விருகம்பாக்கம் ஏ.வி.எம். காலனியில் சில காலம் குடியிருந்தேன். அந்தப் பகுதி முழுவதுமே ஒரு குட்டி கிராமம் போல காட்சியளிக்கும். நான்கைந்து தெருக்களே உண்டு. மண்ரோடுதான். அந்த காலனியிலேயே சற்றுப் பெரிய கட்டிடம் என்று அங்குள்ள பிள்ளையார் கோயிலைச் சொல்லலாம். கோயிலைச் சுற்றி நல்ல விஸ்தாரமான பிரகாரம். முன்னே காலியாக நிறைய இடம். அதில் ஒரு வேப்ப மரம், மற்றும் அரச மரம். மாலை நேரங்களில் பெரும்பாலும் வயதானவர்கள் பேரன், பேத்திகளை அழைத்து வந்து, அவர்களை விளையாட விட்டு, பிள்ளையாரைப் பார்த்தபடியே அமைதியாக உட்கார்ந்து இருப்பர். இன்றைக்கு ஒளிபரப்பாகும் அநேக தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகிகளும், அவர்களின் அம்மாக்களும், சக்களத்திகளும் ஏ.வி.எம்.காலனி பிள்ளையாரிடமே தங்கள் குறைகளைச் சொல்லி முறையிடுகின்றனர்.

ஏ.வி.எம். காலனியில் நான் குடியிருந்த வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு பிராமணக் குடும்பம் குடியிருந்தது. காலனியிலேயே அந்த வீடு ரொம்பப் பிரபலம். எப்போதும் அந்த வீடு சத்தமாகவே இருக்கும். ஒன்று அந்தக் குடும்பத் தலைவர் கடுமையான சத்தத்தில் குடும்பத்து உறுப்பினர்களை திட்டிக் கொண்டிருப்பார். இல்லையென்றால் உரத்தக் குரலில் பாடுவார். பெரும்பாலும் ஹிந்திப் பாடல்கள்தான். பாபி திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘பேஷாக் மந்திர்’ பாடலை அப்படியே சன்ச்சல் குரலில் பாடுவார். உச்ச ஸ்தாயியில் பிசிறடிக்காத குரலில் அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் வீட்டுக்கு வெளியே வந்து வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றபடி ரகசியமாக அவர் பாடுவதை ரசிப்பேன். ஒரு நாளாவது அந்தக் குரலுக்கு சொந்தக்காரரிடம் பேசவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவரது சத்தமான பிற அர்ச்சனைகளுக்கும் என் காது பழக்கப்பட்டிருந்ததால் அந்த முயற்சியை எடுக்க மனம் துணியவில்லை. காலையிலும், மாலையிலும் குளித்து, நீரில் குழைத்துப் பூசிய திருநீற்று மணத்துடன் பஞ்சக்கச்சம் கட்டி, பட்டு அங்கவஸ்திரத்தை உடம்பில் போர்த்தியபடி அவர் கோயிலுக்குப் போவதைப் பார்ப்பேன். அவரது உயரமும், மீசையில்லாத கடுகடுத்த முகமும் பார்த்தவுடன் பதறிக் கும்பிடத் தோன்றும்.

