post

கன்னி

தடிவீரன்கோவில்தெருவிலிருந்த ஒரு தாழ்ந்த வீட்டின் கதவை நீண்ட நேரமாகத் தட்டிக் கொண்டிருந்தான், கைலாசம். எதிர்வீட்டிலிருந்து ஒரு அம்மா எட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு உள்ளே சென்று விட்டார். ’சாயங்காலம் நாலு மணிக்கு மேலயுமா தூங்குவாங்க?’. ஒரு கையில் பையும், இன்னொரு கையில் வேட்டிநுனியையும் பிடித்துக் கொண்டு நின்ற சங்கரண்ணனிடம் கேட்டான். ‘இன்னும் அஞ்சு நிமிசம் பாத்துட்டு கெளம்பிருவொம். எவ்வளவு நேரந்தான் தட்டிக்கிட்டிருக்க!. பாரு, எதுத்தவீட்டு பொம்பள யாரோ என்னமோன்னு பாத்துட்டு போறா!’ சலிப்புடன் சொன்னான், சங்கரண்ணன். இதற்குள் கதவு திறந்தது. பாதி திறந்த கதவுக்கு அந்தப் பக்கம் லெச்சுமண தாத்தா நின்று கொண்டிருந்தார். நெற்றியைச் சுருக்கி முகத்துக்குள் வந்து உற்றுப் பார்த்தார். ‘யாரு?’. அவர் உடம்பிலிருந்தோ, கசங்கிய வேட்டியிலிருந்தோ நார்த்தங்காய் வாசனை வந்தது. ‘நாந்தான் தாத்தா, கைலாசம். பெரியவீட்டு பேரன்’ என்று கைலாசம் சற்று உரக்கச் சொல்லவும், அடையாளம் தெரிந்து கொண்டதற்கு சாட்சியாக ஒரு சின்னச் சிரிப்பு, லெச்சுமண தாத்தாவின் முகத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்தது. ‘வா, சும்ம இருக்கியா?’ சுவர் பிடித்து ஊர்ந்து சென்றார். ‘சின்ன அக்காக்கு கல்யாணம். அதான் பெரியம்ம ஒங்களுக்கு காயிதம் குடுத்துட்டு வரச் சொன்னா’ என்ற படியே கைலாசம், தாத்தாவைத் தொடர சங்கரண்ணனும் வீட்டுக்குள்ளே நுழைந்தான்.

வீட்டின் அடுத்த கட்டுக்கு இவர்கள் செல்லவும், ஏதோ ஒரு துணிப்பொட்டலத்தை வாரிச் சுருட்டியபடி இரண்டு பெண்கள் அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தார்கள். படுத்துக் கிடந்த ஆச்சி மட்டும் எழுந்து உட்கார்ந்தாள். பெரியம்மை ஏற்கனவே சொல்லி அனுப்பியிருந்தாள். ‘அங்கன ரொம்ப நேரம் நிக்காத. போனமா, காயிதத்த குடுத்தமா, வந்தமான்னு இரி. தாத்தாவத் தவிர யாரும் பேச மாட்டாங்க. கண்ணுலயும் பட மாட்டாங்க’. பையிலிருந்து சங்கரண்ணன் எடுத்துக் கொடுத்த திருமண அழைப்பிதழை தாத்தாவிடம் கொடுத்த போது, உணர்ச்சியே இல்லாமல் ஆச்சி பார்த்துக் கொண்டிருந்தாள். கைலாசத்தை ‘வா’ என்றும் கேட்கவில்லை. அழைப்பிதழைக் கொடுத்து விட்டு கிளம்பும்போது, ‘போயிட்டு வாரென் ஆச்சி. கல்யாணத்துக்கு வந்துரு’ என்று கைலாசம் சொன்னபோது ‘சரி’ என்று தலையைக் கூட ஆட்டவில்லை. ‘ஏம்ணெ இப்பிடி இருக்காங்க?’ திரும்பி வரும் வழியில் சங்கரண்ணனிடம் கைலாசம் கேட்ட போது, ‘இன்னைக்கு நேத்தால? நம்ம பெரிய தாத்தா போட்ஸா இருந்த காலத்திலயெ இவாள வளிக்கு கொண்டு வர முடியலியெ? இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்பொறம் இந்த வீடும் போயிரும். இவாள் காலத்துக்கப்பொறம் என்ன ஆகப்போதோ? ச்சை, என்ன மனுசங்கடே.’ தெருவோரச் சாக்கடையில் காறித் துப்பியபடி சொன்ன போது, சங்கரண்ணனின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

