கோட்டி

‘ஒரு பத்து பிசா குடேன்’. 
வாசலில் கொஞ்சம் சத்தமாகக் கேட்கும் குரல். எட்டிப் பார்த்தால் நீளமான தன் விரல் நகங்களால் பரட் பரட்டென்று சொறிந்தபடி நிற்பாள், அந்த கோட்டிக்காரி. சின்ன வயதில் நான் பார்த்த முதல் கோட்டிக்காரி அவள்தான். எப்படியும் ஒரு ஐம்பது வயது இருக்கும். இந்திராகாந்தியின் ஹேர்ஸ்டைலில், தொள தொள ரவிக்கை அணிந்திருப்பாள். நைந்து போன சேலை காற்றில் பறந்து கொண்டிருக்கும். எப்போதாவது அதை சரி செய்வாள். கண்கள் கலங்கிச் சிவந்திருக்கும். உதட்டில் எப்போதுமே சிறு சிரிப்பு.
‘எதுக்கு துட்டு கேக்கா?
‘அங் . . . மூதி பீடி குடிக்கும்.’
ஆச்சி சொல்வாள். அவள் அப்படி வந்து கேட்பது பிடிக்கவில்லையென்றாலும், அவள் கேட்ட பத்து பைசாவுக்கும் அதிகமாக நாலணாவோ, எட்டணாவோ கொடுக்கத்தான் செய்வாள் ஆச்சி. பெரிய மாமா வழியில் அந்த கோட்டிக்காரி எங்களுக்கு தூரத்து சொந்தம் என்று சொல்வார்கள். நல்ல வசதியான குடும்பப் பின்னணியுள்ள அவளது கணவனும், பிள்ளைகளும் ரயிலில் அடிபட்டு இறந்து போனதிலிருந்து அவளுக்கு இப்படி கோட்டி பிடித்து விட்டதாக பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
kotti1ஒருமுறை வந்தால் அதற்கு பிறகு அவள் எப்போது வருவாள் என்று சொல்லமுடியாது. அடிக்கடி வருவதில்லையென்பதால், சிலசமயம் ‘எங்கெ அந்த மூதிய ஆளயே காணோம்?’ என்று ஆச்சியே கேட்கும் அளவுக்கு இடைவெளி விட்டுதான் வருவாள். இடைவெளி ஒருமுறை நீண்டு, பிறகு அவள் வரவேயில்லை. ரயில் தண்டவாளத்தையொட்டி பீடி குடித்தபடியே அவள் நடந்து போனதை பார்த்ததாக குருக்களையா தாத்தா சொன்னதுதான் அந்த கோட்டிக்காரி பற்றி நாங்கள் கேட்ட கடைசி தகவல்.
திருநெல்வேலி பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கோட்டி என்றழைப்பது வழக்கமான ஒன்று. பைத்தியம் என்ற சொல்லை திருநெல்வேலிக்காரர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. கோட்டி என்ற வார்த்தையை ஒருவர் சொல்வதை வைத்தே அவர் திருநெல்வேலிக்காரர் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். செல்லமாகவும் ஒருவருக்கொருவர் கோட்டி என்று சொல்லிக் கொள்வதுண்டு. சமயங்களில் குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும் கோட்டி என்ற சொல் பயன்படும்.
‘அட கோட்டி, நீ இவ்வளவு நேரம் இங்கனயா ஒளிஞ்சிக்கிட்டிருந்தே!’
ஆச்சரியமும், மகிழ்ச்சியும் பொங்கும் கண்களோடு மர பீரோவுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு எட்டிப் பார்க்கும் பிள்ளையை ஓடிச் சென்று ஆவிசேர்த்து கட்டிக் கொஞ்சி முத்திக் கொள்வாள் அம்மை.
நண்பர்களுக்குள்ளும் கோட்டி அடிபடுவதுண்டு. குஞ்சு அடிக்கடி என்னை விளிக்கும் சொற்களுள் கோட்டியும் ஒன்று.
‘நான் அன்னைக்கெ சொன்னென். நீதான் கோட்டிக்காரப்பய கேக்கல.’
அப்பளாம் மாமி வீட்டுக்கு டியூஷன் படிக்க போகும் பிள்ளைகள் மாமியின் வீட்டிலுள்ள ஒரு பூட்டப்பட்ட அறையைப் பார்த்தபடியேதான் வீட்டுப்பாடம் எழுதுவார்கள் என்று அம்மன் சன்னதியில் பேசிக் கொள்வார்கள். அப்பளாம் மாமிக்கு கணவன் இல்லை. அப்பளம் போட்டு விற்பது, ஒயர் கூடை பின்னுவது, டியூஷன் எடுப்பது என்று ஜீவனத்துக்காக ஏதேதோ செய்து கொண்டிருந்தாள். மாமி இவ்வளவு கஷ்டப்படுவது அவளது புத்திசுவாதீனமில்லாத ஒரே மகனுக்காகத்தான் என்பது எல்லோருக்குமே தெரியும்தான். ஆனாலும் சரியாக படிக்காத பிள்ளைகளை பயமுறுத்தும் விதமாக அப்பளாம் மாமியிடம் டியூஷனுக்கு அனுப்பப் போவதாக மிரட்டி வந்தார்கள்.
‘அப்பளாம் மாமி வீட்டுக்கு டியூஷன் படிக்க போற புள்ளைங்க ஒளுங்கா படிக்கலென்னா, அவங்க வீட்டுல ஒரு கோட்டி இருக்குல்லா. அதுட்ட புடிச்சு குடுத்துருவாங்களாம்’.
அத்தனை சிரமமான வாழ்க்கையிலும் வருடாவருடம் தன் வீட்டில் கொலு வைக்க மாமி தவறுவதேயில்லை. பெரியம்மையும், அப்பளாம் மாமியும் தோழிகள். ஒருமுறை பெரியம்மையுடன் அப்பளாம் மாமி வீட்டு கொலுவுக்கு நானும் போயிருந்தேன். தவழும் கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர், வேடன் கண்ணப்பன், சஞ்சீவி மலை தாங்கிய அனுமன், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி சாயலிலேயே உள்ள பக்த மீரா, நவதானிய தட்டுகளுக்கு முன்னே பெரிய தொந்தியுடன் உட்கார்ந்திருக்கும் செட்டியார், மாரீச மானைக் காட்டும் சீதாபிராட்டி, உடன் ராமலட்சுமணர்கள் போன்ற பொம்மைகளுக்கிடையே கையில் கம்பூன்றியபடி மஹாத்மா காந்தியும் சிரித்துக் கொண்டிருந்தார். எல்லா பொம்மைகளையும் விட நான் அதிகம் பார்த்துக் கொண்டேயிருந்தது, ஹார்மோனியத்தில் ‘வாதாபி கணபதிம்’ வாசித்துக் கொண்டிருந்த அப்பளாம் மாமியின் மகனைத்தான். நடுவகிடெடுத்து தலை சீவி, கழுத்து பட்டன் வரை போட்டிருந்த சட்டையுடன் குனிந்தபடியே ஹார்மோனியக் கட்டைகளில் உள்ள தன் விரல்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு கிண்ணத்தில் வைக்கப் பட்டிருந்த சுண்டல் அப்படியே இருந்தது. அவ்வப்போது ‘வாசிச்சது போதும். நாளைக்கு வாசிக்கலாம். சுண்டல் சாப்பிடு’ என்று மாமி சொல்வதை அவன் கேட்கவில்லை. தலை நிமிர்ந்து எங்களை பார்க்கவுமில்லை.
‘அவனையே பாத்துக்கிட்டிருக்காதெ’.
ரகசியமாகச் சொல்லி என் தொடையில் கிள்ளினாள் பெரியம்மை.
‘வெக்கந்தான். வேறொண்ணுமில்ல. நீங்க போனதுக்கப்புறம் எடுத்து சாப்பிடுவான்’.
நாங்கள் எதுவும் கேட்காமலேயே பதில் சொன்னாள் மாமி.