ஏ.வி.எம் காலனி பிள்ளையார் கோயிலில் ஒரு குருக்கள் மாதச் சம்பளத்துக்கு பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். வேகமாக உரத்தக் குரலில் அவர் சொல்லும் மந்திரங்களில் நமஹ, ஓம், ஸ்வாஹா போன்ற ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே நம் காதில் தெளிவாக வந்து விழக் கூடியவை. மற்றவையெல்லாம் இப்படி அப்படிதான் இருக்கும். பிள்ளையாரும் அதை கண்டுகொள்வதில்லை. ஆனால் நமது ஐயர் கோயிலுக்குள் வந்துவிட்டாரென்றால் குருக்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். எல்லா மந்திரங்களையும் ஸ்பஷ்டமாக உச்சரிக்கச் சொல்லி பிராணனை வாங்கி விடுவார். சமயங்களில் மந்திரம் சொல்லி முடித்து பூஜையைத் துவங்க குருக்கள் முற்படும் போது ஐயர் உள்ளே புகுந்து மீண்டும் ஒன்றிலிருந்து துவங்கச் சொல்வார். அப்போதெல்லாம் பிள்ளையாரே ஐயரிடம் ‘அவன் ஏதோ பஞ்சத்துக்கு பூஜை பண்றான். அவனை விட்டுடேன் பாவம்’ என்று சொல்வது போல் இருக்கும். இதற்காகவே குருக்கள் ஒரு புத்தகத்தை வாங்கி கருவறைக்குள்ளேயே வைத்து விட்டார். எல்லா சமயமும் குருக்கள் அதை பயன்படுத்துவதில்லை. ஐயர் தலை தெரிந்து விட்டால் அனிச்சையாகவே அவர் கை அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து விடும். தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலுக்குச் சென்று குருக்களை பாடாய் படுத்தி பிள்ளையாரை வழிபடும் ஐயர், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அழுக்கு வேஷ்டியை மடித்துக் கட்டியபடி மதியப் பொழுதுகளில் பஸ்ஸ்டாண்ட் பக்கத்திலுள்ள பெட்டிக்கடையில் சிகரட் பிடித்துக் கொண்டிருப்பார்.

ஒரு கோடைகாலத்து மாலையில் வீட்டு வாசலில் உள்ள வேப்பமரத்தின் அடியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து எனக்கு ரொம்பப் பிடித்த ஜெயகாந்தனின் ‘விழுதுகள்’ குறுநாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஓங்கூர் சாமியாரிடம் மனதைப் பறி கொடுத்து ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஏதோ நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தால் எதிர் வீட்டு ஐயர். சடாரென்று எழுந்து நான் பேசத் துவங்கும் முன் அவர் , ‘ஐ ஆம் சந்தானம்’ என்று கைகுலுக்கினார். இன்னொரு நாற்காலியை போட்டு அவரோடு நானும் அமர்ந்து கொண்டேன். ‘தூரத்திலிருந்து பாக்கும் போதே நீர் ஏதோ படிக்கிறது தெரிஞ்சது. என்னமோ பக்கத்துல வந்து பாக்கத் தோணித்து. நீரும் என்னை மாதிரியே ஜேகே படிக்கிறவர்னு தெரிஞ்சு சந்தோஷம்’ என்றார். பேச்சுவாக்கில் தன்னைப் பற்றி சொல்லத் துவங்கினார். வட இந்தியாவில் பல வருடங்கள் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் ஜேகேயின் தீவிர ரசிகர் என்றும், நீண்ட காலம் கழித்து சென்னைக்கு வந்துவிட்டதாகவும் சொன்னார். என்னிடம் ஜேகேயின் எல்லா எழுத்துக்களும் இருக்கும் விஷயத்தைச் சொல்லி எது வேண்டுமோ, கேளுங்கள். தருகிறேன் என்றேன். ‘யுகசந்தி இருக்கா உம்மக்கிட்டே. அத படிக்கணும் ஓய்’ என்றார். ஜெயகாந்தனின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் அந்த கதை உள்ளது. அந்த தொகுப்பை உடனே வீட்டுக்குள்ளே போய் எடுத்து வந்து கொடுத்தேன். பிறந்த குழந்தையை வாங்குவது போல் கவனமாக, ஆசையாக இரண்டு கைகளிலும் வாங்கினார். கண்கள் கலங்கச் சொன்னார். ‘ யூ நோ சம்திங்க்? அ·ப்டர் ட்வெண்டி ·பைவ் இயர்ஸ், ஐ அம் கோயிங்க் டு ரீட் ஜேகே. தேங்க் யூ வெரிமச்.’ சொல்லிவிட்டு விறு விறுவென நடந்து சென்றார். அன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு அவர் வீட்டின் வரவேற்பறையின் விளக்கு இரவு வெகுநேரம் எரிந்து கொண்டிருந்தது.

