நான் சொன்ன திரைக்கதையை படமாக்க ஆர்யா முடிவு செய்தபோது படத்துக்கான டைட்டிலை நான் அவருக்குச் சொல்லவில்லை. காரணம், அப்போது எனக்கே டைட்டில் என்னவென்று தெரியாது. அதன் பிறகு முழுவதுமாக எழுதப்பட்டிருந்த திரைக்கதையைப் படித்துப் பார்த்தபோது ‘படித்துறை’ என்ற தலைப்பு அந்தக் கதைக்குச் சரியாக இருக்கும் என தோன்றியது. தமிழ்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி ஓடுகின்ற திருநெல்வேலியைச் சுற்றியே கதைக்களம் அமைந்திருப்பதாலும், மனித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கும் வகையில் ஒரு குறியீடாகவும் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதை நான் சொன்னவுடன் ஆர்யா மறுப்பேதும் சொல்லாமல் ஆமோதித்தார். இளையராஜா அவர்களிடம் இந்தத் திரைக்கதையைச் சொன்னபோதும் நான் முதலில் இந்தத் தலைப்பைச் சொல்லவில்லை. பாடல் பதிவின் போது திடீரென நினைவுக்கு வந்தவராய் கேட்டார். ‘ஆமா, என்ன டைட்டில் வச்சிருக்கே?’. அப்போதுதான் அவருக்கு இன்னும் டைட்டிலைச் சொல்லவில்ல என்பதே என் மரமண்டைக்கு உறைத்தது. ‘படித்துறை’ என்றேன். ‘பிரமாதம்யா’ என்றார். ஆனால் எனது உதவி இயக்குனர் ஒருவருக்கு இந்த டைட்டில் பிடிக்கவில்லை. முதலில் தனக்கு இந்தத் தலைப்புக்கான அர்த்தம் புரியவில்லை என்றார். பிறகு யூத்துக்கு இது போய் சேராது என்று கவலைப்பட்டார். இரண்டாவது காரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் முதல் காரணம், எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. காரணம், ‘படித்துறை’ என்ற தலைப்பு தனக்கு புரியவில்லை என்று சொன்ன அந்த உதவி இயக்குனர் ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி. Yes. Tamil MA. இந்தக் கவலையுடன் எனது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களைச் சந்தித்தேன். கடுமையான கோபத்துடன் ‘வாத்தியார்’ சொன்னார். ‘படித்துறை’ங்கிற இந்த டைட்டிலை மட்டும் நீ மாத்தினே, நான் உன்னை அடிப்பேன்’. ‘அப்பாடா’ என்றிருந்தது.

பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்பதிவு நடந்து கொண்டிருந்தது. இளையராஜா அவர்களின் மேனேஜர் சுப்பையா திருநெல்வேலிக்காரர். ‘வாத்தியாரிடம்’ உதவி இயக்குனராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே எனக்கு பழக்கம். எனது முதல் படம், அதுவும் திருநெல்வேலியிலேயே படமாக்கப் போகிறேன் என்பது குறித்து அவருக்கு ஏக குஷி. வருவோர் போவோரிடமெல்லாம் ‘எங்க ஊர்ப்படம்லா’ என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது வேறு ஏதோ ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் இளையராஜா அவர்களைப் பார்க்க வந்திருந்தார். திருமண வரவேற்பு மேடையில் புகைப்படம், வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் புதுமாப்பிள்ளை போல இருந்தார். உடம்பை இறுக்கிப் பிடிக்கும் சஃபாரி உடையில், பத்தில் எட்டு விரல்களில் மோதிரங்கள் அணிந்திருந்தார். கால்களில் ஷூஸ் போட்டிருந்ததால் கால் விரல்களை என்னால் கவனிக்க முடியவில்லை. சுப்பையா அந்தத் தயாரிப்பாளரை நேரே என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். ‘எங்க குடுமபத்துல பாலா அண்ணனுக்கு அப்புறம் வந்திருக்க வேண்டியவரு. கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ஸார்தான் ம்யூசிக்கு. ஷூட்டிங் பூரா எங்க ஊர்லதான். படம் பேரு ‘பாசறை’ என்றார். உடனே அந்த சஃபாரி தயாரிப்பாளர் முகம் மலர்ந்து ‘பாசறை. ஃபர்ஸ்ட் கிளாஸ் டைட்டில் ஸார். விஷ் யூ ஆல் தி பெஸ்ட்’ என்று என் வலது கையை தன் இரண்டு முரட்டுக்கரங்களாலும் பிடித்து அழுத்தினார். வலி தாங்க முடியவில்லை. சிரித்தபடி ‘தேங்க்ஸுங்க’ என்று சமாளித்தேன்.

படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்குப் போய் இறங்கினோம். நான் பிறந்து வளர்ந்த ஊர்தான் என்றாலும் படப்பிடிப்புக்கான சாத்தியங்களுக்காக வேறு ஒரு கண் கொண்டு திருநெல்வேலியைப் பார்க்க வேண்டியிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அதாவது திருநெல்வேலி ஊருக்குள் எங்கேயுமே படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது என்றார்கள். நிலைகுலைந்து போனேன். அங்கு அப்போதிருந்த கமிஷனர் ஒரு வடநாட்டுக்காரர். என்ன சொல்லியும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. திருநெல்வேலி ஊரை வெறும் லொக்கேஷனாக பயன்படுத்திய எத்தனையோ படங்களுக்கு ‘படித்துறை’ படப்பிடிப்புக்கு முன்புவரை அனுமதி கொடுத்திருந்தார்கள். ஆனால் அசல் திருநெல்வேலியை, அதன் மனிதர்களை படமாக்க நினைக்கும் ஒரு தாமிரபரணிக்காரனுக்கு அவனது சொந்த மண்ணில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. சரி, பரவாயில்லை என்று கிளம்பி திருநெல்வேலியின் எல்லையைத் தாண்டிய வெளிப்புறங்களிலேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டோம். இரண்டாம் நாள் அடுத்த குண்டு விழுந்தது. ‘படித்துறை’ படத்துக்காக நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்த கதாநாயகி படப்பிடிப்புக்கு வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள். மூன்றாவது நாளிலிருந்து அந்தப் பெண் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்த எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண்ணிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது மேனேஜருக்கும், அவருக்கும் ஒத்துவரவில்லையாம். அந்த மேனேஜரால் தான் ஒத்துக் கொண்ட படங்களில் இனி நடிப்பதாக இல்லை என்று சொன்னார். உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள். இதற்கு பதிலாக உங்களின் அடுத்த படத்தில் பணம் வாங்காமலேயே நடிக்கிறேன் என்றார். கேமெராவையேப் பார்த்திராத புதிய மனிதர்களை ‘படித்துறை’ படத்துக்காக தேர்வு செய்து வைத்திருந்தோம். இந்தப் பெண்ணின் காட்சிகளைப் படமாக்கும் போது அந்த புதியவர்கள் வேடிக்கை பார்த்தால் ஓரளவு சினிமா பிடிபடும் என்பது எங்கள் எண்ணமாக இருந்தது. இப்போது அந்தத் திட்டத்தில் மண். மறுநாளிலிருந்து நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த காட்சிகளுக்கு பதிலாக அந்தப் புதிய மனிதர்களை படமாக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். ஒருபக்கம் லொக்கேஷன் பிரச்சனை. மறுபக்கம் புதுமுகங்களை வேலை வாங்குவதில் உள்ள சிரமம். இதற்கிடையே புதிய கதாநாயகியையும் தேடிப் பிடிக்க வேண்டும். படப்பிடிப்பின் இடைவேளை நேரங்களில் இணையம் மூலமாக புதிய கதாநாயகியைத் தேடும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஆர்யா நிறைய புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தார். அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது. ஆர்யாவை அந்தப் பெண்ணிடம் பேசச் சொல்லிவிட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்தோம்.

அதிகாலையில் ஒட்டுமொத்த யூனிட்டையும் கிளப்பிக் கொண்டு திருநெல்வேலியின் வெளிப்புறத்துக்குச் சென்று ஒரு இடத்தில் எல்லோரையும் இருக்கச் செய்து சாப்பிடச் சொல்லிவிட்டு லொக்கேஷன் பார்க்கக் கிளம்புவோம். அரைமணிநேரத்துக்குள் ஒரு இடத்தை தேர்வு செய்து, அதில் இந்தக் காட்சியை எடுத்து விடலாம் என்று முடிவு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். இதற்கிடையில் சென்னையில் இருந்த அந்தப் புதிய கதாநாயகிக்கு தொலைபேசியிலேயே முழுக் கதையையும் சொல்லி சம்மதிக்க வைத்தேன். ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையில் நடிக்கவிருக்கும் அந்தக் கதாநாயகியை, இயக்குனரான நான் பார்க்காமலேயே அவர் என் படத்துக்குக் கதாநாயகியானார். ஏதோ ஒரு தைரியத்தில் இந்த முடிவை எடுத்தேன். ஆர்யாவுக்கு என் மேலும், அந்தப் பெண்ணுக்கு நான் சொன்ன கதையின் மீதும், எனக்கு என் உதவியாளர்களின் ஒத்துழைப்பின் மீதும் நம்பிக்கை இருந்ததாலேயே இது சாத்தியமாயிற்று.

