கடந்த மாதத்தில் பாதி நாட்கள் திருநவேலியில் இருக்க வாய்த்தது. நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு. அநேகமாக எல்லா நாட்களின் இரவுணவு, திருநவேலியின் பல்வேறு ரோட்டுக் கடைகளில்தான். அதற்காக விஞ்சை விலாஸுக்கும், விசாக பவனுக்கும் போகாமல் இல்லை.
வழக்கம் போல இந்த முறையும் பழைய, புதிய மனிதர்களின் சந்திப்புதான் விசேஷம். ஊருக்குப் போன அன்றைக்கே தேரடிக்கு எதிரே உள்ள மணீஸ் அல்வா கடையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது குஞ்சு தோளைத் தொட்டுச் சொன்னான், “யார் வாரா பாரு”. தூரத்தில் காந்தி அத்தான் வந்து கொண்டிருந்தான். முழு பெயர் காந்திமதிநாதன். கட்டையான சிவத்த உடம்பு. உருண்டையான அவனது தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. அவன் அருகில் வருகிற வரைக்கும் பால் குடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வரவும், “என்னத்தான்! எப்படி இருக்கே?” என்றேன். “என்னை மறந்துட்டியோன்னு நெனச்சேன்டா, மாப்ளே!” என்றான், வழக்கமான கரகரத்த குரலில். சிகரெட் குடித்து குடித்து அவன் குரல் அப்படி ஆகியிருந்தது. “உன்னை நான் எப்படி மறப்பேன்த்தான்! அநியாயத்துக்கு மெலிஞ்சுட்டே. நெஜமாவே அடையாளம் தெரியல,” என்றேன். அருகில் நின்ற குஞ்சுவைப் பார்த்து, “நீ சொல்லலியா, மாப்ளே! அத்தான் பைபாஸ் பண்ணிட்டெம்லா!” என்றான். சட்டையின் மேல் பித்தான்களை நீக்கிக் காட்டினான். குழப்பமும், வருத்தமுமாகப் பார்த்தேன். ஆனால் அத்தான் முகத்தில் அப்படி ஒரு பெருமை. சமூகத்தில் சொல்லிக் கொள்ளுமளவுக்கான ஓர் அந்தஸ்தை அடைந்து விட்ட கர்வத்துடன் ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் ஸ்டைலில் கொஞ்சம் சாய்வாக நின்றபடி என்னை ஏளனமாகப் பார்த்தான். பார்வையில் “என்னை என்ன சொல்லிடா பாராட்டப் போறே, மாப்ளே?” என்ற கேள்வி காத்திருந்தது. சில நொடிகள் யோசித்து ஒன்றும் சிக்காமல் “காந்தி அத்தான் காந்தி அத்தான்தான்!” என்றேன். “இதச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா?” என்றவன் தொடர்ந்து “வேற ஏதாவது புதுசா சொல்லுவேன்னு எதிர்பாத்தேன், மாப்ளே” என்றான். குரலில் ஏமாற்றம் தெரிந்தது. “ஒன்னப் பாத்த அதிர்ச்சிலேருந்து இன்னும் அவன் மீளலத்தான். அதான்,” என்று சொல்லி சமாளித்தான் குஞ்சு. “புரியுதுடா மாப்ளே!”. இருவரையும் புன்முறுவலுடன் பாராட்டி விட்டு காந்தி அத்தான் கிளம்பும் போது கையிலுள்ள மிச்சப் பால் ஆறியிருந்தது. “இன்னொரு பால் சொல்லுல,” என்றேன், குஞ்சுவிடம்.
நண்பர் கோலப்பன் சொல்லுவார். “எங்க ஊர்ல மதுசூதனன் மாமாவுக்கு பைபாஸ் ஆகி வீட்டுல கெடந்தாரு பாத்துக்கிடுங்க. முருகண்ணன் வந்து சொல்லுகான். எல கோலப்பா! நம்ம மசூதம் மாமாக்கு நெஞ்சுல ஜிப்பு வச்சு தச்சிருக்குல்லா! வா, போயி பாத்துட்டு வருவோம்”.
திருநவேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முழுவதுமாக இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி வருவதாகச் சொன்னார்கள். ஏற்கனவே அறிந்த செய்தி அது. ஆனால் டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட்டும் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி ஆகிறதாம். “நீ எளுதியிருப்பெல்லா நம்ம மார்க்கெட்ல நான் எலை வாங்கப் போன கதய. அதப் படிச்சுத்தான் நம்ம மார்க்கெட் எப்பிடி இருந்ததுன்னு இனிமேல் தெரிஞ்சுக்கணும்.” குஞ்சு சொன்னான். “அப்பம் அங்கெ உள்ள லைப்ரரி எங்கெ போகும்?” எப்படியும் குஞ்சுவிடம் அதற்கான பதில் இருக்காது என்பதால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். மார்க்கெட்டுக்குள்ள போவோமா என்று குஞ்சு கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் மனதுக்குள் காய்கறி, தேங்காய், விபூதி, குங்குமம், ஊதுபத்தி, எலுமிச்சை, மாங்காய், சப்போட்டா, பெருங்காயம், சூடன், சாம்பிராணி, மூக்குப்பொடி, மாட்டுச் சாணம், சுருட்டு, காப்பித்தூள், சந்தனம், குல்கந்து என கலவையான வாசனையை நுகர்ந்தபடி நேதாஜி போஸ் மார்க்கெட் வழியாக நடந்து போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, அதன் பக்கத்தில் உள்ள ‘அளவெடுத்து செருப்பு தைக்கும் கடை’ யைப் பார்த்தபடி மேலரதவீதியில் இருக்கும் டிப்டாப் ரெடிமேட் கடையில் போய் முட்டி நின்றேன்.
என்னுடைய திருநவேலி என்பது நான்கு ரதவீதிகளும், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் ஒரு சில தெருக்கள் மட்டும்தான். இன்னும் நான் சொல்லாத மனிதர்கள் எத்தனையோ பேர் அங்கு உள்ளனர். அம்மன் சன்னதி நந்தி டாக்கர் வீட்டின் புகழ் பெற்ற மர பெஞ்ச் காலப்போக்கில் காணாமல் போனது, அம்மன் சன்னதிக்காரனான எனக்கு சொல்ல முடியாத இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் பெரியவர்கள் ‘நந்தி டாக்கர், அவரது பிள்ளைகள் சுப்பன், ராமுடு, ராதாகிருஷ்ணன் ஸார்வாள் (குஞ்சுவின் தகப்பனார்), குளத்து ஐயர்’ உட்பட பல பெரியவர்கள் சாய்ந்து கிடந்தபடி போகிற வருகிற பெண்களை வேடிக்கை பார்த்த அந்த மர பெஞ்சில் நான் உட்கார்ந்தது கூட இல்லை. நந்தி டாக்கரின் பேரன் தூஜா, “என்னடே எப்பிடி இருக்கே?” என்ற போதுதான் அப்படி ஒருவனை எனக்குத் தெரியும் என்பதே என் மண்டைக்கு உறைத்தது.
“தூஜா ஆள் அப்படியே இருக்கானாலே?” குஞ்சுவிடம் கேட்டேன்.
“ஆமாமா. பேரன் பேத்தி எடுத்துட்டான்னு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். இன்னும் வக்கனையா சாப்பிடுதான். அவ்வளவு சொத்து இருக்கு. ஆனா வருசத்துக்கு ரெண்டு வேட்டி, ரெண்டு சட்டதான் எடுப்பான். டெய்லி காலைலயும், சாயங்காலமும் நெல்லேப்பர் கோயில்ல ஒரு சுத்து. வாக்கிங் ஆச்சு. இன்னும் அவனைப் பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர். இருட்டுக்கட ஹரிசிங் மாமா இவனப் பாத்த ஒடனேயே அம்பது அல்வாவை எலைல மடக்கிக் குடுத்துருவா. அன்னைய நாள் அதோட ஓவர். தந்தி பேப்பர் கூட படிக்க மாட்டான். டி.வி. பாக்க மாட்டான். நாட்டு நடப்பு எதைப் பத்தியும் அவனுக்குக் கவலையில்ல. அப்புறம் ஏன் ஆளு அப்பிடியே இருக்க மாட்டான்?” குஞ்சு சொல்லி முடிக்கவும் ஏக்கப் பெருமூச்சுடன் தூஜாவைப் பார்த்தேன். அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேக வேகமாக அம்மன் சன்னதி மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
திருநவேலிக்குப் போய்விட்டு மீனாட்சியைப் பார்க்காமல் எப்படி? வழக்கம் போல சென்னையில் இருந்து கிளம்பும் போதே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவனது சௌகரியம் போல வந்து சேர்ந்தான்.
“நைட் எங்கெ சாப்பிடப் போணும், சித்தப்பா?”
“நீதானல கூட்டிட்டுப் போகணும்?”
“இல்ல. குஞ்சண்ணன் ஏதாவது பிளான் வச்சிருக்கானா? அதுக்குத்தான் கேட்டேன்.”
“மீனாட்சி வந்ததுக்கப்புறம் எனக்கென்னடே ப்ளான் இருக்கப் போது? நீ சொல்லுத கடைக்குப் போவோம்” என்றான், குஞ்சு.
புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ரோட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. அரையிருட்டில் இரண்டு பெஞ்சுகள், ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல்கள் போடப்பட்டிருந்தன. இட்லிக் கொப்பரையில் ஆவி வந்து கொண்டிருந்தது. தோசைக் கல்லில் சின்ன வட்டங்களாக குழிழ் தோசைகள். ஒரு சட்டியில் பூரிக் குவியல். கிழங்கு, சாம்பார், சட்னி சட்டிகள்.
“அண்ணாச்சி! டேபிள விட எல பெருசா இருக்கு பாருங்க. இத எடுத்துட்டு சின்ன எல போடுங்க”. மீனாட்சி ஆரம்பித்தான். குஞ்சுவிடம் கண்ணைக் காட்டினேன். “நாம சாப்பிடதுக்கு மட்டும் வாயத் தொறந்தா போதும். மத்தத அவன் பாத்துக்கிடுவான்” என்றான், குஞ்சு. அடுத்தடுத்து மீனாட்சியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது சூழல்.
“ஏற்கனவே அவிச்சு தட்டி வச்சுருக்க இட்லி வேண்டாம். வெந்ததா எடுங்க. வெய்ட் பண்ணுதோம்”.
“காரச் சட்னி வைக்காதிய. வெங்காயம் சோலி முடிஞ்சு போச்சு. தேங்கா எளசோ! சவம் இனிக்கல்லா செய்யுது.”
“மொளாப்டி வச்சிருக்கேளா? . . . என்ன அண்ணாச்சி டால்டா மாரி இருக்கு?! சருவச்சட்டி பக்கத்துல நல்லெண்ண பாட்டில் வச்சிருப்பெளே! அத எடுங்கய்யா. . . ரெண்டே ரெண்டு கரண்டி போதும். . . பூரிக்கு கெளங்கு வேண்டாம். சாம்பாரே போதும் . . .”
சாப்பிட்டு கை கழுவியதும், “சித்தப்பா! புட்டாரத்தி அம்மைக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என் பின்னால வாங்க” என்று நடையைக் கட்டினான். “தாயளி எங்கென கூட்டிட்டுப் போறான்னு தெரியலியே! சரி சரி வா, போயிப் பாப்போம்” என்றான், குஞ்சு. லாலா சத்திர முக்கும், தொண்டர் சன்னதியும் இணையும் வளைவில் சின்னதாக ஒரு பால் கடை இருந்தது. பால் கடை என்றால் அல்வாவும் இருக்கும் வழக்கமான திருநவேலி கடை. தாழ்வான கடைக்குள் வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைப் பார்த்ததும், “என்னா? ஆளயே காங்கல?” என்றார். “நேத்து ஒரு நாள்தானேய்யா வரல? அம்பது அம்பது மூணா வெட்டுங்க” என்றான், மீனாட்சி. என்னிடம், “சித்தப்பா! அவாள் அல்வா வெட்டும் போது பாடி லேங்குவேஜ கவனிங்க. ஒரு ஸ்டெப் கீள போயி வெட்டுவா” என்றான். அவன் சொன்னபடியே அண்ணாச்சி அல்வா வெட்டும் போது, முட்டியை ஒரு நொடி மடக்கி நிமிர்ந்தார். குஞ்சு சிரிப்பை அடக்கிக் கொண்டு, “இந்தக் கடைல இன்னைக்குத்தான்டே அல்வா சாப்பிடுதென்” என்றான். “வாய்ல போடவும், தொண்ட, வயித்தத் தாண்டி வளுக்கிக்கிட்டுப் போயி பிருஷ்ட நுனில உக்காந்திரும், குஞ்சண்ணே”. மீனாட்சி சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அல்வாவை விழுங்கிய குஞ்சுவின் முகம் ஏதோ சொன்னது. “பால் வேண்டாம் , அண்ணாச்சி” என்று சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் லாலா