ஆச்சி இருந்த காலத்தில் தாத்தா, கொள்ளுத் தாத்தா இவர்களின் புகைப்படங்கள் தவிர திருநெல்வேலியில் உள்ள எங்கள் வீட்டில் இன்னொரு மனிதரின் புகைப்படமும் இருந்தது. பச்சை வண்ணப் பின்னணியில் மார்பளவுப் புகைப்படமான அதை மட்டும் தார்சாவில் பழைய சீனச்சுவர்க்கடிகாரத்துக்கு அருகே மாட்டி வைத்திருந்தனர். சிறுவனாக இருக்கும் போது அந்தப் புகைப்படத்தில் இருப்பவரைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் பெயர் மட்டும் தெரியும். காரணம், அந்தப் புகைப்படத்திலேயே அது குறிக்கப்பட்டிருந்தது, ‘இசைமேதை’ ஜி. ராமனாதன் என்று.
gr11
எங்கள் குடும்பம் முழுக்கவே ஜி.ராமனாதனின் ரசிகர்களாக இருந்ததை நாட்கள் ஆக ஆகப் புரிந்து கொண்டேன். அவரது முழுப்பெயரை எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் யாருமே சொல்லி நான் கேட்டதில்லை. ஜி.ஆர், என்றும் ஐயர் என்றும்தான் சொல்வார்கள். விவரம் தெரியாத சிறுவயதிலிருந்தே ஜி.ராமனாதனின் இசையில் வெளிவந்தத் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் நான் விரும்பியும், விரும்பாமலும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அதன் பலனாக பெயர் தெரியாமலேயே பல ராகங்கள் எனக்கு பரிச்சயமாயின. ஷண்முகப்ரியா, தர்பாரி கானடா, கல்யாணி, ஆரபி, காம்போதி, மோகனம், சாருகேசி, கம்பீரநாட்டை, சாரங்கா, சங்கராபரணம், நாட்டக்குறிஞ்சி, பீம்ப்ளாஸ், காபி, ஆனந்தபைரவி, சஹானா, செஞ்சுருட்டி, சரஸ்வதி, சிந்துபைரவி, ரதிபதி ப்ரியா, பந்துவராளி என அந்தந்த ராகங்களின் லட்சணங்கள் புரிந்த பிறகே அவற்றின் பெயர்கள் எனக்கு தெரிய வந்தன.
ஜி.ராமனாதனின் பாடல்களைக் கேட்பதுடன் நின்றுவிடாமல், அதைப் பற்றிய சுவையான பல தகவல்களும் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கண்ணதாசனுக்கும், கே.வி.மஹாதேவனுக்கும், விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கிடைக்க வேண்டிய புகழனைத்தும் எம்.ஜி.ஆர் ஒருவருக்கே போய் எப்படி அவை எம்.ஜி.ஆர் பாடல்களாகப் பார்க்க, கேட்கப் பட்டவையோ, அதே போல ஆரம்பகாலத்தில் ஜி.ராமனாதனின் பாடல்கள் அனைத்துமே எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களாகவே அறியப்பட்டிருக்கின்றன. தூக்கு தூக்கி, உத்தமப்புத்திரன் போன்ற படங்களின் பாடல்களிலேயே ஜி.ராமனாதன் பரவலாக அறியப்பட்டார் என்று பெரியவர்கள் பேசிக்கொள்ளும் போது கேட்டிருக்கிறேன். இதில் உத்தமப்புத்திரன் திரைப்படம் இரண்டுமுறை எடுக்கப்பட்டது என்றும், இரண்டுக்குமே ஜி.ஆர்தான் இசை என்பதும் சுவாரஸ்யமான செய்தியாக இருந்தது. இருந்தும் இரண்டாவது உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் ஜி.ஆருக்குக் கிடைத்த பாராட்டுக்களே அதிகம் என்பதும் தெரிய வந்தது.
‘பளைய உத்தமப்புத்திரன் சின்னப்பா படம்லா? ஐயர் மியூஸிக்கையெல்லாம் எவம்ல கவனிச்சான்?’
‘கணேசனையும் மீறில்லா ஐயர் நின்னாரு. என்ன சொல்லுதெ?’
‘அதும் ஒண்ணுக்கு ரெண்டு கணேசன மீறில்லா!’
கர்நாடக இசையை முறையாகப் பயின்றிருந்த பெரியப்பாக்கள், அத்தைகள் எல்லோருமே ஜி.ராமனாதனைக் கொண்டாடியிருக்கிறார்கள். அடுத்தத் தலைமுறைக்கு மிக எளிமையான முறையில் அவர்கள் கர்நாடக இசையைக் கடத்துவதற்கு ஜி.ராமனாதன்தான் பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார் என்பதை எங்களால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ஆரின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார்.
‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’
நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