திருநெல்வேலியின் பழமையான தியேட்டர்களுள் ஒன்றான ‘லட்சுமி தியேட்டர்’ இப்போது இயங்கவில்லை. மதிய உணவுக்காக எங்களுக்கு அதை திறந்து கொடுத்திருந்தார்கள். நானும், நண்பர் அழகம்பெருமாளும் உணவருந்திவிட்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உட்பட பழைய பெரும் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை திருநெல்வேலி மக்களுக்குக் காண்பித்து பரவசப்படுத்தியிருந்த லட்சுமி தியேட்டரின் அவ்வளவு பெரிய பழைய திரைக்கு முன் உள்ள காலியான, உடைந்த, தூசியடைந்த இருக்கைகளில் உட்கார்ந்திருந்தோம். அப்போது சென்னையிலிருந்து ‘படித்துறை’ படத்தின் கதாநாயகி ஜீன்ஸும், ஆண்பிள்ளைச் சட்டையும், உயர்குதிகால் செருப்பும் அணிந்தபடி நேரே அழகம்பெருமாளிடம் வந்து வணங்கி ‘ஸார், நீங்கதானே டைரக்டர்?’ என்று கேட்டார்.
*
ஆற்றங்கரையில் நண்பர்கள் அனைவரும் தலையிலிருந்து பாதம் வரை எண்ணெய் தேய்த்துக் கொண்டு, குளிப்பதற்குமுன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது மாதிரி ஒரு காட்சி. இதில் நடித்த இளைஞர்களின் நால்வர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தினமும் ஷவரில் குளித்துப் பழக்கப்பட்டவர்கள். வாழ்க்கையில் முதன்முறையாக எண்ணெய் தேய்த்து ஆற்றில் குளித்தார்கள். அது ஒரு நீண்ட காட்சி. காலையிலிருந்து மாலைவரை படம்பிடித்தோம். அன்று முழுவதும் அந்த இளைஞர்கள் அனைவரும் உடம்பு முழுக்க எண்ணெயுடன் இருந்ததால் மறுநாள் எல்லோருடைய உடம்பும் புண்பட்டு சின்னச் சின்னக் கொப்பளங்கள் வந்து சிரமப்பட்டுவிட்டனர். நல்ல வேளையாக அந்தக் காட்சியில் எந்தவொரு ஷாட்டும் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் அன்றைக்கே எடுத்து விட்டோம். ஏதேனும் மிச்சம் வைத்திருந்து இன்னொரு நாள் எடுத்திருந்தால் பையன்கள் இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு லாரி பிடித்திருப்பார்கள்.

’படித்துறை’ திரைக்கதையில் ஒரு அறுபது வயதுக்கார கதாபாத்திரத்துக்காக திருநெல்வேலியைச் சேர்ந்த கஜேந்திரன் என்ற மனிதரை நடிக்க வைத்தோம். ‘லாலா’ என்றழைக்கப்படும் அவர் ஒரு டிரைவர். மனதளவில் வெகுளி. அவரிடம் உள்ள ஒரே பிரச்சனை, தனக்கு தெரியாதது இந்தவுலகில் எதுவுமே இல்லை என்ற அவரது நம்பிக்கைதான். அது மூடநம்பிக்கை என்பது அவரைச் சந்தித்த சில மணித்துளிகளில் அவரே நமக்கு உணர்த்திவிடுவார். காட்சிக்குத் தேவையான வசனங்களை உதவி இயக்குனர்கள் அவருக்குச் சொல்லி முடிக்கும் முன்னரே அவராக பேச ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் ‘பிரம்மாஸ்திரம்’ என்று அவர் சொல்ல வேண்டும். எனது இணை இயக்குனர் பார்த்திபன் எவ்வளவோ முறை கெஞ்சிப் பார்த்தும் ‘லாலா’ மீண்டும் மீண்டும் ‘பிரம்ம சாஸ்திரம்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்துக்கு மேல் பார்த்திபன் பொறுமை இழந்து கடும் கோபம் கொண்டார். விளைவு, முன்மண்டை வீங்கிவிட்டது. ‘லாலா’வுக்கல்ல. விரக்தியின் விளிம்புக்குச் சென்ற பார்த்திபன் வசனப் பேப்பரை தூக்கி எறிந்து விட்டு, சுவற்றில் ‘மடேர் மடேர்’ என்று முட்டிக் கொண்டார்.