சத்திர முக்கை நோக்கி நடந்தான், மீனாட்சி. “எல சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போ”. பின்னால் சென்ற எங்கள் குரலை அவன் கவனிக்கவில்லை. பழக்கடை ஒன்றின் முன் நின்றபடி, கோழிக்கூடு பழங்களைக் காட்டினான். “கோளிக்கூடு சப்பிடணும்னா இங்கதான் வரணும். கனிஞ்சும் கனியாம மெத்துன்னு இருக்கும். அன்னா பாத்தேளா, சேந்து முடிஞ்சதுக்கப்புறம் வீட்டம்மா கெடக்கற மாரி கோளிக்கூடு கெடக்கு பாருங்க” என்றான். அவனது உவமையில் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை கவனித்த குஞ்சு சொன்னான். “இப்பிடி பேச்செல்லாம் கேக்கறதுக்காகவாது மாசம் ஒரு மட்டம் ஊருக்கு வால”.
ஒவ்வொரு முறையும் திருநவேலி பயணத்தை இனிதாக்குபவை, கோயில்களும், சந்திக்கும் மனிதர்களும், விதம் விதமான சாப்பாட்டுக் கடைகளும்தான். ‘தாயார் சன்னதி’ தந்த நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் போக பிரதோஷ வழிபாட்டுக்கு சென்ற கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில், பரமேஸ்வரபுரம் முத்தாரம்மன் கோயில், குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயில், பண்பொழி திருமலை முத்துக்குமாரஸ்வாமி கோயில், தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கோபாலசமுத்திரம் பெருமாள் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மற்றும் வெட்டுவான் கோயில், சமணப்படுகைகள் என மனதை நிறைத்த பயணம் அமைந்தது.
நந்தி டாக்கர் வீட்டு தூஜா, மீனாட்சி, அல்வாக்கடைக்காரர், காந்தி அத்தான் போக கலாப்ரியா மாமாவை சந்தித்தது, நீண்ட நாள் சிநேகிதி, வாசகி, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் திருமதி ராமலக்ஷ்மி ராஜன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக அவர்களை சந்தித்துப் பேசியது, ஹலோ பண்பலை அலைவரிசையில் காதலர் தினத்துக்கான ஒலிபரப்பில் கலந்து கொண்டது, “அண்ணே! ஒரே ஒரு மட்டம் உங்க கன்னத்தைக் கடிச்சுக்கிடட்டுமா?” என்று கேட்பானோ என்று பயப்படும் அளவுக்கு என்னைக் காதலுடன் கவனித்துக் கொண்ட அன்புத் தம்பி கணபதிக்கு என்னுடைய புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தது, மூத்த உறவுகளுக்கான முழுமையான குடியிருப்புகளை உருவாக்கி சிறப்புற நடத்தி வருகிற ‘நங்கூரம்’ அமைப்பினரை சந்தித்தது, நாறும்பூநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரை மற்றும் அந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்த முத்தமிழ் தம்பதியர், சகோதரர்கள் ரமணி முருகேஷ், தாணப்பன் கதிர், கவிஞர் சுப்ரா, டாக்டர் ராமானுஜம், பால்ய தோழர் ஸ்டேட் பாங்க் கணபதி, ஆறுமுகம் அண்ணன், வாசகர் பிரமநாயகம், அதைத் தொடர்ந்து தென்காசியில் விநாயகர் சிலை பரிசளித்து “இப்பதான் நாறும்பூ ஸார் நிகழ்ச்சில உங்க ஸ்பீச் யூ டியூப்ல கேட்டேன். என்னால நம்பவே முடியல. சங்கரன் மாமாவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்ல” என்று வியந்து, சிரித்து, தயங்கி உபசரித்து மகிழ்ந்த சகோதரி ராணி கணபதிசுப்பிரமணியன் என நிறைய அனுபவங்களைத் தந்த மனிதர்கள்.
