சின்ன அண்ணனை அன்னண்ணன் என்று நாங்கள் அழைக்கும் போது தெரியாதவர்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். அவனது முழுப்பெயர் அன்னபூரணன் என்பதை சுருக்கி அன்னண்ணன் என்று கூப்பிடுவதை விளக்கிச் சொன்ன பிறகு லேசாக புரிந்து கொண்ட மாதிரி பார்ப்பார்கள். (அன்னபூரணி கேள்விப்பட்டிருக்கோம். அது என்னடே அன்னபூரணன்?) என்னை விட பன்னிரெண்டு வயது மூத்த அன்னண்ணன், இப்போது இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலை இருக்கிற தாழையூத்தில் தனிவீடு கட்டி மனைவி, மக்களுடன் வசிக்கிறான். இன்றைக்கும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து கண்ணாடி முன் நின்று வகிடெடுத்து தலை சீவுகிறான். ஆரெம்கேவியில் துணியெடுத்து சட்டை, பேண்ட் தைத்துக் கொள்கிறான். அபூர்வமாகவே எனக்கு ஃபோன் பண்ணுவான்.

எல . . என்னா பிஸியா இருக்கியா?

இல்லண்ணே. சொல்லு. எப்படி இருக்கே?

நல்லா இருக்கென். . . நேத்து ராத்திரியே ஒன்ன கூப்பிடணும்னு நெனச்சென். சரி, நீ தூங்கியிருப்பியோன்னு விட்டுட்டென்.

ஏன்ணே?

அத ஏன் கேக்கெ. கே.டிவில கலங்கர வெளக்கம் போட்டாம்ல.

குரலில் மகிழ்ச்சி பொங்கி வழியும். அதற்கப்புறம் நான் ஃபோனிலேயே கலங்கரை விளக்கம் படம் பார்ப்பேன். இடையில் இண்டெர்வெல்லெல்லாம் கூட விடுவான். வணக்கம் போட்டு முடிக்கும் போது  எம்.ஜி.ஆரின் மகத்துவம் பற்றி ஃபிரெஷ்ஷாக பேச ஆரம்பிப்பான். எப்போதாவதுதானே பேசுகிறான் என்பதால் நானும் உற்சாகம் இழக்காமலேயே கேட்பேன். சுவாரஸ்யம் குறையாமல் சொல்வதால் நமக்குமே அலுக்காது அன்னண்ணணின் பேச்சு.

அன்னண்ணன் எப்படி எம்.ஜி.ஆர் ரசிகனானான் என்பதே சுவாரஸ்யம்தான். பாளையங்கோட்டை  கான்வெண்டில் படித்த அன்னண்ணனை தினமும் பள்ளிக்குக் கூட்டிச் சென்று வந்த சிவராமண்ணன் ஒரு தீவிர தி.மு.க அனுதாபி. எம்.ஜி.ஆர் அப்போது தி.மு.க.வில் இருந்திருக்கிறார். சிவராமண்ணன் எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தவர். மிகச் சிறுவயதிலேயே அன்னண்ணனின் தகப்பனார்(எனது பெரியப்பா) காலமாகி விட்டார்கள். சோர்வடைந்திருந்த அந்தச் சிறுவனின் உள்ளத்தில் மெல்ல மெல்ல வந்து உட்கார்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

” என்னைக்கு தலைவர் சினிமாவ விட்டு போனாரோ, அன்னைக்கே தியேட்டருக்கு போறத விட்டுட்டெண்டே.

தலைவர் இப்பொ இருந்தாருன்னா எலங்கை பிரச்சன இவ்வளவு மோசமா போயிருக்கும்னு நெனைக்கியா?

சாப்புட்டா எங்க வீட்டு பிள்ளல சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல.”

வாழ்க்கையையே அன்னண்ணன் எம்.ஜி.ஆர் வழியாகத்தான் பார்க்கிறான். அன்னண்ணன் ஒரு கல்லூரியின் வணிகவியல் விரிவுரையாளன் என்பது கூடுதல் தகவல்.

