‘ஒடம்பைக் கொறைக்கலாம்னு இருக்கேன், ஸார்’.
ஹைதராபாத்தில் மோகன்லாலின் ‘மரைக்காயர்’ படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து ஃபோனில் இதைச் சொல்லும் போது மனோஜின் குரலில் உறுதி தெரிந்தது. எனக்குத்தான் பதற்றமாக இருந்தது.
‘வேண்டாம்டா மனோஜ். அடையாளம் தெரியாமப் போயிரும்’.
‘இல்ல ஸார். நான் முடிவு பண்ணிட்டேன். சென்னைக்கு வந்தவுடனே ஒங்கள வந்து பாக்கறேன்.’
மனோஜ், திரைப்பட ஒலிப்பதிவாளர். ஒலிப்பதிவு அறையில் அமர்ந்து வேலை செய்வதில் மனோஜுக்கு விருப்பமில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடிக, நடிகையரின் வசனங்களை ஒலிப்பதிவு செய்வதில் ஆர்வம் உள்ள இளைஞன். ஒலிப்பதிவு சம்பந்தமான ஆழமான அறிவும், தேடலும் உள்ளவன். ஏ. ஆர். ரஹ்மானின் உள்வட்டத்தைச் சேர்ந்தவன். ரஹ்மானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி உலகப்புகழ் பெற்ற பல பாடகர்கள் மனோஜின் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையை அவ்வப்போது அலங்கரிப்பவர்கள். திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உட்பட அவரது அலுவலக ஊழியர்கள் அனைவருமே மனோஜை ‘சுகாவின் தத்துப்புத்திரன்’ என்றே சொல்வார்கள். எல்லா இடங்களிலும் என்னுடன் காணப்படும் மனோஜைக் காண்பித்து பலர் என்னிடம், ‘உங்க ஸன்னா, ஸார்?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஆம்’ என்றே சொல்லியிருக்கிறேன்.
ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ சிறுகதையைப் போல என்னை தன் குருவாக அவனாகவே முடிவு செய்து, ஏற்றுக் கொண்ட மனோஜ், ஒலிப்பதிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சகல விஷயங்களிலும் எனது குரு. ஆனால் குருவை அதட்டித்தான் கற்றுக் கொள்வேன்.
‘என்னடா இது? நீ வாங்கிக் குடுத்த ப்ளூடூத் ஸோனி ஸ்பீக்கர் லேப்டாப்போட கனக்ட் ஆகவே மாட்டேங்குது?’
‘ஸார். அதுக்கு மொதல்ல ப்ளூடூத்தை ஆன் பண்ணனும், ஸார்’.
படப்பிடிப்புக்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்றுவிட்டாலும் தவறாமல் ஃபோனில் பேசுபவன். சென்னைக்கு வந்து விட்டாலும் ஃபோன் வரும்.
‘என்ன மனோஜ்! வந்துட்டியா?’
‘இப்பதான் ஸார் வந்தேன். ஒங்களைப் பாக்க வரலாமா?’
‘வாயேன். எங்கே இருக்கே?’
‘ஒங்க ஏரியாலதான் ஸார்’.
‘வடபழனி வந்துருக்கியா?’
‘இல்ல ஸார். சாலிகிராமத்துக்கே வந்துட்டேன்.’
‘அடப்பாவி. சாலிகிராமத்துல எங்கே இருக்கே?’
‘ஒங்க பில்டிங்குக்குக் கீளதான் ஸார் நிக்கறேன்’.
மனோஜின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று, செல்ஃபி எடுத்துக் கொள்வது. நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி எப்படியும் ஆயிரமாவது இருக்கும். இன்னொரு பொழுதுபோக்கு இன்ஸ்டாக்ராமில் லைக் போடுவது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த அழகியாக இருந்தாலும் மனோஜின் லைக்கிலிருந்துத் தப்ப முடியாது.
சென்னைக்கு வெகு அருகே உள்ளே செம்பாக்கத்தில்தான் மனோஜின் வீடு உள்ளது. ஒரே ஒரு முறை என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பலமணிநேரப் பயணத்துக்குப் பிறகு செம்பாக்கம் அடைந்ததும் என் மன பிராந்தியத்தில் தாமிரபரணி தெரிந்தது.
‘அடேய்! என்னை திருநவேலிக்கேக் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?’
