வாசம்

கிறிஸ்டி டீச்சர் வீட்டுக்கு டியூஷனுக்குப் போகும் போதெல்லாம் டெட்டால் வாசமடிக்கும். டீச்சரின் தகப்பனார் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்தார். அதனால்தான் டெட்டால் வாசம். இத்தனைக்கும் என் கண்ணுக்கு டெட்டாலோ, வேறேதும் மருந்துகளோ தட்டுப்பட்டதேயில்லை. ராதாகிருஷ்ணன் டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்குக் காட்டப் போகும் போது அங்கு கிறிஸ்டி டீச்சர் வீட்டுவாசமடித்தது. அப்போதுதான் அது ஆஸ்பத்திரி வாசம் என்று எனக்கு பிடிபட ஆரம்பித்தது. ஹைஸ்கூலுக்குப் போன பிறகு நான் கிறிஸ்டி டீச்சரைப் பார்க்கவேயில்லை, இன்றுவரை. ஆனால் ஒவ்வொரு ஆஸ்பத்திரி வாசத்திலும் காட்டன் புடவையணிந்த, ஒல்லியான, எப்போதும் பவுடர் பூசிய கிறிஸ்டி டீச்சரின் முகம் என் நினைவுக்கு வந்து போகிறது.

நண்பன் குஞ்சுவின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறது, இருட்டு லாலாக்கடை மாமாவின் வீடு. அவர் வீட்டுக்கு அருகேயே இன்னொரு வீட்டில்தான் இருட்டுக் கடை அல்வா தயாராகிறது. குஞ்சுவின் வீட்டைத் தாண்டும் போதே நெய்கலந்த ஒரு இனிப்பு வாசம் சுற்றிச் சுற்றி வரும். பழக்கப்பட்டு விட்டதால் அங்குள்ள ஜனங்கள் அந்த வாசத்தை சட்டை பண்ணுவதில்லை. அந்த வாசத்தைக் கடந்து செல்பவர்களில் யாரேனும் ‘ஏ எப்பா, என்னமா மணக்கு’ என்று மூச்சை இழுத்துச் சொல்லி வாசம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்து சென்றார்களானால் அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்று எங்களுக்கு தெரிந்துவிடும். இருட்டு லாலா மாமாவிடம் ஒரு நாளும் அல்வா வாசமடித்து நாங்கள் பார்த்ததில்லை.

வேறொரு லாலாக்கடையில் சரக்கு போடும் நண்பன் சந்திரஹாஸன் தூரத்தில் வரும்போதே டால்டா வாசம் நம் மூக்கை வந்து முட்டும். ‘எல, கட்டையன் வாரான் போலுக்கு’ என்பான் குஞ்சு. இத்தனைக்கும் சந்திரஹாஸன் வேலை முடிந்து வீட்டுக்குப் போய் நன்றாகக் குளித்து முழுகி வேறு உடை அணிந்துதான் வருவான். டால்டா வாசம் அவன் உடம்புடனே தங்கிவிட்டது. ‘எல, இவன் என்னத்தெ குளிச்சாலும் இந்த டால்டா வீச்சம் போக மாட்டக்கெ’. அவன் காதுக்குக் கேட்டால் கஷ்டப்படுவான் என்பதால் நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக் கொள்வோம்.

சுருட்டு வாசத்தை எங்களுக்கு முதன்முதலில் காண்பித்தது சண்முகம் பிள்ளை. பேப்பர் போடும் சண்முகம் பிள்ளை நடந்தே திருநெல்வேலியைச் சுற்றி வருபவர். திருநெல்வேலியின் எல்லா தெருக்களிலும் அவரை பார்க்கலாம். மடித்து கட்டிய வேட்டியும், மேல் துண்டும் அணிந்திருப்பார். நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருக்கும் பேப்பர், புத்தகங்கள். அவர் மார்போடு மார்பாக எங்களின் நாயகர்களான இரும்புக்கை மாயாவி, ரிப் கிர்பி, டெஸ்மாண்ட், மந்திரவாதி மாண்ட்ரேக், லொதார், சுட்டிக் குரங்கு கபிஷ், வேட்டைக்காரன் மாத்தையா என எல்லோரும் சாய்ந்திருப்பர். சண்முகம் பிள்ளையின் வாயில் எப்போதும் சுருட்டு புகைந்து கொண்டிருக்கும். அதை பாதியைச் சவைத்துத் தின்றிருப்பார். பக்கத்தில் வந்தால் நாற்றம் முகம் சுளிக்க வைக்கும்.

‘அண்ணாச்சி, இந்த நாத்தத்தை எப்படி குடிக்கியெ? சை . . .’

மூக்கைப் பொத்திக் கொண்டு கேட்போம்.

‘நாத்தம் ஒங்களுக்குத்தானடே!’

சுருட்டின் நுனியைச் சவைத்துக் கொண்டே சொல்வார்.

வாழ்க்கையில் காபி குடித்து பழக்கமில்லாத எனக்கு காபி வாசமென்றால் அது ஆறுமுகச் சித்தப்பாதான். நரசுஸ் காபிக்கடையின் மேனேஜராக நீண்ட நாட்கள் வேலை பார்த்த ஆறுமுகம் சித்தப்பாவை நாங்கள் அழைப்பதே ‘நரசுஸ் சித்தப்பா’ என்றுதான். அந்த காலத்தில் நெல்லையில் புகழ் பெற்ற நாடக நடிகர். கலாட்டா கல்யாணம் படத்து சிவாஜி சாயலில் இருப்பார். பெரும்பாலும் வேட்டி சட்டைதான் உடையென்றாலும் பேண்ட் ஷர்ட்டும் அணிவதுண்டு. பெயருக்கேற்ப சித்தப்பாவின் வேட்டி சட்டையெங்கும் காபி மணக்கும். அதுவும் நரசுஸ் காபி. ‘சித்தப்பாவை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு ஒரு தம்ளர்ல சூடா வெந்நி குடிச்சாலும் காபி குடிச்சாப்புல இருக்கும்லா’. நைஸாகச் சீண்டுவான் கணேசண்ணன். ‘ஆனா ஒன்கிட்ட வந்தாலே கிரகப்பிரவேசத்துக்குப் போன மாதிரிலாடே இருக்கு’ என்பார் நரசுஸ் சித்தப்பா. கணேசண்ணன் நன்றாகப் படித்து ஏதேதோ வேலை பார்த்து இப்போது வீடுவீடாக வெள்ளையடித்து வருகிறான். சுண்ணாம்பு, பெயிண்ட் என கலந்து கட்டி எப்போதும் ஒரு புது வீட்டுவாசம் அவன் மீது அடிக்கும்.

கோடை விடுமுறைக்கு ஆழ்வார்குறிச்சியில் அம்மையின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நெல் அவித்துக் கொண்டிருப்பார்கள். வெயிலோடு இந்த புழுங்கல் வாடையும் சேர்ந்து கொண்டு ஒருவித கதகதப்பான மணம் வீசும். இப்போது அங்கு நெல்லெல்லாம் அவிப்பதில்லை. ஆனால் அந்த வாசம் மட்டும் அந்த வீட்டிலேயே தங்கிவிட்டதாகத்தான் தெரிகிறது. கல்யாண வீடுகளின் ஆக்குப்புரைகளில் வீசும் சோற்று வாசமும், குழம்புக் கொதியின் வாசமும் எனக்கு ஏனோ நெல் அவிக்கும் வாசத்தோடு சேர்ந்து ஆழ்வார்குறிச்சியின் ஞாபகத்தை ஏற்படுத்தும்.

நண்பன் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் சாம்பிராணி வாசமடிக்கும். அவனது ஆச்சிக்கு சாம்பிராணி வாசமில்லையென்றால் வீட்டில் இருக்கவே பிடிக்காது என்பார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் ஏதோ ஒரு மூலையில் கொளுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாம்பிராணியின் புகை வீடு முழுக்க தவழ்ந்து வரும். இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். வீட்டின் முகத்தைத் திருத்தி உள்ளேயும் ஏதேதோ வாஸ்து மாற்றங்கள் செய்து பழமையை இழந்து அந்த வீடு அதே இடத்தில் வேறொரு வீடாய் நின்றுகொண்டிருக்கிறது. உள்ளே சாம்பிராணி வாசம் அடிக்கிறதா என்று போய் பார்க்கவில்லை.

திருநெல்வேலியில் அப்போதெல்லாம் கையிலுள்ள டேப்பைத் தட்டி பாடியபடியே ஒரு சாய்பு வருவார். நீண்ட தாடியுடன் அநேகமாக பச்சை நிற நீள அங்கியும், கூம்புவடிவக் குல்லாவும் அணிந்து கொண்டு வீடு வீடாக வந்து வாசலில் நின்று பாடுவார். காசு கொடுத்தவுடன் தன் தோள்ப்பையிலிருக்கும் விதவிதமான குச்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து சிறுவர்களுக்குக் கண்மை வரைந்து விட்டு செல்வார். நெருக்கமாக அவரிடம் கண்மை வரைவதற்கு கண்ணைக் காட்டிக் கொண்டு நிற்கும் போது ஒரு வாசமடிக்கும். அப்போது அது என்ன வாசமென்று தெரியவில்லை. ‘கண்மைசாய்பு’ வாசம் என்றுதான் அதற்கு பெயர் வைத்திருந்தோம். பின்னர் வெகுகாலத்துக்குப் பின் சர்வோதய சங்கத்தில் ஜவ்வாது வாங்கியபோதுதான் ‘கண்மைசாய்பு’ வாசத்தின் உண்மையான பெயர் தெரிய வந்தது.

குட்டிக்குரா பவுடரை இப்போது நான் எங்குமே பார்க்கவில்லை. சின்ன வயதில் அந்தப் பவுடரின் வாசத்துடனேயேதான் வளர்ந்தேன். ஸ்டேட் பேங்கில் வேலை பார்க்கும் எனது பெரியண்ணன் குட்டிக்குரா பவுடர்தான் போடுவான். எல்லோரையும் போல முகத்துக்கு மட்டுமல்ல. முகம், கழுத்து, கை, கால் என குட்டிகுராவில் குளித்து எழுவான். அவன் பேங்க் முடிந்து தெரு முக்கு திரும்பும் போதே ‘பெரியண்ணன் வாரான்’ என்று சொல்லிக் கொள்வோம். வயதாக ஆக அவனது முடி முழுதும் கொட்டிப் போக பிறகு குட்டிக்குரா அவனது தலையிலும் இடம் பிடித்து விட்டது. அண்ணனின் புண்ணியத்தில் இத்தனை ஆண்டுகளில் இப்போது நினைத்தாலும் குட்டிக்குரா பவுடரின் வாசத்தை என்னால் உணர முடிகிறது.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று என் வீட்டுக்கு வந்த உதவி இயக்குனர் தியாகு ‘ஸார், கீழே யார் வீட்டிலயோ இன்னைக்கு மீன் கொழம்பு’ என்றான். குஞ்சுவும் இப்படித்தான். யார் வீட்டில் உப்புமா கிண்டினாலும் தெருவில் நடந்து போகும் போதே சொல்லிவிடுவான். இதைவிட கொடுமை, எங்காவது கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தாலே அவன் மூக்கு கண்டுபிடித்துவிடும். அந்த விதத்தில் அவன் ஒரு உசத்தியான நாய். தாமிரபரணியில் குளிக்கும் போது யார் யார் என்னென்ன சோப் போடுகிறார்கள் என்பதை பார்க்காமலேயே சொல்லும் திறன் அவன் மூக்குக்கு உண்டு. மீனாட்சி ஒரு படி மேல். ‘சித்தப்பா, அந்த அக்கா தலைக்கு வேப்பெண்ணெ தேச்சிருக்கா’ என்பான். தாமிரபரணியை நினைவு கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், லை·பாய் சோப் வாசத்தோடுதான் தாமிரபரணி என் கண்முன் ஓடுகிறது. கூடவே கோபால் பல்பொடி வாசமும். மேலுக்கும், வேட்டிக்கும் லை·பாய் சோப்பையே பயன்படுத்தும் மனிதர்களை நான் அதிகம் தாமிரபரணியில் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டில் கிறிஸ்டி டீச்சரைப் பார்த்ததாக குஞ்சு சொன்னான். முன்னை விட இப்போது டீச்சர் குண்டாகியிருப்பதாகவும், உடன் வளர்ந்த இரண்டு பையன்கள் இருந்தனர் என்றும் சொன்னான். தன்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லையென்பதால் தான் போய் அவர்களிடம் பேசவில்லை என்றான். ‘நீ எப்பவும் சொல்லுவியே, ஆஸ்பத்திரி வாட. அது அவங்ககிட்டெ இல்லயே’ என்ற குஞ்சுவிடம், ‘அப்படின்னா அது கிறிஸ்டி டீச்சர் இல்ல’ என்றேன்.

[email protected]

வலி

இரண்டு தினங்களுக்கு முன் காலை எட்டு மணியளவில் எழுத்தாளர் வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார். சாதாரணமாக எப்போதும் பேசும் தொனியில் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன். ஆனால் எதிர்முனைக்குரல் பதற்றமாக இருந்தது.

‘சுகா, இங்கெ பாரதிமணி ஸாரை பாக்க வந்தேன். ஸார் கால்வலியால துடிச்சிக்கிட்டு இருக்கார். அவரால உக்கார, நிக்க, படுக்கன்னு எதுவுமே செய்ய முடியலெ. ரொம்ப சிரமப்படுறார்’.

‘ஒடனெ வரென் ஸார்’.

