பண்டிதன் கிணறு – சிறுகதை

‘போனவாரமே வாரெம்னெ?’ 

திரவியம் அப்போதுதான் குளித்திருந்தார். அவ்வளவு பெரிய இடுப்பில் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு சின்னஞ்சிறிய குற்றாலத்துண்டு கொஞ்சமாக அவரது மானத்தை மறைத்திருந்தது. தலையைத் துவட்டவில்லை. திரவியம் எப்போதும் அப்படித்தான். குளித்து விட்டுத் தலையைத் துவட்ட மாட்டார். ‘நம்ம கைச்சூட்டுலதான் தலமுடியை காய வைக்கணும்டே’. கைகளால் முடியை அளைந்து அளைந்து சில நிமிடங்களில் சொட்டு ஈரமில்லாமல் ஆக்கிவிடுவார். பிறகு தேங்காய் எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து தலை சீவி, கோகுல் சாண்டல் பவுடரை முகத்திலும், கழுத்திலும் போட்டு அதற்குப்பிறகே இடுப்பில் துண்டு இறங்கி வேட்டி ஏறும்.

‘சோலி சரியா இருந்தது மாமா. இப்பம் மூணு நாளு லீவு கெடச்சுது. பிள்ளேளையும், அவளையும் கூப்பிட்டேன். வரலன்னுடாங்க. அதான் நான் மட்டும் கெளம்பி வந்துட்டென்.’

திரவியம் இப்போது வேட்டிக்கு மாறியிருந்தார். கைகளால் தலைமுடியை அளைந்தபடியே சுவரில் மாட்டியிருந்த அவரது தாயாரின் புகைப்படத்துக்கு அருகே சென்றார். அதன் கீழே உள்ள மர ஸ்டாண்டில் உள்ள திருநீற்று மரவையிலிருந்து திருநீறை அள்ளி ‘சைலப்பா’ என்றபடியே நெற்றியில் பூசிக்கொண்டார். ஸ்டாண்ட்டுக்குக் கீழே உள்ள சாவிகள் மாட்டும் வளையத்தில் தொங்க விட்டிருந்த சாவியை எடுத்துத் தந்தார். 

‘நேத்து வெள்ளிக்கெளமல்லா! வீட்டக் களுவிவிட்டு சாயங்காலம் வெளக்கு போட்டாச்சு. சுத்தமாத்தான் இருக்கும். போய் இரி.’

சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினான். இதற்குள் உள்ளிருந்து பெண் குரல் கேட்டது.

‘யய்யா ஆரு ரத்தினமா? இட்லி அவிச்சிருக்கென். சாப்பிட்டுட்டு போ’.

குரலுக்குரிய உருவம் வெளியே வந்தது. வியர்வையில் கனகம்மாளின் முகமும், கழுத்தும் நனைந்திருந்தது. சேலையும் ஈரமாகத்தான் இருந்தது. அதைக் கொண்டு கையையும், முகத்தையும் துடைத்து மேலும் ஈரமாக்கினாள்.

‘இல்ல அத்த. வார வளில கோயில்பட்டில வண்டிய நிப்பாட்டுனான். பொங்கல் வட சாப்பிட்டு காப்பியும் குடிச்சுட்டென்.’

தோள்பையை சரியாக்கியபடி நடக்கத் தயாரானவனைப் பார்த்து, ‘சரி. அப்பம் மத்யானம் வந்திரு. இனிமேல்தான் ஒலை வைக்கப் போறேன்.’

கனகம்மாளிடம் சரி என்று சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர முடியாது என்பது ரத்தினத்துக்குத் தெரியும். மதியம் வருவதாக உறுதியளித்து விட்டு தன் பூர்வீக வீட்டை நோக்கி நடந்தான். 10 மணி கூட ஆகவில்லை. ஆனாலும் வெயிலின் சூடு தாங்க முடியாமல் சட்டையின் மேல் பித்தான்களை திறந்து விட வேண்டியிருந்தது. தன் வீட்டு வாசல் திண்ணையில் ஆடு ஒன்று ஒய்யாரமாக சாய்ந்தபடி எதையோ மென்று கொண்டிருந்தது. வாசலில் முந்தின நாள் போட்ட தாமரைப்பூ கோலம் கால்தடமோ, வண்டி தடமோ படாமல் இன்னும் அப்படியே இருந்தது. கதவருகே சென்ற ரத்தினம், திண்ணையில் இருந்த ஆட்டைத் தொந்தரவு செய்யாமல் சற்றே தள்ளி நின்று பூட்டைத் திறந்தான்.

உள்வாசல் மரக்கதவுக்கு மேல் உள்ள நிலைப்பலகையில் ‘அனந்தநம்பிகுறிச்சி அழகர் சாஸ்தா துணை’ என்று மஞ்சள் நிறத்தில் எழுதியிருந்தது. அதை எழுதியது ரத்தினத்தின் சித்தப்பா பிச்சையா. தான் சின்னப் பையனாக இருக்கும் போது சிரட்டையில் மஞ்சள் பெயிண்ட்டை பிரஷ்ஷால் தொட்டு பிச்சையா எழுதும் போது துணைக்கு சின்ன ‘ன’ போட்டு எழுதியதை தான் சுட்டிக் காட்டியதையும், ‘எல என்னைப் பெத்த அய்யா! நீ சொல்லலென்னா சித்தப்பா தப்பால்லா எளுதியிருப்பென்’ என்று மீசை கன்னத்தில் குத்த, குனிந்து பிச்சையா தன் கன்னத்தில் முத்தியதும் இதோ இந்த நிமிஷத்தில் நடந்தது போல ரத்தினத்துக்குத் தோன்றியது. அனிச்சையாக தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். ‘ம்ம்ம். சித்தப்பாவும் போய்ச் சேந்தாச்சு’. தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். கடைசியாக வீட்டுக்கு எப்போது வந்தோம் என்று யோசித்துப் பார்த்தான். ஒற்றை மனுஷியாக இந்த வீட்டில் வசித்து வந்த ஆச்சி காலமானதற்குப் பிறகு ஒரே ஒரு முறைதான் வந்திருக்கிறான். அதுவும் ஏழெட்டு மாதங்களுக்கு முன். 

‘இன்னா இருக்கு மதுர. ஒரு அளுத்து அளுத்துனா கண்ண மூடி முளிக்கதுக்குள்ள கொண்டாந்து எறக்கி விட்டிருவான். நீ போன்ல பேசுததே மூணு மாசத்துக்கு ஒரு மட்டம்தானெடே!’ 

திரவியம் வழக்கமாக சொல்லும் வார்த்தைகள். ஆச்சிக்கு அவர் மருமகன் முறை. பூர்வீக விட்டை விற்கக் கூடாது. வாடகைக்கும் விடக் கூடாது என்று ஆச்சி எழுதி வைத்துவிட்டுதான் செத்துப் போயிருக்கிறாள். அது ஒன்றும் சட்டமில்லை. இருந்தாலும் ரத்தினத்துக்கு மனசு கேட்கவில்லை. அதனால்தான் தன்னால் இருக்க முடியவில்லையென்றாலும் திரவியத்திடம் வீட்டை ஒப்படைத்து பராமரிக்கச் சொல்லியிருக்கிறான். அதற்கான செலவுத்தொகையை மறக்காமல் மாதாமாதம் அவருக்கு அனுப்பிவிடுவான். ரத்தினத்துக்கு மனசுக்குள் ரகசியமாக ஓர் ஆசை உண்டுதான். அரசு உத்தியோகத்தை உதறி விட்டு ஊரிலேயே வந்து தான் பிறந்து வளர்ந்த வீட்டில் ஆச்சி, தாத்தா, அம்மை, அப்பா, சித்தப்பா வாசனையுடன் இதே வீட்டில் வசிக்க வேண்டும். காலையில் எழுந்து பித்தளை செம்பு நிறைய நீத்தண்ணி குடித்துவிட்டு,  ஆற்றை ஒட்டியுள்ள தாத்தாவின் வயலுக்குச் சென்று, ஆற்றில் முங்கிக் குளித்து . . . பாதியிலேயே சிந்தனை அறுந்து ‘ஆச்சி வாசம், சித்தப்பா வாசம் மட்டும்தானே நினைவில் இருக்கிறது! தாத்தா, அம்மா, அப்பாதான் வரிசையாகப் போய் விட்டார்களே! கொஞ்ச நாட்களில் சித்தப்பாவும் கிளம்பி விட்டார். ஆக நமக்கு நினைவில் இருப்பது ஆச்சி வாசனை மட்டும்தான்’ என்பது மனதுக்கு உறைக்கும். பெருமூச்சு விட்டுக் கொள்வான். ‘எப்பப் பாரு உஸ்ஸு உஸ்ஸுன்னுக்கிட்டு, ஆக்கங்கெட்டாப்ல. வீடு வெளங்கின மாரிதான். ஊரு நெனைப்பு வந்திருக்கும். கேட்டா எங்க ஆச்சி, சித்தப்பா, ஆட்டுக்குட்டி, எருமைமாடுன்னு புலம்ப வேண்டியது. இன்னும் யார் யார் நெனைப்பெல்லாம் இருக்கோ’. இவள் ஆரம்பித்து விடுவாள். உடனே சீக்கிரமாகவே பள்ளிக்குக் கிளம்பிவிடுவான். ‘ரத்தினசபாபதி ஸார்தான்பா நமக்கு இடைஞ்சலே. இவ்வளவு சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்து உக்காந்திடறாரு. ஹெச் எம் அவரைக் காமிச்சு நம்ம எல்லாரையும் போட்டு தாளிக்கறாரு. சீக்கிரம் வந்துட்டாலும் தெருமுனைல உள்ள பாண்டி டீ ஸ்டால்ல வெய்ட் பண்ணுங்க ஸார். நாங்க வந்ததுக்கப்புறம் சேந்து ஸ்கூலுக்குப் போகலாம்’. ஸ்டாஃப் ரூமில் சயின்ஸ் டீச்சர் விஜயலட்சுமி கேலியாகச் சொல்வார்.