கைலாசம் பிறந்த சில மாதங்களிலேயே அவனது தாத்தா காலமாகிவிட்டார். அவன் தாத்தா என்று பார்த்தது, அவனது சின்ன தாத்தாவான லெட்சுமண தாத்தாவைத்தான். அவரையுமே தூரத்தில் பார்ப்பதோடு சரி. அருகில் போய் பேசினாலும், ‘சும்ம இருக்கெல்லா?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். அவரது உருவத்தை கைலாசத்தால் முழுமையாக நின்று பார்க்கக் கூட முடிந்ததில்லை. அவரை நன்றாக அருகில் இருந்து அவன் பார்த்ததே, பெரிய ஆச்சி இறந்த வீட்டில்தான். வாசலிலுள்ள பந்தல்காலைப் பிடித்துக் கொண்டு, ஈனஸ்வரத்தில் ‘மதினி, மதினி’ என்று மூக்கொழுக முனகிக் கொண்டிருந்தார். அதோடு சரி. பாடை கிளம்பிப் போகும் போது ஆள் காணாமல் போனார். ஆற்றுக்கும் வரவில்லை. கருப்பந்துறை மண்டபத்தில் ஆச்சி எரிந்து கொண்டிருக்க, எல்லோரும் துக்கம் மறந்து ஊர்க்கதை பேச ஆரம்பித்தனர். லெச்சுமண தாத்தா பற்றிய பேச்சு வந்த போது, அவரது வயதையொத்த அந்தோணி தாத்தா கோபமாக இரைந்தார். ‘எல்லாத்தையும் வித்து, காரச்சேவும், ஓமப்பொடியுமா தின்னே தீத்துட்டானெய்யா! பஞ்சபாண்டவங்க மாரி ஒண்ணுக்கு அஞ்சு பொம்பள புள்ளய. ஒண்ணயாது கெட்டிக் குடுக்கணும்னு இன்னைய வரைக்கும் அந்த சவத்துப்பயலுக்குத் தோணலயே! நானும் எத்தன மாப்பிளவீடு சொன்னேங்கிய! எல்லாத்தையும் தட்டிக் களிச்சுட்டான். பெரிய பிள்ளைக்கே நாப்பத்தஞ்சு வயசிருக்காது? என் ரெண்டாவது மகளும், அவளும் ஒரே செட்டு. இப்ப என் பேத்திக்கு மாப்பிள பாக்க ஆரம்பிச்சாச்சு. என்னத்தச் சொல்ல?’. ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் கைலாசத்துக்கு அந்தோணி தாத்தா குரலில் அவற்றைக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது. ஆச்சி இறந்ததை சுத்தமாக மறந்து போயிருந்தான். அவனது மனசு முழுக்க லெச்சுமண தாத்தாவும், அவன் அதுவரை பார்த்தேயிராத, திருமணமாகாத அவரது ஐந்து மகள்களுமே சுற்றி சுற்றி வந்தனர்.

