சிறுகதைகளும், நாவல்களும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த எத்தனையோ எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வாசகவட்டம் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் நான்கு கட்டுரைத் தொகுப்பும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சிறுகதைகளும் எழுதியிருக்கும் எனக்கு அமைந்த ‘பிரபலங்களும், சாமானியர்களுமான வாசக வட்டம்’ ஆச்சரியமானது. துவக்கத்தில் இதை நம்பவும் முடியாமல், புரிந்து கொள்ளவும் இயலாமல் திணறியதுண்டு. இப்போது அவற்றை உணர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது.
நேரில் பார்த்து பேசிய, பாராட்டிய முதல் வாசகர் என்று மணிகண்டனைத்தான் சொல்ல வேண்டும். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்தக விற்பனைக்கு வந்திருந்த மணிகண்டன், புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்து, ‘நீங்க சுகாதானே? உங்க கட்டுரை பிரமாதம்!’ என்றார். அப்போது ‘வார்த்தை’ சிற்றிதழில் என்னுடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன. மணிகண்டன் இத்தனைக்கும் சாந்தமான பி.பி.எஸ் குரலில்தான் கேட்டார். ஆனால் என் காதுகளில் சீர்காழியின் குரலில் கணீரென ஒலித்து, பயந்து பின்வாங்க வைத்துவிட்டது. குலுக்கிய கையை உதறிவிட்டு, ‘ஆமாங்க. நன்றி. வரட்டுமா?’ என்று அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன். மணிகண்டனுக்கு என்னுடைய செயல் ஆச்சரியமளித்திருக்க வேண்டும். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் என்னைப் பார்த்து சிரித்த நமட்டுச் சிரிப்பு அதை உணர்த்தியது. மணிகண்டனின் வடிவமைப்பில்தான் என்னுடைய முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’ உருவாகப் போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. தனது ‘நூல்வனம்’ பதிப்பகத்தின் மூலம் அற்புதமான சிறார் புத்தகங்களை வெளியிட்டு வரும் மணிகண்டனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘வார்த்தை’ மற்றும் ‘ரசனை’ சிற்றிதழ்களின் மூலம் சிறு வட்டத்துக்கு மட்டும் அறிமுகமாகியிருந்த என்னை சட்டென்று பரந்த வாசகர் வட்டத்துக்குள் இட்டுச் சென்றது, ஆனந்த விகடனில் நான் எழுதி வந்த தொடரான ‘மூங்கில் மூச்சு’. எண்ணிலடங்காத தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களுக்குக்கிடையே புத்தகத் திருவிழா உட்பட பல பொது இடங்களில் வாசகர்கள் வந்து பேசத் துவங்கினர். ஆனால் நூற்றில் ஓரிருவர்தான் ‘மூங்கில் மூச்சு’ என்று சரியாகச் சொன்னார்கள்.
‘ஸார்! விகடன்ல நீங்க எளுதின மூங்கில் காத்து அட்டகாசம்!’
‘மூங்கில் குருத்துன்னு பொருத்தமா எப்படி ஸார் தலைப்பு வச்சீங்க?’
‘நீங்க முந்தானை முடிச்சு எளுதின சகாதானே?’
கிரேஸி மோகன் போன்ற பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஒரு புகழ் பெற்ற சாதனையாளர் என்பதால் அவருக்கு மட்டும் கூடுதல் சலுகை.
‘சுகா! சும்மா சொல்லக்கூடாது. உங்க தாயார் பாதம் அமர்க்களம்!’
‘ஸார்! அது தாயார் சன்னதி!’
‘இருந்துட்டுப் போறது! பிரமாதமா எழுதறேள்! விகடன்ல சீரியல் எழுதினேளே, மூச்சுக் காத்து! மறக்க முடியுமா?’
ஒரு கட்டத்துக்கு மேல் நான் விட்டுவிட்டேன். ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு புது புத்தகத் தலைப்பு சொல்லிப் பாராட்டுவார். அதன் பிரகாரம் நான் இதுவரை நானூற்றி இருபத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.
