‘எல! டபுள்கலர் சட்டத்துணி ஆரெம்கேவில காலியாயிட்டாம். நவராத்திரி முடிஞ்ச ஒடனெ வரும். சொல்லுதேன்னு செதம்பரம் சொல்லியிருக்கான்’. தீபாவளி என்றால் பதின் வயதின் இறுதிகளில் புதுத்துணி. அதற்கு முந்தைய பருவத்தில் வெடி. பட்டாசு என்ற வார்த்தை எங்கள் நண்பர்களிடையே புழக்கத்தில் இல்லை. பழைய பேட்டையிலிருந்தோ, பாட்டப்பத்திலிருந்தோ ’கட்ட’ சண்முகம் அண்ணன் ரகசியமாக வாங்கி வரும் ‘கல் வெடி’க்காகக் காத்துக் கிடப்போம். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ‘கட்ட’ சண்முகம் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பிப்போம். திருநவேலி பகுதிகளில் குட்டையாக இருப்பவர்களை கட்டையாக இருப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் குட்டையாக இருக்கும் சண்முக அண்ணன், ‘கட்டை’ சண்முகம் என்றழைக்கப்பட்டு, பின் பேச்சு வழக்கில் ‘கட்ட’ சண்முகம் ஆனான். எவ்வளவு சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாலும், ‘கட்ட’ சண்முகம் அண்ணனின் கால்கள் தரையைத் தொடாமல் ஆடிக் கொண்டிருக்கும்.
‘ச்சம்மொண்ணே! இந்த மட்டம் ஆளுக்கு ஒரு அம்பது கல் வெடியாவது வாங்கிக் குடுண்ணே!’
‘அம்பதா? என்ன வெளாடுதேளா? போலீஸ்காரன் கண்ணுல படாம இதைக் கொண்டாறதுக்குள்ள நான் படுத பாடு எனக்குத்தான் தெரியும்! ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது!’.
‘கட்ட’ சண்முகண்ணன் சொல்வது ஓரளவு உண்மைதான். ‘கல்’ வெடி என்பது ‘மினி’ கையெறி குண்டு. சின்னச் சின்ன உருண்டையாக பச்சை சணல் சுற்றி இருக்கும். எடுத்து வரும் போதே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ‘கல்’ வெடியை பெரிய கல்சுவரில், தார் ரோட்டில், சிமிண்டு தரையில் ஓங்கி எறிந்து வெடிக்கச் செய்ய வேண்டும். ஊதுபத்தியைப் பொருத்தி, பயந்து பயந்து, ‘எல பத்திட்டு’ என்கிற சத்தம் கேட்கவும் ஓட வேண்டிய அவசியம் இல்லாத வெடி. இன்னும் சொல்லப் போனால் நம் தமிழ் சினிமாவின் நிரந்தர ஹீரோவாகிவிட்ட ரௌடித்தனமான ஆண்மையை பறைசாற்றும் வெறித்தனமான வெடி. சில சமயம் கைகளில் ஏந்தி வரும் போது ஒன்றிரண்டு ‘கல்’ வெடிகள் கை தவறி கீழே விழுந்து வெடித்து ‘ஆண்மை’க்கு சேதம் விளைவிப்படுண்டு. நாளடைவில் ‘கல்’ வெடிகள் காணாமல் போயின. எங்களுக்கும் வெடி மீதிருந்த ஆசை மெல்ல விலகி, துணி மீது போனது. தீபாவளிக்கு புதுத்துணி போடுவது என்பது, நமக்காக அல்ல. பெண்பிள்ளைகள் பார்ப்பதற்காக என்னும் உண்மை யார் சொல்லாமலும் எங்களுக்கே விளங்கியது.
பிராமணர்கள் வசிக்கும் தெப்பக்குளத் தெருவுக்கு தீபாவளியன்று மாலை வேளைகளில் செல்வதுதான் சிறப்பானது என்பதை குஞ்சு சொல்வான்.