ரத்தினத்துக்கு இப்போது வீடு முழுவதும் ஆச்சி வாசனை அடித்தது. அது ஒருமாதிரி பழஞ்சீலையும், நெல் அவிக்கும் மணமும், குழம்புக் கொதியும் கலந்த ஒரு வாசனை. மதியம் வரைக்கும் அந்த வாசனைக்குள் படுத்துக் கிடந்தான். இரண்டு மணிவாக்கில் எழுந்து திரவியம் வீட்டுக்குச் சென்றான். அவர் காத்திருந்தார். 

‘ஃபோன் பன்ணியிருக்கலாமே, மாமா?’ செருப்பை வாசலில் விடும் போது கேட்டான், ரத்தினம். பெரியவரைக் காக்க வைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி குரலில் தெரிந்தது.

பதிலேதும் சொல்லாமல் திரவியம் எழுந்தார். ‘பரவாயில்ல. இது நான் சாப்பிடுத நேரம்தான். வா. வந்து கை களுவு’.

‘இருந்தாலும் ஒரு ஃபோன் அடிச்சிருக்கலாம்.’

‘ஆ . . .மா. ஒங்க மாமா போன் போட்டுட்டாலும். பச்ச பட்டன அளுத்தி பேச மட்டுந்தான் தெரியும். திருச்செந்தூர்ல இருக்கற பிள்ளைட்ட பேசணும்னா அவளா போன் போட்டாத்தான் உண்டும். இவ்வொட்ட போன் போடச் சொன்னதுக்கு ஒரு மட்டம் ரேசன் கடைக்குப் போட்டு கைல குடுத்துட்டா. ஏளா சும்மாருக்கியாங்கேன். கோதுமை இல்லம்மாங்கான். இன்னொரு மட்டம் எவளோ ஒரு முண்ட எடுத்து யாருட்டி நீ? எத்தன மட்டம் போன் போடுதே? ஒனக்கு மானம் இருக்காங்கா. அதுக்கப்புறம் ஒங்க மாமாவுக்கு ஒரு வாரத்துக்கு பளேதுதான் புளிஞ்சு வச்சென். போன போடுத ஆளப்பாரு. போனத் தூக்கிக் கீள வேணா போடுவா’.

ரத்தினத்துக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வீட்டுக்கு வீடு வாசப்படிதான் என்று நினைத்துக் கொண்டான். திரவியம் தன் மனைவி சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவராக இலை முன் அமர்ந்தார். அங்கெல்லாம் மதிய சாப்பாடு தட்டில் சாப்பிடுவதில்லை. வீட்டுத் தோட்டத்திலேயே வாழை, மா, கொய்யா, தென்னை, வேம்பு, முருங்கை மரங்கள் இருந்தன. ‘வாளை எலயும், முருங்கைக்காயும், தேங்காயும் வெல குடுத்து வாங்கற காலம் வந்து போச்சு. எங்கம்மை புண்ணியத்துல நாங்க அப்படில்லாம் சீரளியல’. சொல்லிக்கொண்டே கனகம்மாள் பரிமாறத் தொடங்கினாள். திரவியம் தன் மாமியார் வீட்டில்தான் வசிக்கிறார் என்பதைச் சொல்லிக் காட்டுவதற்கான சந்தர்ப்பங்களுக்கு கனகம்மாள் காத்திருப்பதில்லை. அவளாகவே இப்படி அவ்வப்போது சொல்வதுண்டு. அதுவும் ‘மூணாம் மனுசங்க’ யாராவது வீட்டுக்கு வந்துவிட்டால் இப்படித்தான் தனக்குத்தானே சொல்லிக் கொளவாள். வழக்கம் போல திரவியம் சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறந்தார். 

சாப்பிட்டுக் கை கழுவினவுடன் கிளம்பினால் நல்லா இருக்காது என்பதால் சிறிது நேரம் திரவியத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான், ரத்தினம்.

‘அப்புறம்? என்ன சோலியா வந்திருக்கே?’

‘சோலி என்ன சோலி?! வந்து ஆறேளு மாசம் ஆச்சுல்லா. அதான் வந்தேன். மூணு நாளு லீவு வேற. ஆத்துல குளிக்கணும். ஆம்பூருக்குப் போயி சின்ன ஆச்சிய எட்டிப் பாக்கணும். நாலஞ்சு மாசமாவே சொப்பனத்துல சிவசைலம் கோயில் வந்துக்கிட்டே இருக்கு. அப்புறம் கொஞ்சம் பளய புஸ்தகங்கள்லாம் இங்கன கட்டிப் போட்டிருந்தென். அதுகளயும் தூசியத் தட்டி வேணுங்கறதப் பொறக்கி எடுக்கணும்’. 

வாய் நிறைய வெற்றிலை பாக்கு புகையிலையுடன் மென்று கொண்டிருந்த திரவியம் உம் கொட்டினதாக எடுத்துக் கொண்டான், ரத்தினம். ‘சரி மாமா. முடிஞ்சா சாயங்காலம் வாரென். எனக்காகக் காத்துக்கிட்டு இருக்காதிய. ஒருவேள வர முடியலென்னா காலைல வாரென். ஆத்துக்குப் போகும் போது விட்டுட்டுப் போயிராதிய’.

வீட்டுக்கு வந்த பிறகு கொஞ்ச நேரம் கட்டையைச் சாய்க்கலாம் என்ற எண்ணம்தான் முதலில் இருந்தது. அறைவீட்டுக்குள் இருந்த பரணில் இருந்த பழைய அட்டைப் பெட்டிகள் மற்றும் பச்சை பெயின்ட் அடித்த டிரங்கு பெட்டியைக் கீழே இறக்கினான். டிரெங்க் பெட்டிக்குள் தான் சின்ன வயதில் பயன்படுத்திய பொருட்களை ஆச்சி பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். செப்பு சாமான்கள், பித்தளை பல்லாங்குழி, பிய்ந்த நிலையில் உள்ள ஒரு பஞ்சு தொப்பி, கைக்குழந்தைக்கு அணிவிக்கும் மல்துணி சட்டை, மருந்து புகட்டும் வெண்கலக் கிண்டி. ஒவ்வொன்றையும் தொடும் போது ஆச்சியின் விரல்களைத் தொடுவது போல இருந்தது. ஆச்சியின், அம்மையின் பழஞ்சீலைகள் இரண்டு. இரண்டிலும் ஆச்சி வாசம். அம்மையின் வாசத்தை நினைவுக்குக் கொண்டு வர ரத்தினம் முயன்றதே இல்லை. அப்பாவின் வாசமும்தான். எட்டு வயது வரைக்கும்தான் அவனுடன் அம்மாவும், அப்பாவும் இருந்தார்கள். ஒரு கல்யாணத்துக்குப் போய் விட்டு டி வி எஸ் 50 யில் வரும்போது கடையத்துக்கு அருகில் எதிரே வந்த லாரிக்கு அடியில் போய்ச் சிக்கிக் கொண்டார்கள். பொட்டலமாகக் கொண்டு போய்தான் எரிக்க வேண்டியிருந்தது. 

‘எட்டு வயசுல பெத்தத முளுங்கணும்னு இருந்திருக்கு. வன்னிக்கோனேந்தல் சோசியர் சொன்னாருல்லா. அவர் சொல்லி எது நடக்காம இருந்திருக்கு?’