சம்பிரதாய வாசகர் கடிதங்கள் போக ஒரு சிலர் தொடர்ந்து எழுதுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்தியைச் சுமந்து வருகிற கடிதங்கள். அப்படி தொடர்ச்சியாக கடலூரிலிருந்து ராதா மகாதேவன் என்கிற பெயரில் கடிதங்கள் வரும். நாளடைவில் தொலைபேசியில் பேசத் துவங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவரின் மனைவி. வயது எண்பதுக்கு மேல். கணவர் காலமானதற்குப் பிறகு தனியாக வசித்து வருபவர். நடுங்கும் குரலில் பேசுவார். ‘சரியாக் கேக்கலை. நான் அப்புறமா லெட்டர் போடறேன்’ என்பார். போஸ்ட் கார்ட் மற்றும் இன்லேண்ட் லெட்டரில் நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்புவார். அநேகமாக அந்த சமயத்தில் நான் எங்கோ எழுதியிருக்கும் கதை குறித்தோ, கட்டுரை குறித்தோ விலாவாரியாக எழுதியிருப்பார். கூடவே ஏதேனும் ஸ்லோகங்கள், கோயில் பற்றிய விவரங்கள் எழுதி, ‘உங்களுக்கு சௌகரியப்பட்டா இதைச் சொல்லுங்கோ. கோயிலுக்கும் போயிட்டு வாங்கோ. போக முடியலேன்னாலும் ஒண்ணும் பாதகமில்லை’ என்று கடிதத்தின் ஓரத்தில் சிறு குறிப்பு இருக்கும். எப்போதோ கேட்டு அறிந்து வைத்திருந்த தகவலை மறக்காமல் நினைவூட்டி, ‘வர்ற புதன்கிழமை உங்க ஜென்ம நட்சத்திரம் வர்றது. ஞாபகத்துக்கு சொல்றேன்’ என்றொரு கடிதம் வரும். அந்த அம்மையாரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஒருமுறை அவர்களை நேரில் சந்தித்த ‘வம்சி’ பதிப்பகத்தின் உரிமையாளரும், மொழிபெயர்ப்பாளருமான தோழி சைலஜாவிடம் எனக்காக ஒரு காந்திமதி அம்பாளின் புகைப்படத்தைக் கொடுத்தனுப்பினார். ‘ஒரு நாள் கடலூர் போய் அம்மாவைப் பாத்துட்டு வாங்கப்பா’ என்றார் ஷைலு. ராதாம்மாவைப் பார்க்கப் போய் எங்கே நான் காலம் சென்ற என் அம்மையை, அவளைப் பெற்ற அம்மையைப் பார்க்க நேர்ந்து விடுமோ என்கிற அச்சமோ என்னவோ! இன்னும் கடலூருக்குச் செல்லும் மனம் வாய்க்கவில்லை.
ராதாம்மா போலவே இன்னொரு தாயார். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் ஆசிரியை. திருமதி மீனாட்சி பெரியநாயகம். மீனாம்மாவுக்கு என்னுடைய எழுத்துகள் மீது அத்தனை மதிப்பு. என் மீது அவர் காட்டும் பிரியமும் அதைவிட மரியாதையும் என்னைக் கூசச் செய்வன. சத்குரு ஜக்கி வாசுதேவின் மீது பற்று கொண்ட அவர்கள், வயதில், அறிவில், அனுபவத்தில் சிறியவனான என் மீது வைத்திருக்கும் மதிப்பு, நான் பெரிதாக நினைக்காத என் எழுத்து ஏற்படுத்திக் கொடுத்தது. ஆங்கிலப் பேராசிரியையான அவர்கள் என்னிடத்தில் பேசும்போது ஆங்கிலம் கலக்காத தாய்பாஷையில்தான் பேசுவார்கள். சொந்த ஊரை விட்டு வெளியே வந்து நாற்பது வருடங்களுக்கு மேலானாலும் ‘தாயார் சன்னதி’யின் பாதிப்பில் திருநவேலி தமிழில்தான் உரையாடல்.
‘சுகா எளுதறதையெல்லாம் படிச்சாலே போதும். திருநவேலிக்கே டிக்கெட் எடுக்க வேண்டாம்ட்டின்னு எங்க நடுவுல உள்ள அக்கா சொல்லுதா’.
‘நானும் நீங்க ஈஷாவுக்குப் போயிட்டு வந்ததப் பத்தி எளுதுவிய எளுதுவியன்னுப் பாக்கென். எளுத மாட்டங்கேளே!’
‘மனசு சரியில்லன்னா ஒண்ணு ஈஷா. இல்லென்னா உங்க புஸ்தகம்தான்.’
