சுளுக்கு . . .

இந்தமுறை திருநவேலி வாசம் ஒரு வாரத்துக்கு மேல் எடுத்துக் கொண்டது. கவிஞர்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஒரு மழைநாளில் சில்லென்று சிலிர்த்தபடி தூறலும், சாரலுமாக திருநவேலி என்னை வரவேற்றது’. போய் இறங்கிய நாளிலிருந்து தொடர் பயணம். முதல் இரண்டொரு தினங்களில் ‘அசுரன்’ திரையரங்குகளுக்கும், மீதி நாட்களில் திவ்ய தேசம், நவ திருப்பதி, திருச்செந்தூர், சித்தூர் தென்கரை மகராஜா திருக்கோயில் மற்றும் அம்மையப்பன் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோயில் என சுற்றியபடியே இருந்தேன். இதில் நெல்லையப்பர் கோயிலைத் தவிர மற்ற கோயில்களுக்கும், ஊர்களுக்கும் காரில் பயணம் செய்ததால், சென்னைக்குக் கிளம்பும் முந்தைய நாளில் கடும் உடல்வலி. ஏற்கனவே ‘அசுரன்’ பட இறுதிக்கட்ட பணிகளுக்காக இரண்டு மாதங்களாக ஒரே அறைக்குள் ஒரு பிரத்தியேக நாற்காலியில் அமர்ந்தபடியே இரவுபகலாக வேலை செய்ததன் பலன் முதுகில் மெல்ல மெல்ல இறங்கியிருந்தது. கூடவே இந்தத் தொடர்பயணம் மேலும் வலியை வலுவாக்கியது. படுத்து உறங்க இயலவில்லை. மல்லாக்க, ஒருச்சாய்த்து எப்படி படுத்தாலும் வலி குறையவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க இயலாமல் தங்கையின் கணவரை ஃபோனில் அழைத்தேன். அவர்தான் என்னை நவதிருப்பதிக்கு அழைத்துச் சென்று பெருமாளை சேவிக்க வைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டவர்.

‘மாப்ளே! நம்ம ஊர்ல கோட்டக்கல் வைத்திய சாலை எங்கன இருக்கு?’

வலியில் முனகினேன்.

‘என்ன விஷயம் அத்தான்? சிரிச்சுக்கிட்டே கேக்கேளே! ஏன்?’

தங்கை கணவரென்பதால் வலியையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ‘கடுமையான முதுகு வலி மாப்ளே. அங்கனன்னா சுளுக்கு கிளுக்கு தடவுவாங்கல்லா?’

‘முதுகு வலியா? இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே? இரிங்க. அரை மணிநேரத்துல வாரென்’.

சொன்ன படியே ஒரு மணிநேரத்தில் கையில் ஒரு புட்டியுடன் வந்து சேர்ந்தார், மாப்பிள்ளை. அதன் மேல் ஓர் அழுக்குத்தாளில் மங்கிய எழுத்துகளில் கேரள ஆயுர்வேத சாலை என்று தமிழ் போன்ற மலையாளத்தில் எழுதியிருந்தது. 

‘இதுக்குப் போய் அங்கன போய் முன்னப்பின்ன தெரியாத மலையாளத்தான்கிட்ட முதுகக் காட்டுவேளாக்கும்?! சட்டயக் கெளட்டுங்க. நானே தடவி விடுதென்’ என்று சொன்ன கையோடு என் மேல் பாய்ந்து சட்டைப் பித்தான்களைக் கழட்ட ஆரம்பித்தார். 

‘இரிங்க மாப்ளே. நானே களட்டுதேன்’. 

‘ச்செரி.அப்பம் நான் போயி ஸ்டூலைக் கொண்டு வாரென்’.

மாப்பிள்ளை வருவதற்குள் சட்டையைக் கழட்டி விட்டு வேஷ்டியுடன் அமர்ந்திருந்தேன். ஸ்டூலுடன் வந்த மாப்பிள்ளை, ‘வாங்கத்தான். இதுல வந்து உக்காருங்க’ என்று ஸ்டூலைக் காட்டினார். உட்காரப் போன என்னைப் பிடித்து நிறுத்தி சட்டென்று இடுப்பில் கை வைத்தார். 

‘மாப்ளே! என்ன இது? என்ன இருந்தாலும் நான் ஒங்க அத்தான். அத மறந்துராதிய.’ 

கோபத்தில் முறைத்தபடி சொன்னேன்.

‘அட நீங்க ஒரு ஆளு. வேட்டிய அவுருங்கய்யா’.

‘மாப் . . .ளே’

‘துண்ட உடுத்திக்கோங்க. கொண்டாந்துருக்கெம்லா!’

துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தேன். அழுக்கு புட்டியிலிருந்த தைலம் என்னும் திரவத்தை கையில் ஊற்றிக் கொண்டார் மாப்பிள்ளை. நறுமணத்தில் மயக்கம் வந்தது. முதலில் தோள்பட்டையில் தைலத்தை வடிய விட்டார். மிதமான சூடு. நேரடியாக மூக்கில் மணம் அடித்து தலையைத் துவளச் செய்தது. 

‘ஆங்! தலையத் தொங்கப் போடாதிய’. பட்டென்று பிடரியில் அடி விழுந்தது. அடிகளின் பிள்ளையார்சுழி அது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தோளிலிருந்து மாப்பிள்ளையின் முரட்டுக்கரங்கள் நடு முதுகுக்கு இறங்கி அங்கு சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு இடுப்புக்குச் சென்றது.

‘அங்கனதான் அங்கனதான் மாப்ளே. குறுக்குலதான் வலி’.

‘ஆமாமா. திண்டு கணக்கால்லா ரத்தம் கெட்டியிருக்கு. இரிங்கொ’.

புட்டியிலிருந்து இன்னும் கொஞ்சம் தைலத்தை கைகளில் ஊற்றிக் கொண்டார். தைலக் கைகளோடு ‘சளத் சளத்’ என இடுப்பில் வைத்து சாத்தினார். என் கேவல் ஒலி மாப்பிள்ளையின் காதுகளை எட்டவே இல்லை. அவர் தியானம் பண்ணுவது போல மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு என் இடுப்பில் கைகளால் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தார். 

‘துண்டை லேசா தூக்குங்கொ’.

அம்பாசமுத்திரத்திலிருந்து அந்தக் காலத்தில் டிரங்க் காலில் ஒலிக்கும் குரல் போல மாப்பிள்ளையில் குரல் எங்கோ கேட்டது. நான் சுயநினைவுக்குத் திரும்புவதற்குள் மாப்பிள்ளை என் தொடைகளில் தைலத்தை வழிய விட்டார். அடி அங்கும் பலமாகத்தான் விழுந்தது. பாதம் வரைக்கும் வழிந்த தைலம் சின்ன வாய்க்கால் போல அறையெங்கும் ஓடியது. ஆனாலும் திருப்தியடையாத மாப்பிள்ளை மேலும் புட்டியைக் கையில் கவிழ்த்து தைலத்தை ஏந்தினார்.

‘போதுமே மாப்ளே! அதான் நல்ல்ல்லா தேச்சுட்டேளே!’

‘சும்ம கெடைங்கத்தான். எறநூறு ரூவா குடுத்துல்லா வாங்கியிருக்கென். முளுசா கவித்திருவோம்.’

மாப்பிள்ளையின் கரங்களிலிருந்து நான் விடுபடும் போது வெளியிலும், எனக்குள்ளும் இருட்டத் துவங்கியிருந்தது. 

‘நல்லது மாப்ளே! ஒங்களுக்கு ஆயிரம் சோலி கெடக்கும். ஒங்கள வேற சங்கடப்படுத்திட்டென். நீங்க கெளம்புங்க’.

‘நல்ல கதயா இருக்கெ! வெந்நி போடச் சொல்லியிருக்கென். ஒங்களுக்கு முதுகு தேச்சுக் குளிப்பாட்டிவிட்டுட்டுத்தான் கெளம்புவென். எண்ணெ போணும்லா!’

நான் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். உடம்பு வலியும், மனவலியும் சேர்ந்து கொண்டு பரிசாக அளித்த சோர்வு. 

‘எத்தான் . . . . எத்தான்’.

கவனம் கலைந்து, ‘சொல்லுங்க மாப்ளே’.

‘வெந்நி சுடதுக்குள்ள இந்தாக்ல ஒரு செல்ஃபி எடுக்கிடுவோமா?! இந்த மாரில்லாம் அமையாது பாத்துக்கிடுங்க’.

காந்திமதித்தாயின் அருளால் தங்கை அங்கு வந்து சேர்ந்தாள்.

‘எய்யா! வெந்நி சுட்டுட்டு. கூட்டிட்டு வாருங்கொ’.

‘மாடு குளுப்பாட்டுன கையால அண்ணன போட்டு என்னா பாடு படுத்துட்டியோ!’

தங்கையின் முணுமுணுப்பை மனக்காது கேட்க மறுத்தது. மாப்பிள்ளை இயற்கை விவசாய ஆர்வலர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்றவர். அவர் மாடு குளிப்பாட்டும் விவரம் அறிந்த பின்னும் அவர் கைகளினால் குளிப்பாட்டப்பட சென்றேன்.

கொதிக்கக் கொதிக்க சுடுநீரை முதுகில் ஊற்றித் தேய்க்கத் துவங்கினார். மாப்பிள்ளையின் கரங்களில் வைக்கோல் இருப்பதாகவே என் மடமுதுகு உணர்ந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் ஈனஸ்வரத்தில் ‘மா . . .ப் . . .ளே’ என்று என் உதடு பிரிந்து லேசாக சத்தம் வந்தது. மாப்பிள்ளையின் காதுகளில் அது எட்டியதொ இல்லையோ அறியேன். ஆனால் அவராகவே, ‘சவம் எண்ணெ போவெனாங்கு. மலயாளத்தான் எண்ணெல்லா’ என்றபடி மேலும் தேய்த்தார்.

குளித்து முடித்து மாடிப்படிகளில் தவழ்ந்து சென்று நான் படுக்கையில் விழுந்த போது, மாப்பிள்ளை விடைபெறும் குரல் கேட்டது.

நா . . .  ன் ரா . . . த்த்த் . . . திரி வா . . . ரேன் . . . அத்தான். தூ . . . ங்கு . . . ங்கொ. தா . . . வல ஆ . . . யி . . .ரு . . .ம்.’

சில நிமிடங்களில் முதுகு வலி குறைந்ததை உணர்ந்தேன். ‘மாப்ளெ சொன்ன மாரி என்ன இருந்தாலும் மலயாளத்தான் எண்ணெல்லா!’ என்று மனதுக்குள் சிலாகித்து முடிப்பதற்குள், இடுப்பிலிருந்து கால் வரைக்கும் பேயாக வலி பரவுவதை உணர்ந்தேன். இந்த முறை மறந்தும் மாப்பிள்ளையை அழைக்காமல் குத்துமதிப்பாக யாரையோ அழைத்து அலறினேன். கொஞ்ச நேரத்தில் காதருகில் ஓர் அறிந்த குரல்.

‘யண்ணே! சும்ம இருக்கேளா?’ மந்திரம்லா வந்துருக்கென்’.

சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்திருக்கும் மந்திரத்தின் குரல். அதாவது மந்திரத்தின் சிறு வயதைலிருந்ந்தே. சின்னஞ்சிறுவனாக அம்மன் சன்னதியில் ஒரு நடமாடும் இஸ்திரி வண்டி வைத்து துணிகளைத் தேய்த்துக் கொடுக்கும் காலத்திருந்தே மந்திரத்தின் குரல் மாறவில்லை. உருவத்தில் ஒரு பெரிய மனிதர் நின்று கொண்டிருந்தார்.

‘மந்திரம்! ஆளே அடையாளம் தெரியலயடே!’ என்றபடி சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.

அருகில் அமர்ந்த மந்திரம் என் கைகளைப் பிடித்து கண்களை மூடிக் கொண்டு ‘நாடி’ பார்த்தான். 

‘இடுப்புலதான் சுளுக்கு இருக்கு. கரண்டக்கால் வரைக்கும் ஒளைச்சல் இருக்குமெ!’

‘ஆமா மாந்திரம். தாங்க முடியல.’

‘துண்டக் கட்டிக்கிட்டு நில்லுங்க. தடவி விட்டு உப்பு கட்டி அடிச்சிருவொம். பத்தே நிமிசத்துல சரி ஆயிரும்.’

தீர்க்கமாக ஒலித்த மந்திரத்தின் குரல் திருமந்திரம் போல ஒலித்தது. பாதிவலி குறைந்த மாதிரி இருந்தது. 

துண்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். கையில் ஒரு புட்டி. அதே புட்டி. அதே என்றால் அதே. கேரள வைத்தியசாலை புட்டி. மனம் மிரள குமுறி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘இது எதுக்குடே?’ என்றேன்.

‘ஒங்க மாப்பிள்ள சொல்லிட்டுப் போனாவொ. எறநூறு ரூவா குடுத்து வாங்கியிருக்காக. வம்பாப் போயிரக்கூடாதுல்லா!’

மாப்பிள்ளையை மனதுக்குள் காதலிக்க ஆரம்பித்தபடி, ‘ஸ்டூல் வேண்டாமாடே?’ என்றேன்.

‘அதெதுக்கு? சுவத்தப் புடிச்சுக்கிட்டுத் திரும்பி நில்லுங்கொ’

சுவரைப் பிடித்தபடி நிற்கவும், கண்ணிமைக்கும் நேரத்தில் ‘அது’ நிகழ்ந்தது. விருட்டென்று என் இடுப்பில் உடுத்தியிருந்த துண்டை உருவினான், மந்திரம்.