மனோஜின் தாய்மொழி கன்னடம். அவனது தாயார் தீவிர தமிழ் வாசகி. அன்றைக்கு மனோஜின் பெற்றோர் என்னை வரவேற்ற விதம் அத்தனை கூச்சத்தை வரவழைத்தது. ‘நீங்க எங்க பையனோட குரு. ஒங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னான். ஒங்கள சரியா கவனிக்கணுமேன்னு எங்களுக்கு டென்ஷனா ஆயிடுச்சு.’ மனோஜின் தாயார் இன்னும் என்னென்னவோ சொன்னார். நான் மனோஜின் தகப்பனாரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனோஜுக்கும், அவனது தகப்பனாருக்குமான ஒரே வித்தியாசம், அவனது தகப்பனார் வைத்திருந்த மீசை. மற்றபடி அவரும் மகனைப் போலவே உருண்டையாக இருந்தார். சின்ன உருண்டை, பெரிய உருண்டையெல்லாம் இல்லை. மொத்தமாக உருண்டை. அவ்வளவுதான். முறுக்கு மீசையை பசு நெய் தடவி நீவி விட்டிருந்தார். மீசையைத் தாண்டி அவரது சிரிப்பைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவர் பேச ஆரம்பித்ததும் அவருக்கும் என் மேல் அத்தனை மரியாதையை அவரது மகன் புகட்டி வைத்திருந்தது புலப்பட்டது.
மனோஜின் புஷ்டியான உடல்வாகு அவனது தாய் மற்றும் தகப்பன் வீட்டு சீதனம். உலகிலுள்ள சகல சைவ உணவு வகைகளையும் தேடித் தேடிச் சென்று சுவைப்பவன். சென்னையில் உள்ள அனைத்து சைவ ஹோட்டல்களுக்கும் மனோஜ் என்னை அழைத்துச் சென்றிருக்கிறான்.
‘ஸார். சௌகார்ப்பேட்டைல ஒரு தோசைக் கட. நெய்ல முக்கி தர்றாங்க, ஸார்.’
சொன்ன கையோடு அழைத்தும் சென்றான். அடுத்த முறை அழைத்தபோது மறுத்து விட்டேன்.
‘வேண்டாம்டா மனோஜ். அன்னிக்கு நெய் தோச சாப்பிட்டதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு தண்ணி குடிச்சாலும் நெய் குடிச்ச மாதிரியே இருந்தது.’
‘அப்ப போரூர்ல ஒரு நல்லெண்ணெய் தோசைக் கடை இருக்கு. போலாமா, ஸார்?’
இந்தளவுக்கு தேடல் உள்ள மனோஜ் ‘ஒடம்பைக் கொறக்கலாம்னு இருக்கேன், ஸார்’ என்று சொன்னால் மனம் பதறத்தானே செய்யும்!?
மயிலாப்பூரிலிருந்து மனோஜின் இரு சக்கர வாகனம் ஆழ்வார்ப்பேட்டைக்குத் திரும்பி ஒரு கடையின் வாசலில் நிற்கும் போது, இனிமேலும் நாம் உட்கார்ந்திருக்கலாகாது என்று பின் இருக்கையிலிருந்து இறங்கினேன்.
‘வாங்க ஸார்.’ வேகம் வேகமாகக் கடைக்குள் சென்றான். அது பாரம்பரிய அரிசி, மற்றும் தானியங்கள் விற்கும் கடை. கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி(யானை அல்ல), கருத்தக் கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி, அறுபதாம் குருவை அரிசி, தூயமல்லி அரிசி, குழியடிச்சான் அரிசி, சேலம் சன்னா அரிசி, பிசினி அரிசி, சூரக்குறுவை அரிசி, வாலான் சம்பா அரிசி என பற்பல அரிசிகள். இவற்றில் சில பெயர்களை மட்டும் அறிந்திருக்கிறேன். சிலவற்றை பெயரறியாமல் சிறு வயதில் உண்டுமிருக்கிறேன். ஒவ்வொன்றையும் வாங்கி பையில் போட்டுக் கொண்டே இருந்தான், மனோஜ்.
‘ஸார் ஒங்களுக்கு?’
