அண்ணன்களின் பாடகன்

‘எல, முத்தக்கா கல்யாணத்துக்கு சின்ன சுப்பையாதான் மேளம் தெரியும்லா? சாயங்காலம் சில்வர் டோன்ஸ் கச்சேரி.’

பெரிய அக்காவின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது சிறுவனான என்னிடம் பெரியண்ணன் சொன்னான். அவளது திருமணம் திருநெல்வேலியிலுள்ள எங்கள் பூர்வீகப் பெரிய வீட்டில் விமரிசையாக நடந்தது. சின்னசுப்பையாவின் நாதஸ்வரத்தையும் விட சாயங்காலம் ரிஸப்ஷனில் (அப்போதெல்லாம் கல்யாணத்தன்றுதான் ரிஸப்ஷன்) நடக்கவிருக்கும் மெல்லிசைக் கச்சேரியில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனாலும் பெரியப்பாவுக்கு பயந்து நாதஸ்வரக் கச்சேரியின் போது முன்வரிசையில் சின்னப்பிள்ளைகள் அனைவரும் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்து தாளம் போட்டுக் கொண்டிருந்தோம். சாயங்காலம் மெல்லிசைக் கச்சேரியின் போது பெரியப்பா அந்தப் பக்கமே வரவில்லை.

எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த மேடையில் வழக்கம் போல தியாகராஜ மாமா ஹார்மோனியத்தில் அமர்ந்திருந்தார். திருநெல்வேலி மெல்லிசைக் குழுக்களில் உள்ள அனைவருமே அநேகமாக பெரியண்ணனின் நண்பர்கள். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்து வந்த அவன் ஒரு தபெலா பிளேயர். கணபதியே வருவாய், முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு போன்ற சம்பிரதாயத் தொடக்கப் பாடல்கள் முடிந்து சினிமாப் பாடல்கள் முறை வந்த போது ‘மணிப்பூர் மாமியார்’ திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை ஆரம்பித்தார்கள். முதலில் பெண்குரலின் ஆலாபனையைத் தொடர்ந்து ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே’ என்று ஆண்குரல் பாடத் துவங்கியது. தன்மகள்வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த காக்கும்பெருமாள்பிள்ளை தாத்தா அருகில் உட்கார்ந்திருந்த தன் தோழர் சுப்பிரமணிய பிள்ளை என்னும் எவர்சில்வர் தாத்தாவிடம் கேட்டார்.

‘வே, யார் கொரல் தெரியுதா?’

‘ஜெயராமன் கொரல் தெரியாதாக்கும். எத்தன ரெக்கார்டு கேட்டுருக்கென்.’

சற்றும் தாமதிக்காமல் சொன்னார் எவர்சில்வர் தாத்தா.

மலேஷியா வாசுதேவனின் குரலில் எனக்கு நினைவு தெரிந்த முதல் பாடலாக அந்தப் பாடல்தான் இன்றுவரை என் மனதில் உள்ளது. பின்னர் தேடித் தேடி இனம்பிரித்துப் பாடல்கள் கேட்க ஆரம்பிக்கும் போது ‘ஏ… முத்து முத்தா’ என்று பாடல் துவங்கும் போதே ‘அய், வாசுதேவன்’ என்று தெரிந்து போனது.

0000506343_350

வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான். பின்னர் எனது இசை வகுப்புகளின் போது சங்கராபரண ராகப் பயிற்சிக்கு மேற்கண்ட பாடல் பேருதவியாக இருந்தது.

காதல்பாடல்கள் என்றில்லை. கணேசண்ணனின் இசைரசனை வித்தியாசமானது. தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களின் பாடலாக பரவலாக அறியப்பட்ட ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற வாசுதேவனின் பாடலை கணேசண்ணன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடிக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்தப் பாடலின் முதல் இண்டெர்லூடில் ‘தந்தானே தந்தானே’ என்ற குழுவினர் குரலை திருநெல்வேலிப்பகுதி கோயில் கொடைகளில் மேளக்காரர்கள் உற்சாகமாக வாசிக்க, கும்பக்குடக் கலைஞர்கள் சுழன்று ஆடுவதை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். நாமும் கூட சேர்ந்து ஆடமாட்டாமோ என்று ஒவ்வொருமுறையும் தோன்றச் செய்யும் அட்டகாசத் துள்ளல் தாளமது.