‘நீ வாய்ப்பாட்டு படிச்சேன்னா அந்தப் பாட்டு வாசிச்சதுக்கு ஏசுவேன். பொட்டிதானெ வாசிக்கெ. வாசி வாசி. ஆனா ராகம் தெரிஞ்சுக்கிடதுக்கு மட்டும்தான். செம்மங்குடியே மார்க் போட்ட பாட்டாக்கும். ராமநாதன் துப்புரவா போட்டிருப்பான். ராயல் டாக்கீஸ்ல மூணு வருசம்லா ஓடுச்சு’.
சமாதானப்படுத்தும் விதமாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.
 உற்சாகத்தில் வாசிக்கத் துவங்க சாருகேசி கைக்குள் வந்தது.
‘பீம்ப்ளாஸ்ல ஒருத்தன் இப்பிடி ஒரு பாட்டு போட முடியுமாய்யா? பாரு, எடுத்த எடுப்புலுயே என்னமா ஏறுதுன்னு?’
‘வாராய் நீ வாராய்’ மெட்டை ஹார்மோனியத்தில் வாசித்தபடியே சொல்வார், வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பா. பல்லவியின் சங்கதிகளை ஒவ்வொரு முறையும் வேறுவேறாக அமைத்து அசத்தியிருப்பார் ஜி.ராமனாதன். தொடர்ந்து அந்தப் பாட்டு தந்த உற்சாகத்தில் பீம்ப்ளாஸ் வாசித்துக் கொண்டே இருந்து, என்னிடம் ஹார்மோனியத்தைத் தருவார் பெரியப்பா. பீம்ப்ளாஸ் ராகத்தின் ஸ்வரங்களே தெரியாமல் ‘வாராய் நீ வாராய்’ வாசித்துப் பார்ப்பேன். பிறகு சங்கீத வகுப்புகளில் பீம்ப்ளாஸ் பாடத்தின் போது எளிதாக நான் வாசிப்பதைப் பார்த்து நாலுமாவடியிலிருந்து வரும் மாணவர் சாந்தக்குமார் சலித்துக் கொண்டார்.
‘இந்த சவத்துப்பயவுள்ள பீம்பிளாசு வருவெனாங்கெய்யா?
அவரிடம் மெல்ல ‘வாராய் நீ வாராய்’ பாட்டை வாசித்துப் பழகச் சொன்னேன். சில நாட்கள் கழித்துச் சொன்னார்.
‘யோவ், நீரு ஆள சோலிய முடிக்கதுக்குல்லா வளி சொல்லியிருக்கேரு. ஒமக்கென்ன ஆர்மொனியத்துல ஒரு இளுப்பு இளுத்து விட்டுருவேரு. மூச்சு முட்டுது போரும். ஒருவாரத்துலயே எனக்கு ஆஸ்துமா வந்துட்டு. பாட்டாவா போட்டிருக்கான், சண்டாளப்பாவி.’
அவர் புல்லாங்குழல் கற்றுக் கொண்டிருந்தார்.
கங்கைகொண்டானிலிருந்து வரும் ராமச்சந்திரன் பெரியப்பா பிறப்பால் பிராமணர். கிட்டத்தட்ட எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாங்கள் நினைக்கிற அவர், கேள்வி ஞானத்திலேயே எல்லா ராகங்களையும் துல்லியமாகச் சொல்பவர். சத்தமாகப் பேசுவார். சத்தமாகச் சிரிப்பார். சத்தமாகச் சாப்பிடுவார். ‘சுந்தரி சௌந்தரி’ ஆரம்பித்தவுடனேயே ‘எல, தெரியுதா. குறிஞ்சி’ என்பார். இத்தனைக்கும் சங்கீதம் படித்தவரல்ல. ஸ்வரங்கள் பற்றிய அறிவும் கிடையாது.
‘ஒங்களயெல்லாம் பாத்தா பொறாமையா இருக்குல. எல்லா ராகத்துக்கும்லா ஸ்வொரம் சொல்லுதியெ’ என்பார்.
‘பெறகு எப்பிடி பெரிப்பா, ராகம்லாம் கரெக்டா சொல்லுதீங்க?’ என்று கேட்டால், ‘ஐயன்தாம்ல காரணம். ஒரு நெளிசல் இல்லாம சொல்லி குடுத்துருவாம்லா. பாடிப் பாடிப் பாரு. தெரிஞ்சுரும்’ என்பார்.
‘கட்டபொம்மன்ல வரலச்சுமி குறிஞ்சில பாடுவா பாரு, மனம் கனிந்தருள் வேல்முருகான்னு. அந்தப் பய முருகன் அந்தாக்ல எறங்கி எளா என்னப் பெத்த அம்மைன்னு ஓடியாந்துர மாட்டான்?’. உற்சாகமாகக் கேட்பார். அம்பிகாபதி படத்தின் ‘வாடாமலரே’ என்னும் காதல் பாடலை சோகராகமான முகாரியில் ஜி.ஆர் அமைத்திருப்பதைச் சொல்லி அதை இனிமையாகப் பாடியும் காட்டுவார் ராமச்சந்திர பெரியப்பா.
அப்பாவின் அக்காள் மனோன்மணி அத்தை நான் ஹார்மோனியம் வாசிக்கும் போதெல்லாம் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சங்கீதம் முறையாகப் படித்தவள். அதனால் எனக்குக் கொஞ்சம் உதறல் எடுக்கும். நான் சம்பூர்ண ராகங்களின் ஆரோகண, அவரோகணங்கள் மட்டும் வாசித்து ஏமாற்றிக் கொண்டிருந்த காலமது. ஆனால் அத்தை எந்த கெடுபிடியும் பண்ணாமல் சினிமாப்பாட்டு வாசிக்க அனுமதிப்பாள். சினிமாப் பாட்டு என்றால் ஜி.ஆர் பாட்டுதான்.