இன்னொரு காட்சியை சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்டில் நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு எடுத்துக் கொண்டிருந்தோம். உணர்ச்சிபூர்வமான காட்சி அது. நடிகர்கள் அனைவரும் கண்களில் கிளிசரின் போட்டு கலங்கி நடித்துக் கொண்டிருந்தனர். காட்சியை விளக்கிவிட்டு வந்து மானிட்டரில் உட்கார்ந்திருந்தேன். காட்சியின்படி வெளிநாட்டுக்குக் கிளம்பிச் செல்லும் ஒரு கதாபாத்திரத்திடம் ‘லாலா’ வந்து ’மாப்ளே, கவலப்படாம போயிட்டு வா’ என்று சொல்ல வேண்டும். கண்களில் கண்ணீருடன் அந்த இளைஞனும், வழியனுப்ப வந்த மற்ற இளைஞர்களும் காத்து நிற்க, தளர்ந்த நடையுடன் வந்து ‘லாலா’ அந்த இளைஞனின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி, ‘மாமா’ என்றார். கையை உதறிவிட்டு அந்த இளைஞன் சிரித்தபடி ஓட, மற்றவர்களும் கிளீசரின் கண்ணீரையும் மீறி வெடித்துச் சிரித்தனர். ‘கட்’ என்றேன். காமிராமேனைக் காணோம். காமிராவை விட்டு இறங்கி கீழே உட்கார்ந்து வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் காலையில் சேரன்மகாதேவியில் ஒரு இடத்தில் யூனிட் ஆட்கள் எல்லோரையும் அஸெம்பிள் செய்துவிட்டு லொக்கேஷன் பார்த்துக் கொண்டிருந்தோம். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதி அது. இடுப்பில் சாரம்(கைலி) அணிந்திருந்த ஒரு மனிதர் என்னருகில் வந்து, ‘மகனே, என்னை ஞாபகம் இருக்காலெ? நாந்தாலெ சாகுல் சித்தப்பா’ என்றார். சிறுவயதிலிருந்தே எங்கள் குடுமபத்தோடு ஒட்டி உறவாடிய எங்கள் குடும்ப நண்பரவர். நான் பார்த்து பலவருடங்கள் ஆகியிருந்தது. அடையாளம் தெரிந்து கொண்டு ‘சித்தப்பா’ என்றேன். ‘எவ்வளவு சங்கடப்பட்டு இந்தப் படத்தை எடுக்கே! எல்லாம் கேள்விப்பட்டேன். கவலப்படாதே. நல்லதே நடக்கும். இன்ஷா அல்லா’ என்றார். லொக்கேஷன் பிரச்சனை, புது நடிகர்களுடன் போராட்டம் இத்தனையையும் மீறி குறைந்த செலவில் குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம். தினமும் ஏதேனும் ஓர் இடைஞ்சல் வரும். ஆனாலும் ஒரு நாள்கூட நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. டைட்டில் வைத்ததிலிருந்தே சிறிதும், பெரிதுமாக நிறைய இடைஞ்சல்கள். தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எண்ணிலடங்காத போராட்டங்கள். சென்ஸார் ஆன பிறகும் உடனே ரிலீஸாக முடியாத சூழல். ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று. இன்ஷா அல்லா.

65 thoughts on “’படித்துறை. சில சுவாரஸ்யங்கள்

  1. எல்லாவற்றையும் இழந்தோம் என்றாலும், நாளை என்பது மீதி உள்ளது. நம்புங்கள் நண்பரே !
    நம்பிக்கைதான் வாழ்க்கை. எல்லாம் நன்றாக நடக்கும். ஆண்டவன் அதனதன் காலத்தில் அந்த அந்த காரியங்களை நல்லபடி செய்து முடிப்பார்.

    அன்புடன்
    ராமசந்திரன்
    அபு தாபி

  2. நானும் ஆவலாக எதிர்பார்க்கும் படமிது.

    ////சென்ஸார் ஆன பிறகும் உடனே ரிலீஸாக முடியாத சூழல். ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று. இன்ஷா அல்லா.//

    நிச்சயம் நடைபெறும். முதல் நாளே பார்த்து விட்டு எழுத முயல்கிறேன். 🙂

  3. படம் விரைவில் வெளி வரவும், வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்
    லட்சுமி தியேட்டர் என்றதும் வண்ண நிலவனின் கம்பாநதி, தியேட்டர் ஆப்பரேட்டரும் , கல்யாணியா பிள்ளை முதலாளியும் ஞாபகம் வருகின்றனர்.

  4. சுவாரஸ்யமான பகிர்வு. உங்கள் கஷ்டங்களை கூட சிறு புன்னகையுடன் பகிர்ந்துள்ளீர்கள்

    படம் விரைவில் வெளியாகி வெற்றி பெற வாழ்த்துகள்

  5. //ஒரு மனிதர் என்னருகில் வந்து, ‘மகனே, என்னை ஞாபகம் இருக்காலெ? நாந்தாலெ சாகுல் சித்தப்பா’ என்றார். சிறுவயதிலிருந்தே எங்கள் குடுமபத்தோடு ஒட்டி உறவாடிய எங்கள் குடும்ப நண்பரவர். நான் பார்த்து பலவருடங்கள் ஆகியிருந்தது. அடையாளம் தெரிந்து கொண்டு ‘சித்தப்பா’ என்றேன்.//
    இது போன்று படம் முழுவதும் விரவி கிடக்கப் போகும் நெகிழ்வான சம்பவங்களுக்காக படித்துறையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  6. உங்கள் பொறுமைக்கு தன்னம்பிக்கைக்கும் கட்டாயம் நல்ல சன்மானம் கிடைக்குங்க சுகா!

  7. கவலைப்படாதீங்க அண்ணே.இத்தனை பேர் அன்பும்,எங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் உங்களை வெகு நிச்சயமாக ஜெயிக்க வைக்கும்!”படித்துறை” வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி அடைய என் நல்வாழ்த்துக்கள்!தம்பி.முத்துராஜன்,திண்டுக்கல்.