சின்ன அக்காவின் திருமண அழைப்பிதழ் கொடுக்கப் போன பிறகு, அண்ணனின் திருமணத்துக்கு லெச்சுமண தாத்தா வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ‘அவங்கதான் வாரதில்லையெ? அப்பொறம் என்னத்துக்கு காயிதம் குடுக்கச் சொல்லுதிய?’ கோபமும், சலிப்புமாக கைலாசம் கேட்ட போது, ’அவங்க எப்பிடியும் இருந்துட்டு போறாங்க. நாம செய்றத சரியா செஞ்சுரணும்’ என்றாள், பெரியம்மை. இந்தமுறை கதவைத் திறந்தது, லெச்சுமண தாத்தாவின் ஐந்து மகள்களில் மூத்தவள். அப்படித்தான் இருக்க வேண்டும். கைலாசம் முதல் முறையாக அவளைப் பார்த்தான். தலைமுடி நரைத்து, குண்டாக இருந்தாள். சூரியனே பார்த்திராத, வெளுப்பான முகத்தில், கண்ணைச் சுற்றி கருப்பு இறங்கியிருந்தது. ‘நீ கைலாசம்தானெ?’ கதவைத் திறந்தவள் கேட்டாள். ‘ஆ . . .மா’ என்று தயங்கியபடியே எச்சிலை முழுங்கிச் சொன்னவன், வேறு வார்த்தை வராமல் அவளையே ஒருவித பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘உள்ள வா. இப்ப யாருக்கு கல்யாணம்?’ என்றபடியே உள்ளே சென்றாள். உள் அறையில் இன்னும் இரண்டு பெண்கள் உட்கார்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தனர். எல்லாமே அழுக்குத் துணிகள். கைலாசத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. வேறு ஏதோ உலகத்துக்குள் பிரவேசித்துவிட்ட குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் நின்று கொண்டிருந்த கைலாசத்தை, கதவைத் திறந்தவளின் குரல் கலைத்தது. ‘தாத்தாவும், ஆச்சியும் தூங்குதாங்க. காயிதத்த என்ட்ட குடுத்துட்டு போ’ என்றாள். பையிலிருந்த அழைப்பிதழை எடுத்து கொடுத்தான். அதை பார்க்கக் கூட இல்லை. வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, கைலாசத்தின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இனி அங்கு நிற்கக்கூடாது என்பதை உணர்ந்தவனாக, கைலாசம் நகர்ந்தான். ‘அப்ப நான் கெளம்புதென்’ என்று அரைகுறையாகச் சொன்னான். ‘அத்தன்னு சொல்லு. நான் ஒனக்கு அத்ததான். சுசீலா அத்த’ என்றாள்.

அதற்குப் பிறகு கைலாசம் அந்த வீட்டுக்குப் போனது, அடுத்தடுத்த இரண்டு மரணங்களுக்கு. சொல்லிவைத்தாற்போல ஆச்சியும், லெச்சுமண தாத்தாவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் காலமானார்கள். இரண்டாண்டுகளில் சுசீலா அத்தையின் உருவத்தில் முதுமை அடர்ந்து படர்ந்திருந்தது. அதுவும் தாத்தா இறந்த வீட்டில் கைலாசம் அவளைப் பார்த்தபோது அவன் கண்களுக்கு சுசீலா அத்தை, அவள் அம்மாவைப் போலவேதெரிந்தாள். ஆச்சி தன் உருவத்தை தன் மகளுக்குக் கொடுத்து விட்டுப் போய்விட்டதாகவே கைலாசம் நினைத்தான். அப்போதுதான் சுசீலா அத்தையின் மற்ற சகோதரிகளையும் கைலாசத்தால் பார்க்க முடிந்தது. அதில் ஒருத்தியின் தலைமுடியில் நிறைய சடை விழுந்திருந்தது. அநேகமாக அவள்தான் சுசீலா அத்தைக்கு அடுத்து பிறந்தவளாக இருக்க வேண்டும். தன் தகப்பனாரின் பிணத்தின் முன் உட்கார்ந்து வாய்விட்டு அழும்போது, அவளது முன்வரிசைப் பற்களில் பாதி இல்லை என்பதை கைலாசம் கவனித்தான். லெச்சுமண தாத்தாவின் பிணத்தைத் தூக்கும் போது, வாசலில் வந்து நின்று கொண்டு, தலைவிரிகோலமாக நெஞ்சில் அறைந்தபடி சுசீலா அத்தையின் சகோதரிகள், ‘எப்பா, நாங்களும் ஒன் கூடயே வந்திருதோம்’ என்று உரத்த குரலில் கதறினார்கள். சுசீலா அத்தை மட்டும் கண்களில் கண்ணீர் காய்ந்து, ஏனோ இறுக்கமாகவே இருந்தாள்.. அன்றைக்கு கூடியிருந்த தெரு ஜனங்கள் அனைவரும், முதன்முறையாக இந்தப் பெண்களைப் பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்தார்கள். பாடையின் பின்பக்கம் தோள் போட்டு சுமந்திருந்த கைலாசம், பின்னால் திரும்பித் திரும்பி சுசீலா அத்தையையும், அவளது சகோதரிகளையும் பார்த்துக் கொண்டே சென்றான். ‘எல, பின்னால இருக்கவன் ஒளுங்கா புடி. பாட லம்புதுல்லா’. முன்பக்கத்திலிருந்து, வேம்பு மாமா சத்தம் போட்டார்.