ஃபோனை வைத்த பதினைந்தாவது நிமிடத்தில் நானும், நண்பர் மனோவும் பாரதி மணி ஸார் வீட்டுக்குச் சென்றோம். (நான், வ.ஸ்ரீ, மனோ, பாரதிமணி அனைவரும் ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள்) அதற்குள் வ.ஸ்ரீ ஸார் மாத்திரை வாங்கிக் கொடுத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் பாட்டையாவுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. இருந்தாலும் ‘என்ன இது. ஒங்க எல்லாரையும் சங்கடப்படுத்துறேனே’ என்றார். ஆஸ்பத்திரிக்கு அழைத்தோம். ‘பொறுத்துக்கக் கூடிய வலிதான். இப்போ அவசியமில்லை’ என்றார். சுமார் ஒருமணிநேரம் அவருடன் இருந்தோம். உயிர்மை வெளியிட்டிருக்கும் பாரதிமணி அவர்கள் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகம் சுடச்சுட வந்திருந்தது. அதில் அவரைப் பற்றி அடியேன், வ.ஸ்ரீ, மனோ மூவரும் எழுதியிருந்தோம். எழுதிய பொய்க்கு தண்டனையாய் ஆளுக்கொரு புத்தகம் கொடுத்தார். வணங்கி வாங்கிக் கொண்டோம். கலை, இலக்கியம், இசை என பல்வேறு திசைகளில் எங்கள் உரையாடல் பயணித்தது. பேச்சு சுவாரஸ்யத்தின் நடுவே பாட்டையா கால் மடக்கி உட்கார்ந்திருந்ததை கவனித்தோம். ‘அட, இப்பொ என்னால உக்கார முடியுதே’ என்றார். பேச்சில் உற்சாகம் மேலும் கூடியது. அன்றைக்கு நாங்கள் பேசிச் சிரித்த அனைத்து சமாச்சாரங்களும் ‘கழுத்தும், கன்னமும்’ குழுமத்தில் வரவேண்டியவை.

‘ஒங்க காலுக்கு ஒண்ணும் இல்லெ ஸார். எதுனாலும் எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க. எந்த ராத்திரியும் எங்கள கூப்பிடறதுக்கு நீங்க தயங்க வேண்டாம்’ என்று சொல்லி விட்டு கிளம்பினோம். ‘ஆகா, உங்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்’. பாட்டையாவின் குரல் தழுதழுத்தது. மாலையில் மறுபடியும் தொலைபேசிமூலம் விசாரித்துக் கொண்டோம். ‘இப்போ கொஞ்சம் தேவலை’ என்றார். நேற்று காலை மறுபடியும் வ.ஸ்ரீ அவர்களிடமிருந்து ஃபோன். மணிஸார் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறார் என்று தகவல் சொன்னார். மீண்டும் நானும், மனோவும் கிளம்பிச் சென்றோம். அழைப்பு மணி அழுத்தி காத்து நின்றோம். கதவை வந்து திறப்பதில் கூட சிரமம் இருந்தது பாட்டையாவுக்கு. ‘என்னால முடியலப்பா. என் கால் என் வசமில்ல’ என்றார். சுவர் பிடித்தே தன் அறைக்குச் சென்றார். சற்று நேரத்தில் வ.ஸ்ரீ அவர்கள் தன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட பாட்டையாவை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்று விவாதித்தோம். சில நண்பர்களிடம் ஃபோன் மூலம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தோம்.

‘நீங்கல்லாம் எனக்குன்னு கெளம்பி வரேளே. எத்தன பேருக்கு இந்த கொடுப்பினை கெடைக்கும்’. பாட்டையா நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். ‘ஒரு மார் வலி, கீர்வலின்னா கௌரமாவாது இருக்கும். கால்வலில செத்துப் போறதுன்னா கேவலம் இல்லையா’. இப்படி இருந்தது அவரது பேச்சு. ‘சினிமாலதான் ஆஸ்பத்திரி ஸீனெல்லாம் பாத்திருக்கேன். நானா ஆஸ்பத்திரில இத்தனை வருஷத்துல ஒரு நாளும் அட்மிட் ஆனதேயில்ல’ என்றார். ‘இப்பவுமெ ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு நான் சம்மதிக்கறதுக்கு காரணம் அடுத்த வாரம் எனக்கு ஷூட்டிங் இருக்கு. நம்மள நம்பி படம் எடுக்கறான். அவன் செரமப்படக்கூடாது பாரு’ என்றார். ரஜினிகாந்துக்கு அப்புறம் இவருக்கு சினிமா மீது இருக்கும் தொழில் பக்தியை நினைத்து கண்ணீர் விட்டேன். ‘அளாதெ சுகா, எனக்கு ஒண்ணும் ஆகாது’ என்றார் பாட்டையா.

அதுவரை பரணி ஆஸ்பத்திரியா, விஜயாவா என்பது குறித்து எங்களால் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். ‘ஏம்பா, ஆபரேஷன் தியேட்டருக்குள்ளெல்லாம் சினிமாவுல வர்ற மாதிரி எல்லாரும் முகமூடி போட்டுக்கிட்டு பயமுறுத்துவாளா என்ன’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். ஒரு அரை மணிநேரம் டென்ஷனுக்கு பெறகு டாக்டர் வெளியில வந்து பெண் குளந்த பொறந்துருக்குன்னு சொல்வார்’ என்றார் வ.ஸ்ரீ. ‘அத மனோக்கிட்டே வந்து சொல்லி கைகுடுத்து கங்கிராஜுலேஷன்ஸ்ன்னு சொல்வாரில்லையா ஸார்’ என்றேன் நான். சிரித்துக் கொண்டே மனோ கிளம்பி எங்களுக்கு முன்னால் விஜயா ஹெல்த் சென்டர் சென்றார்.

சிறிது நேரத்தில் மனோ டாக்டரிடம் பெயரை பதிவு செய்து விட்டு ஃபோன் பண்ணவும் நானும், வ.ஸ்ரீ அவர்களும் பாட்டையாவை மெல்ல மாடிப்படியிலிருந்து இறக்கிக் கூட்டி வந்து வ.ஸ்ரீ அவர்களின் புதிய சான்ட்ரோ காரில் ஏற்றினோம். வடபழனி பஸ்ஸ்டாண்ட் அருகில் வந்தவுடன் என்னுடைய வழக்கமான திசையறிவில் விஜயா கார்டனுக்குள் காரை திருப்பச் சொன்னேன். திசை விஷயத்தில் எனக்கு தாத்தாவான வ.ஸ்ரீயும் உடனே காரை விஜயா கார்டனுக்குள் திருப்ப எத்தனித்தார். எதற்கும் கேட்டு விடுவோமே என்று மனோவுக்கு ·போன் பண்ணினேன். ‘சரியா போச்சு. ஏன் சுகா, அவர என்ன ரெக்கார்டிங் தியேட்டருக்கா கூட்டிக்கிட்டு போகப் போறோம்? அடுத்த லெஃப்டுல திரும்புங்கய்யா’ என்றார் கடுப்புடன்.

விஜயா ஹெல்த் சென்டரை முதன்முறையாக சுற்றிப் பார்த்தபடியே உள்ளே சென்று பாட்டையாவை உட்கார வைத்தோம். வ.ஸ்ரீ அவர்கள் பாட்டையாவுடன் டாக்டரின் அறைக்குள் செல்ல, நானும், மனோவும் வராந்தாவில் நகம் கடித்துக் காத்திருந்தோம். ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருப்பதாக ஒரு சீட்டுடன் இருவரும் வெளியே வந்தனர். எதிரே இருக்கும் ஸ்கேன் சென்டருக்குச் சென்றால் அங்கு இரண்டு மணிநேரம் காத்திருக்கச் சொன்னார்கள். மணி மதியம் ஒன்றைத் தொட இருந்தது. கேன்டீனுக்குச் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஒரே காம்பவுண்ட்டுதான் என்றாலும் கேன்டீனுக்கு கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. பாட்டையாவால் முடியவில்லை. ஒரு ஒரமாக உட்கார்ந்து பைப்பைப் பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்து விட்டார். ‘ஸார், ஹாஸ்பிட்டல் ஸார்’ பதறினேன். ‘ஸோ வாட்?’ என்றார் எகத்தாளமாய். ஒருமாதிரியாக கிளப்பிக் கூட்டிச் சென்றோம். போகும் வழியில் ஒரு வீல் சேர் இருந்தது. இதில் வைத்து தள்ளிச் சென்று விட்டால் என்ன? என்றார் மனோ. அங்கிருக்கும் செக்யூரிடி அதற்கு அனுமதிக்க மறுத்தார். பாட்டையாவோ ‘மனோகர் வேற ஆச காட்டிட்டான். நான் இதுவரைக்கும் இந்த வண்டில போனதே இல்ல. வந்தா நான் இதுலதான் வருவேன்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். இதென்னடா வம்பாப் போச்சு என்று வ.ஸ்ரீ அவர்கள் உள்ளே சென்று அனுமதி வாங்கி வந்தார்.

மூணாங்கிளாஸ் பையன் ரங்கராட்டினம் ஏறுவது போன்ற முகபாவத்துடன் சந்தோஷம் பொங்க பாட்டையா வீல் சேரில் அமர, மனோ அதைத் தள்ள ஆரம்பித்தார். நானும், வ.ஸ்ரீ அவர்களும் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடியபடியே பின் தொடர்ந்தோம். ‘சுகா, நானும் எத்தனையோ வண்டில போயிருக்கென். இந்த வண்டி ரொம்ப நல்லாயிருக்கு. எவ்வளவுன்னு கேட்டு ஒண்ணு வாங்கி போடு. ஆனா டிரைவர் மட்டும் மனோதான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாவே ஓட்டறான்’ என்றார் பாட்டையா. மனோ சிரித்தபடியே தள்ளிச் செல்ல கையில் சாப்பாட்டுக் கூடையுடன் ஒரு பெண்மணி எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே தெலுங்கில் ஏதோ முணுமுணுத்தபடி கடந்து சென்றார்.

கேன்டீனில் அதிகக் கூட்டமில்லை என்றாலும் வாகாக ஒரு இடம் பார்த்து அங்கு அமர்ந்து கொண்டார் பாட்டையா. காலையில் காபி மட்டும் குடித்திருந்ததால் தனக்கு ஒரு தயிர் சாதம் வேண்டும் என்றார். மனோ காலையிலேயே சாப்பிட்டுவிட்டதால் தனக்கு அவ்வளவாக பசியில்லை என்று சொல்லி ஒரு தயிர் சாதமும், குண்டாக ஒரு சமோசாவும் வாங்கிக் கொண்டிருந்தார். எனக்கும் தனக்கும் கூல்டிரிங்க்ஸ் வாங்க வ.ஸ்ரீ அவர்கள் சென்று விட, நான் மட்டும் பாட்டையாவுடன் அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் பாட்டையா பார்த்தார். நான் பயந்த மாதிரியே சட்டென்று பைப்பைப் பற்ற வைத்தார். அதற்குள் ஒருவன் ஓடி வந்து ‘ஸார், இங்கெல்லாம் சிகரெட் குடிக்கக் கூடாது’ என்றான். ‘இது சிகரெட் இல்லெப்பா’ என்று வம்பு பண்ணினார் பாட்டையா. ‘ஐயா, கொஞ்ச நேரந்தான் அந்த எளவெ குடிக்காம இருங்களென். ஒங்களுக்கு கால் வலின்னு காமிக்க வந்துருக்கோம். அத மறந்துராதீங்க’ என்றேன்.

மனோ இரண்டு பிளேட்டுடன் வந்து அமர்ந்தார். வ.ஸ்ரீ இரண்டு அமுல் ரோஸ் மில்க் பாட்டில்களுடன் வந்தார். ஒன்றை வாங்கிக் கொண்டேன். ‘ஸார், நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து மொதமுறையா குடிக்குறோம் இல்லையா?’ என்றேன் வ.ஸ்ரீயிடம். ‘ஆமா சுகா. சியர்ஸ்’ என்று பாட்டிலை பாட்டிலால் இடித்து கண் சிமிட்டினார் வ.ஸ்ரீ. மேஜையில் இருக்கும் தன் மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைலின் மேல் ஒரு கையை வைத்துக் கொண்டு தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்த பாட்டையா எங்களைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். அவருக்கு வலி சரியாகிவிடும் என்று தோன்றியது.

[email protected]

சின்னப்பையன்


சரவணன் என் பால்ய சினேகிதன். தற்போது திரைப்பட விநியோகஸ்தர். படப்பிடிப்பிற்கான சில லொக்கேஷன்கள் தேர்வு செய்ய திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அவனுடன் அலைந்து கொண்டிருந்தேன். மூலக்கரைப்பட்டியைத் தாண்டி முனைஞ்சிப்பட்டிக்குள் கார் நுழைந்த போது தற்செயலாக என் மாமனார் ‘பெங்களூருவிலிருந்து’ போனில் அழைத்தார். நான் முனைஞ்சிப்பட்டியிலிருக்கிறேன் என்பதை சொன்னவுடன் உற்சாகமாகி பக்கத்திலிருக்கும் கஸ்தூரிரங்கபுரம் என்னும் கிராமத்தைப் பற்றிச் சொல்லி அங்கு சென்று பார்த்தால் நான் எதிர்பார்க்கிற சில இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொன்னார். அதோடு நிற்காமல் அங்கு கணபதி என்று ஒரு பையன் இருப்பதாகவும், பிறருக்கு உதவுவதில் அவன் அதிக ஆர்வம் காட்டுபவன் என்றும் சொல்லி அவனிடம் தன் பெயரை சொன்னால் தேவையான உதவிகளை உற்சாகமாகச் செய்வான் என்றும் சொன்னார்.

கஸ்தூரிரங்கபுரம் சின்ன கிராமம். அழகாக இருந்தது. மாமனார் சொன்ன பையன் கணபதியின் முகவரியைக் கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. சரியாக கணபதியின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு ‘அம்மா’ என்றேன். ஒரு வயதான ஆச்சி வந்தார்கள்.

யாரு வேணும் . . .

ஆச்சி. . . கணபதி இல்லீங்களா . . .

கேக்கல . . .

