‘கதாநாயகியோட அம்மாவா நடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு நடிகைகளேதானே வளச்சு வளச்சு நடிக்காங்க! சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன?’ இந்த விபரீத ஆசை யின் தேடலில் ஒரு பெண்மணியின் புகைப்படம் கிடைத்தது. அச்சு அசலான நடுத்தரத் தமிழ்க்குடும்பத்து பெண்மணி. மதுரை மாவட்டத்தின் ஏதோ ஓர் பள்ளியின் ஆசிரியை.

‘நடிக்க வருவாங்களாப்பா?’

‘அவங்க ஹஸ்பண்டுக்கிட்ட பேசச் சொன்னாங்க, ஸார்.’

உதவி இயக்குனர் சொன்னார்.

‘அதுக்கென்ன? பேசிட்டா போச்சு. நம்பர் இருக்கா?’

‘இருக்கு ஸார்’.

‘குடு. பேசலாம்.’

‘னைன், எய்ட், த்ரீ, டூ . .’

‘என்ன பண்றாராம், ஸாரு?’

‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸார்’.

‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.

நொடிப்பொழுதில் முடிவை மாற்றினேன். ஆனால் தற்செயலாக பெயர் தெரியாத அந்த டீச்சரம்மாவின் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. Staff roomஇல் சக டீச்சர்களின் கேலிச் சிரிப்பொலிகளுக்கிடையே, ‘டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்ற குரலைத் தொடர்ந்து, ‘கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களென்’ என்று யாரோ சொல்கிறார்கள். முகம் முழுதும் பெருகிய வெட்கத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, கூச்சம் விலகாமல், தலை கவிழ்ந்தபடி, மேஜையில் கைகளை ஊன்றியபடி அந்த டீச்சர் பாட ஆரம்பிக்கிறார், ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. அவர் பாட ஆரம்பித்த அந்த நொடியில் என் மனம் கலங்க ஆரம்பித்தது. ஆனால் பாட்டு போகப் போக டீச்சரின் கூச்சம் மறைந்து அந்தப் பாடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை துலக்கம். . ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்று சரணத்தைத் தொடங்கும் போது குரலில் அத்தனை உருக்கம். தலையைக் குனிந்தவாறே பாடியபடி ’மறந்தாதால்தானே நிம் . . . .மதி’ என்று முடித்துவிட்டு, வலிய வரவழைத்த சிரிப்புடன் நிமிர்ந்தார். ’டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்று சொன்னவுடன், அவர் ஏன் இந்தப் பாடலைப் பாடினார்? இந்தப் பாடலைத் தவிர வேறெந்தப் பாடலைப் பாடியிருந்தாலும், அது இந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திருக்குமா என்று மனதுக்குள் பல கேள்விகள்.

folder

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

திருநவேலியின் லாலா சத்திர முக்கில் இருக்கும் ‘சதன் டீ ஸ்டாலில்’ அதிகாலை நேரத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் ‘அறுவடை நாள்’ பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, அது. ‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான். சதன் டீக்கடைக்காரர் கணேசனுக்கு மட்டும் ‘விவா டீ’க்கு பதிலாக, வேறேதும் ஊனா பானா கொடுத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பாடல் முடிந்ததும் கணேசண்ணன் பிதற்ற ஆரம்பிப்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

ilayaraja_yesudas_chithra_fazil

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா. பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் வரும் தேவாலயம், பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப் பிரமாண்டமான தேவாலயம். ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அந்த தேவனின் கோயிலை சிலமணித்துளிகள் நின்று பார்ப்பது என் வழக்கம். ‘இதயெல்லாம் பாக்காமலயெ அந்த மனுஷன் எப்பிடித்தான் அப்பிடி ஒரு பாட்டு போட்டாரோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள். ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

கணேசண்ணன், கிறிஸ்டோஃபர் ஸார்வாள், பெயர் தெரியாத அந்த டீச்சர், சகோதரர் விக்கி, நண்பர் அழகம்பெருமாள் என யாராவது ஒருவர் அவ்வப்போது என்னை ‘தேவனின் கோயில்’ பாடலுக்குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள். நானும் கொஞ்ச நாட்களுக்கு அதற்குள்ளேயே கிடப்பேன். கடந்த ஒருவாரகாலமாக ‘தேவனின் கோயில்’ பாடலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.

13 thoughts on “தேவனின் கோயில்

  1. என்ன பண்றாராம், ஸாரு?’

    ‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸார்’.

    ‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.

  2. சுகா… கருத்து எழுதவே வேண்டாம் என்று இருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து விட்டீர்கள்… தேவனின் கோவில் மூலம்…

    சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள்… இதில் எங்கள் தாத்தாவையும் சேர்த்துக் கொள்ளலாம்…

    கர்நாடக சங்கீதமே சினிமாவினால் கெட்டு விட்டது என்று தாம் தூம் என குதிப்பார்கள். உன்னி கிருஷ்ணன் அருமையாக பாடிக்கொண்டிருந்தான்… சினிமாவிற்கு போனான்… அப்புறம் எப்படி சங்கீதம் வரும்… என்றெல்லாம் ஒவர் ஆக்ட் கொடுத்து அவர்கள் வந்தாலே… சேனல் மாற்றும் அளவிற்கு டெரர் ஆக இருந்தார்கள்.

