கர்நாடக இசைக் கச்சேரிகளில் இன்றைக்கும் பாடப்பட்டு வரும் சுப்பிரமணிய பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் ஒரு திரைப்படத்துக்காக மெட்டமைக்கப்பட்டது என்பதை ஒரு நண்பரிடம் பேச்சுவாக்கில் நான் சொன்னபோது நம்ப மறுத்தார். அதுவும் இப்போது இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மெட்டமைக்கப்பட்டு மேடையேறிய பாடல் அது என்ற செய்தியும் அவருக்கு வியப்பை அளித்தது. மிகச் சிறுவயதிலேயே காலமாகிவிட்ட மாமேதை சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் காபி, மாண்ட், வசந்தா, திலங், நீலமணி என்று ராகமாலிகையில் மெட்டமைக்கப்பட்ட அந்தப் பாடல், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த ‘மணமகள்’ திரைப்படத்தில் இடம்பெற்றது. எம்.எல்.வசந்தகுமாரியும், வி.என்.சுந்தரமும் பாடிய அந்தப் பாடல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாடுபவர்களால் மட்டுமல்லாது வாத்தியக்காரர்களாலுமே வெகுவாக வாசித்துக் கொண்டாடப்பட்ட ஒன்று.
‘மணமகள்’படம் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்குப் பிறகு ‘நீதிக்கு தண்டனை’ என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வனாதன் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு புதிதாக மெட்டமைத்தார். ஏற்கனவே இத்தனை பிரபலமாகக் கொண்டாடப்படும் பாடலை புதிய மெட்டில் அமைப்பதற்கு அசாத்திய மேதைமையோடு, பாடகர்களின் குரல் தேர்விலும் மிகுந்த கவனம் தேவை. எம்.எஸ்.விஸ்வநாதன் சரியான குரல் தேர்விலும், பாடகர்கள் சரியாகப் பாடுவதிலும் மிக மிக கண்டிப்பானவர் என்பது நன்கறியப்பட்டதொரு விஷயம். அவரிடம் பாடிய பல பாடகர்களும் தங்கள் பேட்டியில் நிறைய பெருமிதத்தோடும், கொஞ்சம் பயத்தோடும் அதைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா.
இசையமைப்பாளர்களின் மனதில் உள்ள மெட்டை அப்படியே திருப்பிப் பாடவே சிரமப்படும் பாடகர், பாடகிகளுக்கு மத்தியில், கேட்ட மாத்திரத்தில் தன்னிடமுள்ள தனித்துவக் குரலால் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடகியாகவே ஸ்வர்ணலதா அறியப்பட்டார். போதையில் பாடிடும் ஓர் இளம்பெண்ணின் குரலுக்கு முதன்முதலாக இவரை குருசிஷ்யன் என்னும் திரைப்படத்தில் ‘உத்தமபுத்திரி நானு’ என்னும் பாடலில் பயன்படுத்திய இளையராஜா, பிற்பாடு ஸ்வர்ணலதாவைப் பல்வேறு பாடல்கள் பாடவைத்தார். அவையெல்லாமே ஸ்வர்ணலதாவைத் தவிர வேறு எந்த பாடகியையும் கொண்டு கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதவை.
singer-swarnalathaகருப்புவெள்ளைத் திரைப்படங்களின் காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது போன்ற கிளப்வகைப் பாடல்கள், 90களில் ஸ்வர்ணலதாவின் தனித்துவக் குரலால் மேலும் புகழ் பெற்றன. ‘தளபதி’ திரைப்படத்தின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலில் துவங்கி, பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தின் ‘உசிலம்பட்டி பெண்குட்டி’, ‘காதலன்’ திரைப்படத்தின் ‘முக்காலா முக்காபுலா’, ‘இந்தியன்’ திரைப்படத்தின் ‘அக்கடான்னு நாங்க’ போன்ற பல பாடல்களுக்கு மத்தியில் இன்றைக்கும் மெல்லிசைக் கச்சேரிகளில் தவறாது இடம்பெறும் ஒரு முக்கியமான பாடலாக ‘கேப்டன் பிரபாகரன்’ படப்பாடலான ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் உள்ளது. பாடுபவரையும், இசைப்பவர்களையும், கேட்பவர்களையும் துள்ளாட்டம் போடவைக்கும் உற்சாகப் பாடலது. இப்பாடலைக் கவனித்துக் கேட்டால் தெரியும் ‘ஆட்டமா’, ‘தேரோட்டமா’ என்ற வார்த்தைகளில் ‘மா’வில் ஒரு தனித்த நெளிவு இருக்கும். அந்த நெளிவு செயற்கையாக வலிந்து செய்ததைப் போல இல்லாமல் வெகு இயல்பாக இருக்கும். இந்த நெளிவுதான் ஸ்வர்ணலதாவைப் பிற குரல்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு. மேடைக்கச்சேரிகளில் இப்பாடலை நன்கு கவனித்துக் கேட்டால் தெரியும், இதைப் பாட முயற்சிப்பவர்கள் ஒன்று அந்த நெளிவை ஃப்ளாட்டாகப் பாடி கடந்து சென்று விடுவார்கள். இல்லை செயற்கையாகத் தெரியும் ஒரு கமகத்தைத் தருவார்கள். எளிதில் நகலெடுத்துவிட முடியாத குரலும், பாடுமுறையும் ஸ்வர்ணலதாவுடையது!
நான் இங்கே சொல்லியிருக்கும் இந்தப்பாடல்கள் படுபிரபலமானவை. ஆனால் அதிகம் வெளியே தெரியாத க்ளப் பாடல் ஒன்று இருக்கிறது. ‘எத்தனை ராத்திரி’ என்ற அந்தப்பாடலை நான் வெகு முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். மலேஷியா வாசுதேவனுடன், ஸ்வர்ணலதா இணைந்து பாடிய அப்பாடலில் சரணத்தில் ‘இடத்தைப் பிடிச்சுக்கோ… நீ… குடியும் இருந்துக்கோ’ என்ற இடத்தில் ஸ்வர்ணலதா ஒரு பிருகா தருகிறார் பாருங்கள், எந்த ஒரு செவ்வியல் பாடலுக்கும் இணையான ஒன்றாக இப்பாடலை உயர்த்துகிறது அந்த பிருகா.
ஒருபுறம் க்ளப் வகைப்பாடல்களைப் பாடினாலும், இன்னொரு பக்கம் உணர்ச்சிகரமான முக்கியமான பாடல்களும் ஸ்வர்ணலதாவைத் தேடி வந்தன. பெரும்புகழ் பெற்ற ‘போவோமா ஊர்கோலம்’ என்னும் ‘சின்னத்தம்பி படப்பாடலில் இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரும், பின்னணிப் பாடகருமான நெப்போலியன் என்ற அருண்மொழி வாசித்த புல்லாங்குழல் பகுதிகளின் நுணுக்கங்களை, போட்டி போட்டு கொண்டு தன்குரலில் கொண்டு வந்திருக்கிறார் ஸ்வர்ணலதா. உடன் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பாடலின் ஆண் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் வெகு எளிதாக மொத்த கவனத்தையும் ஆண்குரல் பக்கம் திருப்பிவிடும் சாத்தியம் கொண்டவை. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அப்பகுதிகளைப் பிரமாதமாகப் பாடியிருப்பார். இதையெல்லாம் மீறி, நம்மை வந்தடைந்தது ஸ்வர்ணலதாவின் குரல். குறிப்பாக அந்தப் பாடலின் இன்னொரு வடிவமான ‘நீ எங்கே’ என்று துவங்கும் தனிக்குரல் சோகப்பாடலை உணர்ச்சிகரமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதம் அபாரமானது. அப்பாடலின் நாடகத்தன்மை காரணமாகப் பலரும் அப்பாடலை கவனிக்காமல் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் அப்பாடலின் இரண்டாம் இண்டர்லூடில் ஸ்வர்ணலதா தந்திருக்கும் கீரவாணி ராக அடிப்படையில் அமைந்த ஆலாபனை அசாத்தியமானது. ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலின் ப்ரிலூடில் எஸ்.ஜானகி தந்த கீரவாணி ஆலாபனைக்கு இணையானது. அதைப்போலவே பாடல் முடியும் இடத்தில் ‘நீ எங்கே’யின் இறுதியில் கேட்கும் நெளிவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ‘ஆட்டமா, தேரோட்டமா’வில் துள்ளலைத் தந்த நெளிவு, இங்கே சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.
ஸ்வர்ணலதா ஏ.ஆர்.ரஹ்மான் மூலமாக தேசியவிருது வென்ற ‘கருத்தம்மா’ படத்தின் ‘போறாளே பொன்னுத்தாயி’யும் நம் நெஞ்சத்தை உருக்கும் சோகப்பாடல்தான். ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலை தேர்வுக்குழுவினர் முழுமையாகக் கேட்டிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. ‘ஓ’வென்று தன் சோகக்குரலால் ஸ்வர்ணலதா அந்தப் பாடலைத் துவக்கும்போதே தேர்வுக்குழுவினர் விருதை எடுத்து மேஜைமேல் வைத்திருந்திருக்க வேண்டும்.
