ராஜம்மாளின் பேத்தி . . .

திருமதி சுகாசினி மணிரத்னம் முதன் முதலாக ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியபோது மணிரத்னத்திடம் பலரும் கேட்டபடி இருந்திருக்கிறார்கள். அதுகுறித்து தன் இல்லாளிடம் ‘என்ன இது? நான் அத்தனை திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்! நீ இப்போதுதான் முதல் திரைப்படத்தை இயக்குகிறாய். என்னிடம் வந்து உன் படத்தைப் பற்றியே கேட்கிறார்களே!’ என்று மணிரத்னம் சொன்னதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனிடம் இதுபோன்று பலரும் கேட்டிருக்கக் கூடும். ‘இந்திரா’வுக்கு முன்பே சொல்லிக்கொள்ளும்படியான ‘பெண்’ குறுங்கதைத்தொடரை இயக்கிய சுகாசினியைப் போல அருண்மொழிநங்கையும் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆக, நான் படித்த ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தை எழுதியது, எழுத்தாளர் அருண்மொழி நங்கை. திருமதி ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கையை தனியாக அறிவேன். 

‘பனி உருகுவதில்லை’ புத்தகம் முழுக்க முழுக்க அருண்மொழி நங்கையின் இளமைப் பருவ நினைவுகளைச் சொல்லிச் செல்கிறது. விரிந்த நிலத்தில் தங்கள் இளமைப் பருவத்தை கழிக்கும்படி வாழ்ந்தவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நூலாசிரியரே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்கிறார். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட சிறுமி அருண்மொழி. இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பற்றி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சொல்வது போல துல்லியமான விவரங்களுடன்,சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம்.

வாசிக்கிற சூழலில் வளர நேர்கிற எல்லா குழந்தைகளுக்கும் துவக்கத்தில் பரிச்சயப்படுகிற ரஷ்ய இலக்கியம் அருண்மொழிக்கும் அறிமுகமாகிறது. சிறுவயதில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிற லெனின் அருண்மொழிக்கும் பிடித்தவராகிறார். எந்த அளவுக்கென்றால் விளாதிமீர் இல்யீச் லெனின் உல்யானவ் என்று ஒவ்வொரு முறையும் லெனினின் முழு பெயரைச் சொல்லுமளவுக்கு. அருண்மொழியின் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் சூட்டியிருக்கிறார், அருண்மொழியின் தகப்பனார். 

ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம் என்று சொல்லும் அருண்மொழியின் எட்டு வயதிலேயே வாஸந்தி எழுதிய சிறுகதை புரட்டிப்போட்டிருக்கிறது. பிறகு வழக்கம்போல அந்த வயதுக்கேயுரிய ரத்னபாலா, கோகுலத்தில் வரும் சிறார் கதைகள், துப்பறியும் சாம்பு என்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.  வளர வளர சுஜாதா உவப்பானவராக இருந்திருக்கிறார். சுஜாதா எழுதிய கொலையுதிர் கால நாயகி லீனா போன்று தனக்கு ஒரு அழகான பெயர் இல்லையே என்று அந்த வயதில் அருண்மொழி வருந்தியிருக்கிறார். ‘உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்’ என்று காதலிக்கும்போது ஜெயமோகன் எழுதிய கடிதத்துக்குப் பிறகே தனது பெயர் தனக்குப் பிடித்துப் போனதாகச் சொல்வது அவரது பெயரை விடவும் அழகாக உள்ளது. பிறகு தான் படித்த எழுத்தாளர்களில் பலர் தங்காமல் போனதாகக் குறிப்பிடுகிறார், அருண்மொழி. அப்படி தங்காமல் போன எழுத்தாளர்கள் கல்கியும், சாண்டில்யனும். வானம்பாடி கவிஞர்களான அப்துல் ரஹ்மான், மு. மேத்தா, நா. காமராசன், மீரா, வைரமுத்து, அபி போன்றவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது அருண்மொழி பன்னிரெண்டாம் வகுப்பைக் கடந்திருக்கிறார். நல்ல வேளை அதற்குப்பிறகு அருண்மொழி கல்லூரிக்குப் போய்விட்டார். சுஜாதா குறிப்பிட்ட ‘Writers Writer’ அசோகமித்திரனைத் தேடிப் பிடித்துப் படித்த கல்லூரி மாணவி அருண்மொழிக்கு அப்துல் ரஹ்மானுக்குப் பிடித்த எழுத்தாளரான சுந்தர ராமசாமியும் படிக்கக் கிடைக்கிறார். அதற்குப்பிறகு புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சு, தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஆ. மாதவன்’ என்று அருண்மொழி வாசித்த எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. அத்தனை எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதைகளைத் தனியாகச் சொல்லிச் செல்கிற அருண்மொழி ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்லும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் என்று ஒற்றை வரியில் கடந்து சென்று விட்டது ஜெயகாந்தனின் தீவிர வாசகனான எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. (பின் நாட்களில் அவர் பார்க்கும் சாமியார் ஒருவர் ‘விழுதுகள்’ ஓங்கூர் சாமியாரை ஞாபகப்படுத்துவதாக மட்டும் ஒரு இடத்தில் சொல்கிறார்.) ஜெயகாந்தனின் வாசகர்களால் அவரது கதைகளைக் கோடிட்டுக் காட்டாமல் இருக்கவே முடியாது. வெறுமனே ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி மட்டுமே விடிய விடிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றி அருண்மொழி ஒரு வரியில் சொல்லிச் சென்றது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம், என்னைப் போலவே ஜெயகாந்தனின் தீவிர வாசகரான ஜெயமோகனுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். உயிர்பயம் காரணமாக அவர் மௌனமாக இருந்திருக்கலாம்.

இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் காட்சிகள் வாசிப்பவனின் கண் முன்னே விரிகின்றன. பல இடங்களில் வாசனையையும் நுகர முடிகிறது. எழுத்தின் வெற்றி அதுதான். தனது பாட்டி வீட்டுக்கு கூண்டுவண்டியில் வைக்கோல் பரத்தி அதன் மேல் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து செல்லும் சிறுமி அருண்மொழிக்கு புள்ளமங்கலத்தின் முதல் வாசனையாக வைக்கோல் மணத்தைத்தான் உணர முடிகிறது. அந்த சமயத்தில் வாசிக்கும் நமக்கும் அந்த வைக்கோல் வாசனையைக் கடத்துகிறார். பதேர் பாஞ்சாலியில் அப்புவும், துர்காவும் ஓடும் மூங்கில் அடர்ந்த பாதையைப் பார்க்கும்போதெல்லாம் புள்ளமங்கலத்தை ஏக்கத்துடன் நினைத்துக் கொள்ளும் அந்த ஏக்கம்தான் அருண்மொழியை எழுத வைத்திருக்கிறது. 

பால்ய நினைவுகளை எழுதும் போது அந்த வயதின் மனநிலையிலேயே எழுதியிருப்பது பல இடங்களில் நன்றாக வந்திருக்கிறது. அத்தைக்குக் கல்யாணம் ஆன மறுநாள் புதுமணமக்களை புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக் கலைஞர் ‘செஸ்ட் வரைக்கும்தான் வரும். பாப்பா ஃபிரேமுக்குள் வராது. தள்ளிப் போகச்  சொல்லுங்க’ என்று பாப்பா அருண்மொழியைத் தள்ளி நிற்கச் சொல்கிறார். வெளியே வரும் பாப்பா ‘எல்லோரும் சாகட்டும்’ என்று நினைக்கிறது. அப்படித்தான் நினைத்திருக்கும். அதை அப்படியேதான் இப்போது எழுத வேண்டும். 

இந்தப் புத்தகத்தில் மிக அழகாக வந்திருக்கிற ஒரு கட்டுரை ‘மனோகரன் சாரும், ஜோதி டீச்சரும்’. மிக சிறப்பான ஒரு சிறுகதையாக, நேர்த்தியான ஒரு குறும்படமாக மலர தகுதியான ஒன்று. மனோகரன் சார் ஆலந்தூருக்கு கையில் சூட்கேஸுடன் வந்து இறங்குகிற காட்சி எனக்கு உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் காட்சியை ஞாபகப்படுத்தியது. டீச்சர் மீது ஈர்ப்பு ஏற்படாத மாணவ மாணவிகள் இல்லாத ஊர் எது? எழுத்தாளர்கள் அருண்மொழியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனோகரன் சார். அம்மா செய்து கொடுத்தனுப்பிய அடையை மனோகரன் சாரிடம் கொடுக்கும் சிறுமி அருண்மொழியிடம் ‘என்ன இது?’ என்று மெல்லிய குரலில் கேட்கிறார், மனோகரன் சார். ‘அடை . . .  அம்மா செஞ்சாங்க’ என்று அருண்மொழியும் மெல்லிய குரலில் பதில் சொல்கிறார். அப்போதுதான் தெரிகிறது. இப்படி மெல்லிய குரலில் பேசுவதுதான் நாகரிகம் போலிருக்கிறது. இனிமேல் இவரிடம் பேசும்போது தான் எப்போதும் பேசுவதுபோல் காட்டுக்கத்தல் கத்தக் கூடாது. ஸ்டைலாகப் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார். 

