங்க. வச்ச கண்ணு வாங்காம நம்மளையேப் பாக்கும். இதத்தானெ கல்யாணி அண்ணாச்சி ‘நிலை’ கதைல எளுதுனா’ என்கிறான், வள்ளிநாயகம்.

‘என்னப் பெத்த ஐயா! இந்தப் பயலுக்கு ஒரு கொறயும் வரக்கூடாது. அடுத்த தேரோட்டத்துக்காவது என் பேரப்பிள்ளைகளப் பாக்க வச்சிரு’. பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, தன்னை அநாதையாய்த் தவிக்க விட்டுச் சென்ற மகனை எண்ணி ‘மாரார் ஸ்டூடியோ’ வாசலில் நின்றபடி தேருக்குள் வீற்றிருக்கும் நெல்லையப்பனை வணங்குகிறாள், முப்பிடாதியின் தாய்.

‘ஸார்! வந்துட்டேன்.’.

டிரைவர் முனுசாமியின் ஃபோன் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. இன்று சென்னை கே.கே நகரில் படப்பிடிப்பு. கிளம்புகிறேன்.

உபசாரம்

‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன். தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம். அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார். ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் திருநவேலிக்குச்ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.

‘உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்,’ என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம். இந்தச் சம்பவத்தையும் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.

திருநவேலியின் கல்யாணம், சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், அசுப காரியங்களிலும் பந்தி பரிமாறுவதற்கென்றே சில விசேஷமான மனிதர்களை அழைப்பார்கள்.

‘மறக்காம ரங்கனுக்கும், சம்முகத்துக்கும் சொல்லிருடே! எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ!’ Read More

பாபநாசத்தில் திருநவேலி . . .

papanasam

திரைப்படங்களில், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி வட்டார வழக்கைக் கேட்கும்போதெல்லாம் வருந்தியிருக்கிறேன். திருநவேலி பாஷை என்று அவர்களாக நினைத்துக் கொண்டு கோவை, மதுரை வட்டார வழக்கு பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் அதில் வரும் கதாபாத்திரம், ‘என்ன ரவுசு பண்றே?’ என்று பேசும். இவர்களுக்கு எந்த ஊருமே வெறும் லொக்கேஷன்தானா என்று மனம் வெதும்பும்.

கணேசண்ணன் படிக்கிற காலத்தில், தமிழ்த் தேர்வின்போது, ‘செல்வம்’ என்று முடியும் குறள் எழுதுக என்பதற்கு

‘அவனன்றி போனதை இவனோடு சென்றதனால்
ஒருபோதும் போதா செல்வம்’

என்று எழுதி மதிப்பெண் வாங்கியதாகச் சொல்வான். அதுபோல நம் திரைப்படங்களில் ஏதாவது ஒரு வட்டார வழக்கைப் பேசி (சமயங்களில் தெலுங்கும்) கடைசியிலோ, முதலிலோ ஒரு ‘ஏலேய்’ போட்டு அதை திருநவேலி வட்டார வழக்காக அவர்களாகவே நினைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவார்கள்.

‘ஏல, எல, எலேய், யோல்’ இப்படி திருநவேலி விளி நிறைய உண்டு. நிக்கான் (நிற்கிறான்), பாக்கான் (பார்க்கிறான்), கேக்கான் (கேட்கிறான்), சொல்லுதான் (சொல்கிறான்)- இவை எல்லாம் உச்சரிப்பு சார்ந்தவை. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியம், திருநவேலி பாஷையில் உள்ள ராகம். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநவேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.

‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய?’

என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.

நண்பர் ஜெயமோகனின் வசனத்தில், ஜீத்து ஜோஸ்ஃபின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெய்லர்:

 

ராயல் டாக்கீஸ் . . .

காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால் காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதிக்கு, இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான்.