ஊரார் பேச்சு சின்னப்பையனின் காதுகளை எட்டி விடாமல் இருக்க ஆனமட்டுக்கும் போராடினாள், ரத்தினத்தின் ஆச்சி. அவனுக்கு ஆச்சிதான் அம்மையும், அப்பாவும். ஆச்சிக்கு ரத்தினம்தான் உலகம். ரத்தினம் மட்டுமே. பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போய் விடுவதிலிருந்து, ஆற்றுக்குத் துணிகளைச் சுமந்து கொண்டு இவனையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டு போய்க் குளிப்பாட்டுவது என எப்போதும் அவனுக்கான எல்லாவற்றையும் அவள்தான் செய்தாள். எல்லாம் ஒரு பருவம் வரைக்கும்தான். 

‘பள்ளிகூடத்துக்கு நானே போயிக்கிடுதேன். நான் ஒண்ணும் சின்னப்பிள்ள இல்ல’.

‘அப்படி என்னய்யா நீரு பெரிய மனுசன் ஆயிட்டேரு? பத்துதானெ படிக்கெ! இரி. ஏனத்தை ஒளிச்சுப் போட்டுட்டு வாரென்’.

‘நீ வாரதா இருந்தா நான் பத்தாங்கிளாஸ் பரிட்சையே எளுத மாட்டென்’.

அப்படித்தான் ஆச்சி வாயை அடைக்க வேண்டியிருந்தது. ஆழ்வார்குறிச்சி கல்லூரியிலேயே இளநிலை, முதுநிலை படிக்கும் வாலிபனான பிறகும் ரத்தினம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போதும் ஆச்சி ‘பிள்ள நல்லபடியா வீடு திரும்பணும்மா’ என்று விளக்கு முன் நின் வேண்டிக் கொள்வாள். 

நொறுங்குகிற நிலைமையில் இருந்த ஒரு பழைய புகைப்படத்தை துணிமணிக்குள் இருந்து எடுத்தான், ரத்தினம். 

‘ஹெர்குலிஸ் சிலம்புப் பள்ளிக்கூடம் ஆண்டுவிழாவில் சிலம்பு வாத்தியாருடன் கட் பனியனும், தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக, கையில் சிலம்புடன் மீசையை முறுக்கியபடி தான் நிற்கும் புகைப்படம். முப்பிடாதி அம்மன் கோயில் கொடையை ஒட்டி சப்பரம் ஊர்வலமாக வரும் போது வாத்தியாரின் முன்னிலையில் ரத்தினமும், பிற சிலம்புப் பள்ளிக் கூட மாணவர்களும் சிலம்பு சுற்றிக் கொண்டு செல்வார்கள். அவர்களில் ரத்தினம் மட்டுமே கல்லூரி மாணவன். மற்றவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். பால் பண்ணையில் வேலை செய்யும் திருமலையும், ரத்தினமும்தான் முன்னால் கம்பு சுற்றிச் செல்லும் மூத்த மாணவர்கள். ஆச்சிக்கு ரத்தினம் சிலம்பு படிக்கும் விஷயம் தாமதமாகத்தான் தெரிய வந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் ரத்தினத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘இந்தக் கூத்து வேற எங்கெயாவது உண்டுமா? காலேஜ்லயே பஸ்ட்டு மார்க்கு வாங்குதான். கூடவெ சண்டியன் மாரி சிலம்பு சுத்துதான். இதெல்லாம் பாக்கணும்னு எனக்கென்ன தலையிலெளுத்தா?’

‘இப்பம் ஏன் இப்படி கெடந்து கூப்பாடு போடுதே ஆச்சி?’ என்று கேட்டு அவளை சமாதானப்படுத்த முயன்று முடியாமல் போனது. அவள் போட்ட சத்தத்தில் பக்கத்து வீட்டு ஜன்னலிலிருந்து செண்பகவல்லி, ‘ஏ பெரியம்ம. உன் சத்தம் பிள்ளையார் கோயில் வரைக்கும் கேக்கு. கொஞ்சம் மெதுவாத்தான் பேசேன்’ என்றாள். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆச்சியின் சத்தம் மேலும் அதிகமாக, ஆச்சியை சாந்தப்படுத்த ரத்தினம் பயன்படுத்திய ஆயுதம் ஒரு சொல்லாகவே இருந்தது. கடைசியில், ‘ஏளா நீ எனக்கு ஆச்சியா? எங்க அம்மைல்லா’ என்றான். அதற்குப் பிறகு ஆச்சியிடம் இருந்து ஒரு சொல் கிளம்பவில்லை. அதனால்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக தன் காதில் விழுந்த சிலம்பு வாத்தியாரின் மகள் விஷயம் குறித்து அவள் ஆரம்பத்தில் அவ்வளவு கவலை கொள்ளவில்லை. 

ரத்தினம் சிலம்பு படிக்கும் போது வாத்தியாருக்கு கூழ் கொண்டு வரும் மங்கையை நேருக்கு நேராகப் பார்த்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒருநாள் வாத்தியார் ஆற்றங்கரைக்குப் போயிருந்த போது வந்த மங்கை, சிலம்பு சுற்றிக் கொண்டிருந்த ரத்தினம் சுற்றி முடிக்கும் வரைக்கும் காத்திருந்து அவன் முன் வந்து நின்றாள். வியர்க்க விறுவிறுக்க மூச்சிளைக்க அவள் முகத்தை முதன் முறையாகப் பார்த்த ரத்தினத்தின் கண்களுக்கு அவள் செப்புச்சிலை போல தெரிந்தாள். உடம்போடு இறுக்கமாகக் கட்டிய நூல்சேலையில் மங்கை ஒரு பலசாலிக்கான தோள்களுடன், ஒட்டிய வயிறும், நிமிர்ந்த நெஞ்சுமாக இருந்தாள். முகத்தில் மஞ்சள் மினுமினுத்தது. நெற்றியில் பெரிய சாந்துப்பொட்டு. கூர்நாசி. எச்சிலில் பொதுமிய உதடு. காதுகளில் சின்ன கவரிங் குண்டு. கழுத்தில் சின்னதும், பெரிதுமாக மேல்மார்பு வரை தொங்கிய பாசி மாலை. கூடவே கழுத்தை ஒட்டிய ஒரு கருப்பு கயிறு. கழுத்துக்குக் கீழே வியர்த்திருந்தது. ரத்தினம் பேசுவதற்காகக் காத்திருப்பது போல அவனுக்கு முன்னால் நின்று அவன் கண்களைப் பார்த்தாள். ரத்தினத்துக்கு தாகம் எடுத்தது. குரல் எழவில்லை. கஷ்டப்பட்டு குரலைத் தேடி எடுத்து தொண்டைக்குக் கொண்டு வந்தான்.

‘அப்பா ஆத்துக்கு . . . .’

ரத்தினத்தை முழுசாகச் சொல்லி முடிக்க விடவில்லை, மங்கை.

‘நான் ஒன்னைப் பாக்கத்தான் வந்தென்.’

சொல்லிவிட்டு அவள் கண்கள் சிரித்தன. ரத்தினத்துக்கு பூமி நகர்ந்தது. மங்கைக்குப் பின்னால் தெரிந்த மரங்கள் வேகமாக ஆடின. வியர்வை வற்றி உடம்பு லேசாகக் குளிர்ந்தது.

‘ஏ கோட்டி. நெதமும் ஒன்னப் பாக்கத்தான் வாரென். இன்னைக்கு உனக்கும் சேத்து கூளு கொண்டாந்திருக்கென். போய்க் குடி.’

ஹேண்டில் பாருக்கும் சீட்டுக்கும் குறுக்கே கம்பி வைத்த ஆம்பிளை சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். சைக்கிளில் ஏறி அழுத்திச் சென்றவள் ஒரு முறை திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு சென்றாள். 

அன்றைக்கு சிலம்புப் பயிற்சியை ஏற்கனவே முடித்திருந்த ரத்தினம், மங்கை சென்ற பின் மீண்டும் ஒன்றிலிருந்துத் துவங்கினான். களைத்து ஓயும் போது சிலம்புப் பள்ளியின் பின் வாசல் வழியாக ஏற்கனவே வந்து உட்கார்ந்திருந்த வாத்தியார், பெரிய பித்தளைத் தூக்குச் சட்டியிலிருந்து ஈய தம்ளரில் கூழைச் சாய்த்துக் குடித்துக் கொண்டிருந்தார். உள்ளே நுழைந்து கம்பை வழக்கமாக வைக்கும் மூலையில் சாய்த்து, சுவரில் மாட்டியிருந்த அனுமன் படத்தை வணங்கி, ஆனியில் தொங்க விட்டருந்த சட்டையை எடுத்து உதறிப் போட்டுக் கொண்ட ரத்தினத்தை பார்த்து, ‘இந்தாடே. கூளு குடி. இன்னைக்கு மங்க நெறய வச்சுட்டா’ என்றார்.

