நடைச்சித்திரம் . . .

90களின் துவக்கத்தில் சாலிகிராமம் அபுசாலி தெருவில் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த கே.ஜே.யேசுதாஸின் ஒன்று விட்ட சகோதரர், வாத்தியாரைப் பார்த்து பதறி வணங்கி, ‘என்ன ஸார் இது? நீங்க நடந்து போறீங்க?’ என்றார். ‘ஏன்? நான் நடந்தா என்ன?’ என்றார், வாத்தியார். ‘வேணும்னா தம்பிய போகச் சொல்லலாமே! நீங்க போய் நடந்துக்கிட்டு?’ என்னைக் காண்பித்து சொன்னார். ‘எனக்காக நானும், அவனுக்காக அவனும் நடக்கறான்’. வாத்தியாரின் பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை என்பது அவரது முகபாவனையில் தெரிந்தது. ‘என்னவோ போங்க’ என்பது போல நகர்ந்து சென்றார். ‘வாடா போகலாம்’. சிரித்தபடி வாத்தியார் நடையைத் தொடர, நானும் அவரைத் தொடர்ந்தேன். சாலிகிராமத்துக்குள்ளேயே எங்கு செல்வதாக இருந்தாலும் வாத்தியார் நடந்துதான் செல்வார். அப்போதெல்லாம் அநேகமாக வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி பஜார் நடைபாதைக் கடைகளையொட்டி வாத்தியாரும், நானும் நடந்து செல்வோம். சும்மா நடப்பதும் உண்டு. அது தவிர சின்னச் சின்ன ஆபரணங்கள், துணிமணிகள் உட்பட இன்னும் சில கலைப்பொருட்களை அங்குள்ள நடைபாதைக் கடைகளில்தான் வாத்தியார் தேர்ந்தெடுத்து வாங்குவார். அங்கும் எதிர்ப்படும் மனிதர்கள் கேட்கும் ‘என்ன ஸார் நடந்து வர்றீங்க?’ கேள்விகளைப் பொருட்படுத்தாமல் அடுத்த கடைக்குச் செல்வோம். ஒருமுறை அப்படி ஒரு நடைபாதைக் கடையில் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைக் கண்டோம். ஜானகி அம்மாவும், வாத்தியாரும் பரஸ்பரம் ‘என்ன நடந்து வர்றீங்க?’ என்று கேட்டுக் கொள்ளவில்லை. 

‘வாக்கிங்’ போவதற்காகப் பூங்காக்களையோ, கடற்கரையையோ நாடாமல் நாம் இருக்கும் பகுதியிலுள்ள தெருக்களிலேயே நடப்பது என்கிற முடிவை எடுக்க வைத்தவர், வாத்தியார்தான். முன்பெல்லாம் சாலிகிராமம் அருணாசலம் சாலையில் நடப்பதுண்டு. சூர்யா மருத்துமனைக்கு அருகிலுள்ள ‘திருநெல்வேலி ஹோட்டல்’ கதிர் கண்களில் சிக்கிக் கொள்வேன். ‘என்னண்ணே! ஆளையே காணோம்?’ கதிரின் தாயுள்ளம் கொண்ட வாஞ்சைக் குரல், சில நொடிகளில் வாழை இலையில் வைக்கப்பட்ட வடைகளின் முன் உட்கார வைத்துவிடும். கூடவே முறுகலான எண்ணெய் தோசையும் வந்து அமரும். ஒருகட்டத்துக்குப் பின் அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்த்து, நடேசன் நகர் பக்கம் நடையைத் திருப்பினேன். அங்கும் சாத்தான் காத்திருந்தது. அங்குள்ள ‘சுவாமிநாத் கபே’யின் உரிமையாளர் என்னவோ கும்பகோணத்துக்காரர்தான். ஆனால் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் திருநவேலி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கல்லிடைக்குறிச்சி ஆச்சி ஒருத்தி இருக்கிறாள். என் நேரத்துக்கு  கடையை ஒட்டி வெளியே காபி போட்டுக் கொண்டிருக்கும் அவள் கண்களில் சிக்கிக் கொள்வேன். 