கணேசண்ணனின் அப்போதைய மனநிலைக்கேற்ப பாடும் பாடல்களில் பெரும்பாலானவை மலேஷியா வாசுதேவனின் பாடல்களே. என்னையும், தம்பியையும் சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அவ்வப்போது கணேசண்ணனுக்கே வழங்கப்படும். ரத்னா தியேட்டரில் ‘காளி’ படம் பார்த்துவிட்டு திருநெல்வேலி ஊரிலேயே குறுகலான தெருவான வடிவுமுடுக்குத் தெரு வழியாகத் திரும்பி வரும்போது எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு ‘அடி ஆடு பூங்கொடியே’ பாடலை ரஜினிகாந்த மாதிரியே நடந்து, வாசுதேவன் மாதிரியே பாடினான். ‘ஏல, ஒங்களுக்கு என்ன கோட்டியா, ரோட்ட அடச்சுக்கிட்டு போறதப் பாரு. சவத்து மூதியொ’ என்று ஒரு சைக்கிள்காரர் திட்டிவிட்டுச் சென்றதை அவன் பொருட்படுத்தவேயில்லை. அவமானப்பட்டு கையை உதற முயன்ற என்னையும், தம்பியையும் வீடு வரும்வரை அவன் விடவேயில்லை. காரணம், பாட்டு வீட்டுவாசலில்தான் முடிந்தது.

சிலநாட்களாக தன் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தான் கணேசண்ணன். நான்கு அல்லது ஐந்து வயதான அந்தச் சிறுமி எந்த நேரமும் கை, வாய் நிறைய சாக்லெட்டாகவே காட்சியளித்தாள். அந்தச் சிறுமியை உட்கார வைத்துக் கொண்டு கணேசண்ணன் சினிமாவில் வருகிற மாதிரியே அத்தனை தத்ரூபமாக ‘வா வா வசந்தமே, சுகந்தரும் சுகந்தமே’ என்று ‘புதுக்கவிதை’ படப்பாடலைப் பாடுவான். குழந்தை அவனை நிமிர்ந்தே பார்க்காமல் வாயிலுள்ள மிட்டாயை முழுங்கி விட்டு, கையிலுள்ளதை வாயில் திணிக்கும். அதற்கெல்லாம் கவலைப்படாத கணேசண்ணன் இன்னொரு முறை அந்தப் பாடலைப் பாடத் தொடங்குவான். அந்தச் சிறுமியின் சித்தியை கணேசண்ணன் தீவிரமாகக் காதலித்து வந்த விஷயம், உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன்னால் அந்தப் பெண்ணின் வீட்டார் முன் கணேசண்ணன் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கும் போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.

மேற்படி சம்பவத்துக்குப் பிறகு திருநெல்வேலியில் எங்கு மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் கணேசண்ணன் துண்டுச் சீட்டில் எழுதி ஒரு குறிப்பிட்டப் பாடலைப் பாடச் சொல்லி விண்ணப்பிப்பான். பெருங்குரலெடுத்து வாசுதேவன் ‘பார்வதி என்னைப் பாரடி’ திரைப்படத்தில் பாடியிருக்கும் ‘வாலிபரே வாலிபரே’ என்ற பாடல்தான் அது.

திருநெல்வேலியிலுள்ள புகைப்படக்கலைஞர்களில் முக்கியமானவரான விருத்தாச்சலம் அண்ணன், பெயரில் மட்டுமல்லாமல் உண்மையாகவே புதுமைப்பித்தனின் உறவினர். பெரியண்ணனின் தோழனான அவர் காதலில் தோல்வியடைந்தவர்.

‘அப்படி ஒரு சம்பவம் அவன் வாள்க்கைல நடந்தது அவனுக்கு மட்டுந்தான்டே தெரியும்.’ விருத்தாச்சலம் அண்ணனின் நெருங்கிய நண்பரான அனந்தசங்கர் மாமா சொல்வார்.

