தூங்காவனமும், தீபாவளியும் . . .

papanasamபோன வருடம் தீபாவளியன்று கேரளத்தின் தொடுபுழாவில் இருந்தேன். ‘பாபநாசம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் தீபாவளி மறந்து போனது. இந்த வருடம் தீபாவளிக்கு நான் வசனம் எழுதியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகிறது. பதின்வயது தீபாவளி சந்தோஷங்களுக்குப் பிறகு தீபாவளி உட்பட எந்தப் பண்டிகையிலும் நாட்டமில்லை. அவை குறித்த விசேஷமான நினைவுகளுமில்லை. ஆனால் போன வருடத்து தீபாவளியையும், இந்த வருடத் தீபாவளியையும் மறக்க முடியாதுதான்.

தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதையை, படப்பிடிப்புக்கு முன்பாகவே எல்லா நடிக, நடிகையரையும் அமர வைத்து, அவர்கள் ஏற்று நடிக்க இருக்கிற கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் பேச வேண்டும், நடக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக திரைக்கதையை வாசித்துக் காண்பித்து, பின் படப்பிடிப்புக்குக் கிளம்பிய படம், ‘தூங்காவனம்’. அதனாலேயே எந்தவிதமான குழப்பமுமில்லாமல் படப்பிடிப்பு அத்தனை சந்தோஷமாக நடந்தது. கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களிடம் திரைக்கலை பயின்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, இந்தியாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சானு வர்கீஸ், முறையான இசைப் பயிற்சியும், அசாத்திய கற்பனை வளமும் கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், மிகச் சிறந்த படத்தொகுப்பாளர் ஷான் முகம்மது என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான திரைப்படம், ‘தூங்காவனம்’. ஒரு ஆக்‌ஷன் திரில்லருக்கு மிகக் குறைவான வசனங்களே தேவைப்படும். அந்தக் குறைவான வசனங்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார் ‘அண்ணாச்சி’ கமல்ஹாசன்.

‘இது நான் எழுதக் கூடியதா எனக்குத் தோணலியே!’

‘உங்களுக்கு எதுவும் எழுத வரும். அது உங்களை விட எனக்குத் தெரியும்’ என்று என் வாயை அடைத்தார்.

தனது மூத்த மாணவருடன், இளைய மாணவன் இணைந்து பணியாற்றிய திரைப்படத்தைப் பார்க்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இல்லாமலில்லை.

thoongavanam

பாபநாசத்தில் திருநவேலி . . .

papanasam

திரைப்படங்களில், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி வட்டார வழக்கைக் கேட்கும்போதெல்லாம் வருந்தியிருக்கிறேன். திருநவேலி பாஷை என்று அவர்களாக நினைத்துக் கொண்டு கோவை, மதுரை வட்டார வழக்கு பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் அதில் வரும் கதாபாத்திரம், ‘என்ன ரவுசு பண்றே?’ என்று பேசும். இவர்களுக்கு எந்த ஊருமே வெறும் லொக்கேஷன்தானா என்று மனம் வெதும்பும்.

கணேசண்ணன் படிக்கிற காலத்தில், தமிழ்த் தேர்வின்போது, ‘செல்வம்’ என்று முடியும் குறள் எழுதுக என்பதற்கு

‘அவனன்றி போனதை இவனோடு சென்றதனால்
ஒருபோதும் போதா செல்வம்’

என்று எழுதி மதிப்பெண் வாங்கியதாகச் சொல்வான். அதுபோல நம் திரைப்படங்களில் ஏதாவது ஒரு வட்டார வழக்கைப் பேசி (சமயங்களில் தெலுங்கும்) கடைசியிலோ, முதலிலோ ஒரு ‘ஏலேய்’ போட்டு அதை திருநவேலி வட்டார வழக்காக அவர்களாகவே நினைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவார்கள்.

‘ஏல, எல, எலேய், யோல்’ இப்படி திருநவேலி விளி நிறைய உண்டு. நிக்கான் (நிற்கிறான்), பாக்கான் (பார்க்கிறான்), கேக்கான் (கேட்கிறான்), சொல்லுதான் (சொல்கிறான்)- இவை எல்லாம் உச்சரிப்பு சார்ந்தவை. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியம், திருநவேலி பாஷையில் உள்ள ராகம். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநவேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.

‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய?’

என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.

நண்பர் ஜெயமோகனின் வசனத்தில், ஜீத்து ஜோஸ்ஃபின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெய்லர்: