லொக்கேஷன்

திரைப்படம் எடுப்பது தொடர்பான எத்தனையோ வேலைகளில் முக்கியமானதும், சற்று சிரமமானதும் என்றால், அது லொக்கேஷன் பார்ப்பதுதான். அவுட்டோர் எனப்படும் வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வது என்பது ஒரு சுவாரஸ்ய அலைச்சல். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் படங்களுக்காக லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கிய பயணம், பிறகு நண்பர்களின் படங்களுக்காகத் தொடர்ந்தது. பொதுவாக ஒளிப்பதிவாள நண்பர்களுடனேயே அதிகநேரம் செலவழிப்பது என் வழக்கம். அவர்களுடன் லொக்கேஷன் பார்க்கக் கிளம்பிவிடுவேன். பழனியில் தொடங்கி வாரணாசி வரைக்கும் நண்பர் ஆர்தர் வில்ஸனுடன் பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். அப்போது நண்பர் ஜெயமோகனும் எங்களுடன் இருந்தார். ‘இந்த எடத்த ஒங்க காமெராவுல எப்பிடி காமிப்பீங்க, பிரதர்?’ என்கிற கேள்வியை அநேகமாக எல்லா இடம் குறித்தும் கேட்டுக் கொண்டேயிருந்தார். ஜெயமோகனது திரையுலகப்பிரவேசத்தின் துவக்ககாலம், அது. ஆனால், அந்த ஜெயமோகன் இப்போது லொக்கேஷன் குறித்து எங்களுக்கே நிறைய யோசனைகள் சொல்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த சீசனுக்குப் போனால் படப்பிடிப்புக்கு சௌகரியமாக இருக்கும் என்பது வரை தெரிந்து வைத்திருக்கிறார்.