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தவர் விருத்தாச்சலம் அண்ணன். அதனாலேயே அவர் தன் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் ஒரு கதாபாத்திரமாக விருத்தாச்சலம் அண்ணனைச் சித்தரித்திருப்பார். ‘நெஞ்சிலாடும் பூ ஒன்று’ படத்தின் ‘ஒரு மூடன் கதை சொன்னான்’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் விருத்தாச்சலம் அண்ணனை நினைக்காமல் என்னால் இருக்கமுடிந்ததில்லை. ‘பெண்ணை படைத்தானே பிரம்மனே. பாவம் ஆண்களே, பரிதாபம் நாங்களே’ மற்றும் ‘எந்த மடையனோ சொன்னான், சொர்க்கமாம். பெண்கள் உலகமே நரகமே’ போன்ற வரிகளை உணர்ச்சி பொங்கக் கண்ணீருடன் பாடுவார் விருத்தாச்சலம் அண்ணன்.

‘தம்பி, இந்தப் பாட்ட படிச்சது மலேசியான்னு நெனைக்காதெ. விருத்தாச்சலமாக்கும்… என்னடே முளிக்கெ? நெசமாவே நான்தான் பாடுனேன். எல்லா வரியும் நான் பாடுனதாக்கும்.’ பெனட்ரில் இருமல் மருந்து வாசனையடிக்க, சிகரெட் புகைக்கு இடையே அழுதபடி இதைச் சொன்ன விருத்தாச்சலம் அண்ணன் இப்போது உயிருடன் இல்லை.

இது போன்று ‘சில்வர் டோன்ஸ் டி.ஆர். குமார், ‘ஆடலரசன்’ நெல்லை பிரபாகர், ‘சங்கீத சுதா’ உமாபதி போன்ற புகழ்பெற்ற திருநெல்வேலி மெல்லிசைக்குழு பாடகர்கள் வாயிலாகவே மலேஷியா வாசுதேவனின் பாடல்களை நினைவுகூர்கிறேன். எல்லா கச்சேரிகளிலும் ரஜினி ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடப்படும் பெரும்பாலான ரஜினி படப்பாடல்கள் வாசுதேவன் பாடியவையே. யோசித்துப் பார்த்தால் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை நோக்கிய பயணத்துக்கு உதவியாக அமைந்த முக்கியமான பாடல்களைப் பாட இளையராஜா, வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். மெல்ல மெல்ல இது நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

‘நான் போட்ட சவால்’ திரைப்படத்தின் ‘சுகம் சுகமே’ , ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் ‘ஆகாய கங்கை’ ‘பாயும் புலி’ திரைப்படத்தின் ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ போன்ற இருகுரல் பாடல்களும், ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் புகழ் பெற்ற ‘ஒரு தங்க ரதத்தில்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தின் ‘பட்டுவண்ணச் சேலைக்காரி’ போன்ற தனிக்குரல் பாடல்களும் ரஜினிகாந்த்துக்காக வாசுதேவன் பாடிய பல பாடல்களின் உதாரணங்கள். இவற்றுள் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை உறுதி செய்யும் பாடலாக அவரது ரசிகர்கள் கொண்டாடிய பாடல், ஒரு சாமானியனின் குரலில் ஒலிக்கும் ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தின் ‘பொதுவாக என் மனசு தங்கம்.’ கிளப்வகை தனிப்பாடல்களில் ரஜினிகாந்தின் மிக முக்கிய பாடலாக இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு பாடலையும் இளையராஜாவின் இசையில் வாசுதேவனே பாடியிருக்கிறார். இன்றைய ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் சிக்கிச் சீரழிக்கப்பட்டாலும் அந்தப் பாடல் தன் சுயத்தை இன்னும் இழக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அந்தப் பாடல் ‘அடுத்த வாரிசு’ திரைப்படத்தின் ‘ஆசை நூறுவகை’.

