கார்த்திகை தீபத்துக்கு முந்தின நாள் காலையிலேயே அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீட்டுக்கு முன்பாக நெல்லையப்பர் கோயில் ஊழியர்கள் வெட்டப்பட்ட ஒரு பனைமரத்தை கொண்டு போட்டுவிடுவார்கள். இதேபோல் சுவாமி சன்னதி முக்கிலும் ஒரு பனைமரம் போடப்படும். சுவாமி சன்னதி முக்கு இன்றைக்கும் ‘சொக்கப்பனையடி முக்கு’ என்றே அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபம் வரை ஒட்டுமொத்த திருநெல்வேலி ஊரிலுள்ள மக்களனைவரும் இவ்விரண்டு சொக்கப்பனைகளையும் பற்றி பேசிக் கொண்டிருப்பர்.

‘மக்கா, இந்த வருசம் அம்மன் சன்னதி சொக்கப்பானை சாமி சன்னதிய விட சைசு கூட .. பாத்தியா?’

‘வருசா வருசம் இதையேத்தான் சொல்லுதெ . . . எனக்கென்னமோ ஒரே மாதிரிதான் தெரியுது.’

‘ஒனக்கு மயிரத் தெரியும் . . நான்லாம் ஒரு தடவ பாத்தெம்னா அளவ மனசுலயே குறிச்சுருவென். தெரியும்லா!’

சொக்கப்பனையை சொக்கப்பானை என்று சொல்லும் மனிதர்கள் இன்றும் திருநெல்வேலியில் இருக்கிறார்கள். கார்த்திகை தீபம் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் அது சிறுவர்களுக்கு விசேஷமானது. தீபாவளிக்கு வாங்கிய பட்டாசில் மிஞ்சியதை கார்த்திகை தீபத்துக்காக சிறுவர்கள் சேமித்து வைத்திருப்பர். அவற்றை மிஞ்சியது என்று சொல்வதுகூட தவறுதான். பெற்றோர்தான் அவற்றை பிள்ளைகளுக்குத் தெரியாமல் எடுத்து வைத்திருப்பார்கள். தீபாவளியன்று வெடிக்கும் போதே சிலர் சொல்லிப் பார்ப்பார்கள்.

‘ஏ மூதி . . எல்லாத்தையும் கொளுத்தி கொண்டாடிராதெ. கார்த்தியலுக்கு இருக்கட்டும்’.

கார்த்திகையை ‘கார்த்தியல்’ என்றே திருநெல்வேலி மக்கள் உச்சரிப்பார்கள். ‘என்ன அண்ணாச்சி! கார்த்தியல்லாம் செறப்புத்தானா?’ என்று கேட்கும் திருநெல்வேலி மக்களை இன்றைக்கும் பார்க்கலாம். தீபாவளிக்கு துணியெடுக்கும் போதே கார்த்திகைக்கும் சேர்த்து துணியெடுப்பவர்களும் உண்டு. அப்படி எடுக்காதவர்கள் கண்டிப்பாக கார்த்திகை தீபத்தன்று தீபாவளிக்கு எடுத்த உடையையே அணிந்திருப்பார்கள்.

கார்த்திகைக்கு முதல் நாள் போடப்பட்ட பனையின் மேலேறி விளையாடுவதற்கென்றே சிறுவர் கூட்டம் கிளம்பி வரும். காலையிலிருந்து அன்று இரவு வரை கீழே கிடக்கும் பனையை சுற்றி வந்து ஏறி மிதித்து விளையாடுவார்கள். நள்ளிரவில் பனை தனியாக கவனிப்பாரின்றி இருட்டுக்குள் கிடக்கும். மறுநாள் காலையிலேயே பனையில் துளை போடப்படும் சத்தம் கேட்கத் துவங்கும். நன்கு சீவப்பட்ட மூங்கில் துண்டுகளை குறுக்குவாக்கில் போடப்பட்ட துளைகளில் பொறுத்தி அடிப்பார்கள். அம்மன் சன்னதி முக்கில் தோண்டப்பட்ட குழியில் பனை இறக்கப்பட்டு அதைச் சுற்றி ஓலை கட்டப்பட்டு அதன் மேல் நீளமான மஞ்சள் நிறத் துணி போர்த்தப்படும். அதுவரை வெறும் பனையாக இருந்த பனை எல்லோரும் வணங்கிச் செல்லும் சொக்கப்பனையாகி விடும்.