அடுத்தடுத்து ஜெயகாந்தனின் மற்ற நூல்களையும் அவருக்கு கொடுத்தேன். மெல்ல மெல்ல அவர் வீட்டின் சத்தம் குறையலாயிற்று. அவரது மனைவி, மகள்கள், மகன் என்று மொத்தக் குடும்பமும் எனக்கு நெருக்கமானார்கள். ‘உங்களுடன் பழக ஆரம்பித்த பிறகுதான் அப்பா சாந்தமாகியிருக்கிறார்’ என்றார் பிரசவத்துக்கு தாய் வீட்டிற்கு வந்திருந்த அவரது மூத்த மகள். கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த பின் தாங்கள் மாம்பலத்தில் இருந்ததாகவும், அங்கு இருக்கப் பிடிக்காமல் விருகம்பாக்கத்துக்கு வந்ததாகவும் சொன்னார். ‘ஏன், மாம்பலம் நல்ல ஏரியாதானே’ என்று கேட்டதற்கு ‘ஐய்யய்யோ, அங்கெல்லாம் ஒரே பிராமின்ஸ்’ என்றார் கல்கத்தாவிலேயே வளர்ந்த அந்தப் பெண். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சந்தானம் இப்போது என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்திருந்தார். எனக்கு பிடித்த ஹிந்தி பாடல்களை பாடச் சொல்லி கேட்டு மகிழலானேன். அதில் என்னை கண்கலங்க வைக்கும் பாடல், ஆராதனா திரைப்படத்தில் எஸ்.டி.பர்மன் பாடிய ‘காஹே கஹோ’. வங்க தேசத்தின் நாட்டுப்புற மெட்டில் அமைந்த அந்த பாடலை சந்தானம் பாடும் போதெல்லாம் நான் எங்கோ தொலைதூரத்தில் இருப்பதாக உணர்வேன்.

ஏஷியாநெட்டில் ஒரு நாள் மோகன்லால் நடித்த ‘பவித்ரம்’ என்ற மலையாளப்படம் பார்த்தேன். ஒரு சமையல் குடும்பத்தில் பிறந்த மோகன்லாலின் தாயார் எதிர்பாராவிதமாகக் கர்ப்பமடைந்து விடுவார். மோகன்லாலுக்கு திருமணமான ஒரு அண்ணன் உண்டு. டாக்டரான அவர் வெளியூரில் வசிப்பார். தன் தாயார் கர்ப்பமான செய்தி அறிந்த மோகன்லால், அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடிவருவார். உள்ளே நுழைந்தவுடன் தகப்பனாரிடம் அம்மா எங்கே என்று கேட்பார். தர்மசங்கடத்தில் தவிக்கும் அவரது தகப்பனார் மகனின் முகம் பார்க்காமலேயே அங்குதான் எங்காவது இருப்பாள் என்று சொல்லி நழுவி விடுவார். அம்மா என்றழைத்தபடி வீடு முழுக்க மகன் வளைய வரும்போது அவரது தாயார் தன் அறையில் நின்று கொண்டு திருமண வயதில் உள்ள தன் மகனை இந்த நிலைமையில் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று யோசித்தவாறே கூனிக்குறுகிச் சுவற்றுப் பக்கம் திரும்பி நின்றபடிக் காத்திருக்க, அவர் அறையின் வாசலில் வந்து நிற்கிறார் மோகன்லால். இனி வேறு வழியில்லை என்பதால் பெரும் கூச்சத்துடன் திரும்பி மகனை நிமிர்ந்து அந்தத் தாய் பார்க்கிறாள். மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை அந்த மகன் அவிழ்த்துவிட, மாங்காய்கள் கொட்டுகின்றன. அன்று மாலையே என் வாத்தியார் பாலு மகேந்திராவைப் போய் பார்த்தேன். ‘இப்படி ஒரு காட்சியை நம் தமிழ் சினிமாவில் பார்க்க முடியுமா. மலையாளிகள் வாழ்க்கையிலிருந்து படம் எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த மாதிரியான உணர்வு எப்போது வரப் போகிறது’ என்றெல்லாம் புலம்பினேன். பொறுமையாக நான் சொல்வதைக் கேட்ட வாத்தியார், ‘நீ ஜேகேயோட ‘மௌனம் ஒரு பாஷை’ படித்ததில்லையா’ என்று கேட்டார். வெட்கிப் போனேன். நான் எப்படி ஜேகேயின் எழுத்தை விட்டிருக்கிறேன். அன்று இரவே சந்தானத்தை சந்தித்து இதை சொன்ன போது ‘மௌனம் ஒரு பாஷை’ முழுக்கதையையும் உணர்ச்சி பொங்க ஒப்பித்தார். அதன் பிறகே அந்த கதையை படித்தேன்.