‘எல! தெப்பக்குளத்தெரு பிள்ளேள் தரைச் சக்கரமும், புஸ்வாணமும் இருட்டுனதுக்கப்புறம்தான்
வைக்கும். அப்பம் நாம சுத்திக்கிட்டிருக்கிற தரைச்சக்கரத்துக்குள்ள நடந்து போனாத்தான் எல்லா பிள்ளேளும் நம்மளப் பாக்கும். ஈச்சமரம் வைக்கும் போது எதுத்தாப்ல நின்னுக்கிட்டோம்ன ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தரப் பாக்கலாம்.’
கண்கள் கூச ஈச்சமரத்தின் பொறிபறக்கும் ஜ்வாலைக்குள் எதிர்ப்புறம் பார்க்கும் கலை எங்களுக்கு கைவந்ததே இல்லை. ஆனால் குஞ்சுவின் எக்ஸ்ரே கண்கள் துல்லியமாக எதிர்த்தரப்பின் மனசு வரைக்கும் ஊடுருவிச் சென்று பார்த்து விடும்.
‘என் டிரெஸ் நல்லா இருக்குன்னு கண்ணைக் காட்டிச் சொன்னா, கவனிச்சியா?’ என்பான்.
‘ராதாவையா சொல்லுதே! அவதான் அடுத்த வெடியை எடுக்க வீட்டுக்குள்ள போயிட்டாளே!’
‘கோட்டிக்காரப்பயலெ! அவ அம்மையைச் சொன்னென். என்னத்தப் பாத்தே?’
எங்களைப் பொருத்தவரைக்கும் தீபாவளி கொண்டாட்டம் என்பது தீபாவளி அன்றைக்கு அல்ல. சொல்லப் போனால் தீபாவளி அன்று அடங்கி விடுவோம். தீபாவளிக்கு முந்தைய ஒரு மாதகாலம்தான் எங்களுக்கு தீபாவளி. தீபாவளிக்கு துணி எடுக்கப் போவதாகச் சொல்லி விட்டு தினமும் ஆரெம்கேவி தொடங்கி பின்னால் வந்த போத்தீஸ் உட்பட சின்னச் சின்னக் கடைகள் வரைக்கும் துணியெடுக்க வரும் பெண் பிள்ளைகள் பின்னால் செல்வதுண்டு.
‘இன்னைக்கு கௌசல்யா தீபாவளிக்கு துணியெடுக்கப் போறாளாம். கொலு பாக்க வந்திருந்த அவங்கம்மா எங்கம்மாக்கிட்ட சொன்னா. வா கெளம்பு’ என்பான் குஞ்சு.
‘எல! அந்தப் பிள்ளை இவனையோ, நம்மளையோ திரும்பிக் கூட பாக்காது. முன்னாடி போயி வெக்கமே இல்லாம இவன் நின்னாலும் அது மொறச்சுத்தான் பாக்கும். இந்த அவமானத்துக்கு நம்மளும் என்னத்துக்குப் போகணுங்கேன்?’ ராமசுப்பிரமணியனின் புலம்பல் வழக்கம் போல வீணாகத்தான் போகும். அதற்கும் மறுநாள் சந்திராவுக்குத் துணியெடுக்க அவள் பின்னால் செல்வோம்.
இவை எல்லாமே மனதிலிருந்து கலைந்து போய் விட்டன. ஆனாலும் தீபாவளி என்றால் இப்போதும் நினைவுக்கு வருவது தீபாவளி பலகாரம் சுடும் எண்ணெயும், பாகும் கலந்து வரும் வாசனைதான். தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் ஏற்றும் வீடுகள் உண்டு. இதற்காகவே வெளியூரிலிருந்து சில விதவை ஆச்சிகளும், வாழ்வரசி அத்தை மற்றும் சித்திகளும் வருவார்கள்.
‘ஏளா! தேன்குளலுக்கு மாவு பெசய வேண்டாம். கருங்குளத்துக்காரி வந்துரட்டும். அவ கைப்பக்குவம் நம்ம யாருக்கும் வராது.’
தேன்குழலுக்கு கருங்குளத்து லோகு பெரியம்மை, சுசியத்துக்கு குலசேகரப்பட்டணம் சோமு ஆச்சி, ஆம வடையென்றால் அது நிச்சயம் கொங்கராயக்குறிச்சி விஜயா சித்தி, அதிரசத்தின் பக்குவத்துக்கு இலஞ்சி சாமியார் ஆச்சி. இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பண்டத்துக்கு ஸ்பெஷலிஸ்ட். பட்சணம் என்போர் பிராமணர். பலகாரம் என்பது பொதுச் சொல். பண்டம் என்பதே எங்கள் புழக்கத்தில் உள்ள சொல். ‘பண்டம் திங்காம வெறும் காப்பியை மனுசன் குடிப்பானாவே?’ என்பார்கள்.
தீபாவளியின் முதல் நாள் இரவு தூங்கும் குடும்பப் பெண்களை நான் பார்த்ததில்லை. அதிகாலையிலேயே குளித்து விளக்கேற்றி, காலை சமையல் முடித்து, மதிய சமையலுக்கும் தயார் செய்து கொண்டிருப்பார்கள். அப்போதுதான் வீட்டிலுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக அவரரவர் சௌகரியத்துக்கு எழுந்து வந்து காபி கேட்பார்கள். அதற்கும் சளைக்காமல் வேலையோடு வேலையாக காபி போட்டு கொடுப்பார்கள். ‘சீக்கிரம் குளிச்சுட்டு வந்துட்டியேன்னா பூசைய முடிச்சுட்டு பிள்ளேள சாப்பிடச் சொல்லிரலாம். புது துணி மஞ்ச தடவி ரெடியா இருக்கு. சின்னவன் நாலு மணிக்கே குளிச்சுட்டு ஏக்கமா பாத்துக்கிட்டே இருக்கான். வெடிக்கட்டையும் பிரிக்கல.’
பூஜை முடிந்து, அம்மா அப்பாவின் கையால் புது துணியை வாங்கி, பின் அணிந்து வந்து, பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, திருநீறு பூசிக் கொண்ட அடுத்த நிமிடம் சாப்பிடாமல் கொள்ளாமல் வெடிக் கட்டை நோக்கிப் பாய்வார்கள் சிறுவர்கள். அதற்குள் ஒருவன் தயாராக ஊதுபத்தியைப் பற்ற வைத்திருப்பான்.
‘மொதல்ல லெச்சுமி வெடிதான் வெடிக்கணும்ல. ஒரு பைசா வெடி, குருவி அவுட்டுல்லாம் வெடிச்சு முடிச்சிருங்க. சின்னப் பிள்ளேளுக்கு பாம்பு மாத்திரையை எடுத்துக் குடுத்துருங்க. டுப்பாக்கிக்கு ரோல் கேப் அப்பா வந்து மாட்டித் தாரேன், என்னா? மத்தாப்பு எல்லாத்தையும் காலி பண்ணிராதியடே. ராத்திரிக்கு இருக்கட்டும். வெங்காச்சு மாமா சாப்பிட்டுட்டு வார வரைக்கும் அணுகுண்டு டப்பாவை யாரும் தொடப்பிடாது’.