தம்பியின் உண்மையான பெயரான கணபதிசுப்பிரமணியம் என்பது அவனது சர்ட்டிஃபிக்கேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் ஸார்வாள் சொல்வார். ‘ஒண்ணு கணவதின்னு வச்சிருக்கணும். இல்லென்னா சுப்ரமணின்னு வச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி. நண்பர்கள் மத்தியிலும் கணபதிசுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாதென்று ஆச்சிதான் ‘தம்பி’ என்று விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால் அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். ‘அதென்ன சாவி? தொறவோல்னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். ‘ஆமா! ஒலகமே சாவின்னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கெருந்துதான் வார்த்த மொளைக்கோ?’ லோகு பெரியம்மை முனகுவாள். ‘ஏட்டி! திறவுகோல்ங்கறது சுத்தமான தமிள்வார்த்த. அதச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி. என்னா?’. சண்முகப் பெரியப்பா ஏசுவார்.

லோகநாயகியும், சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால் தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும், அப்பாவும். தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை அம்மா என்றழைப்பவன், சண்முகத்தை சண்முகப்பா என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும், லோகநாயகியும், சண்முகமும்தான்.

‘இப்பதாம்ல மதுரயத் தாண்டுதான்’. தம்பியின் வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்துவிட்டு காசி லேசாகச் சிரித்துக் கொண்டான். ஏற்கனவே டிரெயின் இரண்டுமணிநேரம் தாமதம் என்னும் அறிவிப்பைக் கேட்டிருந்தான், காசி. வீட்டுக்குப் போய்விட்டு வருவானேன் என்று ஸ்டேஷனிலேயே காத்திருந்தான். தம்பி திருநெல்வேலியை விட்டுப் போய் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆச்சி இறந்ததற்குக் கூட வரவில்லை. அந்த சமயத்தில் தம்பி எந்த ஊரில் இருக்கிறான் என்றே தெரியவில்லை. காசிதான் கூடமாட நின்றுகொண்டு எல்லா வேலைகளையும் செய்தான். ‘இந்த வீட்ல நீ வேற, அவன் வேறயா? இந்தா பிடி’ என்று வெளித் தெப்பக்குளத்தில் ஈரவேட்டியுடன் நின்று கொண்டிருந்த சண்முகப் பெரியப்பா, காசியின் கைகளில் நெய்ப்பந்தத்தைக் கொடுத்தார். ‘முங்கி எந்திடே! திருநாறு விட்டுக்கோ. அப்புறமா அவன் கைல பந்தத்தக் குடுக்கலாம் சம்முவம்’ என்றார், டெய்லர் மகாலிங்கம் மாமா. ‘ஐயா அரசேன்னு வளத்த பய இல்லாம அவளக் கொண்டாந்து எரிக்கோம். அவ நெஞ்சு வேகும்ன்னா நெனைக்கெ? மூதிக்கு அப்படியாய்யா ஊரும், மனுசாளும் அத்துப் போச்சு?’ கருப்பந்துறையில் வைத்து பேச்சியாபிள்ளை தாத்தா சொல்லும் போது, காசிக்கு அழுகையுடன், தம்பியின் மேல் கோபமும் வந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. மனசு முழுக்க தம்பியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும்தான்.

ரயிலிலிருந்து இறங்கும் போது தம்பி வேறு ஆளாகத் தெரிந்தான். ஏற்றி வாரப்பட்ட தலைமுடி, பிடரி முழுக்க அடர்ந்துத் தவழ்ந்தது. தடித்த ஃபிரேமில் மூக்குக் கண்ணாடி. கையில் ஒரு பெட்டி, தோளில் ஒரு பை. அவ்வளவுதான். காசியைப் பார்த்தவுடன் லேசாக ஒரு குறுஞ்சிரிப்பு மட்டுமே தம்பியின் முகத்தில் காண முடிந்தது. கண்களில் நீர் துளிர்க்க காசி, தம்பியைக் கட்டிக் கொண்டான். ‘பையக் குடு’. வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடக்கத்தொடங்கினான். காசியின் வேகத்துக்கு தம்பியால் ஓடித்தான் வர வேண்டியிருந்தது. காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யவும் காசி சொன்னான். ‘உன்னயப் பாத்தா கல்கத்தால இருந்து வாரவன் மாரியே தெரியல’.

‘ஏம்ல?’

‘பொறவு?என்னமோ சஷ்டிக்கு திருச்செந்தூர்க்கு போயிட்டு வாரவன் மாரி ஒரு பொட்டி, பையோட வந்து எறங்குதெ!’

பதிலேதும் சொல்லாமல் சிரித்த தம்பி, ரோட்டைப் பார்த்தபடி ‘தானா மூனா ரோடே மாறிட்டெல!’ என்றான்.