ஆச்சிக்கு காது கேட்கவில்லை. சரவணன் உடனே சத்தமாக ‘கணபதி இருக்கானா’ என்றான். யாரு . . ஆச்சியின் குரலில் ஒரு மாற்றம் தெரிவதை கவனிக்காத சரவணன்,’கணபதி இருக்கானா, வெளியே போயிருக்கானா ஆச்சி’ என்றான். ஆச்சி உடனே கடும் கோபம் கொண்டு, ‘வாரியல கொண்டு அடி . . ஆருல நீ . .. எங்கெருந்து வாரே . . ஒரு மரியாத வேண்டாம் . . . சின்னப் பயவுள்ள’ என்றார்கள். சரவணன் திகிலடைந்து என்னைப் பார்க்க, நான் என்ன செய்வதென்று புரியாமல் அவனைப் பார்க்க, உள்ளிருந்து ஒரு தாத்தா வந்து, ‘வாங்க யாரு நீங்க, நான்தான் கணவதி’ என்றார். திக்கித்திணறி என் மாமனாரின் பெயரை சொல்லி நான் அவருடைய மருமகன் என்றேன். கணபதித் தாத்தா உடனே பிரகாசமாகச் சிரித்து ‘சரியாப் போச்சு. . . அவன் என் கிளாஸ்மேட்லா . . .உள்ளே வாங்க மருமகனே’ என்றார். ஆச்சியை காபி கொடுக்க சொன்னார். எங்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே ஆச்சி உள்ளே சென்றார்கள். பாயை எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னார்,கணவதித் தாத்தா. தானும் உட்கார்ந்து கொண்டார். ஆச்சி வந்து காப்பி கொடுத்தார்கள். குறிப்பாக சரவணனைப் பார்த்து மருந்துக்கும் சிரிக்காமல். வாங்கும் போது சரவணனின் கைகள், ஆச்சியின் கைகளைவிட நடுங்கின. காபியை குடிப்பதில் சரவணனுக்கு சந்தேகம் கலந்த பயம் இருந்தது. ஒரு மடக்கு குடித்த பிறகு அது காப்பிதான் என்பதை உறுதி செய்து கொண்டு மிச்சத்தையும் குடித்தான்.

இதே போல் ஒரு முறை அம்மையைப் பெற்ற தாத்தாவைப் பார்க்க கிராமத்துக்கு போயிருந்தேன். பேரனைப் பார்த்த மகிழ்ச்சி இருந்தாலும் தாத்தாவின் முகத்தில் எப்போதும் காணப்படும் மலர்ச்சி இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்தது. தாத்தாவின் ஒன்றுவிட்ட தம்பி ‘பரமசிவத்தின்’ மரணத்துக்கு போய்விட்டு அப்போதுதான் தாத்தா வந்திருக்கிறார். இறந்து போன தாத்தாவை எனக்கு தெரியுமென்பதால் அதிர்ச்சியும்,சோகமும் அடைந்தேன். ஆறுதலாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ‘பரமசிவம் தாத்தாவுக்கு வயசு இருக்கும்லா’ என்றேன். . சே . . அவன் எம்புட்டு பய . . .சின்ன வயசுதான்’ . .என்று சொன்னார் தாத்தா. எனக்கு தெரிந்து பரமசிவம் தாத்தாவுக்கு எழுபத்தைந்து வயது. ‘சாகிற வயசா அவனுக்கு’ . .வருத்தமாகச் சொன்னார் எழுபத்தைந்து வயதுத் தம்பியின் எண்பத்தைந்து வயது அண்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன் அறிவுமதி அண்ணனின் (பாடல் பெற்ற ஸ்தலமான) புகழ்பெற்ற அறைக்குச் சென்றேன். அங்கு யாரோ ஒரு பெரியவர் ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். புகைப்படங்களைக் காட்டி அண்ணனிடம்’இது யார் எடுத்தது’ என்று அந்த பெரியவர் கேட்க அண்ணன் ‘பாலு மகேந்திரா ஸார்’ என்றார். உடனே அவர்,’அதானே பார்த்தேன். அவன் எடுத்தால் பின்ன நன்றாக இல்லாமல் எப்படி இருக்கும்’ என்றார். நான் உடனே அறிவுமதியின் காதில், ‘அண்ணே யாருன்னே இந்த ஆளு, வாத்தியார மரியாதை இல்லாம பேசுறாரு’ என்றேன். பதறிப் போன அண்ணன் என்னை தனியே கூட்டி வந்து, ‘தம்பி அவர்தானடா கவிஞர் காசி ஆனந்தன்.நம் வாத்தியாருடைய பள்ளித் தோழர்’ என்றார். அன்றளவும் இளமையாக, ஜம்மென்றிருந்த என் வாத்தியாரின் கிளாஸ்மேட் இந்த பெரியவரா என்று வருத்தமாக இருந்தது. இருந்தாலும் மனம் சமாதானமடையாமல் எதற்கும் வாத்தியாரிடம் போய் கேட்டு விடுவோம் என்று கேட்டே விட்டேன். நான் கேட்டதுதான் தாமதம். வாத்தியார் படு உற்சாகமாக ‘அப்படியா . . . காசி வந்திருந்தானா . . . நீ பாத்தியா அவனை. உனக்கு தெரியுமா . . அவன்தான் எனக்கு பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தான்’ என்றெல்லாம் சொன்னவுடன் அது உறுதியாகி மனதுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.

சமீபத்தில் திருநெல்வேலி போயிருக்கும் போது ராதாபுரத்தில் ஒரு நண்பரைப் பார்க்க சென்றிருந்தேன். அங்கிருந்து கிளம்பும்போதுதான் பக்கத்து ஊர் பரமேஸ்வரபுரம் என்பது ஞாபகம் வந்தது. ஆகா,அது நம் மாமனாரின் சொந்த ஊராச்சே,அங்கே போய் வீட்டம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவோம் என்று அவளுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு பரமேஸ்வரபுரத்துக்கு சென்றேன். ஊருக்குள் நுழைவதற்குள் பெங்களூருவிலிருந்து போன். அதற்குள் மகள் சொல்லிவிட்டாள் போல.

சொல்லுங்க மாமா . . ஒங்க ஊருக்குத்தான் போயிக்கிட்டு இருக்கேன்.

சொன்னா சொன்னா . . . ரொம்ப சந்தோஷம் மாப்ளே . . . .அங்கே ஒரு அம்மன் கோயில் இருக்கும். . . அதுதான் எங்க குலதெய்வம். . . .அதுக்கு போகாம வந்துராதீங்க. . . . கோயில் பூட்டியிருந்துதுன்னா அங்கே தனுஷ்கோடின்னு நம்ம பையன் ஒருத்தன் இருப்பான். . . .கோயிலுக்கு பக்கத்துலேயே மூணாவது வீடு. . . . அவன போய் பாருங்க . . .

எனக்கு கஸ்தூரிரங்கபுரம் கணபதி தாத்தா ஞாபகம் வந்தது. தயக்கத்துடன் கேட்டேன்.

மாமா . . . கேக்குறேன்னு தப்பா நெனைக்காதீங்க . . . . இந்த தனுஷ்கோடி உங்க செட்டா . . .இல்ல . . . . . .

உடனே சொன்னார்.

சே சே . . . நீங்க வேற . . .அவன் ரொம்ப சின்னப்பையன் . . ரிட்டயர்ட் ஆகி ரெண்டுமூணு வருஷந்தான் இருக்கும்.

[email protected]

ஜெயா நீ ஜெயிச்சுட்டே

கீழப்புதுத் தெரு என்று ஏனோ அழைக்கப் படுகிற திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் தெருவில் ஒரு உச்சினிமாகாளி கோயில் உள்ளது. உழக்கு சைஸிலுள்ள அந்த கோயிலின் கொடைவிழா வருடாவருடம் சித்திரை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்படும். எந்த ஊரில் இருந்தாலும் அந்த தெருக்காரர்கள் இந்த கொடைக்கு மட்டும் எப்படியாவது வந்து சேர்ந்து விடுவார்கள். இதில் பல பேருக்கு அங்கு வீடே இருக்காது. ஆனாலும் நண்பர்களின் வீட்டில் தங்கிக் கொண்டு கொடை முடிந்ததும் கிளம்பிச் செல்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் வந்தால் தங்க இடம் கொடுக்கும் நண்பர்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். கொடைக்கு மட்டும் அப்படி ஒரு சலுகை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும். பட்டிமன்றம் ஒன்றின் நடுவராக ஒருமுறை குன்றக்குடி அடிகளார் வந்திருந்தார். உச்சினிமாகாளிக்கு பூஜை செய்யும் சிதம்பரம் பிள்ளையிடம் அடிகளார் ‘தமிழில்தானே பூஜை செய்கிறீர்கள்’ என்று கேட்டார். சிதம்பரம் பிள்ளை என்னும் தன் பெயரை சிதம்பாரம்பிள்ளை என்று கொட்டை எழுத்தில் கையெழுத்து போடும் பிள்ளைவாள் வேறு என்ன பதில் சொல்வார். 80களில் புகழ்பெற்ற கோவை சேரன் போக்குவரத்துக் கழக மெல்லிசைக் குழுவின் கச்சேரி நடந்தது. அதில் பாடிய ஒரு ஸ்டார் பாடகரை ரொம்ப வருடங்கள் கழித்து தேவாவின் குழுவில் கோரஸ் பாடகராக பார்த்தேன். உள்ளூர்ப் பிரமுகர்களின் சொற்பொழிவும் உண்டு. ஒரு எழுத்து மேஜையை முன்னே போட்டு தேங்காப்பூ டவல் விரித்து உட்கார்ந்து பிச்சையா பிள்ளையின் மகன் பூதத்தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சைவ சித்தாந்தப் பேருரை ஆற்றிக் கொண்டிருப்பான். தூக்கம் வராத ஒன்றிரண்டு விதவை ஆச்சிகள் மட்டும் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அவர்களில் இருவருக்கு காது கேட்காது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிஷ்யர் எஸ்.ஆர்.கோபாலின் நாடகம் ஏற்பாடாகியிருந்தது. அதில் போலிஸ் இன்ஸ்பெக்டராக நடித்த நெல்லையைச் சேர்ந்த நடிகர் வசனத்தை மறந்து திரைச்சீலைக்குப் பின் வசன பேப்பரை வைத்தபடி நின்று கொண்டிருந்தவரிடம் ‘சொல்லு சொல்லு’ என்று கேட்டு நடித்ததைப் பார்த்து சிரித்த நான், பல வருடங்களுக்கு பிறகு திரைப்படப் படப்பிடிப்புகளில் பல நடிகர்களுக்கு தொடர்ந்து வசனம் ப்ராம்ப்ட் பண்ணும் போது ஏற்படும் எரிச்சலினூடே நாடகத்தில் நடிக்கும் கஷ்டத்தை புரிந்து கொண்டேன்.

திருநெல்வேலிப் பகுதியின் புகழ்பெற்ற கணியன் குழுவினரின் மகுட இசை.விரல்களை உருட்டி அறைந்து அடிவயிற்றிலிருந்து அவர்கள் பாடும் உச்சினிமாகாளி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் வரலாறு போன்றவை நம்மை இழுத்துப் பிடித்து நிறுத்தி விடும். தீச்சட்டி ஏந்தி வரும் சாமி கொண்டாடிக்கு முன்பாக அவர்கள் பாடி வருவார்கள். சில சமயங்களில் காளி வேஷமும் உண்டு. சின்ன வயதில் காளி வேஷம் போட்டவரைப் பார்த்து பல முறை பயந்திருக்கிறேன். ஆனால் மேளக் காரர்கள் வாசிக்கும் அப்போது வந்த சினிமாப் பாடல்களின் தாளத்துக்கு ஏற்ப காளி நடனமாடுவதைப் பார்க்க, பார்க்க பயம் குறைந்து பின் வேடிக்கையாகவே ஆகிவிட்டது.

வருடத்தின் 355 நாட்களில் சீந்துவாரின்றி சாதாரணமாக நடத்தப் படும் அருணாசலம்பிள்ளைதான் சாமி கொண்டாடி. கொடைக்கு கால் நட்ட நாளிலிருந்து பிள்ளைவாளின் நடையே மாறிவிடும். கையில் போட்டிருக்கும் பித்தளைக் காப்புகளை அவ்வப்போது மேலே ஏற்றுவதும், இறக்குவதுமாக இருப்பார். கொடை முடியும் வரை உச்சினிமாகாளி அம்மனாகவேதான் நடந்து கொள்வார். அவரின் தர்மபத்தினியாகிய பிரமு ஆச்சிக்கும் சாமி வரும். அதில் பிள்ளைவாளுக்கு வருத்தமுண்டு. அவர் கம்பீரமாக தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருக்கும் அவர் மனைவி, சாமி வந்து தலைவிரிகோலமாகக் கோயிலுக்கு ஓடி வந்து நாக்கைத் துருத்திக் கொண்டு தனக்கு போட்டியாக ஆடுவதை எப்படி சகிப்பார்? இங்கும் நிம்மதியாக இருக்க விட மாட்டேங்கிறாளே முண்டை என்கிற நினைப்பில் சாமி என்கிற சலுகையில் பொண்டாட்டியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து போட்டு அடிப்பார்.

நீ எங்கே உள்ளவட்டி . . என் கோயில்ல ஒனக்கென்ன சோலி

சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்

சொல்லப் போறியா உன் ரத்தத்த குடிக்கட்டுமா?

சுக்கு வெந்நீர் குடித்தாலே விக்கிக் கொள்கிற அருணாசலம் பிள்ளை கேட்பார். இதற்குள் மேளக்காரர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அடிக்கத் தொடங்க தம்பதி சமேதராக தாளத்துக்குத் தக்க ஆடி முடிப்பார்கள். ஒரு முறை கொடை முடிந்த பின் பிரமு ஆச்சி வந்து கோயில் முன் எதையோ குனிந்து தேடிக் கொண்டிருந்தாள். அருள் வந்து ஆடும்போது, தான் காதில் அணிந்திருந்து எங்கோ விழுந்து விட்ட ஒற்றைத் தோட்டைத்தான் ஆச்சி அழுது கொண்டே தேடினாள் என்பது எங்களுக்கு பிறகு தெரிய வந்தது. அதற்கு அடுத்த வருஷத்திலிருந்து ஆச்சி கவனமாக தோடுகளை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வந்த பிறகே உச்சினிமாகாளி அவள் மீது வந்தாள்.
இத்தனை சுவாரஸ்யங்கள் நடந்தாலும் எனக்கென்னவோ கொடையின் கடைசி நாளன்று தெரு நடுவில் திரை கட்டி காட்டப்படும் திரைப்படங்களில்தான் ஆர்வம். “ஐந்து பூமார்க் பீடி வழங்கும்” என்கிற துணி பேனர் கட்டப் படும்போதே எனக்கு உற்சாகத்தில் வேர்க்கத் தொடங்கி விடும். எப்படியும் ஒரு எம்.ஜி.ஆர். படம் உண்டு. அது போக இரண்டு படங்கள் கண்டிப்பாக திரையிடப்படும். அதில் ஒன்று, இன்றுவரை எனக்கு புதிராக உள்ள ‘ஜெயா நீ ஜெயிச்சுட்டே’. வி.சி.குகநாதனின் படம் என்று நினைவு. அவர் மனைவி ஜெயாதான் படத்தின் கதாநாயகி. வருடா வருடம் இந்த படம் திரையிடப்படும். வி.சி.குகநாதனே அந்த படத்தை அத்தனை தடவை பார்த்திருக்க மாட்டார். இந்த படத்தைப் பற்றி குகநாதனைத் தவிர யார்யாரிடல்லாமோ விசாரித்துப் பார்த்து விட்டேன். யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. எந்த தனியார் தொலைக்காட்சியும் இந்த படத்தை இதுவரை ஒளிபரப்பவில்லை, ராஜ் டிஜிட்டல் பிளஸ் உட்பட. எனக்கு இருக்கிற சந்தேகமே, வி.சி.குகநாதன் ஐந்து பூமார்க் பீடி கம்பெனிக்கென்றே இந்த படத்தை எடுத்து, அதை திருநெல்வேலி கீழப்புதுத் தெரு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைக்கு மட்டும்தான் திரையிட வேண்டும் என்று எழுதி வாங்கியிருப்பாரோ என்பதுதான்.

மற்றொரு படம் ரஜினிகாந்த் நடித்த படமான குப்பத்து ராஜா. அது நெல்லையைச் சேர்ந்த தயரிப்பாளரால் எடுக்கப் பட்டது. அதில் ஒரெ ஒரு காட்சியில் நெல்லையைச் சேர்ந்த ஒரு மனிதர் நடித்திருப்பார். அவர் ஒரு சகல கலாவல்லவர்.நடிகர்.சித்த மருத்துவர். இலக்கிய சொற்பொழிவாளர். நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவின் போது நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை கண்ணீர்ப் புகையில்லாமலேயே விரட்டி விடும் வல்லமை அவரது சொற்பொழிவுக்கு உண்டு. குப்பத்து ராஜாவில் அவர் வரும் ஒரே காட்சிக்காக ஜனங்கள் காத்திருப்பர். அந்த காட்சியில் அவரது வீட்டின் கதவை ரஜினிகாந்த் தட்டுவார். இவர் கதவைத் திறந்து ‘ஆ ஜக்கு நீயா’ என்பார். உடனேயே ரஜினி இவர் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவார். மக்களின் கரகோஷத்தைப் பார்க்க வேண்டுமே.

சுகா
[email protected]

கவிஞர் சுகுமாரனும், நானும்.

புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறை நானும், நண்பர் மனோவும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை நான் சென்ற போது திருமதி.ப்ரீத்தம் வெங்கடேஷ் சக்கரவர்த்தி அவர்களை சந்திக்கும் நோக்கத்துடன் என்னுடன் உதவி இயக்குனர் தியாகு வந்தான். அவன் ப்ரீத்தம் இருக்கும் பகுதிக்குச் சென்றுவிட, நான் எனி இந்தியனுக்குச் சென்றேன். உட்கார்ந்து மும்முரமாக வேலையில் மூழ்கியிருந்த தேவராஜன் என்னைக் கண்டதும் துள்ளி எழுந்து கைகுலுக்கி, ‘மொதல்ல உக்காருங்க ஸார்’ என்று என்னை அமரவைத்தார். ‘ரொம்ப சந்தோஷப்படுத்திட்டீங்க ஸார்’. சிரித்துக் கொண்டே இருந்தார். ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதியிருந்த குழுமம் ஓர் உரையாடலைப் படித்து விட்டு அன்று காலையிலேயே என்னை தொலைபேசியில் அழைத்து சிரித்திருந்தார். மீண்டும் அதைப் பற்றியே சொல்லிச் சொல்லிச் சிரித்தார். ‘ஸார், நான்ல்லாம் சிரிக்கவே மாட்டேன் ஸார். இன்னிக்கு நீங்க எழுதியிருந்ததப் படிச்சுட்டு அப்படி சிரிச்சேன் ஸார். ரொம்ப சந்தோஷமா இருந்துது. என் கவலையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மறந்தே போச்சு. ரொம்ப சந்தோஷம் ஸார்’, மீண்டும் சொன்னார். சிறிது நேரத்திலேயே தியாகு வந்துவிட, தேவராஜனிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

எனி இந்தியனிலிருந்து கிளம்பி செல்லும் வழியில் கவிஞர் சுகுமாரனைப் பார்த்தேன். ஒரு ஸ்டாலில் நின்று கொண்டிருந்தார். சுகுமாரனை ஒரே ஒருமுறை (சென்ற வருடம் மதுரை புத்தகக் கண்காட்சியில்) பார்த்திருக்கிறேன். மற்றபடி அவருக்கும், எனக்கும் மின்னஞ்சல் நட்பு மட்டுமே உண்டு. தொலைபேசியில் கூட பேசியதில்லை. தான் சென்னையில் இருக்கும் விவரத்தை அன்று காலைதான் எனக்கு மின்னஞ்சலில் சொல்லியிருந்தார், சுகுமாரன். சட்டென்று அவரிட்ம போய் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அதுபோக அவர் சுகுமாரன் தானா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருந்தது. நண்பர் ஹரன் பிரசன்னாவுக்கு ஃபோன் பண்ணினேன்.

பிரசன்னா . . .

யாரு?

யாரா? யோவ், நாந்தான்யா சுகா . . .

அண்ணாச்சி மன்னிச்சுக்குங்க . . . . ஃபோன் தொலைஞ்சு போனதுல நம்பரெல்லாம் போயிட்டு . . .சொல்லுங்க . .

கவிஞர் சுகுமாரன் வந்துருக்காரா?

தெரியலயே . . . வந்துருப்பாராயிருக்கும். ஏன் கேக்கியெ?

இல்ல . . . இங்கெ புதுகைத் தென்றல்ன்னு ஒரு ஸ்டால் முன்னாடி நிக்காரு. அவர்தானான்னு எனக்கு ஒரு டவுட்டு . . .அதான் கேக்கென்.

இவ்வளவுதானெய்யா. கொஞ்சம் இரிங்க. அவரு ·போன் நம்பர் தாரென். பேசி கன்ஃபர்ம் பண்ணிட்டு அப்புறம் போய் பேசுங்க.

சரி. குடுங்க.

ஒரு நிமிஷம். . . . . . . . . . அண்ணாச்சி, அவரு ஃபோன் நம்பரையும் தொலச்சுட்டேன் போலுக்கெ.

வைங்கய்யா ஃபோன.

இன்னொரு முறை எட்டிப் பார்த்தேன். சுகுமாரனுக்கும் நான் அவரை பார்ப்பது தெரிந்து விட்டது. நைசாக என்னைப் பார்க்க ஆரம்பித்தார். நான் தியாகுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேறு பக்கம் நகர்ந்தேன். ‘தியாகு, அந்த ஸார்கிட்டெ போயி அவரு கவிஞர் சுகுமாரனான்னு கேளேன்’ என்றேன். தியாகு முன்னோக்கி நகரவும் ஒரு யோசனை. அவனை ஒரு நிமிஷம் நிற்கச் சொல்லிவிட்டு தேவராஜனுக்கு ஃபோன் பண்ணி நான் நிற்கும் இடத்துக்கு வரச் சொன்னேன். தேவராஜனிடம் சுகுமாரனைக் காண்பித்து கேட்கவும், ‘சுகுமாரன் ஸார்தான். எனக்கு நல்லா தெரியுமே’ என்றார். ‘அப்போ நான் போயி பேசலாங்கரீங்களா?’ தயக்கத்துடன் நான் கேட்கவும், ‘ஸார், உங்களுக்கு யோசனையா இருந்தா நான் வேணா வந்து பேசி உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?’ என்றார். தியாகு எரிச்சலடைந்தான். ‘ஸார், இதுக்கு போயி ஏன் ஸார் இவ்வளவு தயங்குறீங்க? வாங்க ஸார், நாமளே போய் பேசலாம்’ என்றான். தேவராஜனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, நானும், தியாகுவும் கவிஞர் சுகுமாரனை நோக்கிச் சென்றோம்.

பதினைந்து இருபது நிமிடங்களுக்கும் மேலாக எங்களின் அலைக்கழிப்பை கவனித்துக் கொண்டிருந்த சுகுமாரன், நாங்கள் அவரை நெருங்கவும் குத்துமதிப்பாக புன்முறுவல் பூத்தபடி எங்களை எதிர்நோக்கினார். நேரே அவரிடம் சென்று நான் கையை நீட்டவும், அவரும் சிரித்தபடி கை பற்றி குலுக்கினார். முகத்தில் மட்டும் குழப்ப ரேகை. நானேதான் பேச ஆரம்பித்தேன்.

‘கவிஞர் சுகுமாரன்?’

‘நீங்களா?’

‘நான் உங்கள கேட்டேன். நீங்க கவிஞர் சுகுமாரன்தானே?’

‘இன்னிக்கு மட்டுமே நாலஞ்சு பேரு கேட்டுட்டாங்க. அதுல ரெண்டு பேரு லேடீஸ்’.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தியாகு என் சட்டையைப் பிடித்து இழுத்தான்.

‘ஸார், போயிரலாம்’.

சுகுமாரன் தொடர்ந்தார்.

‘பரவாயில்லை. நீங்களே என்கிட்டெ வந்து பேசுனதால ஒங்களுக்கு என்னோட அன்புப் பரிசு.’

ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து கொடுத்தார். அந்த புத்தகத்தின் பெயர் ‘இரவின் நரை’. எழுதியவரின் பெயர் ‘பிச்சினிக்காடு இளங்கோ’ என்று போட்டிருந்தது.

புத்தகத்தை வாங்கிக் கொண்டு பிச்சினிக்காடு இளங்கோவுக்கு நன்றி கலந்த வணக்கத்தை கண்கலங்கச் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். நேரே கிழக்கு பதிப்பகத்தைத் தேடிச் சென்றேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே இரண்டு நாற்காலிகள் போட்டு பிரசன்னா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மூச்சிரைக்க சுகுமாரனை சந்தித்த கதையை பிரசன்னாவிடம் சொன்னேன். ‘அய்யோ அண்ணாச்சி, என்னால தாங்க முடியலியே. அநியாயத்துக்கு அசிங்கப்பட்டிருக்கியளே’ கைகொட்டி உடல் குலுங்கச் சிரித்தார் பிரசன்னா. ஓங்கி ஒரு குத்து குத்த வேண்டும் போலிருந்தது. அவ்வளவு பெரிய பிரதேசத்தில் எந்தப் பகுதியில் குத்துவது என்று தெரியாமல் என் கண்கள் களைத்தன. ‘போதும்யா, ரொம்பவும் சிரிக்காதேரும். நான் வாரேன்’. கோபத்துடன் நான் திரும்பி நடக்கும் போது பின்னால் சிரிப்பொலி கேட்டுக் கொண்டுதானிருந்தது.

என்னை வீட்டில் விட்டுவிட்டு தியாகு கிளம்பும் போது அவனிடம் மெல்ல சொல்லிப் பார்த்தேன்.

‘நீ வேணா இந்த புஸ்தகத்த கொண்டு போயி படிச்சு பாரேன். நல்ல் . . .லா . .த்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்’

‘இல்ல ஸார். நான் மெடிஸின் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இன்னோரு நாள் வாங்கிக்கிறேன்’.

தியாகு கிளம்பிப் போனான். ‘இரவின் நரை’ புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தேன். பிச்சினிக்காடு இளங்கோ என்னைப் பார்த்து சிரித்தபடி இருந்தார்.

முருகன்சாமி பேரு

கணவன் பெயரை சொல்லாத மனைவிமார்கள் இப்போதும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்த ஆச்சிகள், அத்தைகள், அக்காக்கள், மதினிகள், சித்திகள் என்று பலரை நான் பார்த்திருக்கிறேன். இதில் ரொம்பவும் அந்தக் காலத்துப் பெண்கள் பழமையில் ஊறி மற்றவர்களைப் படுத்துவார்கள். தாத்தாவின் பெயரான சுப்பையாவில் சுப்பு என்று வருகிறதாம். அதற்காக ஆச்சி உப்பு என்று சொல்வதற்குக் கூடத் தயங்கி லவங்கம் என்பாள். மூச்சுக்கு மூச்சு தன் கணவர் செய்யும் சகல விஷயங்களையும் விமர்சித்து பேசும் மனோன்மணி அத்தைக்கு மாமா மேல் ஏதேனும் கொஞ்சமாவது மரியாதை இருக்கிறதா என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம் உண்டு. ஆனால் அவளுமே கூட அவர் பெயரை உச்சரிக்கமாட்டாள். ‘உங்க வாத்தியார் மாமா இருக்காகளே’ என்றுதான் சொல்வாள். அவள் மாமாவைப் பேசும் பேச்சுக்கு அவர் பெயரை சொல்வதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. இதை ஒருமுறை அவளிடமே சொன்னதற்கு ‘எல, எங்க அம்மை என்னை அப்படியா வளத்திருக்கா?’ என்று கடுங்கோபம் கொண்டாள்.

தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. அவர்களை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்கள். பெற்ற தாயாக இருந்தாலும் அந்தப் பயல்களை அவள் ஒன்றும் சொல்லிவிட முடியாது. ‘அந்த மனுஷன் பேரை விட்ட பயலை இப்படி தாறுமாறா பேசலாமா, நீயே சொல்லுளா’ என்று ஊர் முழுவதும் அந்தக் கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் ஆச்சிகள். இத்தனைக்கும் ‘ எல, இங்கெ வா’ என்றுதான் அம்மை சொல்லியிருப்பாள். இறந்து போன தன் புருஷனை, தன் கண் முன்னால் தன் மருமகள் அவமானப் படுத்திவிட்டதாகவே ஆச்சி நினைப்பாள். இந்த பிரச்சனை சில சமயங்களில் பெரிய குடும்பச் சண்டையாக மாறிவிடுவதும் உண்டு. ஊரிலிருந்து வரும் மகளிடம் ஆச்சி சொல்லி அழுவாள். ‘ நல்ல வேளை. இதையெல்லாம் பாத்து அசிங்கப்படாம ஒங்க அப்பா போய் சேந்தா. ஏந்தலையெளுத்து. இந்த எளவையெல்லாம் பாக்கணும்னு இருக்கு. ஒன் தம்பியும்லாம்மா பொண்டாட்டி பேசுத பேச்சைக் கேட்டுக்கிட்டு வாயில மண்ணைப் போட்டுக்கிட்டு இருக்கான்’.