நண்பர்களுக்காக சுற்றியதுபோக, சென்ற மாதம் எனக்காக, எனது திரைப்படத்துக்கான வெளிப்புற இடங்களை தேர்வு செய்வதற்காக ‘லொக்கேஷன்’ பார்க்கச் சென்றிருந்தேன். தமிழக – கேரள எல்லையோரப் பகுதிகள் மனதில் இருந்தன. திரையுலகின் எனது மிக சொற்ப நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், அப்போது திருச்செந்தூரில் இருந்தார். இயக்குனர் சீனு ராமசாமியின் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. பாலுதான் என்னுடைய படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்பதை நாங்கள் இருவருமே முடிவு செய்து விட்டோம் என்றாலும், படம் பற்றிய எந்தவொரு சிறு விஷயத்தையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. அவர் அவ்வளவு பிஸியாக இருந்தார். எனது குழுவைச் சேர்ந்தவர்களை மறுநாள் கிளம்பிவரச் சொல்லிவிட்டு, முதல்நாள் மாலையில் பாலுவைப் பார்க்க திருச்செந்தூர் சென்றேன். நான் போனநேரம் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இயக்குனர் உட்பட எல்லோரும் திருச்செந்தூரைவிட்டு கிளம்பிவிட்டிருந்தனர். ஒளிப்பதிவாளர் பாலு தனது அறையில், தனது துணிமணிகளை என்னைவிட பெரிதாக இருந்த இரண்டு பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். ‘ஐயையோ, என்ன பாலு கெளம்பிக்கிட்டிருக்கீங்க?’ உள்ளே நுழையும் போதே கேட்டேன். ஒருகணம் நின்று என்னைப் பார்த்தவர், ‘நெஜமாவே லொக்கேஷன் பாக்க வந்துட்டீங்களா? சரி, இனிமெ எங்கெ கெளம்ப? நைட் தங்கிட்டு நாளைக்கெ போறென்.’ பெட்டிகளை மூடினார். ’சரி பாலு. கதய சொல்லிரவா?’ படுக்கையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். ‘கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம். அப்பொறம் கேக்குறென்’ என்றார், பாலு. எனக்கும் நல்ல சகுனமாகப் பட்டது. அந்திமயங்கும் நேரத்தில் சட்டையைக் கிழற்றி விட்டு இருவரும் செந்திலாண்டவனை தரிசிக்கச் சென்றோம். அதே செந்திலாண்டவர், அதே பட்டர்கள், அதே விபூதி, சந்தனம் கலந்த புழுக்க வாசனை. வியர்வை உடம்புகள் உரச, முகம் சுளித்து, பக்தி மறைந்து சட்டென்று செந்திலாண்டவன் சில நொடிகள் கண்ணுக்குத் தெரிய, சுதாரித்து வணங்கினோம்.‘ஸார், மூவ் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பொதானெ அடுத்தாளு பாக்க முடியும்’. களைத்து வெளியே வந்து, சட்டையை உதறி போடும் முன்னேயே கடல்காற்று வேர்வையை துடைத்து மேனியை வருடியது. ‘கொஞ்ச நேரம் அப்பிடியே கடற்கரைல உக்காரலாமா?’ பாலு கேட்டார். ‘ஆமா பாலு. அப்பிடியே கதயைப் பத்தி பேசிரலாம்’. உட்கார இடமில்லாமல் கடற்கரையில் நல்ல கூட்டம். ‘கூட்டம் அதிகமா இருக்கெ. பசிக்க வேற செய்யுது. டிபன் சாப்பிடலாமா? மத்யானம் வேற சரியா சாப்பிடல’ என்றார். கோயில் வாசலில் உள்ள புகழ் பெற்ற ‘மணி ஐயர்’ ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். ’என்ன சாப்பிடுதீங்க?’ என்று கேட்ட சப்ளையருக்கு ஆர்டர் சொல்லி விட்டு, ‘பாலு, இந்த படத்துல’ என்று நான் ஆரம்பிக்கவும், பக்கத்து மேஜையிலிருந்து ‘எண்ணே’ என்று ஒரு குரல் என்னை நோக்கி பாய்ந்து வந்து கையைப் பிடித்தது. திருநெல்வேலி ‘சூரியன் பண்பலை வானொலியின்’ புகழ் பெற்ற ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ எல் எஸ்தான், அந்தக் குரல்க்காரன். ’ஏ, என்னடே எல் எஸ்ஸு. சாமி கும்பிட்டுட்டு வாரியா?’ என்றேன். ‘இல்லண்ணே. இனிமெத்தான் போவணும். அதுக்குள்ள வயிறு பசிச்சுட்டு. அதான் ரெண்டு தோசயத் தின்னுட்டு போலான்னு’. இதற்குள் பாலு சாப்பிட ஆரம்பித்திருந்தார். ‘ஏங்க, சூடு ஆறிரப் போகுது. சாப்பிடுங்க’ என்றார். ரவா தோசை அநியாயத்துக்கு சுவையாக இருந்தது. கதையை மறந்து, ‘இன்னொரு ரவா’ என்றேன். வெளியே வந்தவுடன் ‘ரூமுக்கு போயே பேசலாங்க’ என்றார், பாலு. பாதிதூரம் நடந்திருப்போம். திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக, ‘ஏங்க, மணப்பாடு போயிரலாமா? அங்கெ பீச்சோரம் சர்ச் வாசல்ல உக்காந்து பேசலாம். சூப்பரா இருக்கும். இங்கேருந்து ட்வெண்டி மினிட்ஸ்தான் ஆகும்’ என்றார்.

[ஒளிப்பதிவாளர் பாலுவுடன் . . .]

சமீபகாலமாக சினிமாக்காரர்களின் கவனம் ஈர்க்கப்பட்ட மணப்பாடு கிராமத்தில் மணிரத்னத்தின் ‘கடல்’ படப்பிடிப்பு அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அதுபோக ‘நீர்ப்பறவை’க்காக பாலுவும் அங்கு படம்பிடித்திருந்தார். மணப்பாடுக்குள் எங்கள் கார் நுழையும் போது, மின்சாரம் இல்லாமல் ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தெருக்களில் தத்தம் வீட்டு வாசல்களில் நாற்காலி போட்டு மணப்பாடுவாசிகள் உட்கார்ந்திருந்தனர். சட்டென்று வேறெந்த லோகத்துக்குள்ளோ பிரவேசிப்பது போல இருந்தது. மேட்டிலுள்ள சர்ச்சில் மட்டும் விளக்கெரிய, ஆங்காங்கே சோற்றுப் பொட்டலத்தைப் பிரித்து, அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறு குடும்பங்கள். பாலு ஒரு விளிம்புக்கு அழைத்துச் சென்றார். ‘அங்கெ பாருங்க. அந்த ஏரியாலதான் மணிஸார் செட் போட்டிருந்தாரு’. ஏற்கனவே இருந்த இருட்டுக்குள் மேலும் இருட்டாக இருந்தது. ‘அருமையா இருக்கு பாலு’ என்றேன். ‘இந்த வியூ பாருங்க. இங்கெதான் நான் ஷூட் பண்ணினேன்’ என்று வேறொரு கும்மிருட்டை காண்பித்தார். ‘அய்ய்யோ! இது அதவிட பிரமாதங்க’ என்றேன்.