‘ஆனந்த விகடனத் தவிர வேற எதுல எளுதுனாலும் கொஞ்சம் சொல்லுங்க. வாங்கிப் படிக்கணும்லா!’
குருவை மிஞ்சின சிஷ்யையாக தமிழச்சி தங்கபாண்டியனும் என்னுடைய வாசகி என்பதை அவரே வந்து சொன்ன போது அதிர்ந்துதான் போனேன். ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த கமல்ஹாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, யாருடனோ நான் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, ‘வணக்கம் சுகா! நான் உங்கள் ரசிகை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தார். பதற்றத்தில் எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. பதிலுக்கு வணங்கியபடி ஏதோ ஒரு பாஷையில் நன்றி சொன்னேன். ‘மூங்கில் மூச்சு சமயத்துல உங்கக்கிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்’ என்று மேலும் அவர் சொல்லவும், தெரியாத பாஷை கூட தொண்டைக்கு வர மறுத்தது. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தகப்பனார், சகோதரர் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதும், அவரது கணவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் நான் ஏற்கனவே அறிந்திருப்பதனால், ‘சுகா! நீங்கள் ஒரு முட்டாளூ’ என்று தமிழச்சி என்னிடத்தில் சுந்தரத் தெலுங்கில் சொல்லியிருந்தாலும் ‘மிக்க தேங்க்ஸுங்க’ என்று சொல்லியிருப்பேன். செல்லுமிடமெல்லாம் தமிழச்சி என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சிலாகித்து சொல்கிறார் என்பதை பல நண்பர்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். பல பேட்டிகளில் தனக்குப் பிடித்த புத்தகமாக தாயார் சன்னதியைச் சொல்லியிருப்பதையும் படித்திருக்கிறேன். அவருடைய நூல்கள் குறித்த கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். கூடுமானவரை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்த்து விடுவேன். கூட்டுக் குடும்பத்தின் சுப, அசுப வீடுகளில் நடக்கும் சச்சரவுகளுக்கு இணையாக நடைபெறும் இலக்கிய அசம்பாவிதங்களைப் பார்ப்பதில் நாட்டமில்லை என்பதே காரணம். அப்படியே செல்வதாக இருந்தாலும் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்து அமைதியாக வெளியேறி விடுவதுதான் வழக்கம். தமிழச்சி தங்கபாண்டியனின் நிகழ்ச்சியிலும் அப்படி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். தனது உரையின் துவக்கத்தில், ‘இந்த அரங்கில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் சுகா இருப்பதை நான் பெருமையாக உணர்கிறேன்’ என்று அவர் சொன்னதுதான் தாமதம். எல்லா நாற்காலிகளிலும் அமர்ந்திருந்த உடம்புகளின் தலைகள் மட்டும் பதஞ்சலி பாபா ராம்தேவின் புதியவகை யோகாப்பியாசம் போல என்னைத் திரும்பிப் பார்த்தன. அவரது அடுத்த நிகழ்ச்சி நடைபெறும்போது நான் சென்னையிலேயே வெளியூரில் இருந்தேன்.
‘ரசிகனின் கடிதம்’ என்கிற தலைப்புடன் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. பி.எஸ்.ரங்கநாதன் என்பவர் எழுதியிருந்தார். அடைப்புக்குறிக்குள் ‘கடுகு’ என்று குறிப்பிட்டிருந்தார். பழம் பெரும் எழுத்தாளர் கடுகு. மனதாரப் பாராட்டியிருந்த மடல் அது. பெரியவர் ரா.கி. ரங்கராஜனின் எழுத்துடன் என்னுடைய எழுத்தை ஒப்பிட்டு எழுதியிருந்த கடுகு அவர்கள் தொடர்ந்து மடல்கள் எழுதினார். ஒவ்வொரு முறையும் ரசிகனின் கடிதம் என்றே எழுதுவார். மடலின் இறுதியில் பதில் போட வேண்டிய அவசியமில்லை என்று எழுதியிருப்பார். ஆனால் ஒவ்வொரு மடலுக்கும் பதில் போட்டுவிடுவேன். அவருடைய ஒவ்வொரு பாராட்டும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு,
மூத்தோர் கட்டுரை பார்த்தேன். பிரமாதம் என்று சொல்லமாட்டேன். ‘ரொம்பப் பிரமாதம்’ என்றுதான் சொல்வேன்! பாராட்டுகள்.
