post

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘எல! கண்டிப்பா நான் வரணுமா?’

தவிர்த்துப் பார்த்தேன்.

‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா? நீயே யோசிச்சுப் பாரு’.

வயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.

கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.

‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.

மல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

காலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்று இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.

‘ஸார்! எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க?’

oOo

குளித்து முடித்து அப்பாவுடன் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.

‘போவோமால?’

அம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.

‘எங்கே சித்தப்பா போக?’

வழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.

‘எங்கெயாவது போ’.

கொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.

‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா?’

மீனாட்சி கேட்டான்.

தி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.

சுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, பூமாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.

’அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க’.

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

படித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.

‘எல! சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே?’

‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்தல் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.

திருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.

மறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.

‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’

போகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.

‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.

மீனாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.

‘பேரப்பிள்ள! தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே?’

முன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.

தென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென்! என்ன தாத்தா?’

‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.

சொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.

மாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.

‘எண்ணே! ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.

ஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.

‘ஆகா! பிரமாதமாப் பேசுவாரே! முடிஞ்சுட்டா? கேக்கலாமே!’ என்றேன்.

’ஆங்! அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.

சட்டென்று சொன்னான், மீனாட்சி.

‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.

‘ஏம்ல? ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும்! அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு?’

‘மாணிக்கவாசகர்ட்ட இல்லாத தமிளா? வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா? அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா!’

மேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் கடித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால? பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.

கண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.

‘அண்ணாச்சி! மொளாப்பொடி வைங்க’.

மீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான்.

‘சித்தப்பா! எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.

சாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள்ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.

‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே?’

தனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய?’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே! அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே!’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி?’

‘எண்ணே! சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.

பிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.

‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.
‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா! சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன்னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .

சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

மறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே?’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா! அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே! அவரேதான்’ என்றார்.

சிறு வயதிலிருந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.

கண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல போடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்காக திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.

கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.

‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.

ரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயுடன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.

‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.

கம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்கத் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பான குரலில் அதட்டினார்.

‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.