ஒருவழியாக இருட்டை சுற்றி காண்பித்து விட்டு, கதை கேட்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து பாலு உட்காரும் போது, கடல்காற்று தந்த சுகத்தோடு, மணி ஐயரின் ரவாதோசைகள் கூட்டு சேர்ந்து கொண்டு என் கண்களைச் சுழற்றின. வழக்கமாக கதை கேட்கும் போது பாலுவுக்குதான் கண்கள் சுழலும். ‘பிதாமகன்’, ‘180’ உட்பட தான் ஒளிப்பதிவு செய்த இருபத்தைந்து திரைப்படங்களில், எந்தவொரு கதையின் இரண்டாவது வரியையும் அவர் இதுவரை கேட்டதில்லை. ஏற்கனவே அவர் கதை கேட்கும் லட்சணம் பற்றி ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரில் விவரித்திருக்கிறேன். ‘பாலு, ஓபெனிங் போர்ஷன்ஸ நாம என்ன பண்ணலான்னா . . . .’. காற்றின் வேகம் அதிகரித்தது. என்னைப் போலவே இருட்டு நிறக்காரரான பாலுவின் கண்களில் உள்ள வெள்ளை மட்டும்தான், அந்த ஒட்டுமொத்த பிரதேசத்தில் எனக்கு தெரிந்த ஒரே வெளிச்சம். இரண்டாவது வரியில் அதுவும் மறைந்தது. ஆனாலும் கடமையிலிருந்து பின்வாங்காமல் சொல்லி முடித்து, பாலுவை உலுக்கினேன். ‘ஒங்கக்கிட்டேருந்து இப்படி ஒண்ண எதிர்பாக்கலங்க’. சின்ன திடுக்கிடுதலை சமாளித்து, குத்துமதிப்பாக ஓர் அபிப்ராயம் சொன்னார்.

காரில் திருச்செந்தூருக்குத் திரும்பும் போது, மணப்பாடைத் திரும்பிப் பார்த்தேன். மின்சார வெளிச்சத்தில் மணப்பாடு அழகாகத் தெரிந்தது. ‘அளகான ஊருங்க. அடிக்கடி ஜெயமோகன் சொல்லுவாரு’ என்றேன். சினிமாவில் ‘அதோ டாக்டரே வந்துட்டாரே’ என்பது போல ஜெயமோகனிடமிருந்து சொல்லிவைத்தாற் போல ஃபோன் வந்தது. ‘மோகன், ஆயுசு நூறு. இப்பொதான் ஒங்களப் பத்தி பேசுனென். மணப்பாடுல இருக்கென். கூட கேமராமேன் பாலுவும் இருக்காரு. பேசுறீங்களா?’ பாலுவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெயமோகன் மீண்டும் என்னிடம் பேசினார். ‘எத்தன நாளு ஊர்ல இருப்பீங்க?’

‘ஒருவாரம் வரைக்கும் இருப்பேன். அப்புறம் மோகன். சொல்ல மறந்துட்டேனே! பாலு ஒங்களோட தீவிர வாசகர். கொற்றவைல்லாம் படிச்சிருக்காரு’ என்றேன். ‘நம்ப முடியலியே’ என்றார்.

‘எத நம்ப முடியல? அவரு ஒங்க வாசகருங்கறதயா? இல்ல கொற்றவய அவரு படிச்சிருக்காருங்கறதயா?’

‘இல்ல. சொல்ற ஆளு நீங்கங்கறதால எதயுமெ நம்ப முடியல’ என்றார்.

‘இல்ல மோகன். நெஜமாத்தான். கொற்றவை புஸ்தகத்தப் பாத்து கொற்றவைன்னு படிச்சிருக்காரு’ என்றேன். உடனே லைன் கட்டானது.

இரவு விடிய விடிய கதையைத் தவிர வேறேதேதோ பேசிவிட்டு நானும், பாலுவும் தூங்கிப் போனோம். மறுநாள் காலையில் பாலு சென்னைக்கும், நான் திருநெல்வேலிக்கும் கிளம்பினோம். ‘நீங்க மொதல்ல ஒரு ரவுண்டு லொக்கேஷன் பாத்து ஸ்டில்ஸ் எடுத்துட்டு வந்துருங்க. அப்புறமா ஷூட்டிங்குக்கு முன்னாடி நாம போயி ஃபிக்ஸ் பண்ணிரலாம்’
என்றார்.