You are a painter with words!
இது உங்களுக்கு இயற்கையாக வந்த வரப்பிரசாதம். ஆகவே நீங்கள் மார்தட்டிக் கொள்ளமுடியாது;
ஆண்டவனுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.
பெரியவர் ரங்கநாதன் அவருடைய சதாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ‘பாட்டையா’ பாரதி மணி அவர்களுடன் சென்றிருந்தேன். ரங்கநாதன் அவர்கள் ஐயங்கார் என்றாலும் திருநவேலி பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஆச்சியும் ஐயரும்’ மணமேடையில் இருந்தார்கள். வாழ்த்தி, வணங்குவதற்காக மணமேடைக்குச் சென்ற போது, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, அன்புடன் ஆரத்தழுவி ‘I am honoured’ என்றார். விளையாட்டாக எதையோ எப்போதோ எழுதி வரும் என்னைப் போன்ற எளியவனுக்கு இதெல்லாம் எப்பேர்ப்பட்ட அங்கீகாரம்! இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே போன்று மற்றோர் அனுபவம். ‘வலம்’ பதிப்பகம் வெளியிட்ட எனது ‘உபசாரம்’ புத்தகத்தை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்திலிருந்த கவிஞர் சுகுமாரனை அழைத்தேன். ‘வெளியிட’ என்றால் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது. சுகுமாரன் வெளியிட எனது முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ பதிப்பாளரான தோழி ஷைலஜா பெற்றுக் கொண்டார். புகைப்பட சம்பிரதாயம் முடிந்தவுடன் சுகுமாரன் என்னை தோளோடு தோள் சேர்த்து மெல்ல அணைத்தபடி ‘I am honoured’ என்றார்.
நான் அதிகமாக எழுதிய சொல்வனம் இணைய பத்திரிக்கை, எனது சொந்த வலைத்தளமான வேணுவனம், மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடர்ந்து படித்து வரும் எத்தனையோ வாசக, வாசகிகள் இருக்கிறார்கள். எனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனது எழுத்துகளை சிலாகித்துக் கொண்டே இருக்கும் அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.
வாசகராக அறிமுகமாகி உற்ற உறவாகிப் போன பாலசுப்பிரமணியன் சக்திவேலுவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. துவக்கத்தில் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மின்னஞ்சல்கள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். பிறகு என்னை நேரில் சந்திக்க வந்தார். தற்போது அமெரிக்காவில் ஐ.டி துறையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் என்னை முதன் முதலில் சந்திக்க வந்தபோது என் முன்னால் உட்கார மறுத்து என்னை சங்கோஜப்படுத்தினார். அவரை உட்கார வைப்பதற்கே நான் பெரும் பாடு பட வேண்டியிருந்தது. நான் இதுவரை எழுதியிருக்கும் எல்லா எழுத்துகளும் ‘தம்பி’ பாலுவுக்கு மனப்பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘தம்பி! ஜாகைங்கற வார்த்தைய நான் எங்கே பயன்படுத்தியிருக்கேன்?’
‘அண்ணே! அடைப்புக்குறிக்குள்ள ‘ஆனா’ போட்டு அசைவம்னு ஒரு கட்டுரை எளுதியிருப்பீகளே! அதுலதாண்ணே! ‘தாயார் சன்னதி’ தொகுப்புல இருக்குண்ணே!’
தீவிர முருகபக்தரான ‘தம்பி’ பாலு ஒவ்வொருமுறை இந்தியா வரும் போதும் பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அங்கிருந்து ஃபோன் பண்ணுவார்.
‘அண்ணே! இப்பதாம்ணே அண்ணன் பேருக்கு அர்ச்சனை வச்சுட்டு வெளியே வாரேன். நல்ல தரிசனம்ணே!’
இந்த அன்புக்கெல்லாம் நன்றி சொல்வதா, இல்லை வேறேதும் வார்த்தை இருக்கிறதா என்று ஒவ்வொருமுறையும் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறேன்.
காரைக்குடியிலிருந்து அழைக்கும் போது தன் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் பேச வைப்பார்.
‘அண்ணே! உங்கக்கிட்ட அண்ணன் பேசணும்கறாங்க. ஒரு நிமிஷம் குடுக்கலாமாண்ணே? அண்ணன் ஓய்வா இருக்கீயளா?’
‘குடுங்க தம்பி!’
பாலுவின் அண்ணனும் என்னை விட வயதில் இளையவர் என்பதால், ‘அண்ணே’ என்றழைத்து சில வார்த்தைகள் பேசுவார். தொடர்ந்து அவரது மனைவி. அவரும் ‘அண்ணே’ என்றுதான் விளிப்பார். ‘காரைக்குடில நம்ம வீட்டுக்கு நீங்க வரணும்ணே’ என்று கேட்டுக் கொள்வார். ‘தம்பி’ பாலுவின் தகப்பனார் காலமாகிவிட்டார். அவ்வப்போது அவரது தாயாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று ஒரு சில மாதங்கள் உடன் வைத்துக் கொள்வார். ஒரு முறை அவரது தாயாரிடமும் ஃபோனில் பேச வைத்தார். எடுத்த எடுப்பில் அவர்களும் ‘அண்ணே! நல்லா இருக்கீகளா?’ என்றார்கள். இப்படியாக ‘தம்பி’ பாலுவின் குடும்பத்துக்கே நான் ‘அண்ணன்’.
ஒருமுறை தழுதழுத்த குரலில் தம்பி சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.
‘இங்கே என்னுடைய தனிமையை, வெறுமையை உங்க எழுத்துகள்தான் போக்குதுண்ணே! மன அழுத்தத்தையும், வருத்தத்தையும் காணாம ஆக்கி, எங்களுக்கெல்லாம் நீங்க செய்ற சர்வீஸைப் பத்தி உங்களுக்கே தெரியாதுண்ணே!’
முகம் தெரியாத வாசகர்களுடன் விநோதமான அனுபவங்கள் ஏராளம். காளஹஸ்தி கோயிலுக்குக் குடும்பத்துடன் போய்விட்டு களைப்பாக சென்னை திரும்பி ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தோம். சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து எழுந்து எச்சில் கையுடன் வணங்கினார். அதிர்ச்சியுடனான அசட்டுச் சிரிப்புடன் பதிலுக்கு வணங்கி விட்டுக் கடந்து சென்றேன். நாங்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு மகன் சொன்னான். ‘உன்னையே பாத்துக்கிட்டு ஃபோன்ல பேசறாங்க, பாரு!’.
ஓரக்கண்ணால் பார்த்தேன். ஃபோனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்து தலையை ஆட்டிச் சிரித்தபடி மெல்ல அருகில் வந்தார். எழுந்து நின்றேன்.
‘ஃபோன்ல என் சிஸ்டர்க்கிட்ட உங்களைப் பாத்தத சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்கக்கிட்ட பேச முடியுமான்னு கேக்கறாங்க. அவங்க ஒரு காலேஜ் லெக்ச்சரர்’ என்றார். வாங்கிப் பேசினேன்.
‘வணக்கம்ங்க. உங்களைப் பாத்ததா தம்பி சொன்னான். அவங்கதானான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு போய்ப் பேசுடான்னு சொன்னேன். நானும் எங்கம்மாவும் உங்க ரைட்டிங்க்ஸைப் படிச்சு அப்படி சிரிச்சிருக்கோம். சில சமயம் கலங்கவும் வச்சிருவீங்க’.
‘நன்றிங்க’.
‘இன்னிக்குப் போயி அம்மாக்கிட்ட சொல்லணும். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. திருச்சிக்கு வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.’
‘நல்லதுங்க’.
பிறகு அந்த இளைஞர் நான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
மறுநாள் மேற்படி சம்பவத்தை முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் சொன்னேன்.
‘இதெல்லாம்தான் சுகா கொடுப்பினை. கேக்கற எனக்கே நெகிழ்ச்சியா இருக்கு! முகம் தெரியாத மனுஷங்க அன்பை சம்பாதிக்கிறதுங்கறது லேசுப்பட்ட காரியமில்ல’.
‘ஆனா எனக்கு அதை அத்தனை நெகிழ்ச்சியா எடுத்துக்க முடியல, ஸார்!’
‘ஏன் சுகா?’
‘கடைசி வரைக்கும் அந்தப் பையனும், அவங்க அக்காவும் நான் யாருங்கறத என்கிட்ட சொல்லவே இல்ல!’ என்றேன்.
நன்றி: அந்திமழை இதழ்
எழுத்தாளர் கடுகு அவர்களின் வலைத்தளம்: https://kadugu-agasthian.blogspot.com/2010/02/