********.   ********.    *********

ஆழ்வார்குறிச்சி மாதிரியான சின்ன கிராமத்தில் அவ்வளவு எளிதாக ஒரு பையனும், பெண்ணும் சந்தித்துப் பேசிவிட முடியாது. ஆனாலும் ரத்தினமும், மங்கையும் காதலர்களாகி விட்டிருந்தனர், ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமலேயே. சிலம்புப் பள்ளிக்கூடத்தில் அதிக நேரம் பார்த்துக் கொள்ள முடியாது. ஆனால் அங்கு தினமும் பார்க்க முடியும். நீண்ட நேரம் பார்ப்பதாக இருந்தால் கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும். பரமகல்யாணி கோயிலில் கூட உள்ளூர் ஆட்கள் வருவார்கள். இன்னும் கொஞ்சம் அழுத்திச் சென்றால் சிவசைலம் கோயில். அங்கு ரத்தினமும், மங்கையும் பார்த்துக் கொள்ள கொஞ்சம் தோதாக இருந்தது. அதற்குமே ஒரு முடிவு வந்தது. பிரதோஷ அர்ச்சனை பிரசாதத்தைக் கொடுக்க வீட்டுக்கு வந்த கைலாச குருக்கள் ஆச்சியின் காதுகளில் ஓதி விட்டு சென்றார். 

‘ஒங்க பேரன் கோயிலுக்கு வரும் போதெல்லாம் சிலம்பு வாத்தியார் மக மங்கையர்க்கரசியும் வாராம்மா. ஒரு தடவகூட தப்பினதே இல்ல. ஒங்கக்கிட்ட நான் இத சொல்லாம இருக்கக்கூடாதுல்லா.’

அதற்குப்பிறகு சிவசைலம் கோயிலுக்குப் போவதாக ரத்தினம் சொல்லும் போதெல்லாம் ஆச்சி தானும் உடன் வருவதாகச் சொன்னாள். அதற்கு மேல் ரத்தினமும் அதை வளர்க்காமல் விட்டான். அதற்குப் பிறகு இது எங்கு வெடித்தது? பண்டிதன் கிணற்றில்தான்.

பண்டிதன் கிணறு அவ்வப்போது மூடப்பட்டிருக்கும். பிறகு தண்ணீருக்காக மூடியை அகற்றி விடுவார்கள். ஊரிலுள்ள கிணறுகளில் ஏனோ பண்டிதன் கிணற்றில்தான் தண்ணீர் அதிகம். 

‘அந்தக் காலத்துல பண்டிதன் கிணத்தையொட்டித்தான் பள்ளிக்கூடமே இருந்திருக்கு. விக்கிரமசிங்கபுரத்திலேருந்து யாரோ ஒரு வேதக்காரர் வந்து கிணத்தையொட்டி பிள்ளேள உக்கார வச்சு பாடம் சொல்லிக்குடுத்துக்கிட்டு இருந்திருக்காரு. அதுபோக நல்ல நாள் பாத்து சொல்ல, மண்டையிடி காய்ச்சலுக்கு மருந்து குடுக்க, அரசாங்கத்துக்கு மனு எளுதிக் குடுக்கன்னு எல்லாத்துக்கும் அவர்தான். படிச்ச ஆளுல்லா. அதான் எல்லாருக்கும் அவர் மேல அப்பிடி ஒரு மதிப்பு. அவர் பேரு ஒருத்தருக்கும் தெரியாது. எல்லாரும் அவரை பண்டிதர்னுதான் அடையாளம் சொல்லியிருக்காங்க. வளக்கமா பொளுது சாயறதுக்குள்ளெ கெளம்புற ஆள ஒருநாளு ராத்திரி வரைக்கும் அங்கென உக்காந்து என்னமோ எளுதிக்கிட்டு இருந்திருக்காரு. அன்னைக்கு பௌர்ணை. ஊரு பூரா லைட்டு போட்ட மாரி நெலா வெளிச்சம். பண்ணையார் வீட்டு வண்டிக்காரன் செல்லையா பொண்டாட்டி தண்ணி கோர கெணத்துக்கு வந்திருக்கா. அவ போட்ட சத்தத்துல ஊரே ஓடி வந்து கெணத்துல மொதந்துக்கிட்டிருந்த பண்டிதரைத் தூக்கி வெளியே போட்டுது. இந்தக் கெணறு மொதல்ல குடிச்ச உயிரு. அப்புறம் பேரும் பண்டிதன் கெணறாயிட்டு. இதுவரைக்கும் சின்னதும், பெருசுமா நெறைய உயிரக் குடிச்சுட்டு. ஒங்க சித்தப்பன் பிச்சையா உயிரையும் சேத்துதான்’.

இந்தக் கதையை பால் பண்ணையில் வேலை பார்க்கும் கிட்டுணக் கோனார் சொல்லிக் கேட்டிருக்கிறான், ரத்தினம். பண்டிதன் கிணற்றில் கிட்டுணக்கோனாரின் பசுமாடு விழுந்ததை விதி என்றுதான் சொல்ல வேண்டும். சிலம்பு வாத்தியாருடன் முதலில் கிணற்றுக்குள் துணிந்து இறங்கியது ரத்தினம்தான். சுற்றிலும் ஜனங்கள். கனத்த கயிறுகளைக் கிணற்றை நோக்கி வீசினார்கள். கிணற்றுக்கு எதிரே உள்ள மண் திண்டில் ஆளோடு ஆளாக நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மங்கையின் பார்வை ரத்தினத்தை மேலும் உற்சாகப்படுத்தியது. அதனால்தான் அவன் கிணற்றில் இறங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும். சட்டையில்லாத உடம்புடன் கிணற்றுக்குள் வீசப்பட்ட கயிற்றை தன் உடம்பிலும், கைகளிலும் சுற்றிக் கொண்டான், ரத்தினம். மற்றொரு கயிறு சிலம்பு வாத்தியாரின் உடம்பிலும், கைகளிலும். வாத்தியார்தான் நீருக்குள் இறங்கி பசுவின் கழுத்திலும், பின் அடி வயிற்றிலும் கயிற்றைக் கட்டினார். அடி வயிற்றில் கட்டும் போது மிரண்டு நகர்ந்த பசுவைப் பிடித்துக் கொள்ள ரத்தினமும் நீருக்குள் சென்றான். கிணற்றுக்குள்ளே ஒற்றைக் கற்களாக இறங்கும் படிகளில் ஆளுக்கொரு படியில் ஆட்கள் நின்றார்கள். தேர் இழுப்பது போல இழுத்தார்கள். தேர் இழுக்கும் போது கேட்கும் ஜனங்களின் சத்தம்தான் அங்கும் கேட்டது. வயதான கிட்டுணக்கோனார் கிணற்றின் விளிம்பருகே நின்று, ‘லெச்சுமி லெச்சுமி’ என்று அழுதுக் கொண்டிருந்தார். ‘பாட்டையா அளாதீரும். கயத்தை மாட்டியாச்சு. இப்பம் வந்திருவா ஒம்ம லெச்சுமி’ என்று யாரோ சொன்னார்கள். முதல் படி, இரண்டாம் படி, மூன்றாம் படி என்று எல்லோரும் முக்கி இழுத்தார்கள். சிலம்பு வாத்தியாரும், ரத்தினமும் பசுவுக்கு அடியிலிருந்து உந்தித் தள்ளினார்கள். ஓ ஓ வென சத்தம். இந்தா, தூக்கு, விடாதே, வந்துட்டு, கொஞ்சம்தான்டே, ம்க்கூம், ஏல கால அகட்டி நின்னு இளு, ஒரு பக்கமா சாய்க்காதீங்கலெ சவத்துக் . . . எல பொம்பளையாள் இருக்கு . . . ம்ம்மா என்று லெச்சுமியின் சத்தம் கிட்டுணக் கோனாரின் காதுகளில் கேட்கவும் அவர் சந்தோஷத்தில் அழுதபடியே நிலத்தில் சாய்ந்தார். அவரை தூக்கி அப்புறப்படுத்தினார்கள். ‘ஏட்டி. கொஞ்சம் தண்ணி கொண்டா’. . . மங்கையின் கண்கள் ரத்தினத்தைத் தேடின. இன்னும் ரத்தினம் கிணற்றுக்குள்ளிருந்து வெளியே வரவில்லை. பசுவை வெளியே கொண்டு வந்தார்கள். மங்கை திண்டிலிருந்துக் குதித்து கிணற்றை எட்டிப் பார்த்தாள். உள்ளே சோர்ந்திருந்த தன் தகப்பனாரை ரத்தினம் தாங்கிப் பிடித்து மேலே கொண்டு வர முயன்று கொண்டிருந்தான். 