சென்னையிலிருந்து இணை இயக்குனர்கள் இளங்கோவும், பார்த்திபனும் நெல்லை வந்து சேர்ந்தனர். ‘ஸார், வாள்க்கைல இதுவரைக்கும் நான் லொக்கேஷனே பாத்ததில்ல. என்னையும் ஒருநாளைக்கு கூட்டிட்டு போங்களென். ஒங்கள தொந்தரவு பண்ணாம ஒரு ஓரமா உக்காந்துக்கிடுதென்’. எழுத்தாளர் நாறும்பூநாதன் ஏற்கனவே தன் விருப்பத்தைச் சொல்லியிருந்தார். முதல்நாள் பயணத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டோம். குற்றாலத்திலிருந்து துவங்கியது எங்கள் பயணம். அச்சன்கோயில் தாண்டி மலைக்கு மேலே காட்டுப் பகுதிக்குச் சென்ற போது மனம் உற்சாகமடையத் தொடங்கியது. ‘இந்த அடர்ந்த எடத்துக்குள்ளல்லாம் எப்பிடி ஸார் காமெராவ கொண்டு வந்து எடுப்பிய?’ நாறும்பூநாதனின் குரலில் பழைய ஜெயமோகன் பேசினார். ‘ஸார், 23 c ல அந்த wide மட்டும் இங்கெ தட்டலாம். மத்தபடி டீட்டெய்ல வேற எங்கெயாவது பண்ணிக்கலாம்’. இளங்கோ சொன்னார். வேறு ஏதோ பாஷை பேசுகிறார்கள் என்று நாறும்பூநாதன் தள்ளிப் போய் நின்று எங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நிறைய நீர்நிலைகளைக் கடந்தோம். எல்லாமே வறண்டிருந்தன. ‘இன்னும் ஒரே மாசந்தான். சீஸன் ஆரம்பமாயிரும்லா. அப்பொறம் நீங்க எதிர்பாக்குற மாரி இருக்கும்’. போகிற வழியிலேயே அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றை தேடிப் பிடித்து பார்த்தோம். அடர்ந்த புதர், மரங்களுக்கு மத்தியில் தெரிந்த மூங்கில் குடிசைக்குள் தயங்கி தயங்கி நுழைந்து, அங்கு வசித்து வந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம். உடன் வந்த குற்றாலத்துக்காரர் மலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசி, விவரங்கள் கேட்டார். அந்த அம்மையாரின் ஜாடையிலேயே இருந்த, சட்டை அணியாத இரண்டு அழுக்குச் சிறுவர்கள் அருகில் நின்று கொண்டு எங்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறந்து ஐந்தாறு மாதங்களே ஆகியிருக்கும் குழந்தை ஒன்று பாயில் மல்லாக்கப் படுத்திருந்தது. உடையேதும் அணியாததால், அதுவும் ‘அவன்’ என்பது தெரிந்தது. பார்த்த மலையாளப் படங்கள் தந்த அனுபவத்திலும், பயிற்சியிலும் நானும் மழலைமலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசினேன். குடிசையில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தமாக அந்த ரப்பர் எஸ்டேட்டில் இரண்டு ஏக்கர் உள்ளது என்னும் விவரம் சொன்னார். வெகுசில பாத்திரபண்டங்களுடனான ஒரு சமையலறை, மற்றும் ஒரு படுக்கையறை ஆகியவைதான் அவர்களின் குடிசை. அதாவது வீடு. ’இதுக்குள்ளயும் சந்தோசமா வாளத்தானெ செய்தாங்க?’ நாறும்பூநாதன் சொன்னார். அவர் சொன்னது போல, அந்தப் பெண்ணின் கண்களிலும், பேச்சிலும் அத்தனை உற்சாகம். ‘நன்னி சேச்சி. பின்னெ வரட்டே’ என்று கிளம்பும்போது, அந்த அம்மாள் ‘இவ்வளவு வெவரம் கேக்கேளெ? ஒங்களுக்கு திருநவேலில எங்கெ? எனக்கும் நம்ம ஊருதான். மேக்கரை’ என்று சுத்தமான திருநவேலி தமிழில் சொன்னார்.