தாத்தாவும், ஆச்சியும் போன பிறகு சுசீலா அத்தை மட்டும் வெளியே நடமாடத் தொடங்கினாள். நேரில் பார்க்க நேர்ந்தால், லெச்சுமண தாத்தா போலவே அவளும் ‘சும்ம இருக்கெல்லா?’ என்றபடி நகர்ந்து சென்று விடுவாள். ஒரே ஒருமுறை மட்டும் அதிசயமாக நெல்லையப்பர் கோயிலின் ஆறுமுகநயினார் சன்னிதியில் வைத்து, வழக்கமான ‘சும்ம இருக்கெல்லா’வைக் கேட்டுவிட்டு, ‘ஒங்க வீட்டுக்கு ஒருநாள் வாரென், என்னா?’ என்று சொன்னாள். ‘கண்டிப்பா வாங்க அத்த’ என்று கைலாசம் பதிலுக்கு சொன்னபோது, அவள் திரும்பிப் பார்க்காமல் வெளி பிரகாரத்துக்குச் சென்று விட்டாள்.

இவள் எங்கே வரப் போகிறாள் என்று நினைத்த கைலாசத்துக்கு, அவன் அம்மா இறந்த வீட்டுக்கு சுசீலா அத்தை வந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ஒங்க அம்மை கல்யாணம் ஆன புதுசுல ஒங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் இப்பொதான் வாரேன்’ என்று சுசீலா அத்தை சிரித்தபடி சொன்னாள். கைலாசத்தைத் தவிர எல்லோருக்கும் அவளது வருகையும், செய்கையும் பிடிக்கவில்லை. கைலாசத்துக்கு அந்த சூழலிலும் அவளைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக கைலாசத்துக்கருகில் அமர்ந்து கொண்டு அவனிடம் பேசிக் கொண்டே இருந்தாள், சுசீலா அத்தை. ‘எப்ப எடுக்கப் போறிய? வெளியூர்லேருந்து யாரும் வரணுமோ? பொறவாசல்லதான் ஆக்குப்புர போட்டிருக்கேளோ? தவுசுப்பிள்ள யாரு? சாம்பார் கொதிக்கற மணம் அடிக்கெ?’. சங்கரண்ணனும், சோமு சித்தப்பாவும் கைலாசத்தைத் தனியே அழைத்தார்கள். ‘எல, இவள வெளிய போகச் சொல்லுதியா, இல்ல நானே அவள வாரியலால அடிச்சு அனுப்பட்டுமா?’. சோமு பெரியப்பா பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். ‘இவன்ட்ட என்ன மயித்துக்கு கேக்கணுங்கென்? செறுக்கியுள்ளய நாலு இளுப்பு இளுத்து அடிச்சு வெளிய தள்ளிருவோம்’. சங்கரண்ணன் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான். ‘மேற்கொண்டு அவ பேசாம நான் பாத்துக்கிடுதென். அமைதியா இரிங்க’. கைலாசம் அவர்களை சமாதானப்படுத்தினான். எத்தனையோ முறை சுசீலா அத்தையையும், அவளது சகோதரிகளையும் பற்றி கண்ணீர் மல்க அம்மா அவனிடம் சொல்லியிருப்பது நினைவில் வந்தது. ‘கொஞ்சம் சொன்ன பேச்ச கேட்டாங்கன்னா, நாமளே அவங்க எல்லாருக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணி வச்சிருந்திருக்கலாம். அவங்கதான் வீட்டுக்குள்ளயே யாரையும் விட மாட்டக்காங்களெ! எந்த ஜென்மத்து பாவமோ, சாபமோ! அது நம்மளையும் சேந்ததுதான்’.

அம்மா இறந்த பிறகு சென்னைக்கு வந்துவிட்ட கைலாசத்துக்கு திருமணம் நிச்சயமானபோது, சுசீலா அத்தைக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் எண்ணம் அவனுக்கே வரவில்லை. ‘நீ குடுக்கணும்னு நெனச்சாலும் முடியாது. அவ்வொல்லாம் ஊர விட்டே போயாச்சு’. சங்கரண்ணன் சொன்னான். ‘அப்ப தடிவீரன்கோயில்தெரு வீடு?’ பதற்றத்துடன் கைலாசம் கேட்டதற்கு, ‘ஆமா, பெரிய தடிவீரன்கோயில்தெரு வீடு? அரமண மாரி இருந்த சாமிசன்னதி வீட்டையெ கமிஷன் கடக்காரருக்குத் தூக்கிக் குடுத்தாச்சு’. எரிச்சலான குரலில் மேலும் சொன்னான், சங்கரண்ணன். திருமணம், குழந்தை, வேலைமாற்றம் என ஆண்டுகள் நிமிடங்களாக, நொடிகளாக ஓடியபிறகு சுசீலா அத்தை பற்றிய நினைப்பு எப்போதாவது கைலாசத்துக்கு வருவதுண்டு. ஆனால் எத்தனை முயன்றும் அவனால் சுசீலா அத்தையின் மற்ற சகோதரிகளின் உருவங்களை மனதுக்குள் கொண்டு வரமுடியவில்லை. லெச்சுமண தாத்தாவின் உருவமே நாட்கள் ஆக ஆக நினைவில் மங்க ஆரம்பித்தது. திருநெல்வேலிக்கு வருவதும் குறைந்து போனது.