index_02

அடிப்படையில் வாசுதேவனின் குரல் டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன் போன்ற நம் முன்னோடி திரையிசைப்பாடகர்களைப் போல கனத்த குரல். இரண்டு ஸ்தாயிகளிலும் தங்கு தடையின்றி பயணிக்கக்கூடிய அந்தக் குரலில் அவர் நவீனமான பாடுமுறையை வெளிப்படுத்தினார். இதனாலேயே மரபான குரலும், நவீனமான விளையாட்டுத்தனமும், துள்ளலும் தேவைப்படும் பாடல்களுக்கு வாசுதேவனை விட்டால் வேறு ஆளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவரை உயர்த்தியது. ‘ஆசை நூறுவகை’ போலவே எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு க்ளப் வகைப் பாடல் ‘பாட்டெங்கே’ (பூவிழி வாசலிலே) என்ற பாடல். இப்பாடலின் சரணங்களை மட்டும்தான் வாசுதேவன் பாடியிருப்பார். ஜாஸ் ஃப்யூஷன் வகையறாவைச் சேர்ந்த இப்பாடலில் அவர் வெளிப்படுத்தியிருந்தது முழுக்க முழுக்க மேற்கத்திய ஸ்டைல் சார்ந்ததொரு பாடுமுறையை. வாசுதேவன் பாடும் சரணங்கள், கிட்டத்தட்ட ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ஸ்டைல் போல மேலுயராத கனத்தோடு இருந்தாலும், “ஏனென்றும் தெரியாது, ஏக்கங்கள் புரியாது”, “வா பூவே வா” போன்ற இடங்களில் அந்தக் குரலின் அழுத்தத்தோடு சேர்த்து அழகான துள்ளலையும் தந்திருப்பார். இப்பாடலின் உயிர்ப்புக்கு வாசுதேவனின் இத்தகைய பாடுமுறை மிக முக்கியமான காரணம். இதைப் போலவே ‘மாமாவுக்கு குடுமா குடுமா’ (புன்னகை மன்னன்) என்ற ராக்-அண்ட்-ரோல் ஸ்டைல் பாடலின் சரணமும் அசாத்தியமானது.

இந்த அநாயசமான குரல்வீச்சுதான் மேற்கத்திய ஸ்டைல், கர்நாடக ராகம் இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்த முக்கியமான பாடல்களை வாசுதேவனைப் பாடவைக்கும் நம்பிக்கையை இளையராஜாவுக்குத் தந்திருக்கவேண்டும். கடல்மீன்கள் படத்தில் “என்றென்றும் ஆனந்தமே” பாடல் சரசாங்கி ராகத்தில் அமைந்த டிஸ்கோ பாடல். ரிதமும், கிடார் பகுதிகளும் அதற்கொரு தெளிவான மேற்கத்திய சட்டையை மாட்டிவிட்டிருக்கும். டிஸ்கோவுக்கான வழக்கமான எட்டு பீட் வடிவத்தை உபயோகிக்காமல், ஆறு பீட் ரிதத்திலேயே டிஸ்கோவின் எட்டு பீட் உணர்வைத் தந்திருப்பார் இளையராஜா. ‘வாலிபத்தின் ரசனை’ வரிகளில் அதைத் தெளிவாகக் கேட்கமுடியும். இப்படிப்பட்டதொரு முக்கியமான பாடலைப் பாடும்போது ராகபாவத்தை வெளிப்படுத்தும் மெலடி, மேற்கத்தியப் பாடுமுறை இரண்டையும் சிதைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இப்படிப்பட்ட சவாலானதொரு பாட்டை வாசுதேவனிடம் கொடுத்தார் இளையராஜா. பாடலின் ஆரம்பத்தில் வரும் ‘பாபப்ப பாபப்பா’ பிரயோகங்கள், “இசை மழை பொழிந்தது குயிலே” என்ற இடத்தில் ‘குயிலே’யில் வாசுதேவன் வெளிப்படுத்தியிருக்கும் நெளிவு போன்றவற்றை வாசுதேவன் பாடிய விதத்தின் மூலம் இப்பாடலை வெகு சிறப்பான ஒன்றாக்கியது! இதே போன்ற இன்னொரு முக்கியமான ஃப்யூஷன் பாடலான, நெற்றிக்கண் படத்தில் ஜாஸ்-பாப் வடிவில் அமைந்த ‘ராஜா ராணி ஜாக்கி’ என்ற பாடலின் இடையிசையில் வாசுதேவன் மேற்கத்திய சாயல், ஸ்வரம் பாடுவது இரண்டையுமே வெகு அழகாகச் செய்திருப்பார். ‘அஜயா’ என்ற கன்னடப்படத்தில் ‘எல்லா கலைய பல்லே’ என்ற பாட்டில் கர்நாடக சங்கீதம், பாப், டிஸ்கோ என வெவ்வேறு இசைவகைகளைத் தனித்தனியாக ஒவ்வொரு சரணத்தில் பாடிக்காட்டவேண்டிய பாட்டை வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா.

தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் பெரும்புகழ் பெற்ற ‘ஹரிதாஸ்’ திரைப்படப்பாடலான ‘என்னுடல் தன்னில்’ என்னும் பாடலின் ஒரு பகுதியை ‘எனக்கு நானே நீதிபதி’ என்ற படத்தில் பயன்படுத்தினார் இளையராஜா. ‘அம்மையப்பா’ என்று தொடங்கும் அந்தப் பகுதி ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. வேடிக்கையான சிச்சுவேஷனுக்கு சாஸ்திரிய சங்கீதமாக அமைந்த ‘ஹரிதாஸ்’ படப்பாடலை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். காரணம் அந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர், ‘இசைமேதை’ என்றழைக்கப்பட்ட ஜி.ராமநாதன். பாடலைப் பாடியவர், ஒப்பற்ற குரலுக்குச் சொந்தக்காரரும், ‘ஏழிசை மன்னர்’ என்று அழைக்கப்பட்டவருமான எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதருக்கு இணையாக அந்த உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் பாட மலேஷியா வாசுதேவனையே தேர்ந்தெடுத்திருந்தார் இளையராஜா. இதற்குக் காரணம், இப்பாடலுக்கு அழுத்தமான, சுருதி சுத்தமாக ஸ்வரங்களைப் பேசக்கூடிய, மரபிசையை லாவகமாகப் பாடும் பாடகர் தேவை. அதே சமயம், முற்றிலும் மரபிசையாக்கிவிடாமல் பாட்டுக்குரிய விளையாட்டுத்தனமும் தேவை. அதற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போனவர் வாசுதேவன். இளையராஜா தன் குரல் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வாசுதேவன் காப்பாற்றினார். இந்த காம்பினேஷனில் வரக்கூடிய, சாஸ்திரிய சங்கீத தொனியில், ராகங்களில் அமைந்த துள்ளலான பாடல்களைப் பெரும்பாலும் வாசுதேவனையே பாடவைத்தார் இளையராஜா. மணிரங்கு ராகத்தில் அமைந்த ‘சுகராகமே’ (கன்னிராசி), ஆரபி ராகத்தில் அமைந்த ‘ஆசைக்கிளியே’ (தம்பிக்கு எந்த ஊரு), சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த ‘மதனமோக ரூப சுந்தரி’ (இன்றுபோய் நாளை வா), சாரங்கா ராகத்தில் அமைந்த ‘காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன்’ (பார்வதி என்னைப் பாரடி), ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த ‘காதலிச்சுப் பாரு கிளியே’ (தங்கத்தாமரைகள்), போன்றவை அவற்றுக்கு சிறப்பான உதாரணங்கள்.

ஒரு பக்கம் ரஜினிக்காகப் பாடிய துள்ளலான பாடல்கள், இன்னொரு பக்கம் ‘கோடைகாலக் காற்றே’ (பன்னீர் புஷ்பங்கள்), ‘குயிலுக்கொரு நிறமிருக்கு’ (சொல்லத் துடிக்குது மனசு), ‘ஒரு தங்க ரதத்தில்’ (தர்ம யுத்தம்), ‘ஏ ராசாத்தி’ (என் உயிர்த்தோழன்) போன்ற மெலடிப் பாடல்கள், ‘பாட்டெங்கே’, ‘ஆசை நூறு வகை’ போன்ற மேற்கத்திய ஸ்டைல் பாடல்கள், ’என்றென்றும் ஆனந்தமே’, ‘ராஜா ராணி ஜாக்கி’ போன்ற ஃப்யூஷன்கள், ‘கட்டிவச்சுக்கோ எந்தன் அன்பு மனச’ (என் ஜீவன் பாடுது), ‘ராத்திரியில் பாடும் பாட்டு’ (அரண்மனைக் கிளி), ‘கம்மாக்கரை ஓரம்’ (ராசாவே உன்னை நம்பி) போன்ற கிராமியப்பாடல்கள், எண்ணற்ற கேலிப்பாடல்கள் என வாசுதேவன் பாடாத பாடல்வகையே இல்லை. இதனாலேயே வாசுதேவன் வெறும் டப்பாங்குத்துப் பாடல்கள் மூலம் வீணடிக்கப்பட்டார் என்றோ, ‘அவர் வெறும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்தானே?’ என்றோ பேசுபவர்களைப் பார்த்து எனக்கு சிரிப்பாக இருக்கும்.