கார்த்திகை தீபத்தன்று மாலையில் வீடுகளில் எப்போதும் ஏற்றும் குத்துவிளக்கு போக சிறுசிறு விளக்குகள் ஏற்றப்பட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும். அரிசி மாவுடன் வெல்லம் கலந்து உருட்டி, அதில் குழியிட்டு எண்ணெய் ஊற்றி, பஞ்சுத்திரியிட்டு ஏற்றிய ‘மாவிளக்கு’, மற்ற விளக்குகளுக்கு தலைமை தாங்கும். அன்று இரவே அந்த மாவிளக்கு, ‘பிரசாதம்’ என்னும் பெயரில் பலகாரமாகிவிடும். அதில் ஒன்றை தின்றாலே வயிறு திம்மென்று ஆகிவிடும். ராமையா மாமா அதிலுமே மூன்று தின்பார். நான்காவது வைக்கும் போதுதான் அரைகுறையாக மறுப்பார். ‘வேண்டாம் மாப்ளே, வீட்ல வேற ரெண்டு தின்னேன். வச்சிருங்க, காலையில வேணா வந்து சாப்பிடுதென்’.

காய்ந்த கோரப்புல்வகையைச் சேர்ந்த ‘சுளுந்து’ எனப்படும் சூந்துக்கட்டை கொளுத்தி கையில் பிடித்துக் கொண்டு சிறுவர்களின் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் அணையாமல் அவ்வப்போது எண்ணெய் ஊற்றிப் பார்த்துக் கொள்வதற்காக அநேகமாக எல்லா வீட்டு கன்னிப் பெண்களும் தத்தம் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் அவர்களின் உடை பட்டுப்பாவாடை, பட்டுச்சேலைதான். ஒருசிலர் தரைச்சக்கரமும், புஸ்வாணமும் கொளுத்துவதுண்டு. அம்மன் சன்னதியிலும், சுவாமி சன்னதியிலும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ஓரக்கண்ணால் மேய்ந்தபடியே இளைஞர்களின் ஊர்வலம் ஆரம்பமாகும்.

‘வெள்ளத்துல அடிச்சுட்டு வந்த மாதிரி எல்லாவளும் வெளியெ வந்துட்டாளுவொளெ.’

‘ஆமாடே. நமச்சிவாயம் பிள்ள பேத்தி சமஞ்சு மூணு வருசத்துக்கப்புறம் இன்னைக்குத்தானெ வெளியெ வந்து நிக்கா’.

‘அவளவிட அவ அம்மல்லா கெடந்து ரொம்ப நெளியுதா. கவனிச்சியா?’

ரகசிய கேலிப் பேச்சுக்களுடன் நகர்ந்து சொக்கப்பனை பக்கம் கூடத் துவங்குவர். ஒன்பது மணியளவில் ஆட்கள் நடமாட முடியாதபடி சொக்கப்பனை முன் கூட்டம் நிரம்பி நிற்கும். பத்துமணியை நெருங்கும் போது மேளதாளத்துடன் பட்டர் வந்து சேருவார். சரியாக மின்சாரம் துண்டிக்கப்படும். இருட்டுக்குள் பனையின் உச்சியை நோக்கி ஒரு சிறு வெளிச்சம் செல்வது தெரியும். மேலே சென்று தீபாராதனை காட்டப்படும்போது பட்டரின் முகம் லேசாகத் தெரியவரும். பட்டர் தீபாராதனையை மூன்று சுற்று சுற்றிவிட்டு நெல்லையப்பர் இருக்கும் திசை நோக்கி காட்டிவிட்டு பனையின் உச்சியில் வைத்த மறு நொடியே கீழே ஓலையில் தீ வைக்கப்படும். திகுதிகுவென எரியத் தொடங்கும் நெருப்பின் வெக்கை தாங்காமல் ஜனங்கள் சில அடிகள் பின்னோக்கி நகருவார்கள். எங்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்கும் போது கீழே நின்று கையைக் காட்டுவான் குஞ்சு. என்னமோ அவன் ஒருவனே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் அவனது கையசைப்பு இருக்கும். எரிந்து முடிந்த சொக்கப்பனை, அரைமணிநேரம் போராட்டத்துக்குப் பிறகு, கோயில் ஊழியர்களால் வெட்டிச் சாய்க்கப்படும். பனை வீழ்ந்தவுடன் ஆளாளுக்குப் பாய்ந்து அதில் சொருகப்பட்டிருக்கும் மூங்கில் துண்டுகளை பிடுங்கி எடுப்பார்கள். அந்தக் குச்சியில் கொடி படர்ந்தால் நன்கு வளரும் என்று ஒரு நம்பிக்கை.

சொக்கப்பனை கொளுத்தி முடிந்தவுடன் உச்சினிமாகாளி அம்மன் கோயில் பூஜை மணி அடிக்கத் துவங்கும். கோயிலின் முன் ஒரு சிறிய பப்பாளி மரம் நடப்பட்டு அதில் ஓலை சுற்றி கொளுத்தப்படும். பெரிய சொக்கப்பனையின் குட்டி போல இதையும் அம்மன் சன்னதி மக்கள் வணங்குவர். எரியும் போதே ஓலைப்பட்டாசு போல சின்ன வெடிகளை தீக்குள் போட்டு வெடிக்கச் செய்யும் இளைஞர்களை ‘சவத்து மூதிகளா’ என்று பெரியவர்கள் ஏசுவார்கள். ஆனாலும் இந்தச் சேட்டையைச் செய்ய இளைஞர்கள் தவறுவதில்லை.