‘என்னய்யா? பாத்தும் பாக்காத மாரி போறே?’ 

‘இல்ல பெரிம்ம. ஒன்னப் பாத்துட்டுதானெ ரோட்ட க்ராஸ் பண்ணி வாரென்’.

பிள்ளேள்லாம் சும்ம இருக்கா? இப்போதைக்கு ஊருக்குப் போனியா? நான் போறதுக்கு ரெண்டு மாசம் செல்லும். கோயில் கொட வருதுல்லா’.

கல்லிடைக்குறிச்சிக்காரியின் வட்டார வழக்குப் பேச்சில் மயங்கி காபிக்கு முன், இட்லி மற்றும் பூரி கிழங்கு சாப்பிடுவேன். சுவாமிநாத் கபேயில் சாப்பிடும்போதெல்லாம் அண்ணாச்சி இளவரசுவிடம் மாட்டுவேன். 

‘யோவ்! நீ வாக்கிங் போற லட்சணத்த தயவு செஞ்சு வெளிய சொல்லி கில்லித் தொலச்சுராதே. ஒருத்தன் மதிக்க மாட்டான். ஏன் பூரியோட நிறுத்தறே? ஒரு ரவா சொல்லி சாப்பிடேன்’.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுவாமிநாத் கபேக்கு எதிரே உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு தினமும் செல்வது இளவரசு அண்ணாச்சியின் வழக்கம். அவர் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் அந்த ஜிம்முக்குச் சென்று எல்லோருடனும் மனம் விட்டுப் பேசிவிட்டு, களைப்புடன் சுவாமிநாத் கபேக்கு வந்து சீனியில்லாத காபி குடித்துவிட்டு செல்வார். 

நடேசன் நகர் பக்கம் நடைப்பயிற்சி செல்வதும் சரிவராத காரணத்தால் மீண்டும் சில நாட்கள் அருணாசலம் சாலைப் பக்கம் தொடர்ந்தேன். இந்தமுறை மனக்குரங்கு திருநவேலி ஹோட்டல் கதிர் அழைக்காமலேயே உள்ளே இழுத்துச் செல்லத் துவங்கிவிட்டது. 

‘அப்புறம் கதிரு! என்ன ஒன்னய ஆளையே காங்கல?’

‘நான் இங்கனயேதானெண்ணெ கெடக்கென். நமக்கு எங்கெ போக்கெடம் சொல்லுங்க. இன்னொரு வட வைக்கட்டுமா?’

தனியாக அமர்ந்து ‘எங்கே தவறு நடக்கிறது?’ என்று யோசித்துப் பார்த்து ஹோட்டல்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் நடக்க தீர்மானம் செய்து உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கினேன். சாலிகிராமம் காந்தி நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டுக்கு நான்கைந்து வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டு வாசல் கேட் அருகே போகிற வருகிற ஜனங்களை வேடிக்கை பார்க்கும் ‘கியூட்டி’ என்கிற லாப்ரடார் வகை நாயைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் ஆகும். கியூட்டியிடமும், அவளை மகள் போல வளர்க்கும் மனிதரிடமும் நின்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. சில நேரங்களில் கியூட்டியைப் பார்க்காமல் நடந்து போனால் சத்தம் போட்டு ‘கியூட்டி’ அழைக்கும். குரலில் ‘மாமா’ என்று கேட்கும். ‘இப்படி பாக்காம போகாதீங்க ஸார். அப்புறம் அவ அப்ஸெட் ஆயிடுவா’. கியூட்டியுடன் சில நிமிடங்கள் செலவழித்துவிட்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அங்கு ‘ரூனோ’ காத்திருப்பான். ‘ரூனோ’ பீகிள் வகையைச் சேர்ந்த பையன். ‘கியூட்டியை’யாவது அவள் வீட்டு வாசலில் நின்று கொஞ்சுவதோடு ஜோலி முடிந்துவிடும். ஆனால் ‘ரூனோ’வுக்கு என்னுடன் வெளியே ஒரு ரவுண்டு வர வேண்டும். அவன் வீட்டு ஆட்கள் என் தலையைப் பார்த்ததும் அவன் கழுத்துப் பட்டையில் ஒரு வாரைப் பொருத்தி என் கைகளில் கொடுத்து விடுவார்கள். அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று விட்டு, அவனை வீட்டில் விட்டுவிட்டு நான் வீடு திரும்பிவிடுவேன். இப்படியே போச்சுன்னா நாம நடந்த மாதிரிதான் என்று தோன்றவே வடபழனி குமரன் காலனியைத் தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். அங்குதான் திரைப்பட தயாரிப்பு நிர்வாக உதவியாளர்கள் சங்கம் இருக்கிறது. அதை கவனிக்காமல் அது வழியாக நடந்து சரியாக கோபாலிடம் மாட்டிக் கொண்டேன். 