‘கிருஷ்ணாஆஆஆஆஆஆஆ’ என்று அலறினேன். 

‘காசியாபிள்ள மவன் கிட்ணன் செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சுல்லா. ஹார்ட் அட்டாக்கு’ என்றான், மந்திரம்.

எதையும் கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. ‘எல்லாம் போச்சு. இனிமேல் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.

தேய்த்து முடித்த பின் மந்திரம் துணியில் கல் உப்பைக் கட்டி வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடுக்கத் துவங்கினான். அந்த சோகத்திலும் சுகமாகத்தான் இருந்தது.

வேலையை முடித்தபின், ‘அப்பொ நான் வாரென்’ என்றான், மந்திரம்.

திரும்பாமலேயே, ‘ம்ம்ம்’ என்றேன். 

‘இன்னும் ஏன் சொவத்தப் புடிச்சிக்கிட்டெ நிக்கியோ?’ என்றான் மந்திரம்.

‘கொஞ்ச நேரம் சொவத்தப் புடிச்சுக்கிட்டு நின்னா சொகமா இருக்கு. நீ கெளம்பித் தொலடே. நல்லாயிருப்ப’ என்றேன்.

இரவு டாக்டர் ராமச்சந்திரன் மாமா வந்து பார்த்தார். ‘இப்பந்தான் க்ளினிக்கச் சாத்திட்டு வாரென். ஊசி போட்டிருதென். அப்பதான் தூங்குவிய. மருமகன் ஊசிக்கு பயப்பட மாட்டேளே!’ என்றார்.

‘அதெல்லாம் இல்ல மாமா. கத்தாம லேசா அளுவென். அவ்வளவுதான்’ என்றேன்.

‘சரி. வேட்டிய எறக்குங்க’, என்றார். ‘சரி இது மாமாவின் முறை போல’ என்று நினைத்தபடி, திரும்பி நின்றேன். மாப்பிள்ளையின் கரங்களும், மந்திரத்தின் உப்பு ஒத்தடமும் ‘எதையும் தாங்கும் பின் புறத்தை’ எனக்கு வழங்கியிருந்ததால் வாழ்க்கையில் முதன் முறையாக ஊசிக்குக் கண்ணீர் சிந்தாமல் கல்லாய்ச் சமைந்து நின்றேன்.

இரவு ஆழ்ந்த உறக்கம். காலையில் எல்லாம் சரியானது. குஞ்சுவின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். சின்ன தாத்தா வீட்டு வாசலில் தனது இஸ்திரி வண்டியை நிறுத்தி துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த மந்திரம், என்னைப் பார்த்ததும் பாசத்துடன் பாய்ந்து அருகில் வந்து, ‘எங்கண்ணெ கெளம்பிட்டியொ? குஞ்சண்ணனப் பாக்கவா? இப்பமும் ஒரு மட்டம் சுளுக்கு தடவி விட வரணும்லா நெனச்சென். துணி நெறய சேந்துட்டு’ என்றான்.

‘வேண்டாம்டெ. தாவல ஆயிட்டு. வரட்டுமா? தேங்க்ஸு’. மந்திரத்தின் கண்களைத் தவிர்த்தபடி குஞ்சுவின் வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

குஞ்சுவின் தகப்பனாரிடம் ஆசியும், குஞ்சுவின் மனைவியிடம் ஏச்சும் வாங்கி விட்டு குஞ்சுவை இழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன். தாமிரபரணிக்குச் செல்லும் வழியில் நாங்கள் வழக்கமாகக் காதல் கடிதங்கள் எழுதுகிற குறுக்குத் துறை ரோட்டுக்குச் சென்றோம்.

வழக்கம் போல புத்திசாலித்தனமாகத் துப்பறிவதாக நினைத்துக் கொண்டு, மருத மரங்களைப் பார்த்துக் கொண்டு, என் முகம் பார்க்காமல், ‘யாருல அவ?’ என்றான், குஞ்சு.

‘கோட்டிக்காரப்பயல. அவ இல்லல. அவன். அவன் கூட இல்ல. அவன்கள்’ என்றேன்.

‘என்னல சொல்லுதெ?’ முகம் சுளித்தபடி என் கண்களைப் பார்த்துக் கேட்டான், குஞ்சு. நான் கற்பிழந்த கதையை ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.

‘இனிமேல் வாள்க்கைல நீ என்ன டிரஸ் போட்டாலும் நம்ம மந்திரம் கண்ணுக்குத் தெரியாது’ என்றான், குஞ்சு.