1

ராகங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் எனது இசையாசிரியர் கிருஷ்ணன் அவர்களிடம் இளையராஜாவின் பாடல்களின் மெட்டுக்களை நான் ஹார்மோனியத்தில் வாசித்துக் காண்பித்து கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமில்லாத எனது ஆசிரியர் ராகங்களை மட்டும் சொல்லி விட்டு விலகிக் கொள்வார். அந்தந்தப் பாடலின் விசேஷ குணங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்வது எனது இசையாசிரியரின் கடைக்குட்டி மகனான பாலாஜியிடம்தான். பாலாஜியும், அவரது மூன்று சகோதரர்களும் வயலின் கலைஞர்கள். இன்றைக்கும் ‘திண்டுக்கல் அங்கிங்கு’ மெல்லிசைக் குழுவில் வயலின் வாசித்து வருபவர்கள். பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வங்கியில் பணியாற்றிக் கொண்டே கச்சேரிகளிலும் வாசித்து வருகிறார். சகோதரர்கள் அனைவருமே தடுக்கி விழுந்தால் ஏதாவது ராகத்தில்தான் விழுவார்கள். எங்காவது இடித்துக் கொண்டாலும் அது ஏதாவதொரு தாளமாக இருக்கும்.

பாலாஜி வயலினிலும், நான் ஹார்மோனியத்திலும் வாசுதேவனின் பல பாடல்களை வாசித்துப் பார்த்து வியந்திருக்கிறோம். அவற்றுள் ‘கரும்பு வில்’ திரைப்படத்தின் ‘மலர்களிலே ஆராதனை’யும், ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘கோயில்மணி ஓசைதன்னை’யும், ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தின் ‘ஆழக்கடலில் தேடிய முத்து’வும், ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ பாடலும் தவறாது இடம்பெறுபவை. இதில் ராகங்களின் அடிப்படையிலான பாடல்கள் அதிகம் இடம்பெற்றதை தற்செயலாக ஒருமுறை கவனித்தோம். சண்முகப்ரியாவின் அட்டகாசப் பாடலான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் ‘ஊருவிட்டு ஊரு வந்து’, கீரவாணியில் அமைந்த ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படத்தின் ‘தங்கச் சங்கிலி’, ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கல்யாணி ராகத்தில் எத்தனையோ திரையிசைப்பாடல்கள் உள்ளன. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலையோரம் மயிலே’ என்னும் இருகுரல் பாடல் கல்யாணி ராகப்பாடல்களில் வித்தியாசமான ஒன்று. சங்கீதமும், நடனமும் கற்ற ஒரு பெண்ணும், ஒரு சாமானியனும் பாடுவதாக அந்தப் பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. கல்யாணி ராகத்தின் பிடிமானங்களுடன் ஜதியும் சொல்லி சர்வலட்சணமாக ஒருபுறம் சித்ரா பாட, மறுபுறம் ஆன்மாவிலிருந்து அநாயாசமாகப் பாடும் ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் வாசுதேவன். அந்தப்பாடலை ரொம்பவும் வெகுளித்தனமாக ஆரம்பிப்பார் வாசுதேவன். அவரிடமிருந்து பாட்டை வாங்கி சித்ரா எங்கோ கொண்டு செல்ல, அவ்வளவுதான் வாசுதேவன் என கேட்போருக்குத் தோன்றும். எல்லாம் சரணம் வரைக்கும்தான். சரணத்தில் ‘மாநிறப்பூவே யோசனை ஏனோ, மாமனைத்தானே சேரணும் நீயே’ என்னும் வரியைக் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குப் பின் சித்ராவின் குரல், வாசுதேவனின் ஆத்மார்த்தமான பிடிக்குள் சிக்கி சரணடைந்திருப்பது கண்கூடாக நமக்கு தெரியும்.

