எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.

‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’

‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’

‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’

‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன. திருநெல்வேலிப் பகுதியில் முதல் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளை (அவை எங்கே கொண்டாடுகின்றன?) அவர்களின் நினைவுக்குப் புரியாமலேயே பாடாய்ப்படுத்தி பம்பரமாக ஆக்குவார்கள். முதல்நாள் இரவே வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்து இறங்கிவிடுவார்கள். வீட்டிற்குள்ளே நுழைந்ததும் செருப்பைக் கிழற்றிப் போட்டுவிட்டு முதல்வேலையாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஈவிரக்கில்லாமல் தூக்கிக் கொஞ்சுவார்கள். அதிலும் சில முரட்டு ஜென்மங்கள் அரைத்தூக்கத்திலிருக்கும் குழந்தையை தூக்கி தட்டாமாலை சுற்றுவார்கள்.

‘ஏல, யாரு வந்திருக்கா பாத்தியா? கொங்கராயக்குறிச்சி அத்த. சொல்லு… கொங்..கரா…யக்..கு..றி..ச்சி அத்த்த்த.’

கொங்கராயக்குறிச்சி என்னும் ஊரின் பெயரை அந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவருக்கேச் சரியாகச் சொல்லவராது. குழந்தை அலறி அழுவதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ‘அத்த லேட்டா வந்திருக்கேன்னுல்லா கோவப்படுதான்’ என்பார்கள்.

மறுநாள் காலையிலேயே இரண்டு வேன்களில் ஆட்கள் சாமான்களை ஏற்றத் தொடங்குவார்கள். பித்தளை தாம்பாளம், போணிச்சட்டி, தூக்குச்சட்டிகள், எவர்சில்வர் தம்ளர்கள், தட்டுகள், தேங்காய், பழங்கள், மல்லிகை, பிச்சி, கதம்பப் பூமாலைகள், ஒயர்க்கூடைகள், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதத் தயாரிப்புகள், காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் அடைத்த பாட்டில்கள், சின்ன ஃபிளாஸ்குகள் இவற்றுக்கு மத்தியில் இன்னும் தூக்கக் கலக்கத்தில் உள்ள பிறந்தநாள் குழந்தையும் சிணுங்கிக்கொண்டு யார் மடியிலோ உட்கார்ந்திருக்கும்.

‘எனக்கு, என் தங்கச்சிக்கு, கடைக்குட்டித்தம்பிக்கு அப்புறம் என் பயல்களுக்கு எல்லாருக்கும் திருச்செந்தூர்லதான் மொட்ட போட்டு காது குத்துனது. எங்க அம்மைக்கும் அங்கெதானாம்.’

லட்சத்து சொச்ச தடவையாக ஒரு தாத்தா சொல்லுவார். அநேகமாக அதை எல்லோரும் ஆமோதிப்பார்கள்.

‘ஏ, போற வளில சந்திப்பிள்ளையாருக்கு ஒண்ணு, அப்பொறம் பாளயங்கோட்ட தாண்டும் போது செரட்ட பிள்ளையாருக்கு ஒண்ணு. வெடலய மறந்துராதீங்கடே.’

‘அதெல்லாம் கணேசன் கையிலயே ரெடியா வச்சிருக்கான்.’

கையில் இரண்டு தேங்காய்கள் உள்ள பையுடன் பின்சீட்டில் வாயெல்லாம் பல்லாக கணேசன் உட்கார்ந்திருப்பான். அநேகமாக அவன் திருச்செந்தூர் செல்வது அதுதான் முதல் முறையாக இருக்கும்.

பாளையங்கோட்டை தாண்டியவுடனேயே ஒருவர் சொல்லுவார்.

‘ஏ, அந்த டேப்பத்தான் தட்டி விடுங்களேன். பாட்ட கீட்ட கேட்டுட்டு கொஞ்சம் சந்தோசமாத்தான் போவோமெ. செத்த சவம் மாதிரில்லா உக்காந்துருக்கொம்.’

