‘என்னோட ரெண்டாவது புஸ்தக வெளியீட்டு விளாவுக்கு நீங்க அவசியம் வரணும்’.

இரண்டு மாதங்களுக்குமுன்பே சொல்லிவிட்டார், எழுத்தாளர் நாறும்பூநாதன். நாறும்பூநாதன் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்னும் செய்தியே எனக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.சொன்னவர் நாஞ்சில் நாடன் சித்தப்பா. திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரான நாறும்பூநாதனின் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடமாடுகிறார் என்ற செய்தியும், அதிலும் அவர் எழுதுகிறவர் என்கிற கூடுதல் தகவலும் என்னை ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் அவர் திருநெல்வேலியிலேயே வேறு இருக்கிறார்.

நாறும்பூநாதனை நான் கேள்விப்பட்டிருந்த சில மாதங்களிலேயே என்னைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவர் வந்து சந்தித்த போது, ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அவர் என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். முதன்முதலில் சந்தித்தபோது எங்கள் இருவரையுமே இணைத்தது ‘கூச்சம்’. தன் ‘பளபளக்கும்’ தலை குனிந்து அவரும், கண்ணை மறைக்கும் சிகை ஒதுக்கி நானும் அவ்வப்போது ஒருவர் முகம் மற்றவர் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.

சென்னைக்கு நான் திரும்பிய பிறகு இயல்பாக ஒருசில மின்னஞ்சல்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் பேசிக் கொண்டோம்.அதன்பின் நான் திருநெல்வேலிக்குச் செல்லும் போதெல்லாம் நாறும்பூநாதனைச் சந்திக்காமல் வருவதில்லை.எங்கள் சந்திப்பில் தவறாது இடம்பெறக்கூடிய மற்றொருவர், ஜானகிராம் ஹோட்டலின் பங்குதாரரோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த ‘கவிஞர்’ க்ருஷி. க்ருஷி ஸார்வாளும், திருநெல்வேலியின் ஜானகிராம் ஹோட்டலும் சாகித்ய அகாடமி விருதும், சர்ச்சையும் போல பிரித்துவிடவே முடியாத மாதிரி அவ்வளவு நெருக்கம். இரண்டு மாதங்களுக்குமுன்ஒருமாலைவேளையில் ஜானகிராம் ஹோட்டலின் Roof gardenஇல் வைத்துத்தான் தோழர் நாறும்பூநாதன் தனது இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார். ‘தம்பி, நீங்க வரலேன்னா இந்த விளா நடத்தியே ப்ரயோஜனமில்ல பாத்துக்குங்க’. சரித்திர நாடகங்களில் நடிக்கும் ஹெரான் ராமசாமியின் குரலை ஞாபகப்படுக்கிற ஒலியில் க்ருஷி ஸார்வாள் கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார்.

திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம்போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன்.நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான்.

‘வந்துட்டேளா சித்தப்பா?நான் எப்பொ எங்கெ வரணும்?’

‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’

‘விஞ்சைக்குப் போயிருவோமெ!நாளாச்சுல்லா.அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா’.

‘ஏ மூதி!திங்கிறதுலயெ இரி.ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால’.

‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.

‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு? மதிச்சு கூப்பிடுதாங்க. வராம இருந்திராத’.

சாயங்காலம் மேலரதவீதி வழியாக குஞ்சு, மீனாட்சியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ’சோனா’ மாமா கடையை அடுத்த சுவரைக் காண்பித்து மீனாட்சி ‘சித்தப்பா, அங்கெ பாருங்க’ என்றான். ‘எழுத்தாளர் நாறும்பூநாதனின் புத்தக வெளியீட்டு விழா’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்து . பெரிய எழுத்தில் ‘சுகா’ என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் சங்கடமாக இருந்த்து. ‘சே என்னல இது? பெரிய பெரிய ஆட்கள் பேரயெல்லாம் சிறுசா போட்டு நம்ம பேர அத்தா தண்டிக்கு போட்டிருக்கங்க?’ என்றேன். ’என்ன சித்தப்பா இப்பிடி சடச்சுக்கிடுதிய! மூங்கில் மூச்சு என்னா ரீச்சுங்கிய! அத படிச்சுட்டு நம்ம ஊர்ல எத்தன பேரு ஒங்கள பாக்கணுன்னு துடியா துடிக்காங்க, தெரியுமா?’ என்றான், ‘மூங்கில் மூச்சு’ தொடரின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை படித்திராத மீனாட்சி.

ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக போகலாம் என்று குஞ்சு சொல்லியிருந்தான். ‘எல நீதான் சீஃப் கெஸ்ட்டு. நீ மொதல்லயெ போயி பறக்க பாத்துட்டு உக்காந்திருக்கக் கூடாது.கொஞ்சம் லேட்டா போனாத்தான் ஒரு பரபரப்பு இருக்கும்’. அவன் எதிர்பார்க்கிற பரபரப்பில் நானே பயந்து விடுவேன் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தும், ஏனோ அதற்கு ஆசைப்பட்டான். ’சும்மா கெடல, கோட்டிக்காரப்பயலெ’ என்று சொல்லிவிட்டு, சரியான நேரத்துக்கே டவுணிலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும் அன்றைக்குப் பார்த்து ‘மக்கள் தளபதி’ ஜி.கே.வாசன், ‘அரசியல் துருணோச்சாரியார்’ ப.சிதம்பரம், ‘இளம் பெரியார்’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.

ஜானகிராம் ஹோட்டலின் மாடிப்படிகளில் அவசர அவசரமாக ஏறினோம். விழா நடைபெறும் வாசலில் நாறும்பூநாதனும், க்ருஷி ஸார்வாளும் நின்று கொண்டிருந்தனர்.‘தம்பி, இன்னும் ஒங்க காலு சரியாகல போல தெரியுதெ!’ க்ருஷி ஸார்வாளின் தொண்டை வழியாக ஹெரான் ராமசாமி என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.‘எல்லாரும் வந்தாச்சு.உள்ள வாங்க’.கைபிடித்து அழைத்துச் சென்றார் நாறும்பூநாதன்.உள்ளே தி.க.சி தாத்தா, தோப்பில் முகம்மது மீரான் அண்ணாச்சி, நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருந்தனர்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த ’வானம்பாடி’ சங்கர் சித்தப்பாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மேடையில் ‘திருவுடையான்’ தபலா வாசித்துக் கொண்டே அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தகக் கண்காட்சியின்போது திருவுடையானின் கச்சேரியைக் கேட்டு ரசித்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தாளவாத்தியம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. முயன்று பார்த்தால்தான் தெரியும். பலமுறை முயன்று கேவலப்பட்டிருக்கிறேன்.(அதேபோலத்தான் ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் தீபாராதனையும் காட்டுவது. முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்).திருவுடையானுக்கு முன்பே ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி பாடிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் குரலைக் கேட்க முடியாமல் போனதில் வருந்தினேன். திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார்.

என்னை உள்ளே அனுப்பிவிட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த குஞ்சு பதற்றமான முகத்துடன் உள்ளே வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.

‘ஏம்ல ஒருமாரி இருக்கெ?’

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.‘வாசல்ல படியேறி வார ஒவ்வொருத்தர்க்கிட்டெயும் க்ருஷி ஸார்வாள், இந்தா நிக்காரு பாத்தேளா!இவாள்தான் ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’

தி.க.சி தாத்தா, ‘தேநீர்’ நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி, எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, எழுத்தாளர் உதயசங்கர் போன்றோருடன் மேடையில் உட்கார்ந்திருக்கும் போது மனதுக்குள் தயக்கமாகவே இருந்தது. அசல் எழுத்தாளர்களான இவர்களுடன் சரிசமமாக என்னையும் உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற சங்கோஜம் விழா முடியும்வரை என் மனதைவிட்டு அகலவே இல்லை. இந்த விழாவில் தோழர் பவா செல்லத்துரையும், அவரது துணைவியார் கே.வி.சைலஜாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவர்கள் இருவருமே எனக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி உறவுக்காரர்கள். நேரில் சந்திக்கக் காத்திருந்தேன். விழாவன்று காலையில்தான் அவர்கள் வரவில்லை என்னும் செய்தியை நாறும்பூநாதன் சொன்னார். குறிப்பாக தோழர் பவா செல்லத்துரையைச் சந்திக்க அதிகம் விரும்பினேன். காரணம், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும் போது என்னைவிட அவர் நிறம் என்று தோன்றுகிறது. அருகருகில் அமர்ந்து டெஸ்ட் செய்து பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதில் வருத்தம்தான்.

ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ எழுதிய நாறும்பூநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்’ என்று நான் பேசிய முதல் வரி மட்டும்தான் என் காதில் விழுந்தது. என் பேச்சுக்கு நடுவே நான்கைந்து இடங்களில் கைதட்டலெல்லாம் கூட கேட்டது. என்ன பேசினேன் என்றுதான் தெரியவில்லை.தோழர் நாறும்பூ வீடியோ ஏற்பாடு செய்திருந்தாரா என்று கவனிக்கவில்லை. ஒருவேளை எடுத்திருந்தால் அதைப் பார்த்து நான் பேசியதைத் தெரிந்து கொள்ள ஆவல்.ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் விதமாக மிகச் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தி.க.சி தாத்தாவிலிருந்து அனைவருமே பேசினார்கள்.அநேகமாக எல்லோருமே எழுதி கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புகளுடன் பேசினார்கள். அதுவும் கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு முழுநீள கட்டுரை எழுதி வந்து குரல் நடுங்க வாசித்து முடித்து, என்னருகில் அமர்ந்து ஒட்டுமொத்த மேடையையும் லேசாகக் குலுக்கினார்.‘நாறும்பூரெண்டாம் புஸ்தகம் எளுதியிருக்கதெ எனக்கு இன்னைக்குதானெ தெரியும்’ என்கிற விதமாக தோப்பில் அண்ணாச்சி படு இயல்பாகப் பேசினார்.வண்ணதாசன் அண்ணாச்சி தன் பேச்சில் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகளை சிலாகித்துச் சொன்னார்.சமீபத்தில்தான் உதயசங்கர் எழுதிய ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்தைப் படித்திருந்தேன் என்பதால் வண்ணதாசன் அண்ணாச்சியின் பாராட்டு சரியாகவே இருந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை தோழர் பாஸ்கரன் மேடையில் வாசித்தார்.அதில் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை பாராட்டி கூச்சத்தில் நெளிய வைத்தன சில வரிகள்.அதை மிஞ்சும் விதமாக ஐயா டி.செல்வராஜ் அவர் பங்குக்கு என்னை கலவரப்படுத்தினார்.‘ஒங்க எளுத்து எனக்கு ரொம்பப் புடிக்கும்.நான் எளுதுன ‘தோல்’ நாவல படிச்சு பாத்து ஒங்க அபிப்ராயத்த எளுதுங்க’.

விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

தோழர் நாறும்பூநாதனை நான் போய் பாராட்டாவிட்டாலும் அவர் பாரட்டுக்குரியவர்தான். தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே அவ்வப்போது எழுதிவருகிற அவர், இனிவரும் காலங்களில் நிதானமாக எழுதுகிற பட்சத்தில் இன்னும் வலுவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பது என் அபிப்ராயம். இந்த விழாவில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஓர் உதவியை நாறும்பூநாதன் செய்தார். சொல்வனம் பிரசுரம் வெளியிட்ட எனது ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிற ‘திருநவேலி’யின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் தந்த படைப்பாளிகளை சொல்வனம் சார்பாக கௌரவப்படுத்தும் வாய்ப்பை தனது விழாமேடையிலேயே அமைத்துத் தந்தார்.

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வள்ளிநாயகத்தின் ஓவியம் ஒன்று]

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இசக்கி எடுத்த ஒளிப்படம் ஒன்று]

காலம் சென்ற புகைப்படக் கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டியையும், ஓவியர் பொன் வள்ளிநாயகத்தையும் எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ மேடை கௌரவப்படுத்தியது.

[ஓவியர் பொன் வள்ளிநாயகம்]

[அருண்குட்டி]

ஓவியர் வள்ளிநாயகம் எப்போதும் என்னுடன் தொடர்பிலேயே இருக்கிற என் தம்பி.ஆனால் இசக்கி அண்ணாச்சியையோ, அவரது குடும்பத்தினரையோ நான் அறிந்தவன் அல்லன். ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அதிகம் சிலாகித்த இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.இசக்கி அண்ணாச்சியைச் சந்தித்ததில்லை. ஆனால் சென்னைக்கு நான் ரயில் ஏறும்போதுரயில்வே ஸ்டேஷனில் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்றார். இசக்கி அண்ணாச்சியின் கைகள்தான் அவை.

11 thoughts on “நாறும்பூமாலை

  1. ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’

    kunju rocks

  2. Dude..you may be suprised to see the Live trafic on your block “A Visitor from Quito – Pichincha”

    Its in south american country – Ecuador, as my job involves travelling, i always miss Tamil..Guys like you are there to satisfy my quest. Thanks for that.