வெடிச்சத்தம் ஓரளவு குறைந்து, தெரு நாய்களும், வளர்ப்பு நாய்களும் மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நண்பகல் பொழுதில் அம்மாக்கள் தாங்கள் செய்த பலகாரங்களை, பக்கத்து வீடுகளுக்குக் கொண்டு கொடுக்க தத்தம் வீட்டுப் பிள்ளைகளைப் பணிப்பர். அப்படி ஒரு தீபாவளி நண்பகல் பொழுதில் கந்தையா மாமா வீட்டுக்கு அம்மா கொடுத்த பலகாரப் பாத்திரத்துடன் சென்றேன். அவர்கள் வளவிலேயே குடியிருக்கும் நமசு அண்ணன் வீட்டைத் தாண்டிச் செல்லும் போது வாசலில் நின்று வானம் பார்த்து கண்கள் சுருங்க சூரியனை வணங்கிக் கொண்டிருந்தான் நமசு அண்ணன். கந்த விலாஸ் கடைக்கு முன் தள்ளு வண்டியில் செருப்புக் கடை வைத்திருக்கும் நமசு அண்ணனிடம் முன்னே பின்னே ஒரு வார்த்தை கூட நான் பேசியதில்லை. தள்ளு வண்டியில் செருப்புகள் விற்கும் நமசு அண்ணனின் செருப்பில்லாத கால்களை பலமுறை வெறித்துப் பார்த்ததுண்டு. வீட்டுக்குள்ளிருந்து ஏதோ சொல்லும் மனைவியிடம், ‘ஊருக்காகல்லா புதுசு போட வேண்டியிருக்கு. கசங்கியிருந்தா என்ன? வெளுத்திருந்தாத்தான் நமக்கென்ன? சும்மா புளுபுளுங்காதே?’ என்று முணுமுணுத்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
கந்தையா மாமா வீட்டுக்குள் பலகாரப் பாத்திரத்துடன் நான் நுழையும் போது, அத்தை ஏனம் கழுவிக் கொண்டிருந்தாள். ‘எய்யா வா! வா! அம்மை குடுத்து விட்டாளாக்கும்!’ ஈரக்கைகளைப் புடவையில் துடைத்துக் கொண்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள். ‘இட்லி சாப்பிடுதியா?’ என்றபடி மர ஸ்டூலை எடுத்துப் போட்டு, ‘இரி. இந்தா வந்திருதேன்’ என்றபடி அடுக்களைக்குள் போனாள். அவள் வீட்டு பலகாரங்களை எங்கள் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்க போகிறாள் என்பது புரிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் அத்தை எனது தீபாவளி சட்டையைப் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வழக்கமாக அத்தை அப்படி இல்லை. நிச்சயம் நல்ல வார்த்தை சொல்லக் கூடியவள்தான்.
அத்தை வந்து பாத்திரத்தைக் கொடுக்கவும், நமசு அண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ‘நமசு . . . வா! அவள எங்கெ காங்கல?’ என்றாள், அத்தை. நமசு அண்ணனின் சட்டையை இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. ராத்திரியோடு ராத்திரியாக தீபாவளிக்கு புதுசு போட வேண்டுமே என்பதற்காக எங்கோ மலிவு விலையில் வாங்கியிருக்கிறான் போல. அவனது தள்ளு வண்டி செருப்புக் கடை போலவே ஏதாவது தள்ளு வண்டி துணிக்கடையில் வாங்கியிருக்கலாம். புதுத் துணி மாதிரியே தெரியவில்லை. கசங்கிய முரட்டுத் துணி. பல வண்ணங்களை இறைத்து அகல அகலமான கட்டங்கள் போட்டிருந்த சட்டை. இடுப்பில் நாலு முழ கைத்தறி வேட்டி. ‘திருநாறு பூசி விடு அத்த’ என்றபடி அத்தையின் கால்களில் விழுந்து வணங்கினான். சாமி படத்துக்கு முன் இருந்த ’திருநாத்து மரவை’யை எடுத்து, திருநீற்றை இரண்டு விரல்களால் குவித்துத் தொட்டு நமசு அண்ணனின் நெற்றியில் பூசியபடி, ‘திருநோலி ஊர்லயே இந்த வருசம் தீவாளிக்கு நமசு சட்டதான் ரொம்ப நல்லா இருக்கு. மகராசனா இரி’ என்றாள் கந்தையா மாமா விட்டு அத்தை.
நன்றி: காமதேனு