‘நல்ல காரியத்துக்கு போகும்போது ஒங்க அத்தான் வாயில வார வார்த்தய பாத்தியா? தீயத்தான் வைக்கணும் அவர் வாயில.’

ரகசியமாக அருகிலிருக்கும் பெண்ணிடம் சொல்வாள் அவர் மனைவி.

விரல்சூப்பித் தூங்க ஆரம்பித்திருக்கும் குழ்ந்தையின் தலைக்கு மேலே உள்ள ஸ்பீக்கர் ‘என் உச்சி மண்டைல கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது’ என்று அலற ஆரம்பிக்க, குழந்தை திடுக்கிட்டு எழுந்து ஸ்பீக்கருக்குப் போட்டியாகக் கதறும். அதன் பெரியம்மையோ, சித்தியோ கோபம் கொள்வாள். என்ன இருந்தாலும் ஒரு தாயில்லையா?

‘எப்பா, அந்த பாட்ட மாத்துங்க. பிள்ளைக்கு புடிக்கல. அளுதான் பாருங்க.’

’புலி உறுமுது புலி உறுமுது’ பாடலுடன் போட்டி போடமுடியாமல் குழந்தை விக்கித்து விசும்ப, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியப்பா முறுக்கு பொட்டலத்தைப் பிரித்து ஆளுக்கொன்றாய் விநியோகித்துவிட்டு மிச்சத்தை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே தின்ன ஆரம்பிப்பார்.

ஒருமணிநேரப் பயணத்தில் பாட்டையும் ஒலிக்கவிட்டு பெரியவர்களும் இரைச்சலாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். சொல்லமுடியாத துயரத்தில் குழந்தை அழும்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, புட்டிப்பால். வலுக்கட்டாயமாக வாயில் திணிப்பார்கள்.

திருச்செந்தூரில் போய் இறங்கும்போதே மற்ற வேன் வந்துவிட்டதா என்ற கவலையில் சுற்றுமுற்றும் பார்ப்பார்கள்.

‘பகவதி அந்த வண்டிலதானே வாரான்? அந்த மூதிக்கு ஒரு ஃபோன போடுங்க. எங்கன வந்துக்கிட்டிருக்கானுவொ. இதுக்குத்தான் நான் அந்த வண்டில வந்திருக்கணும்ங்கென்.’

அந்த வேன் வந்து நிற்பதற்குள்ளாக அதிலிருந்து வீடியோ மற்றும் ஃபோட்டோகிராஃபர் குதித்து ஓடிவருவார்கள்.

‘ஏ, நீங்க இந்த வண்டில வந்திருக்கலாம்லா? எவ்வளவு நேரம் நிக்கோம்?அங் அங்… எடுங்க.’

பின்மண்டையிலிருக்கிற ஒன்றிரண்டு முடியை இழுத்து வழுக்கைத் தலையை மறைக்கும் வண்ணம் சீவியவாறே கேமராவை முறைத்துப் பார்ப்பார் ஒரு மாமா.

’எல, அய்யா. எந்தி. திருச்செந்தூர் வந்தாச்சுல்லா. அன்னா… அங்கெ பாரு கடலு. என்ன பெத்த அய்யால்லா. எந்தி எந்தி.’

அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருக்கும் குழந்தையின் கன்னத்தைத் தட்டி எழுப்புவார்கள்.

1வெளிப்பிரகாரத்தில் நடந்துவரும்போது கடல்காற்று முகத்தில் அடிக்க, பெரியவர்களுக்கே தூக்கம் வரும். குழந்தைக்குக் கேட்பானேன்? முடியெடுக்கும் இடத்துக்கு வந்து சேர்வதற்குள் அதை மாற்றி மாற்றி வாங்கி ஆளாளுக்குக் கொஞ்சி அதன் கொஞ்சநஞ்சத் தூக்கத்தையும் தொலைப்பார்கள். அழுகையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் குழந்தை, மொட்டையடிக்கப்போகிறவரைப் பார்த்தவுடன் நிச்சயம் வெடித்து அழத்துவங்கும். ஜடாமுடியும், பெரிய மீசையுமாக இருக்கும் அவர் சிரித்தபடியே , ‘அளக்கூடாது. ஒங்க பேரென்ன ராசா? என் தங்கம்’ என்று வரவேற்பார். குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத்தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்று கொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப்பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒருசிலர் கையில் கிலுகிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள். தாங்கமாட்டாமல் அவனும் அழ ஆரம்பிப்பான்.