அன்னண்ணன் தவிர எங்கள் குடும்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேறு யார் என்று யோசித்துப் பார்க்கும் போது முன்னே வந்து விழுபவர் அய்யாப்பிள்ளை சித்தப்பா. குடும்பத்தின் மூத்த மகனுக்கு எங்கள் குடும்ப வழக்கப்படி தாத்தாவின் பெயரை சூட்ட வேண்டும்.  அய்யாப்பிள்ளை சித்தப்பாவுக்கும் அவர்கள் தாத்தாவின் பெயர். அதை சொல்லி பெண்கள் கூப்பிட முடியாது. (அப்புறம் என்ன இழவிற்கு அந்தப் பெயரை வைக்கிறார்களோ?) அதனால் ‘அய்யாப்பிள்ளை’. அதே காரணத்தால் நான் கூட குடும்பப் பெண்களுக்கு ’அய்யா’தான்.
தமிழ்நாடு வேளாண்துறையில்  பணிபுரிந்த அய்யாப்பிள்ளை சித்தப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் உடனே பேண்டைக் கிழற்றிப் போட்டுவிட்டு ஒரு சாரத்தை உடுத்திக் கொண்டு வெளியே கிளம்பி விடுவார். அப்போது காலில் செருப்பு அணிவதில்லை. இரவுதான் வீடு திரும்புவார். இந்த நிகழ்ச்சி நிரல் ஒருநாளும் தப்புவதில்லை. அதற்கான காரணத்தை சித்தப்பா சொல்லி கேட்டிருக்கிறேன்.

‘வீட்ல இருந்தா தேவையில்லாம ஒங்க சித்தி கூட சண்ட வரும்.’

சினிமா பார்ப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்குக்கு வழியில்லாத நெல்லை மக்களுக்கென்றே டவுணிலிருந்து ஜங்ஷன் வரைக்கும் அடுத்தடுத்து ஒன்பது தியேட்டர்கள் உண்டு. ஒரு ரவுண்ட் படங்கள் முடிந்து அடுத்த ரவுண்ட் வரும் போது புதுப் படங்கள் வரவில்லையென்றால் பழைய படங்களையே இன்னொரு முறை பார்ப்போம். அப்படி வேறேதும் படம் கிடைக்காமல் பார்வதி தியேட்டரில் ‘காலத்தை வென்றவன் பார்க்கப் போனேன். அது எம்.ஜி.ஆரின் பல படங்களிலுள்ள பாடல், சண்டைக் காட்சிகளின் தொகுப்பு. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலக்காட்சியையும் கடைசியில் இணைத்திருந்தார்கள். படம் முடிந்து மக்கள் மௌனமாகக் கலைந்து வரும் போது சற்று சத்தமாகவே அழுதபடி ஒரு மனிதர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். நடையும், உடைந்த அந்தக் குரலும் அய்யாப்பிள்ளை சித்தப்பாதான் அது என்பதை காட்டிக் கொடுத்தது. பின்னால் வருபவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சாரத்தைத் தூக்கிக் கண்ணைத் துடைத்து, மூக்கைச் சிந்தி கவர்ச்சியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தார் சித்தப்பா. அவரது தகப்பனார் இறந்தபோது கூட அவ்வளவு அழவில்லை அவர். ‘தாத்தாவுக்கு வயசாயிட்டுல்லா’ என்று சாதாரணமாகத்தான் சொன்னார்.

‘அவாள மாதிரில்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா’ என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரை சொல்லுவார் நெல்லையப்பன். எங்கள் வீட்டு வாட்ச்மேனாக இருந்த நெல்லையப்பன் பெயருக்கேற்றார்போல் நெல்லையப்பர் கோயிலில் பணிபுரிந்து வந்தார். கோயிலில் பகல் டியூட்டி என்றால் இரவில் எங்கள் வீட்டுப் பணி. அவரை வாட்ச்மேன் என்று சொல்வது ஒரு அடையாளத்துக்காகவே. பகலென்றால் வாசலில் உட்கார்ந்தும், இரவென்றால் படுத்தும் தூங்கியபடி வீட்டை காவல் காப்பார். ஒரே ஒரு முறை சுவரேறி குதித்து திருட முயன்ற ஒரு மர்ம மனிதனை சொப்பனத்தில் விரட்டி பிடித்திருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் முரட்டு ஆசாமிதான்.