swarna4
‘அலைபாயுதே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எவனோ ஒருவன்’ என்னும் அருமையான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வர்ணலதாவுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார். அதன் நியாயமான காரணத்தை பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை உணர்ச்சி ததும்பப் பாடி நமக்கு உணர்த்தியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘முதல்வன்’ திரைப்படத்தின் ஜோடிப்பாடலான ‘குறுக்கு சிறுத்தவளே’ பாடலை, படத்தில் இன்னொரு முறை பயன்படுத்தும் போது ஸ்வர்ணலதாவைக் கொண்டே பாடவைத்திருக்கிறார் ரஹ்மான். ‘உளுந்து வெதைக்கையிலே’ என்ற அந்தப் பாடல் துவங்கும் முன்பே ஸ்வர்ணலதா ‘எ எ . . ஏலே . .ஏலே’ என்று பாடலைத் துவக்கி விடும் விதம் அலாதியானது. 
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாலிவுட் இசையுலகில் ஒரு வலுவான ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொடுத்த ராம்கோபால்வர்மாவின் ‘ரங்கீலா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா அற்புதமாகப் பாடியது ‘ஹாய் ராமா’ என்னும் பந்துவராளி ராகப்பாடல். அதன் மூலம் பாலிவுட்டிலும் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ஸ்வர்ணலதா. இந்தியத் திரையிசையுலகின் மரியாதைக்குரிய இசைமேதையான நௌஷாத் அலியின் இசையமைப்பில் ‘முகல் ஏ ஆஸம்’ திரைப்படப்பாடல்கள் தமிழில் டப்செய்யப்பட்டபோது அதிலிருந்த முக்கியமான பாடல்களைப் பாடியவர் ஸ்வர்ணலதா.
தனிப்பாடல்களில் ஸ்வர்ணலதாவுக்குப் பேர் சொல்லும்படியாக பல பாடல்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது. அவரது குரலில் உள்ள தனித்துவமே அவரை அப்பாடல்கள் தேடி வர காரணமாக அமைந்தது. பண்பலை வானொலிகளில் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இடம்பெறும் பாடலாக ‘சத்ரியன்’ படத்தின் ‘மாலையில் யாரோ’ பாடல் இன்றுவரை இருக்கிறது. ‘வள்ளி’ திரைப்படப்பாடலான ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல்தான் ஸ்வர்ணலதா பாடிய பாடல்களிலேயே சிறந்த பாடல் என்று அடித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இளையராஜா மெட்டமைத்திருந்த ‘என்னைத் தொட்டு’ என்ற பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றுமொரு நல்ல ஸ்வர்ணலதா பாடல். இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையில் எடுத்த எடுப்பிலேயே மேல்ஸ்தாயிக்குச் சென்று பாடலின் மொத்த ரசத்தையும் தந்து விடுகிறார் ஸ்வர்ணலதா. இந்த உணர்வைத்தான் பாடலில் மீண்டும் மீண்டும் வரும் ‘அன்பே ஓடிவா’ என்ற வரிகளில் நாம் பெற்றுக்கொள்கிறோம். இப்பாடலின் பிற்பகுதியை எஸ்பிபி பாடியிருந்தாலும் மைய உணர்வைத்தரும் அந்த முக்கியமான ஆலாபனையைப் பாட ஸ்வர்ணலதாவைத்தான் பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.
கவிஞர் மு.மேத்தா தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ திரைப்படத்தின் ‘புதிய பறவை’ என்னும் சுத்த தன்யாசி ராக அடிப்படையில் அமைந்த பாடலும் அவரது முக்கியமான பாடல்களின் வரிசையில் உள்ள ஒன்று. இதே பாடலின் நாதஸ்வர வடிவம் ஒன்றும் இத்திரைப்படப் பாடல் கேஸட்டில் இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு ஸ்வர்ணலதா பாடிய வடிவத்தைக் கேட்டால்தான், ஸ்வர்ணலதாவின் தனித்துவமும், அது ஏன் முக்கியமான பாடல் என்பதும் புரியும். இப்பாடலின் ட்யூனே உள்ளத்தை உருக்கும் தன்மையையுடையது என்பதை அந்த நாதஸ்வரத்தைக் கேட்டால் வரிகளில்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பல்லவியின் முதல் இரண்டு வரிகளும் கீழிருந்து மேலேறி, மேலிருந்து கீழிறங்கும் வகையில் ஒன்றுக்கொன்று எதிரிடையான தன்மை கொண்டவை. அதில் ‘புதிய பறவை பறந்ததே’ என்ற மூன்றே வார்த்தைகளில் முழு ஆக்டேவும் மேலேற வேண்டும். நாதஸ்வரத்தில் அதை இயல்பாகவே காட்டிவிடலாம். ஆனால் குரலில் வார்த்தைகள் வழியாகச் சொல்வது கத்தி மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் பிசகினாலும் இழுவையாகத் தெரிந்துவிடும். பிறகெப்படி பாடவேண்டும்? ஸ்வர்ணலதா பாடியிருப்பதை வைத்து அதை எப்படிப்பாட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
’நாங்கள்’ என்று ஒரு படம். இப்படி ஒரு படம் வந்த செய்தியை பெரியவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் சொன்னால்தான் யாரும் நம்புவார்கள். இத்தனைக்கும் அதில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘பாரடி குயிலே’ என்றொரு பாடலை ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலின் சரணத்தில் ‘நான் விரும்பிய திருநாள் பிறந்தது’ என்ற வரியை ஸ்வர்ணலதாவின் குரலில் கேட்கும் போது உருகாத மனிதர்கள் யாராவது இருந்தார்களென்றால், அவர்களுக்குச் செவிக்கோளாறு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்பாடலின் சரணம் பிரபலமான அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் இன்னொரு வடிவம். ஆனால் அதையும் நேரடியாக உபயோகிக்காமல் அபூர்வ சகோதரர்கள் தீம் இசையின் தைவதத்தை மாற்றிப்போட்டு நடபைரவி ஸ்கேலிலிருந்து கரஹரப்ரியா ஸ்கேலுக்கு மாற்றியிருப்பார் இளையராஜா. ஸ்வர்ணலதா சரணத்தில் அந்த தைவதத்துக்குத் தரும் அழகே தனிதான்.
நண்பர் சீமான் நெருக்கமான நண்பர்களுடன் இருக்கும் போதெல்லாம் ‘ஆத்தோரம் தோப்புக்குள்ளே’ என்னும் நாட்டுப்புறப் பாடலை அருமையாக அனுபவித்துப் பாடுவார். முதன் முதலில் அவர் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’ என்னும் திரைப்படத்தில் தன் மனதுக்கு நெருக்கமான அந்தப் பாடலை அவர் பயன்படுத்தியிருந்தார். தேவாவின் இசைச்சேர்க்கையில் உருவான அந்தப் பாடலில் ‘அத்தனையும் பொய்யாச்சே ராசா, ஒத்தையில நிக்குதிந்த ரோசா’ என்ற வரியை ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதத்தை என்னவென்று சொல்வது? கேட்டுக் கேட்டு உருகத்தான் முடியும்.
ஜோடிப்பாடல்களில் ஸ்வர்ணலதா பாடிய பல புகழ்பெற்ற பாடல்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்படாத ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சமுத்ரப்ரியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடியிருப்பார் ஸ்வர்ணலதா. ‘ஜல் ஜல் சலங்கை குலுங்க’ என்று துவங்கும் அந்தப் பாடல் இளையராஜாவின் இசையில் ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது. மாயாமாளவகௌளையில் அமைந்த ‘ஆறடிச்சுவருதான்’ என்ற ‘இது நம்ம பூமி’ படப்பாடலை, யேசுதாசுக்கு இணையாக சிறப்பாகப் பாடியிருந்தார் ஸ்வர்ணலதா. இத்தனைக்கும் பல்லவி முடிந்து, முதலாம் சரணமும் முடியும் இடத்தில்தான் யேசுதாசுடன் வந்து இணைவார். ‘ராத்திரி வலம்வரும் பால்நிலா எனை வாட்டுதே’ என்று அவர் பாட ஆரம்பிக்கும் போதே, அத்தனை நேரம் பாடியிருந்த யேசுதாசின் குரலுக்கு மிக அருகில் எளிதாக வந்து சேர்ந்து விடும் ஸ்வர்ணலதாவின் அற்புதக்குரல். இதே ராகத்தில் அமைந்த ‘உடன்பிறப்பு’ திரைப்படத்தில் ‘நன்றி சொல்லவே உனக்கு’என்ற பாடலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. மூத்த பாடகியான உமாரமணனுடன் இணைந்து பாடிய இரு பெண்குரல் பாடலான ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி திரைப்படத்தின் ‘ஊரடங்கும் சாமத்துல’ பாடலும் மிக முக்கியமான ‘ஸ்வர்ணலதா’ பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடிய சண்முகப்ரியா ராகத்தில் அமைந்த ‘ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்’ பாடலும் ஸ்வர்ணலதா பாடிய மிக மிக முக்கியமான பாடல்களில் ஒன்று. ஒரு சரணம் மேற்கத்திய ஸ்டைலிலும், இன்னொரு சரணம் முழுக்க நாட்டுப்புற ஸ்டைலிலும் இருக்கும். இதில் நாட்டுப்புற ஸ்டைலில் வரும் சரணம் உச்சஸ்தாயியில் தொடர்ந்து நான்கு ஆவர்த்தங்கள் பாடப்படவேண்டிய ஒன்று. கொஞ்சம் பிசகினாலும் பெருங்குரலெடுத்து கத்துவதைப் போலாகிவிடும். அதை ஸ்வர்ணலதா பாடிய விதத்தைக் கேட்கையில் நமக்கு அது ஒரு வெகு வெகு எளிமையான ஒரு பாடலைப் போல் தோன்றும்.
தனது முப்பத்தியேழாம் வயதில் அகால மரணமடைந்த ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பண்பலை வானொலி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் அவர் பாடிய எண்ணற்ற பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தன. பீம்பிளாஸ் ராக ஆலாபனையுடன் அட்டகாசமாக ஸ்வர்ணலதா பாடியிருக்கும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்ற பாடல் மட்டும் அவருக்காகவே அவர் பாடிய பாடலாக எனக்குத் தோன்றியது.
நண்பன் குஞ்சுவின் ஒன்றுவிட்ட சகோதரன் பாலாஜி பொறியியல் இறுதிவருடம் படித்துக் கொண்டிருந்த நேரம். திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ‘என் ராசாவின் மனசிலே’ படம் பார்க்கச் சென்றபோது அவனையும் உடன் அழைத்துச் சென்றேன். படம் துவங்கியதிலிருந்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, ‘குயில் பாட்டு’ பாடல் ஆரம்பமானவுடனே ஒருமாதிரியாக, படபடப்பாக ஆனான். பாட்டு தொடரத் தொடர கலங்க ஆரம்பித்தவன், இறுதியில் வெடித்து அழத்தொடங்கி விட்டான். அவனை சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டி வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. மேற்படி சம்பவத்தை இப்போது அவனிடம் நினைவுகூர்ந்து கேட்டாலும் அன்றைக்கிருந்த அதே உணர்வுடன்தான் பேசுகிறான்.
‘அத ஏன் கேக்கே? லாலாச் சத்திரமுக்குல நடந்து போகும்போது எங்கையாவது டீக்கடைல அந்தப் பாட்ட போடுவான். என்னால லேசுல அதத் தாண்டி வரமுடியாது, பாத்துக்கோ’.
திருமணம் ஆன நாளிலிருந்து தான் வெறுத்து ஒதுக்கிய தன் கணவனை மனம் மாறி ஏற்றுக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மகிழ்ச்சியுடன் பாடும் விதமாக அமைந்த அந்த‘குயில் பாட்டு’ என்னுடைய தனிப்பட்ட ரசனையின்படி விசேஷமானப் பாடல். கதைப்படி அந்தப் பாடலை பாடி முடிக்கும்போது அந்தப் பெண் கால்தவறி விழுந்து மரணமடைவாள். அப்பாடலின் முடிவில் நடக்கவிருக்கும் அவளது துர்மரணத்தை முன்கூட்டியே உணர்த்தும் விதமாக இளையராஜா சிவரஞ்சனி ராகத்தில் ஒற்றை வயலினைக் கொண்டு அற்புதமாக அந்தப் பாடலைத் துவக்கியிருப்பார். இனி அந்த வயலினைக் கேட்கும்போதெல்லாம் ஸ்வர்ணலதாவின் அகால மரணத்தைக் குறித்தும் நினைக்காமல் இருக்க முடியாது.

14 thoughts on “சின்னஞ்சிறு கிளியே

 1. மிக சிறந்த இடுகை அண்ணாச்சி.சிறப்பானதொரு அஞ்சலி.
  என்னுடைய all time favorite என்னுள்ளே என்னுள்ளேயும், மாலையில் யாரோ மற்றும் குயில் பாட்டு.

  இள வயதில் மறைந்தது மிக பெரிய சோகம். 🙁

 2. ஆழ்ந்த அலசல்களுடனான அஞ்சலி.

  \என்னுள்ளேயும், மாலையில் யாரோ மற்றும் குயில் பாட்டு.\

  எனக்கும்

 3. இது வரை “ஆத்தோரம் தோப்புக்குள்ளே அத்தானை” பாட்டை யாரும் குறிப்பிட்டதாய் தெரியவில்லை .அவர் பாடியதிலேயே மிகவும் மனதை தொடும் பாடல் அது..
  இங்கிருப்பது மிகவும் நெகிழ்ச்சியாய் உள்ளது ..”அத்தனையும் பொய்யாச்சு ராசா” …

  அருமையான அஞ்சலி …..
  கண்ணீருடன்

 4. அருமையான பதிவு.
  அவ்வளவு புகழ்பெற்றும் ஆர்ப்பாட்டமில்லாத,தெளிவான பாடகி. அவரது தேர்ந்த பாடல்களைக் கொண்டு கோர்த்திருப்பது சிறப்பு.

 5. ஸ்வர்ண லதா பாடிய அற்புதமான பல பாடல்களை தொகுத்து சிறப்பான அஞ்சலி தந்திருகிறீர்கள், சின்ன தாய் படத்தில் வரும், ‘நான் மாமரத்தின் மேல் இருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல’ என்ற பாடலை ஸ்வர்ணலதாவின் குரலுக்காகவே பிடிக்கும் எனக்கு.

 6. சுகா அண்ணே ரொம்ப‌ அருமையான‌ ப‌திவு, ம‌றைந்த‌ ஸ்வ‌ர்ண‌ல‌தா பாடிய‌ பாட‌ல்க‌ளை அருமையாக‌ அல‌சியுள்ளீர்க‌ள். உண்மையான‌ அஞ்ச‌லி.

  குயில்பாட்டு பாட‌லின் துவ‌க்க‌த்தில் வ‌ரும் ஒற்றை வ‌ய‌லின் இசையின் சோக‌ம் இதுநாள் வ‌ரை கேட்ட‌போது தெரிய‌வில்லை. இப்போது ஸ்வ‌ர்ண‌ல‌தாவை நினைத்துக்கொண்டு கேட்கும் போது துக்க‌ம் தொண்டையை அடைக்கிற‌து.இந்த‌ பாட‌ல் மொத்த‌ம் 4 வெர்ஷ‌ன் இருக்கு (ஸ்வ‌ர்ண‌ல‌தா த‌னித்து இருமுறை, ராஜாவுட‌ன் இணைந்து ஒருமுறை, ராஜா வேறுவ‌ரிக‌ளில் த‌னித்து ஒரு முறை)

  ஸ்வ‌ர்ண‌ல‌தா பாடிய‌தில் என‌க்கு மிக‌வும் பிடித்த‌ பாட‌ல் “ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்”. இந்த‌ பாட‌லின் துவ‌க்க‌த்தில் வ‌ரும் ஆலாப‌னை……… அடேய்ய‌ப்பா….தாஸ‌ண்ணா பாடும் பாட‌லில் இந்த‌ ஆலாப‌னை இருக்காது.

  காத்த‌வ‌ராய‌ன்

 7. சின்னஞ்சிறு கிளியே பாரதி அமைத்தது பைரவியில். மணமகள் படத்தில் அது இராகமாலிகாவானது ; இந்த தகவல் சிந்து பைரவி படத்திலும் வருமே

 8. Best tribute ever paid to my favourite singer Swarnalatha. All the songs mentioned in your post are wonderful gems, no doubt. Paadi, nejai thottu poai vittaaL avaL…”andhak kuzhalaip pol azhuvadharku aththanaik kangal enakkillayae”. Why did you go away, dear Swarnalatha?

 9. ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய பல பாடல்களைக் கேட்டுள்ளேன். ஆனால், ‘தென்றல் வரும் தெரு’ திரைப்படத்தின் ‘புதிய பறவை’ என்னும் பாடலைக் கேட்டதில்லை. உங்களின் இந்தக் கட்டுரையின் மூலமாகத்தான் அந்த இனிமையான பாடலைக் கேட்டேன். தங்கள் கட்டுரை மிகச் சிறப்பாக ஸ்வர்ணலதா அவர்களின் தெய்வீகக் குரலின் தனித்தன்மையை அலசி ஆராய்ந்துள்ளது. இந்தக் கட்டுரைக்காகத் தங்களுக்கு நன்றி.

Leave a Reply to Thamiravaruni Cancel reply

Your email address will not be published. Required fields are marked *