‘அம்மாஆஆஆஆஆடி ஈஈஈஈஈஈஈ . . . பொண்ணுக்குத் தங்க மனசு’ என்கிற ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பாடல் எனக்கு சௌந்தர்ராஜனையோ, கணேசனையோ, விஸ்வநாதனையோ நினைவுபடுத்துவதில்லை. இப்போதும் எங்காவது தூரத்திலிருந்து, காற்றில் கலந்து என் காதுகளை அந்தப் பாடல் எட்டும் போது திருநவேலியின் பூதத்தான் முக்கில் சிவப்புச் சட்டை அணிந்து அந்தப் பாடலைப் பாடிய நாகர்கோயில் தமிழ்மகன் உசேனின் புதல்வர் ஷாஜி தான் நினைவுக்கு வருகிறார். ‘காதலிக்க நேரமில்லை’ பாடல், லாலா சத்திரமுக்கு மேடையில் பாடிய டிரெம்பெட் மாரியப்பனை ஞாபகப்படுத்துகிறது. அதற்குப் பிறகுதான் கோவிந்தராஜனும், முத்துராமனும் வந்து சேர்வார்கள். ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் ‘பால் போலவே’ பாடலைக் கேட்கும் போது கவிஞர் இசைக்கு உறவினரான வாணிஶ்ரீயைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கண்ணம்மாக்காவே முன்னே வருகிறார். எண்பதுகளில் பதின்வயதுகளைக் கடந்த திருநவேலி இளைஞர்களுக்கு, ‘அவள் ஒரு நவரச நாடகம்’ பாடலைப் பாடியது பாலசுப்ரமணியமல்ல. ‘ஆடலரசன்’ பிரபாகரன்தான்.
இப்படி அசலை மறக்கடித்த நகல்களுக்கு மத்தியில் ஒரு நகலை இன்னொரு நகல் பின்னுக்குத் தள்ளி அதுவே எனக்கு அசலானது. ‘அடி கோமாதா’ என்கிற பாலசுப்ரமணியனின் பாடலை, நான் திருநவேலி சம்சுதீனை நினைத்தபடியேதான் கேட்பது வழக்கம். கோவையைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகரும், கவிஞருமான ஜான் சுந்தரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு, இளைய திலகம் மறைந்து, ‘இளைய நிலா’ ஜான் என் கண்களுக்குள் வந்தார்.
திருநவேலிப் பகுதிகளில், ‘நன்றாகப் பாடுபவர்களை’ நல்லா பாட்டு படிப்பான் என்பார்கள். ஜானுக்கு பாட்டு பாடவும் தெரியும். படிக்கவும் தெரியும். எழுதவும் தெரியும்.
சுய நலத்தின் உச்சத்தில்
நிற்குமிவனை நெருங்காதிருங்கள்
பெருங்கருணையுடன் அணுகும் உங்களிடம்
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் செல்வம்
கொஞ்சம் போகம்
கொஞ்சம் தாய்மையென
சகலத்தையும் இரவல் கேட்குமிவன்
நீங்கள் வற்றத்துவங்குகையில்
வேறொரு வாசலில் குவளையோடு நிற்பான்
நீங்கள் புலம்பத் துவங்கியிருப்பீர்கள்
சுய நலத்தின் உச்சத்தில்
நிற்குமிவனை நெருங்காதிருங்கள்.
மேற்கண்ட கவிதை, ஜான் சுந்தர் எழுதியதுதான். ஜான் கட்டுரைகள் எழுதுவார் என்கிற விவரத்தை ஒளித்து வைத்திருந்தார். ‘நகலிசைக் கலைஞன்’ என்னும் கட்டுரைத் தொடர், புத்தகமாக வெளிவந்த பிறகு அந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
தனது மேடைக் கச்சேரி அனுபவங்களையும், தான் சந்தித்த கலைஞர்களையும், அவர்களுக்குள் இருந்த மேன்மையான மனிதர்களையும், அவர்களது வறுமையின் செம்மையையும் சுவாரஸ்யமாகச் சொல்லி, நம்மைச் சிரிக்க, அழ வைக்கிறார். பெரியக்கா ரோஸ்மேரியின் இன்னும் நரைக்காத தலைமுடியும், தங்கை காளியம்மாவின் ‘எண்ணே’ என்கிற விளிப்பும், அத்தையின் ‘எய்யா ச்சாப்பிடுதியா’வும்தான், பின்னாளில் ஜான் எழுதுவதற்கான உரமாகியிருக்க வேண்டும். தமிழகத்து மூவிருந்தாளி அப்பாவுக்கும், மலையாளத்து அம்மைக்கும் மகனாகப் பிறந்த ஜான் தன்னை ‘இரு வேறான கலாச்சாரங்களுக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ’செம்மீனும் கட்டபொம்மனுமான’ சேர்மானம் அது’ என்கிறார்.