‘ஜி.ஆர். எவ்வளவோ ராகமாலிகை போட்டிருக்காரு. அதெல்லாம் பிராக்டீஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒண்ணுலெருந்து இன்னொண்ணுக்கு போறதே தெரியாம டிரான்ஸிஷன்லாம் அவ்வளவு ஸிம்பிளா இருக்கும்’.
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வாள்.
‘கேக்கறதுக்குத்தான் ஸிம்பிள். வாசிச்சுப் பாரு. பெண்டு நிமிந்திரும்’.
gr-2உண்மைதான். ஜி.ஆரின் ராகமாலிகைகளை வாசித்துப் பார்த்தாலோ, பாடிப் பார்த்தாலோ தெரியும் சங்கதி. மனோன்மணியத்தையின் ராகமாலிகைத் தேர்வு எப்பொதும் உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் கானடா, சாரமதி, திலங், மோகனம் என்ற அற்புதக் கலவையான ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’தான்.
பெரியவர்கள் சொல்லிக் கேட்டது போக கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் நானாக ஜி.ராமனாதனின் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கேட்கத் தொடங்கினேன். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று புகழ்பெற்ற படப்பாடல்கள் வரிசையில் எனது விருப்பப்பாடலாக இன்றளவும் என் மனதிலிருக்கும் பாடலும் ஜி.ராமனாதனின் ராகமாலிகைதான்.
‘தெய்வத்தின் தெய்வம்’ திரைப்படத்தின் ‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்’ என்னும் பாரதி பாடல்தான் அது. வீணை பிரதானமாக ஒலிக்கும் இந்தப் பாடலில் ஷெனாய் என்னும் வடநாட்டு வாத்தியத்தை ஜி.ராமனாதன் பயன்படுத்தியிருக்கும் விதத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆபேரி, பாகேஸ்ரீ, பெஹாக் என்று ஜி.ராமநாதனின் அற்புதமான இசையமைப்புக்கு உயிர் கொடுத்துப் பாடியிருந்த எஸ்.ஜானகியை, இது போன்ற பாடல்கள் வழியாகத்தான் பின்னால் வந்த இளையராஜா நிறைய பாடல்களைக் கொடுத்து மேலும் பிரபலமாக்கியிருக்க வேண்டும். ‘தெய்வத்தின் தெய்வம்’ படமே ஜி.ராமனாதனின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
என் தகப்பனாரின் மூத்த சகோதரரான சங்கரன் பெரியப்பா நாற்பது வயதிலேயே காலமாகிவிட்டார். பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக இருந்த, கர்நாடகக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த தன் கணவரின் நினைவாக சேகரித்து வைத்திருந்த புகைப்படங்களை ஒரு நாள் ஒவ்வொன்றாக எடுத்து தூசிதட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியம்மை. அவற்றில் ஒரு புகைப்படம் எனக்கு நம்பவே முடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு பழைய கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் நடுநாயகமாக ஒரு மனிதர் வீணையுடன் அமர்ந்திருக்க, உடன் இன்னும் சில வாத்தியக்காரர்களுடன் பெரியப்பா, மற்றொரு பெரியப்பா, அத்தைகள், அண்ணன் என்று அனைவருமே அமர்ந்திருக்கின்றனர். வீணையுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் இசைமேதை ஜி.ராமனாதன்.
அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடத்தின் நவம்பர் மாதத்தில் தூத்துக்குடி விமானநிலையத்துக்கு இளையராஜா அவர்களுடன் சென்றிருந்தேன். விமானநிலைய அதிகாரி ஓடோடிவந்து வி.ஐ.பி அறையைத் திறந்து அமர வைத்தார். இன்னும் ஒரு சில நிமிடங்களில் விமானம் வந்துவிடும் என்று தகவல் சொன்னவர் சடாரென்று இளையராஜாவின் கால்களில் விழுந்து வணங்கினார். ஒருமாதிரியான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவர் தன்னை கே.வி.மஹாதேவனின் உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நடுங்கும் குரலில் சொன்னார்.
‘ஸார், எங்க வீட்டுல எங்க குடும்பத்துப் பெரியவா ஃபோட்டோஸ்கூட ஒங்க ஃபோட்டோவையும் மாட்டியிருக்கோம்’.
நான் எங்கள் வீட்டிலுள்ள ஜி.ராமனாதனின் புகைப்படத்தை நினைத்துக் கொண்டேன்.