பதில் சொல்வதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காசி மேற்கொண்டு ஏதும் கேட்காமல் வண்டியை ஓட்டினான். ‘நெல்லை லாட்ஜுல்லாம் மாறவே இல்ல’. மேம்பாலத்தில் போகும் போது தம்பி சொன்னான். ‘சென்ட்ரல்ல இப்பம்லாம் பளைய படம்தானா? இந்த கிரவுண்ட்ல தட்டான் புடிப்பமே! விளாமரம் நிக்கால? வாசல்ல சவ்வுமிட்டாய் வித்த ஆத்தால்லாம் இப்பம் செத்திருப்பாள்லா?’ சாஃப்டர் ஸ்கூலைத் தாண்டும் போது வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் தம்பி. பதிலேதுமே காசி சொல்லவில்லையென்றாலும், அதற்காகக் காத்திருக்காமல் அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டிருந்தான், தம்பி. ‘நல்ல வேளடே. ஆர்ச்ச விட்டு வச்சிருக்கிய. எங்க ரோட்ட அகலப்படுத்த இடிச்சுத் தள்ளியிருப்பேளோன்னு நெனச்சேன்’.
திருநெல்வேலி டவுணின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஆர்ச்சைக் கடக்கும் போது, தம்பியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. அதற்குப் பிறகு தெற்குப்புதுத் தெரு வரும் வரையிலும் தம்பி ஏதும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை.

வாசல்கதவு திறந்தே கிடந்தது. தம்பியைப் பார்த்தறியாத நாட்டுநாய் ஒன்று கட்டில் கிடந்தது. தம்பியைப் பார்த்ததும் கழுத்துச் சங்கிலி இறுக, வாஞ்சையுடன் வாலாட்டிச் சிரித்து வரவேற்றது. அதனருகில் நின்று அதன் தலையை சில நொடிகள் தடவிக் கொடுத்தான் தம்பி. கையில் பையுடன் நின்று கொண்டிருந்த காசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

‘மூதிக்கு இன்னும் நாய்க்கோட்டி போகல’.

பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சின்னப்பெண் வாசலுக்கு ஓடி வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன் ஒரு முழி முழித்து மீண்டும் வீட்டுக்குள் ஓட எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தினான், காசி.

‘ஏட்டி! இதான் தம்பி மாமா’.

கண்களை அகல விரித்துப் பார்த்த அந்தப் பெண், ‘ஆச்சி! தம்பி மாமா வந்துட்டாங்க’ என்றபடி உள்ளே ஓடினாள்.

புருவம் தூக்கிய தம்பியிடம் ‘சுந்தரி மக’ என்றான், காசி. ஒரு கணம் தம்பியின் கண்களில் சின்னதாக ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது. இதற்குள் சண்முகப் பெரியப்பாவின் மகள் சுந்தரி வாசலுக்கு வந்தாள்.

‘வாண்ணே! சும்மா இருக்கியா?’

கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். சுந்தரியின் கைகள் குளிர்ச்சியாக இருந்தது.

‘ஏம்ணே ஒன் கை சுடுது?’ என்றாள், சுந்தரி.

பின்னால் தொடர்ந்த காசி, ‘ஒங்கண்ணனுக்குக் கை மட்டுமா சுடும்?’ என்றான்.

தம்பியிடம் அதற்கும் பதிலில்லை.

‘அப்பா பொறவாசல்ல இருக்கா’ என்றாள், சுந்தரி.

பின்வாசலில் மருதாணி மரத்துக்கருகே நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், சண்முகப்பா. ‘எப்பா! தம்பியண்ணன்’ என்ற சுந்தரியின் குரல் கேட்டு பேப்பரை விலக்கிய சண்முகப்பாவின் தொடைகளைத் தொட்டபடி அவர் காலருகில் அமர்ந்தான், தம்பி. இருவர் தொண்டையும் சட்டென்று வறண்டது. பொங்கிய கண்ணீரை மறைக்கும் விதமாக இருமியபடி, ‘ஏட்டி! தொண்ட பொகயுதுல்லா. தண்ணி கேட்டாத்தான் கொண்டுட்டு வருவியோ?’ என்று சுந்தரியைப் பார்த்து ஏசினார். ‘நீ சாப்பிட்டியா?’. எதிரே படிக்கட்டில் உட்கார்ந்து கொண்ட காசியைப் பார்த்துக் கேட்டார். இதற்குள் தன் ஆச்சி லோகநாயகியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி பின்வாசலுக்கு வந்து சேர்ந்தாள், சுந்தரியின் மகள்.

