சரவணன் என் பால்ய சினேகிதன். தற்போது திரைப்பட விநியோகஸ்தர். படப்பிடிப்பிற்கான சில லொக்கேஷன்கள் தேர்வு செய்ய திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அவனுடன் அலைந்து கொண்டிருந்தேன். மூலக்கரைப்பட்டியைத் தாண்டி முனைஞ்சிப்பட்டிக்குள் கார் நுழைந்த போது தற்செயலாக என் மாமனார் ‘பெங்களூருவிலிருந்து’ போனில் அழைத்தார். நான் முனைஞ்சிப்பட்டியிலிருக்கிறேன் என்பதை சொன்னவுடன் உற்சாகமாகி பக்கத்திலிருக்கும் கஸ்தூரிரங்கபுரம் என்னும் கிராமத்தைப் பற்றிச் சொல்லி அங்கு சென்று பார்த்தால் நான் எதிர்பார்க்கிற சில இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொன்னார். அதோடு நிற்காமல் அங்கு கணபதி என்று ஒரு பையன் இருப்பதாகவும், பிறருக்கு உதவுவதில் அவன் அதிக ஆர்வம் காட்டுபவன் என்றும் சொல்லி அவனிடம் தன் பெயரை சொன்னால் தேவையான உதவிகளை உற்சாகமாகச் செய்வான் என்றும் சொன்னார்.

கஸ்தூரிரங்கபுரம் சின்ன கிராமம். அழகாக இருந்தது. மாமனார் சொன்ன பையன் கணபதியின் முகவரியைக் கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. சரியாக கணபதியின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு ‘அம்மா’ என்றேன். ஒரு வயதான ஆச்சி வந்தார்கள்.

யாரு வேணும் . . .

ஆச்சி. . . கணபதி இல்லீங்களா . . .

கேக்கல . . .

ஆச்சிக்கு காது கேட்கவில்லை. சரவணன் உடனே சத்தமாக ‘கணபதி இருக்கானா’ என்றான். யாரு . . ஆச்சியின் குரலில் ஒரு மாற்றம் தெரிவதை கவனிக்காத சரவணன்,’கணபதி இருக்கானா, வெளியே போயிருக்கானா ஆச்சி’ என்றான். ஆச்சி உடனே கடும் கோபம் கொண்டு, ‘வாரியல கொண்டு அடி . . ஆருல நீ . .. எங்கெருந்து வாரே . . ஒரு மரியாத வேண்டாம் . . . சின்னப் பயவுள்ள’ என்றார்கள். சரவணன் திகிலடைந்து என்னைப் பார்க்க, நான் என்ன செய்வதென்று புரியாமல் அவனைப் பார்க்க, உள்ளிருந்து ஒரு தாத்தா வந்து, ‘வாங்க யாரு நீங்க, நான்தான் கணவதி’ என்றார். திக்கித்திணறி என் மாமனாரின் பெயரை சொல்லி நான் அவருடைய மருமகன் என்றேன். கணபதித் தாத்தா உடனே பிரகாசமாகச் சிரித்து ‘சரியாப் போச்சு. . . அவன் என் கிளாஸ்மேட்லா . . .உள்ளே வாங்க மருமகனே’ என்றார். ஆச்சியை காபி கொடுக்க சொன்னார். எங்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே ஆச்சி உள்ளே சென்றார்கள். பாயை எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னார்,கணவதித் தாத்தா. தானும் உட்கார்ந்து கொண்டார். ஆச்சி வந்து காப்பி கொடுத்தார்கள். குறிப்பாக சரவணனைப் பார்த்து மருந்துக்கும் சிரிக்காமல். வாங்கும் போது சரவணனின் கைகள், ஆச்சியின் கைகளைவிட நடுங்கின. காபியை குடிப்பதில் சரவணனுக்கு சந்தேகம் கலந்த பயம் இருந்தது. ஒரு மடக்கு குடித்த பிறகு அது காப்பிதான் என்பதை உறுதி செய்து கொண்டு மிச்சத்தையும் குடித்தான்.