‘கருப்பு கவுணியும், கருங்குறுவையும் மட்டும் எடுத்துக்கறேன்டா. எனக்கென்னவோ அது ரெண்டும் எனக்காகத்தான் வச்சிருக்காங்கன்னு தோணுது.’
குருசிஷ்யன் இருவரும் கருப்பு கவுணியிலும், கருங்குறுவையிலும் தீவிரமாக இறங்கினோம். விதி குன்றக்குடியிலிருந்து அழைத்தது. என் உடன் பிறவா சகோதரர்கள் சரவணனும், பாலசுப்பிரமணியமும் குன்றக்குடிக்கு அழைத்தனர். பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் பணி புரிபவர். வருடாவருடம் தனது சொந்த ஊரான குன்றக்குடிக்கு வரும் போதெல்லாம் என்னை தமது இல்லத்துக்கு அழைப்பார்.
‘அண்ணே! நம்ம வீட்டுக்கு வந்துட்டு, சண்முகநாதனை தரிசிச்சுட்டு அப்படியே பிள்ளையார்ப்பட்டிக்கும் போயிட்டு வரலாம்ணே!’.
இந்த வருடம் தம்பியின் அழைப்பைத் தட்ட இயலவில்லை. பாலசுப்பிரமணியத்துக்கு என் மூலம் அறிமுகமான தம்பிகள் ரமேஷ், மற்றும் ‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் என்னுடன் கிளம்பினர். நான் கிளம்பியதால் எனக்கு முன்பாகவே காரில் மனோஜ் இருந்தான். கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் குன்றக்குடியில் ஆபத்து காத்திருப்பதை அறியாத சிரிப்பு மனோஜின் குண்டு முகத்தில் தவழ்ந்தது. மாலையில் கிளம்பிய கார், போகிற வழியில் மேல் மருவத்தூர் தாண்டி, 99 காப்பிக்கடையில் நின்ற போதே குன்றக்குடி யானையின் மணியோசை ஒலிக்கத் துவங்கியது. ‘சுக்கு காபி மட்டும் குடிக்கலாம், ஸார்’ என்றபடி அமர்ந்த மனோஜுக்கு முன் வெண் பொங்கலும், ஆப்பமும், வாழைப்பூ வடைகளும் வந்து அமர்ந்து மனோஜைப் பார்த்து புன்முறுவல் பூத்தன. முதலில் சாப்பிட ஆரம்பித்தவன், மனோஜ்தான். நான் முறைத்துப் பார்த்ததை தன் மனக்கண்ணால் கவனித்த மனோஜ், ‘பொங்கல் வரகுல பண்ணியிருக்காங்க, ஸார். ஹெல்தி ஃபுட்’ என்றபடி வாழைப்பூ வடைக்குத் தாவினான். கடைசி வரைக்கும் சுக்கு காபி வரவே இல்லை. இரவுணவுக்கு திருச்சி சென்றோம். திருநவேலி தம்பி குமரேசனின் பரிந்துரையின் பேரில் பைபாஸ் சங்கீதாஸ் சென்றோம். திருநவேலியிலிருந்து திருச்சிக்குக் கிளம்பி வந்த அவன் எங்களுக்காக சங்கீதாஸ் வந்திருந்தான். சங்கீதாஸுக்குள் நுழைந்ததும், அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு வண்ண ஸ்டிக்கர் மனோஜின் கண்களைப் பறித்தது.
‘ஸார். வெஜிடபிள் ஆம்லேட்டாம், ஸார். அதுவும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீயாம்’ என்றான்.
‘ஆம்லேட்டா?! என்னடா மனோஜ்?’
‘ஸார். ஆமெலெட்டுன்னா ஆம்லெட் இல்ல ஸார். பயிறுல செஞ்சது. அடை மாதிரி இருக்கும்’.
குண்டுப்பயல் ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறான் போல. ‘சரி சொல்லித் தொலை’ என்றேன்.
‘இந்தக் கடைல தோசைல்லாம் வித்தியாசமா இருக்கும்னு குமரேசன் அண்ணன் சொல்றாரு, ஸார்’.
குமரேசனும் அவன் பங்குக்கு ‘ஆமாண்ணே. மெனு கார்டு பாருங்க. ஒங்களுக்குப் புடிச்ச தோசையைச் சொல்லுங்க’ என்றான்.