ஒருமாதிரியாக மொட்டை போட்டு முடித்தபின் அழ அழ பிள்ளையைக் குளிப்பாட்டி, மொட்டைத்தலையில் சந்தனத்தை அப்புவார்கள். தாங்கமுடியா எரிச்சலில் குழந்தை கதறத்தொடங்க, அடுத்து காதுகுத்து என்னும் ஆபத்து காத்திருக்கும். இப்போதும் தாய்மாமன் மடிதான் பிள்ளையின் இருக்கை. நாக்கைக் கீழ் உதட்டின் மீது நீட்டியவாறே நாசூக்காக காது குத்த முனைவார் ஆசாரி. எத்தனையோ பிள்ளைகளுக்குக் காது குத்திய அனுபவம் காரணமாக நிதானமாக அதேசமயம் கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை முடித்துவிடுவார். இப்போது பயலை சமாதானப்படுத்த பிளாஸ்டிக் நாதஸ்வரம் ஒன்றை வாங்கிவந்து தாய்மாமனின் காதில் வசமாக ஊதுவார் ஒருவர்.

அடுத்து சந்நிதானம் நோக்கிச் செல்வார்கள். கூட்ட நெரிசலில் வேர்த்து விறுவிறுத்து அழுகையும், நடுக்கமும், தூக்கமுமாக இருக்கும் குழந்தையை செந்திலாண்டவன் சன்னதியின் முன் நின்றுகொண்டு ‘எல, அங்கெ பாரு முருகரு. எங்கெ சொல்லு.

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்

சொல்லுலெ. சொல்லுதானா பாரென்.’

ஒருவயதுக் குழந்தையின் கையைப் பிடித்துக் கும்பிட வைத்து நச்சரிப்பாள் அத்தை. அவனுக்கு மட்டும் நன்றாகப் பேசத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவனது அப்போதைய மனநிலைக்கு பாடாய்ப்படுத்தும் அந்த அத்தையின் தாயாரை வசை பாடியிருப்பான்.

அர்ச்சனை முடிந்து சாமிகும்பிட்டுவிட்டு விடுதிக்கு வந்து பந்தி விரித்து, கொண்டு வந்த எலுமிச்சை, புளியோதரை, தயிர்சாத வகையறாக்களைப் பரிமாறி சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

‘ஏட்டி, ஊறுகாய மறந்துட்டேளா? ஒங்களையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்னன்னு கேக்கென்?’

ஒரு ஓரத்தில் அமர்ந்து பால்குடிக்க மறுக்கும் பிறந்தநாள் குழந்தைக்கு புகட்ட முயன்றுகொண்டிருப்பாள் அதன் தாய்.

சாப்பிட்டு முடிந்து ஆளாளுக்கு ஊர்வம்பு பேசிக் கொண்டே கிளம்ப ஆயத்தமாகும் போது ஒருசிலர் கடல்நீராட சென்றிருப்பார்கள்.

‘எல, ஒங்க அத்தான எங்கெ காணோம்?’

‘திருச்செந்தூர்வரைக்கும் வந்துட்டு கடலாடாம போலாமாய்யா? அதான் அவாள் துண்டக் கட்டிட்டு போயிருக்கா.’

‘ஏ, அவாள் பொத்தாமரைக் கொளத்துல முங்கு போடும்போதே கூட தொணைக்கு நாலுபேரு நிக்கணும். கடல் இளுத்துட்டு போயி எலங்கைல கொண்டு தள்ளீரும். சிங்களன் பயந்துரப் போறான். போயி பாருங்கடே.’