வந்ததும், வராததுமாக தன் கணவரின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த தம்பியின் அருகில் வந்து குனிந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் லோகநாயகி.

‘வளி தெரிஞ்சுட்டோல ஒனக்கு? அம்ம இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தியோ? எறப்பாளி நாயே. என் சீவனப் புடிச்சுக்கிட்டாக்கும் இத்தன வருசம் இருந்தேன்’.

உடல் நடுங்க தம்பியின் அருகில் தரையில் கையை ஊன்றி உட்கார்ந்தவள், ‘என்னப் பெத்த ஐயா’ என்று தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறலானாள். இனி மறைக்க ஏதுமில்லை என்பது போல் சண்முகப்பாவும் பெருங்குரல் எடுத்து அழுதார். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த சுந்தரியைத் தடுத்தான், காசி. ‘ஒங்கப்பாக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி தவிக்காது’.

royal talkies

ooOoo

மறுநாள் காலை தூங்கி தம்பி எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. மச்சு ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தட்டட்டியில் லோகம்மை கூழ்வற்றல் ஊற்றிக் கொண்டிருந்தாள். உடன் சுந்தரியும், அவள் மகளும்.

‘நீ இன்னும் இத விடலயா?’

ஜன்னலுக்குள்ளிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த லோகம்மை ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். காலையிலேயே குளித்திருந்த முகத்தில் துளிர்த்திருந்த புது வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

‘ஏன் கேக்க மாட்டே? நாங்கல்லாம் கேட்டா சலிச்சுக்கிடுவா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போகும்போதும் மணி ஐயர் கடைலதான் வாங்கிக் குடுத்தனுப்புவா. இப்பம் மகன் வந்திருக்காம்லா! அதான் இந்தத் தாளிப்பு’.

சுந்தரியின் செல்லக் கோபத்தை சிரிப்பால் கடந்து சென்றபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தாள், லோகம்மை. இதற்குள் கீழிருந்து சண்முகப்பாவின் குரல் கேட்டது.

‘ஏட்டி ஒங்கண்ணன் வாரானா இல்லயா? அவனுக்காகத்தான் இன்னும் ரெண்டாம் காப்பி குடிக்காம இருக்கேன்’.

சண்முகப்பாவின் தலைமுடி நரைத்ததைப் போல, லோகம்மையின் முகமும், உடலும் தளர்ந்ததைப் போல, திருநவேலியின் தோற்றத்திலும் சுருக்கங்களையும், மாற்றங்களையும் கண்டான், தம்பி. சிறுவயதில் சைக்கிளில் சுற்றிய பகுதிகளில் காசியுடன் நடந்தே சென்றான். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்து வாசலில் வீசும் காற்றை நின்று வாங்கிக் கொண்டான்.

‘இந்த காத்து மாறல. வாட கூட அப்படியேதான் அடிக்கி’.

பக்தியே இல்லாமல் கோயிலைச் சுற்றுகிறான் என்பது காசிக்குப் புரிந்தது. நடையில் அப்படி ஓர் ஆவேசம். சந்நிதிகளில் திருநீறு, குங்குமம் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளவில்லை. காந்திமதி யானையிடம் மட்டும் சிறிது நேரம் செலவழித்தான். கோயிலைவிட்டு வெளியே வந்த பிறகு சாந்தமானான். தேரடியைத் திரும்பிப் பார்க்கும் போது, காசி பதற்றமடைந்தான்.

‘ராயல் தியேட்டர் பக்கம் போக வேண்டாமா? அப்படியே ஆரெம்கேவி, லாலா சத்திரமுக்கு, தொண்டர் சன்னதில்லாம் போலாம்லா?’

‘ஏன்? தேரடிப்பக்கம் அவங்க யாரும் இருக்காங்களா? அதான் எல்லாரும் போயாச்சே! அப்புறம் என்ன? சும்மா ஒரு நடை நடந்துட்டு போவோம்.’

இப்படித்தான் தேரடிப் பக்கமே கிடையாகக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு காசியும், தம்பியும் வருவார்கள். ஜோதீஸ் காப்பிக்கடையிலிருந்துப் பார்த்தால் பவானியின் வீடு தெரியும்.

பாளையங்கோட்டையில் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக இருக்கும் பவானியின் அப்பா, விடிந்து போனால், அடைந்துதான் வருவார். வீட்டுக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும், மகளும் ராயல் தியேட்டரில்தான் சினிமா பார்ப்பார்கள். அநேகமாக கீழரதவீதி, வடக்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, சுவாமி சன்னதிகளில் வசிப்பவர்கள் வாராவாரம் ராயல் தியேட்டரில் சினிமா பார்ப்பது வழக்கம்.

’தில்லானா மோகனாம்பாள்’ பாக்காத படமாவே? அதான் சிவாஜிக்கு ஒரு மட்டம், பாலையாவுக்கு ஒரு மட்டம், நாகேசுக்கு ஒரு மட்டம், பத்மினிக்கு அஞ்சாறு மட்டம்னு வளச்சு வளச்சுப் பாத்தாச்சுல்லா! என்னமோ புதுப்படம் மாரி செகண்ட் ஷோக்குப் போவோமான்னுக் கேக்கேரு?’

‘வே! ராயல்ல போட்டிருக்கான். பாக்காம இருக்க முடியுமா? வீட்ல பாத்த மாரில்லா இருக்கும். சும்மா சளம்பாதீரும். நலந்தானான்னு நம்மள பாத்து கேக்கற மாரியேல்லா, புருவத்த வளச்சுப் பாடுவா. வாரும், போவோம்’. பட்டுப்பிள்ளை அண்ணாச்சி சொல்வார்.

மாலைநேரக் காட்சிக்கு பவானியும், அவள் தாயும் கிளம்பும்போது தம்பி படபடப்புடன் காத்திருப்பான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காசியை இழுத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்குச் செல்வான். மற்ற நேரங்களில் சோஃபா டிக்கெட்டில் படம் பார்ப்பவன், பவானி வந்தால் மட்டும் காசியை விட்டு பெஞ்ச் டிக்கெட்தான் எடுக்கச் சொல்லுவான். காரணம், பவானி தன் தாயுடன் பெஞ்ச் டிக்கெட்டில்தான் படம் பார்ப்பாள். ’அவ ஒருபக்கம் உக்காந்திருக்கோம். நாம எங்கயோ உக்காந்திருக்கோம். இதுல என்ன கெடைக்கோ, தெரியல. கேட்டா நீயும், அவளும் ஒண்ணா படம் பாத்ததா சொல்லுவே!’

இப்படி ஒன்றிரண்டு அல்ல. அநேகமாக எல்லா வார இறுதிகளிலும் ராயல் தியேட்டரில் பவானியுடன் படம் பார்ப்பான், தம்பி. இதுபோக தினமுமவள் டியூஷனுக்குக் கிளம்பும்வரைக்கும் காத்திருந்து அவளுடனேயே செல்வான். மீனாட்சிபுரத்தில் எஸ்.ஆர்.கே ஸார்வாளிடம்தான் பவானியும், தம்பியும், காசியும் மேத்ஸ் டியூஷன் படித்தார்கள். டியூஷன் தொடங்கும் முன், முடிந்த பின் இரண்டொரு வார்த்தைகள் தம்பியும், பவானியும் பேசிக் கொள்வார்கள்.

‘களுத்துல உத்திராச்சக் கொட்ட எதுக்கு? அத களட்டு. கூட படிக்கிற பிள்ளைள்லாம் அதச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கி’.

‘எங்காச்சி போட்டு விட்டது. களட்டுனா ரொம்ப வருத்தப்படுவா. அவட்ட வேணா சொல்லிட்டு சீக்கிரமே கெளட்டிருதென்’.

‘வேண்டாம்பா. என்னமாது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப்போது’.

ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகத்தான் செய்தது. அத்தனை புத்திசாலியான, படிப்பில் சிறந்து விளங்கிய பெண் ஏன் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் என்பது யாருக்குமே புரியாமல் போனது. தச்சநல்லூர் கணேசன்தான் அந்தக் கேமராவைக் கொண்டு வந்தான்.