இவைபோக வித்தியாசமான வாசுதேவனின் பாடல்களின் பக்கமும் நாங்கள் கவனம் செலுத்துவதுண்டு. ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து வாசுதேவன் பாடிய ‘சாரங்கதாரா’ எனும் பாடல் முக்கியமானது. மற்றொன்று அதிகம் அறியப்படாத ‘வாசுகி’ திரைப்படத்தில் மால்குடி சுபாவுடன் வாசுதேவன் இணைந்து பாடிய ‘காதல் நிலவே’ என்னும் பாடல்.

ஒருமுறை இப்படி ஒவ்வொரு பாடலாக நானும், பாலாஜியும் வாசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். தயக்கத்தில் நாங்கள் கொஞ்சம் நெளிய, ‘ஏ, என்னையும் ஆட்டைல சேத்துக்கிடுங்கடே’ என்றார் தியாகு அண்ணன். வாசுதேவனின் பாடல்களை ஆரம்பகாலத்திலிருந்து நினைவுகூர்ந்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“சாமானியன் கொரல் பாத்துக்கோ வாசுதேவனுக்குள்ளது. பதினாறு வயதினிலே படத்துலேருந்துதான் அவனுக்கு சூடு புடிச்சுது. தாயளி அஞ்சு பாட்டுல மூணு அவங்குள்ளதுதானெ. அப்புறம் வண்டி நிக்கவே இல்ல. நாலுகால் பாச்சல்தான். ஒரு கோட்டிக்காரப்பய பாடுத மாதிரி மோசமா பாடச் சொன்னா ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாட்ட நல்லா பாடித் தொலச்சுட்டான் வாசுன்னு எளையராஜாவே தந்தி பேப்பர் வரலாற்றுச் சுவடுகள்ல சொல்லியிருந்தாரு, பாத்தியா. அதான் விடாம ரஜினிலே இருந்து ராமராஜன் வரைக்கும் பாட வச்சாரு. வேடிக்கைப் பாட்டும் பாடவச்சிருக்காரு. சீரியஸாவும் பாட்டு குடுத்திருக்காரு. பாலசுப்ரமணியத்துக்கு சமமா இல்லென்னா ஒருத்தன் பாடி நிக்க முடியுமா சொல்லு, பாப்போம்” என்றார்.

தியாகு அண்ணன் பேசப் பேசக் கேட்டுக் கொண்டேயிருக்கத் தோன்றியது. ஒரு கட்டத்துக்கு மேல் அமைதியாகிவிட்டார். மனதுக்குள் ஏதோ வாசுதேவனின் பாடல் ஓடியிருக்கவேண்டும்.

பிறகு பாலாஜியிடமிருந்து வயலினை வாங்கி ஹரிகாம்போதி வாசிக்க ஆரம்பித்தார். மெல்ல ஹரிகாம்போதி ஒரு மலேஷியா வாசுதேவன் பாடலானது. ‘தங்கத்தாமரைகள்’ திரைப்படத்தின் ‘காதலிச்சுப் பாரு கிளியே’ பாடல்தான் அது. அந்தப் பாட்டின் சரணத்தில் ‘காதல்வந்த காளையெல்லாம் கன்னியரைப் பார்த்தால் கண்சிமிட்ட நேரமின்றி ஆசைகளைச் சேர்ப்பார்’ என்ற வரியில் ‘ஆ… ஆ…சைகளைச் சேர்ப்பார்’ என்ற இடத்திலுள்ள பிடிமானத்தை வாசிக்கும்போது கண்ணால் அதை எங்களுக்குக் காண்பித்துக்கொண்டே ‘வாசுதேவன் இந்த எடத்த என்னமா பாடியிருப்பாங்கெ’ என்றார். அந்த இடம் கடந்தவுடன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராய் வயலினை தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு எழுந்துகொண்டார்.

‘சே, சண்டாளப்பாவி. மனசாரல்லா பாடியிருப்பான்’.

தியாகு அண்ணன் தனக்குத் தானே சொல்வதுபோல்தான் இருந்தது.