‘நம்ம வெறகுக்கட சங்கரன் மண்டய சொவத்துல முட்டியெ உடச்சுட்டெம்லா.

அவன் என்னய்யா பண்ணுனான்?

எய்யா, ஒண்ணாத்தான் கொட்டகைக்கு போனோம், கூண்டுக்கிளி பாக்க. அவன் ஜிவாஜி ரசிகன். படம் பாத்துக்கிட்டு இருக்கும் போதே வார்த்த தடிச்சிட்டு. நம்ம முன்னாடியெ அவாள தப்பா பேசுனா சும்மா விட முடியாதுல்லா, என்ன சொல்லுதியெ?’

நெல்லையப்பனின் அன்றாட நடமாட்ட்த்தில் உள்ள நுட்பமான மாற்றம் அம்மாவின் கண்ணுக்கு மட்டும் துல்லியமாகத் தெரிந்து விடும். இரவுச் சாப்பாடு முடிந்து வாசலில் வந்து நாங்களெல்லோரும் உட்காரும் போது நெல்லையப்பனுக்கு பணம் கொடுப்பாள். அதற்காகவே காத்திருக்கும் நெல்லையப்பன் வாயெல்லாம் பல்லாக இரண்டு கை நீட்டி வாங்கிக் கண்ணில் ஒற்றி மடியில் முடிந்து கொள்வார். ‘இந்த முடிவானையும் கூட்டிக்கிட்டு போரும்’. சமையல் வேலைகளை கவனித்துக் கொள்ளும் செல்வராஜ் அண்ணனைக் காட்டிச் சொல்வாள். செல்வராஜ் அண்ணன் பாண்ட்ஸ் பவுடர் போட்டு வெளுத்த வேஷ்டி கட்டி தயாராக இருப்பார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருவரும் செகண்ட் ஷோவுக்குக் கிளம்பிச் செல்வார்கள்.

‘எல, சீக்கிரம் வந்திருவென். தூங்காம முளிச்சிக்கிட்டு இருக்கணும். என்னா?’

எங்கள் வீட்டு லேபரடார் ‘லியோ’விடம் பொறுப்பாகச் சொல்லி விட்டுத்தான் செல்லுவார் நெல்லையப்பன்.

ரத்னா தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்க்க நெல்லையப்பனுடன் சென்று வந்த செல்வராஜ் அண்ணன் மறு நாள் காலையில் சொன்னார்.

‘எம்மா, இனிமேல் என்னைய நெல்லையப்பண்ணன் கூட சினிமாக்கு அனுப்பாதீய.

ஏன்டே?

வீலுவீலுன்னு விசிலடிச்சு காத செவிடாக்கிருதாரு.

ஏ, தெரைல எம்.ஜி.ஆர பாத்தா விசிலடிக்க மாட்டாங்களா. அவரு மட்டுமா அடிக்காரு?

எம்.ஜி.ஆர பாக்கும் போது அடிச்சா பரவாயில்லம்மா. டிக்கெட் எடுக்க கவுண்டருக்குள்ள நொளயும் போதே ஆரம்பிச்சிருதாரு. இன்ட்ரோல்ல ஒண்ணுக்கு போகும் போதும் மனுசன் விடல. ச்சை . . ஒரே மண்டையிடி.’

அதற்கு பிறகு செல்வராஜ் அண்ணனுடன்  லெட்சுமண பிள்ளையின் மகன் கபாலி மாமா சேர்ந்து கொண்டான். கபாலி மாமாவின் எம்.ஜி.ஆர் பட அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். எந்த ஒரு எம்.ஜி.ஆர் படத்தைப் பற்றிப் பேசும் போதும் அவரது கதாபாத்திரத்தின் பெயரையே சொல்லுவான்.

‘நாளை நமதேல விஜயகுமாரை விஜய்ன்னுதான் கூப்பிடணும். தெரியும்லா?

சிவசக்தி தியேட்டருக்கு இன்னைக்கு எப்படியாது போயிரணும். கோபியோட சேட்டைய பாத்து எவ்வளவு நாளாச்சு.’