திருநவேலி கீழ்ப்பாலத்தை ஒட்டி அமைந்திருக்கிற ‘முத்து மெஸ்’ என்கிற சாப்பாட்டுக் கடையின் அமோகமான மதிய சைவ உணவும், மாலை நேரத்தை விசேஷமாக்கிய விசாக பவனின் அசத்தலான உளுந்த வடை, ஃபில்டர் காப்பியும், இரவுணவை இதமாக்கிய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள சாலையோர இட்லிக் கடைகளும், அனிதா பால் கடையின் கல்கண்டு பாலும் இந்த முறை திருநவேலி விஜயத்தின் சுவையைக் கூட்டியவை. இரண்டு முறை விஞ்சை விலாஸுக்கும் செல்ல வாய்த்தது. பழைய விஞ்சை விலாஸ் அல்ல. புத்தம் புதிதாக எடுத்துக் கட்டப்பட்டிருக்கும் பளபள விஞ்சை விலாஸ். தோற்றத்தில் கவராமல் அந்நியமாக உணர வைத்தாலும், பழைய சுவை குன்றாமல் பார்த்துக் கொண்டது. முதலாளியும், அவரது மகனும் என் தலையைப் பார்த்ததும் ஓடோடி வந்து உபசரித்தார்கள். அவர்களது அதீத அன்பும், கவனிப்பும் கூச்சத்தைத் தரவே அடுத்தடுத்து அங்கு செல்ல நாக்கு இழுத்தாலும், மனசு தடை போட்டு விட்டது.
பெரும்பாலும் இரவுணவு வெளியேதான். பின் ஒரு சின்ன சுற்று. அப்படி ஓர் இரவுணவுக்குப் பின் காலாற நயினார் குளக்கரையை ஒட்டி நடந்து வந்து, ஆர்ச் பக்கம் திரும்பி சுவாமி சன்னதியில் நானும், குஞ்சுவும் செல்லும் போது, தற்செயலாக தெப்பக்குளம் பக்கம் உள்ள ‘நெல்லை கஃபே’ போர்டு கண்ணில் பட்டது. ஆச்சரியம் தாங்காமல் குஞ்சுவிடம் கேட்டேன். “எல! நெல்லை கபே இன்னும் இருக்கா? பரவாயில்லையே!” கடை திறந்து வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது. அழுக்கு உடையும், சிக்கு பிடித்த தலைமுடி, தாடியுடனும் யாரோ ஒரு மனிதர் கடை வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார். கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கைகளில் போடவும், உடம்பு முழுவதையும் வளைத்து, குனிந்து அந்த மனிதர் பொட்டலத்துடன் நகர்ந்து எங்களுக்கு எதிர்திசையில் நடந்தார். “திருநவேலில கோட்டிக்காரங்களுக்கும் கொறச்சல்லில்ல. அவங்களுக்கு சாப்பாடு போடறவங்களும் கொறயல. நெல்லை கபேல்லாம் இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்ல” என்றேன். “அது வாஸ்தவம்தான். அந்தக் கோட்டிக்காரன் யாருன்னு தெரியுதா?” என்றான், குஞ்சு. எதிரே உள்ள ஏதோ ஒரு நடைப்படியில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கோட்டிக்காரனை உற்றுப் பார்த்தேன். ஏதோ பிடிபட ஆரம்பித்து மனம் குழம்பி, பின் தெளிய ஆரம்பிப்பதற்கு முன் குஞ்சுவே சொன்னான். “சொல்ல சங்கடமாத்தான் இருக்கு. நம்ம சிவாதான். அதாம்ல சாப்ட்டர் ஸ்கூல்ல நம்ம க்ளாஸ்மேட்டு. நீ இன்னைக்குத்தான் பாக்கெ. நான் டெய்லி பாக்கென்”.