சுந்தரம் ஐயங்காரின் கருணை

சில நாட்களுக்குமுன் குஞ்சு ஃபோனில் அழைத்தான்.

‘எல, இந்தப்பய பைக் ஓட்டுதான்’.

‘யாரு கௌரவ்வா?’

‘ஆமா. உனக்கு நான் சொல்லியே தீரணும்னுதான் சொல்லுதேன்’.

‘சரி சரி. அந்தாக்ல ரொம்பவும் சளம்பாதே. இப்ப என்ன? அவன் பின்னாடியும் உக்காந்து ஒரு ரவுண்டு போயிட்டா போச்சு.’

கௌரவ், எட்டாங் கிளாஸ் படிக்கும் குஞ்சுவின் மகன். எனது மருமகன். அவன் பைக் ஓட்டிய செய்தியை எனக்கு அவசர அவசரமாகச் சொல்லி இந்தப்பயல் குஞ்சு மகிழ்வதற்குக் காரணம், எனக்கு பைக் ஓட்டத் தெரியாது என்பதே.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது மெல்ல மெல்ல சைக்கிள் ஓட்டப் பழகினேன். அம்மன் சன்னதியில் A.M.சைக்கிள் மார்ட் என்னும் வாடகை சைக்கிள் கடை ஒன்று உண்டு. அங்கு என்னை விட குள்ளமாக ஒரு சைக்கிள் இருந்தது. அதை வாடகைக்கு எடுத்து எங்கள் வீட்டுக்குள்ளேயே ஓட்டிக் கற்றுக் கொண்டேன். அப்போது அம்மன் சன்னதி முழுக்க மாலை நேரங்களில் சைக்கிள்கள் நிறைந்திருக்கும். G.R.ஸாரிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களின் சைக்கிள்கள் அவை. அந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாகத்தை இழந்து ஊனமாக நிற்கும். G.R.ஸாரின் மகன் அந்த சைக்கிள்களை எடுத்து தினமும் ஓட்டி கீழே விழுந்து, வரிசையாக அவற்றை உடைத்து வந்தான். ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து விதவையாயின. வாத்தியாரின் மகன் என்பதால் ‘ இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ‘ ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே ‘ என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர். ஆனால் G.R.ஸாரின் மகனான குஞ்சு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நித்தம் ஒரு சைக்கிளுடன் வாழ்ந்து வந்தான். நான் சின்ன சைக்கிளிலிருந்து பெரிய சைக்கிளுக்கு வந்து சேர்வதற்குள் அவன் இரண்டு கைகளையும் விட்டு ஓட்ட ஆரம்பித்திருந்தான்.

பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருந்த புதிதில் தினமும் மாலை வேளையில் நானும், குஞ்சுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்ட் போவதை வழக்கமாக வைத்திருந்தோம். இருவருமே வெள்ளை நிற பேண்ட் துணி எடுத்து தைத்திருந்தோம். அதை அணிந்து கொண்டு சும்மா இருப்பதாவது? ஜங்ஷன் வரை சென்று வரலாம். அதுவும் சைக்கிளில் என்றான் குஞ்சு. (நாங்கள் இருப்பது திருநெல்வேலி டவுணில். ஜங்ஷனில்தான் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் எல்லாம் உள்ளது). நான் முதல் நாளே மனதுக்குள் சைக்கிளில் பலமுறை ஜங்ஷனுக்கு போய் வந்து விட்டேன். குஞ்சு வீட்டுக்கு நான் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போக குஞ்சு தயாராக இருந்தான். கல்லணை ஸ்கூல் பெண்கள் வருகிற நேரத்தை கணக்கு பண்ணி நாங்கள் கிளம்பவும் எதிரே வந்த சீதாலட்சுமி, ‘என்னல, வெள்ளையும், சொள்ளையுமா கலர் பாக்கக் கெளம்பிட்டேளா?’ என்றாள். குஞ்சுவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சீதாலட்சுமி எங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டாள். அவளை எங்களால் ஒன்றும் செய்யவும் முடியாது. குஞ்சுவின் தாயார் அவளுக்கு அத்தனை சுதந்திரத்தை கொடுத்திருந்தார். சீதாலட்சுமி இப்படி கேட்கவும் கடுப்பான குஞ்சு ‘எடுல வண்டியை’ என்றான், என்னமோ டாடா சுமோவை எடுக்கச் சொல்கிற மாதிரி. நானும் ஒரு வேகத்தில் சைக்கிளில் ஏறி மிதிக்கத் துவங்க, சீதாலட்சுமியின் மீது இருந்த கோபத்தில் துள்ளி ஏறி பின் சீட்டில் உட்கார்ந்தான் குஞ்சு. அப்போதுதான் நான் டபுள்ஸ் வைக்கப் பழகியிருந்தேன். இந்த மூதேவி உட்கார்ந்த வேகத்தில் வண்டி குடை சாய்ந்தது. ஜனநடமாட்டமுள்ள மாலை நேரத்தில் நடுரோட்டில் சைக்கிளோடு விழுந்தோம். சீதாலட்சுமி கை தட்டி சத்தம் போட்டு சிரித்தாள். ‘இவளுக்கு அம்மா ரொம்ப எடம் கொடுக்காங்கலெ’ என்றபடியே எழுந்தேன். எப்படியாவது அந்த இடத்திலிருந்து சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘மொதல்ல ஒக்காரு’ என்று கோபமாகச் சொல்லி சைக்கிளை ஓட்டத் துவங்கினான் குஞ்சு. குமரகுருபரர் ஸ்கூல் வரை சென்று சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு காலில் பட்டிருந்த அடிக்காகக் கொஞ்சமாக அழுதான். எனக்கு அவ்வளவாக அடியில்லை. வெள்ளை பேண்ட் அழுக்காகி விட்ட கவலை மட்டும் இருந்தது. அந்த சமயத்தில் அதை சொன்னால் குஞ்சு என்னைக் கொன்று விடுவான் என்பதால் சொல்லவில்லை.

ஆறாம் வகுப்பிலிருந்தே நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த சைக்கிளை பிளஸ்-ஒன் படிக்கும் போதுதான் எங்கள் இருவரது வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். அப்போது எங்களுக்கு சைக்கிள் மேலிருந்த காதல் முற்றிலுமாக வடிந்திருந்தது. இருந்தாலும் ஓட்டினோம். எங்களுடன் படித்த நண்பன் பொன்ராஜுக்கு அவனுடைய வீட்டில் சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. நான் எனது சைக்கிளை பொன்ராஜிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிப் பின்னால் உட்கார்ந்து கொள்வேன். பொன்ராஜை வைத்து நான் மட்டுமல்ல. தாராசிங்காலுமே ஓட்ட முடியாது. இரண்டு காரணங்களுக்காக பொன்ராஜ் ‘தக்காளி’ என்றழைக்கப்பட்டான். ஒன்று, பொன்ராஜின் தளதள உடம்பு. இரண்டு, பொன்ராஜின் அப்பா தச்சநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் ஹோல்ஸேல் தக்காளி கடை வைத்திருந்தார். பொன்ராஜை சைக்கிளை ஓட்டச் சொல்லி நான் பின்னால் உட்கார்ந்திருப்பதால் என் மீது வெயில் அடித்ததேயில்லை.

சைக்கிளிலிருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை வந்தது குஞ்சுவுக்கு. அவன் அப்பா ஒரு சுவேகா மொபெட் வைத்திருந்தார். அவருக்கு தெரியாமல் அதை எடுத்து வருவான். நாங்கள் இருவரும் ரவுண்ட் அடிப்போம். சுவேகா கம்பெனிக்காரர்களே தங்கள் தயாரிப்பை மறந்துவிட்ட பின்னரும் குஞ்சுவின் தந்தை அந்த வண்டியை விடாமல் போஷித்து வந்தார். பிறகு மனமே இல்லாமல் அதை கொடுத்துவிட்டு ஒரு சில்வர் பிளஸ் வாங்கினார். அதிலும் நாங்கள் ரவுண்ட் அடித்தோம். பிறகு குஞ்சு பைக் வாங்கினான். அதிலும் நான் பின்னால் அமர்ந்து போனேன். என்னைப் போலவே சைக்கிளோடு திருப்தியடைந்து விட்ட வேறு நண்பர்கள் சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி இருந்த நண்பன் ராமசுப்ரமணியன். ஒரு நாள் மீனாட்சியும், நானும் ராமசுப்ரமணியனுக்காகக் காத்துக் கொண்டு ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் ராமசுப்ரமணியன் ஒரு பைக்கில் சென்றான். கூப்பிடக் கூப்பிட எங்களை மதிக்காமல் வேகமாக எங்களைத் தாண்டிச் சென்றது வண்டி. ‘என்னலெ, ஒங்க மாமன் திமிர் புடிச்சு போயி போறான்?’ என்றேன் மீனாட்சியிடம். ‘ஒண்ணும் கவலப்படாதீங்க சித்தப்பா. அவாள் அந்த முக்குல விளுந்து கெடப்பாக. போய் பாப்போம்’ என்றான் மீனாட்சி. பயலுக்கு கருநாக்கு. பால்கடை பக்கத்தில் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டியிருந்த குழியிலிருந்து பைக்கையும், ராமசுப்ரமணியனையும் வெளியே எடுத்து அப்போதுதான் போட்டிருந்தார்கள். ‘எங்களை பாத்துட்டு பெரிய இவரு மாதிரி நிக்காம போனேளே. அப்படி என்ன அவசரம்? இது தேவைதானா மாமா?’ என்று கேட்டான் மீனாட்சி. ‘தூரப் போலெ. உங்களை பாத்துட்டு நிறுத்தனும்னுதான் நெனச்சேன். எது க்ளெட்ச்சு, எது பிரேக்குன்னு தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இங்கே வந்து விளுந்துட்டேன்’ என்றான் ராமசுப்ரமணியன், வலியில் முனகிக் கொண்டே.

குஞ்சு பைக்கிலிருந்து ஜீப்புக்கு போனான். நானும் கூடவே போனேன். இந்த முறை எனக்கு பிரமோஷன். பின் ஸீட்டிலிருந்து முன் சீட்டுக்கு. பிறகு கார் வாங்கினான். ஒரு நாளும் அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியதே இல்லை. அவன் ஓட்ட நான் உட்கார்ந்து போவதிலேயே சுகம் கண்டு கொண்டேன். எங்கள் வீட்டுக் கார்களையும் விட நான் அதிகமாக பயணித்தது குஞ்சுவின் கார்களில்தான். சென்னையில் நண்பர்கள் பலரும் பைக், கார் ஓட்டுகிறார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சுந்தர்ராஜன் மாமா, மனோ,செழியன், திரைப்பட இணை இயக்குனர் பார்த்திபன், உதவி இயக்குனர் பத்மன் மற்றும் என் தம்பி சிவா போன்றோர் என்னை பின்னால் வைத்துக் கொண்டு பைக் ஓட்டுகின்றனர். நண்பர் ஷாஜி என்னிடம் பேசிக் கொண்டே எப்போவாவது சாலையைப் பார்த்து கார் ஓட்டுகிறார். ‘என்னைப் போல் ஒருவர்’ என்று நான் சந்தோஷமாக நம்பிக் கொண்டிருந்த வ.ஸ்ரீ அவர்களும் கார் ஓட்டி என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போடுகிறார். வாழ்க்கையின் பல கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது ஆருயிர் நண்பர் ஜெயமோகன்தான் இந்த விஷயத்தில் எனக்கு ஆறுதலாக இருக்கிறார். சைதன்யாவின் அப்பாவுக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது

சென்னைக்கு வந்த பிறகு நானும் மோட்டார் ஸைக்கிள் ஓட்டும் வாய்ப்பு வந்தது. கியர் இல்லாத மொபெட். டி.வி.எஸ்.50. அந்த மொபெட்டுக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு ஒரு இடமும் தெரியாது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் வாலிப வயது மகன் பைக் ஓட்டிக் கொண்டு போய் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அந்தத் துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு மனம் உடைந்த நிலையில் நண்பர் சீமான் என்னை தொலைபேசியில் அழைத்து அந்த செய்தியைச் சொல்லி வருந்தினார். ‘ஐயாமகனே, வண்டியெல்லாம் பாத்து ஓட்டுங்க. ஒண்ணும் சரியாயில்ல’ என்றார். நான் பதிலுக்கு, ‘அதெல்லாம் கவலைப்படாதீங்க அராஜகம். நம்ம வண்டி ஏ.வி.எம். ஸ்டூடியோவைத் தாண்டி திருப்பினாலும் போகாது’ என்றேன். அந்தச் சூழலிலும் வெடித்துச் சிரித்தார் சீமான்.

கியர் இல்லாத டி.வி.எஸ்.50 முன்பு ஓட்டினேன். இப்போது அவ்வப்போது வீட்டம்மாவின் டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் ஓட்டுகிறேன். இதற்கும் கியர் இல்லை. அந்த வகையில் டி.வி.எஸ் அதிபர் சுந்தரம் ஐயங்காருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். எங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்கு போகிறாரென்று என்னையும் மோட்டார் வாகனம் ஓட்டுவோரின் பட்டியலில் சேர்த்து என் மானம் காத்தவர் அவரே.

லோகநாயகி டீச்சரும் , லலிதா ராகமும்

“சயின்ஸ் எடுக்க வந்தவ சயின்ஸ் மட்டும் எடுக்க வேண்டியதுதானே. எதுக்கு தேவையில்லாத விஷயத்துலயெல்லாம் தலையிடுதா? நான் போயி அவ பாடத்துல புகுந்து பேசுதேனா? அவ அவ வேலையை அவ அவ பாக்கணும்”.

நான்காம் வகுப்பு படிக்கும் போது பாட்டு டீச்சர் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு ஆர்மோனியத்தைத் திறந்தது இன்னும் நினைவில் உள்ளது. லோகநாயகி மிஸ்ஸுக்கு இது காதில் விழுந்திருக்கும்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை. வீட்டுப்பாடம் செய்யாத, சுழிச்சேட்டை பண்ணுகிற
பிள்ளைகளையே கடிந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவர்கள் இதற்கு ஏதாவது பதில் சொன்னால்தான் ஆச்சரியப்படவேண்டும். அன்று பாட்டு டீச்சர் வருவதற்கு சற்று தாமதமானது. எட்டே எட்டு பேர்தான் என்றாலும், நாங்கள் போட்ட கூப்பாட்டில் ஸ்டாஃப் ரூமிலிருந்து லோகநாயகி மிஸ் வந்து விட்டார்கள். என்னப்பா, சினிமாக் கதையா? எனக்கும் சொல்லுங்களேன் என்றபடியே மிஸ்
உள்ளே வந்தார்கள். பேசுகிற முதல் வாக்கியத்திலேயே மற்றவர்களின் உள்ளம் கவர்கிற சிலரை பார்க்கும் போது இன்றும் எனக்கு லோகநாயகி மிஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். பாட்டு டீச்சர் வருவதற்கு முன்பே ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு வைத்து விட்டு சென்றிருந்தாள் ஆயா அக்கா. முதலில் மிஸ் அதை எடுத்து தூசியைத் துடைக்கிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். மெல்ல மிஸ்ஸின் விரல்கள் ஆர்மோனியத்தின் கட்டைகளில் தவழ ஆரம்பித்தன. ஒரு பத்து நிமிடம் டீச்சர் தலை நிமிராமல்
வாசித்தார்கள். மிஸ் அளுதாங்க என்றான் நண்பன் குஞ்சு. எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே!. என் எண்ணம் முழுக்க அவர்கள் வாசித்த ஓசையைத் தொடர்ந்தே செல்கிறது. மிஸ் தலை நிமிரும் வரை பேசாமல் இருந்தோம். என்னைப் பார்த்தால் கேட்டு விடுவது எனும் முடிவோடு நான்.

என் மூஞ்சி ஒரு தினுசாக இருப்பதை கவனித்து விட்டு, என்னடே முளிக்கே? என்றார்கள்.