மதியப் பொழுதில் அச்சன்கோயிலில் உள்ள ஒரு சிறு ஹோட்டலுக்குள் சாப்பிட நுழைந்தோம். ஆறு வருடங்களுக்கு முன்பு நண்பர் பாலாவும், நானும் அதே ஹோட்டலில் சென்று சாப்பிட்டிருக்கிறோம். பூர்வஜென்ம நினைவு திரும்பி வந்தது போல சிறிதுநேரம் திணறினேன். திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரைக் கொண்ட நாறும்பூநாதன், என்னருகில் அமர்ந்து கொண்டு மீன் சாப்பாடு ஆர்டர் செய்தார். ‘ஒங்க பக்கத்துல உக்காந்து மீன் திங்கென். ஒங்களுக்கு ஒண்ணும் செரமமில்லயெ?’ என்று சங்கோஜப்பட்டார். ‘ஒரு பிரச்சனையுமில்ல. தாராளமா சாப்பிடுங்க. முள்ள மட்டும் என் எலைல போட்டுராதீங்க’ என்றேன். அங்கிருந்து கழுதரொட்டிக்குச் சென்றோம். உள்ளே நுழையும் போதே ‘இந்த ஊரு பேரே எனக்கு புடிக்கல ஸார். மாத்த சொல்லணும்’ என்றார், மேனேஜர் ஜே கே. அங்கிருந்து தென்மலை, பிறகு வரும் வழியில் குண்டாறு என அன்றைய நாளின் மாலைவரை பல ஊர்கள். ஆங்காங்கே கிராமத்து டீக்கடைகளில் விதவிதமான வடை, முறுக்குகளுடன் டீ. தென்காசிக்கருகில் ஒரு கடையில் இஞ்சி டீ குடித்துக் கொண்டிருக்கும்போது ‘ஸார், இந்த ப்ளாக்க பாருங்க. அந்த பெரியவரோட ரிட்டர்ன் ஷாட்ட இங்கெ candidஆ எடுத்திரலாம்.’ இணை இயக்குனர் பார்த்திபன் சொன்னார். ஊர்களை ஊர்களாகப் பார்க்காமல் படத்தின் காட்சிகளுக்கான லொக்கேஷன்களாக நாங்கள் பார்த்தது நாறும்பூநாதனுக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தமாதிரி சமயங்களில் சட்டென்று எங்களிடமிருந்து விலகி நின்று எங்களையே அதிசயமாக ஓரக்கண்ணால் பார்த்தார்.

தோழர் நாறும்பூநாதனைப் போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எங்களுடன் இணைந்து கொண்டனர். படத்துக்கு தேவையான சில கோயில் பகுதிகளைத் தேடிக் கொண்டிருந்த போது மீனாட்சி சுந்தரமும், ஓவியர் வள்ளிநாயகமும் சேர்ந்து கொண்டனர். கருங்காட்டுக்கு அருகில் எங்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு பழைய கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். இறங்கி பார்த்த போது எங்களுக்கு ஏற்றதாக அது இருக்கவில்லை. சற்றுத் தள்ளி தாமிரபரணி ஓடிக் கொண்டிருந்தது. ’சித்தப்பா, ஆத்துக்குப் பக்கத்துல வந்துட்டு சும்மா திரும்பிப் போலாமா? வாங்க. கைய கால நனச்சுட்டு போவோம்’. மீனாட்சி அழைத்தான். ஆற்றுக்கு நடந்து போகும் போதே ஓரத்தில் ஒரு பழைய கோயில் ஒளிந்திருந்தது. இளங்கோவும், பார்த்திபனும் உற்சாகமானார்கள். உடனே புகைப்படம் எடுக்கத் துவங்கினர். ‘பாத்தேளா. தாமிரவரணிதான் காமிச்சு குடுத்துருக்கா. நீங்க பாட்டுக்கு திரும்பிப் போகணும்னேளே’ என்றான் மீனாட்சி. பழைய கோயில். தாழ்ந்திருந்தது. கோபுரமெல்லாம் இல்லை. உள்ளே சிவபெருமானின் லிங்க வடிவம், மற்றும் பார்வதி தேவி. கோயிலின் பெயர் வசீகரித்தது. ‘பரவாயில்லைநாதர் திருக்கோயில்’. ‘இத்தன வருசத்துல இப்பிடி ஒரு பேர்ல சிவபெருமான் இருக்கறது, நமக்கு தெரியல, பாத்தியா?’. லொக்கேஷன் மறைந்து ‘பரவாயில்லை நாதர்’ மனதை ஆக்கிரமித்தார். கோயிலுக்கான பெயர்க் காரணம் எதுவாக இருக்கும் என்பதை அறிய பல்வேறு விதமான யோசனைகள். ‘நானும்கூட கேள்விப்பட்டதே இல்ல, ஸார். பரவாயில்லநாதர். சே, என்ன பேர்ல்லாம் இருக்கு பாருங்க, சிவனுக்கு’. படியில் கொட்டியிருந்த திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டே இளங்கோ சொன்னார். ‘பார்த்திபன், பரவாயில்லை நாதர்ன்னு எளுதியிருக்கு பாருங்க. அத நல்லா ஸூம் பண்ணுங்க’.