மெனு கார்டைப் பார்த்ததும் மூடி வைத்து விட்டேன். ‘ரெண்டு இட்லி சொல்லுப்பா’ என்றேன்.
‘ஏம்ணே? வெரைட்டியா தோச இருக்குமே! சொல்லலியா? வேறெங்கயும் கெடைக்காதுல்லா?’ என்றான், குமரேசன்.
‘குமரேசா! அண்ணன் மேல நெஜமாவே ஒனக்கு மரியாத இருந்தா அந்த தோசையல்லாம் சாப்பிடச் சொல்லுவியாடே?’ கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன்.
‘அப்படி என்னண்ணே போட்டிருக்கான்? ஏன் கோவப்படுதியோ? குடுங்க பாப்போம்’ என்று வாங்கியவனுக்கு ஒன்றும் புரிந்த மாதிரி தெரியவில்லை. மெனு கார்டை எட்டிப் பார்த்த மனோஜ் சொன்னான்.
‘ஸார். மூணாவதா போட்டிருக்கற தோசயத்தானே சொல்றீங்க?’
‘ஆமாடா’ என்றபடி இட்லியை சாப்பிட ஆரம்பித்தேன்.
‘நல்லா இருக்கும்னு நெனைக்கறேன். ஒண்ணு சொல்லி பாதி பாதி ஷேர் பண்ணலாமா, ஸார்?’ என்று கேட்ட மனோஜை முறைத்துப் பார்த்தேன்.
‘ஸாரி ஸார்’ என்றபடி, ‘இன்னொரு வெஜ் ஆம்லேட் கொண்டு வாங்க’ என்றான், மனோஜ். நகர்ந்த சர்வரிடம், ‘எக்ஸ்கியூஸ் மீ. ஒரு ஆம்லெட் வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீதானே?’ என்றும் கேட்டுக் கொண்டான்.
குன்றக்குடிக்கு நள்ளிரவில் போய்ச் சேர்ந்தோம். மறுநாள் காலை சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்களின் தாயாரை வணங்கினோம். அம்மா தன் பிள்ளைகளிடம் கண்களால் ஏதோ சொன்னார்கள். சற்று நேரத்தில் காலை உணவுக்காக பாலசுப்பிரமணியத்தின் வீட்டு டைனிங் டேபிளில் பெரிய இலை போடப்பட்டது.
மனோஜ் காதைக் கடித்தான்.’ஸார். குன்றக்குடில இலைல உக்காந்துதான் சாப்பிடணும் போல. அதுவும் என் சைஸுக்கே எல்லா இலையும் போட்டிருக்காங்க’.
‘மாயாபஜார்’ (பழைய) திரைப்படத்தின் ரவிகாந்த் நிகாய்ச்சின் தந்திரக் காட்சிகள் போல கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இட்லி, இரண்டு வடை, முந்திரிப் பூக்கள் பூத்த கேஸரித் தோட்டம், தனித் தீவு போலக் காட்சியளித்த வெண் பொங்கல், எண்ணெயில் ஜொலித்த இரண்டு அப்பம், சிறிதும் தண்ணீர் கலக்காத கெட்டி சாம்பார், முல்லை மலர் போன்ற சட்னி என அவ்வளவு பெரிய இலையின் பச்சை கண்ணுக்கேத் தெரியாமல் நிறைந்திருந்தது. டைனிங் டேபிளுக்கு இருபுறமும், கைகளைக் கட்டியபடி நின்று கொண்ட சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் எங்களை எழுந்து ஓட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். முதலில் நீண்ட நாள் பழக்கமான இட்லியிலிருந்துத் தொடங்கலாம் என்கிற எண்ணத்துடன் மெதுவாக இட்லியைத் தொடும் போது, பக்கத்து மனோஜ் இலையில் இட்லி வைத்த இடம் பச்சையாகத் தெரிந்தது. பொங்கலுக்குள் அவன் இறங்கியிருந்தான். பிரசாத்தின் கண்கள் கலங்கியிருந்தன.
‘ஏன் தம்பி? சட்னி காரமோ?’
‘இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலண்ணே!’
‘அப்புறம் என்ன தம்பி?’