ஒரு மெல்லிசைப் பாடகனை அவனது அபார ரசனை கையைப் பிடித்து எழுதக் கொண்டு சென்று விட்டதை நகலிசைக் கலைஞனின் பல இடங்களில் நம்மால் உணர முடிகிறது. ’ஜானி’ திரைப்படத்தின் ’ஒரு இனிய மனது’ பாடல் காட்சியில் ரஜினி, திருட வந்ததை மறந்து பாட்டுக்குள் சிக்கிக்கொள்வார் (அவர் மட்டுமா?). ஒருவர் பாடுவதை இத்தனை வகையாக ரசிக்க முடியுமா? இயக்குனர் மகேந்திரன் நமக்குக் காட்டிய அழகு ரஜினியை அதற்குப்பிறகு பார்க்கவே முடியவில்லை என்று வியக்கிற இடம் ஜானின் ரசனைக்கு ஒரு சான்று. ‘தவில்காரர் பாலையாவும் அவரது சகா சாரங்கபாணியும் பொறுப்பில்லாமல் செத்துப்போனால் பாவம் தமிழ்த்திரைதான் என்ன செய்யும்’ என்று புலம்பவும் ஜான் தயங்கவில்லை.
சினிமா பாடல்களும், சினிமாவும் மட்டுமேதான் ரசனையில் சேர்த்தியா என்ற கேள்வி எழலாம். சக நகலிசைக் கலைஞர்களின் வாழ்வை ஜான் சொல்லியிருக்கும் விதத்தைப் படிக்கும் போது எண்ணற்ற சினிமா பாடல்களே அவரது வாழ்க்கையின் சகலத்தையும் நிரப்பியிருக்கிறது என்பதைக் காண முடிகிறது. சக கலைஞர் வசந்தன் குடிக்கு அடிமையாகிறார். (அப்போதுதானே அவர் கலைஞர்!?) ஓடுகிற பேருந்தில் இருந்து இறக்கி விடப்படுகிறார். சொல்லப் போனால் தள்ளப்படுகிறார். அதற்குப் பிறகு நடந்ததை ஜான் சொல்கிறார். “கீழே விழுந்து புரண்டு கொண்டிருக்கும் போது, இன்னொரு பேருந்து அவரைக் கடந்து செல்கிறது. அடுத்து வந்த பேருந்து அவரைத் தாண்டிப் போக அதன் உள்ளிருந்து ’என்ன என்ன கனவு கண்டாயோ சாமீ’ எனக் கசிந்த பாடல் காதில் விழுந்த கணத்தில் வெடித்துக் கதறினார் வசந்தன். இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்ஸுக்குப் பின்னால் ’அப்ப…… அப்ப……’ என்று கத்திக் கொண்டே ஓடினார்”. இந்த சம்பவத்தை அப்படியே சொல்வது எல்லோராலும் முடியும்தான். ஆனால் ‘இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்’ என்கிற வரி எல்லோருக்கும் சிக்காது.
‘தொண்ணூறுகளில் போத்தனூர் ரயில் நிலையமும் ரயில்வே குடியிருப்புகளின் சில வீதிகளும் மிதமான குளிரும் ’நாம் பாலுமகேந்திரா படத்துக்குள் உலவிக் கொண்டிருக்கிறோமோ?’ என்று நினைக்க வைக்கும்’ என்கிற ஜானின் வரிகளை நான் ‘வாத்தியார்’ பாலு மகேந்திராவிடமே சொல்லியிருக்கிறேன். நான் சொன்ன இடங்களும், காலமும்தான் வேறு. ஆனால் வார்த்தைகளும், உணர்வும் ஜானைப் போலவே!
நான் பார்த்தவரையில் மெல்லிசை மேடைக் கலைஞர்கள் ஏதோ ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். திரைத்துறையில் தம் வாழ்வின் கடைசித் துளி வரை தம்மை எந்த வகையிலும் நிரூபிக்க இயலாமல் மக்கிப் போனவர்களின் துயர வாழ்க்கை மெல்லிசை மேடைக் கலைஞர்களுக்கில்லை. ஒன்றுமே இல்லையென்றாலும், ஒரு மேசை மீது ஏறி நின்று பாடி நூறு ஜோடிக் காதுகளையாவது சென்றடைவார்கள். ஆனால் வறுமையும், அவமதிப்பும் எல்லா கலைக்கோட்டிகளின் உடன்பிறந்தவைதான். ஜானின் சக நகலிசைக் கலைஞர் வசந்தனை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அவர்களுக்கே உரிய நியாயத்துடன் வீட்டில் அவரை நடத்தும் விதத்தை வசந்தன் இப்படி சொல்கிறார்.’அந்த முண்டை ’ம்க்கும்’ம்பா’ அவங்காத்தா ’ஏம்ப்பா மில்லுக்கே போலாமில்ல’ம்பா… எல்லாம் நேரம்…’
இந்த வசந்தன் தான் ‘இளையராஜாவின் குரல் கொண்ட பஸ்ஸைத் துரத்திக் கொண்டு அழுதபடியே ஓடுகிறார்.
