எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அப்போது சென்னையில் இருந்தார். அதுவும் சாலிகிராமத்தில். சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரும் என்னைப் போலவே ‘திசையறியாதவர்’ என்பதால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி நாங்கள் இருவரும் கைகோர்த்துக் கொண்டு (தொலைந்துவிடாமல் இருக்கத்தான்) சாலிகிராமத்தில் எங்களுக்குத் தெரிந்த வீதிகளில் ‘Walking போகிறோம் பேர்வழிகளாக’ நடை பயில்வோம். எங்களுக்குத் தெரியாத ஏதாவது தெருவுக்குள் நுழைந்து விட்டால், இருக்கவே இருக்கிறது ‘மதுரைக்கு வழி வாயில’. சொல்லிவைத்த மாதிரி, நாங்கள் Walking செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு லாரியிலிருந்து கிளீனர் ஒருவர் கையில் ஒரு துண்டுச் சீட்டுடன் எங்களுக்குப் பக்கத்தில் ‘திடும்’ என்று குதிப்பார்.

‘ஸார், இந்த அட்ரஸ் எங்கென்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்’.

கொஞ்சமும் தயங்காமல் வாங்கிப் பார்ப்போம். ஒரே நேரத்தில் நான் வலது பக்கத்தையும், வ.ஸ்ரீ ஸார் இடது பக்கத்தையும் காண்பித்து வழியும் சொல்லிவிடுவோம். விநோதமாகப் பார்த்தபடி அட்ரஸ் கேட்பவர்கள் பின்வாங்கிடுவர். இப்படி எங்களை குறிவைத்து அட்ரஸ் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, நாங்கள் இருவரும் ‘Walking’ செல்ல சாலிகிராமத்திலேயே உள்ள ஒரு பூங்காவைத் தேர்ந்தெடுத்தோம். தொடர்ந்து நாங்கள் அந்தப் பூங்காவில் ‘Walking’ போனாலும், எங்கள் இருவரின் உடம்பும் இளைக்காமல் போனதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கு நான்கே நான்கு முறை மட்டும் நாங்கள் அந்தப் பூங்காவுக்குச் சென்றது மட்டும் காரணமில்லை. உட்கார இடம் தேடி அந்தப் பூங்காவில் நாங்கள் அலையும் நேரம் மட்டுமே எங்கள் ‘Walking’ அமையும்.

உட்காருவதற்கு வாகாக ஓர் இடத்தைத் தேடி அமர்ந்தவுடன், முதலில் சுற்றும் முற்றும் சிறிது நேரம் பார்ப்போம். வேர்க்க விறுவிறுக்க பலர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது, ஏதோ நாங்களே அவற்றை செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு மனநிறைவைத் தரும். ‘பரவாயில்ல சுகா. இப்பொல்லாம் எல்லாருக்கும் ‘Health consciousness’ வந்துடுத்து. இல்லியா?’ அதற்குப் பிறகு நீண்ட நேரம் மற்றவர்க்குக் கேட்காத வண்ணம், கிசுகிசுத்த குரலில் ‘புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, கு.ப.ரா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், வண்ணநிலவன், வண்ணதாசன்’ என ஒரு ரவுண்டு இலக்கியம் பேசி களைப்பாகி வீடு திரும்புவோம். இப்படியாக ‘விளையாட்டுப் பூங்கா’வை, தனியாக அமர்ந்து ரகசியமாகப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தி ‘காதலர் பூங்கா’வாக்கினோம்.

வ.ஸ்ரீ ஸார் கோவை சென்ற பின், ஜோடியில்லாமல் போவதற்குத் தயங்கி ‘காதலர் பூங்கா’வுக்கு செல்லாமலேயே இருந்தேன். ஆனால் கோவையில் அவர் தனியாகவே அங்குள்ள ஒரு ‘காதலர் பூங்கா’வில் ‘Walking’ செல்வதாகக் கூறியதைக் கேட்ட பின் நானும் எங்கள் ‘காதலர் பூங்கா’வில் நிஜமாகவே ‘Walking’ செல்லத் துவங்கினேன். இப்போது உண்மையாகவே எங்கள் பூங்கா ‘காதலர் பூங்கா’வாக நிறைய மாற்றங்களுடன் உருமாறியிருந்தது. ஆரம்பத்தில் முன்பின் பழக்கமில்லாத செயலான ‘Walking’ செல்வதில் சிரமம் இருந்தது. பிறகு அங்கு வாடிக்கையாக வரும் சில மனிதர்களைப் பார்ப்பதற்காகவே தினமும் செல்லத் துவங்கினேன்.