‘நீங்க வாசிச்ச மாதிரியே எங்க பெரியப்பா பாடி கேட்டிருக்கேன். ஆனா அது வேற மாதிரியிருக்கும்’ என்றேன்.

‘அப்படியா? அது என்னதுடே? பாடு பாப்போம்’ என்றார்கள். சத்தியமாக அப்போது எனக்கு ஒரு இழவும் தெரியாது. இதே மாதிரிதான் இருக்கும். ஆனா அது வேற என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். மிஸ் சாதாரணமாக ஆர்மோனியத்தை வாசித்து, இதுதானே உங்க பெரியப்பா பாடுறது? என்றார்கள். ‘ஆமா மிஸ். இதேதான்’ என்றேன். ‘இது நான் வாசிச்சது இல்லியா!’. என் முழி அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க வேண்டும் . சிரித்தபடியே , “ரெண்டுமே பக்கத்துப் பக்கத்து ராகம் . நான் வாசிச்சது லலிதா. உங்க பெரியப்பா பாடுனது மாயாமாளவகெளளையா இருக்கும் ” என்றார்கள். அப்படித்தான்
சொல்லியிருக்க வேண்டும் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அந்த வயதில் எனக்கு ராகங்களைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. இதற்குள் பாட்டு டீச்சர் வந்து விட மிஸ் அவசரமாக எழுந்து டீச்சரை வணங்கி வழி விட்டுச் சென்றார்கள். இதற்கு பின் தான் பாட்டு டீச்சர் முதலில் நான் குறிப்பிட்ட வரியைச் சொன்னார்கள்.

பாட்டு டீச்சரை பற்றி இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும் . இரண்டாண்டுகள் எங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள் . தீராத விளையாட்டுப் பிள்ளை, தாயின் மணிக்கொடி பாரீர் , இவை இரண்டைத் தவிர வேறு எந்த ஒரு புதிய பாடலையும் அவர்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததில்லை. அவர்கள் ஒன்றும் வைத்துக் கொண்டு வஞ்சனை பண்ணவில்லை என்கிற விவரம் ரொம்ப நாள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது .

இது நடந்து ரொம்ப வருடங்களுக்குப் பின், மேற்சொன்ன மாயாமாளவகெளளை – லலிதா வித்தியாச விவரம், இளையராஜா மூலமே எனக்குத் தெரிய வந்தது. உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடலை அட்டகாசமாக லலிதா ராகத்தில் அமைத்திருந்தார் ராஜா. இப்போது நான் ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். மெல்ல பிடிபட்டது.
மாயாமாளவகெளளையில் பஞ்சமம் இல்லையென்றால், அது லலிதா. அட . .இதுதானா! ஆச்சரியமும், சிறுவயதில் நடந்த சம்பவத்தின் நினைவுகளும், எல்லாவற்றுக்கும் மேல், அத்தனை வருடங்களுக்கு முன்பு லோகநாயகி மிஸ் வாசித்த அதே ராகத்தை இன்று நான் வாசிக்கிறேனே என்கிற சொல்ல முடியாத சந்தோஷமும் என்னை ஆட்கொண்டது. மாயாமாளவகௌளையையும், லலிதாவையும் சுமந்து கொண்டு எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரைப் பார்க்கப் போனேன்.

பொதுவாக எனது இசை வகுப்புகளில் கிருஷ்ணன் ஸார் எனக்கான பாடத்தை வயலினில் வாசிக்க, அதை அப்படியே வாங்கி ஹார்மோனியத்தில் வாசிப்பதோடு எனக்கான வகுப்பு முடிந்து விடும். அதன் பின் பொதுவாக ராகங்களைப் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு கிருஷ்ணன் ஸார் விளக்கமளித்து தெளிவுபடுத்துவார். அவர் முன்னால் கொண்டு போய் மாயாமாளவகௌளை, லலிதா இரண்டையும் வைத்தேன். ‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே. போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.

இளையராஜாவின் திரையிசைப்பாடல்களைக் கேட்டே ராகங்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் நான் . அந்த வகையில் லலிதாவிலிருந்து பஞ்சமத்தைத் தொட்டு மாயாமாளவகெளளையை வாசிக்கிறேன் . “மாசறு பொன்னே வருக” , தேவர்மகன் பாடல் பேசுகிறது . “மஞ்சள் நிலாவுக்கு” , முதல் இரவு படப் பாடல் குதியாட்டம் போடுகிறது . “மதுர மரிக்கொழுந்து வாசம்” , எங்க ஊரு பாட்டுக்காரன் பாடுகிறான் .(அதுவும் இந்த பாடலின் சரணத்தில் ராஜா விளையாடியிருக்கும் விளையாட்டு , அபாரமானது) . கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை “ஸரிகமபதநி” ஸ்வர வரிசைகளை சொல்லிக் கொடுக்கப்படும் இந்த ராகத்தில் ராஜா போட்டிருக்கும் பாடல்கள் எண்ணிக்கையிலடங்காதவை . ஒன்று வாசிக்க ஆரம்பித்தால் இன்னொன்று .வந்து விழுந்த வண்ணம் இருக்க , மீண்டும் லலிதாவுக்கு திரும்புகிறேன் . கண்களை மூடியபடி வாசிக்க ஆரம்பிக்கிறேன். லோகநாயகி மிஸ்ஸின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது. பாட்டு டீச்சரின் முகமும்தான்.

சொக்கப்பனை

கார்த்திகை தீபத்துக்கு முந்தின நாள் காலையிலேயே அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீட்டுக்கு முன்பாக நெல்லையப்பர் கோயில் ஊழியர்கள் வெட்டப்பட்ட ஒரு பனைமரத்தை கொண்டு போட்டுவிடுவார்கள். இதேபோல் சுவாமி சன்னதி முக்கிலும் ஒரு பனைமரம் போடப்படும். சுவாமி சன்னதி முக்கு இன்றைக்கும் ‘சொக்கப்பனையடி முக்கு’ என்றே அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபம் வரை ஒட்டுமொத்த திருநெல்வேலி ஊரிலுள்ள மக்களனைவரும் இவ்விரண்டு சொக்கப்பனைகளையும் பற்றி பேசிக் கொண்டிருப்பர்.

‘மக்கா, இந்த வருசம் அம்மன் சன்னதி சொக்கப்பானை சாமி சன்னதிய விட சைசு கூட .. பாத்தியா?’

‘வருசா வருசம் இதையேத்தான் சொல்லுதெ . . . எனக்கென்னமோ ஒரே மாதிரிதான் தெரியுது.’

‘ஒனக்கு மயிரத் தெரியும் . . நான்லாம் ஒரு தடவ பாத்தெம்னா அளவ மனசுலயே குறிச்சுருவென். தெரியும்லா!’

சொக்கப்பனையை சொக்கப்பானை என்று சொல்லும் மனிதர்கள் இன்றும் திருநெல்வேலியில் இருக்கிறார்கள். கார்த்திகை தீபம் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் அது சிறுவர்களுக்கு விசேஷமானது. தீபாவளிக்கு வாங்கிய பட்டாசில் மிஞ்சியதை கார்த்திகை தீபத்துக்காக சிறுவர்கள் சேமித்து வைத்திருப்பர். அவற்றை மிஞ்சியது என்று சொல்வதுகூட தவறுதான். பெற்றோர்தான் அவற்றை பிள்ளைகளுக்குத் தெரியாமல் எடுத்து வைத்திருப்பார்கள். தீபாவளியன்று வெடிக்கும் போதே சிலர் சொல்லிப் பார்ப்பார்கள்.

‘ஏ மூதி . . எல்லாத்தையும் கொளுத்தி கொண்டாடிராதெ. கார்த்தியலுக்கு இருக்கட்டும்’.

கார்த்திகையை ‘கார்த்தியல்’ என்றே திருநெல்வேலி மக்கள் உச்சரிப்பார்கள். ‘என்ன அண்ணாச்சி! கார்த்தியல்லாம் செறப்புத்தானா?’ என்று கேட்கும் திருநெல்வேலி மக்களை இன்றைக்கும் பார்க்கலாம். தீபாவளிக்கு துணியெடுக்கும் போதே கார்த்திகைக்கும் சேர்த்து துணியெடுப்பவர்களும் உண்டு. அப்படி எடுக்காதவர்கள் கண்டிப்பாக கார்த்திகை தீபத்தன்று தீபாவளிக்கு எடுத்த உடையையே அணிந்திருப்பார்கள்.

கார்த்திகைக்கு முதல் நாள் போடப்பட்ட பனையின் மேலேறி விளையாடுவதற்கென்றே சிறுவர் கூட்டம் கிளம்பி வரும். காலையிலிருந்து அன்று இரவு வரை கீழே கிடக்கும் பனையை சுற்றி வந்து ஏறி மிதித்து விளையாடுவார்கள். நள்ளிரவில் பனை தனியாக கவனிப்பாரின்றி இருட்டுக்குள் கிடக்கும். மறுநாள் காலையிலேயே பனையில் துளை போடப்படும் சத்தம் கேட்கத் துவங்கும். நன்கு சீவப்பட்ட மூங்கில் துண்டுகளை குறுக்குவாக்கில் போடப்பட்ட துளைகளில் பொறுத்தி அடிப்பார்கள். அம்மன் சன்னதி முக்கில் தோண்டப்பட்ட குழியில் பனை இறக்கப்பட்டு அதைச் சுற்றி ஓலை கட்டப்பட்டு அதன் மேல் நீளமான மஞ்சள் நிறத் துணி போர்த்தப்படும். அதுவரை வெறும் பனையாக இருந்த பனை எல்லோரும் வணங்கிச் செல்லும் சொக்கப்பனையாகி விடும்.

கார்த்திகை தீபத்தன்று மாலையில் வீடுகளில் எப்போதும் ஏற்றும் குத்துவிளக்கு போக சிறுசிறு விளக்குகள் ஏற்றப்பட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும். அரிசி மாவுடன் வெல்லம் கலந்து உருட்டி, அதில் குழியிட்டு எண்ணெய் ஊற்றி, பஞ்சுத்திரியிட்டு ஏற்றிய ‘மாவிளக்கு’, மற்ற விளக்குகளுக்கு தலைமை தாங்கும். அன்று இரவே அந்த மாவிளக்கு, ‘பிரசாதம்’ என்னும் பெயரில் பலகாரமாகிவிடும். அதில் ஒன்றை தின்றாலே வயிறு திம்மென்று ஆகிவிடும். ராமையா மாமா அதிலுமே மூன்று தின்பார். நான்காவது வைக்கும் போதுதான் அரைகுறையாக மறுப்பார். ‘வேண்டாம் மாப்ளே, வீட்ல வேற ரெண்டு தின்னேன். வச்சிருங்க, காலையில வேணா வந்து சாப்பிடுதென்’.

காய்ந்த கோரப்புல்வகையைச் சேர்ந்த ‘சுளுந்து’ எனப்படும் சூந்துக்கட்டை கொளுத்தி கையில் பிடித்துக் கொண்டு சிறுவர்களின் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் அணையாமல் அவ்வப்போது எண்ணெய் ஊற்றிப் பார்த்துக் கொள்வதற்காக அநேகமாக எல்லா வீட்டு கன்னிப் பெண்களும் தத்தம் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் அவர்களின் உடை பட்டுப்பாவாடை, பட்டுச்சேலைதான். ஒருசிலர் தரைச்சக்கரமும், புஸ்வாணமும் கொளுத்துவதுண்டு. அம்மன் சன்னதியிலும், சுவாமி சன்னதியிலும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ஓரக்கண்ணால் மேய்ந்தபடியே இளைஞர்களின் ஊர்வலம் ஆரம்பமாகும்.

‘வெள்ளத்துல அடிச்சுட்டு வந்த மாதிரி எல்லாவளும் வெளியெ வந்துட்டாளுவொளெ.’

‘ஆமாடே. நமச்சிவாயம் பிள்ள பேத்தி சமஞ்சு மூணு வருசத்துக்கப்புறம் இன்னைக்குத்தானெ வெளியெ வந்து நிக்கா’.

‘அவளவிட அவ அம்மல்லா கெடந்து ரொம்ப நெளியுதா. கவனிச்சியா?’

ரகசிய கேலிப் பேச்சுக்களுடன் நகர்ந்து சொக்கப்பனை பக்கம் கூடத் துவங்குவர். ஒன்பது மணியளவில் ஆட்கள் நடமாட முடியாதபடி சொக்கப்பனை முன் கூட்டம் நிரம்பி நிற்கும். பத்துமணியை நெருங்கும் போது மேளதாளத்துடன் பட்டர் வந்து சேருவார். சரியாக மின்சாரம் துண்டிக்கப்படும். இருட்டுக்குள் பனையின் உச்சியை நோக்கி ஒரு சிறு வெளிச்சம் செல்வது தெரியும். மேலே சென்று தீபாராதனை காட்டப்படும்போது பட்டரின் முகம் லேசாகத் தெரியவரும். பட்டர் தீபாராதனையை மூன்று சுற்று சுற்றிவிட்டு நெல்லையப்பர் இருக்கும் திசை நோக்கி காட்டிவிட்டு பனையின் உச்சியில் வைத்த மறு நொடியே கீழே ஓலையில் தீ வைக்கப்படும். திகுதிகுவென எரியத் தொடங்கும் நெருப்பின் வெக்கை தாங்காமல் ஜனங்கள் சில அடிகள் பின்னோக்கி நகருவார்கள். எங்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்கும் போது கீழே நின்று கையைக் காட்டுவான் குஞ்சு. என்னமோ அவன் ஒருவனே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் அவனது கையசைப்பு இருக்கும். எரிந்து முடிந்த சொக்கப்பனை, அரைமணிநேரம் போராட்டத்துக்குப் பிறகு, கோயில் ஊழியர்களால் வெட்டிச் சாய்க்கப்படும். பனை வீழ்ந்தவுடன் ஆளாளுக்குப் பாய்ந்து அதில் சொருகப்பட்டிருக்கும் மூங்கில் துண்டுகளை பிடுங்கி எடுப்பார்கள். அந்தக் குச்சியில் கொடி படர்ந்தால் நன்கு வளரும் என்று ஒரு நம்பிக்கை.

சொக்கப்பனை கொளுத்தி முடிந்தவுடன் உச்சினிமாகாளி அம்மன் கோயில் பூஜை மணி அடிக்கத் துவங்கும். கோயிலின் முன் ஒரு சிறிய பப்பாளி மரம் நடப்பட்டு அதில் ஓலை சுற்றி கொளுத்தப்படும். பெரிய சொக்கப்பனையின் குட்டி போல இதையும் அம்மன் சன்னதி மக்கள் வணங்குவர். எரியும் போதே ஓலைப்பட்டாசு போல சின்ன வெடிகளை தீக்குள் போட்டு வெடிக்கச் செய்யும் இளைஞர்களை ‘சவத்து மூதிகளா’ என்று பெரியவர்கள் ஏசுவார்கள். ஆனாலும் இந்தச் சேட்டையைச் செய்ய இளைஞர்கள் தவறுவதில்லை.

வருடாவருடம் சொக்கப்பனையின் போது ஒரு பட்டரை கொளுத்திவிடுவார்கள் என்றே நான் வெகுகாலம் நம்பி வந்தேன். எனது சந்தேகத்தை குஞ்சுவும் ஊர்ஜிதம் செய்தான். ‘ஒனக்கு தெரியாதா? அதுக்குன்னே கோயில்ல இருந்து பட்டர்களை வளக்காங்க’ என்று கூசாமல் சொல்லியிருந்தான். விவரம் தெரிந்த வயதில் கார்த்திகை தீபம் முடிந்த ஓரிரு நாளில் நானும், குஞ்சுவும் போத்தி ஹோட்டலில் ரவா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணேச பட்டர் வந்து எங்களருகில் உட்கார்ந்து பன்னீர் பக்கோடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டார். அந்த வருடம் அவர்தான் சொக்கப்பனை கொளுத்தியவர். நான் மேஜைக்கடியில் அவர் கால்களையே பார்த்தேன்.

பல வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் கார்த்திகை தீபத் திருநாளன்று திருநெல்வேலியில் இருக்க நேர்ந்தது. ஊர் முழுக்க முதல் நாளிலிருந்தே ‘கார்த்தியல்’ பேச்சை கேட்க முடிந்தது. பனை வந்து இறங்கியதிலிருந்து, மறுநாள் இரவுவரை நான் பார்த்து, கேட்டு வளர்ந்த அதே விஷயங்கள் என் கண் முன்னாடி மறுபடியும் நடந்தேறின. ஒன்பது மணிவாக்கில் மாடிக்குச் சென்று நின்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆண்களும், பெண்களுமாக கூட்டம் நெருக்கியடித்தபடி நின்று கொண்டும், ஆங்காங்கே வீட்டு வாசல்களில் உட்கார்ந்தபடியும் பட்டரை எதிர்பார்த்தபடி காத்திருந்தனர். சினிமா தியேட்டரில் படப்பெட்டி வரும் போது இருக்கும் பரபரப்பு, பட்டர் வரும் போது இருந்தது. மின்சாரம் சரியாகத் துண்டிக்கப்பட, சில நொடிகளில் சொக்கப்பனை கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. வெக்கை கலந்த வெளிச்சத்தில் கண்களை சுருக்கியபடி நின்று கொண்டிருந்தேன். கீழே கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘மாமா’ என்றது. குரல் வந்த திசையை பார்த்தேன். தானே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் குஞ்சுவின் மகன் என்னைப் பார்த்து கையசைத்தான்.

சில்வர் டோன்ஸ்

கோயில் விசேஷங்களுக்கும் மெல்லிசைக் கச்சேரிகளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. அது நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவாக இருந்தாலும் சரி, புட்டாரத்தி அம்மன் கோயில் கொடை விழாவாக இருந்தாலும் சரி. கண்டிப்பாக அந்தந்த கோயிலின் வசதிக்கேற்ப சிறிய, பெரிய மெல்லிசைக் குழுக்களை அமர்த்தி கச்சேரி நடத்துவார்கள். பிட் நோட்டிஸிலிருந்து போஸ்டர்கள் வரை கச்சேரி பற்றிய அறிவிப்பை ஊரெங்கும் காணலாம். ‘மக்கா இன்னைக்கு ராத்திரி லாலா சத்திர முக்குல பிரபாகரன் கச்சேரி இருக்கு. சீக்கிரமே போகணும். மறந்துராதே’ என்று இளைஞர்கள் காலையிலேயே பேசிக் கொள்வார்கள். வெளியூராட்கள் யாராவது இவர்கள் பேசுவதை கேட்க நேர்ந்தால் இவர்கள் பாடகர்களோ, இசைக் கருவி ஏதேனும் இசைப்பவர்களோ என்று சந்தேகம் வந்து விடும். கச்சேரி கேட்பதற்குத்தான் அவர்கள் இவ்வளவு உற்சாகமாக காலையிலேயே தயாராகிறார்கள் என்கிற விவரம் தெரிய வாய்ப்பில்லை.

பிடரி வரை புரளும் ஹிப்பி முடியும், ஏழுவயதுச் சிறுவன் போய் மறைந்து கொள்ளும் அளவுக்கு பெரிதான பெல்பாட்டம் பேண்டும், கையில் வெள்ளி காப்பும், முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி சைஸிலுள்ள ஸ்டைலான அகல ஃபிரேம் மூக்குக் கண்ணாடியும் அணிந்த இசைக் கலைஞர்களின் ‘சில்வர் டோன்ஸ்’ குழுவின் கச்சேரி நான் சின்னப் பையனாக இருக்கும் போது நெல்லைப் பகுதியில் மிகவும் பிரபலம். பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் அந்த குழுவில் இருந்தாலும் அந்த வயதுக்கேயுரிய ரசனையோடு எனக்கு டிரம் வாசிப்பவரின் மீதுதான் காதல். அகலக் காலர் வைத்த சட்டைப் பித்தான்களைத் திறந்து விட்டு கழுத்துச் சங்கிலி தெரிய ஸ்டைலாக குச்சிகளை சுழற்றியபடியே அவர் டிரம் வாசிக்கும் போது டிரம்முடன் சேர்ந்து என் மனமும் அதிரும். கச்சேரி முடியும் வரை அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து வெங்கடாசலம் கம்பவுண்டரின் மகளான சிவகாமி அக்காவும் டிரம்மரை மட்டுமே ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை ஒரு முறை கவனித்தேன்.

அனேகமாக எல்லா கச்சேரிகளும் இரவு பத்து மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும் என்றாலும் எட்டு மணியிலிருந்தே கச்சேரிக்கான களை கட்டிவிடும். கச்சேரிக்கு முன்னுள்ள நிகழ்ச்சி பெரும்பாலும் உள்ளூர் சொற்பொழிவாளரின் பிரசங்கமாகத்தான் இருக்கும். நேரம் ஆக ஆக கச்சேரிக்கான ரசிகர்களின் கூட்டம் அதிகமாகி, சாலை நிறைய ஆட்கள் மெல்ல மெல்ல வந்து உட்காரத் துவங்குவர். கடைகளின், வீடுகளின் மாடிகள், அடைத்த கடைகளின் நடைப்படிகளென எங்கும் ஜனத்திரள் குவியும். பிரசங்கி அதிகப்பிரசங்கியாகும் பரிதாபத்தருணமிது. தன் பேச்சுக்காக கூடும் கூட்டமல்ல இது என்னும் உண்மையை அவர் மனம் நம்ப மறுக்கும். பேச்சின் கடைசியில் துருப்புச் சீட்டாக தான் மனப்பாடம் பண்ணி வைத்திருக்கும் ஒரே பட்டினத்தார் பாட்டை சத்தமாக ஒப்பிக்கத் தொடங்குவார். முடிக்கச் சொல்லி தட்டப்படும் கைத்தட்டல்களை பட்டினத்தாருக்கு கிடைத்த பாராட்டாக எண்ணிக் கொள்வார். தொடர்ந்து பேசும் ஆசையில் சோடா குடிக்கும் சொற்ப நேர இடைவெளியில் மூளைக்குள்ளிருந்து ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பார். ஆயத்தமாகும் நோக்கோடு கைத் துண்டால் வாயை துடைத்து தொண்டையை செறுமி தொடைகளை அசைத்து சரியாக உட்கார்ந்து மீண்டும் தொடங்க முற்படும் போது விழாக் கமிட்டியாரின் துண்டு சீட்டு போகும். அதை அவர் பொருட்படுத்தாமல் போனால் ஜவுளிக்கடை மகமைச் சங்கத்தின் பொருளாளர் மாரியப்பன் செட்டியார் மேடையேறி,”இத்துணை நேரம் நம்மையெல்லாம் தன் அற்புதமான சொற்பொழிவினால் மகிழ்வித்த . . .” நாவல்டி ரெடிமேட்ஸின் மஞ்சள் சால்வையை போர்த்தி முடித்து வைப்பார். இதற்குள் வாத்தியங்களை ஒவ்வொன்றாக மேடைக்கு ஏற்றத் தொடங்கியிருப்பர்.
ஒன்பது மணிக்கு குழுவினர் வந்து மேடையேறி விட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது அவர்களின் ‘ஹலோ ச்செக் ச்செக்’ மற்றும் ‘டம் டிம் டப் டிப் டங்க் டிங்க்’ என்னும் ஆயத்த சத்தங்களை நாம் பொறுமையுடன் கேட்டே தீர வேண்டும். ‘எல, இவனுவொ லொட்டு லொட்டுன்னு தட்டிக்கிட்டேதான் இருப்பானுவோ. அதுக்குள்ள வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வந்துருவொம். அம்மை ஏசிக்கிட்டு உக்காந்திருப்பா. அவளும் கச்சேரிக்கு வரணும்லா’ என்று நண்பனிடம் சொல்வான் கடை அடைத்து களைத்து வரும் ஆரெம்கேவி ஊழியன் சொக்கலிங்கம். அதிகம் வெளியே வராத சில சமைந்த பெண்கள், பீடி சுற்றும் சீனியர் பெண்மணிகளின் பாதுகாப்பில் அங்கங்கு கூட்டத்தில் கலந்திருப்பர். இவர்களுக்காகவே சில இளைஞர்கள் சில விடலைப்பையன்களை கூட்டி வருவார்கள். அவ்வப்போது அப்படி அழைத்து வந்த சிறுவனிடம், ‘லெச்சுமணா, அந்தா இருக்கா பாரு பத்மா அக்கா. அவ என்ன பாக்காளான்னு பாத்து சொல்லணும் என்னா’. பயல் கச்சேரி சுவாரஸ்யத்தில் பத்மா அக்கா இருக்கும் இடத்தை மறந்து பின் இவன் கேட்கும் போதெல்லாம் குத்துமதிப்பாக பத்மா இருக்கும் திசை பார்த்து ‘ஆமா அத்தான். உன்னையேதான் பாக்கா’ என்று சொல்லிவிட்டு பாட்டில் கவனம் செலுத்துவான். லெச்சுமணன் பத்மா அக்காவின் சித்தியை பார்த்து சொல்லியிருக்கிற விவரம் தெரியாத இந்த மடையன் ஒரு மாதிரி மயக்கத்தில் இருக்கும் போது, அடுத்த பாடலாக சொல்லி வைத்த மாதிரி, ‘ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்று பாடகி பாடுவாள். மிதப்பில் தன்னை மறந்து பனாமா ஃபில்டர் பற்ற வைத்து புகைத்து வளையம் விட்டு கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் தன் பெரியப்பாவிடமோ, மாமாவிடமோ வசமாக மாட்டிக் கொள்வான்.

மெல்லிசை கச்சேரிகளுக்கென்றே சில பாடல்கள் உள்ளன. இதயக்கனியில் உள்ள ‘இன்பமே’ அதில் ஒன்று. அந்த பாடலின் ஆரம்பத்தில் பல்லவிக்கு முன் வரும் பின்னணி இசையின் புல்லாங்குழல் பகுதியை பெரும்பாலான கச்சேரிகளில் குழலை உதறுவதிலேயே கவனமாக நேரங்கடத்தி அந்த பிட் தன்னை கடந்து சென்ற பின் ஒரு போலி பதற்றத்தை முகத்தில் காட்டுவார் ஃப்ளூட்டிஸ்ட் சிவபெருமாள். அதற்குள் அதை ஆர்மோனியத்தில் வாசித்திருப்பார் தியாகராஜன் மாமா. அது அவருக்கு பழகிப் போனது என்று குழுவில் உள்ள மற்றவர்கள் சொல்வார்கள். இதே போன்று டிரம் வாசிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு பலகாலம் எங்களை ஏமாற்றிய சங்கரசுப்புவும் ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பாடலான ‘நம்ம ஊர் சிங்காரி’யின் முக்கிய டிரம் பிட்டை வாசிப்பதில் இருந்து தப்புவதற்காக குச்சியை சுழற்றி தவற விட்டு பின் அவசர அவசரமாக ஓடி வந்து எடுப்பான். அதற்குள் பாட்டு முடிந்து விடும். அதை பிடிப்பதற்கென்றே குழு உறுப்பினர்கள் ரகசியமாக ஆள் நியமித்தனர். பிறகு அதிலிருந்தும் தப்பிக்க லாவகமாக ஆளில்லாத இடம் பார்த்து குச்சியை வீச ஆரம்பித்து விட்டான்.

பாடகிகள் அழகிகளாக இருப்பது அபூர்வம். அப்படி ஒரு அழகான பாடகியை ஒரு கச்சேரியில் பார்க்க நேர்ந்தது. ஆளைப் போலவே குரலும் கச்சிதம். சரியான ஸ்ருதியில் பாடினாள். ஒவ்வொரு பாட்டுக்கு இடையேயும் அவளையும், அவள் குரலையும் அளவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தான், கச்சேரி நடத்தும் தலைமைப் பாடகன். பணிவுக்குக் காரணம் பாடகியின் தந்தையும் மேடையில் இருந்ததுதான். பேச்சினூடே அவரையும் புகழத் தவறவில்லை. அவரும் ஒரு முன்னாள் பாடகர் என்பது அவன் பேச்சில் தெரிய வந்தது. ‘மைக்’ மோகனுக்கு கொஞ்சம் வயதான மாதிரி தோற்றத்தில் இருந்தார். மகள் நன்றாக பாடுவதை ரசித்த படியே அமர்ந்திருந்த அவரை பாட வருமாறு அழைத்த போதெல்லாம் மெல்லிய புன்முறுவலுடன் மறுத்த படியே இருந்தார். ‘எங்களுக்கெல்லாம் குருநாதர்’ என்றெல்லாம் தலைமைப்பாடகன் புகழ்ந்து பார்த்தும் அவர் மசிவதாக இல்லை. கண்ணியமான அவரது தோற்றமே அவர் ஒரு நிறைகுடம் என்பதை உணர்த்தியது. என்னருகில் நின்று கொண்டிருந்த குஞ்சு ‘ரொம்பல்லா பந்தா பண்ணுதாரு’ என்றான். கச்சேரி முடியும் போது அவர் மகளே அவரை பாட அழைத்த போது அவரால் தட்ட முடியவில்லை. எழுந்து வந்தார். ‘வந்துட்டாரு பாத்தியா’ என்றேன் குஞ்சுவிடம். எங்கள் இருவருக்கும் பிடித்த பாடலான இளையராஜாவின் ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாடலை தந்தையும், மகளும் பாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கொஞ்சம் நகர்ந்து மேடைக்கருகில் சென்றோம். பாடலின் முதலில் வரும் ராஜாவின் ஹிந்தோள ஆலாபனையைத் தொடங்கினார், வயதான மோகன். சற்றும் எதிர்பார்க்காத வேளையில் யாரோ தன் வெற்றுக்காலை பூட்ஸ் காலால் மிதித்த மாதிரியான ஓர் அலறல். விருட்டென கூட்டத்தில் புகுந்து குஞ்சு வெளியே ஒடினான். ஓர் இடைவெளி விட்டு அடுத்த ஆலாபனை. பட்ட காலிலேயே பட்டது இன்னொரு பூட்ஸ் மிதி. இப்போது நான் ஓடினேன்.

அண்ணன் அன்னபூரணன் ஒரு கல்லூரி பேராசிரியர். தபலா வாசிப்பான். அவனது கல்லூரியின் ஆண்டு விழாவிற்காக ஒரு மெல்லிசைக் குழு அமைக்கப் பட்டிருக்கிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்த அந்த குழுவில் எந்த நேரமும் சண்டை உருவாகும் பதற்ற நிலை. பத்து பாடல்கள் பாடுவதாக திட்டம். கவனமாக இரு பிரிவினருக்கும் தலா ஐந்து என பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு விழாவன்று கச்சேரி துவங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது மாணவர்கள் தரப்பிலிருந்து கூடுதலாக ஒரு மாணவனுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு வலியுறுத்தியிருக்கிறார்கள். ‘நேரம் இல்லையேப்பா’ என்று சொன்னதை அவர்கள் கேட்க தயாராகயில்லை.

‘விடுங்க ஸார்,பாடிட்டு போறான்…பிறகு அதுக்கு வேற ஸ்டிரைக் பண்ணுவானுவொ..பிரின்ஸி நம்மள புடிச்சு வாட்டுவாரு’

‘ஓகே.ஓகே. . .எப்பா நல்லா பாடுவானா . . மொதல்ல ஆள் யாருன்னு சொல்லுங்கடே . . .’

‘இவன்தான் ஸார் . . . . எல அவன எங்கெ . . . எல ஏய் . . . நாராயணா . . . முன்னால வால . . .’

‘எப்பிடிடே நாராயணா . . .பாடீருவியா . . .?’

‘எங்க ஊர் திருளாம் போதுல்லாம் நான்தான் ஸார் வருசாவருசம் பாடுவேன்.’

நாராயணன் பாடத் துவங்கியிருக்கிறான்.

‘நா . .ஆ . . .ன்

ஒ . .ரு

ரா . . .ஆ .. .ஆ . . . .சியில்லா . . . . .. .

ராஜூ . .ஊ . . . .ஊ . . . …’

முதல் கல் மாணவர் பகுதியிலிருந்துதான் வந்திருக்கிறது.

திசை

இரண்டு வாரங்களுக்கு முன் நானும், திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் என் மகனை அழைத்துக் கொண்டு என் தம்பியின் வீட்டுக்குப் போனோம். நாங்கள் இருப்பது சாலிகிராமத்தில். தம்பி பட்டாபிராமில். அது ஆவடியைத் தாண்டி உள்ளது. இதுவரை இரண்டே இரண்டு முறைதான் நானே போயிருக்கிறேன். தனியாகச் செல்வதற்கு எனக்கு வழி தெரியாது. பட்டாபிராமுக்கு என்று இல்லை. எங்கு செல்வதற்கும். தம்பி எங்களை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கு அவன் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எழும்பூர் வரை செல்வதில் எனக்கு சிக்கலில்லை என்றாலும் புத்திசாலித்தனமாக மின்சாரரயிலைப் பிடித்துவிட்டேன். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பதற்றமில்லாமல் இருந்தேன். நாங்கள் எழும்பூர் சென்று இறங்கும் போதே காலை 11 மணிக்கு மேலாகியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தோம். தம்பியைக் காணோம். தொலைபேசியில் அழைத்தேன்.

‘அங்கேயே இருங்க. வந்திருதேன்’ என்றான். ‘எந்தப் பக்கத்திலிருந்து வருவே’ என்று கேட்டதற்கு ‘ கெளக்கே இருந்து வருவேன்’ என்றான். அவன் எப்போதும் இப்படித்தான். திசை சொல்வான். எனக்கு எது கிழக்கு என்று தெரியவில்லை. அப்படி தெரிய வேண்டுமென்றால் என் வீட்டுக்குப் போனால்தான் சொல்ல முடியும். என் வீடு வடக்கு பார்த்த வீடு. அங்கு போய் அங்கிருந்தே கவனமாகப் பார்த்துக் கொண்டு எழும்பூர் வரை மீண்டும் வருவது நடக்கிற காரியமா? ‘ சித்தப்பா, கெளக்கே இருந்து வாரேங்கான்’. நாஞ்சிலாரிடம்
சொன்னேன். ‘ எது கெளக்கு. வாடே பேரப்பிள்ள போய் பாப்போம்’. என் மகனை அழைத்துக் கொண்டு வெயிலை நோக்கி நடந்தார். ‘வெயிலப் பாத்து எப்படி கண்டுபிடிப்பீங்க தாத்தா . . .’ ‘நெளல் எந்தப் பக்கம் விளுதோ, அத வச்சு தெசையை கண்டுபிடிச்சுரலாம். ஜாமென்ட்ரி பாக்ஸ்ல உள்ள கம்பாஸ வச்சுகூட கண்டுபிடிக்கலாம் . . . .’ ‘அய்யோ அது கம்பாஸ் இல்ல, கேம்பஸ். . . என்ன தாத்தா இது கூட தெரியலே உங்களுக்கு . . .’ பிளாட்பார பெஞ்சில் அமர்ந்து தாத்தாவுக்கும் பேரனுக்குமான உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வலதுப் பக்கத்திலிருந்து தம்பி நடந்து வந்தான். அப்படியென்றால் அது கிழக்குதான் என்று நினைத்து கொண்டேன்.

ஊரெல்லாம் சுற்றுபவர்களைப் பார்த்தால் இன்றைக்கும் எனக்கு ஆச்சரியம்தான். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியா முழுவதும் தனியாகவே சுற்றி அந்த அனுபவங்களை எழுதியுமிருக்கிறார். இது எப்படி அவரால் முடிந்தது என்று தெரியவில்லை. நண்பன் குஞ்சு தானே காரை ஓட்டிக் கொண்டு தமிழகம் முழுதும் சுற்றுவான். நான்தான் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். சிறுவயதிலிருந்து என்னுடனேயே வளர்ந்த அவனுக்கு மட்டும் எப்படி எல்லாத் திசைகளும் தெரிகிறது. இன்று வரை எனக்கு புரியாத புதிர் இது. எனக்கு திருநெல்வேலியிலேயே இன்னும் பல இடங்கள் தெரியாது. பெரும்பாலான
திருநெல்வேலிக் காரர்களின் லெட்சணமும் இதுதான். எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த ரேவதி அக்காவின் தம்பி சங்கரன் என்கிற சங்காவுக்கு பேசத் தெரியாது. ஊமையில்லை. ஒரு காலை சாய்த்து நடப்பான். எல்லோருக்கும் எடுபிடி வேலைகள் செய்து வந்த சங்கா, உடம்பில் சட்டை அணிவதில்லை. ஒரு அழுக்குத் துண்டும், அதைவிட அழுக்கான வேட்டியும்தான் உடை. அவன் பேசுவது எங்களுக்கு மட்டுமே புரியும். எல்லோரையும் மாமா என்றழைப்பான். ‘மாமா கூப்பாங்கோ’ என்றால் மாமா கூப்பிடுகிறார்கள். ‘மாமா சாப்பாங்கோ’ என்றால் மாமா சாப்பிடுகிறார்கள். இரண்டு மூன்று தெருக்கள் தவிர திருநெல்வேலியிலேயே
வேறு எந்த இடம் பற்றியும் அறிந்திராத சங்கா ஒரு நாள் திசை தப்பி காணாமல் போய்விட்டான். எங்கெங்கெல்லாமோ தேடினோம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வைத்தோம். ஒருவாரமாகியும் தகவல் இல்லை. சங்காவைத் தெரிந்த, ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசியிராதவர்கள் கூட சங்காவைத் தேட ஆரம்பித்தார்கள். பாளயங்கோட்டை தாண்டி ஏதோ ஒரு ஊருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருந்த நெல்லையப்பன் அண்ணன் போயிருக்கும் போது, அவரை நோக்கி மாமா என்று ஒரு குரல் கேட்டிருக்கிறது. சங்காதான். சிரித்தபடி நின்றிருக்கிறான். பேச முடியாத சங்காவை சந்தேகித்து யார் யாரோவெல்லாம் அடித்திருந்திருக்கிறார்கள்.
நெல்லையப்பண்ணன் அழைத்து வந்து விட்டார். எங்கள் பகுதியே சங்காவை
வரவேற்றது. ‘ எல சங்கா, அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான்னு எங்கேயும் போவக் கூடாது, என்னா?’ சங்கா அதற்கு பிறகு எங்குமே செல்வதில்லை. அந்தப் பக்கத்திலேயே ஏதாவது கடைக்கு கிடைக்குப் போவதென்றால் போவான். அவ்வளவுதான்.

திசைகள் அறியா சங்காவுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேற்றுமை, எனக்கு பேசத் தெரியும். அவ்வளவே. சென்னைக்கு நான் வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் ஒரு இடமும் தெரியாது. சமயங்களில் சாலிகிராமமும். வாத்தியாரும் இங்கேயே இருக்கிறார். நான் சார்ந்திருக்கும் சினிமாத் தொழிலுக்குத் தேவையான சகல இடங்களும் இங்கேயே. பிறகு எனக்கென்ன கவலை? இடங்களைப் பற்றிய தேடலோ, ஆர்வமோ அடிப்படையிலேயே இல்லாமல் போனதுதான் இதற்கு காரணம். எத்தனையோ சிக்கல்களை இந்தக்குறைபாட்டினால் வாழ்க்கையில் சந்தித்து வந்தாலும், இன்னமும் மனதை மாற்ற முடியவில்லை. சின்ன வயதில் எனது உறவினர்களான வாசன், சுந்தர் அண்ணன், நான் மூவரும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணாபுரத்துக்கு செல்லத் திட்டமிட்டோம். சிற்பக் கலையை ரசிக்கும் எங்களின் உயர்ந்த கலாமனதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்து வீட்டில் சாப்பாடு கட்டிக் கொடுத்தார்கள். வீட்டிற்குத் தெரியாமல் ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம். பாதி வழியிலேயே வாசன் மனதில் ஓர் யோசனை. அப்படியே திருச்செந்தூர் சென்று வந்தால் என்ன? சுந்தர் அண்ணனும் அதை வழிமொழிய, அவர்கள் இருக்கும் தைரியத்தில் நானும் தலையாட்டினேன். அவர்களைப் பின்தொடர்ந்து சைக்கிளை மிதிக்க மிதிக்க திருச்செந்தூர் வருவேனா என்றது. பஸ் வேகமாகப் போனாலே திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லஒரு மணிநேரமாகும். ஆனாலும் விடாது சைக்கிளை மிதித்தோம். மதிய உணவு நேரத்துக்கு முன்பே மூவருக்கும் பசித்துவிட்டது. சாப்பாட்டைப் பிரித்துஅள்ளித் தின்று முடித்தோம். தூக்கம் வருவது போல் இருந்தது. சுந்தர் அண்ணன் திட்டினான். ‘அறிவிருக்கா, இப்போவே லேட்டாயிட்டு. வா வா. ஏறி மிதி’. தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோமே என்று தோன்றியது. காலெல்லாம் வலித்தது. திருச்செந்தூரை நெருங்கவே சாயங்காலமானது. அம்மன்புரம் என்னும் ஊர் வந்தது. அதற்கு அடுத்த ஊர் திருச்செந்தூர்தான். தாகம் தாங்க முடியவில்லை. பதநீர் குடிக்கும் யோசனையை வாசன் சொன்னான். ரோட்டை விட்டுஇறக்கத்தில் ஒரு மரத்தடியில் சின்ன ஓலைக் குடிசையொன்றைப் பார்த்து விட்டேஇதை சொல்லியிருக்கிறான். சைக்கிள்களை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அந்தக்குடிசையை நோக்கிச் சென்றோம். மடித்த பனை ஓலையில் கொடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் கொடுத்தார்கள். வாசனும், சுந்தர் அண்ணனும் இரண்டிரண்டு கிளாஸ்கள் அடிக்க, நான் மட்டும் சளைத்தவனா. அந்த சுவை பிடிக்கவில்லையென்றாலும் நானும் இரண்டு கிளாஸ்கள் பதநீர் குடித்தேன்.

அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய
கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. கிருஷ்ணாபுரச் சிலைகள் நடனமாடின. சைக்கிள்கள் பறந்தன. முருகன் கையில் வேலோடு எங்களுடன் ஓலைக்குடிசையில் அமர்ந்து பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் குடித்தார். கடலலை எழும்பி வந்து என்னை மூடும் போது, சுந்தர் அண்ணன் என்னை உலுக்கினான்.

‘கெளம்புவோம். இருட்டிரும்.’ அருகிலேயே மல்லாந்து கிடந்த வாசனை எழுப்பினோம். தள்ளாடி எழுந்து நின்று குனிந்து கடற்கரையில் தேடிப் பொறுக்கி தன் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். இருளோடு மனதில் பயமும் சேர்ந்து கொள்ள சைக்கிளை மிதிக்கத் தொடங்கினோம். ஸ்ரீவைகுண்டமருகே வயலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விவசாயக்
கூட்டத்தின் மேல், இருட்டுக்குள் கண் தெரியாமல் மோதி விழுந்தோம். நாங்கள்
எழுந்திருக்க உதவிய அவர்கள், பித்தளைத் தூக்குச் சட்டியிலிருந்து தண்ணீர் சாய்த்துக் கொடுத்து, ‘ டைனமோ வேற இல்லியே. பாத்துப் போங்க தம்பிகளா’என்றனர். இரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பினோம். தெருவே எங்கள் வீட்டுவாசலில் காத்திருந்தது. போலீஸிலும் புகார் கொடுத்திருந்தனர். பெரியவர்கள் யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. ‘மொதல்ல போய் சாப்பிடுங்கலே’. நல்ல பையனாக நடந்து கொள்வதாக எண்ணி பெரியப்பாவிடம், ‘இந்தாங்க பெரியப்பா. திருச்செந்தூர் பிரசாதம்’ என்று திருநீற்றுப் பொட்டலத்தை நீட்டினேன். அதுவரை அமைதியாக இருந்த அனைவரும் எங்கள் மூவரையும் சோபாவில் உட்கார வைத்து செருப்பால் அடித்தார்கள்.

சென்னையில் என்னை எங்கு அனுப்புவதாக இருந்தாலும் வாத்தியார்
பாலுமகேந்திரா என்னிடம் இடம் குறித்து எதுவும் சொல்ல மாட்டார். ‘அகிலா, உன் புள்ள பாட்டு பாடிக்கிட்டு எங்கேயாவது போயிருவான். டிரைவரை கூப்பிடு’என்பார், தன் மனைவியிடம். தற்சமயம் நான் எங்காவது செல்வதாக இருந்தால் உதவி இயக்குனர் பத்மன், எனது தம்பி சிவா, நண்பர்கள் செழியன், ஷாஜி, மனோ என்று யாராவது வந்து என்னை கூட்டிச் செல்ல வேண்டும். நண்பர் ஜெயமோகனுக்கு பாவலர் விருது வழங்கும் விழாவிற்கு சாலிகிராமத்திலிருந்து நானும், வ.ஸ்ரீநிவாசன் சாரும் அவரது ஸ்கூட்டரில் கிளம்பினோம். ஸ்ரீநிவாசன் ஸார் தன்னுடைய மாருதி காரை ஸ்கூட்டர் என்றுதான் சொல்வார். வண்டியில்
ஏறும்போதே, ‘சுகா, உங்களுக்கு பாரதீய வித்யா பவன் எங்கேயிருக்குன்னு தெரியுந்தானே?’ என்று வினவினார். திசைகள் விஷயத்தில் ஸ்ரீனி ஸார் எனக்கு தாத்தா. நண்பர் ரவிசுப்ரமணியம் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழை கையிலேயே வைத்திருந்தேன். அதைப் பார்த்து ‘மையிலாப்பூர்லதான் சார் இருக்கு’ என்றேன். முன் தினமே நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், மயிலாப்பூர் கற்பகம் விலாஸின் எதிர்ப் புறத்தில் பாரதீய வித்யாபவன் இருக்கும் விஷயம் சொல்லியிருந்தார். மயிலாப்பூருக்கு எப்படி போவது என்று ஸ்ரீனிவாசன் ஸார் கேட்டு விடுவாரோ என்று பயந்த படியே உட்கார்ந்திருந்தேன். கேட்டாலும்
எனக்கு தெரியாது என்னும் விவரம் என்னை விடவும் ஸ்ரீனி ஸாருக்கு தெரியுமென்பதால் அவர் என்னிடம் கேட்கவில்லை. பெரும் போரட்டத்துக்குப் பின் மைலாப்பூரை அடைந்தோம். பாரதீய வித்யா பவனும் கண்ணில் சிக்கிவிட்டது. பெருமிதம் தாங்க முடியவில்லை ஸ்ரீனி ஸாருக்கு. உடனேயே காரை விட்டு இறங்காமல் தனக்குத் தானே சிரித்து மகிழ்ந்து கொண்டார். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி என்னைப் போன்ற திசையறியா ஒருவனை துணைக்கு வைத்துக் கொண்டு வெற்றிகரமாக மைலாப்பூர் வந்தடைந்த நிறைவு அவர் முகத்தில். இதற்காகவெல்லாம் பாவலர் விருது கொடுக்க மாட்டார்கள் என்று சொல்ல நினைத்தேன். திரும்பி அவருடன்தான் நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதால் அமைதி காத்தேன். ‘உண்மையாவே பெரிய விஷயம் சுகா.
யார்க்கிட்டேயும் கேக்காம வந்துட்டோமில்லையா?’ என்றார். ‘ஆமாம் சார். பெரிய விஷயம்தான்’ என்றேன். அன்று முழுக்க இந்த சாதனையை நினைத்தே மகிழ்ச்சியாக இருந்த வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் சுத்தமான சென்னைக்காரர்.

சுப்பையாவின் தம்பி

அப்பா கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். பெரியப்பாக்களுக்கு தலா நான்கு பிள்ளைகள். அத்தைகளுக்கு மும்மூன்று. நாங்கள் அண்ணன் தம்பிகள் இரண்டு பேர். ஏதாவது விசேஷம், காரியம் என்றால் அப்போதைக்கு சண்டையில்லாமல் குடும்பம் ஒன்று சேர்ந்திருந்தால் வீடு நிரம்பி வழியும். பெரியக்கா கல்யாணத்திலும், பின் ஆச்சி இறந்த போதும், கடைசியாக அம்மா இறந்த போதும்தான் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்குமே கிட்டியது. பெரியவர்கள் அவர்களின் பரம்பரைச் சொத்தான ‘நான்’ என்கிற நினைப்பையும், வறட்டுப் பிடிவாதத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஏதேதோ காரணங்களுக்காக ஆளாளுக்கு முகம் பார்க்காமல் வீஞ்சிக்கொண்டு உர்ரென்று நடமாட, பிள்ளைகள் நாங்கள் சந்தோஷமாகக் கூடி மகிழ்ந்திருந்ததை இப்போதெல்லாம் நினைத்துப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. ஆச்சியின் பிணத்தின் முன் தேவாரம், திருவாசகம் படிக்கப் பட்டது. எடுக்க நேரம் ஆகும் என்று தெரிந்தவுடன் சின்னப்பிள்ளைகள் நாங்கள் விளையாடப் போய்விட்டோம். நான் மட்டும் அவ்வப்போது விளையாட்டிலிருந்து விலகி ஆச்சி பக்கத்தில் போய் அவள் முகத்தைப் பார்த்து சிறிது நேரம் அழுதுவிட்டு பின்பு மறுபடியும் விளையாட்டில் சேர்ந்து கொள்வேன். ஆச்சியிடமே வளர்ந்தவன் இது கூட செய்யவில்லையென்றால் எப்படி?

இப்போதெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. எனக்கு மிகவும் நெருக்கமான நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றோருக்கு இரண்டு குழந்தைகள். எனக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு. இந்தப் பயலுக்கு போகோ சேனலை விட்டால் வேறு போக்கிடமே இல்லை. இவன் விளையாட, உடன் வளர இன்னொரு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலேயே இல்லை. சமயத்தில் இவன் ஒருவனை சமாளிக்கவே 100க்கு ஃபோன் பண்ண வேண்டியுள்ளது. இதில் இன்னொரு பிள்ளையைப் பற்றி எங்கிருந்து யோசிக்க. தகப்பனாரின் தலைமுறையில் நிறைய சகோதர சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்தவர்கள், அற்பகாரணங்களுக்காக இப்போது பேச்சுவார்த்தையின்றி யாரோ மாதிரி வாழ்வதைப் பார்த்து மனசு வெறுத்துப் போனதினால் ஒரு வேளை போதுமய்யா ஒரு குழந்தை என்று தோன்றிவிட்டதோ என்னவோ. சமீபத்தில் ஒரு திருமணத்தில் எனது பெரியண்ணனை என் மகனுக்கு, ‘இவன்தான் உன் பெரியப்பா’ என்று அறிமுகப்படுத்தி வைக்கும் அவலநிலைக்கு ஆளானேன். கண்கலங்கியபடியே ‘எல அய்யா’ என்று தன் தம்பி மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான் அண்ணன். பெரியவர்களின் தேவையில்லாத வீம்பு குணத்தினால் ஒன்று விட்ட சகோதரர்களாகிய நாங்கள் ஒருவரையொருவர் மறந்தே போனோம். ஃபாஸிலின் ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் போது விடுமுறைக்கு ஒன்று கூடிய குடும்ப கலாட்டாகாட்சிகளில் திரையரங்கம் முழுவதும் கைதட்டி சிரித்து மகிழ்ந்த போது என்னையறியாமல் நான் அழுதேன். என் அண்ணன்களும், அக்காக்களும் அவரவர் ஊர்களில் நிச்சயம் அழுதிருப்பார்கள்.

ஒன்றாம் வகுப்பிலிருந்தே என்னுடன் ஒன்றாக படித்த என் ஆருயிர்நண்பன் குஞ்சு என்கிற குஞ்சரமணியின் தாத்தா குருசாமி தீக்ஷிதர் 94 வயது வரை வாழ்ந்தார். எட்டயபுரம் அரண்மனையின் ஆஸ்தான ஜோஸியர் அவர். அவரது பெரியம்மா மகனான சுப்பையாவை அவன் வாழ்ந்த காலத்தில் அவர் கண்டுகொள்ளவே இல்லை. சிறிய வயதிலேயே வறுமையில் இறந்து போன தன் அண்ணன் சுப்பையாவைப் பற்றி அவருக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயமும் இல்லை. ‘யார் பேச்சையும் கேக்காம சும்மா ஒதவாக்கரையா சுத்திண்டிருந்தான்’ என்கிற அளவில் மட்டுமே அவர் சுப்பையாவைப் பற்றிப் புரிந்து வைத்திருந்தார். மேதைகள் மறைந்த பின்னர் அவர்தம் அருமைகளைத் தெரிந்து கொள்ளும் பழக்கத்திற்கு ஆளான தமிழ்ச் சமூகம் சுப்பையா காலமான பிறகு அவர் பெருமைகளை அறிந்து கொண்டது. அவர் எழுதிய கவிதைகள் அனைத்துமே மேன்மையானவை என்றது. ஊரெங்கும் சுப்பையாவின் சிலைகளை நிறுவி அதன் கீழ் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று பெயர் பொறித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் அரசாங்கம் அவரது குடும்பத்தை கெளரவித்த போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் பொன்னாடை போர்த்திக் கொண்டு குருசாமி தீக்ஷிதர் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து பவ்யமாக நின்றார். தன் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை நண்பன் குஞ்சு, என்னதான் தன் தாத்தாவாக இருந்தாலும், ‘பாத்தியா, அவாள் போஸ’ என்று இன்றைக்கும் கேலியாகச் சொல்லிக் காட்டுவான்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை எட்டயபுரத்திலேயே கழித்த குருசாமி தாத்தா அவ்வப்போது திருநெல்வேலி அம்மன் சன்னதியில் உள்ள குஞ்சுவின் வீட்டுக்கு வருவார். குஞ்சுவின் வீடு குறுகலாக நீளமாக இருக்கும். வீட்டுவாசலிலிருந்து பார்க்கும் போது தூரத்தில் சப்பரத்திலுள்ள சாமி மாதிரி தாத்தா மங்கலாகத் தெரிவார். ஆனால் அவர் போடும் சத்தம் மட்டும் இரைச்சலாக வீடு முழுதும் கேட்கும். குருசாமி தாத்தா சிரித்து நான் பார்த்ததில்லை. அவருக்கு சிரிக்கத் தெரியுமா என்ற சந்தேகத்தை குஞ்சுவிடமே கேட்டிருக்கிறேன். ஒரே ஒரு தடவை அவர் சிரித்து தான் பார்த்திருப்பதாக குஞ்சு சொன்னான். தனது 94ஆவது வயதில் குருசாமி தாத்தா கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். பொதுவாக அவருக்கு கோபமே வராது. சோற்றில் உப்பில்லையென்றால் சாப்பிடும் இடத்திலேயே காறித் துப்புவார். மற்றபடி சாந்த சொரூபி. இப்படிப்பட்டவர் கீழே விழுந்துவிட்டால் வீடு என்ன ஆகும். தாத்தாவை படுக்கையில் போட்டார்கள்.அவருக்குத் தெரியாது அதுதான் தனது மரணப் படுக்கையென்று. திருநெல்வேலியின் புகழ்பெற்ற எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் பண்டாரவிளை நாடார் வரவழைக்கப்பட்டார். முட்டைப்பத்து போடப்பட்டது. தாத்தாவுக்கு படுக்கையிலேயே எல்லாம் ஆரம்பமானது. மருமகள்கள் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மாமனாரைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனாலும் நித்தமும் அர்ச்சனைதான்.

ஹார்ளிக்ஸ் எங்கெடி.?

அதத்தானேப்பா குடிச்சிட்டிருக்கேள்!

தூ . . . ஒங்களெல்லாம் அருவாமனயால வெட்டணும்.

கையால் வெட்டுவது போல் சைகை செய்வார். குஞ்சுவின் அம்மாவும், பெரியம்மாவும் என்னிடம் ‘எல பாத்தியா, இதுக்கு என்ன பண்றது நீயே சொல்லு’ என்பார்கள். மெல்ல, மெல்ல எல்லா இயக்கங்களும் செயலிழக்கத் தொடங்கி தாத்தா அடங்கினார். கடைசி வரை அவருக்கு கால் எலும்பு முறிவுக்கான கட்டு போடப்பட்டு வந்தது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் கட்டு பிரித்து புது கட்டு போடும் போது நான்தான் உதவிக்கு நின்றேன். நான் அவர் காலை தூக்கிப் பிடித்துக் கொள்ள பண்டாரவிளை நாடார் பரபரவென்று கட்டு போட்டார். போடும் போதே என்னிடம் பெரியவரை பற்றி விசாரிப்பு.

சாமிக்கு ஒரு தொன்னூறு வயசு இருக்குமா?

தொன்னூத்தி நாலு.

ஏ . .யப்பா . . அந்த காலத்து உடம்பு . சாமிக்கு மொத்தம் எத்தனை பிள்ளைய?

பதிமூணு

பதி . .மூணா . . . சாமி என்ன தொளில் பண்ணிக்கிட்டிருந்தா ?

அதான் சொல்லிட்டேனே.

உச்சிமாளி

மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைனி மஹாகாளி எப்படி திருநெல்வேலி வந்து சேர்ந்தாள் என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் அனேகமாக எல்லாத் தெருக்களிலும் ஒரு உஜ்ஜைனி மஹாகாளி கோயிலைக் காணலாம். ஆனால் உஜ்ஜைனி மஹாகாளியை உச்சினிமாகாளியாக்கி, பின் தாம் சொல்வதற்கு சௌகரியமாக உச்சிமாளியாக்கிக் கொண்டார்கள் நெல்லைவாசிகள். (திருநெல்வேலியை திருநவேலியாக்கியது போல) நூறாண்டுகளுக்குள்தான் உச்சிமாளி நெல்லை வந்து சேர்ந்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்து அம்மன் சன்னதியில் ஒரு உச்சிமாளி, கீழப்புதுத்தெருவில் ஒன்றுக்கு இரண்டு, தாமிரபரணி ஆற்றுக்குப் போகும் வழியில் திருப்பணி முக்கில் மற்றொருத்தி. பெரும்பாலும் பிராமணர்களல்லாதவரே உச்சிமாளி கோயில் விசேஷங்களில் கலந்து கொள்வர். குறிப்பாக வேளாளர்கள். அதற்காக பிராமணர்கள் உச்சிமாளியைக் கும்பிட மாட்டார்கள் என்றில்லை. போகிற போக்கில் உச்சிமாளியைப் பார்த்து ‘சௌக்கியமா’ என்று கேட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.

ஒவ்வொரு உச்சிமாளிக்கும் ஒரு சாமிகொண்டாடி உண்டு. பூசாரியும் உண்டு. கீழப்புதுத்தெரு உச்சிமாளியை கிருஷ்ணபிள்ளைதான் போஷித்து வந்தார். கிருஷ்ணபிள்ளையின் பெரிய தொந்திக்கு நடுவே உருண்டையாகக் கோலிக்காய் சைஸில் தொப்புள் இருக்கும். காய்ச்சல், மன உளைச்சல், வாந்தி பேதி, பேய் பிடித்தல் இவை எல்லாவற்றிற்கும் கிருஷ்ணபிள்ளையிடம் மருந்து உண்டு. முனிசிபாலிட்டிக் குழாயில் பிடித்து சொம்பில் வைத்திருக்கும் அசல் தாமிரபரணித் தண்ணீர்தான் அந்த மருந்து. சொடக்கு போட்டுக் கொண்டே ஒரு பெரிய கொட்டாவியை விட்டு புளீரென நோயாளியின் முகத்தில் செம்பிலிருந்து உள்ளங்கையில் சாய்த்த தண்ணீரை எறிவார். எல்லா வியாதியும் அந்தத் தண்ணி எறிதலில் ஓடிப் போகும். கிருஷ்ணபிள்ளைக்குப் பிறகு, அவள் மகளைக் கட்டின மருமகன், மாமனார் மாதிரியே தண்ணி எறிந்து வந்தார். கிருஷ்ணபிள்ளைக்கு நினைத்த மாத்திரத்தில் கொட்டாவி வரும். தன் மாமனார் போல எவ்வளவோ முறை முயன்றும் மருமகனுக்கு கொட்டாவிக்கு பதில் இருமல்தான் வந்தது. அவர் அளவுக்கு இவர் எறிதல் அவ்வளவு சுகமில்லை என்பதால் கீழப்புதுத் தெரு மக்கள் ராதாகிருஷ்ணன் டாக்டரிடம் போய்க் காட்டி ஊசி போட்டுக் கொண்டார்கள். இப்போது கிருஷ்ண பிள்ளையின் பேரன் தண்ணி எறிகிறான். தாத்தாவைப் போலவே இவனும் பெரிய தொந்திக்காரன். அந்த கோலிக்காய் தொப்புள்தான் இல்லை.

ஆற்றுக்குப் போகும் வழியில் உள்ள உச்சிமாளியை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டவர் பரமசிவம் பிள்ளை. அவர்தான் பூசாரி, சாமி கொண்டாடி, தர்மகர்த்தா எல்லாமே. கொடை விழாவின் போது தீச்சட்டியும் அவரே எடுத்து வலம் வருவார். உச்சிமாளியின் பிரதம பக்தரான பரமசிவம் பிள்ளைக்கு லட்சுமி தியேட்டர் பக்கம் ஒரு ஆசை நாயகி இருப்பதாக ஒரு பேச்சு உண்டு. அந்தப் பெண்மணி, முனிசிபாலிடியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்யும் பேச்சியம்மை என்பதும் மற்ற பக்தர்கள் பொருமிக் கொண்டே அன்றாடம் கிசுகிசுக்கும் விஷயம். அவர்களது ரகசிய உறவு ஒரு கொடையின் போது வெளிச்சத்துக்கு வந்தது. மீனாட்சிதான் விவரம் சொன்னான்.

‘சித்தப்பா, பரமசிவம் பிள்ளை வைப்பாட்டி நம்ம கோயில் கொடைல வந்து முன்வரிசைல நின்னுட்டா கேட்டேளா! பொம்பளையள்ளாம் முணுமுணுன்னாளுவொ. அவ ஒருத்தரைப் பத்தியும் கவலப்படாம பிள்ளைவாள் சாமியாடிக்கிட்டிருக்கும் போது அவாள் களுத்துல முறுக்கு மாலை போட்டுட்டா.’

‘பெரிய பிரச்சனையாயிருக்குமேலெ? பிள்ளைவாள் கேவலப்பட்டிருப்பாரே!’

‘நீங்க வேற . . பரமசிவம் பிள்ளையைப் பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அவர் மண்டக்காரரு . . . வெவரமா சமாளிச்சிட்டாரு.’

‘அப்படி என்னல பண்ணினாரு?’

‘முறுக்கு மாலையில இருந்து ஒரு முறுக்கை எடுத்து கடுக்கு மொடுக்குன்னு கடிச்சு தின்னு எல்லார் வாயிலெயும் மண்ணப் போட்டுட்டாருல்லா.’

அம்மன் சன்னதி உச்சிமாளி எங்கள் வீட்டுக்கு நேரெதிரில் இருக்கிறாள். நான் சிறுவனாக இருந்த போது உச்சிமாளிக்கு முகம் மட்டுமே இருந்தது. அதன் பிறகு எங்கள் பெரியப்பாவின் முயற்சியால், வெங்கடாசல ஸ்தபதியின் கரங்களினால் உச்சிமாளிக்கு உடம்பு கிடைத்து இப்போது இருப்பவள் முழு உச்சிமாளி. பிறகு கோயிலைச் சுற்றி நிறைய சிற்பங்கள் அமைத்து வண்ணம் பூசினார்கள். அவற்றில் ஒன்றாக இடுப்பு வளைந்த முருகப்பெருமான் கொஞ்சம் கவர்ச்சியாக நிற்பார். அப்போதெல்லாம் உச்சிமாளிக்கு ‘குருக்களையாத் தாத்தா’ என்று நாங்கள் அழைக்கும் கோமதிநாயக தேசிகர்தான் பூஜை பண்ணி வந்தார். உச்சிமாளி கோயிலுக்கு முன்னால் முன்னங்கால்களை மடித்து அமர்ந்த நிலையில் ஒரு கருப்பு சிங்கமும், பளபளவென எண்ணெய்ப் பிசுக்குடன் வட்டமான ஒரு பீடமும் உண்டு. குருக்களையாத் தாத்தா அந்த பீடத்தில்தான் உச்சிமாளிக்கான நைவேத்தியத்தை வைப்பார். தாத்தா நைவேத்தியத்தை வைப்பதற்கு முன் உச்சிமாளி காத்திருப்பாளோ இல்லையோ, பேராச்சியக்காள் வளர்த்த ‘ஜம்பு’ என்ற குட்டைக் கருப்பு நாய் காத்து நிற்கும். நைவேத்தியத்தை தாத்தா பீடத்தில் வைத்த மறு நிமிடம் ஜம்பு ஜம்மென்று பீடத்தில் ஏறி நைவேத்தியத்தை நக்கி சாப்பிடும். ஜம்புவின் நாக்கினால் பீடமும் சுத்தமாகிவிடும். ஆரம்பத்தில் ஜம்புவை நைவேத்தியம் சாப்பிட விடாமல் எல்லோரும் விரட்டி வந்தார்கள். நான்கைந்து பேரின் தொடைகளை ஜம்பு பதம் பார்த்தது. விளைவு, கோயிலிலேயே ஒரு நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும் ஆரம்பப் பள்ளியாசிரியரான வள்ளிநாயகம் ஸார்வாள் ‘உச்சிமாளியேல்லா நெதமும் சாப்பிட வாரா’ என்று சொல்லி ஜம்பு என்கிற ஆண் நாயை உச்சிமாளியாக்கினார். வேறு வழியில்லாமல் ஜம்பு என்ற உச்சிமாளியை நைவேத்தியத்தை சாப்பிட அனுமதித்தார். கடைசியாக அவர்தான் ஜம்புவிடம் கடிபட்டிருந்தார்.

வள்ளிநாயகம்பிள்ளை எப்போதுமே படபடப்புடன் இருப்பார். பள்ளி விட்டு வந்தவுடன் வீட்டுக்குப் போய் காபி குடித்துவிட்டு கோயிலுக்கு வந்துவிடுவார். வேக வேகமாகவே எல்லா காரியங்களையும் செய்வார். ஞாயிற்றுக்கிழமையன்று கூட ஓய்வெடுக்க மாட்டார். கேட்டால் ‘அவ எங்கெ நம்மள வீட்டுல இருக்க விடுதா’ என்று உச்சிமாளியைச் சொல்வார். சாமிகொண்டாடி அருணாசலம் பிள்ளையும் இப்படித்தான். நாவல்டி ரெடிமேட்ஸில் துணி கிழிக்கும் வேலை செய்யும் அவரும் கடை அடைத்து வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு நேரே உச்சிமாளி கோயில்தான். (இதே போல் சென்னை வடபழனி பாஷா பேப்பர் மார்ட்டில் இன்றைக்கும் வேலை செய்யும் வேம்பு அண்ணன், பங்குனி மாதம் நடைபெறும் கீழப்புதுத் தெரு உச்சிமாளி கோயிலின் கொடைவிழாவில் சாமி ஆடுவதற்காக எப்படியாவது திருநெல்வேலி சென்று விடுவான்.) அருணாசலம் பிள்ளைக்கு முன்பல் பாதி உடைந்திருக்கும். சாமி வந்து ஆடும் போது அவர் அந்தப் பல்லை இளித்து நாக்கைத் துருத்திக் கொண்டு முறைப்பார். அப்போது உச்சிமாளியே வந்து ஆடுவது போல இருக்கும். குழந்தைகள் பயப்படுவர். ஆடும் போது குறியும் சொல்லுவார். ஆசிரியர் வள்ளிநாயகம் ஸார்வாள் க்கு பத்து வயதில் ஒரு பெண் இருந்தாள். அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டி உச்சிமாளியிடம் கோரிக்கை வைத்தார். உச்சிமாளியும் ஒரு கொடையின் போது சாமி கொண்டாடி அருணாசலம் பிள்ளை ரூபத்தில் வந்து ‘அடுத்த வருடம் உனக்கு ஆண்பிள்ளை பிறக்கும்’ என்று குறி சொன்னாள். அடுத்த வருடம் வள்ளிநாயகம் ஸார்வாளுக்கு ராஜலட்சுமி பிறந்தாள். மனம் தளறாமல் பிள்ளைவாள் மேலும் முயல அதற்கு அடுத்த வருடம் காந்திமதி அவதரித்தாள். அதன் பிறகு வள்ளிநாயகம் ஸார்வாள் குறி கேட்பதை(யும்) நிறுத்தினார்.

தீச்சட்டி எடுத்து வலம் வரும் போது தெருவே நின்று வணங்குவதால் அருணாசலம் பிள்ளை கம்பீரமாக நடந்து வருவார். உடம்பெங்கும் மாலைகள். வீட்டுக்கு வீடு அவரை நிறுத்தி உடலிலும், காலிலும் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றுவார்கள். மற்ற நேரமென்றால் பிள்ளைவாளுக்கு ஜன்னி வந்துவிடும். அப்படி ஒன்றும் அவர் பலசாலியல்ல. ஆனால் ஊரே தன்னை வணங்கும் தெம்பில் அவர் உடம்பு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும். அதுவும் அவரைவிட வயதில் மூத்தவர்கள், வசதி படைத்தவர்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் காலில் விழுந்து எழுந்திருப்பார்கள். நாவல்டி ஸ்டோர்ஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சாதாரண ஊழியரான பிள்ளைவாள் அவர் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் அடைவது அந்த சொற்பத் தருணத்தில்தான். அன்று அவர் மனம் அடைந்த நிறைவை அவரது முகம் நமக்குக் காட்டும்.

அருணாசலம் பிள்ளை சாமியாடும் போது அவருக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ரைஸ்மில்லில் வேலை செய்த நடராஜனும் ஆடி வந்தான். இவர்கள் ஆடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் காசியா பிள்ளையின் மகன் பிச்சையாவும் இருந்தான். பிச்சையாவுக்கு அருகில் இருந்த வின்ஸென்ட் கண்ணன் சமயம் பார்த்து பிச்சையாவை சாமி ஆடும் இடத்துக்குள் தள்ளி விட, குப்புற விழுந்த அவமானத்தை சமாளிக்கும் விதமாக உடனே எழுந்து பிச்சையா கண்டபடி ஆடினான். அருணாசலம் பிள்ளை பிச்சையாவை உச்சிமாளிதான் கொண்டு வந்து தன்னிடம் சேர்த்திருப்பதாக அறிவித்தார். பிச்சையாவின் சட்டை பறிக்கப் பட்டது. உடம்பெங்கும் சந்தனம் அள்ளிப் பூசப்பட்டு கையில் மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. அன்றிலிருந்து பிச்சையாவும் சாமி கொண்டாடி ஆனான்.

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு திருநெல்வேலி போயிருந்தேன். அம்மன் சன்னதியில் நானும், குஞ்சுவும் நடந்து செல்லும் போது தன் வீட்டு வாசலில் தளர்ந்து உட்கார்ந்திருந்த அருணாசலம் பிள்ளையைப் பார்த்தேன். அருகில் போய், ‘தாத்தா, சும்மா இருக்கேளா’ என்றேன். காற்றில் கைகளை அலைய விட்டு, ‘யாரு, பெரிய வீட்டுப் பேரப் பிள்ளையா? மெட்ராஸில இருந்து வந்திருக்கேரா? பேத்தி சும்மாருக்காளாவே?’ என்று குஞ்சு இருந்த திசை பார்த்து கேட்டார். அருணாசலம் பிள்ளைக்கு கொஞ்ச நாட்களாகவே கண்பார்வை சரியில்லை என்றார்கள். நாவல்டி ரெடிமேட்ஸிலும் கணக்கு முடித்து அனுப்பி விட்டார்களாம். வீட்டிலேயேதான் இருக்கிறார். சாயங்காலமானால் வீட்டு வாசலில் இப்படி உட்காருவதோடு சரி.

‘இவாளாவது பரவாயில்லெ. வள்ளிநாயகம் ஸார்வாள் வெளியவே வாரதில்ல. அப்படியே வாரதா இருந்தாலும் கம்பு ஊனிக்கிட்டுதான் வாரா’ என்றான் குஞ்சு.

இப்போது உச்சிமாளி கோயிலைச் சுற்றி மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலில் முகம் தெரியாத புதியவர் கூட்டம். நிறைய உபய விளம்பரங்கள். மைக் ஸெட், வண்ண வண்ண விளக்குகள் என ஏக தடபுடல். ஆடம்பர அலங்காரத்தில் உச்சிமாளியே அடையாளம் மாறியிருக்கிறாள். வயதாகிவிட்டதாலோ என்னவோ அருணாசலம் பிள்ளையையும், வள்ளிநாயகம் ஸார்வாளையும் அவள் தொந்தரவு செய்வதில்லை.

(அ)சைவம்

இன்றைக்கும் நான் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, ‘திரைப்படத்துறையில் இருந்து கொண்டு எப்படி நீங்கள் சைவமாக இருக்கிறீர்கள்?’. திரைப்படத்துறையில் நுழையும் போதே அசைவ உணவு சாப்பிடவும், மது அருந்தவும், எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிற மற்றொன்றை பழகவும் வகுப்பெடுப்பார்கள் என்றே பலரும் நம்புகிறார்கள். திரைத்துறையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலரும் நான் சைவ உணவுக்காரன் என்பதை ஆச்சரியமாக பார்ப்பார்கள். எனது வாத்தியார் பாலு மகேந்திராவும் கேட்டிருக்கிறார். அவரது சந்தேகம் கொஞ்சம் அதிகம்தான். ‘ஒரு மனிதன் சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா என்ன?’. புதுச்சேரியில் அவருக்காக நல்ல அசைவ உணவைத் தேடி நாங்கள் இருவருமே நள்ளிரவில் அலைந்து கண்டுபிடித்த ஒரு உணவுவிடுதியில் அவர் மீனையும், நான் பழச்சாறையும் அருந்தும் போது இதை கேட்டார்.

பொதுவாக அசைவம் உண்பவர்கள் அந்த உணவின் மீது எந்த அளவுக்கு பிரியம், காதல், வெறி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தாலே அதிலும் கலோரி இருக்கிறது உடம்புக்கு ஆகாது என்று அநியாயத்துக்கு மற்றவர்களை பயமுறுத்துகிற நண்பர் ஜெயமோகனை சிக்கன் பெயரைச் சொல்லி ஏழிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை நடத்தியே கூட்டிச் சென்றுவிடலாம். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் திடீரென்று தானும் என்னை போலவே சைவமாகிவிட்டதாக சொன்னார்.அசைவம் சாப்பிட்டு சலித்துவிட்டதனாலேயே சைவத்துக்கு மாறிவிட்டதாகக் காரணமும் சொன்னார். ‘சரி, எத்தனை நாட்களுக்கு சைவமாக இருப்பீர்கள், உங்கள் மேல் நம்பிக்கை இல்லையே’ என்றேன். ‘அது என் கையில் இல்லை. சைவ உணவு வகைகளின் கைகளில் உள்ளது. என்னை திருப்தியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவைகளின் பொறுப்பு’ என்றார். சரியாக ஒரு மண்டலத்தில் சைவ அணியிலிருந்து கௌரவமாக விலகி தாய்க் கழகத்துக்கே திரும்பி விட்டார்.

சைவம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அசைவம் உண்பவர்கள் அருகில் உட்கார்ந்து உணவருந்துவதில் எனக்கு எந்த சிக்கலுமில்லை. அதற்கு காரணம் சிறுவயதிலிருந்தே அசைவம் சாப்பிட்டு வருகிற நண்பன் குஞ்சுதான். திருநெல்வேலியில் குஞ்சு போய் விரும்பி அசைவம் சாப்பிடும் கடையின் பெயர் ‘வைர மாளிகை’. திருநெல்வேலி சைவ வேளாளர்கள் மற்றும் குஞ்சுவைப் போன்ற சுத்தமான பிராமணர்களின் ஏகோபித்த ஆதரவினால் வைர மாளிகைக்கு இப்போது பாளையங்கோட்டையில் ஒரு கிளை திறந்துவிட்டனர்.

எனக்கு தெரிந்து திருநெல்வேலியிலும், இலங்கையிலும் மட்டுமே ‘சொதி’ என்னும் குழம்பு உள்ளது. முழுக்க முழுக்க தேங்காய்ப் பாலில் தயாராகும் சொதி, திருநெல்வேலி சைவ வேளாளர் வீட்டுத் திருமணங்களில் தவறாமல் இடம்பெறும். திருமணத்துக்கு மறுநாள் மறுவீட்டுப் பந்தியில் சொதி பரிமாறப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ‘அதென்ன, கல்யாணத்துக்கு வந்துட்டு சொதிச் சாப்பாடு சாப்பிடாம போறிய?’ என்று திருமண வீட்டார் உறவினர்களிடம் சொல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதற்கு வெள்ளைவெள்ளேரென்று காணப்படும் சொதியில் கேரட், உருளைகிழங்கு மற்றும் முருங்கைக்காய் போட்டிருப்பர் . தொட்டுக் கொள்ள கண்டிப்பாக இஞ்சிப் பச்சடி உண்டு. அப்போதுதான் சொதி ஜீரணமாகும். சென்னைக்கு வந்த புதிதில் எழுத்தாளர் வண்ணநிலவன், வாத்தியார் இருவருடனும் சென்று சரவணபவன் போய் இடியாப்பமும், சொதியும் சாப்பிட்டிருக்கிறேன். (வண்ணநிலவன் ‘ சொதி ‘ என்ற தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியுள்ளார்). வாத்தியார் எனக்காக ஒருமுறை வீட்டில் அவர் துணைவியாரை சொதி வைக்கச் சொன்னார். ஆசையுடன் சாப்பிடப் போனேன். ஆனால் சாப்பிடத்தான் முடியாமற்போயிற்று. அகிலா அம்மையார் நன்றாகத்தான் சொதி வைத்திருந்தார்கள். இரண்டே இரண்டு மீன் துண்டுகளை அதில் போட்டிருந்தார்கள்.

அசைவ உணவுவகைகளின் மத்தியில் அமர்ந்து சைவம் சாப்பிடுவதில் சங்கடப்படாத என்னால் மீனின் வாடையை மட்டும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சாலிகிராமத்தில் ஒரு மீன் மார்க்கெட் உள்ளது. அதை கடந்து செல்லும் போதெல்லாம் எனக்கு குமட்டிக் கொண்டுவரும். முன்பெல்லாம் அதைத் தாண்டி செல்லும் போது கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு, முகத்தையும் வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விறுவிறுவெனச் செல்வேன். இப்போது அப்படி செல்வதில்லை. காரணம், ஒரு முறை அப்படி செல்லும் போது கவனிக்காமல் நேரே மீன் வாங்க வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் மீது மோதிவிட்டேன். பார்ப்பதற்கு கல்லூரிக்குச் செல்லும் நவநாகரீகத் தோற்றத்தில் இருந்த அந்தப் பெண், சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாங்கமே தாராளமாக அனுமதித்திருக்கிற பிரத்தியேக வசைச் சொல்லான அந்த மூன்றெழுத்து வார்த்தையை சொல்லி என்னை திட்டினாள். அதற்கு பதிலாக நான் போய் ஒரு கிலோ
மீனே வாங்கியிருக்கலாம்.