  8. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்சுகா. நிச்சயம் விரைவில் படம் வெளிவரும்.

  9. சுகா! லாலா சொதப்பியதுபற்றி எழுதியிருக்கே…சரி. இன்னொரு கெழம் ஒன் ‘வாணாலெ எடுத்து, வாணதீர்த்தம் ஆடினானே…அவனப்பத்தி ஏன் எளுதலே? போனாப்போட்டும்னு விட்டுட்டியா?

  10. சுகா, விகடனில் வார்த்தைகளில் நம் ஊரை வடித்த உங்கள் கரம் திரையிலும் படித்துறையாக விரிவடைந்திருக்கிறது. தாமதமாக வந்தாலும் மிகப் பெரிய வெற்றியைத் தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!!

  11. நம்ம ஊரு பாம்பே தியேட்டருல படம் பாத்துப்புட்டு உங்களுக்கு போன் போடுதோம்

  12. my best wishes to you Suka.. Kashta pattu kedaikkarathu thaan romba naalaikku nilaikkum. don worry and keep going with the flow of life

  13. நான் கடவுள் ரிலிஸ் ஆகும் சமயத்தில் தினத்தந்தியில் படித்துறை பற்றிய முதல் செய்தியை படித்ததில் இருந்து ஆவலாக உள்ளேன், பாடலை கேட்பதற்கும், படத்தை பார்ப்பதற்கும்.

    யூ-ட்யூப்பில் விஜய் டிவியில் வந்த சிறப்பு நிகழ்ச்சியை பார்த்தேன். பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதம்.பாம்பே ஜெயஸ்ரீ பாடிய தோரோடும் வீதியில் பாடலை என்று கேட்போம் என்று ஆவலோடு காத்திருக்கேன். கவிஞர் முத்துலிங்கத்தை நான் சந்தித்தபோது கூட உங்களைப்பற்றியும் பாடல்பற்றியும் மிக நல்லவிதமாக கூறினார்.

    அண்ணே முதலில் பாடலை ரிலீஸ் செய்யலாமே, பின்னர் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

  14. சுகா,ஆடியோ வெளியிடுவதில் ஏன் இத்தனை தாமதம்?அதிலுமா பிரச்சனைகள்?மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன் இசைக்கும் படத்துக்கும்.படித்துறைக்கு பார்க்க கொஞ்சம் கர்வத்தோடு செல்வேன் எங்க ஊரு படம்லே! மக்கா ! பெங்களூரில் Release செய்யுமாறு ஆர்யாவை கேட்டுக்கொள்கிறேன்.முடிந்தால் நெல்லையில் மறுதடவை பார்க்கிறேன்.

  15. நான் தியேட்டருக்குப் போய் படம் பார்த்து மாமங்கஙள் ஆகியிருக்கும்.டீ வியிலும் பார்ப்பதில்லை. ஆனால் உஙள் படித்துறையை பார்க்க ஆவலாக உள்ளேன். உங்கள் கட்டுரைகளில் உள்ள தெளிவு, COGENCY, அன்னியோன்னிய் பாவத்தை உண்டாக்கும் எளிய நடை.முத்தய்ப்பாகப் போடப்படும் சில வார்தைகள் எல்லாம் னேர்த்தியாக உள்ளன…படித்துறை நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. –ஆர்

  16. நிச்சயம் இந்த படம் நல்ல முறையில் வெளிவந்து உங்களுக்கு பெயரையும், புகழையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை சுகா.
    உங்களின் மூங்கில் மூச்சு தொடர் அருமையாக போகிறது விகடனில். நெல்லை வட்டார மொழியை எழுத்தில் கொண்டுவந்த விதம் அபாரம்

  17. சுகா, உங்கள் எழுத்து, ஆவியில் எழுதும் மூங்கில் மூச்சு மூலம் தான் எனக்கு அறிமுகம். அற்புதமான பதிவுகள். மனதை வருடும், இழந்த பலவற்றை ஞாபகப்படுத்தும் வரிகள். நிச்சயம் ஒரு நாள் பெரிய வெற்றிகளும், நல்ல செய்திகளும் உங்கள் வாழ்க்கையை நிறைக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.

  18. இன்று விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் தங்கள் வாதம் அருமையாக இருந்தது.

  19. நேற்றைய விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது எனது வலைப்பூ வேணுவனம் என்று ஒரு இடத்தில் நீங்கள் சொன்னவுடன் இரவு முழுவதும் மறந்து விடாமல் சொல்லிக் கொண்டே இப்போது உங்கள் வலைப்பூவைப் பார்த்தவுடன் பெரு மகிழ்ச்சி..!!