மடேர் மடேர் என்று வெகு அருகில் சத்தம் கேட்டு திரும்பினோம். தன் தலையில் அறைந்தபடி ஓவியர் வள்ளிநாயகம். ‘என்ன வள்ளி. என்னாச்சு?’ என்றேன். ‘எண்ணே, முட்டாப்பயலுவொ ‘பரவாயில்லை நாதர்’னு தப்பா எளுதி வச்சிருக்கானுவொ. நீங்க அத போயி எடுத்து சினிமால வேற காட்டப் போறேளாக்கும்?’. வள்ளியின் குரலில் வருத்தமும், கோபமும் கொப்பளித்தது. ‘பின்ன என்ன பேருதாண்டெ அது?’ என்றேன். ‘புறவேலி நாதர்’ண்ணே’ என்றான் வள்ளி. சொன்ன கையோடு, கோயில் வெளிச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைத் தாளில் ‘புறவேலிநாதர் ஆலயம்’ என்று கோபமாக எழுதினான்.

இலக்குடன் சில ஊர்கள், இலக்கில்லாமல் சட்டென்று கண்ணில் சிக்கியவுடன் இறங்கி சென்று பார்த்த ஊர்கள் என ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் பயணம். நிறைய ஊர்களின் பெயர்களை அப்போதுதான் அறிந்தேன். படத்துக்குத் தேவையான லொக்கேஷன்களில் பெரும்பகுதி அமைந்து விட்ட நிறைவில் இளங்கோவும், பார்த்திபனும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் மாலை நெல்லையப்பர் கோயிலுக்குப் போய்விட்டு நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸைப் பிடிக்கும் திட்டத்துடன் அவசர அவசரமாக அம்மையப்பனை தரிசித்து விட்டு வெளியே வந்தேன். தனது வழக்கமான அழுக்கு வேட்டி சட்டையுடன் சைக்கிளில் கணேசண்ணன் எதிரே வந்தான். என்னைப் பார்த்ததும் சைக்கிளில் இருந்து குதித்து, ‘தம்பி, சும்மா இருக்கேல்லா?’ என்றான். ‘நேத்தே குஞ்சு சொன்னான், நீ வந்திருக்கேன்னு.’. சைக்கிளில் சாய்ந்து கொண்டு சிரித்தபடி பேசினான். ‘போனமட்டமெ நீ வந்துருக்கும்போது பாக்க முடியாம போச்சு. சூட்டிங்கு எப்பொ?’ என்றான். ‘ரெண்டு மாசம் ஆகும்ணே’ என்றேன். ‘அப்பொறம் தம்பி, இப்பிடி ஓரமா வா. பஸ் வருது பாரு.’ தனியே அழைத்துச் சென்றான். ‘ஒங்கிட்டெ ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும். குஞ்சுக்கிட்டெ கேக்க யோசனயா இருக்கு. ஒன் அளவுக்கு அவன் எனக்கு க்ளோஸ் இல்ல, பாத்தியா. அதான்’ என்றான். இதுவரைக்கும் பண உதவி கேட்டதில்லை என்றாலும், கணேசண்ணனின் அப்போதைய தோற்றமும், செய்கையும் புதிதாக இருந்தது. சட்டைப் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ‘தம்பி, லொக்கேசன் பாக்க வந்திருக்கேன்னு குஞ்சு சொன்னானெ! பேரே வித்தியாசமா இருக்கெ! அந்த லொக்கேசன்கற ஊரு எங்கடெ இருக்கு? அம்பாசமுத்திரம் போற வளியிலயா?’ என்று கேட்டான்.