மெல்லிசைப் பாடகர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவ்வப்போது சூழலுக்கேற்ப திரையிசைப் பாடல்களை பயன்படுத்துவார்கள் என்பது நகலிசைக் கலைஞன் மூலம் எனக்கு ஊர்ஜிதமானது. வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘வேர்’ சிறுகதையில் ஒரு கதாபாத்திரமாக வரும் ‘தாடி’ ரத்தின பாகவதரின் மகன்கள் குடும்பச் சண்டையை பாடல்கள் மூலமே நிகழ்த்துவதைப் பார்த்திருக்கிறேன். மாடியில் அமர்ந்தபடி தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும் தன் இளைய சகோதரனுக்கு பதில் சொல்லும் விதமாக, கைக்குழந்தையாக இருந்த தனது மகனை கையில் தூக்கிப் பிடித்தபடி ரத்தின பாகவதரின் மூத்த மகன் பாடுவார்.
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு.
பயல் கூப்பாடு போட்டு அழுவான். ‘பச்சப்புள்ளய ஏன் இப்படி பயங்காட்டி அள வக்கிய?’ என்று அவர் வீட்டம்மா பிள்ளையைப் பிடுங்கிச் செல்வார்.
நகலிசைக் கலைஞர் டேனியலும் இப்படி சூழலுக்கேற்ப வீட்டிலும் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ பாடுபவர்தான். அவரே தன் மகள் தான் தேர்ந்தெடுத்த துணையுடன் வீட்டை விட்டு விலகிச் சென்ற பிறகு ‘நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்’ என்று தன் சின்னஞ்சிறிய வீட்டிலிருந்தபடி கதறுகிறார். டேனியலைப் பற்றிய கட்டுரை முடிந்த பிறகு அதைக் கடந்து வர எனக்கு சில மணி நேரம் பிடித்தது.
நகலிசைக் கலைஞனில் குரலை விற்று தொழிலை வாங்கியிருக்கிற சூரியை நான் சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இளையராஜாவின் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து, அவரிடம் பாடிக் காட்டி ஒலிப்பதிவுக்கு அவர் அழைக்கும் வரைக்கும் சென்னையில் காத்திருக்க இயலாமல் கோவைக்குத் திரும்பியவர். இன்றைய சூரியைப் பற்றி ஜான் இப்படி சொல்கிறார்.
“இளமையின் துடிப்பு மிகுந்த குரலால் கேட்பவரைக் கட்டிப் போட்ட அந்த அப்பாவிக் கலைஞன், தனது இருபது வருடக் கனவை அவிழ்த்து எறிந்துவிட்டு வெற்றுடம்புடன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் மேல், துண்டைக் கட்டிக் கொண்டு புரோகிதம் செய்யத் தயாரானான். வேதம் ஓதுவதில் எந்த விதமான கவுரவக் குறைச்சலும் இல்லை. நான் செய்யப் போவது கடவுள் தொண்டு. தனக்கு சேவை செய்ய பணிக்கிறான் சிவன். சரணடைந்து விடும் மனோபாவத்திற்கு வந்து விட்டான் இவன்.
“பாடிக் கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபர்களை நீங்கள் கடந்திருக்கக் கூடும். அழுது கொண்டே வண்டி ஓட்டும் எவரையாவது கவனித்திருக்கிறீர்களா? பிறக்கும் போதே உடன்பிறந்த இசையை, ஆன்மாவோடு ஒட்டியிருக்கிற கவச குண்டலத்தை பிய்த்து எடுப்பது எத்தனை வேதனை? வலிக்க வலிக்க வாளால் அறுத்து அதை உடம்பிலிருந்து உரித்து எடுக்கப் பார்க்கிறான் கர்ண மகாராஜன்! “
சூரியின் குரலில்
‘ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந ஸ்ரீநிகேதந
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர’
கேட்பதில் எனக்கு விருப்பமில்லை. அதை ராஜாமணி மாமாவின் குரலில் பல நூறு முறை கேட்டாகிவிட்டது. சூரி பாடி ‘வா வா வசந்தமே, சுகம் தரும் சுகந்தமே’ கேட்க வேண்டும்.