ஷட்டில்காக் விளையாடும் யுவன்கள், யுவதிகளின் உற்சாகக் குரல்களுக்கிடையே நடப்பது நமக்கும் உற்சாகம் அளிக்கும் ஒன்றுதான். மஞ்சள் தேய்த்து குளித்த முகத்துடன், தலைநிறைய பூ வைத்து, மங்களகரமாக ஒரு பெண்மணி நடக்க வருவார். அவர் வந்த சிலநிமிடங்களில் அவரது கணவர் கையில் செய்தித்தாளுடன் வந்து பூங்காவின் ஓரமாக அமர்வார். ஒருமுறை நடந்தபடியே தன் கையிலிருந்த சாவியைத் தூக்கி இந்த அம்மாள் போட, தட்டுத்தடுமாறி பிடித்தார், கணவர். சட்டென்று கோபம் தலைக்கேற மனைவியின் பின்புறம் பார்த்து முறைத்த மனிதர், அந்த அம்மாள் திரும்பிப் பார்த்தவுடன் ‘கரெக்டா கேட்ச் புடிச்சுட்டென்மா’ என்று கோபம் மறைத்து வலிந்து சிரித்தார். மனிதரின் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளையும் நான் பார்த்து விட்டதால், அன்றிலிருந்து என்னைப் பார்த்தாலே செய்தித்தாளுக்குள் ஒளிந்து கொண்டு ரகசியமாக நான் போய்விட்டேனா என்று பார்ப்பார்.

எங்கள் சுந்தரம் பிள்ளை பெரியப்பாவை நினைவுபடுத்துகிற ஒரு பெரியவர் கொஞ்சம் தாமதமாக மூச்சிரைக்க பூங்காவுக்குள் நுழைவார். கழுத்து வழியாகப் போடும் சட்டையும், சாரமும் உடுத்தியிருக்கும் அவரது மீசையில்லா முகத்தின் பாதியை அவரது மூக்குக் கண்ணாடி மறைத்திருக்கும். தனது பெரிய பாதங்களை அகலமாக வைத்தபடி நடைபயிலும் அவருக்குப் பின்னால் நடப்பது சிரமத்திலும் சிரமம். சற்றும் எதிர்பாராமல் திடீரென்று கைகளைப் பக்கவாட்டில் விரித்து உடற்பயிற்சி செய்தவாறே நடக்க ஆரம்பித்து விடுவார். அவருக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு ஒருமுறை உதட்டிலும், இன்னொரு முறை கண்ணிலும் காயம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கத்தின் காரணமாக அவர் கைகளைத் தூக்கும் போது சட்டென்று குனிந்து தப்பித்து நடக்கலானேன். நான்கைந்து ரவுண்டுகளுக்குப் பிறகு பூங்காவில் உள்ள ஒரு மரத்தினருகில் நின்று கொண்டு, ஏதோ ஒரியா தொலைக்காட்சியில் பார்த்த உடற்பயிற்சி முறைகளைச் செய்யத் துவங்கி விடுவார். சரியாக அந்த நேரம்தான் மடித்துக் கட்டிய வேட்டி, சட்டையுடன் குள்ளமான இளைஞர் ஒருவர் பூங்காவுக்குள் வரும் நேரம். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்த அந்த இளைஞர், ஒருநாள் என்னுடனேயே நடந்தபடி, ‘அண்ணாச்சி, எனக்கும் நம்ம ஊருதான்’ என்றார்.

‘அப்பிடியா? ரொம்ப சந்தோஷம்’.