பொதுவாகவே கான்வெண்ட்டில் படிக்கும் குழந்தைகள் மேல்  மற்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கண் இருக்கும். பெரிய கண்களையுடைய அருண்மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘சவுக்கு விறகு எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தைத் தரும். அது எப்படி இவை கான்வெண்ட் குழந்தைகள் மாதிரி ஒரே பருமனில் வளைவு நெளிவு இல்லாமல் நேராக சீராக இருக்கின்றன என்று தோன்றும்’ என்று எழுதுகிறார். அருண்மொழியின் சிறுவயது ஞாபகங்களில் சில சந்தோஷமளித்தன. அவரது சிறுவயது ஞானம் ஆச்சரியமளித்தது. பத்தாம் வகுப்பு மாணவியான அருண்மொழிக்கும், நடிகை பத்மினியின் தங்கை ராகினி போன்று நீளவாக்கு முகம் கொண்ட ஜேனட் அக்காவுக்குமான இசைரசனை உரையாடல்கள் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’ பாடலை ஜேனட் அக்காள் பாடுகிறாள். அந்தப் பாடல் தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை ஜேனட் அக்காள் சொல்கிறாள். தனக்குப் பிடித்த பாடகரான மலேஷியா வசுதேவன் பற்றியும் ஜேனட் அக்காள் மூலம் அருண்மொழி அறிந்து கொள்கிறார். 

‘எவ்ளோ மேன்லியான கொரல் தெரியுமா அவருக்கு? மலர்களிலே ஆராதனை பாட்டுல நம்மாளு எப்டி என் ட் ரி கொடுப்பார் தெரியுமா? பொங்கும் தாபம், பூம்புனல் வேகம், போதையில் வாடுது’ன்னு அவர் வரும்போது ஜானகியம்மாவ கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காரும்மாங்கிற மாரி இருக்கும்’ என்கிறார். தேர்ந்த ரசனையின் வார்த்தைகள். காலங்கள் மழைக்காலங்கள் பாடல் கேட்கும் போது தனக்கு ஏற்படும் உணர்வைப் பற்றி ஜேனட் அக்காவிடம் சொல்லும் சிறுமி அருண்மொழியின் வார்த்தைகள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

‘மழ முடிஞ்சு லேசா சொட்டிட்டு இருக்கு. அப்ப நம்ம திண்ணையில ஒரு காப்பியோட அத பாத்துட்டு இருக்கோம். ஓட்டுலேர்ந்து சொட்டுசொட்டா விழுற மழைத்துளி ஏற்கனவே தேங்குன தண்ணியில விழும்போது ஒரு பூவரசம் பூ குழல் மாரி ஒரு டிசைன் காட்டுமே . . . அத பாத்துக்கிட்டே இருக்க மாரி இருக்குக்கா’.

அந்த வயதில் இத்தனை கூறோடு நானெல்லாம் பேசியதேயில்லை. இப்போது நான் எழுதும் இசைக் கட்டுரைகளெல்லாம் அப்போது கேட்ட அனுபவத்திலும், இப்போது வளர்ந்திருக்கிற ரசனையிலும் எழுதுவது. அந்தவகையில் அந்த வயதிலேயே இப்படி அனுபவித்து பேசியிருக்கிற அருண்மொழியைப் பார்த்து பொறாமை கொள்கிறேன்.

திருமணத்துக்குப் பிறகு ஜெயமோகனோடு எழுத்தாளர் சுந்தரராமசாமியைப் பார்த்த ஒரு நிகழ்வை அருண்மொழி எழுதியிருக்கிறார். அப்போது சுந்தரராமசாமி ‘நாயர்களுக்குக் காது கிடையாது’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரியாக அருண்மொழி இப்படி எழுதியிருக்கிறார். ‘அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன்’. இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரி இது.

அருண்மொழியை வேறெப்படியும் பார்ப்பதைக் காட்டிலும் ராஜம்மாள் பாட்டியின் பேத்தியாகவே பார்க்க விழைகிறேன். இந்தப் புத்தகத்தை அவருக்குத்தான் அருண்மொழி சமர்ப்பித்திருக்கிறார். ராஜம்மாள் பாட்டியின் சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் மிக அழகாகத் தீட்டியிருக்கிறார். வாழ்க்கையை ரசித்து, ருசித்து, சுதந்திரமாக வாழ்ந்து மறைந்த அந்த மனுஷியை அரசி என்கிறார் அருண்மொழி. அவரது இறுதிக்காலத்தை அருண்மொழி சொல்லியிருந்த விதம் அந்த அரசியை இன்னும் உயர்த்திக் காட்டுகிறது. கடைசியில் எங்கு தேடினாலும் கிடைக்காமல் போய்விட்ட ராஜம்மாள் பாட்டி பறவைகள் இறப்பது போல மறைந்துவிட்டாராம். கூடவே பாட்டியைப் பற்றி மேலும் இப்படி சொல்கிறார். 

‘நான் பாட்டியிடம் பால் குடித்ததில்லை. ஆனால் அவருடன் தான் எனக்கு பால்தொடர்பு இருக்கிறது.’

பனி உருகுவதில்லை என்ற இந்தப் புத்தகத்தை அருண்மொழியின் வாயிலாக எழுதியிருப்பது ராஜம்மாள் பாட்டிதான்.