உரிமைக்குரல் பார்க்க காலையில் அப்ஸரா பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படிக்கும் போதே முடிவு செய்து விடுவான். ‘என்னைக்கு பரிடசைக்கு போகாம படகோட்டிக்கு போனானோ, அன்னைக்கே இந்த தாயளி வெளங்க மாட்டான்னு நான் முடிவு பண்ணிட்டெம்லா?’ தனது தகப்பனார் லெட்சுமண பிள்ளையின் வழக்கமான ஏச்சுக்கள் கபாலி மாமாவின் காதுகளை மீறி உள்ளே செல்வதில்லை. அவன் நாளுக்கு நாள் எம்.ஜி.ஆரிடம் நெருங்கிக் கொண்டேதான் இருந்தான். இப்போது திருநெல்வேலி பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், அ.தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளராகவும் செவ்வனே பணியாற்றி வருகிறான்.

எனக்கு வரும் எம்.ஜி.ஆர் பட சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன்.

‘ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் இண்டர்வியூக்கெல்லாம் போய் கஷ்டப்படறாரே! என்ன படம் அது?

அடடா, அது நான் ஏன் பிறந்தேனாச்சே! அந்த படம் சரியா போகல.

ஏன்?

ஏங்க, தலைவருக்கே வேலை கஷ்டப்படுறாருன்னா அதை யாராலேங்க ஒத்துக்க முடியும்? நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் பாட்டு அதுலதான். மிஸ் பண்ணிராதீங்க.’
எவ்வளவு சீரியஸான வேலையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி பேச எப்போதுமே ஆர்வமாக இருப்பார் ராமகிருஷ்ணன். மகிழ்ச்சி பொங்க விடிய, விடிய பேசுவார்.

ரோஜர் ஃபெடரரின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் போட்டிருக்கும் அன்னண்ணனின் மகனிடம் பேச நான் எப்போதுமே பிரியப்படுவேன். படிப்பு, விளையாட்டு இரண்டிலுமே சிறந்து விளங்கும் அவனும் என்னைப் போலவே கீபோர்டு வாசிப்பதில் ஆர்வம் காட்டுபவன். அவ்வப்போது சில குறிப்பிட்ட ராகங்களின் ஸ்வரங்களை எழுதி, அவற்றில் உள்ள முக்கியமான பாடல்களையும் குறித்து கொடுப்பேன். சென்ற முறையும் அதுபோல நிறைய பாடல்கள் குறித்து பேசிவிட்டு கீபோர்டு வாசிக்கச் சொன்னேன். பயல் லயித்து வாசித்ததை அருகில் இருந்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. வேறு விஷயங்கள் குறித்து பேச்சு திரும்பியது.

‘தீபாவளிக்கு ஏதாவது படம் பாத்தியாலெ?

உ.சு.வா பாத்தேன் சித்தப்பா, ராஜ் டி.வில.’

உ.சு.வா? குழப்பத்துடன் அன்னண்ணனைப் பார்த்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை மடித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து என்னைப் பார்த்து,

‘எல, என்ன முளிக்கெ? தெரியலியா . . . உலகம் சுற்றும் வாலிபன்ல’

என்றான், முகத்தில் பெருமிதம் பொங்க.

3 thoughts on “உ.சு.வா.

  1. “உ.சு.வா… சூ.. (சூப்பர்).

    என் குடும்பத்திலையும் எம் சி ஆர் அபிமானிகள் உண்டு

  2. அற்புதமான பதிவு சுகா. உங்களின் பதிவு கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்களை நினைவு படுத்துகிறது, எம் ஜி ஆர் ரசிகர்களின் கதைகள் எல்லாம் கேட்க கேட்க சலிக்காதவை, அதிலும் திருநெல்வேலி கதைகள் ஆகையால் மனதிற்கு இன்னும் நெருக்கமானதாய் இருக்கிறது.

  3. Dear Suka,
    Next time i’ll post in Tamil. But, I live one more time in Tirunelveli whenever i read your post. 600 km is no more a distance whenever i visit your blog. Real Tirunelveli lives within the Tirunelvelians who live outside TVL. Pl write atleast once in a week. MY HEART WISHES.

    With Luv,
    Rajagopalan.J
    (C.N.Village)
    Chennai.

Comments are closed.