நகலிசைக் கலைஞனில் ‘தண்ணீர் பிடித்து வைக்கிற சாக்கில் எதிர் வீட்டுப் பெண்ணை ’நோக்கலாம்’ என்று ஒளிவுமறைவில்லாமல் தன்னைத் திறந்துக் காட்டுகிற ஜானை, உருவம் கண்டு எள்ளாமையை அவருக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்த மைக்கேலை, ‘இருதயத்துல வால்வு போச்சுன்னா வாழ்வே போச்சு சார்’ என்று சொல்கிற இளங்கோ மாஸ்டரை, நோட்ஸ் ஸ்டாண்டில் குமுதத்தின் நடுப்பக்கத்திலிருந்து நாகராஜை பார்த்து வெட்கப்படுகிற சிலுக்கு ஸ்மிதாவை . . . இப்படி பலரைப் பார்க்க முடிகிறது. ‘ஆத்து என்றால் டிமிக்கி. டிமிக்கி என்றால் எஸ்கேப். எஸ்கேப் என்றால் எஸ்கேப்புதான்’ என்பது மாதிரியான புது வார்த்தைகளும், விளக்கங்களும் கிடைக்கின்றன.
“நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு சில நாட்களில் வேறு வேறு பாவாக்கள் ’பாமாலை’யில் வந்தாலும் உண்மையில் எங்கள் பள்ளிப்பருவத்து விடியல்களை சாம்பிராணிப் புகைமுழக்கி ரட்சித்தவர் நீங்களல்லவா ஷாஹென்ஷா?”
“மாதாக்கட்சிக்காரன் ஒருத்தன் பால்யத்தின் பேதமையில் ரொம்ப நாளாக ’ஓடிவருகிறான் உதயசூரிய’னை அல்லாக்கட்சி பாட்டு என்றே நினைத்திருந்தான். லத்தீப்பின் வாப்பாதான் அவனை அப்படி நம்பச்செய்தார். அப்படி நம்பச்செய்தது அவரா அல்லது பாட்டுக்கு இஸ்லாமிய நிறஞ்சேர்க்கும் மேண்டலின், ஹார்மோனியம், புல்புல் தாரா, டெனர் பேஞ்ஜோ, ஷெனாய், டேப், டோலி, தப்லா முதலான வாத்தியங்களுள் உங்கள் குரல்வளையும் ஒன்று என அவன் நம்பக் காரணமாயிருந்த தாங்களா ஜனாப் ?”
“நாபியிலிருந்து எழும் நாதம் கேட்கும் உயிர்களைத் தொட்டே விடுகிறது என்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக எங்களைக் கட்டி வைத்திருக்கும் ரகஸியமும் அதுவேதானா? அப்படியானால் நமக்குள் இருப்பதும் தொப்புள் கொடி உறவா? உங்கள் நாபிக்கமலம் மலர்த்தி நபிக்கமலம் சேர்ந்தீர்களா?”
‘அலை முழங்கிய கடல்’ என்ற நாகூர் ஹனீஃபாவுக்கான அஞ்சலிக் கட்டுரையில் இப்படியெல்லாம் எழுதியிருக்கிற ஜான், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத்தந்தை அந்தோணிமுத்து சொல்லிக் கொடுத்து ”என் ஆயர் ஆண்டவர் எனக்கென்ன குறைவு” என்று பாடி தன் பாட்டுப் பயணத்தைத் துவக்கியவர். இவர் ஏன் சங்கீதமே படித்திராமல் சங்கராபரணம் பாடுகிற கலைச்செல்வனைப் பார்த்து ‘சரஸ்வதி கடாக்ஷம்’ என நூர்தீன் பாய் சிலாகிப்பதைக் கேட்டு பரவசமடைகிறார் என்றுதான் புரியவேயில்லை.
இந்தக் கட்டுரை முடியாமல் நீண்டுகொண்டே போகுமோ என்று அஞ்சினேன். அப்போதுதான் நகலிசைக் கலைஞனில் உள்ள ஒரு வரி நினைவுக்கு வந்தது.
“தனித்த கருவியொன்றை தேர்ந்தெடுக்கும் வளர்கலைஞன், கொஞ்சம் இலக்கணப் பிழைகளோடு வாசிக்கிறான் என்றாலும் மேடையையும், ரசிகனின் விழிகளையும் நிரப்பிவிடுகிறான்.”
இந்தக் கட்டுரையின் கடைசிவரி, இதுதான்.