வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா? நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.
‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை கல்பனாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகத்தை உற்று நோக்குகிறார். பின் வேறெங்கோ பார்க்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தைத் திருப்பிச் சொல்லவே இல்லை. பொறுமை இழந்த வாத்தியார் காமெராவிலிருந்து இறங்கி அருகில் வந்து என் தோளில் கை போட்டபடி, ‘ம்ம்ம். இப்ப சொல்லு’ என்றார். சில நிமிடங்களில் முதல் ஷாட் எடுக்கப்பட்டது. காமெரா கோணம் மாறும் போது கல்பனா சற்றுத் தள்ளி அமர்ந்தபடி என்னைப் பார்த்து தன் உதவியாளரான ஒரு வயதான அம்மாளிடம் ஏதோ சொல்வதை கவனிக்க முடிந்தது.
லஞ்ச் பிரேக்கின் போது கல்பனாவின் உதவியாளர் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடி, ‘எய்யா! இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா? எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி! உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க? நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென்! வேற ஒண்ணும் பேசலயே!’ என்றேன். அன்றைய லஞ்ச் பிரேக்கின் போது அந்த அம்மாள் என்னை எங்கள் யூனிட்டோடு சாப்பிட விடவில்லை. ‘எய்யா! அக்கா உன்னக் கூப்பிடுதா. வா’ என்று அழைத்துச் சென்றார்கள்.
அப்போதெல்லாம் கேரவன் வசதி வரவில்லை. ஷூட்டிங் ஹவுஸின் ஒரு தனியறையில் கல்பனா அமர்ந்திருந்தார். தயக்கத்துடன் உள்ளே சென்றேன். சேரிலிருந்து எழுந்து என் கைகளைப் பிடித்து, சிரித்தபடி ‘பயந்துட்டீங்களா தம்பி?’ என்றபடி தன்னருகில் இருந்த சேரில் அமர வைத்தார். ஒன்றும் புரியாமல் கூச்சத்துடன் அமர்ந்த என்னிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.
‘எமோஷனலானவதான் நான். ஆனா இப்ப அழப்போறதில்ல. நேத்திக்கு உன்னை, நீன்னு சொல்லலாமில்ல? எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே!’
‘ஐயோ தாராளமா சொல்லுங்க’.
‘நேத்திக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்த உடனே சட்டுன்னு டிஸ்டர்ப் ஆயிட்டேன். அதான் ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். ஒரே ஜாடைன்னு சொல்ல முடியாது. ஆனா, ஏனோ ஒன்னக் காணும்போது நந்து ஞாபகம்’.
நந்து கல்பனாவின் இளைய சகோதரன் என்பதும், தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பின்னர் அறிந்தேன்.
‘இன்னைக்கு என் கூட சாப்பிடேன்’ என்றார்.
நான் தயங்கியபடி, ‘இல்லக்கா. நான் வெஜிட்டேரியன். எனக்காக அங்கெ தனியா சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்க’ என்றேன். இயல்பாக நான் அக்கா என்றழைத்தது அவரை சந்தோஷப்படுத்தி விட்டது. எழுந்து ‘மோனே’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அந்த நிமிஷத்திலிருந்து நடிகை கல்பனா எனக்கு அக்கா ஆனார். மறுநாள் படப்பிடிப்பில் எந்த சிக்கலுமில்லை. வசனங்களை நான் சொல்லச் சொல்ல, உடனே ரெடி என்றார் கல்பனா அக்கா. வாத்தியார் என்னிடம் மெதுவான குரலில், ‘என்னடா மேஜிக் பண்ணினே?’என்றார். நான் அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மறுநாளிலிருந்து மதிய உணவு கல்பனா அக்காவுடன் தான். எனக்கான சைவ உணவையும் அவரது அறைக்கு வர வைத்திருந்தார். அவர் நடித்த மலையாளப் படங்களை நான் பார்த்திருப்பதில் அவருக்கு அத்தனை ஆச்சரியம்.