திருச்செந்தூரில் சாயங்காலம் உளுந்தவடை, வாழைக்காய் பஜ்ஜி சகிதம் காப்பி குடித்து விட்டு இரண்டு வேன்களும் கிளம்பும் போது பொழுதுசாயத் தொடங்கியிருக்கும். எல்லோர் தலைகளும் தூக்கத்தில் நடனமாடியபடி பயணிக்க பிறந்தநாள்க்காரன் காய்ந்த சந்தன மொட்டைத்தலையுடன் தன் தாயின் மடியில் கைசூப்பியபடி கொட்டக் கொட்ட முழித்திருப்பான்.

இப்போது ஆங்கிலமுறைப்படி கேக் வெட்டும் கலாச்சாரம் வந்துவிட்டது. ஒருவயது குழந்தையின் பிறந்தநாளுக்கு பேனரெல்லாம் வைக்கிறார்கள். ஒருபுறம் அல்டிமேட் ஸ்டார் ஃபுல்சூட்டில் அட்டகாசமாகச் சிரிக்க, இன்னொருபுறம் இளையதளபதி வேகமாக ஓடி நம்மீது பாய வருகிறார். நடுவில் பிறந்தநாள் குழந்தை மலங்க மலங்க முழித்துக் கொண்டிருக்கிறது.

பிறந்தநாள் குழந்தையே நம்மை வரவேற்பதுபோல அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டு விநியோகிக்கப் படுகின்றன. வசதியுள்ளவர்கள் ஒரு ஹோட்டலின் ஹாலை வாடகைக்கு எடுத்து கொண்டாடுகின்றனர். பெரிய ஸ்பீக்கர்களில் சத்தமாக சின்மயி, தேவன், ராகுல் நம்பியார் போன்றவர்கள் நம்மை வரவேற்கிறார்கள். பெரிய கேக்கின் முன் குழந்தையைத் தூக்கி வந்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மறுநிமிடமே அணைக்கச் செய்து, பெரியவர்களே பயப்படும்வண்ணம் படார் என்ற சத்தத்துடன் ஒரு வஸ்து வெடித்து ஜிகினாக்கள் வானிலிருந்து நம் தலையை நனைக்கின்றன.

ஹேப்பி பெர்ர்ர்ர்ர்த் டேஏஏஏஏ டூஊஊஊ யூ,
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊ யூ
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊஊஊஊஊ

(ஏட்டி கொளந்த பேரு என்ன?)

கேக்கை வெட்டி ஆளாளுக்கு குழந்தையின் நாக்கில் பேருக்கு தொட்டுத் தடவி விட்டு, பெரிய பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள். அதன் பிறகு குழந்தையின் ஒரு வயது பிறந்தநாளை முன்னிட்டு மதுபான மற்றும் அறுசுவை விருந்து.

எல்லோரும் சாப்பிடும்போது, அழுதுகொண்டிருக்கும் குழந்தையை வேலைக்காரச் சிறுமியிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொல்லுவாள் அதன் தாய்.

‘செல்வி, கொஞ்சம் காத்தாட வெளியெ வச்சிரியென். புளுக்கம் தாங்காம அளுதா பாரு.’

மூலக்கரைப்பட்டியிலிருந்து வீட்டு வேலைக்காக வந்திருக்கும் செல்வி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து சாலையில் செல்லும் கார்களைக் காண்பிப்பாள். பிறப்பதற்கு முன்பே தகப்பனையும், பிறந்தவுடன் தாயையும் முழுங்கிய செல்விக்கு அவளது பிறந்த நாள் நிச்சயம் தெரிந்திருக்காது.

22 thoughts on “பிறந்த நாள்

  1. என்ன இயல்பான எழுத்து? ஒரு காதுகுத்து வைபவத்தின் அத்துணை ஆரவாரத்தையும் துல்லியமாய்த் தொட்டிருக்கிறீர்கள்.பாராட்ட வார்த்தைகளே இல்லை. அழகு..அழகு!

  2. கலக்கிட்டீங்க போங்க. அப்படியே திருச்செந்தூர் போய் மிதிபட்டு வந்த உணர்வு. :)அதுவும் அந்த தல/தளபதி, மற்றும் மலங்க மலங்க முழிக்கும் குழந்தை கமெண்ட் – சூப்பர்!

  3. திருச்செந்தூர் சாமி தரிசன அனுபவம் எனக்கும் இப்படித்தான் அமைந்திருந்தது….வேர்த்தூ ஊற்றிய சன்னிதானத்திலிருந்து வெளியில் வந்ததும் ஒரு காற்றில் ஏசி அனுபவம் இப்பொழுது நிமைத்தாலும் சிலிர்க்கும்

  4. திருச்செந்தூரில் என் பேரனுக்கு முடி இறக்கி காது குத்து வைபவங்களையும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கொண்டாட்டங்களையும் கண் முன் காட்டுகிறது உங்க பதிவு.
    மண் வாசனை ஆள தூக்குது வேய்!!!

  5. I am from Tirunelveli Town, Teppakulam Street. Left Tirunelveli around 1989. Your articles in Vikatan takes me back to my Tirunelveli days and am able to correlate with each and every incidence. You have been writing very well. Keep it up.
    Cheers
    Ravi.

  6. his is a beautiful painting with words. Your facile pen etches life with gret precision. Great, கடைசி வரி கட்டுரையே தூக்கி நிறுத்தி விட்டது — வாயு

  7. காதணிவிழாவைப் பற்றி நீங்கள் எழுதியது திரைக்கதையாக விரிந்தது மனதுக்குள்.சூப்பர்ண்ணே..!!

  8. சுகா சார்,

    ஆனந்த விகடன் “மூங்கில் மூச்சு” மிக அருமை…
    “நீயா நானா” நிகழ்ச்சியின் முலம் உங்கள் வலைபதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது…

    காட்சிகளை அப்படியே கண்முன் நிறுத்தி விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது இந்த பதிவு..

  9. Anbulla SUKA Annavuku

    Ungalai blogilum Ananda Vikatanilum vasithu varubavan naan.Enaku neenda naalaga oru aathangam irunthathu, Balachanderaiyum, Bharathi rajavaiyum thooki vaithu kondadiya Tamil koorum nallulagam Balu Mahendravai(unga bashaiyil VATTHIYAR)kondadavillaiyae enbathuthan athu. Ungal ezhuthu moolamum Vathiyarin sishyargal(Vetri Maran,Ram,Seenu Ramasway matrum neengal)moolamum athu theernthathu.
    Nanri
    P.Maharajan
    Thoothukudi

  10. நீங்கள் கூறியவை அனைத்தும் எங்கள் வீட்டில் நடந்தேறிய உண்மைகள்… இப்பொழுது தான் நாங்கள் குழந்தைகளை படுத்திய பாடு எங்களுக்கு புரிகிறது.. 🙂

  11. I am from Tirunelveli Town and left Tirunelveli 1985.I have read your “Moongile Moochu”. I feel my early days of my town life and enjoyed it.

  12. சுகாவின் எழுத்து சுவை வந்தார்கள் வென்றார்கள் தொடரில் மதனின் எழுத்துநடையைப் போல ஆரம்பித்தால் நிறுத்தமுடியாதவகையில் அமைந்திருக்கிறது. மிகப் பெரிய எழுத்தாளராக வருவீர்கள். வாழ்த்துக்கள்!

  13. dear NELLAI NANBAR,
    my 1st birthday took place in KURUKKUTHURAI MURUGAN KOVIL in 1969,after which i visited the TEMPLE only in 2007.my maternal relations all came from PULIYARAI in a van.may be their experience would have correlated with your writings in PIRANDHA NAALH.final line is really touching.HATS OFF.
    your everloving friend,
    NELLAI S.Muthiah

Comments are closed.