  20. விகடன்ல எழுதுறது யாருன்னு நானும் பல பேர் கிட்ட கேட்டேன், பதில் சென்ற ஞாயிறு நீயா-நானாவில் தான் கிடைத்தது. உடனே வேணுவனம் படிக்க ஆரம்பித்தேன். இப்போ வரை இணையத்தில் தேடிகொண்டிருக்கும் இரண்டு எழுத்து ‘சுகா’. கலக்குதீக, உங்கள் திரைப்படம் வெற்றி பெற அந்த நெல்லையப்பர் துணை இருப்பார். ஒவ்வொரு கட்டுரை படிக்கும்போதும் உங்க கடைசி வரி முத்திரைக்காக வேகமா படிக்கிறோமோன்னு தோணும். கட்டுரை படித்து சில சமயம் இருக்கும் இடம் பற்றிய நினைவில்லாமல் சிரித்துவிட, அல்லது அடக்க பாக்க … ரொம்ப சங்கடந்தான். விகடனுக்கு என் நன்றிகள் பல. உங்க எழுத்தில் பார்த்ததை திரையில் ஒலி ஒளியாய் பாக்க காத்திருக்கேன். ஏன்னா படித்துறை நம்மூரு படம்லா

    அன்புடன்
    நாக மலர்ச்செல்வன்

  21. உங்களின் மூங்கில் மூச்சு தொடர் அருமையாக போகிறது விகடனில். நெல்லை வட்டார மொழியை எழுத்தில் கொண்டுவந்த விதம் அபாரம்.
    சுகா, விகடனில் வார்த்தைகளில் நம் ஊரை வடித்த உங்கள் கரம் திரையிலும் படித்துறையாக விரிவடைந்திருக்கிறது. தாமதமாக வந்தாலும் மிகப் பெரிய வெற்றியைத் தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!!

  22. நீயா நானாவில் நீங்கள் பேசியபோது எனது வலைமனையின் பெயர் வேணுவனம் என்றும் திருநெல்வேலியின் பெயர் அதுதான் என்றும் சொன்ன கணத்தில் தேடி உடனே படித்த பதிவு..

    அழகான எழுத்து..உங்கள் ஆக்கமும் அழகாக இருக்கும் என்று நம்ப வைக்கிறது;தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் எழுத்துப் பரிச்சயம் உள்ளவர்களாக மாறிக்கொண்டிருப்பது மகிழ்வான நிகழ்வு.
    ஜெயகாந்தன்,மகேந்திரனுக்குப் பிறகு நான் கேள்விப்பட்ட வரை சரண் விகடன் குழுமத்தில் எழுத்தாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர்;இப்போது உங்களைக் கேள்விப்படுகிறேன்.எழுத்தாளராக துவங்கினீர்களா என்பது தெரியாது..ஆனாலும் உங்களின் மொழிக் கையாள்கையும் சுத்தமாக ரசிக்கும் படி இருந்தது.
    பாராட்டுக்கள்.
    படித்துறைக்கான வாழ்த்துக்கள்.

  23. தாங்கள் எழுதும் தொடர் விகடனில் படித்து வருகிறேன் சுவாரஸ்யமாய் எழுதுகிறீர்கள் நீங்கள் எடுத்து வரும் படித்துறை படம் பார்க்க ஆவலாய் உள்ளேன் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  24. மூங்கில் மூச்சு மற்றும் உங்கள் வலைப்பதிவுகள் எல்லாவற்றையும் படித்த பின் எழுதும் பின்னூட்டம் இது… உங்கள் ரசனையும், பிறந்த ஊரை மதிக்கும், ரசிக்கும், நினைக்கும் உங்கள் எழுத்தும், குணமும் மிகவும் பிடித்திருக்கிறது… படித்துறை-யில் இதே ரசனை மற்றும் நம் திருநெல்வேலியின் அழகை காண ஆவலாக உள்ளோம்… படம் விரைவில் வெளிவந்து வெற்றியடைய எங்கள் நல்வாழ்த்துக்கள்…

  25. விகடனை திறந்ததும் நான் முதலில் தேடுவது மூங்கில் மூச்சைத் தான். உங்கள் எழுத்தை வாசிக்கும் போது காலச்சக்கரம் பின்னோக்கி சுழன்று நெல்லையில் நான் படித்த (1987-1993) காலத்தை நினைவுபடுத்துகிறது.
    நெல்லையின் பேச்சு வழக்கை அப்படியே பதிகிறீர்கள்.
    படித்துறை வெற்றிபெற வாழ்த்துகள்!!

  26. விகடன் படிப்பது மூலம் சுகா யார் என்று தெரியும் . இந்த வார விகடன் பார்த்தப் பின்பது தான் , உங்களது வலைப்பதிவு முகவரி தெரிந்தது . கடந்த 33 வாரங்களாக விகடனில் அசத்தி வருகிறீர்கள் . வாழ்த்துக்கள் . வலைபதிவில் அனைத்து பதிவுகளையும் படித்தேன் . உங்களது வருத்தத்தை உணரமுடிகிறது . நிச்சயம் “படித்துறை” நல்ல தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறும் . வெற்றிப் படமாகவும் அமையும் . வாழ்த்துக்கள் சுகா அவர்களே.