‘என்னைப் பெத்த அய்யா’. ஊரையே கிழிக்கும் கூக்குரலுடன் ரத்தினத்தின் ஆச்சி மார்பிலும், தலையிலும் அடித்தபடி பண்டிதன் கிணற்றை நோக்கி ஓடி வந்தாள். 

‘என் மக்கள நான் பறி கொடுத்தது போதாதா?’ என்றபடி அவள் கிணற்றருகே வரவும், ரத்தினத்தின் தோள்களில் சாய்ந்திருந்த தன் தகப்பனாரை தன் தோளுக்கு மாற்றினாள், மங்கை. 

*********   **************     ****************

ரத்தினத்தின் ஜாதகத்தைக் கையில் எடுத்தாள் ஆச்சி. இனி தாமதிக்கலாகாது. அவன் இந்த ஊரிலும் இருக்க வேண்டாம். அவனுக்கு திருமணம் செய்து இந்த ஊரை விட்டே விரட்டி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். இந்தமுறை அவளை ‘அம்மை’ என்றழைப்பது வெறும் தந்திரமாக இருக்கும் என்பதை தானே உணர்ந்ததினால் ரத்தினம் அதைச் சொல்லவில்லை. ஆச்சி கிட்டத்தட்ட ஓர் அரக்கியாக ஆகியிருந்தாள். கட்டிய, பெற்ற உயிர்களை இழந்த துயர் அவளை இரும்பாக்கியிருந்தது. தான் சிலம்பு வாத்தியாரின் மகளைத்தான் கட்டுவேன் என்று உறுதியாகச் சொன்ன ரத்தினத்திடம் அவள் பதிலேதும் சொல்லவில்லை. ரத்தினத்தை உட்கார வைத்து எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதற்காக கல்லிடைக்குறிச்சி ஆசாரியிடம் சொல்லி தான் செய்து வாங்கிய மர ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு தோட்டத்துக்குப் போனாள். கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலையை உருவிக் கையில் எடுத்துக் கொண்டாள். வேப்ப மரத்துக்கு முன் அதைப் போட்டு அதில் அவள் ஏறி நிற்கவும், ரத்தினம் ஓடி வந்து அவள் காலைக் கட்டிக் கொண்டான். 

‘இப்பம் காலப் புடிக்கதுக்கு நீ இருக்கெ. நாளைக்கு நீ வெளியெ போயிருக்கும் போது நிச்சயம் தொங்கிருவென்’ என்றாள்.

ரத்தினம் புகைப்படத்தைக் கையில் வைத்தபடியே படுத்துக் கிடந்தான். வெளியே இருட்டியிருந்தது. அதற்குப்பிறகு தனக்கு நடந்த திருமணம், திருமணத்துக்குப் பிறகு கிடைத்த ஆசிரியர் வேலை, முதல் மகள் பிறந்தது, இரண்டாவது மகன் பிறந்தது, ஆச்சியிடம் கொண்டு வந்து தன் பிள்ளைகளைக் காட்டியது. முதன் முறையாக தான் பார்த்த ஆச்சியின் சந்தோஷமான அழுகை. இத்தனைக்கும் மத்தியில் மங்கையைப் பற்றிக் கிடைத்த தகவல்கள். 

‘நீ உங்க ஆச்சிக்கு பயந்து ஊர விட்டே போயிட்டே. சிலம்பு வாத்தியாருக்கு புத்து நோய். ஆளே உருகிபோயி செத்தாரு. அவரு பொண்டாட்டிக்கு ஒரு கூறு கெடயாது. இந்தப் பிள்ளையை ஒருத்தனும் கெட்ட வரல. பீடி சுத்துச்சு. சினிமா கொட்டகை கேண்டீன்ல தட்டு களுவுச்சு. அங்கெனதான் நம்ம சொஸைட்டி நடராஜன் மகன் கூட பளக்கம் வந்திருக்கு. அந்த செறுக்கியுள்ளைய விட இந்தப்பிள்ளை அஞ்சாறு வயசு மூப்பு பாத்துக்கோ. வயித்துல வாங்கி, அப்புறம் அந்தப் பய அதைக் கலைச்சு . . . அதுக்குப் பெறவும் கெட்ட மாட்டென்னு சொல்லி என்ன கதைல்லாம் நடந்துட்டுடே. இவ்வளவும் ஆன பெறகு நாங்க எல்லாருமா போயி நடராஜன்கிட்ட பேசி கெட்டி வச்சோம். இப்பமும் அவன் சொத்துல பத்து பிசா குடுக்க மாட்டென்னுட்டான். மாசா மாசம் அவன் பொண்டாடி என்னமோ படியளக்கா. வண்டி ஓடுது’, 

ஆச்சி செத்த வீட்டில் திரவியம்தான் சொன்னார். ஆச்சியின் சாம்பலைக் கரைத்து விட்டு ஆற்றிலிருந்து வரும் போது, வெயில் சூடு தாங்காமல் தரையில் குதித்துக் குதித்து நடந்து வந்து கொண்டிருந்தான் ரத்தினம். பிள்ளையார் கோயிலுக்கு எதிரே உள்ள செட்டியார் கடையில் சீயக்காய் வாங்கிக் கொண்டிருந்த மங்கையை கவனித்தான். ஒரு கணம் ரத்தினத்தைப் பார்த்த மங்கை, செட்டியார் கடைக்கு முன் வெயிலுக்குத் தொங்க விட்டிருந்த சாக்குக்குள் தன்னை மறைத்தபடித் திரும்பிக் கொண்டாள்.

ரத்தினத்துக்கு தான் எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை. காலை யாரோ பிடிப்பது போல உணர்ந்தான். கண்களைத் திறக்க முடியவில்லை. கண்ணாடி வளையல்களின் சத்தம் துல்லியமாக கேட்டது. முப்பிடாதி அம்மன் கோயிலுக்குள் அடிக்கும் பூவும் எண்ணெயும் கலந்த வாசத்தை நுகர்ந்தான். சிறிது நேரத்தில் கால்களிலிருந்த அழுத்தம், தொடைக்கு ஏறி, மார்பில் படர்ந்து முழுவதுமாக தன் உடம்பின் மேல் சாய்ந்தது. கண்களை இப்போது திறக்க முடிந்தது. முகத்துக்கு நேரே பெண் முகம். தெரிந்த முகம். தெரிந்த வாசம். தெரிந்த மஞ்சள். தெரிந்த பெரிய சாந்துப் பொட்டு. கழுத்தை ஒட்டிய கருப்பு கயிறு. பாசி மாலையைக் காணொம். காதில் கவரிங் குண்டுக்கு பதிலாக பொட்டுத் தோடு. எச்சிலில் பொதுமிய அதே உதடு. ரத்தினத்தின் உதடும் எச்சிலில் பொதுமியது. அதே எச்சிலில். ‘வேற ஒண்ணும் வேண்டாம். பிள்ள குடு. என்கிட்ட தங்கல’. காதைக் கடித்தபடி சொன்னாள். எதையோ சொல்ல வாயெடுத்தான். சொல்ல விடாமல் வாயெல்லாம் எச்சில் வழிந்தது. ஆவேசமான சிலம்பு சுற்றல். சட்டையைக் கழட்டி விட்டு கிணற்றில் இறங்கினான். அடிவயிற்றில் கை கொடுத்து மேலே தூக்கினான். உந்தித் தள்ளினான். இன்னும் இன்னும். இந்தா முடிஞ்சுட்டு. அவ்ளோதான். காலை அகட்டி நின்னு இளு. ஏ தண்ணி கொண்டா . . .

கதவை யாரோ தட்டிக் கொண்டே இருந்தார்கள். கண்ணைத் திறக்கும் போது பின் வாசலிலிருந்து வெளிச்சம் வீட்டுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. கதைவைச் சாத்தாமல் படுத்திருக்கிறோமா?! எப்போது தூங்கினோம். மெல்ல மெல்ல நினைவு வந்தது. இதற்குள் கதவு தட்டும் சத்தம் வலுவானது. கூடவே ‘ஏ ரத்தினம். என்ன இன்னுமா உறங்குதெ? கதவைத் தொறடே. ஆத்துக்குப் போணும்லா!.’

‘இந்தா வந்துட்டென் மாமா’.