நண்பர் சீமானின் குழுவினர் அசைவம் உண்பதை கிட்டத்தட்ட ஓர் யாகம் போலவே செய்வர். பொழுது போகவில்லையென்றால் உடனே அசைவ விருந்துக்கு ஏற்பாடு நடக்கும். சமைப்பதற்கு ஒரு தெருவும், பின் சாப்பிடுவதற்கு ஓர் ஊரும் திரண்டுவரும். அவர் வீட்டுத் தோட்டத்தில் முதலில் ஒரு பெரிய அண்டா வந்து இறங்கும். பின் ஊர்வன, பறப்பன இத்யாதிகள். மீனுக்கு ஒரு இடம், ஆட்டுக்கு வேறு இடம், கோழிக்கு தனியாக மற்றொரு இடம் என்று தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளிலிருந்து எல்லாம் வந்து சேரும். சீமானே எல்லோருக்கும் தொலைபேசியில் அழைத்துச் சொல்வார். என்னிடம் ‘அய்யா மகனே . . உங்களுக்கு மட்டும் சிறப்பா சைவ உணவு தயாரா இருக்கு வந்திருங்க . ‘ என்பார். (சைவ உணவு என்றால் வேறொன்றுமில்லை. கொஞ்சம் அப்பளம் பொரித்திருப்பார்கள். அவ்வளவுதான்). மற்றவர்களுக்கு ‘மறக்காம மதிய உணவுக்கு வந்திருங்க. இன்னிக்கு நம்ம வீட்டுல உப்புக்கறி’. மேற்படி உப்புக்கறி வைப்பதில் சீமானின் தம்பிமார்களில் ஒருவனான ஜிந்தா நிபுணன். பார்ப்பதற்கு செக்கச்சிவப்பாக இருக்கிற அந்த உப்புக்கறியை கண்கலங்க மூக்கைத் துடைத்துக் கொண்டே அனைவரும் உண்டு மகிழ்வர். அமரர்கள் ஏவி.மெய்யப்பச் செட்டியார், எல்.வி.பிரசாத், நாகிரெட்டியார் போன்ற பெரியவர்களைத் தவிர சீமான் வீட்டு உப்புக்கறியை ருசி பார்க்காத திரையுலகப் பிரபலங்களே இல்லை எனலாம்.

இன்னதானென்றில்லாமல் என்னவெல்லாமோ சீமானின் வீட்டில் சமைக்கப்படும். கௌதாரிப் பறவையிருந்து பன்றி வரை அவர்கள் மெனுவில் வஞ்சகமில்லாமல் எல்லா உயிரினத்துக்கும் இடமுண்டு. ஒரு முறை கேட்டேன்.

‘ஏன் அராஜகம் . . எல்லா எளவையும் சாப்பிடுறியளே. . . விதிவிலக்கே கிடையாதா’. .

‘என்ன இப்படி கேட்டுட்டியெ அய்யா மகனே . . மனுசக் கறி சாப்பிடுறதில்லையே . . . சட்டப்படி தப்புங்குற ஒரே காரணத்துக்காகத்தானே இவனையெல்லாம் விட்டு வச்சிருக்கோம் . . . வெட்டி சாப்புட்டா தம்பி நல்லாத்தான் இருப்பான்’ . .

படுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஜிந்தாவைப் பார்த்து சொன்னார். அடுத்த வாரத்தில் ஜிந்தா தன் ஜாகையை மாற்றிக் கொண்டான்.

அசைவப் பிரியரான நண்பர் செழியனை சீமானின் விருந்தோம்பல் ஒருமுறை தலைதெறிக்க ஓட வைத்தது. காலையில் சீமானை சந்தித்துவிட்டு கிளம்பிய செழியனிடம் சீமான் அன்பொழுகச் சொல்லியிருக்கிறார்.

‘செல்லம் . .. மதியம் சாப்பிட வராம போயிறாதீய . . . உங்களுக்காக கொரங்கு

வத்தல் வறுக்கச் சொல்லியிருக்கேன்’.

சந்திராவின் சிரிப்பு

திருநெல்வேலியில் நான் இருக்கும் வரை எந்த சினிமாவுக்குப் போவது என்பதிலிருந்து எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்பது வரை எல்லாவற்றையும் எப்போதுமே குஞ்சுதான் முடிவு செயவான். பதின்வயதின் இறுதியில் ஓர் இலக்கில்லாமல் கண்ணில் தென்படுகிற பெண்களையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்தோம். இப்படியே போனால் சரியில்லை என்று ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் காதலிக்கத் தொடங்குவோம் என்றான் குஞ்சு. அப்படி அவன் தேர்ந்தெடுத்த பெண்தான் சந்திரா. சந்திரா எங்கள் காதலியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை குஞ்சு என்னிடம் சொன்னவுடனேயே நான் அவளைப் பார்க்கத் துடித்தேன். ‘அவசரப்படாதே, சாயங்காலம் நாலரை மணிக்கெல்லாம் எங்க வீட்டு வாசல்ல நிப்போம். கரெக்டா க்ராஸ் பண்ணுவா. அப்போ காட்டுதென்’ என்றான். சொல்லிவைத்த மாதிரி சரியாக நாலரை மணிக்கு கல்லணை ஸ்கூல் இள,கருநீல பாவாடை தாவணி யூனி·பார்மில் இரட்டை ஜடை போட்டு சிரித்தபடியே நடந்து வந்த சந்திராவை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன். இருந்தாலும் இந்த முறை பார்த்த போது காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருந்தது. இருந்தாலும் அவள் இனிமேல் எங்கள் காதலி அல்லவா? கோதுமை நிறத்திலிருக்கும் அவள் எங்களைக் கடந்து செல்லும் வரை ரொம்ப நாட்கள் பழகியவள் போல, கன்னத்தில் குழி விழச் சிரித்தபடியே சென்றாள். எனக்கு ஆரம்பமே நல்ல சகுனமாகத் தோன்றியது.

எங்கள் தெருவுக்கு மிக அருகில்தான் சந்திராவின் வீடு இருந்தது. இத்தனை நாளும் அந்த வீட்டை கவனிக்காமல் போனோமே என்றிருந்தது. ஆனாலும் கொஞ்சம் உதறல் எடுத்தது. காரணம், சந்திராவின் தகப்பனார் ராமையா பாண்டியன். அவர் ஒரு வஸ்தாது. கட்டப்பஞ்சாயத்துகளில் அதிக நேரம் செலவழிப்பவர். சொளவு சைஸில் கையில் பெரிய மோதிரம் போட்டிருப்பார். அதில் முத்தமிழறிஞர் சிரித்துக் கொண்டிருப்பார். ராமையா பாண்டியனுக்கும் அவரது ஆசைநாயகிக்கும் பிறந்த மகளே சந்திரா. அடிக்கடி சந்திராவின் வீட்டில் ஆசாரி வேலை நடந்து கொண்டிருக்கும். அவ்வப்போது ஒரு புது வாசற்கதவைப் பொருத்துவார் ஆசாரி. நள்ளிரவில் குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டும் ராமையா பாண்டியனுக்கு கதவைத் திறப்பதில்லை சந்திராவின் அம்மா. உடனே கதவை அடித்து நொறுக்கி உடைத்து உள்ளே சென்று விடுவார் ராமையா பாண்டியன். இத்தனைக்கும் அந்தக் கதவுக்கான சாவி அவர் சட்டைப்பையில்தான் இருக்கும்.

ராமையா பாண்டியனின் மகளை, அதுவும் அவர் ஆசைநாயகிக்குப் பிறந்தவளை நாம் காதலிப்பது நமக்கு சரிப்பட்டுவருமா என்று கவலையுடன் குஞ்சுவிடம் கேட்டேன். ‘காதல்ன்னு வந்துட்டா வேற எதப் பத்தியுமே யோசிக்கக் கூடாது’ என்றான். சரி நடப்பது நடக்கட்டும் என்று சந்திராவைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினோம். தினமும் காலையில் அவள் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பும் போது சரியாக அவள் வீட்டுக்கருகில் ஆளுக்கொரு சைக்கிளில் காத்து நிற்போம். நாளடைவில் நாங்கள் நிற்கிறோமா என்பதை சந்திராவே தேட ஆரம்பித்தது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. பின்னர் சைக்கிளை உருட்டியபடியே அவளுக்குப் பின்னாலேயே சென்று கல்லணை ஸ்கூல் காம்பவுண்ட் சுவர் வரை அவளை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு பிறகு சைக்கிளில் ஏறி நாங்கள் பள்ளிக்குச் செல்வோம். மாலையில் அவசர அவசரமாக பள்ளியிலிருந்து வேகமாக சைக்கிளை மிதித்து கல்லணை ஸ்கூல் பக்கம் மூச்சிரைக்கப் போய் நிற்போம். எங்களைப் பார்த்து சிரித்தபடியே சந்திரா வருவாள். அன்றைய இரவு இதைப் பற்றிய பல நினைவுகளோடு கழியும்.
சுமுகமாகச் சென்று கொண்டிருந்த எங்கள் காதலில் ஒரு வில்லன் புகுந்தான். அம்மன் சன்னதி பஜனை மடத்தில் சாய்ந்தபடி நானும், குஞ்சுவும் எங்கள் காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றிய தீவிரமான யோசனையில் இருந்தபோது லாரி ஓனர் சண்முகம் பிள்ளையின் மகன் மஹாதேவன் வந்தான். மஹாதேவன் பார்ப்பதற்குக் கொஞ்சம் போல்தான் ஆண் போல் இருப்பான். நடக்கும் போது ஆங்கில எழுத்து S போல ஒருமாதிரி வளைந்து நடப்பதால் அவனை S மஹாதேவன் என்றே அழைத்து வந்தோம். அவனது உண்மையான இனிஷியலும் S என்பதால் நாங்கள் அவனை கேலி செய்கிறோம் என்பதை அவன் உணர்ந்ததே இல்லை. நேரே எங்களிடம் வந்த S.மஹாதேவன் ‘ஏல, சந்திரா பின்னால சுத்துறத விட்டுருங்க’ என்றான். குஞ்சு எழுந்து நின்றான். ‘என்ன சொல்லுதெ’ என்றான். ‘நான் அவளுக்கு கவிதல்லாம் எளுதிருக்கென். அவளுக்கு என்ன ரொம்பப் புடிக்கும்’ என்று தொடர்ந்து சொன்னான். ‘இத எதுக்குல எங்கக்கிட்ட வந்து சொல்லுதெ’ என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டான் குஞ்சு. ‘எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைச்சேளோலெ. ஆள வச்சு உங்க ரெண்டு பேரையும் அடிச்சு போடுவேன்’ என்று S மஹாதேவன் சொல்லவும் குஞ்சு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். என் பங்குக்கு நானும் அவனை ஒரு அறை அறைய, எதுவும் பேசாமல் திரும்பிச் சென்ற S மஹாதேவன் கொஞ்ச தூரம் சென்று எங்கள் இருவருக்கும் இல்லாத எங்கள் மூத்த சகோதரிகளைத் திட்டிவிட்டு, ‘என்ன நடக்கப்போதுன்னு பொறுத்திருந்து பாருங்கலெ’ என்றான்.
இனிமேலும் நாம் தாமதிக்கக் கூடாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற குஞ்சு ஒரு வாழ்த்து அட்டை வாங்கினான். புதுவருட வாழ்த்து அட்டை அது. அதில் அழகாக தானும் கையெழுத்திட்டு, என்னையும் கையெழுத்து போடச் சொன்னான். ஸ்டைலாக என் பெயரை எழுதினேன். சந்திராவின் வீட்டு முகவரிக்கு போஸ்ட் பண்ணினோம். மறுநாளே அவளுக்குக் கிடைத்த விஷயம் எங்களுக்குத் தெரிய வந்தது. அன்று மாலை எங்களைக் கடந்து செல்லும் போது குவியலாக நாங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டையை எங்கள் முன்னே கீழே போட்டுவிட்டு எங்களைப் பார்த்து சிரித்துவிட்டும் சென்றாள் சந்திரா. நான் மனமுடைந்து போனேன். இந்த விஷயத்தில் எங்களுக்கு சீனியரான கணேசண்ணனிடம் போய் குஞ்சுவும்,நானும் கேட்டோம். ‘அட கூறுகெட்ட குப்பானுகளா! ஏல, அவ என்ன பாஞ்சாலியா, ரெண்டு பேரும் அப்ளிகேஷனப் போட்டா அவ என்னல செய்வா? கிளிச்சுதான் போடுவா’ என்றான் கணேசண்ணன். கணேசண்ணன் சொன்னதையும் விட வேதனையான விஷயம் அடுத்தமாதமே நடந்தது. வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு S மஹாதேவனுடன் சந்திரா ஊரை விட்டே ஓடிப் போனாள். பல ஊர்களில் சுற்றியலைந்து கொண்டிருந்த அவர்களை ஒருமாதிரியாக அவர்கள்வீட்டார் தேடி பிடித்தனர். சந்திராவின் படிப்பு நிறுத்தப்பட்டது. அடுத்த ஒருசில வருடங்களில் இருவீட்டாரின் சம்மதத்துடன் S மஹாதேவன் – சந்திராவின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. அன்று நாம் ஊரில் இருக்கக் கூடாது என்று என்னை குஞ்சு கன்னியாகுமரிக்கு இழுத்துச் சென்று விட்டான்.

கன்னியாகுமரியில் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்து கண்ணீர் விட்டபடி ‘வாள்க்கைங்கறது . . . .’ என்று ஆரம்பித்து ‘அந்தப் பிள்ள நம்மகூட எப்படியெப்படில்லாம் இருந்தா’ என்றான். அவள் எங்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லையே என்று குழம்பினேன். இன்னும் என்னவெல்லாமோ குஞ்சு உளறினான். எனக்கும் அழுகை பொங்கி பொங்கி வந்தது. கால ஓட்டத்தில் நான் சென்னைக்கு வந்துவிட, குஞ்சு அவனது தொழிலில் மும்முரமாக, இருவருக்குமே திருமணமாகி பிள்ளை பிறந்து ஏதேதோ நடந்து விட்டது. சென்ற வருடத்தில் திருநெல்வேலி சென்றிருந்த போது எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு ஒரு பெண்மணி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வர வர அந்த பெண் என்னையே பார்த்தபடி வருவதை உணர்ந்தேன். தன் குழந்தையை டியூஷன் அழைத்துச் செல்கிறாள் போலத் தெரிந்தது. என்னை நெருங்கவும் என் முகத்தைப் பார்த்து சிரித்தாள். சந்திராவேதான். அதே சிரிப்பு. அந்த கல்லணை ஸ்கூல் யூனிஃபார்மும், ரெட்டை ஜடையும் மட்டும்தான் இல்லை. நான் சந்தேகத்துடன் அவளது பார்வையைத் தவிர்த்து ஓரக்கண்ணால் பார்த்தேன். எவ்விதத் தயக்கமுமின்றி என்னைப் பார்த்து நன்றாக சிரித்தபடியே கடந்து சென்றாள். வீட்டுக்குள்ளிருந்து யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டேன். தெருமுனை திரும்பும் போது ஒரு முறை திரும்பி மீண்டும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள் சந்திரா. குஞ்சு அப்போது அவனது அலுவலகத்தில் இருந்தான். தாமதிக்காமல் உடனே அவனுக்கு ஃபோன் பண்ணினேன்.