‘ஸாஆஆஆர்! வண்டில ஏறுங்க’.

கிட்டத்தட்ட மிரட்டினான், கோபால்.

‘கோபால். சொன்னாப் புரிஞ்சுக்கோ. நான் கொஞ்சம் நடக்கணும்’.

‘நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். வண்டில ஏறப்போறீங்களா, இல்லியா?’

கோபாலால் தெருகடத்தப்பட்டு என் வீட்டுக்குள் அடைக்கப்பட்டேன். குமரன் காலனியை ஒட்டியுள்ள தெருக்களில் நடக்கலாமே! அங்கு யார் நம்மை என்ன செய்து விட முடியும்? சுமுகமாக நடக்க முடிந்தது. சில தினங்கள்தான். அங்கு(ம்) ஒரு சினிமா பட்டறை இருப்பதை கவனிக்கத் தவறினேன். விளைவு, ‘அப்பத்தாவை ஆட்டயைப் போட்டுட்டாங்க’(ஆம். அதுதான் படத்தின் பெயர்) திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீஃபனால் மறிக்கப்பட்டேன். வழக்கமான ‘என்ன ஸார் நடந்து போ . . .’. ஸ்டீஃபனை முடிக்க விடவில்லை. ‘ஆமா ஸ்டீஃபன். நான் நடந்து போயிக்கறேன். நீ பைக்கை ஆஃப் பண்ணு’. திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அதற்கு அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள். குமரன் காலனியையும், அருணாசலம் சாலையையும் இணைக்கிற சாலைத் திருப்பத்தில் ‘பரணி டப்பிங் தியேட்டர் இன்சார்ஜ்’ தனகோடியின் கைனட்டிக் ஹோண்டா என் மீது மோதியது. வண்டியில் தனகோடி இருந்தார். தூயசினிமா பாஷையில் ‘ஜி’ என்றழைத்தபடி தனகோடி என் கைகளை எட்டிப் பிடித்தார். தனகோடி அணிகிற சட்டைத்துணியில் என் அளவுக்கு நான் ஆறு முழுக்கை சட்டையும் மூன்று கைக்குட்டைகளும் தைத்துக் கொள்ளலாம். அத்தனை அகலமான மனிதர். உள்ளமும் குறைச்சலில்லை. 

‘எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஜி, நீங்க நடந்து போறதப் பாக்கறதுக்கு’.

கண்கள் கலங்க முயன்றன. 

‘நீங்க கலங்கற அளவுக்கு ஒண்ணும் ஆகல தனகோடி. ‘பழமுதிர்சோலை’க்கு வந்தேன். பளம் வாங்கிட்டு அப்படியே நடந்து போகலாம்னு பிளான். நீங்க கெளம்புங்க’.