ஆச்சிக்கு அப்புறம் நான் அப்படி பார்த்தது பெரியம்மையைத்தான். பெரியம்மையின் பெயரிலேயே பெரியப்பாவின் பெயரும் இருந்தது. பெரியப்பாவின் பெயர் சங்கரன். பெரியம்மையின் பெயர் சங்கரவடிவு. சங்கரன்கோவிலைக் கூட தவசுக் கோயில் என்றுதான் சொல்வாள். உன் பேரு என்ன பெரியம்மை என்று நான் சிறுவனாக இருந்த போது கேட்டதற்கு ‘பாவி’ என்று அவள் பதில் சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது. முப்பத்தைந்து வயதில் நான்கு பிள்ளைகளுடன் விதவையாகிப் போன ஒரு பெண்மணி அப்படித்தானே சொல்வாள். சின்ன பெரியப்பாவின் மகன் ஒருவனின் பெயரும் சங்கரன். அவன் சமஸ்திபூரில் பிறந்தான். அதனால் அவனை பெரியம்மை ‘சமத்திபுரான்’ என்று அழைப்பாள். எங்கள் தலைமுறையில் எங்களுக்கெல்லாம் மூத்த அண்ணனுக்கு தங்கள் மாமனாரின் பெயர் என்பதால் பெண்கள் எல்லோருக்கும் அவன் ‘பெரியவன்’தான். எங்களுக்கு பெரியண்ணன்.

இன்னும் சில சுவாரஸ்யங்கள் உண்டு. தன் கணவனின் மூத்த சகோதரனின் பெயரையும் சில பெண்கள் சொல்ல மாட்டார்கள். ‘ஒங்க பேங்க் பெரியப்பாவைக் கேக்காங்க பாரு’ என்பாள் அம்மா. ‘வாத்தியார் அத்தான் நேத்து வந்தாக’ என்பாள் இன்னொரு பெரியப்பாவை. இன்னும் சில வீடுகளில் கொழுந்தனுக்கும் இந்த மரியாதை உண்டு. மிகச் சமீபத்தில் என் நண்பன் சரவணனுக்கு ·போன் பண்ணினேன். அவன் மதினி ·போனை எடுத்து ‘கொளுந்தன் குளிக்காங்க. நீங்க யாரு பேசுதீங்க?’ என்றார்கள். அவன் வீட்டுக்கு நான் போயிருந்த போதும் அவனை கொழுந்தன் என்றுதான் அழைத்தார்கள். சரவணனும் அந்த மதினியிடம் தன் தாயை விடவும் மரியாதையாக, பிரியமாக நடந்து கொண்டதை பார்த்தேன். சரவணனின் அண்ணன் உயிருடன் இல்லை.

மகளைக் கட்டிய மருமகனிடம் மாமியார்கள் நடந்து கொள்வதில் பல வேடிக்கைகள் உண்டு. மருமகனின் பெயரை உச்சரிக்காமல் இருப்பது மட்டுமில்லை. மருமகனுக்கு முன்னால் மாமியார்கள் வந்து விடமாட்டார்கள். மருமகன் முன் வாசலில் இருந்தால் மாமியார் பின் வாசலை விட்டு வரவே மாட்டார். சாப்பிட வந்தால் அடுக்களைக்குள்ளேயே இருப்பார். மகளும் காலமாகிவிட்டாள். பேரன்களுக்கு திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டனர். ஆனால் இன்னமும் அம்மையைப் பெற்ற ஆச்சி என் அப்பாவுக்கு முன் வந்து விட மாட்டாள். மருமகன் சாப்பிட வரும் போது மெல்ல எழுந்து அடுக்களைக்குள் சென்று விடுவாள் எண்பத்தைந்து வயது மாமியார்.

எங்கள் குடும்ப வழக்கமாக இப்படி பெண்கள் நடந்து கொள்வதை உதவி இயக்குனரும், தற்போது விளம்பர மாடலாகவும் இருக்கிற தோழி காமேஷ்வரியிடம் ஒருமுறை சொன்னேன். அவள் நம்பவில்லை. ‘வேண்டுமானால் உன் அம்மா, பாட்டியிடம் கேட்டுப் பார். அவர்களுக்கு இந்த வழக்கம் பற்றி தெரிந்திருக்கலாம்’ என்றேன். மறுமுறை சந்தித்தபோது சொன்னாள். ‘ டேய், நீ சொன்ன மாதிரி எங்க குடும்பத்துல முன்னாடி இருந்ததாம். ஆனா ராஜீவோட பாட்டி இப்பவும் அவ ஹஸ்பண்ட் பேரை சொல்ல மாட்டாங்களாம்’ என்றாள். ‘ நீ அவங்களைப் பாத்தியா’ என்றேன். ‘இல்லை. ராஜீவ்தான் சொன்னான்’ என்றாள். ராஜீவ் அவள் கணவன்.

நண்பன் ராமசுப்ரமணியனுக்கு சொந்தமான பல வீடுகளில் ஒரு வீட்டில் குடியிருந்தார்கள், வேலாயுதம் அண்ணனும், கனகு மதினியும். சீட்டுக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வேலாயுதம் அண்ணன் ‘அச்சமில்லை அச்சமில்லை’ ராஜேஷ் மாதிரியே இருப்பார். சைக்கிளில்லாத வேலாயுதம் அண்ணனை நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. அவர் வேலைக்குப் போயிருந்த சமயத்தில் வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர் கனகு மதினியிடம் அவள் கணவன் பெயரைக் கேட்டு முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’

‘எம்மா, இதையே சொல்லிக்கிட்டிருந்திய்யென்னா எப்படி? சண்முகமும் இல்லெங்கியெ. கந்தன், சுப்ரமணியனும் இல்லை. அப்பொ நான் எப்படிம்மா கண்டுபுடிக்க?’

நானும், ராமசுப்ரமணியனும் அந்தப் பக்கமாகச் செல்ல கனகு மதினி ராமசுப்ரமணியனைப் பார்த்து, ‘ எய்யா, நல்லாயிருப்பெ. ஒங்க அண்ணன் பேரை சொல்லு’ என்றாள். ராமசுப்ரமணியன் சொல்லவும் அந்த மனிதர், நிம்மதிப் பெருமூச்சு விட்டு, ‘இது எனக்கு தோணாமப் போச்சே. எம்மா, குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்க’ என்றபடியே மதினி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். கனகு மதினி ஒரு சொம்பில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

வேலாயுதம் அண்ணனுக்கும், கனகு மதினிக்கும் மூன்று பெண் குழந்தைகள். வேலாயுதம் அண்ணனின் சொற்ப சம்பாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதில் கனகு மதினிக்கு கடும் சிரமம் இருந்தது. வீட்டிலேயே சின்ன அளவில் இட்லி வியாபாரம் செய்து வந்தாள். மரப்பொடி, மண்ணெண்ணெய் அடுப்பு வைத்திருந்தாள். கேஸ் அடுப்புக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தாள். ஒரு நாள் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு, வேலாயுதம் அண்ணன் வேலை பார்த்து வந்த சீட்டுக் கம்பெனியிலிருந்து தகவல் ஒன்று வந்தது. சென்ட்ரல் தியேட்டர் பக்கம் ஒரு லாரியின் அடியிலிருந்து வேலாயுதம் அண்ணனின் நொறுங்கிப் போன சைக்கிளை எடுத்த போது ராமசுப்ரமணியனோடு, நானும் போய்ப் பார்த்தேன்.

ராமசுப்ரமணியனின் வீட்டுக்குப் பின்புறமே கனகு மதினி குடியிருந்தாள். அதற்கு பக்கத்தில் உள்ள காலி மைதானத்தில் நாங்கள் வாலிபால் விளையாடி வந்தோம். நானும், ராமசுப்ரமணியனும் ஆளுக்கொரு கம்பத்தில் ஏறி வாலிபாலுக்கான நெட் கட்டிக் கொண்டிருந்த போது கனகு மதினி கேஸ் சிலிண்டர் போடும் பையனிடம் கத்திக் கொண்டிருந்தாள். வேலாயுதம் அண்ணன் இறந்த பின் நாங்கள் கனகு மதினியின் முகம் பார்த்துப் பேச முடியாமல் தவி(ர்)த்து வந்தோம். அதனால் அவள் பக்கம் போகவில்லை. சிலிண்டர்க்காரன் சொன்னான்.

‘என் கையில இருக்கிற லிஸ்ட்படிதான்மா நான் சிலிண்டர் போட முடியும். நீங்க கேக்கறதுக்காகல்லாம் குடுக்க முடியாது.’

‘காலையில ஒங்க ஆபீஸ்ல இன்னைக்கு எப்படியும் ஒங்களுக்கு சிலிண்டர் வந்துரும்னு சொல்லப் போயிதான் கேக்கேன். சும்மா கேக்கதுக்கு நான் என்ன கோட்டிக்காரியா?’

‘சரி. இருங்க. என் கையில இருக்கான்னு பாக்கேன்’.

தோளிலிருந்த சிலிண்டரை கீழே இறக்கி வைத்து விட்டு தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சீட்டுகளை எடுத்தான்.

‘பேரு சொல்லுங்க’.

‘எஸ்.வேலாயுதம்’ என்றாள் கனகு மதினி.

Giant வீல்

அரசுப் பொருட்காட்சி பொதுவாக திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆனிமாதம்தான் நடத்தப்படும்.வேறு பொழுதுபோக்குக்கு வழியேயில்லாத நெல்லை மக்கள் பொருட்காட்சிக்கு தினமும் வருவார்கள்.குறிப்பாக பெண்களுக்கு அபூர்வமாக வெளியே சுற்றும் தருணம் வாய்ப்பதால், பார்த்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் பார்ப்பதில் அலுப்பு ஏற்படுவதில்லை.தேரோட்டம் பார்ப்பதில் கூட அவர்களுக்கு அவ்வளவு ஆர்வமிருக்காது.வைகாசி மாதமே அவர்களிடம் பொருட்காட்சி பற்றிய எதிர்பார்ப்பு வந்துவிடும்.”எக்கா,இந்த வருசமாவது பொருள்காட்சி போடுவானா . . இல்ல போன வருசம் மாதிரி த்ராட்டுல விட்டுருவானா” . . . . “இந்த வருசம் கண்டிப்பா உண்டுமாம் . . ஒங்க அத்தான் சொன்னா . . .”

பொருட்காட்சித் திடலில் சாமான்கள் வந்து இறங்கி பந்தல் வேலைகள் ஆரம்பமான உடனேயே ஊருக்குள் உற்சாகம் பரவ ஆரம்பித்து விடும்.குற்றால சீஸனும்,ஆனித்திருவிழா கொண்டாட்டங்களும்,பொருட்காட்சியும் திருநெல்வேலி ஊரை வேறு ஊராக மாற்றிவிடும்.பணமுள்ளவர்கள் பொருட்காட்சிக்குள் ஸ்டால் எடுப்பார்கள். வேலையில்லாத இளைஞர்கள்,வயதுப் பெண்கள் அந்த தற்காலிக ஸ்டால்களில் வேலை செய்வார்கள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பொருட்காட்சி நடக்கும் இடத்தை ராட்சத ராட்டினம் என்னும் Giant wheel காட்டிக் கொடுத்து விடும்.அப்போதைய முதல்வரின் ஆளுயர கட்டவுட்டுக்கள் பொருட்காட்சித் திடலின் நுழைவுவாயிலில் நம்மை வரவேற்கும்.பொருட்காட்சியில் மட்டுமே நாங்கள் காணக் கிடைக்கிற பேல் பூரி,பானி பூரி வகையறாக்கள் வாசனையோடு சுண்டி இழுக்கும்.பானி பூரிக்கு ஆசைப் பட்டு,எது பேல் பூரி,எது பானி பூரி என்ற வித்தியாசம் தெரியாமல், வருடா வருடம் மிகச்சரியாக பேல் பூரியை வாங்கி திணறலோடு தின்போம்.

“இன்றோடு சென்றுவிடு”,வசந்தத்தைத் தேடி” போன்ற நாடகங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்.டில்லி அப்பளம் வாங்கி தின்றபடியே நடந்து செல்பவர்கள் போகிற போக்கில் அந்நாடகங்களை ஒரு பார்வை பார்த்த படி செல்வர்.எல்லா அரசுத் துறை அரங்குகளிலும் வேகவேகமாக சுற்றி விட்டு வெளியே வரும் இளைஞர்கள்,சுகாதாரத் துறையில் மட்டும் அதிக நேரம் செலவிடுவர்.குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சில மருத்துவ புகைப்படங்களைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.வேளாண்துறை பக்கம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளில் பீலிசிவம்,என்னத்த கன்னையா போன்ற டிரேட்மார்க் நடிகர்கள் நடித்த அரசாங்கக் குறும்படங்கள் பார்ப்பாரின்றி ஓடிக் கொண்டிருக்கும்.குறிப்பாக ஹெரான் ராமசாமி நடித்த குமரிக்கண்டம் விளக்கப் படம் போடும் பகுதியில் ஜனநடமாட்டமே இருக்காது.