‘எல, நம்ம சந்திரா என்னயப் பாத்துச் சிரிச்சுக்கிட்டே போனா’ என்றேன்.

‘எந்த சந்திரா?’ என்று கேட்டான் குஞ்சு.

பிரமநாயகத் தாத்தாவும், விஜயலலிதாவும்

சென்னைக்கு வந்த புதிதில் சாலிகிராமத்தின் காந்தி நகரில் குடியேறினேன். அம்மா அப்போது இருந்தாள். எங்கள் வீட்டோடு இன்று வரை இருந்து சமையல் வேலைகளை கவனித்துக் கொள்ளும் செல்வராஜ் அண்ணன் பரபரப்பாக சாமான்களை இறக்கி அடுக்க, வீட்டை சுத்தப்படுத்த, பால் காய்ச்ச என்று அம்மாவுக்கு ஒத்தாசையாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். நான் வழக்கம் போல சும்மா இருந்தேன். அந்த பெரிய வீட்டின் வாசலில் ஒரு நீள சிமெண்ட் பெஞ்ச் உண்டு. அதில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, கேட்டைத் திறந்து கொண்டு ஒரு பெரியவர் ‘உள்ள வரலாமா?’ என்று கேட்டபடி நின்று கொண்டிருந்தார். யாரென்றே தெரியாத அவரை ‘வாங்க வாங்க’ என்றழைத்தபடி எழுந்து நின்றேன். அடிப்பிரதட்சணம் செய்வது போல் நடந்து என்னருகில் வந்தார். உடல்நலமில்லாதவர் என்பது தெரிந்து, ‘உக்காருங்க’ என்றேன். ‘நாராயண நாராயண’ என்று முனகியபடி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

நெற்றியில் காய்ந்து அழிந்திருந்த திருநீறு திட்டு திட்டாக ஒட்டியிருந்தது. முழுக்கைச் சட்டையை மடிக்காமல் பட்டன் போடாமல் விட்டிருந்தார். கறுப்பாக, குட்டையாக இருந்தார். முகத்திலும், தலையிலும் ஒருசில முடிகளே. களைப்பாக மூச்சு வாங்கியபடி இருந்ததால் அவராகப் பேசட்டும் என்று அமைதியாக அவரைப் பார்த்தபடி இருந்தேன். கொஞ்ச நேரம் குனிந்தே அமர்ந்திருந்தவர், சற்று நேர ஆசுவாசத்துக்குப் பின் நிமிர்ந்து என் முகம் பார்த்து சிரித்தபடி பேச ஆரம்பித்தார். ‘அம்மன் சன்னதி பெரிய வீட்டுப் பிள்ளதான நீங்க? எனக்கும் திருநவேலிதான்’ என்றார். சென்னைக்கு வந்த முதல் நாளே ஊர்க்காரரைப் பார்த்துவிட்ட சந்தோஷத்துடன் ஆச்சரியமும் சேர்ந்து கொள்ள ‘ஆமா. ஒங்களுக்கு எங்கெ?’ என்றேன்.

‘ஒங்க எதுத்த வீட்டுல தெய்வநாயகம் இருக்காம்லா, ஐ ஓ பில வேல பாக்கானெ?’

‘ஆமா. தெய்வு மாமா.’

‘அவன் அம்மை எனக்கு மதினில்லா?’

‘யாரு, ஆராம்புளியாச்சியா?’

‘அவளேதான்’.

நான் அவரை தாத்தா என்றழைக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து பிரமநாயகத் தாத்தாவை நான் பார்க்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இரவு வெகுநேரம் கழித்து வந்து படுத்திருக்கும் என்னை காலையில் பிரமநாயகத் தாத்தாவின்‘நாராயண நாராயண’தான் எழுப்பும். எழுந்து வாசலுக்கு வருவேன். சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர், என்னைப் பார்த்ததும் ‘ராத்திரி ரொம்ப லேட்டாயிட்டோ?’ என்றபடி படித்துக் கொண்டிருந்த பேப்பரை ஒழுங்காக மடித்து என்னிடம் நீட்டுவார்.

பிரமநாயகத் தாத்தாவின் மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். இதய நோயாளியான தாத்தாவுக்கு அதன் பிறகு இரண்டாம் மனைவியின் மூலம் மேலும் நான்கு மக்கட்செல்வங்கள். காந்தி நகரில் என் வீட்டுக்குப் பக்கத்து வீடான தாத்தாவின் வீடு எப்போதும் ஜேஜேயென்று இருக்கும். சமையலும், சாப்பாடும் எந்நேரமும் நடந்து கொண்டேயிருக்கும். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முழுகி, பூஜை பண்ணி சாப்பிட்டுவிட்டு தாத்தா நேரே என் வீட்டுக்கு வந்து சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொள்வார்.

பிரமநாயகத் தாத்தாவுக்கு என்மீது ஊர்ப்பாசம் போக நான் சினிமாவில் இருப்பதால் ஒரு தனியீர்ப்பு இருந்தது. அது குறித்து என்னிடம் அதிகம் பேசுவதில்லையென்றாலும் நான் உணரும் வண்ணம் மனதுக்குள் பேசிக் கொண்டுதான் இருந்தார். தாத்தாவுக்கு சினிமா மீதும், அதைவிட அதிகமாக சினிமா நடிகைகள் மீதும் இருக்கும் அலாதி பிரியம் மெல்ல தெரிய வந்தது. அந்த பிரியம் அவர் தகப்பனாரிடமிருந்து அவருக்கு வந்திருக்க வேண்டும்.

‘நம்ம ஊர் அரசுப் பொருட்காட்சில ஒரு மட்டம் நாடகம் போட்டான். மெட்ராஸ்ல இருந்து ஒரு நடிகை வந்து நடிச்சா. அந்த காலத்துல் ஒண்ணு ரெண்டு சினிமால நடிச்ச பொம்பள அவ. எங்கப்பா அவள எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டால்லா’.

குதூகலத்துடன் சொன்னார்.

‘ஆனா நான் யாரையும் பெருசா பாத்ததில்ல. ஒரே ஒருமட்டம் நம்ம கீள்ப் பாலத்துல கே.பி.சுந்தராம்பாள் அம்மா கார்ல வந்தா. முன்னாடி கொண்டு போயி சைக்கிள விட்டுட்டேன்’.

‘அப்புறம் என்னாச்சு?’ கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டேன்.

‘அந்த அம்மா கண்ணாடிய எறக்குனா. நீங்க எனக்கு திருநாறு பூசுனாத்தான் இந்த எடத்த விட்டு போவேன்னுட்டென். சிரிச்சுக்கிட்டெ பூசிவிட்டா.’

பெரிதாகச் சாதித்து விட்ட களிப்பில் சொன்னார்.

காந்தி நகரில் நாங்கள் குடியிருந்த தெருவுக்கு அருகேதான் நடிகை விஜயலலிதாவின் வீடும் இருந்தது. போகும் போதும், வரும் போதும் அந்த வீட்டைக் கடந்துதான் நான் செல்வேன். பெரும்பாலும் வாசலிலோ, பால்கனியிலோ விஜயலலிதா நிற்பார். தாத்தாவின் மகன்களும் வேலைக்குப் போகும் போதும் வரும்போதும் அவரைப் பார்த்தபடி வந்ததை தன் தந்தையிடம் சொல்வார்கள்.

‘எனக்குத்தான்டே குடுத்தே வைக்கலெ’.

வருத்தத்துடன் ஒரு நாள் தன் இளைய மகனிடம் தாத்தா சொன்னது என் காதுகளில் விழுந்தது.

‘பைபாசுக்கு முன்னாடின்னா நானே நடந்து போயிருவேன். ஒங்க யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்.’

குரலில் கடுமையான துயரம் சொட்டியது.

ஒரு நாள் அவசர அவசரமாக பிரமநாயகத் தாத்தாவின் மகன்களில் ஒருவன் சைக்கிளை ஏறி மிதித்தபடி வந்தான். ‘எப்பா, சீக்கிரம் வாங்க. அந்த அம்மா அவங்க வீட்டு வாசல்ல நிக்காங்க’ என்றான் மூச்சிரைத்தபடி. வாயெல்லாம் பல்லாக தாத்தா தத்தித் தத்திச் சென்று சைக்கிளின் கேரியரில் உட்கார்ந்து கொண்டார். மகன் சைக்கிளை கவனமாக மிதிக்க, கொஞ்சம் வெட்கமும், சிரிப்புமாக பின்னால் கெட்டியாகப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த தாத்தா என்னைப் பார்த்து ‘போய் பாத்துட்டு வந்திருதேன்’ என்றபடி போனார்.
போன வேகத்தில் வாடிய முகத்துடன் தந்தையும், மகனுமாகத் திரும்பினர். இவர்கள் செல்வதற்குள் விஜயலலிதா வீட்டுக்குள் போய் விட்டாராம். ‘இன்னைக்கில்லேன்னா இன்னோரு நாள் பாத்துக்கிட்டா போச்சு’. தன்னைத் தானே தாத்தா சமாதானப் படுத்திக் கொண்டார். ஒரு நாள் யதார்த்தமாக தாத்தாவிடம்,’எலந்த பளம் பாட்டுக்கு அந்த அம்மாதானெ ஆடுவாங்க’ என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். தாத்தாவின் முகம் அவ்வளவு கடுமையாக மாறியதை அன்றுதான் பார்த்தேன்.

‘என்ன பேரப்பிள்ள, வெவரமில்லாம கேக்கியெ? அது விஜயநிர்மலால்லா?’ என்றார். ‘என்னத்த நீங்க சினிமால இருக்கியெ? சே . . .’ என்று அலுத்துக் கொண்டார். தாத்தாவின் முகபாவத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி ஃபெயிலான மாதிரி கூனிக் குறுகிப் போனேன்.

இத்தனை சினிமா ஆசை இருந்தாலும் தாத்தா கண்டிப்பான சில விருப்பு வெறுப்புகள் கொண்டிருந்தார். குறிப்பாக மைக்கேல் ஜாக்ஸன், பிரபுதேவா இருவரது நடனத்தையும் குடும்பப் பெண்கள் பார்த்தால் கெட்டுப் போவார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார். அதற்கு அவர் ஒரு அந்தரங்கமான காரணமும் சொன்னார்.

‘மேற்படிய பிடிச்சுக்கிட்டெ ஆடுதானுவொ. இத பொம்பளப் பிள்ளைய பாக்கலாமா. நீங்களே சொல்லுங்க’.

நேரடியாக தாத்தா என்னிடம் என் தொழில் சார்ந்த விஷயங்களைப் பற்றி விசாரிக்காமல் கவனமாக இருந்தார். ஒரே ஒருமுறை அவரது கட்டுப்பாட்டையும் மீறி ‘குஷ்புவ நீங்க நேர்ல பாத்திருக்கேளா?’ என்று கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

நான் காந்தி நகருக்கு வந்த ஒன்றிரண்டு வருடங்களிலேயே தாத்தா குடும்பச் சூழல் காரணமாக திருநெல்வேலிக்குப் போய்விட்டார். போகும் போது என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கினார். எனக்குமே அது தாங்க முடியாத பிரிவாகத்தான் இருந்தது. திருநெல்வேலிக்கு அருகில் மேலப்பாளையத்தில் வாடகை குறைவாக உள்ள ஒரு பழைய பெரிய வீட்டில் குடியேறிவிட்டதாகக் கடிதம் எழுதினார். எப்படியும் இரண்டு வாரங்களுக்கு ஒரு கடிதம் வரும். ஒவ்வொரு கடிதத்திலும் மறக்காமல் என்னை மேலப்பாளையத்துக்கு அழைப்பார்.

தாத்தா மேலப்பாளையத்துக்குப் போய் சுமார் ஆறேழு மாதங்கள் கழித்து நான் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். எதிர் வீட்டு தெய்வுமாமா மூலம் தாத்தாவுக்கு விஷயம் தெரிந்து விட்டது. தன் மகனை சைக்கிளில் அனுப்பினார். ‘நாளைக்கு மத்தியானம் ஒங்களுக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு. அப்பா சொல்லிட்டு வரச் சொன்னா’. கண்டிப்பாக வருவதாகச் சொல்லி அனுப்பிட்டு மறுநாள் மேலப்பாளையம் சென்றேன். கார் அவர்களின் தெருவுக்குள் நுழையும் போதே தாத்தா வாசலில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கார் நெருங்கி வரும் போது தன் மனைவியின் தோளைப் பிடித்துக் கொண்டு தாத்தா எழுந்து நின்றார். முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க காரிலிருந்து இறங்கிய என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

அமாவாசை தர்ப்பணம் பண்ணும் போது சாப்பிடுவது மாதிரியான விசேஷச் சாப்பாடு ஏற்பாடாயிருந்தது. பெரிய வாழை இலை போட்டு உப்பு வைத்து, அதன் மீது சுண்டவத்தல் பரப்பி, பொரியல், துவரம், அவியல், மசியல், கூட்டு என முறையான பரிமாற்று முறை. பருப்பு வைக்கும் போது கவனமாக அதை இலையின் வலது கீழ்ப்பகுதியில்தான் வைக்கிறார்களா என்று தாத்தா உன்னிப்பாகப் பார்த்தார். சோறும், அப்பளமும் வைத்த பின் ‘பாயாசமும், வடையும் யாரு வப்பா?’ என்று கொஞ்சம் உயர்த்தின குரலில் கேட்டார். அவை வந்த பின் தாத்தா நைவேத்தியம் பண்ணி முடிக்கும் வரை பொறுமையாக சோற்றில் கைவைக்காமல் காத்திருந்தேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் தாத்தா விட்டுவிடவில்லை. ‘போலாம் போலாம். இப்ப என்ன அவசரம்? இரிங்க’ என்றபடி நாற்காலியில் என்னை அமரச் செய்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு விஜயலலிதாவின் பக்கம் திரும்பியது.

‘அத ஏன் கேக்கிய பேரப் பிள்ள! நம்ம கோமு இருக்காம்லா? நீங்க பாத்திருப்பிய! வளுக்கத் தல.’

‘ஆமாமா. டைட்டா சட்ட பொடுவாளெ. அவாள்தானெ?’

‘அவனேதான். கரெக்டா சொல்லிட்டேளே. அவனும் அன்னைக்கு எலந்த பளம் பாட்டுக்கு ஆடுனது விஜயலலிதாங்காம்யா. இவனுவளையெல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்ண? சவத்து மூதியெ’.

நான் பதிலே சொல்லவில்லை. நான் காந்தி நகரிலிருந்து சாலிகிராமத்துக்குள்ளேயே வேறு பகுதிக்குச் சென்று விட்டதை மட்டும் தாத்தாவிடம் சொன்னேன். தாத்தாவுக்கு ரொம்பவும் வருத்தமாகப் போய்விட்டது.

‘நல்ல ஏரியால்லாய்யா அது? அத விட்டுட்டு ஏன் போனியெ?’

‘நீங்க இங்கெ வந்துடேள்லா? அதான்.’

சமாளிக்கும் விதமாகச் சொன்னேன். தாத்தா இதற்கு ஏதும் சொல்லவில்லை. ஆனால் மனதுக்குள் ‘நான் வந்துட்டா என்ன? அதான் விஜயலலிதா இருக்காளெ?’ என்று சொன்னார் என்றுதான் நினைக்கிறேன். அவர் முகம் அப்படித்தான் இருந்தது. இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நான் மீண்டும் காந்தி நகருக்கே வந்துவிட்டேன். அதுவும் விஜயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே. நைட்டி அணிந்தபடி வாசலிலும், பால்கனியிலும் நின்று கொண்டு தன் வீட்டுக்கு எதிரே துணிகளை இஸ்திரி போடுபவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் விஜயலலிதாவை தினமும் பார்க்கிறேன். பிரமநாயகத் தாத்தா இருந்திருந்தால் சொல்லியிருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பார்.