  27. ungalai yaarendru paarkave neeya naana paarththen.padiththurai ungaL munnerrathirku padiyagattum. anantha vivkatanuke nandri ippadipattaa padaippaligalai velipaduthuvatharku.

  28. சுகா சார்

    கண்டிப்பாக உங்கள் அனைவரின் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
    நம்ம ஊர் அழகையும் நம் மக்கள் பண்பையும் அன்பையும் வெள்ளி திரையில் காண மிகுந்த ஆவலுடன் இருக்கின்றோம்.
    படித்துறை மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  29. Suga ..Today at the time i read your Moongle Moochi iam writing this, from the beginning itself i want to see you how you are? since that article was awesome.

    Today i saw the photo and the Blog-spot of yours..I am happy .

    By the way you know onething before i started this week article ,I heard Nellai kannan’s Patinathar Urai..then on seeing your part in Vikatan iam so happy that he is your father.

    No doubt on your tamil intelligent ..since you are Nallai Kannan sir’s production…

    And Padithurai .. nu peru vachi irukinga Eri thaney varanum.this delay makes you most successful.

    Your writing is Good Going keep it up.. I would like to meet you in person.

  30. மூங்கில் மூச்சு தொடர் தொடர்ந்து படித்து வருகிறேன். இது உங்களது வலைத்தளம் என அறிந்து பதிந்து கொண்டேன். உங்களது முயற்சி வெற்றி பெற மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  31. Dear Suka,
    I read your moongil moochu article.. Really fantastic! I also belong to Tirunelveli and enjoyed the slang which you used. I cant forget your friend kunju.. How is he? I like your father’s speech also. Now only i came to know that you are nellai kannan s son. My best wishes for your career.

  32. Hi Suka,

    I have been reading your ‘Moongil Moochchu’ series with great interest. As I also stayed in Amman Sanndhi street, I could relate a lot of incidents and people in your articles.

    I tried my level best to know who you are. Only last month I came to know that you are the son of Nellai Kannan sir. Yesterday, I came to know about your blog in Ananda Vikatan.

    My best wishes for your ‘Padithurai’ movie. I wish to meet you sometime in future.

    Keep writing. You have a great command over the language. All the best.

    Regards,
    KK

    http://indiancolumbus.blogspot.com
    A unique travel blog

  33. மூங்கில் மூச்சு தொடரை படித்த பின்புதான் உங்களை பற்றி googleல் அலசி அறிந்தேன். உங்கள் அத்தனை எழுத்துக்களையும் வாசித்து முடித்தேன். நான் பார்க்கும் அத்துணை நண்பர் மற்றும் உறவினகளிடமும் உங்கள் “தாயார் சன்னிதி” பற்றி சொல்லி வருகிறேன். இது போல் எனது மாலை பொழுது வாசிப்புகள், இவ்வளவு சுகமாக இருந்ததாக எனக்கு நினைவிலில்லை. உங்கள் திரை படம் பெரும் வெற்றி படமாக வர வேண்டும் என மனதார ஆசைபடுகிறேன். சத்தியமாக உங்கள் படத்தை திரையரங்கத்தில் தான் பார்ப்பேன் என குஞ்சு(தப்பா நினைக்காதீய…..உங்க frined) மேல் ஆணையிட்டு சொல்கிறேன் – நாநா

  34. சுகா அண்ணே…

    படித்துறை கண்டிப்பா ஜெயிக்கும்ணே..

    மூங்கில் மூச்சு அபாரம்… தீயா இருக்குண்ணே…. :))

  35. உங்கள் முயற்சிக்கேற்ற பலன் சீக்கிரம் கிடைக்கும்.

  36. வாழ்த்துகள் சுகா சார் …. படித்துறை பாக்க ஆவலா இருக்கோம் …
    கண்டிப்பா வெற்றியடையும் என்ற நம்பிகொயோடு நாங்களும் …

  37. ஆனந்த விகடன் தான் உங்களை எனக்கு அறிமுக படுத்தியது கவலை வேண்டாம் நண்பரே உங்கள் எழுத்துக்கள் போல படமும் வெற்றி பெரும். ஆவலடும் காத்திருக்கிறேன்

  38. I’ve become an ardent fan of your writing…Was a regular reader of moongil moochu right from the first week…Will be surely missing Mr. Kunju and the article…Hope U write more in anantha vikatan and wish U good luck for your upcoming movie….

  39. top class writting SUKA,really we r missing u in vikatan.i wonder last issue i read only on wen’sday.i kept as it is from friday.with out suka we think we lost the interest.

