நான்காவது புத்தகம் . . .

image‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை.  ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.

அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’.
பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல)

புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’.
அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’.

ஹிஸ்டரி, ஜியாக்ரஃபி…

                                                   varthairasanaimoongilmoochu

 

‘எழுத்தும், எண்ணமும்,’ குழுமத்தில்தான் முதன்முதலில் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன். அந்தக் குழுமத்துக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எழுத வைத்தவர் நண்பர். பி. கே. சிவகுமார். பின்னர் சிவகுமாரும், கோபால் ராஜாராம், துகாராம் சகோதரர்கள் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து துவக்கிய ‘வார்த்தை’ சிற்றிதழில் ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதிய சில கட்டுரைகள் போக இன்னும் பல கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது, ‘யுகசந்தி’. ‘வார்த்தை’ சிற்றிதழில் என் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டவர்களில் முதன்மையானவர் காலம்சென்ற தி.க.சி. தாத்தா. “வே! எங்கலே இருந்தேரு இத்தன நாளா?”

‘வார்த்தை’ சிற்றிதழின் ஆசிரியர் ஐயா பி.ச. குப்புசாமி தொடர்ந்து ஊக்குவித்தார்.

‘நான் திருநவேலில பிறக்கலியேன்னு ஏங்க வைக்கறீங்களே, சுகா!’

“சுகா, ‘வார்த்தை’ல எளுதறீங்க. ஓகே. அதையெல்லாம் இணையத்துல ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி சேத்து வச்சா, அது ஒரு டைரி மாதிரி காலத்துக்கும் இருக்கும்,” என்று சொல்லி எனக்கான ஒரு வலைப்பூவைத் துவக்கி அதுவரைக்கும் நான் எழுதிய கட்டுரைகளை அந்த வலைப்பூவில் இட்டு சேமிக்கத் தொடங்கினார், நண்பர் மனோ. பெயர் மட்டும் ‘வேணுவனம்’ என்று நான் வைத்தேன்.

பிறகு தம்பி சேதுபதி அருணாசலம் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவங்க இருக்கிற விஷயத்தைச் சொல்லி அதில் தொடர்ந்து எழுதச் சொன்னார். ;வார்த்தை’யில் ஏற்கனவே பிரசுரமாகிய ‘திசை’ கட்டுரையுடன் சொல்வனம் முதல் இதழ் வெளியாகியது. இதற்கிடையே ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் இரா. கண்ணன் விகடனில் தொடர் எழுதச் சொன்னார். அதுதான் ‘மூங்கில் மூச்சு’. முப்பத்து மூன்று வாரங்கள் விகடனில் எழுதிய பிறகும், தொடர்ந்து ‘சொல்வனம்’ மின்னிதழில் எழுதி வந்தேன். வருகிறேன். “‘வார்த்தை’ இதழில் வெளிவந்திருந்தாலும் பரவாயில்லை, நாங்களும் எங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கிறோம்,” என்று நான் எழுதிய கட்டுரைகளை தமது ‘ரசனை’ பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுரித்தார், சகோதரர் மரபின் முத்தையா. இப்போது ‘வேணுவனம்’ கட்டுரைகள், மற்றும் ஆனந்த விகடன் இதழில் நான் அபூர்வமாக எழுதுகிற சிறுகதைகளை இட்டு சேமித்து வைக்கிறார் நட்பாஸ் என்கிற பாஸ்கர் என்கிற ‘பதாகை’ பாஸ்கர்.

இதுவே நான் ரைட்டரான ஹிஸ்டரியும், ஜியாக்ரஃபியும்.