11 thoughts on “இசைமேதையின் புகைப்படம்

  1. ஆகா அண்ணாச்சி, நீங்க facebookla ராகம் பேரு போட்டு youtube லிங்க் ஷேர் பண்ற ரகசியம் இப்பதான் தெரியுது. முறைப்படி கத்துகிட்டு இருக்கீங்க. நம்ம ரசனை எல்லாம் இளையராஜாவோட சரி. அதுவே ஆயுசுக்கும் போதும்.

  2. // தார்சாவில் பழைய சீனச்சுவர்க்கடிகாரத்துக்கு அருகே மாட்டி வைத்திருந்தனர்.//

    எங்க வீட்ல கூட கடிகாரம் இருக்குது.சாவி குடுக்கனும். கணீர் என்று மணி சத்தம். இத்தனை வருடங்களை கடந்தும் நன்றாக ஓடிகொண்டிருக்கிறது. சிறு வயதில், என் தாத்தாவிடம் கடிகாரத்தின் விலை கேட்க, பத்து ரூபாய் என்றார். கூட ரெண்டு கடிகாரம் வாங்கி வச்ருகலாம்ல தாத்தா என்றதற்கு, போடா கோட்டிகார பயலே, அப்ப என் மாச வருமானமே பத்து ரூபாய்தாம்லே என்றார்.

    🙂

  3. நமக்கு பாட்டை ரசிக்கத்தான் தெரியும்,இந்த ராகமெல்லாம் புரிபடமாட்டேன் என்கிறது.

  4. என்ன அழகான ஓர் பதிவு.. இசையின் ஜாலங்களை சாஹித்தியத்தை மீறாமல்,ராமநாதன் அவர்கள் அமைத்த திரைப்பாடல்கள் என்றுமே நிலைத்திருக்கும்.ஒலிப்பதிவின் தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில்,மனத்தை மயக்கும் பாடல்கள் கொடுத்த மேதை அவர். நெல்லையின் தமிழ் கொஞ்ச இதை நீங்கள் எழுதியிருக்கும் விதம்,சுகமாய் இருக்கிறது. பதிவுக்கு நன்றி

  5. //கட்டபொம்மன்ல வரலச்சுமி குறிஞ்சில பாடுவா பாரு, மனம் கனிந்தருள் வேல்முருகான்னு. அந்தப் பய முருகன் அந்தாக்ல எறங்கி எளா என்னப் பெத்த அம்மைன்னு ஓடியாந்துர மாட்டான்?’. //

    என்ன அருமையான ரசனை!!!

    எங்க ஊர் தமிழ் கொஞ்சுது.
    ஜி.ராமநாதன் அவர்களின் பரம ரசிகை நான். இன்றும் கேட்கக்கேட்க திகட்டாத ஆயிரக்கணக்கான பாடல்களின் தந்தை அவர்.

    நெல்லை சங்கீத சபாவில் அறுபதுகளில் அவரது குழுவினரின் கச்சேரிகளை தவறாமல் கேட்பேன். அதிலும் ராமச்சந்திரன் அவர்களின் தபேலாவின் கண்கண் என்ற தாளம் மிகவும் கவரும்.

    சொன்னா மாதிரி தொழில்நுட்பம் வளராத காலத்தில் அவரது பல பாடல்கள் மிகவும் அருமையாயிருக்கும்.

    அருமையான பதிவு. பல சுவையான தகவல்களை தந்தமைக்கு நன்றி!!

  6. அருமையான பதிவு, ஜி. ஆரை பற்றி அதிகம் கேள்வி படாத என்னை போன்றோருக்கு நல்ல கொடை.

  7. சுகா,

    இசையும் ரசனையும் நெல்லையும் சேர்ந்து மணக்கும் இக்கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். அருமையாக வந்துள்ளது.

    அருண்

  8. ஜி.ஆரின் பாடல்களை அறிமுகபடுத்தி ஜி.ஆர்.மீது ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறீர்கள்.நன்றி!

Comments are closed.