அம்மாவுக்கு எப்போழுதுமே பொருட்காட்சிக்கு போனால் giant wheelஇல் ஏறி சுற்ற ஆசை.தைரியமெல்லாம் கிடையாது.பல்லைக் கடித்துக் கொண்டே பயந்தபடி அந்த த்ரில்லை அனுபவிக்க வேண்டும் அவளுக்கு.தான் பயந்தாலும்,பயப்படும் மற்றவர்களை கேலி செய்வதும் உண்டு.அம்மா இறந்த பிறகு அவள் நினவாகத்தானோ என்னவோ எனக்கும் giant wheel மேல் ஒரு காதல்.Giant wheelஇல் ஏறிச் சுற்றுவது போக யார்யாரெல்லாம் பயப்படுகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

சுந்தரம்பிள்ளை பெரியப்பா கமிஷன் கடை வைத்திருந்தார்.சிவதீக்ஷை எடுத்திருந்ததால் தினமும் சிவ பூஜை பண்ணுபவர்.உட்கார்ந்தால்,எழுந்தால்,படுத்தால் சிவநாமம்தான்.கழுத்து வழியாக போடும் அந்த கால தொள தொள சட்டையும்,வேஷ்டியும்தான் உடை.அசப்பில் டி.எஸ்.பாலையா மாதிரியே இருப்பார்.வேர்க்கும் போதெல்லாம் ‘V’ cut உள்ள சட்டையின் கீழ்ப் பகுதியை இரண்டு கைகளாலும் பிடித்து விசிறியாக மேல் நோக்கி வீசிக் கொள்வார். சின்னப் பையனான என்னை பொருட்காட்சிக்கு அழைத்து போகும் பொறுப்பை ஒரு நாள் அவர் ஏற்றுக் கொண்டார்.கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எல்லா அரங்குகளுக்கும் சென்றோம்.இந்து,அறநிலையத் துறையில் மட்டும் அதிக நேரம் ஆனது.மரணக்கிணறு பார்த்தே தீர வேண்டும் என்றார்.”உயிரைக் கொடுத்து மோட்டார் ஸைக்கிள் ஓட்டுதான். . . அவனுக்கு துட்டு குடுத்தா புண்ணியம். . .” பக்கத்திலேயே giant wheel.என் முகத்தை பார்த்து என் ஆசையை புரிந்து கொண்டார்.நிறைய செலவழித்து விட்டாரே என்று நானாக கேட்கவில்லை.
“ராட்டுல ஏறணுமாடே” . . . . .

“பரவா இல்ல பெரியப்பா வேண்டாம்” . . .

“அதான் உன் மூஞ்சியே சொல்லுதே . . .வா ஏறுவோம் . . .பயப்பட மாட்டயே . . . . . .”
Giant wheelஇல் ஏறும்வரை பேசிக் கொண்டிருந்த பெரியப்பா,ஏறி அமர்ந்தவுடன் ‘சிவாயநம’ என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.சுற்ற ஆரம்பிக்கும் முன்பே கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டார்.ஆட்கள் நிறைந்தவுடன் பெல் அடித்து சுற்ற ஆரம்பித்தது.ஒரு சுற்றிலேயே பெரியப்பா கதறலுடன் “. . ஏ . . ..நிறுத்து . . .சின்னப்பையன் பயப்படுதான்” என்றார்.”எனக்கு ஒண்ணும் பயமில்ல பெரியப்பா . . ஜாலியாத்தான் இருக்கு” . . . “எல . . .நிறுத்தப் போறியா இல்லியால” . . . .ராட்டுக்காரனுக்கு காதில் விழவில்லை.”எல . .அய்யா . .நல்லாயிருப்ப . . .கூட துட்டு தாரேன் . . .எறக்கி விடு” . . . வெட்கத்தை விட்டு லேசாக அழுது பார்த்தார்.வேகம் எடுத்தது.இனி கத்தி பிரயோஜனமில்லை என்பது தெரிந்து போனது.கீழிருந்து மேலே போகும்போது சிவநாமமும்,மேலிருந்து கீழே வரும் போது மலச்சிக்கல் முக்கலுமாகத் தொடர்ந்தார்.சுற்று முடிந்தது.சிரிப்பை அடக்கியபடி உட்கார்ந்திருந்தேன்.ஆட்கள் இறக்கப்பட்டனர்.சரியாக நாங்கள் அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்கு வந்து நின்றது.பெரியப்பா என்னை பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்க்கும் விதமாக உர்ரென்று அமர்ந்திருந்தார்.முகமெல்லாம் வேர்த்து திருநீறு அழிந்திருந்தது.மற்ற நேரம் என்றால் சட்டையை பிடித்து விசிறிக்கொள்வார்.இப்போது சிக்கென்று கம்பியை பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்.சுற்று முடிந்த நிம்மதி முகத்தில் தெரிந்தது.ஆனாலும் பதற்றம் குறையவில்லை.மனிதர் அவமானப் பட்டுவிட்டார்.நாம்தான் சரி செய்ய வேண்டும் என்று மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

பெரியப்பா . . . அங்கே பாத்தேளா . . . நெல்லையப்பர் கோயில் தெரியுது . . .

சிவப்பழமான பெரியப்பா கடும் எரிச்சலுடன் சொன்ன பதில்.

ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பாக்கல.

க்ளோ

நண்பர் சீமானின் வீடு ஒரு சேவற்கூடாரம். பத்திலிருந்து இருபது சேவல்கள் வரை உண்டு. ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வருகிற கூட்டம். உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சின்ன நடிகர்கள் . . இப்படி நிறைய நண்பர்கள் அங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். யார்யாருக்கு வேலை கிடைக்கிறதோ, அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்ள, மற்றவர்கள் சாமான்கள் வாங்க, ஒரு சிலர் சமைக்க, எல்லோரும் சாப்பிடுவார்கள். யாருக்கும், யாரோடும் வருத்தமோ, கோபமோ வருவது இல்லை. எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து அங்கு வாழும் சகோதரர்கள் ஒருவருக்கொருவரை முறை சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்ப்பதே அழகு. மாமா, மருமகன், அத்தான், மைத்துனன், சித்தப்பா, மகன், அண்ணன், தம்பி இப்படி பல. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். சமையல் வேலைகள் சதா நடந்து கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பதை நான் அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். எப்படியும் ஒருவர் சவரம் செய்து கொண்டிருப்பார். ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் பழைய பாடாவதிப் படமொன்றை உணர்ச்சி பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றொருவர் சத்தமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார். படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் தனது கமெண்ட்டுடன். உ.தா. என்னைப் பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுகின்றன – விஜயகாந்த். பயப்படுவாஞ்ஞல்ல . . . முதுகில் குத்திய தேவகெளடா – எடியூரப்பா. குத்தத்தான் செய்வென் . . . இப்படி மதுரைத் தமிழில். வயதில் மூத்த ஒரு சிலர் அந்த வீட்டில் இருந்தாலும் குடும்பத் தலைவர் என்னவோ சீமான்தான்.

ஒரு நாள் காலையில் நண்பர் சீமானை செல்பேசியில் அழைத்தேன். பதிலில்லை. உடனே அவரது இல்லத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் ஒரு குரல், ‘க்ளோ’ என்றது. அராஜகம் இல்லையா? நான் ஒருவன்தான் சீமானை அராஜகம் என்றழைப்பேன் என்பது அங்குள்ள எல்லோருக்கும் தெரியுமென்பதால், எதிர்முனைக் குரல் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘அண்ணே, வணக்கமுண்ணே . . நான் ஜிந்தா பேசுறேன்னே. அண்ணன் குளிக்கிறாருண்ணே என்றது. சரி, நான் வற்ரேன்னு சொல்லு. போனை வைத்த பின் எனக்கு யோசனை. இவன் போனை எடுத்து என்னவோ வினோதமாகச் சொன்னானே. சரி, அப்புறமாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மற்றோர் நாள் சீமான், மற்றும் சில நண்பர்களுடன் நானும் அமர்ந்து அவர் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது. ஜிந்தா போய் போனை எடுத்து ‘க்ளோ’ என்றான். அடடே, இப்படித்தான் அன்றைக்கு நம்மிடமும் சொன்னானா? ஏன் இப்படி உச்சரிக்கிறான்? என்று நண்பர்களிடம் கேட்க நினைத்து, அதை அங்குள்ள யாருமே கவனிக்காமல் இருக்க, சரி அவங்க ஊரில் ஹலோவுக்கு பதில் க்ளோதான் போல என்று சும்மா இருந்து விட்டேன். இனி அந்தத் தொலைபேசி உரையாடல்.

க்ளோ . . .யாருங்க . . கிருஷ்ணமூர்த்தியா . . . ? ஒரு நிமிசம் . . . .சுற்றி எங்கள் எல்லோரையும் பார்த்தான். எங்கள் யார் முகத்திலாவது கிருஷ்ணமூர்த்தி தெரிகிறாரா என்று . அங்கு கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரில் யாருமே இல்லை என்பது எனக்கே தெரியும்.அப்படி யாரும் இல்லீங்களே.ஓ . . .அப்பிடீங்களா . . .என்னங்க . . . இன்னொரு தடவ சொல்லுங்க .. .
சீமான் பொறுமை இழக்க ஆரம்பித்தார்.

ஜிந்தா விடுவதாக இல்லை. சத்தமாக,நீங்க என்ன நம்பர் போட்டிங்க ?ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு மூணு சைபரா? அடடா , இது ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு ரெண்டு சைபராச்சே?

ராங்நம்பர்ன்னு சொல்லேன்டா, சீமான் கத்தினார். பவ்யமாகத் திரும்பி, அதாண்ணே சொல்லிக்கிட்டு இருக்கேன், என்றான் ஜிந்தா.தலையைக் குறி வைத்துப் பறந்து வந்த வஸ்துவுக்கு லாவகமாகக் குனிந்து சமாளித்து போனை வைத்து விட்டு வந்த ஜிந்தாவுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இனி நீ போனை எடுத்தால், தென்னை மரத்தில் கட்டி வைத்து உதைப்போம். உதைப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்து மிரண்டிருக்கிறேன்.

ஜிந்தாவின் உண்மையான பெயர் கணேசனோ, ரவியோ, குமாரோ. சினிமாவில் நடிப்பதற்காக அவனாக வைத்துக் கொண்ட பெயர்தான் ஜிந்தா. மதுரைக்காரன். கருத்த முரட்டு உடல். முறுக்கிய மீசை. கையில், காதில் வகை வகையாய் ஏதேதோ வளையங்கள். கொஞ்சம் காது மந்தம். அதற்கு ஒரு பின்னணிக் கதையுண்டு. ஊரில் த.மு.எ.ச., மற்றும் பல கலை குழுக்களுடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அனுபவம் உண்டு ஜிந்தாவுக்கு. அப்படி ஒரு நாடகத்தில் போராட்டம் நடத்தும் விவசாயக் கூட்டத்தில் ஜிந்தாவும் ஒருவன். போராட்டக்களம், போர்க்களமாகிறது. போலீஸ் வந்து கண்ணீர்ப் புகை குண்டுகளை எறிகிறார்கள். பதிலுக்கு போராட்டக்காரர்களும் வெடிகுண்டுகளை எறிய, இருபுறமும் உயிர்ச்சேதம். செத்து விழும் போராட்டக்காரர்களில் ஜிந்தாவும் ஒருவன். இறந்து கிடக்கும் ஜிந்தாவின் காதருகில் வெடிக்காமல் புகைந்து கொண்டிருந்திருக்கிறது ஒரு வெடிகுண்டு. அசையாமல் பிணமாகக் கிடந்த ஜிந்தா, ஒரு கண்ணைத் திறந்து புகைந்து கொண்டிருந்த குண்டைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் தீராக்கலைவெறியில் பாத்திரமாகவே, அதாவது பிணமாகவே அசையாமல் கிடந்து, அது வெடிக்கும் வரை பொறுமைகாத்து பாதி கேட்கும் திறனை இழந்தான்.

ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் ஜிந்தாவின் கையில் பையுடன் இருந்த இன்னொரு பொருளைப் பார்த்து ஒரு கணம் எல்லோருமே துணுக்குற்றிருக்கின்றனர். அவன் கையிலிருந்தது உறையிடப்பட்ட உண்மையான ஒரு நாதஸ்வரம். என்னடா இது ஜிந்தா? பஸ்ல வரும் போது ஒரு மேளக்காரங்கூட தகராறுண்ணே. க்காளி, என்ன சொல்லியும் அடங்க மாட்டேண்ணுட்டென். அதான் அடிச்சு இதை புடுங்கிட்டு வந்துட்டேன். அதோடு விட்டிருந்தால் அவன் ஜிந்தாவே இல்லை. ஒரு அதிகாலையில் அசந்துத் தூங்கிக் கொண்டிருக்கும் சீமான் குடும்பத்தினரின் காதுகளில் நிறைமாத கர்ப்பிணிப்பூனை ஒன்றின் பிரசவக்கதறலொலி கேட்க, தூக்கம் கலைந்த எரிச்சலோடு எழுந்து பார்த்திருக்கின்றனர். சத்தம் வந்த திசை, மொட்டை மாடியிலிருந்து. தூக்கக் கலக்கத்துடன் பூனைக்கு உதவும் நோக்கோடு மாடிக்குப் போன அவர்கள் கண்டது, ஜிந்தாவின் நாதஸ்வரச் சாதகக் காட்சி. பிறகென்ன. அந்த நாதஸ்வரத்தைப் பிடுங்கி, அதாலேயே . . . . . . .

ரொம்ப நாள் ஃபோனைத் தொடாமலேயே இருந்தான் ஜிந்தா. ஒரு நாள் நாங்கள் அனைவரும் சீமானின் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி மணியடித்தது. எடுறா ஜிந்தா என்றார் சீமான். வேண்டாண்ணே, தயங்கினான். எடுறான்னா. இன்னும் தயங்கினான். நான் உடனே சீமானிடம், ஏன் அராஜகம்? போனை எடுத்தா தென்னைமரத்துல கட்டி வச்சு அடிப்பேன்னா, அவன் எப்படி எடுப்பான் என்றேன். ஐயாமகனே . . அது சும்மா ஒரு கோபத்துல சொன்னது. ஜிந்தா நம்ம தம்பியில்லியா? அவன அடிப்போமா, சொல்லுங்க என்றார். மணியடிப்பது நின்றுவிட்டது. சீமான் தொடர்ந்தார். இப்பெல்லாம் தம்பி ஜிந்தா புத்திசாலியா ஆயிட்டானே! இல்லியாடா தம்பி! பெருமிதம் பொங்கும் முகத்துடன் அதை ஆமோதிக்கும் விதமாக மெல்ல சிரித்தபடி தலைகுனிந்தான் ஜிந்தா. மீண்டும் மணியடித்தது. உற்சாகத்துடன் சென்று போனை எடுத்த ஜிந்தா,

க்ளோ . . .