வருடாவருடம் சொக்கப்பனையின் போது ஒரு பட்டரை கொளுத்திவிடுவார்கள் என்றே நான் வெகுகாலம் நம்பி வந்தேன். எனது சந்தேகத்தை குஞ்சுவும் ஊர்ஜிதம் செய்தான். ‘ஒனக்கு தெரியாதா? அதுக்குன்னே கோயில்ல இருந்து பட்டர்களை வளக்காங்க’ என்று கூசாமல் சொல்லியிருந்தான். விவரம் தெரிந்த வயதில் கார்த்திகை தீபம் முடிந்த ஓரிரு நாளில் நானும், குஞ்சுவும் போத்தி ஹோட்டலில் ரவா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணேச பட்டர் வந்து எங்களருகில் உட்கார்ந்து பன்னீர் பக்கோடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டார். அந்த வருடம் அவர்தான் சொக்கப்பனை கொளுத்தியவர். நான் மேஜைக்கடியில் அவர் கால்களையே பார்த்தேன்.

பல வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் கார்த்திகை தீபத் திருநாளன்று திருநெல்வேலியில் இருக்க நேர்ந்தது. ஊர் முழுக்க முதல் நாளிலிருந்தே ‘கார்த்தியல்’ பேச்சை கேட்க முடிந்தது. பனை வந்து இறங்கியதிலிருந்து, மறுநாள் இரவுவரை நான் பார்த்து, கேட்டு வளர்ந்த அதே விஷயங்கள் என் கண் முன்னாடி மறுபடியும் நடந்தேறின. ஒன்பது மணிவாக்கில் மாடிக்குச் சென்று நின்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆண்களும், பெண்களுமாக கூட்டம் நெருக்கியடித்தபடி நின்று கொண்டும், ஆங்காங்கே வீட்டு வாசல்களில் உட்கார்ந்தபடியும் பட்டரை எதிர்பார்த்தபடி காத்திருந்தனர். சினிமா தியேட்டரில் படப்பெட்டி வரும் போது இருக்கும் பரபரப்பு, பட்டர் வரும் போது இருந்தது. மின்சாரம் சரியாகத் துண்டிக்கப்பட, சில நொடிகளில் சொக்கப்பனை கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. வெக்கை கலந்த வெளிச்சத்தில் கண்களை சுருக்கியபடி நின்று கொண்டிருந்தேன். கீழே கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘மாமா’ என்றது. குரல் வந்த திசையை பார்த்தேன். தானே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் குஞ்சுவின் மகன் என்னைப் பார்த்து கையசைத்தான்.

4 thoughts on “சொக்கப்பனை

  1. பெங்களூரில் கார்த்திகை அன்று விளக்கு வைத்தால் அது தமிழ் வீடு என்று அர்த்தம் கார்த்திகை – தமிழர்களின் திருவிழா. ஆனால் தமிழ் நாட்டில் விடுமுறை கிடையாது.
    பாதி பேருக்கு கார்த்திகை மறந்தே போய்விட்டது. நான் பெங்களூரில் இருந்தாலும் கார்த்திகை,சஷ்டி,தைப்பூசம், பங்குனி உத்திரம்,வைகாசி விசாகம் கொண்டாஇவிடுவது உண்டு. அது தானெ நம் திருவிழா.

  2. திரு. சுகா, சில மாதங்களாக உங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன்..அருமையான நெல்லைத் தமிழ் நடை! இன்னும் நிறைய எழுதுங்கள்!! நெல்லை ஜான்ஸ் கல்லூரியில் படித்த சமயத்தில் பல முறை உங்களது தந்தையாரின் பேச்சு கேட்டிருக்கிறேன். உங்களது திரைப்பட முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள். சமீபத்தில் திருநெல்வேலி சொதி பற்றி ஒரு பதிவு போடும்போது உங்களது சொதி பற்றிய பதிவை மேற்கோள் காட்டியுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்! நன்றி!!

  3. அண்ணாச்சி நல்லாருக்கு.

    கேட்டேளா… சொக்கப்பனை எரிஞ்ச பெறவு, அதுல உள்ள கம்புகுச்சிய எடுத்துட்டு வந்து வீட்டு கூரைல சொருவுனா, காத்து கருப்பு அண்டாதும்பாவோ.

    கேள்விபட்டிருக்கேளா?

Comments are closed.