‘ஃபாரின் மக்கா. எங்க அத்தான்குள்ளது’.

இரண்டு ரோல்களை எடுத்துத் தள்ளினார்கள். தனியாக எடுத்துக் கொள்ள சம்மதிக்காத பவானி, குரூப் ஃபோட்டோவில் மட்டும் வந்து நின்று கொண்டாள். முன்வரிசையில் பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் பையன்கள் நின்றபடி படம் எடுத்துக் கொண்டார்கள். சரியாக பவானிக்குப் பின்னால் தம்பி. பிரிண்ட் போட்டு காப்பி வாங்கிக் கொள்ள பவானியின் தாய் பணம் தர மறுத்தாள்.

‘டியூஷன் படிக்கப் போன எடத்துல என்னத்துக்குட்டி போட்டொவும், கீட்டொவும்? மாசாமாசம் பீஸுக்கே ஒங்கப்பா மூக்கால அளுதுக்கிட்டெ குடுக்காக’.

தம்பிதான் பவானிக்கும் சேர்த்து பிரிண்ட் போட்டு ஒரு காப்பியை அவள் கையில் கொடுத்தான். வற்புறுத்திதான் திணிக்க வேண்டியிருந்தது.

‘எங்கம்மை ஏசுவா.’

‘நீ என்னத்துக்குக் காமிக்கெங்கென்?’

இத்தனைக்கும் நோட்டுப்புத்தகத்தில் மறைத்துதான் வைத்திருந்தாள். அப்படியே வைத்திருந்தால் கூட ஒன்றும் பிரச்சனை ஆகியிருக்காது. ஃபோட்டோவில் தானும், தம்பியும் இருக்கும் பகுதியை மட்டும் கத்தரித்து, தனியாக வைத்திருந்தது, பவானியின் தாய் கண்களில் சிக்கியது. படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கு பயந்த பவானியின் தாய் உக்கிரமாகிப் போனாள். ஆத்திரமும், கோபமுமாக வசவைத் தொடங்கியவளிடம் ஒருகட்டத்தில் பவானி எதிர்க்குரல் எழுப்ப, அவமானத்தில் அடிக்கத் தொடங்கி, பின் அழுகையும் சேர்ந்து கொண்டு, மனம் பிசகி, கையில் மண்ணெண்ணெய்கேனைத் தூக்கினாள்.

‘ஒங்கப்பன் வந்து என்னைக் கொல்றதுக்குள்ள நான் கொளுத்திக்கிட்டுப் போயிருதேன்’.

பாய்ந்துப் பிடுங்கிய பவானி தாயின் கால்களில் விழுந்து, ‘நீ பயப்படுத மாரி என்னமும் நடக்காதும்மா. என்னய நம்பு’ என்று அழ, ஓரளவு நிலைமை சமாதானமானது. காலையில் பால் ஊற்ற வருகிற கோவிந்தன் சொல்லித்தான் தம்பியின் வீட்டுக்கு விவரம் தெரிய வந்தது.

’கம்பவுண்டரு ராயல்ல செகண்ட் சோ முடிஞ்சு வந்திருக்காரு. உள்ள இருந்து பொகஞ்சிருக்கு. அதுக்குள்ள சாமிசன்னதி பட்டர்மாருங்க எல்லாரும் ஓடி வந்து கதவ ஒடச்சிருக்காங்க. ரெண்டு பேரும் கரிக்கட்டயாக் கெடந்திருக்காங்க. யாரு அம்மை, யாரு மகன்னே தெரியலயாம்’.

‘யாருடே அது?’ ஜோதீஸ் காபிக்கடை ஆனந்தம் மாமா கேட்டார். காசியுடன் வந்த தம்பி, அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, ‘என்ன மாமா? சும்மா இருக்கேளா?’ என்று கேட்கவும், ‘ஏ தம்பில்லா! எப்பிடி இருக்கே மாப்ளே’. வந்து அணைத்துக் கொண்டார். ‘எத்தன வருசம் ஆச்சு மாப்ளே ஒன்னப் பாத்து. காசி கூட முன்னமாரி வரமாட்டங்கான். காப்பி குடிக்கியா?’

தேரடிப் பக்கம் பவானி வீடு இருந்த இடத்தில் இப்போது வேறேதோ கடை ஒன்று நின்றது. சலனமேயில்லாமல் அந்தப் புதியக் கட்டடத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான், தம்பி.