    I worked in many part of Tamilnadu and of course i worked in Tirunevlveli also :). I stayed there for 2 years.
    Basically i’m from Chennai, I remember, the first day i landed in Palay new bus stand from Madurai, i asked auto driver that i need to go to Jayanagar – Driver ask me to sit and while on the move i told him “i wanted to go to Tirunelveli and you are taking me to Palayamkottai” – Driver suddenly stop the vehicle and stared laughing…but after that Tirunelveli becomes very friendly to me.
    So when i read your book and blog ..all my Tvli days are again comming in to reality..Thanks for that my friend

    God Bless you..

    Cheers
    Venkat

  3. “‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.”
    சான்ஸ்சே இல்லை சுகா வழக்கம் போல கலக்கிட்டீங்க. உங்கள் சுபாவம் கூச்ச சுபாவம் என்றாலும், மூங்கில் மூச்சு வழியாய் தங்களை அறிந்தவர்களுக்குக் உங்களையும் குஞ்சுவையும் பார்த்தால் நெடு நாள் பழகிய தோழமை உணர்வு வருவது சகஜம் தான்.
    – ஆனந்தி

  4. எங்க அம்மா ஊர் திருப்புடைமருதூர்… அந்த சாமி பேர படிச்சதில் ரொம்ப திருப்தி…. சின்ன வயதில் நாறும்பூநாதன் என்று ஒரு பள்ளி வாத்தியார் இருந்தார்… அவர் ஒல்லியாக இருப்பதால் சாலமன் என்ற எனது நண்பன் … அவரை நரம்புநாதன் என்று சொல்லி… அதிலும் கணக்கு சரியாக வராவிட்டால் அவர் மிகுந்த கோபம் அடைவார்… அப்போது அவரது நரம்பு அப்படியே தோலுக்கு வெளியே வரும் என்றெல்லாம் அநியாயத்துக்கு பயமுறுத்தி வைத்திருந்தான்… ஆனால் எனதருமை திருப்புடைமருதூர் நாறும்புநாதரும்…கோமதி அம்மையும் மிகவும் சாந்தமானவர்கள்… உங்கள் நெல்லையப்பரைவிட நாறும்பு நாதர் அமைதியானவர்… ஒரு முறைசென்று… புடார்ஜூனம் என்றழைக்கப்படும் மருதமரம் தல விருட்ச்சமான… உத்திராட்சம் போல் சிவனின் லிங்கம் அமைந்த திருப்புடைமருதூருக்கு சென்று வாருங்கள்… அப்படியே கோவில் பின்பக்கம் ஓடும் தாமிரபரணியையும்…பார்த்து வாருங்கள்… அப்புறம் உங்கள் எழுத்தைபற்றி எழுத நான் சரியானவனா என்ற திருநெல்வேலி காரர்களுக்கே உரிதான ஒரு தயக்கம் இருக்கிறது… ரொம்ப நல்லாருக்கு அவ்ளோதான்…

  5. கீரனூர் ஜாகீர் ராஜா மேடையில் அமர்ந்த விதம் , அரசியல் வாதிகள் பட்ட பெயர் , குஞ்சு இப்படி பல விஷயம் மனம் விட்டு சிரிக்க வைத்தது. அருமை

  6. சுகாவைக் கண்டேன்…! குஞ்சுவை திட்டமிட்டு போட்டோவில் காட்டவில்லையே….பொறாமையோ…! :)))

  7. Nice suka sir. Today I took leave to help my son. Since he is going to write his 10th paper Tomorrow. But I read ur moongil moochu fully :). Really I enjoyed reading ur words.

  8. சுகா, உங்களின் எழுத்து எல்லா இறுக்கங்களையும் இறக்கிவைத்து ஆனந்தமாக்குகிறது.பதின்வயதில், மாலைவேளையில் காஃபி கையில் வைத்துக்கொண்டு மாடிவீட்டு ரெஜினா டீச்சருடன் கல்லூரிகலாட்டாக்களை பேசி மகிழ்ந்த அனுபவத்தை உணர்கிறேன்,உங்களின் பகிர்வுகளை வாசிக்கும்போது.
    (இன்னுமா கூச்சம் உங்களைவிட்டு போகவில்லை,,இத்தனை வாசகர்களை பெற்றபின்னும்.)

  9. கட்டுரையின் பல இடங்களில் அடிவயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தேன், குறிப்பாக..

    ‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.

    ‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு?

    இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.

    விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

    Anbudan,

  10. suga sir,

    Nice article , i am your long time fan , this is my first letter send to you, basically my native chennai (Avadi) , but i frequent travel to Thirunelveli , that time i remember to u lot, i discuss with my colleague ( unfortunate they are not aware your name) , such a good writing style , keep it up.

    Ramesh.S

Comments are closed.