‘என்ன தம்பி சொல்றே? பஞ்சவடி பாலம் நீ பாத்திருக்கியா?’
‘பொக்குவெயிலும் பாத்திருக்கேன்கா’.
ஒரு தமிழ்நாட்டு இளைஞன் மலையாளத்தின் முக்கியமான திரைப்படங்கள் பற்றிப் பேசுவது கல்பனாக்காவுக்கு நம்பவே முடியாத மகிழ்ச்சியை அளித்தது. ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள், ஒருக்கம்’ மற்றும் கல்பனாக்கா நடிக்காத ‘தாழ்வாரம், தாளவட்டம், கள்ளன் பவித்ரன், ஓரிடத்தொரு பயில்வான், மற்றொரு ஆள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ போன்ற படங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறேன்.
‘கேரளத்துல உன் வயசுல உள்ள ஒருத்தனும் இந்தப் படங்களையெல்லாம் பத்திப் பேசறத நான் கேட்டதில்ல, தம்பி’ என்பார்.
கல்பனாக்காவுக்கு சங்கீத ஞானம் இருந்தது. ஶ்ரீதேவி ஹவுஸில் படப்பிடிப்பு இடைவேளைகளில் சொக்கலிங்க பாகவதரை ஏதாவது ராகம் பாடச் சொல்லிக் கேட்பேன். அப்போதெல்லாம் கல்பனாக்காவும் அவரது அறையின் வாசலில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார். அப்புறமாக என்னிடம் தனியே விசாரிப்பார்.
‘தம்பி! ஐயா பாடுனது நாட்டைதானே?’
‘அட! ராகம்லாம் தெரியுமாக்கா?’
‘டேய்! மிருதங்கமே வாசிப்பேன்டா, நான்!’
தான் குண்டாக இருப்பதனால்தான் தனக்கான பிரத்தியேக வேடங்கள் தேடி வருகின்றன என்பதை இயல்பாகப் புரிந்து வைத்திருந்த கல்பனாக்காவுக்கு தன் உடல்வாகு குறித்த சிறு கூச்சம் உண்டு. காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரையாவது காண்பித்துக் கேட்பார். ‘தம்பி தம்பி! அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே?’
சரளமாக தமிழில் பேசக் கூடியவர்தான் என்றாலும் அவரது சில தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் சுத்தமான மலையாளம் கேட்கும். ‘சதிலீலாவதி’யில் ஓர் இடத்தில் ‘ஐயோ முருகா’ என்று அவர் சொல்ல வேண்டும். எத்தனை முறை முயன்றும் அவரால் ‘ஐயோ முர்யுகா’ என்றுதான் சொல்ல முடிந்தது. ஒவ்வொரு முறையும் கமல் அண்ணாச்சி திருத்தி சொல்லிக் கொடுத்தும் அவரால் ‘முர்யுகா’தான் சொல்ல முடிந்தது. பல முறை எடுக்கப் பட்ட அந்த ஷாட் முடிந்தவுடன் வேக வேகமாக என்னருகில் வந்து என் வயிற்றில் குத்தினார்.
‘என்னை ஏன்க்கா குத்தறீங்க? நான் சிரிக்கக் கூட இல்லியே!’
‘நின்ன ஞான் அறியுன்டா, கள்ளா! நீ மனசுக்குள்ள சிரிச்சே!’.
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தை நண்பர் ஜெயமோகனிடம் நினைவுகூர்ந்து சொல்லிச் சிரித்திருக்கிறார், கல்பனாக்கா.
ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது நெருக்கமாகப் பழகுபவர்கள், அந்தப் படம் முடிந்தவுடன் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆனால் கல்பனா அக்காவுடனான பந்தம் அப்படி இல்லை என்பதை சதிலீலாவதி முடிந்த பிறகு அவரது திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பி வைத்ததன் மூலம் உணர்த்தினார். வாத்தியார் பாலுமகேந்திரா, ‘டேய்! எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு!’ என்றார். ‘ஏ என்னப்பா! கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க! கண்டிப்பா போயிடு’ என்றார், ரமேஷ் அரவிந்த்.