‘இல்லண்ணே. சைடுல பாருங்க. கையைக் கட்டிக்கிட்டு ரெண்டு அண்ணன்களும் கிங்கரர்கள் மாரி நிக்காங்க. ஒங்களையாவது அண்ணன்னு விட்டிருவாங்க. எங்க நெலம மோசம்ணே. இந்த மனோஜ் வேற டயட்ல இருக்கறதா சொல்லிட்டு வெளுத்து வாங்குதானேண்ணே! உடனயொத்த பய அவ்வளவு அளகா சாப்பிடுதான். ஒனக்கென்னல கொள்ளன்னு அடிப்பாங்களோன்னு பயமா இருக்குண்ணே!’
தம்பி சரவணனை லேசாகத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்லா சாப்பிடுங்கண்ணே!’ என்றார். அவரது தோற்றம் கவலையளித்தது. காரணம், சரவணனுக்கு முன் மனோஜ் ரொம்ப ஒல்லியாகத் தெரிவான்.
‘ஏன் தம்பி? முழுசையும் சாப்பிடலன்னா அண்ணன் மேல கோபப்பட மாட்டீங்கல்ல?’
‘கோபப்பட மாட்டேம்ணே. வருத்தப்படுவேன்.’
‘ஸார். ஆறிடப் போகுது. சாப்பிடுங்க. கேஸரி நல்லாருக்கு’ என்றான், மனோஜ்.
அரை மணிநேரம் கழித்து கிட்டத்தட்டத் தவழ்ந்து பாலசுப்பிரணியனின் வீட்டிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும் எல்லா திசையிலிருந்தும் குறட்டையொலி கேட்டது. பிள்ளையார்ப்பட்டியில் பிள்ளையார் முன் அரைமயக்கத்தில் நின்று வணங்கினோம். தூக்கத்தைப் போக்க தோப்புக்கரணங்கள் போட்டுப் பார்க்க முயன்றும், நிறைமாத வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிள்ளையார்ப்பட்டியிலிருந்து அரியக்குடி செல்லும் வழியில்,
‘பிள்ளையார்ப்பட்டியில இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம், ஸார்’ என்றான், மனோஜ். என் மனதுக்கு நெருக்கமாக மனோஜ் இருப்பதற்கு இந்தச் சிறு வயதில் அவன் இப்படி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடுவதும் ஒரு காரணம்.
‘வேணா சாயந்தரம் ஒரு வாட்டி பிள்ளையார்ப்பட்டி வரலான்டா. அவ்வளவுதானே?’
‘இல்ல ஸார். இப்பதான் சூடா புளியோதரை குடுப்பாங்களாம். சாயந்தரம் சக்கரப் பொங்கல்தானாம்’ என்றான்.
நல்ல வேளையாக அதற்குள் அரியக்குடி வந்தது. திருவேங்கடமுடையானை தரிசித்து விட்டு அருகில் உள்ள சொக்கநாதபுரம் சென்று அங்குள்ள பிரத்யேங்கரா தேவி கோயிலுக்கும் சென்று வந்தோம். மதிய உணவு காரைக்குடியில். கருங்குறுவையை மறந்து விட்டிருந்த மனோஜ், அநேகமாக அங்குள்ள எல்லா வகைகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டான். ‘கோயில் கோயிலா அலைஞ்சதுல நல்ல பசி ஸார். இங்கெல்லாம் பெருமாள் கோயில்ல பிரசாதம் குடுக்கறதே இல்ல. ஏன் ஸார்?’ என்று கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல், வெஜிடபிள் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தான். மதிய ஓய்வுக்குப் பிறகு குன்றக்குடி சண்முகநாதன் தரிசனம். சிறப்பு பூஜை. நாகஸ்வர பின்னணியில், ரம்யமான மலைக் காற்று. தரிசனம் நிறைந்து வெளியே வரும் போது சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் கைகளில் தூக்குச்சட்டி தொங்கியது. ‘ஸார். காலைல மிஸ் ஆன புளியோதரை’ என்றான், மனோஜ். குரலில் கொப்பளித்த குதூகலத்தில் கருப்பு கவுணி காணாமல் போயிருந்தது. ‘ஆனா இப்ப புளியோதரை வேண்டாம், ஸார்’ என்றான். தொடர்ந்து மனோஜே சொன்னான். ‘காரைக்குடில ஒரு ஹோட்டல்ல பொரிச்ச பரோட்டாவும், பால் குருமாவும் நல்லா இருக்குமாம் ஸார். பாலு ஸார் நம்மளக் கூட்டிக்கிட்டு போகணும்னு ஆசப்படறா, ஸார். பாவம் நல்ல மனுஷன்’.