    வீட்டில் அவருக்கு நாங்கள் பிலஹரி (மார்த்தாண்டம் பிள்ளை — உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் ஜெமினி கணேசன் பெயர்) என்று பட்டப்பெயர் வைத்திருந்தோம்.

    தாத்தாவிற்கு இளையராஜா அவர்கள் விஷயத்தில் மட்டும் விதிவிலக்கு உண்டு என்பது கடைசியில் அவர்கள் உடன் இருந்த எனக்கு மட்டும் தெரியும். என்னமோ செய்யுறான்டா… கர்நாடக சங்கீதத்தை… எப்படி எல்லோரும் ரசிக்கிரார்கள் பாத்தியா… என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

    இளையராஜா அவர்களைப் பற்றி குறிப்பிடுவதென்றால் உங்கள் பக்கம் முழுவதையும் நிரப்பி விடுவேன்… சுருக்கமாக சொல்வதென்றால்… கலிபோர்னியாவில் என்னுடன் எப்பவும் இருப்பது அவர்தான்.

    நானும் நண்பர்களும் பேசிக்கொள்வோம்…. நாம லேக் டாஹோ விற்கு சென்றாலும்…. டெத் வேலி யில் ட்ரைவ் செய்தாலும் நம்முடன் ராஜா இருக்கிறார் பார்த்தாயா என்று.

    நேத்து படுக்கபோகும் முன்னர் இந்த பதிவை படித்து விட்டு தூக்கமே வரவில்லை, புனித சவேரியார் கல்லுரியில் 1988 முதல் 91 வரை படித்த எனக்கு… ஃபாதர். ஆரோக்கியசுவாமி முதல் கல்லூரியின் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொருவராக நினைவில் வந்து கொண்டிருந்தார்கள்.

    சவேரியார் கல்லூரி தேவாலயத்தையும் தேவனின் கோவிலையும் இப்போதும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை.

    சமீபத்தில் எனது எட்டு வயது மகன், தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத அவனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது தான் உச்சம்… மொஸார்ட்.. விவால்டி..பீத்தோவன் மாதிரி எங்கள் மொழியிலும் இளையராஜா என்று ஒரு கம்போசர் இருக்கிறார், என்று.

  3. சுகா சார். ஏதாவது வேலை இருந்தா குடுங்க சம்பளமே வேண்டாம். இத போல நாளுக்கு ஒரு பாட்டு சொல்லுங்க போதும்.

  4. suka sir
    // 2nd interlude l varum ilayarajavin thullal themmangu paadalin maiya soga jeevanai evvithathilum kalaikkavillai that is raja //

    yes true indeed. that is the greatness of his music calibre. similar to the finishing comments of @sankar : // there is a composer in our country named ilayaraja like beethoven, mozart…// thats great to hear from a non tamil knowing boy.
    yes music has no language. it has power to touch the soul and heal it.
    hats off ilayaraja and for you too to remind me again my fav song. thanks. enakku innaikku velaiyey odathu. antha paattey thirumba thirumba suthi suthi varum. nandri.
    anbudan
    sundar g rasanai chennai

  5. சுகா,
    பேஸ் கிடார் வெளியில் கேட்கும் மாதிரியாக வேண்டுமென்றே கம்போஸ் செய்யப்பட பாடல்களில் இதுவும் ஒன்று.. சதா அண்ணனின் எலெக்ட்ரிக் கிடார் (க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்), சசிதரனின் தேர்ந்த பேஸ் கிடார், தரமான வயலின் குரூப் இசை (strings), சற்றே சர்ச் பீலிங்…இவையனைத்தும் கலந்து கொடுத்த ராகதேவனின் திறமை, அவரும் பாடியிருக்கும் அந்த 2 வது BGM ….. சொல்வதற்கில்லை…. நான் அனுபவித்து வாசித்த பாடல்களில் இதுவும் ஒன்று…

    – Dr . வெங்கடேஷ் , நார்வே நாட்டிலிருந்து…

  6. dear suka sir.

    your article vibrated me and plunged into the music of maestro.

    every time when i hear hey ram — music and songs i could not control myself scolding the govt for not honouring him with padma pooshan.
    I wish to read an article about the different dimensions of music in that film.
    please write one

  7. ” ஒரு காதல் என்பது” “தேவனின் கோவில் ” பாடல்கள் உயிர் முடிச்சினை அவிழ்க்கும் இசை ராசாவின் சுரங்கள்.
    இந்த பாடலின் பாதிப்பை இன்னும் அதிகமாக்கும் இந்த பதிப்பு.
    தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி.

  8. Today after reading this article, it feels so nice to know that there is someone thousands of miles away to feel the same things I feel .What a beautiful song! It’s full of longing,loneliness,endurance, self-consolation .Anyone who is going through mental agony can easily get connected to this song and can feel a soul healing sensation.Many times I have a feeling that the artists touch my life magically, fill it with hopes and dreams,replenish and rejuvenate it and make it worthy for me to live it easily. I look forward to read how you enjoy the song ‘Adi Penne Ponnunjal Aadudhu Ilamai’. Thanks for sharing Suka. You’re doing a real good job of appreciating the best things of life .

  9. Hi anna,

    Was sad on not seeing any updates on your blog for months.. Happy to see again.
    Request you to update regularly and make us happy 🙂

Comments are closed.