ஆனால் கல்பனா அக்காவின் திருமண சமயத்தில் மகேஷ் பட் தயாரிப்பில் வாத்தியாரின் ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. படத்தின் தயாரிப்பு நிர்வாகம் உட்பட கூடுதல் பொறுப்புகள். என்னால் கல்பனா அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. அக்காவிடம் ஃபோனில் பேசுவதற்கும் தயங்கினேன். சில நாட்கள் கழித்து ஃபோன் பண்ணினேன். என்னிடம் பேச மறுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆகி பேசத் துவங்கினார். ஆனாலும் கோபம் குறையவில்லை. ‘அத்தான் எப்படி இருக்காருக்கா? உங்களை நல்லா பாத்துக்கறாரா?’ என்றேன். கோபம் முற்றிலும் வடிந்தது. பிறகு அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் அவரது திருமணத்துக்கு நான் செல்லாததைக் குத்திக் காண்பிப்பார். ‘என்னடா அக்கா? பெரிய அக்கா! அக்கா கல்யாணதுக்கு வராத துரோகிதானடா, நீ?’
அடுத்த ஓரிரு வருடங்களில் அம்மா காலமான செய்தி அறிந்து ஃபோன் பண்ணினார். பிரியப்பட்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களின் குரலைக் கேட்கும் போது மனதில் உள்ள சோகம் வெடித்துக் கிளம்புவது நிகழ்ந்தது. அக்காவின் குரலைக் கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ‘கரயண்டா மோனே! நினக்கு அம்மயா ஞான் உண்டுடா’ என்றார்.
என்னுடைய திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்தேன். அது அவருக்குக் கிடைத்ததா என்பதை அறிய முடியவில்லை. அந்த சமயம் தொலைபேசியில் அக்காவை அணுக இயலவில்லை. எனது திருமண வரவேற்பு பாலக்காட்டில் நடந்தது. அதற்காகவாவது அக்கா வரவேண்டும் என்று விரும்பினேன். தொடர்ந்து தொலைபேசியில் முயன்று கொண்டே இருந்தேன். திருமண வரவேற்பன்றுதான் பேச முடிந்தது. அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார். ‘இன்னைக்கு ரிஸப்ஷனை வச்சுக்கிட்டு கூப்பிட்டா நான் எப்படிடா வர்றது?’ என்றார். நியாயமாகப் பட்டது.
அதன்பிறகு ஒன்றிரண்டு முறைதான் பேசியிருப்பேன். குரலில் அத்தனை உற்சாகமில்லை. ஒவ்வொரு முறையும் அவர் கணவரை விசாரிப்பேன். பேச்சை மாற்றுவார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பார்க்க நேர்ந்தது. அவர் என்னை கவனிக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. எனக்கு ஏனோ அருகில் போய் பேசத் தோன்றவில்லை. சென்ற வருடம்தான் அவரது கைபேசி எண்ணை ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் வாங்கினேன். ஆனால் அழைக்கவில்லை. நான் யாரிடம் அவரது கைபேசி எண்ணை வாங்கினேனோ, அதே மனிதரிடம் அக்காவும் என் எண்ணைக் கேட்டு வாங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால் அவரும் அழைக்கவில்லை.
சென்ற மாதம் ஹைதராபாத்திலிருந்து தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா அபூரி ரவி அழைத்தார்.
‘சுகா ஸார்! நான் எழுதியிருக்கிற ‘ஊப்பிரி’ படத்துல கல்பனா மேடம் நடிக்கிறாங்க. ஒங்களுக்கு அவங்க க்ளோஸ் இல்ல! சதிலீலாவதி பத்தி சொல்லியிருக்கீங்களே! ஞாபகம் இருக்கு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட் போவேன். எதுவும் சொல்லாம ஃபோன் போட்டு அவங்கக்கிட்ட குடுக்கறேன். பேசுங்க. சர்பிரைஸா இருக்கட்டும்’ என்றார். மறுநாள் அக்கா அளித்த சர்பிரைஸ் நியூஸை அபூரி ரவிதான் என்னை அழைத்து கலங்கிய குரலில் சொன்னார். ‘மேடம் ரூம்லயே இறந்து கெடக்குறாங்க, ஸார்’.