‘ஒங்கப்பாட்ட கல்யாணம் ஆன புதுசுல கேட்டேன், திருச்செந்தூருக்குக் கூட்டிட்டு போங்கன்னு. வருஷம் பன்னெண்டாச்சு. நீ படிச்சு வேலைக்கு போயிதான் என்னைக் கூட்டீட்டு போவே போலுக்கு’. மகளிடம் கைலாசத்தின் மனைவி இடித்துக் காட்டுவது, ஒரு முடிவுக்கு வந்தது. விடுப்பு எடுத்து திருச்செந்தூர் வந்து இறங்கியபோது, சிறுவயதில் பார்த்த அதே திருச்செந்தூர், அதே விபூதி, சந்தன வாசத்துடன் வரவேற்றது. செந்திலாண்டவனிடத்திலும் மாற்றமில்ல. கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்து கைலாசம் சட்டையைப் போடும் போது, ‘அப்பா, Seaல குளிக்கணும்பா’. அடம்பிடித்தாள் மகள். ‘கோயிலுக்கு போறதுக்கு முன்னாடிதாண்டா குளிக்கணும்’. சமாதானத்தை ஏற்காத மகளுக்காகக் கடலில் இறங்கி சிறிதுநேரம் குளித்து விட்டு, பிரகாரத்தில் வீசும் காற்றில், கலைந்த தலையும், குளிர்ந்த உடம்புமாக கைலாசம் வந்து கொண்டிருந்தான். ‘ஏம்பா, சூடா வட போடறாங்க. வாங்குங்களேன்’. மனைவியின் குரலில் உள்ள ஆசை, இவனையும் தொற்றிக் கொள்ள, வடை போடும் ஆச்சியை நெருங்கும் போது, அந்த ஆச்சி சுசீலா அத்தையின் ஜாடையில் இருந்தாள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவள் உருவம் நம் மனதில் தங்கியிருக்கிறதா, என்ன? இவளை எப்படி நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது? திரும்பி விடலாம் என்ற நினைப்பு மூளையைச் சென்றடைவதற்குள், சுசீலா அத்தைக்கு, கைலாசத்தைத் தெரிந்து போனது. தினமும் பார்ப்பது போல் சாவகாசமாகச் சிரித்தபடி ‘சும்ம இருக்கியா’ என்றாள். வேறு பேச்சு வராமல் கைலாசம் தடுமாற, அருகில் நின்ற அவன் மகளைப் பார்த்து, ‘இதாரு, ஒன் மகளா?’ என்று கேட்டபடி நாலைந்து வடைகளை எடுத்து ஒரு பேப்பரில் சுற்றி அவள் கைகளில் கொடுத்தாள். யாரோ ஒரு வடை போடும் ஆச்சி தருவதை வாங்கத் தயங்கியபடி, கைலாசத்தின் மகள் தன் தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, ‘ஏட்டி, நான் ஒண்ணும் மூணாம் மனுசி இல்ல. வாங்கிக்கோ. ஒங்கப்பா சத்தம் போட மாட்டான்’ என்று சொல்லி கைகளில் திணித்தாள். கைலாசத்திடம், ‘நீ சொல்ல வேண்டியதானெ, நான் யாருன்னு’ என்றவள், ‘அதுக்காக ஆச்சி கீச்சின்னு சொல்லீராதெ. அக்கான்னே சொல்லு. நான் அப்பிடியேதானெ இருக்கென். இன்னும் கல்யாணம்கூட ஆகலெல்லா.’ சிரிப்பு மாறாமலேயே சொன்னாள் சுசீலா அத்தை.

[புகைப்படங்கள்: நன்றி (c) Oochappan]

(ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை)