மகானுபாவர் . . .

“ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலைச்சுற்றி கோட்டை. நான்கு திக்குகளிலும் வாசல் உண்டு. அதில் கிழக்கே கோட்டை பிரசித்தம். அதன்  பக்கத்தில் பழவங்காடி பிள்ளையார் கோவில். அவர் நல்லவர்களும், கெட்டவர்களும் வேண்டுவதைத் தரும் கடவுள். எப்போதும் சிதர்த்தேங்காய் உடைபட்டுக்கொண்டிருக்கும். இந்தத்தேங்காயை வருடாந்திர ஏலத்தில் கொள்முதல் செய்து பணக்காரர்களானவர் பலர். கிழக்கே கோட்டையிலிருந்து தொடங்குகிறது சாலைக்கடை பஜார். நீல. பத்மநாபன் நாவல்களிலும், ஆ. மாதவன் சிறுகதைகளிலும், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் உண்டு, உறங்கி வாழ்ந்த களன். வருடாவருடம் பத்மநாபஸ்வாமி கோவிலில் ஆறாட்டு, முறை ஜபம் நடைபெறும். பனிரெண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ‘லட்சதீபம்‘. [கும்பகோணத்தில் மாமாங்கம் போல]. முறை ஜபத்துக்கு, நூற்றுக்கணக்கான நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டு, பத்மதீர்த்தத்தில் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஜபிப்பார்கள். ஒன்றுக்கும் உதவாதவனைக்   குறித்து, அங்கு ஒரு சொலவடை உண்டு. “மொண்ணைத்தடியனெஎந்தினுகொள்ளாம்? முறைஜபத்தினுதூணினுகொள்ளாம்’!ஆறாட்டுக்கு  நாட்டையே ஆண்டுவரும் உற்சவமூர்த்தியை பல்லக்கில் அலங்கரித்து, யானை, குதிரை காலாட்படையுடன் பத்மநாபதாசனான மகாராஜா, கையில் வாளுடன் மார்பில் பச்சைக்கல் அட்டிகை பளபளக்க, மணல்  விரித்த தார் ரோட்டில் வெறுங்காலுடன் பத்துமைல் நடந்து சங்குமுகம் கடலில் நீராட்ட அழைத்துச் செல்வார்.. இந்த உற்சவத்தில் கலந்துகொள்ள சுசீந்திரம் கோவிலிலிருந்து  ‘குண்டணி‘ அம்மனும், குமார கோவிலிலிருந்து முருகப்பெருமாளும் பல்லக்கில் 50 கி.மீ. பயணம் செய்து திருவனந்தபுரம் வருவார்கள். வழியில் எதிர்ப்படும் பழையாறு, குழித் துறையாறு, நெய்யாறு, கரமனையாறு, கிள்ளியாறு இவற்றைக்கடப்பதற்கு அவர்களுக்கு தனி பேட்டா அலவன்ஸ் கொடுக்கவேண்டும்! குண்டணி அம்மன் முருகப்பெருமானுக்கு முன்னதாக ஓடிச்சென்று, முருகன் ஒரு குறத்தியை மணந்து கொண்டதால், அவருக்குத் தீட்டு, அவரைச்சேர்க்கக்கூடாது என்று கோள் சொல்லுவாள். அதையறிந்த முருகன் கோபித்துக்கொண்டு, உற்சவத்தில் பங்கு பெறாமல், ஆரிய சாலைக் கோவிலுக்குத் திரும்பிவிடுவார். இப்போதும் நாஞ்சில் நாட்டில், கோள்மூட்டிவிடும் பெண்களை, ‘குண்டணிஅம்மன்‘ என்று பரிகசிப்பார்கள்!”

தன்னை எழுத்தாளன் அல்லன் என்று சொல்லிக் கொள்ளும் ‘பாட்டையா’ பாரதி மணியின் வரிகள் இவை. இதை முதல் முறையாகப் படிக்க நேரும் எந்த ஒரு வாசகனும் வாய் கூசாமல் பாட்டையா சொல்லும் பொய்யை நம்ப மாட்டான். நிச்சயம் இது யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர் எழுதியது என்றுதான் அவன் மனம் நம்பும். பத்மநாபஸ்வாமி கோயிலையும், அது அமைந்திருக்கிற பிரதேசத்தையும் பற்றி அறிந்திராதவர்களைக் கூட தனது எழுத்து மூலம் கண் முன்னே காட்சிகளாக விரித்துக் காண்பிக்கிற வித்தை அறிந்த பாட்டையா லேசுபட்ட ஆள் இல்லை. அவரோடு பழகும் பேறு கிடைத்தவர்களுக்கு எழுத்தில் அவர் சொல்லாமல் விட்ட ஏராள ‘தாராள’ விஷயங்களை மூச்சு வாங்க அழுத்த்த்த்தம் திருத்த்த்தமான உச்சரிப்பில் பாட்டையா சொல்லி அற்புதமான அனுபவத்தை வழங்குவார். அடிப்படையில் நல்ல ரசிகனே கலைஞனாக உருவாக முடியும் என்பதற்கு பாட்டையா ஓர் உதாரணம். நார்த்தங்காய் ஊறுகாயோ, நாரோயில் பெண்களோ, நிகம்போத் சுடுகாடோ எதைச் சொன்னாலும் அதை பார்க்க, ரசிக்க, ருசிக்க, மகிழ, கலங்க வைக்கும் வார்த்தைகளை சாயம் ஏதும் சேர்க்காமல் சுத்தமாக நமக்குக் கொடுப்பார். 

பாட்டையாவுக்கு வாய்த்த அனுபவங்களைக் கேட்கும் போதெல்லாம் எந்த ஒரு மனிதருக்கும் அவர் மேல் பொறாமையும், ஆச்சரியமும் ஏற்படும். பொறாமை அவரது பரந்துபட்ட அனுபவங்கள் குறித்து. ஆச்சரியம் அவரது நினைவாற்றல் குறித்து. பதின்வயது வரையிலான அவரது பார்வதிபுரம் வாசமும், பின் தமது நீண்டகால தில்லி வாழ்க்கையும், பாரதி திரைப்படத்துக்குப் பிறகான சென்னை ஜாகையும், தற்போதைய பெங்களூரு வசிப்பும் குறித்த அனுபவங்கள் எல்லாமே அவர் மனதில் தேக்கி வைத்திருந்து நமக்குச் சொல்பவை. குறிப்பு எழுதி வைத்து, தேவைப்படும் போது எடுத்துப் பார்த்து, மூக்குக் கண்ணாடியை மேல் தூக்கி வெளிச்சத்தில் வைத்து கவனமாகப் படித்து சரிபார்த்து சொல்லப்படுபவை அல்ல. 

பாட்டையாவின் ருசியுணர்வைப் பற்றி அவரோடு பழகியவர்களும், அவரை வாசித்தவர்களும் அறிவர். நான் கூட ஒரு கட்டுரையில் ‘பாட்டையாவின் நாக்கு நாலு முழமல்ல. நாப்பது முழம்’ என்று எழுதியிருக்கிறேன். இதுதொடர்பாக ஒரு சம்பவம். ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்செந்தூரிலிருந்துக் கிளம்பி திருநவேலி ரயில்வே ஸ்டேஷனுக்குக் காரில் வந்து கொண்டிருக்கிறார், பாட்டையா. வருகிற வழியில் ஓலைக்கூரை போட்ட கடை ஒன்றிலிருந்து கிளம்பி வருகிற புகையில் மசால் வடையின் மணத்தை பாட்டையாவின் மூக்கு கண்டுபிடித்து விடுகிறது. (எங்கள் ஊரில் அது ஆமவட) டிரைவரை வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, நூறு ரூபாய்த்தாளைக் கொடுத்து வடை வாங்கி வரச் சொல்லுகிறார். 

‘நூறு ரூவாய்க்கு சில்லறை இல்லம்பானே ஐயா!’ 

‘எனக்கு சில்ற வேண்டாம்பா.’

‘என்னய்யா சொல்லுதிய?’

‘நூறு ரூவாய்க்கும் வட வாங்கிட்டு வாங்கென்’.