உறவுகளைப் பேணி வளர்த்துக் கொள்ளத் தெரியாத என்னைப் போன்ற மடையனுக்கு கல்பனா அக்காவைப் போன்ற ஆத்மார்த்தமான ஒரு மனுஷியின் கடைசி நாட்கள் வரை பழகக் கொடுத்து வைக்கவில்லை. கல்பனா அக்காவின் மரணச் செய்தியைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே கலாபவன் மணி மறைந்த செய்தி. ஆஷா ஷரத் ஃபோன் பண்ணி அழுதுகொண்டே, ‘ஸார்! மணியேட்டன் மரிச்சு போயி’ என்று சொன்னபோது, மேற்கொண்டு எதுவும் பேசாமல் ‘அப்புறம் பேசறேன்மா’ என்று ஃபோனை வைத்துவிட்டேன். மணியின் மரணச் செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்ததென்றாலும், அத்தனை அதிர்ச்சி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாபநாசம்’ சமயத்திலேயே மணி நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் காலாமாகிவிட்ட பிறகு இப்போது அதை சொல்லலாம்தான். அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதை ‘பாபநாசம்’ குழுவினர் அனைவருமே உணர்ந்திருந்தோம்.
முதல் சந்திப்பிலேயே என்னை தனியே அழைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘ஸார்! எனக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம். ரொம்ப கஷ்டப்பட்டுதான் தமிழ் பேசறேன். இதுல ஸ்லாங்க் பேசறதுல கான்ஸண்ட்டிரேட் பண்ணினா என்னால பெர்ஃபார்ம் பண்ண முடியாது. அதனால என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விட்டிருங்க. டப்பிங்ல என்னை புழிஞ்சிருங்க. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்’ என்றார்.
‘பாபநாசம்’ படப்பிடிப்பில் மணியை நான் தொந்தரவு செய்யவே இல்லை. ஆனால் அவர் வசனம் பேசுகிற விதத்தில் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனென்றால் மணிக்கு வசனங்களை ப்ராம்ப்ட் பண்ண வேண்டும். அவரால் வசனங்களை மனப்பாடமாகப் பேசி நடிக்க இயலவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இணை இயக்குநர் பஹ்ருதீன் சத்தமாக ஸ்கிரிப்டில் உள்ள வசனங்களைச் சொல்லச் சொல்ல, கேமராவுக்கு முன் ஃபிரேமுக்குள் இருக்கும் மணி, தன் காதில் வாங்கி வாங்கிச் சொல்லி நடித்துக் கொண்டிருந்தார். என்னால் இந்த முறையை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. தவிர கமலஹாசனுக்கு பிராம்ப்ட் செய்தால் ஆகவே ஆகாது. அவருக்கு மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் மற்றவருக்கு பிராம்ப்ட் செய்தாலும் அவர் கவனம் கலைவார். ஆனால் மணி விஷயத்தால் கலவரமான என்னை சமாதானப்படுத்தியவர், அவரே. ‘எனக்கும் இது பிடிக்காதுதான். ஆனா, பெரும்பாலும் இது மலையாள சினிமால உள்ள வழக்கம்தான். விடுங்க’ என்றார்.
ஆனாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் தாய்மொழியல்லாத வேற்று மொழியை வெறுமனே காதில் வாங்கி, தப்பும் தவறுமாக உதட்டசைத்து சமாளித்தால், குரல் சேர்க்கையில் படாத பாடு பட வேண்டியது வரும். அந்த விஷயத்தில் பல முன் அனுபவங்கள் உண்டு என்பதால் இயக்குநர் ஜீத்துவிடம், ‘இந்தாள் டப்பிங்ல படுத்தப் போறான், ஜீத்து’ என்றேன். ‘அதப் பத்தி எனக்கென்ன? அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ்! பல்லக் காமிக்காதய்யா’ என்றேன். ஜெயமோகன்தான் என் பயம் போக்கினார். ‘கவலையே படாதீங்க. மணிய எனக்கு நல்லாத் தெரியும். அவர வேல வாங்கத் தெரிஞ்சா போதும். எப்படின்னாலும் வளைஞ்சு குடுப்பார். ஒங்களால முடியும்’.