சீமான் அண்ணனா . . . .

இருக்கறாருங்க . . . .

நீங்க?

ஒரு நிமிசம் . .

கவனமாக மவுத்பீஸைப் பொத்திக் கொண்டு, பணிவுடன் சீமானிடம் •போனை நீட்டியபடியே ஜிந்தா சொன்னது,

அண்ணே, புருசோத்தமன்னு யாரோ ஒரு முஸ்லிம் பேசுறாருண்ணே.

தாயார் சன்னதி

அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் தனது இறுதி நாட்களை அம்மா கழித்துக் கொண்டிருந்த போது அங்கு அவளுக்கு பல ஸ்நேகிதிகள் கிடைத்தனர். எல்லோரும் அம்மாவைப் போலவே. நோயின் தன்மையும், தீவிரமும் மட்டுமே மாறுபட்டிருந்தது. அவர்களில் சிலர் அம்மாவின் வயதை ஒத்தவர்கள். ஒரு சிலர் மூத்தவர்கள். தங்களின் நோய் குறித்த கவலைகளை மறந்து ஏதோ பிக்னிக் வந்தது போல அவர்கள் பழகிக் கொள்வதைப் பார்க்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவருக்குமாக சேர்த்து வேதனை மனதைப் பிசையும். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்திலிருந்து வந்தவர்கள். அங்கிருந்த நாட்களில் அநேகமாக ஒருவரின் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்திருந்தது. தங்களின் நோய் போக அவரவர், தங்களின், மற்றவரின் குடும்பங்களுக்காகவும் கவலைப்பட ஆரம்பித்தனர். அது போலவே சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் தவறவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவரும் அம்மாவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு முஜிபுர் என்று ஒரு மகன். இருபது வயது இருக்கலாம். சட்டையும், கைலியும் அணிந்திருப்பான். மண்டை சின்னதாகவும், உடம்பு குண்டாகவும் இருக்கும். கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன். என் தகப்பனாரைப் பார்த்தால் ‘மாமா, சும்மா இருக்கேளா’ என்பான். பதிலுக்கு ‘மருமகனே’ என்று என் தந்தை அழைக்கும் போது சந்தோஷமாகச் சிரிப்பான். என்னிடமும் நன்றாக பழகினான். முஜிபுரின் தாயார் தன மகன் யாரிடமும் பேசுவதை கட்டுப்படுத்தியே வந்தார்கள். அவனது மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் யாரும் அவனையும், தன்னையும் காயப் படுத்தி விடுவார்களோ என்ற பயம் அந்தத் தாய்க்கு. ஆனால் எங்களிடம் முஜிபுர் பழகுவதை நாளடைவில் அவர்கள் தடுக்கவில்லை. முஜிபுருக்கு எந்த நேரமும் சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்தனை. ‘மெட்ராசுல ஒரு ஹோட்டல்லயும் சின்ன வெங்காயத்தையே கண்ணுல காணோம். எல்லாத்துக்கும் பல்லாரி வெங்காயத்தத்தான் போடுதானுவொ. இட்லியை ஒரு கடையிலயும் வாயில வைக்க வெளங்கலையே. திருநெவேலி அல்வான்னு போர்டு போட்டிருக்கான். ஆனா வாயில போட்டா சவுக்குன்னு சவுக்குன்னு சவைக்கவே முடியலே’ . . இப்படி பல புலம்பல்கள். ஒரு நாள் அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன். மனது அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. முஜிபுர் அருகில் வந்து உட்கார்ந்தான். ‘அண்ணே, இங்கனக்குள்ளெ நல்ல மீனு எந்த கடையில கிடைக்கும்’ என்று கேட்டான். ‘எனக்கு தெரியாதே முஜிபுர். நான் சாப்பிடறதில்லையே’ என்றேன். ‘நீங்க ஐயரா? கருப்பா இருக்கீங்க?’ என்றான். நான் பதிலேதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனேயே ‘மன்னிச்சுக்கிடுங்க. உங்களை கருப்பா இருக்கீங்கன்னு சொல்லிட்டேன்’ என்று எழுந்து சென்றான். வருகிற, போகிற எல்லோரிடமும் போய் பேசிக் கொண்டே இருக்கிறான் என்று முஜிபுரை அவன் தாயார் மனமே இல்லாமல் சில நாட்களிலேயே ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.

அம்மாவின் வார்டிலேயே பாப் ஹேர்கட்டிங்கில் ஒரு பெண்மணி இருந்தார்கள். நீண்ட காலம் டெல்லியில் வாழ்ந்த அவர்களுக்கு சாந்தமான முகம். மெல்லப் பேசுவார்கள். நன்கு படித்தவர்கள் என்பது அவர்களின் தோற்றத்திலேயே தெரிந்தது. சில வேளைகளில் ப்ரீத்தி ஜிந்தா சாயலில் உள்ள அவர் மகள் அவருக்கு சாப்பாடு எடுத்து வருவாள். எப்போதும் பேண்ட் ஷர்ட்தான் அணிந்திருப்பாள். தன் தாயாருக்கு நேரெதிராக முகத்தில் ஒரு துளி சிரிப்பு இருக்காது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவிடம் ‘அந்தப் பொண்ணுக்கிடே ஏதோ சோகம் இருக்கும்மா’ என்பேன். ‘எல்லா ஆம்பிளைப் பயல்களும் பொம்பளைப் பிள்ளையைப் பாத்து சொல்றது இது. உளறாதே’ என்பாள் அம்மா. ஒரு நாள் அம்மாவின் அறைக்கு சென்ற போது அந்தப் பெண்ணின் தாய், அம்மாவிடம் அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். நான் வெளியே வந்துவிட்டேன். பிறகு அம்மா சொன்னாள். ‘நீ சொன்னது சரிதான். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட புருஷனோட வாழலியாம். இன்னிக்கு அவளோட கல்யாண நாளாம். தான் போறதுக்குள்ளே அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி பாத்துரணும்னு சொல்லுதாங்க’ என்றாள். இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அந்தப் பெண் ப்ரீத்தி ஜிந்தாவை என்னால் இயல்பாகப் பார்க்க முடியவில்லை.

கீமோதெரபி என்னும் கதிரியிக்கச் சிகிச்சையை அம்மாவுக்குக் கொடுக்கத் துவங்கினார்கள். அம்மாவுக்கு எப்போதுமே நீண்ட கரு கரு கூந்தல். கீமோதெரபியின் விளைவாக முதலில் கடுமையான வாந்தியும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி உதிர்வதும் ஆரம்பிக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்தது. சில நாட்களிலேயே மொட்டையாகிப் போனாள். அம்மாவின் உடன்பிறந்த தங்கையான என் சித்தி சிறு வயதிலிருந்தே அம்மாவின் தலைமுடியைப் பார்த்து சொல்வாள். ‘ உனக்கு முடியும் உதிர மாட்டேங்குது. நரைக்கவும் இல்லையே’ என்று. அம்மாவின் மொட்டைத் தலையைப் பார்த்து தாங்க மாட்டாமல் கதறி அழுதவள் சித்திதான். திரையுலகின் பிரபல விக் மேக்கரான ரவியிடம் சொல்லி ஒரு நல்ல விக் ஏற்பாடு செய்து அம்மாவுக்குக் கொடுத்தேன். ஓரிருமுறை அதை அணிந்திருப்பாள். பிறகு அவள் அதை விரும்பவுமில்லை. அதற்கு அவசியமும் இல்லாமல் போனது.

அந்த கொடுமையான கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாகவே இருந்தாள். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அம்மாவுடன் சிகிச்சை பெற்று வந்த ஒரு பிராமணப் பாட்டி. சதா சிரிப்பும், கேலியுமாக சந்தோஷமாக மருத்துவமனையில் வளைய வந்து கொண்டிருந்தார் அந்த பாட்டி. பார்ப்பதற்கு மூன்றாம் பிறை படத்தில் கமலின் வீட்டுக்கு அருகில் ஒரு பாட்டி இருப்பாரே! அவரை அப்படியே உரித்து வைத்திருப்பார். நான் விளையாட்டாக இதை அவரிடம் கேட்டு வைக்க, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘என் ஆட்டோகிரா·ப் வேணுமா’ என்பார். தீவிர கிரிக்கெட் ரசிகையான பாட்டியைப் பார்க்க அவரது மகன் வருவார். அவருக்கு ஒரு நாற்பது வயதிருக்கும். ‘இன்னிக்கு மேட்ச் இருக்காடா?’. மகனைக் கேட்பார் பாட்டி. ‘ஆமாமா. எப்படியும் இந்தியா தோத்திரும். ஆஸ்திரேலியா definiteஆ win பண்ணிருவான்’. . . வம்பு பண்ணுவார் மகன். ‘அடேய் தேசத் துரோகி’. . . சிரித்துக் கொண்டே மகனை கடிந்து கொள்வார் அந்த வயதான தாய்.

முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்து விட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. அம்மாவுக்கு தெரிந்திருக்கும்.

ஹார்மோனியம்

ஹார்மோனியத்தை நான் முதன்முதலில் பார்த்தது, தியாகராஜ மாமா வாசிக்கும் போதுதான். எங்கள் வீட்டின் முன்னறையில் மெல்லிசைக் கச்சேரிக்கான ரிஹர்ஸலில் பள்ளி ஆசிரியரான தியாகராஜ மாமா ஹார்மோனியமும், பெரியண்ணன் தபலாவும் வாசிக்கும் போது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். தியாகராஜ மாமா ஹார்மோனியம் வாசிப்பதில் சூரர். எந்த சங்கதியையும் சர்வசாதாரணமாக ஹார்மோனியத்தில் கொண்டு வந்துவிடுவார். அண்ணனும், அவரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். ‘அன்றொரு நாள் இதே நிலவில்’ பாடலில் வரும் ஹார்மோனிய பிட்டை (bit) மாமா வாசித்துக் கேட்க வேண்டும். அதேபோல் ஜி.ராமநாதனின் பெரும்பாலான பாடல்கள். உதாரணத்துக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’.

அதற்குப் பிறகு நான் ஹார்மோனியத்தைப் பார்த்தது ஷா·ப்டர் மேல்நிலைப்பள்ளியில். கையால் போடும் பெல்லோஸுக்கு பதில் காலால் பெடல் செய்து வாசிக்கும் ‘கால் ஹார்மோனியம்’ அந்தப் பள்ளியில் இருந்தது. ஷா·ப்டர் பள்ளியில் கிறிஸ்தவ ஸ்தோத்திரப் பாடல்கள் பாடும் குழுவில் பாடுவதற்காகப் பையன்களைத் தேர்வு செய்தார்கள். ஒவ்வொருவராகப் பாடச் சொல்லி கால் ஹார்மோனியத்தில் ஸ்வரம் பிடித்து வாசித்துக் கொண்டிருந்தார் கோயில் பிள்ளை ஸார். அதில் நான் தேர்வானேன். நியாயமாகப் பார்த்தால் கோயில் பிள்ளை ஸார் வாசித்தது ஹார்மோனியம் இல்லை. ஆர்கன். அவ்வளவு பெரிது. அதன் கருப்பு வெள்ளை கட்டைகளில் கோயில் பிள்ளை ஸாரின் விரல்கள் விளையாடும் போது அதிலிருக்கும் கிளம்பும் இசை, அந்தப் பெரிய சர்ச் ஹால் முழுவதையும் அதிர வைக்கும்.

‘சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,எத்தால்நானடியேன் கடைத்தேறுவேன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே?’

ஸ்கூல் அஸெம்பிளியில் கோயில் பிள்ளை ஸார் ஹார்மோனியத்தில் இந்தப் பாட்டை வாசிக்கத் தொடங்க, அதைத் தொடர்ந்து நாங்கள் பாடுவோம். இந்தப் பாடலின் மெட்டு சங்கராபரணம் ராகத்தில், ரூபக தாளத்தில் போடப்பட்டிருந்தது. மற்ற பையன்களை விட எனக்கு இந்த மெட்டு சீக்கிரம் வசப்பட்டது. காரணம், இந்த மெட்டு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் காது கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட ‘பொன்னார் மேனியனே’யை ஒத்து இருந்தது. அந்தக் குழுவில் சிறுவயதில் நான் பாடிய பல பாடல்களை இன்று ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியத்தில் சினிமாப் பாடல்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு எனக்கும் ஹார்மோனியத்துக்கும் தொடர்பில்லாமல் போனது. ஹார்மோனியத்தின் இடத்தை சிறிது காலம் மிருதங்கம் பிடித்துக் கொண்டது. முறையாக மிருதங்கம் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். கிருஷ்ணமூர்த்தி ஸாரும், அவர் மகன் ராஜூவும் எனக்கு மிருதங்க வகுப்பெடுத்தார்கள். இந்த ராஜூ பள்ளியில் என்னைவிட ஒரு வகுப்பு சீனியர். அவன் வகுப்பெடுக்கும் போதெல்லாம் மிருதங்கம் சொல்லிக் கொடுப்பதை விடவும் அவன் காலில் விழுந்து நான் வணங்குவதில் மட்டுமே அதிக பிரியம் காட்டுவான். அதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அவனாலேயே மிருதங்கத்தின் மீது எனக்கிருந்த விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாயிற்று. அதன் பிறகு வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பாவின் ரூபத்தில் ஹார்மோனியம் என் வாழ்வில் மீண்டும் நுழைந்தது. விநாயகத்துப் பெரியப்பா எங்கள் வீட்டு கொலுவுக்கு வரும் போதெல்லாம் அவர் ஹார்மோனியம் வாசித்தபடி இருமிக் கொண்டே பாட, நான் அவரது இருமலுக்கு பாதியும், பாட்டுக்கு மீதியுமாக மிருதங்கம் வாசிப்பேன். ‘நாத தனுமனிஷம்’ என்று பெரியப்பா ஆரம்பிக்கும் போதே ஹார்மோனியமும் சேர்ந்து அவருடன் இரும ஆரம்பிக்கும்.

பூட்டியிருந்த எங்கள் வீட்டின் மாடியறைக்குள் செல்ல, பக்கச் சுவர் வழியாக நண்பன் சந்திரஹாசனுடன் சேர்ந்து நான் போக முயலும் போது சுவற்றின் விளிம்புப் பகுதி உடைந்து கீழே விழுந்தேன். விளைவு, எனது இரண்டு மணிக்கட்டுகளும் முறிந்து போயின. ஆறு மாதத்துக்குப் பிறகு மிருதங்கம் வாசிக்க முயலும் போது அது இனிமேல் முடியாது என்பது தெரிய வந்தது. பூஜையறையின் ஒரு மூலையிலிருந்த ஹார்மோனியம் என்னை மெல்ல தன் பக்கம் இழுத்தது. மெல்ல மெல்ல நானாக வாசிக்கத் தொடங்கினேன். ஒருவிதப் பித்து தலைக்கேற, இரவுபகலாக ஹார்மோனியத்துடனேயே கிடந்தேன். மதுரைலிருந்து வரும் போது அப்பாவின் காரிலிருந்து ஒரு சின்ன கேஸியோ (casio) இறங்கியது. பல வாத்திய ஒலிகளடங்கிய அந்தப் புத்தம்புது வாத்தியத்துடன் சில காலம் கழிக்க, அடுத்து பெரிய கேஸியோ ஒன்றும் கிடைத்தது. இளையராஜாவின் பாடல்களனைத்தையும் வெறி பிடித்தவன் போல் வாசித்துக் கொண்டிருந்ததை கவனித்த விநாயகத்துப் பெரியப்பா, இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்தவராய், அவரது நண்பர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். திருநெல்வேலியின் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞரான அவர் பெயர் கிருஷ்ணய்யர்.

வயலின் என்றாலே நமக்கு ஞாபகம் வருகிற குன்னக்குடி வைத்தியநாதன் சாயலிலேயே கிருஷ்ணன் ஸாரும் இருப்பார். நெற்றியில் டிரா·பிக் சிக்னல் லைட்டும், உடம்பில் பொன்னாடைச் சட்டையும் இல்லாத வைத்தியநாதனே, கிருஷ்ணன் ஸார். பெரும்பாலும் சட்டை அணிய மாட்டார். வேஷ்டியின் இடுப்புப் பகுதியில் ஹியரிங் எய்டு மிஷின் இருக்கும். நாம் பேச ஆரம்பிக்கும் போது அதன் வால்யூமைக் கூட்டிக் கொள்வார். மனைவியை இழந்தவர். எல்லா திருநெல்வேலி பிராமணர்களையும் போல சுத்தமான நெல்லை பாஷைதான் பேசுவார். அபூர்வமாகவே பிராமண பாஷைச் சொற்கள் வரும். கூன் விழுந்தமாதிரிதான் உட்காருவார். அப்படி உட்கார்ந்திருக்கும் போது வயிற்றில் விழும் மடிப்புகளும், நெற்றியில் இருக்கும் சுருக்கங்களும் ஒரே மாதிரி இருக்கும். கிருஷ்ணன் ஸார் வயலின் கலைஞராக இருந்தாலும், எனக்கு ஹார்மோனியம் சொல்லிக் கொடுக்கச் சம்மதித்தார். ஹார்மோனியம் போக அவரிடம் புல்லாங்குழல், வீணை, வயலின் கற்றுக் கொண்ட மாணவர்களும் உண்டு. நான் ஏற்கனவே ஓரளவு ஹர்மோனியம் வாசிக்கக் கூடியவன் என்பதால் வெகு சீக்கிரத்திலேயே கிருஷ்ணன் ஸாரின் சீனியர் மாணவனானேன். அவர் வயலினில் வாசிக்கும் எதையும், நான் ஹார்மோனியத்தில் வாசித்து விட அவருக்கு பிரியமான, நம்பிக்கைக்குரிய சிஷ்யனானேன். அவர் இல்லாத நேரங்களில் என்னிடம் மற்ற மாணவர்களை பாடம் வாசித்து காட்டச் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்தினார். வீணை கற்றுக் கொண்டிருந்த, கிட்டத்தட்ட வீணை சைஸிலுள்ள ஜானகி மாமிக்கு இது பொறுக்கவில்லை. ஒரு சின்னப் பயலிடம் போய் பாடத்தை வாசித்துக் காட்டுவதா என்று பொருமினார். ஸாரிடம் ஜாடைமாடையாக சொல்லியும் பார்த்தார். அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அந்த மாமி செய்யும் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி என்னை சரியாக அவற்றை ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டச் சொல்லி மாமியை மேலும் வெறுப்பேற்றுவார்.

எங்கள் வீட்டில் உள்ள ஹார்மோனியத்தை விடவும் கிருஷ்ணன் ஸார் வீட்டு ஹார்மோனியமே எனக்கு வாசிப்பதற்கு சுகமாக இருந்தது. இத்தனைக்கும் எங்கள் வீட்டு ஹார்மோனியம் புத்தம் புதியது. ஸாரின் ஹார்மோனியம் அருதப் பழசு. ஆனாலும் அதுவே எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய பாடம் முடிந்த பிறகும் நான் ஏதேனும் ராகங்கள் வாசிப்பேன். பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் உள்ள பாடல்கள்தான். வேஷ்டியின் மடிப்பில் உள்ள மெஷின் பக்கம் ஸாரின் கை தானாகச் செல்லும். ‘இது ஸ்ரீரஞ்சனில்லா? ஆரு போட்டது? அவந்தானா?’ தரையில் ‘இ’ என்று எழுதிக் காண்பித்து கேட்பார். ஆமாம் என்பேன். ‘அவனை வாரியலக் கொண்டு அடிக்க வேண்டாமா. என்னமா போட்டிருக்கான். இன்னொரு மட்டம் வாசி’ என்று கேட்டு, அவரும் வயலினை எடுத்துக் கொள்வார். சிம்மேந்திர மத்தியமம், அம்ருதவர்ஷினி, குந்தலவராளி, மணிரங்கு என பல ராகங்களில் இளையராஜா மெட்டமைத்த பாடல்களை வாசித்துக் காட்டி நான் கிருஷ்ணன் ஸாரிடம் அந்தந்த ராகங்களின் நுணுக்கங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வேன். அடிக்கடி சொல்வார். ‘ஒனக்கு குரு அவம்லா’. தரையில் எழுதி காண்பிப்பார் ‘இ’ என்று.

சென்னைக்கு நான் கிளம்பும்போது அவரிடம் சொல்லிக் கொள்ள போனேன். காலில் விழுந்து வணங்கியவனை திருநீறு பூசி ஆசீர்வதித்தவர், நான் சற்றும் எதிர்பாராவண்ணம் கட்டிப் பிடித்து ஓவென அழத் துவங்கிவிட்டார். உடைந்து உருகிப் போனேன். நீண்ட நேரம் கழித்தே என்னால் இயல்பு நிலைக்கு வர முடிந்தது. கிருஷ்ணன் ஸாரின் நான்கு மகன்களும் வயலின் கலைஞர்களே. திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவில் வாசித்து வந்தார்கள். ஸாரின் கடைசி மகன் பாலாஜிதான் எனது இசைத் தோழர். இன்றைக்கும் எனது இசை குறித்த எந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்து வைப்பவர் அவரே. என்னைத் தொடர்ந்து பாலாஜியும் சென்னைக்கு வந்துவிட, கொஞ்ச நாளில் கிருஷ்ணன் ஸாரும் வந்து விட்டார். சென்னையில் சில நாட்கள் இளைய மகன் வீட்டிலும், சில காலம் மகள் வீட்டிலும், இன்னும் சில காலம் மற்றொரு மகன் வீட்டிலுமாக ஸார் இருந்தார். அவ்வப்போது பார்க்கப் போவேன். ஒருமுறை அவர் மகள் வீட்டில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கமலா அக்காதான் கதவைத் திறந்தார்கள். ‘ஏ அப்பா. தம்பிக்கு இப்போதான் அக்கா வீட்டுக்கு வர வளி தெரிஞ்சுதாக்கும்’ என்றபடியே வரவேற்றார்கள். ‘அப்பா, இங்கே பாரு, யாருன்னு’ சத்தமாகச் சொன்னார்கள். மெஷினை எடுத்துக் காதில் மாட்டியபடியே என்னைப் பார்த்த ஸாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘ வா வா. இரி’ என்றபடியே தரையில் அமர்ந்தார். நானும் உட்கார, உட்கார்ந்தபடியே நகர்ந்து சற்றுத் தள்ளியிருந்த ஹார்மோனியம் ஒன்றை இழுத்து என் பக்கம் தள்ளினார். ‘·பர்ஸ்ட் கிளாஸ் சரக்காக்கும் ஜெர்மன் ரீடு.’ அந்த ஹார்மோனியத்தில் பெல்லோஸ் பக்கவாட்டில் இருந்தது. ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன். வாசிக்க வாசிக்க வழுக்கிக் கொண்டு போனது. ‘ஸ்பீடு இளுக்கு பாத்தியா. நீ வந்து வாசிக்கணும்னு ஆசைப்பட்டேன். வந்துட்டே’ என்றார்.

பிறகு கொஞ்ச காலம் திருநெல்வேலி, இன்னொரு மகனுடன் திண்டுக்கல், பின் மறுபடியும் சென்னை என்று கிருஷ்ணன் ஸார் சுற்றிக் கொண்டிருந்தார். ‘அப்பா வந்திருக்கா’ என்று பாலாஜி ·போனில் சொல்வார். போய்ப் பார்ப்பேன். சந்தோஷமாக வரவேற்று சம்பிரதாயமாக, ‘சௌக்கியமா இருக்கேல்லா?’ என்று விசாரித்துவிட்டு, ‘பொட்டி வாசிக்கியா?’ என்று ஹார்மோனியத்தை எடுத்துத் தருவார். தானும் வயலினை எடுத்துக் கொள்வார். எப்படியும் எங்களது வாசிப்பில் ஏதாவது ஒரு ராகம் வழியாக இளையராஜா வந்துவிடுவார்.

பிறகு ரொம்ப நாட்களாகவே பாலாஜியின் வீட்டுக்கு கிருஷ்ணன் ஸார் வரவில்லை. திண்டுக்கல்லில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பாலாஜியைப் பார்க்கும் போதெல்லாம் விசாரித்துக் கொள்வேன். ஸாரை போய்ப் பார்க்க முடியவில்லை என்பதால் ஹார்மோனியமும் வாசிக்கவில்லை. வீட்டில் பெரிய கீபோர்டு இருந்தாலும் என்றாவது ஒரு நாள் என் மகன் வாசிக்கும் போது எடுத்து வாசித்துப் பார்ப்பதோடு சரி. கைக்கு அடக்கமான ஹார்மோனியம் வாசிப்பதில் உள்ள சுகம், அத்தனை பெரிய கீபோர்டில் கிடைப்பதில்லை. மற்ற வாத்தியங்களில் இல்லாத ஒரு சௌகரியம் ஹார்மோனியத்தில் உண்டு. ஸ்வரங்களை கண்ணால் பார்க்க முடிகிற ஒரே வாத்தியம் ஹார்மோனியமே. பிற வாத்தியங்களில் வாசித்துதான் சொல்ல முடியும். ஆனால் ஹர்மோனியத்தில் தூரத்தில் இருந்தே, அதோ அதுதான் ‘ஸ’, அதுதான் ‘க’ என கட்டைகளைக் காட்டி ஸ்வரங்களைச் சொல்லி விடலாம். இப்படி ஒரு வாத்தியத்தைப் போய், இது வெளிநாட்டில் இருந்து வந்து நம் சங்கீதத்தில் புகுந்ததாலோ என்னவோ, பாரதியார் எதிர்த்து எழுதியிருக்கிறார். அதுபோக ஹார்மோனியத்தில் உள்ள இன்னொரு விசேஷம், சங்கீதத்தின் ஆதார ஸ்வரங்களான ‘ஸ ப ஸ’ பிடித்து அதனுடனேயே ஒரு மனிதன் பாடினால், அவன் குரலைப் போலவே அந்த ஸ்வரங்களும் ஒலிக்கும். இந்த சங்கதி, சங்கீதம் நன்கு தெரிந்த எங்களூர் சுப்பையாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மாலையில் சாலிகிராமத்திலுள்ள சங்கரநாராயணர் கோயிலுக்குச் சென்றுவிட்டு அதன் நேர்திசையிலுள்ள தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் ஒரு சேரில் அமர்ந்தபடி தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் ஸார். ஒரே சமயத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். வேகவேகமாக அந்த மாடிப்படிகளில் ஏறி என் குருநாதரின் கால்களில் விழுந்தேன். ‘வா வா’ என்று என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். வழக்கம் போல் அவர் தரையில் உட்கார, நானும் அவருடன் அமர்ந்து கொண்டேன். வயதின் காரணமாக ஆள் ரொம்பவும் குறுகியிருந்தார். முகத்தில் பழைய தேஜஸ் இல்லை. ‘உடம்பு சரியில்லியா?’ என்றேன். ‘ இந்த ஒடம்பு என்னை விட்டுப் போவேனாங்கு. வேற என்ன சொல்லச் சொல்லுதெ?’ கண் கலங்கினார். என்னால் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘என் கூட சேந்த ஸெட்டு யாரும் இல்ல. பரபரன்னு தெக்கையும், வடக்கையும் சுத்துன காலம் போயி இப்போ ஒத்தைக்காட்டுக் கொரங்கு கணக்கா தனியா ஒக்காந்திருக்கேன். என்னைய இந்த நாசமாப் போற ஊர்ல கொண்டு வந்து நட்டுட்டானுவொ. எல்லாம் அந்த முண்டையச் சொல்லணும்.’ மேலே காண்பித்தார். எப்படியும் அன்று ஒருமணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். நாங்கள் இருந்த அறையில் எங்கள் கண் முன்னேயே ஹார்மோனியம் இருந்தது. ஆனால் அங்கிருந்து நான் கிளம்பும்வரை அவர் என்னை வாசிக்கச் சொல்லவேயில்லை. நானும் கேட்கவில்லை.