கோமா நிலையில் வந்து படுக்கையில் சரிந்த பிறகு சொப்பனத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
‘மனோஜ்க்கு புளியோதரை சாப்பிடாததுல வருத்தம்ணே’ என்றார், பிரசாத்.
‘அதுக்காக நம்ம ஊர்ல சாப்பிடற மாதிரி பொரி கடல தொவையல் அரச்சு புளியோதரை சாப்பிடற நேரமா தம்பி, இது? இது பிரசாதம்லா. காலைல சாப்பிட்டா போச்சு.’
அரைத் தூக்கத்தில் இதைச் சொல்லும் போது தம்பி பாலசுப்பிரமணியம் அறையில் இருந்ததை நான் கவனிக்கவில்லை. மறுநாள் காலை நாங்கள் சென்னை கிளம்புவதாகத் திட்டம். காலை ஆறரை மணிக்கு எங்கள் அறையின் கதவைத் தட்டிய பாலசுப்பிரமணியம், சரவணன் சகோதரர்கள் கைகளில் எவர்சில்வர் தட்டுகள், தூக்குச்சட்டிகள், சிறிய பாத்திரம். அதிகாலையில் அரைத்த பொரிகடலைத் துவையலுடன் புளியோதரை பரிமாறப்பட்டது. மனோஜ் சாப்பிடத் தயாரானான். குன்றக்குடி சகோதரர்கள் பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.
‘பல் மட்டுமாவது தேச்சுக்கிடறேன், தம்பி’ என்றேன்.
‘நான் தேச்சிட்டேன், ஸார்’. சாப்பிடத் துவங்கினான், மனோஜ். சரவணன், பாலசுப்பிரமணியனின் முரட்டன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, ஶ்ரீரங்கம் சென்றடைந்தோம், அம்மா மண்டபத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் புகுந்து, காவிரியில் குளித்துக் கரையேறி, ஶ்ரீரங்கநாதனை தரிசித்து விட்டு வெளியே வரும் போது மனோஜின் கைகளில் புளியோதரை. முறைத்தேன். ‘இது குன்றக்குடி புளியோதரை இல்ல, ஸார். அதைத்தான் காலைல சாப்பிட்டோமே! இது ஶ்ரீரங்கம் பிரசாதம்’ என்றான். ‘சாயங்காலம் சாப்பிட்டுக்கலாம். இப்ப லஞ்ச் டைம்’ என்றார், பிரசாத்.
மதிய உணவுக்கு அதே பைபாஸ் சங்கீதாஸ். நான் மறந்திருப்பேன் என்று நினைத்து அந்த பிரத்தியேக தோசை இருக்கிறதா என்று நைஸாக கேட்டுப் பார்த்தான், மனோஜ். அது இரவில் மட்டும்தான் என்பதில் அவனுக்கு வருத்தம்தான். கூடவே ஒன்று வாங்கினால் மற்றொன்றும் இலவசமாகக் கிடைக்கிற வெஜிடபிள் ஆம்லேட்டும் இரவு மட்டும்தான் என்பதில் அவனுக்கு டபிள் வருத்தம். சென்னைக்குத் திரும்பியவுடன் மீண்டும் கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் திரும்பிய மனோஜிடம் கேட்டேன்.
‘அப்படி என்னடா அந்த தோசை மேல ஒரு காதல், ஒனக்கு?’
‘நேம் இண்டெரெஸ்டிங்கா இருந்துச்சு ஸார். அதான். இங்கே சென்னைல எங்கேயாவது கிடைக்குதான்னு செக் பண்ணிட்டு சொல்றேன், ஸார். ஒரு நாள் போயி டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம். நீங்க கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலேன்னா நான் வேணா நீங்க சாப்பிட்டதை யார்க்கிட்டயும் சொல்லாம இருந்துக்கறேன், ஸார்’.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ள மனோஜின் உள்ளம் கவர்ந்த திருச்சி சங்கீதாஸின் மெனு கார்டில் மூன்றாவதாக உள்ள அந்தக் கவர்ச்சி தோசையின் பெயர், ‘டிங்கிரி டோல்மா தோசை’.