இதே போல் ஒரு முறை அம்மையைப் பெற்ற தாத்தாவைப் பார்க்க கிராமத்துக்கு போயிருந்தேன். பேரனைப் பார்த்த மகிழ்ச்சி இருந்தாலும் தாத்தாவின் முகத்தில் எப்போதும் காணப்படும் மலர்ச்சி இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்தது. தாத்தாவின் ஒன்றுவிட்ட தம்பி ‘பரமசிவத்தின்’ மரணத்துக்கு போய்விட்டு அப்போதுதான் தாத்தா வந்திருக்கிறார். இறந்து போன தாத்தாவை எனக்கு தெரியுமென்பதால் அதிர்ச்சியும்,சோகமும் அடைந்தேன். ஆறுதலாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ‘பரமசிவம் தாத்தாவுக்கு வயசு இருக்கும்லா’ என்றேன். . சே . . அவன் எம்புட்டு பய . . .சின்ன வயசுதான்’ . .என்று சொன்னார் தாத்தா. எனக்கு தெரிந்து பரமசிவம் தாத்தாவுக்கு எழுபத்தைந்து வயது. ‘சாகிற வயசா அவனுக்கு’ . .வருத்தமாகச் சொன்னார் எழுபத்தைந்து வயதுத் தம்பியின் எண்பத்தைந்து வயது அண்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன் அறிவுமதி அண்ணனின் (பாடல் பெற்ற ஸ்தலமான) புகழ்பெற்ற அறைக்குச் சென்றேன். அங்கு யாரோ ஒரு பெரியவர் ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். புகைப்படங்களைக் காட்டி அண்ணனிடம்’இது யார் எடுத்தது’ என்று அந்த பெரியவர் கேட்க அண்ணன் ‘பாலு மகேந்திரா ஸார்’ என்றார். உடனே அவர்,’அதானே பார்த்தேன். அவன் எடுத்தால் பின்ன நன்றாக இல்லாமல் எப்படி இருக்கும்’ என்றார். நான் உடனே அறிவுமதியின் காதில், ‘அண்ணே யாருன்னே இந்த ஆளு, வாத்தியார மரியாதை இல்லாம பேசுறாரு’ என்றேன். பதறிப் போன அண்ணன் என்னை தனியே கூட்டி வந்து, ‘தம்பி அவர்தானடா கவிஞர் காசி ஆனந்தன்.நம் வாத்தியாருடைய பள்ளித் தோழர்’ என்றார். அன்றளவும் இளமையாக, ஜம்மென்றிருந்த என் வாத்தியாரின் கிளாஸ்மேட் இந்த பெரியவரா என்று வருத்தமாக இருந்தது. இருந்தாலும் மனம் சமாதானமடையாமல் எதற்கும் வாத்தியாரிடம் போய் கேட்டு விடுவோம் என்று கேட்டே விட்டேன். நான் கேட்டதுதான் தாமதம். வாத்தியார் படு உற்சாகமாக ‘அப்படியா . . . காசி வந்திருந்தானா . . . நீ பாத்தியா அவனை. உனக்கு தெரியுமா . . அவன்தான் எனக்கு பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தான்’ என்றெல்லாம் சொன்னவுடன் அது உறுதியாகி மனதுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.

சமீபத்தில் திருநெல்வேலி போயிருக்கும் போது ராதாபுரத்தில் ஒரு நண்பரைப் பார்க்க சென்றிருந்தேன். அங்கிருந்து கிளம்பும்போதுதான் பக்கத்து ஊர் பரமேஸ்வரபுரம் என்பது ஞாபகம் வந்தது. ஆகா,அது நம் மாமனாரின் சொந்த ஊராச்சே,அங்கே போய் வீட்டம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவோம் என்று அவளுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு பரமேஸ்வரபுரத்துக்கு சென்றேன். ஊருக்குள் நுழைவதற்குள் பெங்களூருவிலிருந்து போன். அதற்குள் மகள் சொல்லிவிட்டாள் போல.

சொல்லுங்க மாமா . . ஒங்க ஊருக்குத்தான் போயிக்கிட்டு இருக்கேன்.

சொன்னா சொன்னா . . . ரொம்ப சந்தோஷம் மாப்ளே . . . .அங்கே ஒரு அம்மன் கோயில் இருக்கும். . . அதுதான் எங்க குலதெய்வம். . . .அதுக்கு போகாம வந்துராதீங்க. . . . கோயில் பூட்டியிருந்துதுன்னா அங்கே தனுஷ்கோடின்னு நம்ம பையன் ஒருத்தன் இருப்பான். . . .கோயிலுக்கு பக்கத்துலேயே மூணாவது வீடு. . . . அவன போய் பாருங்க . . .

எனக்கு கஸ்தூரிரங்கபுரம் கணபதி தாத்தா ஞாபகம் வந்தது. தயக்கத்துடன் கேட்டேன்.

மாமா . . . கேக்குறேன்னு தப்பா நெனைக்காதீங்க . . . . இந்த தனுஷ்கோடி உங்க செட்டா . . .இல்ல . . . . . .

உடனே சொன்னார்.

சே சே . . . நீங்க வேற . . .அவன் ரொம்ப சின்னப்பையன் . . ரிட்டயர்ட் ஆகி ரெண்டுமூணு வருஷந்தான் இருக்கும்.

[email protected]

6 thoughts on “சின்னப்பையன்

  1. தோழர்களா இருந்தவங்களாவது ஒரளவு பரவால்ல.. ஹா ஹா ஹா எத்தினை வயது ஏறினாலும் நம்மை விட வயசு கூடினவங்க அவங்களை விட வயசு குறைஞ்சவங்களை எப்பவும் சின்னப்பையனாவே நினைச்சுப்பாங்க. அதுவும் நிறைய அண்ணன் அக்கா இருக்கிற வீட்டில் கடைசிப்பையனா பிறந்துட்டான்னு வைங்க.. அவனுக்கு பதினாறு நிறைஞ்ச பின்னும் அதை ஒத்துக்காம பெப்பர் மின்ட்டாலாம் வாங்கிட்டு வருவாங்கோ.. அவனோ பக்கத்து வீட்டு சைலஜா எங்கே தன்னை ஆம்பளைன்னு ஒத்துக்கமாட்டாளோன்னு ஒரு திகில்லயெ அலைஞ்சிட்டிருப்பான்..

  2. அண்ணே புதுசா எதுவும் எழுதலியா? திருநவேலியப்பத்தி வாசிச்சா அல்வா சாப்டற மாரி இருக்கு 🙂

Comments are closed.