வாழை இலையில் வடைகளையும், உடன் நறுக்கி மடக்கிய மற்றொரு சிறு இலையில் தேங்காய் சட்னியும் வைத்து தினத்தந்தி பேப்பரில் மடக்கி வாங்கி இரண்டு கைகளிலும் ஏந்தி வந்து பாட்டையாவின் கைகளில் கொடுக்கிற வரைக்கும் அந்த ஓட்டுநரின் மனதில், ‘இப்படி ஒரு கோட்டிக்காரக் கெளவரு இந்த ஒலகத்துல உண்டுமாய்யா?’ என்றுதான் நினைத்திருப்பார். வடையை வாங்கிய பின் பாட்டையா செய்த முதல் காரியம், ‘இந்தாடே! ரெண்டு வட தின்னு’ என்று அந்த ஓட்டுநரிடம் கொடுத்ததுதான். ஓட்டுநரின் மனதில் பாட்டையா இன்று வரைக்கும் ஆமவடயின் மணத்தோடு சம்மணம் போட்டு அமர்ந்திருப்பார். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் பாட்டையா ஏறி அமரவும் ரயில் கிளம்புகிறது. அவரது இருக்கைக்கு அருகே ஓர் இளம் நடிகையும், அவரது தாயாரும் வந்து அமர்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பசி. இரவுணவு ஏதும் வாங்கியிருக்கவில்லை. அவர்களது ரகசிய சம்பாஷணை பாட்டையாவின் பாம்புக்காதுகளில் பதிகிறது. இவர் கையில்தான் ஊருக்கே பரிமாறும் அளவுக்கு வடை புதையல் இருக்கிறதே!. 

‘கொளந்தே! (பாட்டையா விளித்தது தாயை) என்கிட்ட மசால் வடை இருக்கு. உனக்கு சங்கோஜம் இல்லேன்னா தர்றேன். அபார ருசி. இப்பதான் பதினேளாவத உள்ளெ தள்ளினென். சட்னி முளுசையும் நக்கித் தள்ளிரல. நெறயவே இருக்கு. தரட்டுமா?’ 

ஒரு சின்ன தயக்கத்துக்குப் பிறகு தாயும், மகளுமாக பாட்டையாவின் வடைவிருந்தோம்பலில் பசி ஆறியிருக்கிரார்கள். பாட்டையாவின் மன விசாலத்தின் நீளத்தை எந்த சர்வேயராலும் அளக்க முடியாது. 

இது போன்ற பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவை கழியும் பழங்கதைகள் அல்ல. காலம் கடந்து வாசிக்க இருக்கும் பிற்கால சந்ததியினர் மனதில் புகுந்து பதிய இருக்கும் புத்தம்புதுமையான எழுத்து.

பாட்டையா பாரதி மணி என்னும் மனிதருக்கு எப்போதும் மனிதர்களிடையே இருக்க வேண்டும். மனிதர்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் மனுஷாள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவரது வாழ்வின் நோக்கமே அதுதான். தன்னை விரும்புகிற, தான் விரும்புகிற மனிதர்களை அவராகவே அழைத்து விளித்து பேசுவது அவரது வழக்கம். தொலைபேசியில் என்னை எதிர்பாரா சந்தர்ப்பத்தில் அழைப்பார். எடுத்த எடுப்பிலேயே, ‘முட்டாப்பயலே! உன் சத்தம் என் காதுல விளுந்து எத்தனை நாளாச்சு தெரியுமால? அதுக்குத்தான் கூப்பிட்டேன்’ என்பார். நானெல்லாம் ஆள் கூட்டத்தில் தனியன். அத்தனை ஜனசமுத்திரத்திலும் தனியாக மனதுக்குள் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பவன். ஆனால் பாட்டையா என்னும் அபூர்வ மனிதர் தனிமையிலும் சபை நடுவே இருப்பவர். பெங்களூரு இல்லத்தில் தனியறையில் அநேகமாக இந்த சமயம் பாட்டையா முன் அமர்ந்து காருக்குறிச்சி அருணாசலம் ‘சக்கனி ராஜ’ வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் உரிமையாக பாட்டையா ‘அருணாச்சலம்! கொஞ்சம் ‘ஈ வசுதா வாசியும். ஒம்ம சஹானா கேட்டு நான் அளனும்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். சற்றுநேரத்தில் பாலக்காடு மணி ஐயர் ‘மதுராபுரி நிலயே மணிவலயே’ பாடிக் கொண்டிருப்பார். நாம் அவரை தொந்தரவு செய்யாமல் அறைக்கு வெளியே நின்று கேட்போம்.