படப்பிடிப்பு இடைவேளைகளில் ஜெயமோகன், நான், இளவரசு, அருள்தாஸ் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கலாபவன் மணி வித விதமான குரல்களில் பேசி, நடித்து காண்பித்து எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். தேர்ந்த மிமிக்ரி கலைஞரான மணி, பல குரல்களில் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் மிருகங்கள், பறவைகளின் உடல் மொழியையும் பயின்றிருந்தார். நாயின், மாட்டின், காக்கையின், குருவியின் உடல்மொழியை கண் முன் கொணர்ந்து அசரடித்தார். இடையிடையே மலையாளத்து பாலியல் கதைகளை ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்து காண்பித்தார். கமலஹாசன் முன் அத்தனை பவ்யம் காட்டினார். அதற்குக் காரணமும் சொன்னார். ‘ஒங்களுக்கெல்லாம் முன்னாடியே அவர் எங்களுக்கு ஹீரோ. சின்ன வயசுலேருந்து நான் பாத்து பாத்து ரசிச்சு, பிரமிச்ச ஒருத்தர் இப்ப என் கூட நின்னு பேசறார். எனக்கு பேச்சே வரல, ஸார். வராது’.
பாபநாசம் திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு முந்தைய இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளில் கமலஹாசனைப் போட்டு அடித்து, உதைக்கும் காட்சிகளில் துவக்கத்தில் மணியால் அத்தனை சகஜமாக நடிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கான ரிஹர்ஸலின் போதும் கமலஹாசன் காட்டிய முனைப்பைப் பார்த்து அவராக மெல்ல அந்தக் காட்சிக்குள் இயல்பாக வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு உக்கிரமானார். காமிராவுக்கு முன்னால் மணியைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருடனும் விடை பெறும் போது என்னருகில் வந்து அணைத்து, கை குலுக்கி, ‘டப்பிங்ல பாக்கலாம், ஸார்’ என்று கண்ணடித்து விடைபெற்றார். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது.
நான் சந்தேகித்த மாதிரியே ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டப்பிங் துவங்கி முடியும் கட்டம் வரும் வரைக்கும் மணி வரவில்லை. தமிழில் அவர் நடித்த சில படங்களுக்கு குரல் கொடுத்த கலைஞரை சிபாரிசு செய்தார். அவர் சொன்ன அந்தக் குரல் உட்பட இன்னும் பல குரல்களை சோதித்துப் பார்த்தோம். எதுவுமே மணியின் உடல்மொழிக்கு ஒத்து வரவில்லை. தவிர, வசனங்களை பிராம்ப்ட் செய்து நடித்திருந்ததால், பல இடங்களில் தெளிவில்லை. குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட்களில் மணியின் உதட்டசைவும், ஸ்கிரிப்டில் உள்ள வசனமும் பொருந்தவே இல்லை. அதற்காக நிறைய மெனக்கிட வேண்டியிருந்தது. அதற்குள் திருநெல்வேலி பாஷையை வேறு கொண்டு வர வேண்டும். உடலையும், உள்ளத்தையும் வருத்தி அதற்காக பல மணிநேரம் உழைத்து ஒருமாதிரியாக மணி பேச வேண்டிய பகுதிகளை தயார் செய்து வைத்திருந்தோம். ஆனாலும், மணி வருவதாக இல்லை. தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ‘எத்தனை நாள்தான் டப்பிங் பண்ணுவீங்க? இப்பவே ஒரு மாசம் தாண்டப் போகுது. டப்பிங்குக்கு போட்ட பட்ஜெட் எப்பவோ எகிறிடுச்சு. ப்ளீஸ் சீக்கிரம் ஒரு டெஸிஷனுக்கு வாங்க’ என்றார்கள். பல குரல்களை முயற்சி செய்து பார்த்து அலுத்து விட்டு, தீர்மானமாகச் சொன்னேன். ‘மணியை வரவழையுங்கள். அவர் வந்தால்தான் டப்பிங்’.