இன்னொரு நாள் இருட்டியபிறகு திருநவேலி ஹோட்டல் வரைக்கும் செல்லாமல் அருணாசலம் சாலையின் பாதிதூரம் வரைக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு காரில் என்னைக் கடந்து சென்ற கவிஞருமான ‘கவிஞர் சிநேகன்’ ஒரு நொடி காரின் வேகத்தைக் குறைத்து, பிறகு என்ன நினைத்தாரோ, நல்ல வேளையாக ஒரு கவிஞருக்கேயுரிய இலாவகத்துடன் காரை வேகமாகச் செலுத்தினார். ஒரு கவிஞர் போல ஒப்பனைக்கலைஞர் இருக்க வேண்டிய அவசியமில்லையே! அமரர் தமிழ்வாணனின் தொப்பியைப் போன்ற தொப்பி அணிபவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞர் ராமச்சந்திரன். கலைஞர் கருணாநிதி சாலை என்கிற கே கே சாலையிலுள்ள நாட்டு மருந்து கடை அருகே வரும் போது எதிரே தெரிந்த ராமச்சந்திரனின் தொப்பியை சரியாகப் பார்க்காமல் விட்டதன் விளைவு, ராமச்சந்திரன் என் கைகளில் பணத்தைத் திணிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. ‘ஆட்டோல போங்க ஸார். ஏன் ஸார் நடந்து போறீங்க? உங்கக்கிட்ட காசு இல்லங்கறது புரியுது. நான் தரேன் ஸார்’. கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக ராமச்சந்திரனிடமிருந்துத் தப்பி வந்தேன். இனிமேல் பக்கத்து வீட்டுக்கே ஊபர்லதான் போக வேண்டியது வருமோ என்கிற கவலையை என்னைத் தெரிந்த சொற்ப மனிதர்கள் எனக்கு அளித்து வருகிறார்கள். சென்ற மாதத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் தாண்டி மீன் மார்க்கெட்டுக்கு முந்தைய வளைவில் உள்ள தெருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ‘நாசே’ ராமச்சந்திரன் வீட்டுக்கு முன் நடந்து வரும்போது, முற்றிலும் முகம், கைகளை மறைத்து துணி சுற்றிய ஒரு பெண் தனது டூ வீலரால் என்னை மறித்து என்னைத் திடுக்கிட வைக்கும் விதமாக ‘ஸா . . . .ர்’ என்று அலறி வண்டியை அவசர அவசரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். யாராக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் முகமூடியை அவிழ்த்தபடியே, ‘என்னைத் தெரியலியா ஸார்? நான் தான் பேச்சியம்மாள்’ என்றார். 

‘அடிப்பாவி, நீயா? நான் பயந்துல்லா போனேன். எங்கெ இந்தப்பக்கம்?’

‘பக்கத்து ஸ்டிரீட் டப்பிங் தியேட்டர்ல ஒரு டப்பிங். நம்ம விஜிமேடம்தான் இன்சார்ஜ். அத முடிச்சுட்டு வரேன்.’

பேச்சியம்மாளுக்கு சொந்த ஊர் சங்கரன்கோயில். ‘அசுரன்’ திரைப்படத்தில் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களுக்கு மாற்றி மாற்றிப் பேச வைத்திருந்தேன். 

பேச்சியம்மாள் வாயிலிருந்தும் அதே கேள்வி: ‘என்ன ஸார் நடந்து போறீங்க?’

‘யம்மா! என் வீடு பக்கத்துலதான் இருக்கு. முடி வெட்டிட்டு அப்படியே நடந்து வாரென்.’

‘அதுக்காக நீங்க நடந்து போகலாமா? என்னால பாத்துட்டுப் போக முடியல. நீங்க என் குருல்லா’.

‘ஏ பிள்ள! அன்னா தெரியுது பாரு ஒரு பில்டிங்கு. அதான் என் வீடு. நீ கெளம்பு’. சற்று கண்டிப்பான குரலில் சொல்லி பேச்சியம்மாளை அனுப்பி வைத்தேன்.

இதைப் படித்த யாரேனும் சாலிகிராமத்திலுள்ள காந்தி நகர் மற்றும் வடபழனி குமரன் காலனி தெருக்களில் சுட்டெரிக்கும் வெயிலில் கூட குரங்கு குல்லா அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு, முகத்தை மறைக்கும் விதமாக கைக்குட்டை கட்டி ஓர் உருவம் நடந்து செல்வதைப் பார்த்தீர்களானால் ஏதோ வடநாட்டு சம்பல் கொள்ளைக்காரனென்றோ, பிள்ளை பிடிக்கிறவன் என்றோ நினைத்து ‘ஒன்று பூஜ்யம் பூஜ்யம்’ எண்ணை அழைத்து விடாதீர்கள்.