தெரு ஏனோ வெறிச்சோடியிருந்தது. ரத்தினத்தை விடவும் திரவியம்

 வேகமாக நடந்தார். பிள்ளையார் கோயிலில் பூஜை மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கடக்கும் போது திரவியம் செருப்பைக் கழட்டி தோளில் இருந்த துண்டை இறக்கி முட்டு மடங்காமல் நாசூக்கான தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக் கொண்டார். ரத்தினம் தோப்புக்கரணம் போடாமல் பிள்ளையாரைக் கும்பிட்டான். எதிரே உள்ள செட்டியார் கடையில் சாக்கு தொங்கவில்லை. வெயில் ஏறும் போதுதான் சாக்கை இழுத்து விடுவார். கடையில் செட்டியாரின் பேரன் உட்கார்ந்திருந்தான். சாமான் வாங்க யாரும் வரவில்லை. செருப்பை மாட்டிக் கொண்டு நடக்கும் போது ஏனோ திரவியத்தின் நடைவேகம் குறைந்திருந்தது. ஒருவேளை ரத்தினத்துக்காக மெதுவாக நடக்கிறாரோ, என்னவோ. 

ஒரு நிமிடம் தயங்கி பின் திரவியத்திடம் கேட்டான், ரத்தினம்.

‘சிலம்பு வாத்தியார் மக மங்கை எப்படி இருக்கா, மாமா?’

‘புருசன் பொண்டாட்டி சண்ட. போய் சேந்துட்டா.

ரத்தினம் அதிர்ந்து போனான்.

‘என்ன மாமா சொல்லுதீங்க? எப்போம்?

‘போன வாரம் நீ வந்திருந்தா தெரிஞ்சிருக்கும். 

இன்னும் பதினாறு களியல.’

‘எ . . . எப்படி?’

‘எப்படின்னா என்னத்தச் சொல்ல! பண்டிதன் கெணத்துல குதிச்சுட்டா’.

****** ******* ********* **********

ஓவியங்கள்: ஸ்யாம்

நன்றி: ஆனந்த விகடன்

நான்காவது புத்தகம் . . .

image‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை.  ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.

அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’.
பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல)

புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’.
அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’.

ராயல் டாக்கீஸ் . . .

காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால் காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதிக்கு, இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான்.

தம்பியின் உண்மையான பெயரான கணபதிசுப்பிரமணியம் என்பது அவனது சர்ட்டிஃபிக்கேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் ஸார்வாள் சொல்வார். ‘ஒண்ணு கணவதின்னு வச்சிருக்கணும். இல்லென்னா சுப்ரமணின்னு வச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி. நண்பர்கள் மத்தியிலும் கணபதிசுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாதென்று ஆச்சிதான் ‘தம்பி’ என்று விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால் அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். ‘அதென்ன சாவி? தொறவோல்னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். ‘ஆமா! ஒலகமே சாவின்னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கெருந்துதான் வார்த்த மொளைக்கோ?’ லோகு பெரியம்மை முனகுவாள். ‘ஏட்டி! திறவுகோல்ங்கறது சுத்தமான தமிள்வார்த்த. அதச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி. என்னா?’. சண்முகப் பெரியப்பா ஏசுவார்.

லோகநாயகியும், சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால் தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும், அப்பாவும். தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை அம்மா என்றழைப்பவன், சண்முகத்தை சண்முகப்பா என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும், லோகநாயகியும், சண்முகமும்தான்.

‘இப்பதாம்ல மதுரயத் தாண்டுதான்’. தம்பியின் வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்துவிட்டு காசி லேசாகச் சிரித்துக் கொண்டான். ஏற்கனவே டிரெயின் இரண்டுமணிநேரம் தாமதம் என்னும் அறிவிப்பைக் கேட்டிருந்தான், காசி. வீட்டுக்குப் போய்விட்டு வருவானேன் என்று ஸ்டேஷனிலேயே காத்திருந்தான். தம்பி திருநெல்வேலியை விட்டுப் போய் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆச்சி இறந்ததற்குக் கூட வரவில்லை. அந்த சமயத்தில் தம்பி எந்த ஊரில் இருக்கிறான் என்றே தெரியவில்லை. காசிதான் கூடமாட நின்றுகொண்டு எல்லா வேலைகளையும் செய்தான். ‘இந்த வீட்ல நீ வேற, அவன் வேறயா? இந்தா பிடி’ என்று வெளித் தெப்பக்குளத்தில் ஈரவேட்டியுடன் நின்று கொண்டிருந்த சண்முகப் பெரியப்பா, காசியின் கைகளில் நெய்ப்பந்தத்தைக் கொடுத்தார். ‘முங்கி எந்திடே! திருநாறு விட்டுக்கோ. அப்புறமா அவன் கைல பந்தத்தக் குடுக்கலாம் சம்முவம்’ என்றார், டெய்லர் மகாலிங்கம் மாமா. ‘ஐயா அரசேன்னு வளத்த பய இல்லாம அவளக் கொண்டாந்து எரிக்கோம். அவ நெஞ்சு வேகும்ன்னா நெனைக்கெ? மூதிக்கு அப்படியாய்யா ஊரும், மனுசாளும் அத்துப் போச்சு?’ கருப்பந்துறையில் வைத்து பேச்சியாபிள்ளை தாத்தா சொல்லும் போது, காசிக்கு அழுகையுடன், தம்பியின் மேல் கோபமும் வந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. மனசு முழுக்க தம்பியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும்தான்.

ரயிலிலிருந்து இறங்கும் போது தம்பி வேறு ஆளாகத் தெரிந்தான். ஏற்றி வாரப்பட்ட தலைமுடி, பிடரி முழுக்க அடர்ந்துத் தவழ்ந்தது. தடித்த ஃபிரேமில் மூக்குக் கண்ணாடி. கையில் ஒரு பெட்டி, தோளில் ஒரு பை. அவ்வளவுதான். காசியைப் பார்த்தவுடன் லேசாக ஒரு குறுஞ்சிரிப்பு மட்டுமே தம்பியின் முகத்தில் காண முடிந்தது. கண்களில் நீர் துளிர்க்க காசி, தம்பியைக் கட்டிக் கொண்டான். ‘பையக் குடு’. வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடக்கத்தொடங்கினான். காசியின் வேகத்துக்கு தம்பியால் ஓடித்தான் வர வேண்டியிருந்தது. காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யவும் காசி சொன்னான். ‘உன்னயப் பாத்தா கல்கத்தால இருந்து வாரவன் மாரியே தெரியல’.

‘ஏம்ல?’

‘பொறவு?என்னமோ சஷ்டிக்கு திருச்செந்தூர்க்கு போயிட்டு வாரவன் மாரி ஒரு பொட்டி, பையோட வந்து எறங்குதெ!’

பதிலேதும் சொல்லாமல் சிரித்த தம்பி, ரோட்டைப் பார்த்தபடி ‘தானா மூனா ரோடே மாறிட்டெல!’ என்றான்.

பதில் சொல்வதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காசி மேற்கொண்டு ஏதும் கேட்காமல் வண்டியை ஓட்டினான். ‘நெல்லை லாட்ஜுல்லாம் மாறவே இல்ல’. மேம்பாலத்தில் போகும் போது தம்பி சொன்னான். ‘சென்ட்ரல்ல இப்பம்லாம் பளைய படம்தானா? இந்த கிரவுண்ட்ல தட்டான் புடிப்பமே! விளாமரம் நிக்கால? வாசல்ல சவ்வுமிட்டாய் வித்த ஆத்தால்லாம் இப்பம் செத்திருப்பாள்லா?’ சாஃப்டர் ஸ்கூலைத் தாண்டும் போது வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் தம்பி. பதிலேதுமே காசி சொல்லவில்லையென்றாலும், அதற்காகக் காத்திருக்காமல் அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டிருந்தான், தம்பி. ‘நல்ல வேளடே. ஆர்ச்ச விட்டு வச்சிருக்கிய. எங்க ரோட்ட அகலப்படுத்த இடிச்சுத் தள்ளியிருப்பேளோன்னு நெனச்சேன்’.
திருநெல்வேலி டவுணின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஆர்ச்சைக் கடக்கும் போது, தம்பியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. அதற்குப் பிறகு தெற்குப்புதுத் தெரு வரும் வரையிலும் தம்பி ஏதும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை.

வாசல்கதவு திறந்தே கிடந்தது. தம்பியைப் பார்த்தறியாத நாட்டுநாய் ஒன்று கட்டில் கிடந்தது. தம்பியைப் பார்த்ததும் கழுத்துச் சங்கிலி இறுக, வாஞ்சையுடன் வாலாட்டிச் சிரித்து வரவேற்றது. அதனருகில் நின்று அதன் தலையை சில நொடிகள் தடவிக் கொடுத்தான் தம்பி. கையில் பையுடன் நின்று கொண்டிருந்த காசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

‘மூதிக்கு இன்னும் நாய்க்கோட்டி போகல’.

பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சின்னப்பெண் வாசலுக்கு ஓடி வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன் ஒரு முழி முழித்து மீண்டும் வீட்டுக்குள் ஓட எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தினான், காசி.

‘ஏட்டி! இதான் தம்பி மாமா’.

கண்களை அகல விரித்துப் பார்த்த அந்தப் பெண், ‘ஆச்சி! தம்பி மாமா வந்துட்டாங்க’ என்றபடி உள்ளே ஓடினாள்.

புருவம் தூக்கிய தம்பியிடம் ‘சுந்தரி மக’ என்றான், காசி. ஒரு கணம் தம்பியின் கண்களில் சின்னதாக ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது. இதற்குள் சண்முகப் பெரியப்பாவின் மகள் சுந்தரி வாசலுக்கு வந்தாள்.

‘வாண்ணே! சும்மா இருக்கியா?’

கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். சுந்தரியின் கைகள் குளிர்ச்சியாக இருந்தது.

‘ஏம்ணே ஒன் கை சுடுது?’ என்றாள், சுந்தரி.

பின்னால் தொடர்ந்த காசி, ‘ஒங்கண்ணனுக்குக் கை மட்டுமா சுடும்?’ என்றான்.

தம்பியிடம் அதற்கும் பதிலில்லை.

‘அப்பா பொறவாசல்ல இருக்கா’ என்றாள், சுந்தரி.

பின்வாசலில் மருதாணி மரத்துக்கருகே நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், சண்முகப்பா. ‘எப்பா! தம்பியண்ணன்’ என்ற சுந்தரியின் குரல் கேட்டு பேப்பரை விலக்கிய சண்முகப்பாவின் தொடைகளைத் தொட்டபடி அவர் காலருகில் அமர்ந்தான், தம்பி. இருவர் தொண்டையும் சட்டென்று வறண்டது. பொங்கிய கண்ணீரை மறைக்கும் விதமாக இருமியபடி, ‘ஏட்டி! தொண்ட பொகயுதுல்லா. தண்ணி கேட்டாத்தான் கொண்டுட்டு வருவியோ?’ என்று சுந்தரியைப் பார்த்து ஏசினார். ‘நீ சாப்பிட்டியா?’. எதிரே படிக்கட்டில் உட்கார்ந்து கொண்ட காசியைப் பார்த்துக் கேட்டார். இதற்குள் தன் ஆச்சி லோகநாயகியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி பின்வாசலுக்கு வந்து சேர்ந்தாள், சுந்தரியின் மகள்.

வந்ததும், வராததுமாக தன் கணவரின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த தம்பியின் அருகில் வந்து குனிந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் லோகநாயகி.

‘வளி தெரிஞ்சுட்டோல ஒனக்கு? அம்ம இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தியோ? எறப்பாளி நாயே. என் சீவனப் புடிச்சுக்கிட்டாக்கும் இத்தன வருசம் இருந்தேன்’.

உடல் நடுங்க தம்பியின் அருகில் தரையில் கையை ஊன்றி உட்கார்ந்தவள், ‘என்னப் பெத்த ஐயா’ என்று தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறலானாள். இனி மறைக்க ஏதுமில்லை என்பது போல் சண்முகப்பாவும் பெருங்குரல் எடுத்து அழுதார். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த சுந்தரியைத் தடுத்தான், காசி. ‘ஒங்கப்பாக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி தவிக்காது’.

royal talkies

ooOoo

மறுநாள் காலை தூங்கி தம்பி எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. மச்சு ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தட்டட்டியில் லோகம்மை கூழ்வற்றல் ஊற்றிக் கொண்டிருந்தாள். உடன் சுந்தரியும், அவள் மகளும்.

‘நீ இன்னும் இத விடலயா?’

ஜன்னலுக்குள்ளிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த லோகம்மை ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். காலையிலேயே குளித்திருந்த முகத்தில் துளிர்த்திருந்த புது வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

‘ஏன் கேக்க மாட்டே? நாங்கல்லாம் கேட்டா சலிச்சுக்கிடுவா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போகும்போதும் மணி ஐயர் கடைலதான் வாங்கிக் குடுத்தனுப்புவா. இப்பம் மகன் வந்திருக்காம்லா! அதான் இந்தத் தாளிப்பு’.

சுந்தரியின் செல்லக் கோபத்தை சிரிப்பால் கடந்து சென்றபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தாள், லோகம்மை. இதற்குள் கீழிருந்து சண்முகப்பாவின் குரல் கேட்டது.

‘ஏட்டி ஒங்கண்ணன் வாரானா இல்லயா? அவனுக்காகத்தான் இன்னும் ரெண்டாம் காப்பி குடிக்காம இருக்கேன்’.

சண்முகப்பாவின் தலைமுடி நரைத்ததைப் போல, லோகம்மையின் முகமும், உடலும் தளர்ந்ததைப் போல, திருநவேலியின் தோற்றத்திலும் சுருக்கங்களையும், மாற்றங்களையும் கண்டான், தம்பி. சிறுவயதில் சைக்கிளில் சுற்றிய பகுதிகளில் காசியுடன் நடந்தே சென்றான். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்து வாசலில் வீசும் காற்றை நின்று வாங்கிக் கொண்டான்.

‘இந்த காத்து மாறல. வாட கூட அப்படியேதான் அடிக்கி’.

பக்தியே இல்லாமல் கோயிலைச் சுற்றுகிறான் என்பது காசிக்குப் புரிந்தது. நடையில் அப்படி ஓர் ஆவேசம். சந்நிதிகளில் திருநீறு, குங்குமம் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளவில்லை. காந்திமதி யானையிடம் மட்டும் சிறிது நேரம் செலவழித்தான். கோயிலைவிட்டு வெளியே வந்த பிறகு சாந்தமானான். தேரடியைத் திரும்பிப் பார்க்கும் போது, காசி பதற்றமடைந்தான்.

‘ராயல் தியேட்டர் பக்கம் போக வேண்டாமா? அப்படியே ஆரெம்கேவி, லாலா சத்திரமுக்கு, தொண்டர் சன்னதில்லாம் போலாம்லா?’

‘ஏன்? தேரடிப்பக்கம் அவங்க யாரும் இருக்காங்களா? அதான் எல்லாரும் போயாச்சே! அப்புறம் என்ன? சும்மா ஒரு நடை நடந்துட்டு போவோம்.’

இப்படித்தான் தேரடிப் பக்கமே கிடையாகக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு காசியும், தம்பியும் வருவார்கள். ஜோதீஸ் காப்பிக்கடையிலிருந்துப் பார்த்தால் பவானியின் வீடு தெரியும்.

பாளையங்கோட்டையில் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக இருக்கும் பவானியின் அப்பா, விடிந்து போனால், அடைந்துதான் வருவார். வீட்டுக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும், மகளும் ராயல் தியேட்டரில்தான் சினிமா பார்ப்பார்கள். அநேகமாக கீழரதவீதி, வடக்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, சுவாமி சன்னதிகளில் வசிப்பவர்கள் வாராவாரம் ராயல் தியேட்டரில் சினிமா பார்ப்பது வழக்கம்.

’தில்லானா மோகனாம்பாள்’ பாக்காத படமாவே? அதான் சிவாஜிக்கு ஒரு மட்டம், பாலையாவுக்கு ஒரு மட்டம், நாகேசுக்கு ஒரு மட்டம், பத்மினிக்கு அஞ்சாறு மட்டம்னு வளச்சு வளச்சுப் பாத்தாச்சுல்லா! என்னமோ புதுப்படம் மாரி செகண்ட் ஷோக்குப் போவோமான்னுக் கேக்கேரு?’

‘வே! ராயல்ல போட்டிருக்கான். பாக்காம இருக்க முடியுமா? வீட்ல பாத்த மாரில்லா இருக்கும். சும்மா சளம்பாதீரும். நலந்தானான்னு நம்மள பாத்து கேக்கற மாரியேல்லா, புருவத்த வளச்சுப் பாடுவா. வாரும், போவோம்’. பட்டுப்பிள்ளை அண்ணாச்சி சொல்வார்.