ஆண்டிநாடார் கடையைத் தாண்டும் வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராயல் தியேட்டர் பக்கம் நிமிர்ந்துப் பார்த்துக் குழம்பியவன், காசியிடம் ‘எல! ராயல் டாக்கீஸ் இப்பம் இல்லயா?’ என்று கேட்டான்.

தம்பி இப்படித்தான். தியேட்டர் என்று அவன் வாயில் வராது. டாக்கீஸ்தான். ‘இந்தக் காலத்துப்பிள்ளேளு மாரியா அவன் பேசுதான். எல்லாம் ஒன் வளப்பு’. சண்முகப்பா அவர் அம்மையைப் பார்த்து சொல்லுவார். ‘எல! நானாது டாக்கீஸுங்கென். எங்கம்மைல்லாம் கொட்டகைன்னுல்லா சொல்லுவா’. பதிலுக்கு ஆச்சி சொல்லுவாள்.

இரண்டொரு நாட்களில் தம்பி கல்கத்தாவுக்கேக் கிளம்புகிறான் என்கிற செய்தி வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

‘கல்யாணமும் பண்ணிக்கிடலங்கான். பளய மாரி இல்லன்னாலும் சின்ன யூனிட் போட்டு மில்லும் ஓடிக்கிட்டுதான இருக்கு! அத கவனிச்சுக்கிட்டு இங்கன இருக்கலாம்லா! அப்பிடியே ஒரு தாலியும் கட்ட வச்சிரலாம். நான் இன்னும் எத்தன நாளைக்கு இருக்கப் போறென்! நீயாது கொஞ்சம் சொல்லுடே காசி’.

சண்முகப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே காசிக்குத் தெரியவில்லை. தம்பியிடம் அவன் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கேட்கும் எதிர்க்கேள்விக்கான அர்த்தம் காசிக்குப் புரிந்தது. சண்முகப் பெரியப்பாவுக்கோ, லோகம்மைக்கோ அது புரிய வாய்ப்பில்லை. முகத்தில் உணர்ச்சியே இல்லாமல், அதே சமயம் சற்றே கலங்கிய கண்களுடன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த தம்பி, காசியின் முகம் பார்க்காமல் கேட்டான்.

‘ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடியுமால?’

நன்றி- ஆனந்த விகடன்

மன்னியுங்கள் லாலா . . .

கஜேந்திரசிங் என்ற கஜேந்திரன், திருநவேலி டாக்ஸி ஸ்டாண்டின் டிரைவர்களுள் ஒருவர். ‘லாலா’ என்றால் நெல்லைவாசிகளுக்குத் தெரியும். கஜேந்திரனின் பூர்வீகம், வடமாநிலம். ‘லாலா’ என்றழைக்கப்படுவதற்கான காரணம் அதுவே. பகுதி நேர ஓட்டுநராக எங்கள் வீட்டுக் காரையும் ஓட்டியிருக்கிறார். சிறு வயது முதலே தெரியுமென்பதால், ‘என்னடே’ என்பதான தோரணையுடன்தான் என்னைப் பார்ப்பார். வடநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகச் சிறு வயதிலேயே திருநவேலியில் குடியேறிவிட்டதால், ‘லாலா’ ஒரு சுத்தமான திருநவேலிக்காரர். உச்சினிமாகாளி கோயில் சாமி கொண்டாடியும் கூட. ‘படித்துறை’ திரைப்படத்தில் அப்படி ‘சாமி கொண்டாடி’ தேவைப்பட்டார். லாலாவைத் தேர்ந்தெடுத்தோம். தேர்வின் போது வரைக்கும் அதே பழைய ‘என்னடே’ தோரணைப்பார்வை. தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அநியாயத்துக்குப் பணிவாக நடந்து கொண்டார். ஆனாலும் மனதுக்குள் எங்கோ ஓர் ஓரத்தில், ‘நம்ம வயசென்ன! அனுபவமென்ன! நமக்குத் தெரியாதது இந்த உலகத்துல இருக்கா, என்ன? சின்னப் பயலுவள்லாம் நம்மளுக்குச் சொல்லிக் குடுக்கானுவொ!’ என்பது ஒளிந்தே இருந்தது. அதனால் படப்பிடிப்பு சமயத்தில் நாம் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்.