ஜேகேயின் எழுத்துக்களைப் படிப்பதை விடவும் அதை பற்றிப் பேசுவதில் ஆர்வம் அதிகமானது சந்தானத்தின் மூலமாகத்தான். எதைப் பற்றி பேசினாலும் அதில் ஜேகேயை கொண்டு வந்து விடுவார். ‘தவறுகள் குற்றங்கள் அல்லன்னு தலைப்பிலேயே கதையை சொல்லிட்டாரே மனுஷன். அதில வர்ற ஜஸ்ட் எ ஸ்லிப் நாட் எ ·பால், ஞாபகம் இருக்கா’ என்பார். ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகத்தில வருகிற ஹென்றி, துரைக்கண்ணு, நான் ஜன்னலருகே உட்காந்திருக்கிறேனில் வரும் அந்த பாட்டி, குருபீடத்தின் பிச்சைக்காரன், இறந்த காலங்களில் வரும் ஓசியிலேயே கெட்டுப் போகும் அந்த பிராமணத் தாத்தா, சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் வெங்கு மாமா, ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன அலங்காரவல்லியம்மாள் என சந்தானத்தையும் என்னையும் சுற்றி ஜேகேயின் கதைமாந்தர்கள் உலவிவந்த நேரம் என் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்த காலங்களில் ஒன்று. அதற்குப் பிறகு நாங்கள் ஏ.வி.எம் காலனியை விட்டு வந்து விட்டோம். சந்தானமும் வேறு பகுதிக்கு வீடுகட்டிப் போய் விட்டார். தொடர்பில்லாமல் போனது. திடீரென்று ஒரு நாள் அவரது சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு அழைப்பு கொடுப்பதற்கு தம்பதி சமேதராக என்னைத் தேடி வீட்டுக்கே வந்தார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டோம். என்னை மறந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன். ‘வராம இருந்திராதீரும்’ என்றார். நானும், என் மனைவியும் சென்றோம். மணமேடையில் அமர்ந்தபடி சந்தானம் தம்பதியர் நெருங்கிய ரத்த உறவுகளுக்கு வேஷ்டி சேலை கொடுத்து கௌரவித்து வந்தனர். சற்றும் எதிர்பார்க்காத வேளையில் என்னையும் என் மனைவியையும் அழைத்து அதே மரியாதையை எங்களுக்கும் பண்ணினார். எங்களை அவர்களின் உறவினர்களோடு மணமேடையில் அமர வைத்து சந்தனம், குங்குமம் கொடுத்து பன்னீர் தெளித்து ஒரு தாம்பாளத்தில் வேஷ்டி, புடவை வைத்துக் கொடுத்து மகிழ்ந்தார். நான் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனேன். அந்த மணிவிழாத் தம்பதியரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, மனம் நிறைந்து வீட்டுக்குத் திரும்பும் போது என் மனைவி கேட்டாள்.

‘அப்படி என்ன நம்ம மேல அவங்களுக்கு அப்படி ஒரு பிரியம்?’

சட்டென்று என் மனதில் தோன்றிய பதில் இதுதான்.

‘யுகசந்தி’.

3 thoughts on “யுகசந்தி

  1. அருமை.
    என்னையும் என் ஜெயகாந்தன் நாட்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.

    அந்த மனிதரிடம் ஏதோ மாயம் இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் நமக்காக எழுதுவது போல இருக்கும்.
    உங்கள் எழுத்தும் நட்பாக இருக்கிறது.நன்றி.
    நீங்களும் நெல்லையைச் சேர்ந்தவரா.

  2. உங்களது எழுத்து நடை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  3. வார்த்தைகளாலேயே ஓவியம் வரைந்து விட்டீர்கள். பிர்மாதம்.- வாயு

Comments are closed.