  40. விகடனில் நீங்கள் எழுதிய ‘மூங்கில் மூச்சு ‘ தொடரை மூச்சு விடாமல் படித்து ரசித்தவன் நான். நான் நெல்லை வாசி இல்லை என்றாலும் தொடர் மிகவும் நன்றாகவும் நெல்லை மேல் ஒரு ஆசையையும் உண்டாக்கியது. தங்களது படித்துறை வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.( படித்துறை என்ற பெயர் மிக சிறந்த ஒன்று. எனது சிறு வயதில் கிராமத்தில் ஆற்றங்கரையில் நான் விளையாடி மகிழ்ந்த நாட்களை இந்த பெயர் எனக்கு மீண்டூம் ஞாபகப்படுத்தியது.- ராஜன்

  41. வணக்கம் சுகா ,
    உங்களை ஆனந்த விகடனின் மூங்கில் மூச்சு மூலம் அறிந்தேன் .
    முதலில் ஒரு சில வாரங்கள் உங்கள் தொடரை தவறவிட்டேன் .அதன் பின்
    உங்கள் எழுத்து நடை என்னை ரொம்பவும் கவர்ந்தது . அதன் பின் அழ்ந்து
    வாசிக்க ஆரம்பித்தேன் .ஒவ்வொரு வாரமும் முதலில் மூங்கில் மூச்சு
    வாசித்த பின் தான் மற்ற பகுதிக்கு செல்வேன் .படித்துறை வெற்றி பெற
    இறைவனை வேண்டுகிறேன் .உங்கள் தொடரை எதிர்பார்த்தது போல்
    படத்தையும் ஆவலுடன் எதிர் பார்கிறேன் .
    என்றும் அன்புடன்
    அருணா

  42. வணக்கம் சுகா ,
    உங்களை ஆனந்த விகடனின் மூங்கில் மூச்சு மூலம் அறிந்தேன் .
    முதலில் ஒரு சில வாரங்கள் உங்கள் தொடரை தவறவிட்டேன் .அதன் பின்
    உங்கள் எழுத்து நடை என்னை ரொம்பவும் கவர்ந்தது . அதன் பின் அழ்ந்து
    வாசிக்க ஆரம்பித்தேன் .ஒவ்வொரு வாரமும் முதலில் மூங்கில் மூச்சு
    வாசித்த பின் தான் மற்ற பகுதிக்கு செல்வேன் .படித்துறை வெற்றி பெற
    இறைவனை வேண்டுகிறேன் .உங்கள் தொடரை எதிர்பார்த்தது போல்
    படத்தையும் ஆவலுடன் எதிர் பார்கிறேன் .
    என்றும் அன்புடன்
    அருணா

  43. hi sir Naanum tirunelveli kaaran thaan,, ungal sorry nama padathukkaaga kaathirukiren…. yen nanbargalidam perumayaaga solikondrukindren padithurai padathai patri…

  44. சுகா…! இடையில் விகடன் வடிவமைப்பு மாறியதிலிருந்து அதை படிப்பதை சில காலம் நிறுத்தி வைத்திருந்தேன்.அந்த நேரத்தில் உங்களது “படித்துறை”மற்றும் “மூங்கில் மூச்சு” வெளிவந்திருக்கும் போல…

    ஒரு நெல்லைக்காரனாக அந்த கதையை மிஸ் பண்ணியதற்காக வருந்தினேன்.ஆனால் அதை தேடிப்பிடித்து படித்துவிடுவேன்.

    இப்பவும் பொத்தி பொத்தி பாதுகாத்து, அவ்வப்போது திறந்து பார்த்து பரவசமடைந்துகொள்ளும் அந்த நெல்லை மண்ணின் பதின் வயது வாழ்க்கை நினைவுகளோடு,ஏதோ எண்ணத்தில் இன்று எதேச்சையாகத்தான் “திருநெல்வேலி,லட்சுமி தியேட்டர்” என்று keywords போட்டு கூகுளில் தேடினேன்.உங்களது பதிவு வந்தது.

    உங்களது படித்துறை படம் குறித்த தகவலையும், நெல்லை ஷூட்டிங் அனுபவத்தையும் படித்தேன்.படித்துறை படம் குறித்த செய்தியை ஆர்யா தயாரிப்பு என்ற அளவில் நாளிதழில் படித்ததோடு அதை மறந்துவிட்டேன்.

    அதன் பின்னணியில் இப்படி ஒரு சக நெல்லைத் தோழரும், பாலு சாரின் சிஷ்யரும்,என்னைப்போலவே இளையராஜாவை கொண்டாடுபவருமாக ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து மனம் துள்ளியது.

    படம் நிச்சயம் நல்லா வந்திருக்கும் என்று நம்புகிறேன்.மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கவும்,வெற்றியடைந்தபின்னர் மற்ற இயக்குனர்களை போலவே,ஃபீல்டில் காலூன்றும் வரை இளையராஜாவை பயன்படுத்திக் கொண்டு, “பின்னர் பட வியாபாரம், வேறு அனுபவம் தேவை” என்றெல்லாம் சொல்லி, அவரைவிட்டு விலகி காதை பிளக்கும் இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து படம் பண்ணாமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்…

    தோழமையுடன்,

    பா.முகிலன்

Comments are closed.