ஒத்துக் கொண்டபடி படப்பிடிப்புக்கு வராத நாயகி, ஊருக்குள் எங்கு கேமராவைப் பார்த்தாலும் Seize பண்ணுங்கள் என்கிற கமிஷனரின் உத்தரவு, இன்னும் நான் என்றைக்குமே சொல்ல விரும்பாத பல இடைஞ்சல்களுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைய படங்கள் போல டிஜிட்டலில் அல்லாமல் ஃபிலிமில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ‘லாலா’ சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் டேக் மேல் டேக்காக வாங்கிக் கொண்டிருக்கிறார். இடப்பற்றாக்குறை காரணமாக, மானிட்டரை வெளியே வைத்து, உள்ளே நடிகர்களை மட்டும் வைத்து படமெடுக்க வேண்டிய சூழல். உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவராக சென்று பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தும் அதே பிடிவாத மனதினால் தொடர்ந்து தவறாகவே நடித்துக் கொண்டிருந்தார். கடைசியாக நான் போய் அமைதியாகத் தோளை அணைத்து சொல்லிப் பார்த்தேன். அது ஒரு முடி திருத்தும் நிலையம். கடையின் உரிமையாளர் ‘சிக்கிரம் முடிங்க’ என்று அவசரப்படுத்துகிறார். ஒளிப்பதிவாளர் தம்பி கோபி ஜெகதீஸ்வரன் ‘லைட் போகுது’ என்கிற நியாயமான கவலையைச் சொல்கிறான். ஆனால் ‘லாலா’ தன் தவறைத் திருத்திக் கொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட நேர்ந்தது.

படப்பிடிப்பு முடிந்த பின் கடுமையான மன உளைச்சல். ‘அவரா நம்மிடம் நடிக்க வாய்ப்பு கேட்டார்? நாம்தானே அவரை வரவழைத்து நடிக்கச் செய்தோம்! இப்படி வயதில் மூத்த ஒரு பெரிய மனிதரைக் கடிந்து விட்டோமே!’ என்கிற குற்ற உணர்ச்சியில் இருந்தேன். என் தோளருகில் ஒரு குரல்.

‘சமோசா சூடா இருக்கு. சாப்பிடறதுக்குள்ள போயி காப்பி கொண்டு வாரேன்’ என்று கைகளில் தட்டை ஏந்தியபடி என்னிடம் நீட்டி, வயதாலும், மனதாலும் உயர்ந்த அந்தப் பெரியவர் என்னை மேலும் சிறியவனாக்கினார்.

பிறகு இந்த மூன்றாண்டுகளில் அடிக்கடி ஃபோன் பண்ணுவார். குரலில் அத்தனை பணிவும், மரியாதையும்.

‘லாலா பேசுதென்யா’.

‘சும்மா இருக்கேளா?’

‘சௌரியத்துக்கு என்ன கொறச்சல்? ஊருப்பக்கம் ஆளயெ காங்கலயே! அதான் போனப் போட்டென்’.

‘அடுத்த மாசம் வாரென்’.

சரியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். சட்டைப்பையில் பணத்தைத் திணிப்பேன்.

‘நான் பிரியமால்லா பாக்க வாரேன். இது எதுக்கு?’ என்பார். ஆனால் மறுக்க மாட்டார். எனக்கு தெரியும், அவரது வறுமை.

சென்ற மாதம் ஃபோன் பண்ணினார்.

‘என்ன லாலா! எப்பிடி இருக்கியெ?’

‘சும்மா இருக்கென். ஆளயே காங்கலயெ! படத்தப் பத்திக் கேட்டாலும் இந்தா அந்தாங்கிய’ என்றார்.

‘படத்தப் பத்திக் கேக்காதிய. வராது. வரவும் வேண்டாம். ஆனா நான் அடுத்த மாசம் வாரென்’ என்றேன்.

‘எந்த வண்டி? டேசனுக்கு வந்திருதேன்’ என்றார்.

நாளை கன்னியாகுமரி எக்ஸ்பிரெஸ்ஸில் நான் திருநவேலியில் சென்று இறங்கும் போது லாலா இருக்க மாட்டாராம். இப்போதுதான் ஃபோன் வந்தது.