இன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போய் ஒரு நாள் மணி வந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். ‘வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா?’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்சமும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி?’ என்றேன். ‘இல்ல ஸார். டேக் போகலாம். ப்ளே பண்ணுங்க இஞ்சினியர் ஸார்’ என்றார். தியேட்டருக்குள் நின்ற பஹ்ருதீன் கண்ணாடித் திரை வழியாக என்னைப் பார்த்து சைகை மூலம், ‘அவர் பேசட்டும்’ என்றார். அமைதியாக இருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே சரியாக வரவில்லை. திருத்தம் சொன்னேன். பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார், மணி. அடுத்த டேக். பிழை. திருத்தம். அதற்கு அடுத்த டேக். இன்னும் பல டேக்குகள். மணி பொறுமையிழந்தார்.
‘ஸார். நான் இதுக்குத்தான் வர மாட்டேன்னு சொன்னேன். இப்படி நீங்க கரெக்ஷனுக்கு மேல கரெக்ஷன் சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் ஹெட்ஃபோனைக் கழட்டி வச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன்’.
நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது, உதவி இயக்குநர்களுக்கும், ஒலிப்பதிவு இஞ்சினியருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மணியே மௌனம் கலைத்தார்.
‘இப்ப என்ன ஸார் செய்யலாம்?’
‘ஒரே ஒரு வாட்டி ரீல் ஃபுல்லா பாருங்க, மணி’. துவக்கத்தில் சொன்னதையே மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னேன். ‘ஓகே ஸார். போடுங்க. பாக்கலாம்’ என்றார். ரீல் முழுதும் ஓடத் துவங்கியது. மணி ஏற்று நடித்த பெருமாள் கதாபாத்திரம் பேசும் எல்லா ஷாட்களிலும் உதட்டசைவுக்கு ஏற்ப என் குரலில் பேசி பதிவு செய்து வைத்திருந்ததைக் கேட்டார், மணி. வாய்ஸ் ரூமிலிருந்து திரும்பி கண்ணாடித் திரை வழியாக இஞ்சினியர் அறையிலிருந்த என்னைப் பார்த்தார். வாய்ஸ் ரூமுக்குள் நுழைந்ததிலிருந்து மணி திரும்பவே இல்லை. ‘என்ன ஸார்! அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி?’ என்றேன். ‘ரெடி, ஸார்’ என்றார்.
அன்று மதியமே மணியின் பகுதி முழுதும் டப் செய்து முடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியது வரும் என்ற எண்ணத்தில் சென்னை வந்திருந்த மணி உற்சாகமாகக் கிளம்பினார். கிளம்பும் போது எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்தனர். ‘வாங்க சுகா ஸார். நாம ஃபோட்டோ எடுக்க வேண்டாமா?’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி!’ என்றேன். ‘ஐயோ! அன்பு ஸார். அன்பு’ என்றார். பிறகு ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் விழாவுக்காக வந்திருந்த மணி, பின் பக்கமாக வந்து என்னைப் பிடித்துத் தூக்கினார். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஸார்’ என்றார்.
மணி இறந்த மறுநாள் நானும், ஜெயமோகனும் மணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நான் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமாகவே தனக்கு மணியின் மறைவு பற்றித் தெரிய வந்ததாகச் சொன்னார். ‘சுகா! ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார்? அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன? கார்ச்செலவுக்கு மட்டும் குடுத்தா போதும். அடுத்த படத்துல பேரம் பேசி வாங்கிக்கிடறேன். சுகா படத்துல நான் உண்டுன்னாரு. ஒங்க எஸ் எம் எஸ் வந்தப்ப எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இதுதான்’ என்றார், ஜெயமோகன்.
ஜெயமோகன் இதை என்னிடம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.