மாலைநேரக் காட்சிக்கு பவானியும், அவள் தாயும் கிளம்பும்போது தம்பி படபடப்புடன் காத்திருப்பான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காசியை இழுத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்குச் செல்வான். மற்ற நேரங்களில் சோஃபா டிக்கெட்டில் படம் பார்ப்பவன், பவானி வந்தால் மட்டும் காசியை விட்டு பெஞ்ச் டிக்கெட்தான் எடுக்கச் சொல்லுவான். காரணம், பவானி தன் தாயுடன் பெஞ்ச் டிக்கெட்டில்தான் படம் பார்ப்பாள். ’அவ ஒருபக்கம் உக்காந்திருக்கோம். நாம எங்கயோ உக்காந்திருக்கோம். இதுல என்ன கெடைக்கோ, தெரியல. கேட்டா நீயும், அவளும் ஒண்ணா படம் பாத்ததா சொல்லுவே!’

இப்படி ஒன்றிரண்டு அல்ல. அநேகமாக எல்லா வார இறுதிகளிலும் ராயல் தியேட்டரில் பவானியுடன் படம் பார்ப்பான், தம்பி. இதுபோக தினமுமவள் டியூஷனுக்குக் கிளம்பும்வரைக்கும் காத்திருந்து அவளுடனேயே செல்வான். மீனாட்சிபுரத்தில் எஸ்.ஆர்.கே ஸார்வாளிடம்தான் பவானியும், தம்பியும், காசியும் மேத்ஸ் டியூஷன் படித்தார்கள். டியூஷன் தொடங்கும் முன், முடிந்த பின் இரண்டொரு வார்த்தைகள் தம்பியும், பவானியும் பேசிக் கொள்வார்கள்.

‘களுத்துல உத்திராச்சக் கொட்ட எதுக்கு? அத களட்டு. கூட படிக்கிற பிள்ளைள்லாம் அதச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கி’.

‘எங்காச்சி போட்டு விட்டது. களட்டுனா ரொம்ப வருத்தப்படுவா. அவட்ட வேணா சொல்லிட்டு சீக்கிரமே கெளட்டிருதென்’.

‘வேண்டாம்பா. என்னமாது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப்போது’.

ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகத்தான் செய்தது. அத்தனை புத்திசாலியான, படிப்பில் சிறந்து விளங்கிய பெண் ஏன் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் என்பது யாருக்குமே புரியாமல் போனது. தச்சநல்லூர் கணேசன்தான் அந்தக் கேமராவைக் கொண்டு வந்தான்.

‘ஃபாரின் மக்கா. எங்க அத்தான்குள்ளது’.

இரண்டு ரோல்களை எடுத்துத் தள்ளினார்கள். தனியாக எடுத்துக் கொள்ள சம்மதிக்காத பவானி, குரூப் ஃபோட்டோவில் மட்டும் வந்து நின்று கொண்டாள். முன்வரிசையில் பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் பையன்கள் நின்றபடி படம் எடுத்துக் கொண்டார்கள். சரியாக பவானிக்குப் பின்னால் தம்பி. பிரிண்ட் போட்டு காப்பி வாங்கிக் கொள்ள பவானியின் தாய் பணம் தர மறுத்தாள்.

‘டியூஷன் படிக்கப் போன எடத்துல என்னத்துக்குட்டி போட்டொவும், கீட்டொவும்? மாசாமாசம் பீஸுக்கே ஒங்கப்பா மூக்கால அளுதுக்கிட்டெ குடுக்காக’.

தம்பிதான் பவானிக்கும் சேர்த்து பிரிண்ட் போட்டு ஒரு காப்பியை அவள் கையில் கொடுத்தான். வற்புறுத்திதான் திணிக்க வேண்டியிருந்தது.

‘எங்கம்மை ஏசுவா.’

‘நீ என்னத்துக்குக் காமிக்கெங்கென்?’

இத்தனைக்கும் நோட்டுப்புத்தகத்தில் மறைத்துதான் வைத்திருந்தாள். அப்படியே வைத்திருந்தால் கூட ஒன்றும் பிரச்சனை ஆகியிருக்காது. ஃபோட்டோவில் தானும், தம்பியும் இருக்கும் பகுதியை மட்டும் கத்தரித்து, தனியாக வைத்திருந்தது, பவானியின் தாய் கண்களில் சிக்கியது. படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கு பயந்த பவானியின் தாய் உக்கிரமாகிப் போனாள். ஆத்திரமும், கோபமுமாக வசவைத் தொடங்கியவளிடம் ஒருகட்டத்தில் பவானி எதிர்க்குரல் எழுப்ப, அவமானத்தில் அடிக்கத் தொடங்கி, பின் அழுகையும் சேர்ந்து கொண்டு, மனம் பிசகி, கையில் மண்ணெண்ணெய்கேனைத் தூக்கினாள்.

‘ஒங்கப்பன் வந்து என்னைக் கொல்றதுக்குள்ள நான் கொளுத்திக்கிட்டுப் போயிருதேன்’.

பாய்ந்துப் பிடுங்கிய பவானி தாயின் கால்களில் விழுந்து, ‘நீ பயப்படுத மாரி என்னமும் நடக்காதும்மா. என்னய நம்பு’ என்று அழ, ஓரளவு நிலைமை சமாதானமானது. காலையில் பால் ஊற்ற வருகிற கோவிந்தன் சொல்லித்தான் தம்பியின் வீட்டுக்கு விவரம் தெரிய வந்தது.

’கம்பவுண்டரு ராயல்ல செகண்ட் சோ முடிஞ்சு வந்திருக்காரு. உள்ள இருந்து பொகஞ்சிருக்கு. அதுக்குள்ள சாமிசன்னதி பட்டர்மாருங்க எல்லாரும் ஓடி வந்து கதவ ஒடச்சிருக்காங்க. ரெண்டு பேரும் கரிக்கட்டயாக் கெடந்திருக்காங்க. யாரு அம்மை, யாரு மகன்னே தெரியலயாம்’.

‘யாருடே அது?’ ஜோதீஸ் காபிக்கடை ஆனந்தம் மாமா கேட்டார். காசியுடன் வந்த தம்பி, அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, ‘என்ன மாமா? சும்மா இருக்கேளா?’ என்று கேட்கவும், ‘ஏ தம்பில்லா! எப்பிடி இருக்கே மாப்ளே’. வந்து அணைத்துக் கொண்டார். ‘எத்தன வருசம் ஆச்சு மாப்ளே ஒன்னப் பாத்து. காசி கூட முன்னமாரி வரமாட்டங்கான். காப்பி குடிக்கியா?’

தேரடிப் பக்கம் பவானி வீடு இருந்த இடத்தில் இப்போது வேறேதோ கடை ஒன்று நின்றது. சலனமேயில்லாமல் அந்தப் புதியக் கட்டடத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான், தம்பி.

ஆண்டிநாடார் கடையைத் தாண்டும் வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராயல் தியேட்டர் பக்கம் நிமிர்ந்துப் பார்த்துக் குழம்பியவன், காசியிடம் ‘எல! ராயல் டாக்கீஸ் இப்பம் இல்லயா?’ என்று கேட்டான்.

தம்பி இப்படித்தான். தியேட்டர் என்று அவன் வாயில் வராது. டாக்கீஸ்தான். ‘இந்தக் காலத்துப்பிள்ளேளு மாரியா அவன் பேசுதான். எல்லாம் ஒன் வளப்பு’. சண்முகப்பா அவர் அம்மையைப் பார்த்து சொல்லுவார். ‘எல! நானாது டாக்கீஸுங்கென். எங்கம்மைல்லாம் கொட்டகைன்னுல்லா சொல்லுவா’. பதிலுக்கு ஆச்சி சொல்லுவாள்.

இரண்டொரு நாட்களில் தம்பி கல்கத்தாவுக்கேக் கிளம்புகிறான் என்கிற செய்தி வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

‘கல்யாணமும் பண்ணிக்கிடலங்கான். பளய மாரி இல்லன்னாலும் சின்ன யூனிட் போட்டு மில்லும் ஓடிக்கிட்டுதான இருக்கு! அத கவனிச்சுக்கிட்டு இங்கன இருக்கலாம்லா! அப்பிடியே ஒரு தாலியும் கட்ட வச்சிரலாம். நான் இன்னும் எத்தன நாளைக்கு இருக்கப் போறென்! நீயாது கொஞ்சம் சொல்லுடே காசி’.

சண்முகப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே காசிக்குத் தெரியவில்லை. தம்பியிடம் அவன் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கேட்கும் எதிர்க்கேள்விக்கான அர்த்தம் காசிக்குப் புரிந்தது. சண்முகப் பெரியப்பாவுக்கோ, லோகம்மைக்கோ அது புரிய வாய்ப்பில்லை. முகத்தில் உணர்ச்சியே இல்லாமல், அதே சமயம் சற்றே கலங்கிய கண்களுடன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த தம்பி, காசியின் முகம் பார்க்காமல் கேட்டான்.

‘ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடியுமால?’

நன்றி- ஆனந்த விகடன்