‘வெகடன்ல மூங்கில் காத்து என்னமா எளுதுதிய! எங்க அம்மல்லாம் ஒங்கள நேர்ல பாக்கணுங்கா.’

அப்போது ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.

‘அது மூங்கில் காத்து இல்லையெ, தம்பி’.

‘பாத்தேளா, மாத்தி சொல்லிட்டென். மூங்கில் முடிச்சு மூங்கில் முடிச்சு’.

நான் நடையை வேகமாகத் தொடர்ந்தேன். இதற்குள் மரத்தடியில் நின்று ஒரியா உடற்பயிற்சி செய்யும் ‘பெரிய சைஸ் மனிதர்’ கால்களை விரித்து நின்று கொண்டு, கைகளை முன்னே நீட்டி, மணிக்கட்டை மடக்கி நீட்டிக் கொண்டு, தலையை மேலும், கீழுமாக அசைத்துக் கொண்டிருந்தார். திருநெல்வேலி இளைஞர், ‘என்ன அண்ணாச்சி கூப்பிட்டேளா?’ என்றபடி அவர் பக்கம் சென்றார். ’இல்லெப்பா. இது எக்ஸர்ஸைசு.’ ‘இல்ல, கூப்பிட்ட மாரி இருந்துது. அதான் கேட்டென்’. மேற்படி சம்பவம் தினமும் தொடர்ந்தது. ‘டேய், நீ போறியா என்னடா?’

முன்னே நடப்பவர்களுக்கு வழிவிடாமல், ஐபாடில் பாட்டு கேட்டுக் கொண்டே பாதையை மறைத்தபடி நடப்பவர்கள், நடக்கும் போதே செல்ஃபோனில் பேசியபடி நடுவில் நின்றுகொள்பவர்கள் என ஓர் ஒழுங்கில்லாமல் சென்று கொண்டிருந்த மனிதர்களுக்காகவே ஓர் அழகிய இளம் யுவதியை வடபழனி முருகப்பெருமான் ‘காதலர் பூங்கா’வுக்கு அனுப்பிவைத்தார். ‘வருஷம் 16′ குஷ்புவை நினைவு படுத்துகிற அந்தப் பெண், ஆண்பிள்ளை சட்டையும், நீள பாவாடையும் அணிந்தபடி தினமும் பூங்காவுக்கு வரத் துவங்கினார். அதற்குப் பிறகு எல்லோருமே அந்தப் பெண்ணுக்குப் பின்னால் நல்ல பிள்ளைகளாக, சீரான மித வேகத்தில் நடக்கத் துவங்கினர். முன்னால் ஒருவர் கூட இல்லை. வழக்கமாக நாங்கள் நடக்கும் போது பின் கட்டிடத்திலுள்ள ஒரு வீட்டுக்கார மாமா, பஞ்ச பாத்திரத்தைக் கையில் வைத்து சாய்த்தபடி ‘சந்தி’ பண்ணுவார். உதடு படு சீரியஸாக முணுமுணுத்தபடி இருக்கும். ஒரு சுற்று முடிவதற்குள் காணாமல் போய்விடுவார். குஷ்புவின் வருகைக்குப் பிறகு பின் வீட்டு மாமா கையிலுள்ள பஞ்சபாத்திரத்துத் தீர்த்தம் வற்றவே இல்லை. அநேகமாக மூன்று சந்திகளையும் ஒருசேரப் பண்ணினார்.

நடைப்பயிற்சி முடிந்தவுடன் செல்வி குஷ்பு சிறிதுநேரம் இளைப்பாறும் விதமாக, பூங்காவில் சிறுகுழந்தைகள் விளையாடுவதற்காக போடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் Tinto brass படநாயகிகள் போல அபாயகரமாக ஆடுவார். சுதந்திர, குடியரசு தின அணிவகுப்பில் கவர்னர் பக்கம் தலையை மட்டும் திருப்பியபடி நேராக விறைப்பாக நடக்கும் ராணுவ வீரர்கள் போல எல்லோரும் ஊஞ்சலுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி நடப்பார்கள்.

வழக்கமாக காலையில் நான் ‘காதலர் பூங்காவுக்குள்’ நுழைந்த ஒருசில நிமிடங்களிலேயே ஒரு மனிதர் பைக்கில் வந்து இறங்குவார். பைக்கை நிறுத்தியவுடன் கண்ணாடி பார்த்து, நிதானமாக தலை சீவுவார். டி-ஷர்ட்டும், ஷார்ட்ஸும், கேன்வாஸும் அணிந்திருக்கும் அவரது கையில் ‘தினத்தந்தி, தினகரன், தினமலர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேப்பர்கள் வைத்திருப்பார். கையிலுள்ள செய்தித்தாள்களை, நிழல் பார்த்துத் தேர்ந்தெடுத்த ஒரு பெஞ்சின் ஓரமாக வைத்து விட்டு, தன் கைகளை தோள்மீது வைத்து முன்னும் பின்னுமாக சில்லறையாகச் சுழற்றுவார். பிறகு முதலில் ‘தினத்தந்தி’யில் ஆரம்பிப்பார். வரிசையாக எல்லா செய்தித்தாள்களையும் படித்த பின்னர், மீண்டும் ஒருமுறை தோள்மீது கைவைத்து சில்லறைச் சுழற்றல். வரும்போது வந்த அதே நிதானத்துடன் எழுந்து பைக்கருகே சென்று, பேண்ட் பாக்கெட்டிலிருந்து சீப்பு எடுத்து, மீண்டும் தலைசீவி கண்ணாடியில் சரிபார்த்துக் கிளம்பிச் செல்வார்.

கடந்த சில மாதங்களாக நான் ‘காதலர் பூங்கா’வுக்குச் செல்லவில்லை. Walking போகிறேனோ இல்லையோ, விதவிதமான மனிதர்களையும், அவர்களது செய்கைகளையும் பார்த்து ரசிப்பதற்காகவாவது செல்ல வேண்டும் என்று நினைக்காத நாளில்லை. தினமும் இரவில் ‘நாளைலேருந்து மறுபடியும் Walking ஆரம்பிச்சுட வேண்டியதுதான்’ என்று மனதில் சூளுரைப்பதோடு சரி. இதோ அதோ என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் Walking போய்க் கொண்டிருந்த காலத்திலேயே ‘காதலர் பூங்கா’வுக்குத் தனது வருகையை நிறுத்தி, காணாமல் போய்விட்ட ‘செல்வி குஷ்பு’வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

16 thoughts on “காதலர் பூங்கா

  1. //வேர்க்க விறுவிறுக்க பலர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது, ஏதோ நாங்களே அவற்றை செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு மனநிறைவைத் தரும்.//

    ஒவர் திருநவேலி குசும்பு உடம்புக்கு ஆகாது

  2. //சுதந்திர, குடியரசு தின அணிவகுப்பில் கவர்னர் பக்கம் தலையை மட்டும் திருப்பியபடி நேராக விறைப்பாக நடக்கும் ராணுவ வீரர்கள் போல எல்லோரும் ஊஞ்சலுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி நடப்பார்கள்.// waiting… waiting for your movie…sir.
    என்னால சிரிச்சு மாளலை…

  3. ‘குஷ்பூவைத் தேடும் சின்ன தம்பி’ – அண்ணே! இந்த தலைப்பு எனக்கு பொருத்தமா தெரிஞ்சுது 🙂

  4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் சுகா.
    இந்த மாதிரி வாக்கிங்க் நாங்களும் போவோம். மெரினாவில் போய் பெஞ்சில்
    உட்கார்ந்து, மயக்கும் மாலையை அனுபவிப்போன்,.
    வைத்தியரிடம் செக் அப் புக்குப் போகும்போது சொல்லலாம் அல்லவா. தினமும் மெரினா போகிறொம் என்று:)

  5. வளியில எங்கயாவுது பாத்தா நானும் நம்மூர்ன்னு சொல்லலாம்னு நெனச்சிருந்தேன், இனி எங்கே சொல்ல!

    வழி மொழிகிறேன் .சே…வளி மொளிகிறேன்…
    ( இப்ப சந்தோசம் தானா?)

Comments are closed.