சென்னையில் சாலிகிராமத்துத் தெருக்களில் அவ்வப்போது ஒரு அழுக்கு மனிதர் தென்படுவார். ஏதாவதொரு கடையின் முன் வந்து நிற்பார். கடைக்காரரோ, வாடிக்கையாளர்களோ காசு கொடுத்தால் வாங்கிக் கொள்வார். இல்லையென்றால் சிறிது நேரம் கழித்து சென்று விடுவார். வாயைத் திறந்தோ, கைநீட்டியோ ஏதும் கேட்பதில்லை. ஒருமுறை ராஜேஸ்வரி கோயில் பக்கம் நடந்து வரும் போது ஒரு புல்லாங்குழலிசை கேட்டது. ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தின் ‘வான் போலே வண்ணங்கொண்டு’ என்ற வேடிக்கை பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழலிசை அது. வேறேதும் வாத்தியங்கள் ஒலிக்காததால் எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு டீக்கடையின் வாசலில் குழுமியிருக்கும் இளைஞர் கூட்டத்துக்கு நடுவே நின்று நான் எப்போதும் பார்க்கும் அந்த அழுக்கு மனிதர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு ஒருநாள்கூட அவர் புல்லாங்குழல் வாசித்து நான் பார்க்கவில்லை. அவ்வப்போது காசு கொடுக்கும் போது அதுபற்றி கேட்க நினைப்பதோடு சரி. கேட்டதில்லை.
thirteenth_l_1இதே பகுதியில் ஆளவந்தான் என்றழைக்கப்படும் ஒரு விநோதமான மனிதர் நடமாடுவார். எப்போதும் மொட்டைத் தலையுடன் பேண்டும், ஷூசும் அணிந்திருப்பார். அவ்வப்போது சட்டையும் அணிவதுண்டு. முகம், கை, கால்களில் ஏதேனும் வண்ணம் பூசியிருப்பார். சமயங்களில் ஏதாவது கடை அல்லது வீட்டு படிக்கட்டுகளில் உட்கார்ந்து தன் மார்பில் தானே சிரமப்பட்டு பூக்கள் வரைவார். அருகிலேயே பெயிண்ட், பிரஷ் எல்லாம் இருக்கும். அவரை உட்கார்ந்த நிலையில் பார்க்க முடிவது இது மாதிரியான தருணங்களில்தான். மற்றபடி எப்போதுமே ஓட்டமும் நடையும்தான். பெரும்பாலும் ஒரே உடை. கால்களில் மட்டும் ஷூக்கள் அவ்வப்போது மாறும். பழையவைதான் என்றாலும் துடைத்து பளிச்சென்று இருக்கும். அந்த காலணிகளுடன் மிடுக்காக, படுவேகமாக செல்லும் போது அவர் ஒரு டென்னிஸ் பிளேயர் என்று சொன்னால் யாராலும் மறுக்காமல் நம்ப முடியும்.
அந்தப் பகுதியிலுள்ள காய்கறி, பழ வியாபாரிகள், மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்பவர்கள், டீக்கடை, பேப்பர் ஸ்டோர்காரர்கள் எல்லோரும் ஏதேதோ சொல்லி அவரை வம்பிழுக்கிழுத்தாலும் அவர்களிடம் பதிலேதும் சொல்லாமல், அவர்களை முறைத்து பார்த்தபடியே ஒரு காகிதத்தில் குறிப்பெடுப்பது மாதிரி ஏதோ எழுதுவார்.
‘டேய், ஆளவந்தான் கம்பிளெயிண்ட் எழுதுறான்டா. நீ காலி மகனே’.
‘ஆமா இவுரு பெரிய சிபிஐ. போடாங் . . . . .’
மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு நாள் மாலையில் தெருவில் ஒரே கூச்சலாகக் கேட்டது. கேட்ட மாத்திரத்தில் ஏதோ தகராறு என்பது புரிந்தது. மாடியிலிருந்து பார்க்கும் போது ஆளவந்தான் என்றழைக்கப்பட்ட அந்த மொட்டைத்தலை மனிதனை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள மெக்கானிக்ஷாப்காரர் அடி அடியென்று அடித்துக்கொண்டிருந்தார். மாறி மாறி கன்னத்தில் அறை விழுந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கூட எதிர்ப்பு காட்டாமல் பொறுமையாகவே நின்று அடிகளை வாங்கிக் கொண்டிருந்தார். சுற்றிலும் ஜனங்கள். எல்லோருமே அவரை அடிக்கச் சொல்லுகிறார்கள். இவர்களில் பெண்களும் உண்டு. ஆளவந்தான் எதற்கும் கலங்குபவராகவே தெரியவில்லை. மேலும், மேலும் அடித்து களைத்து அவர்கள் திரும்பும் போது ஒருவன் ஏதோ நினைவு வந்தவனாய் ஓடி வந்து ஆளவந்தானின் பேண்டைக் கிழற்றி உருவ முயன்றான். பலங்கொண்ட மட்டும் போராடும் விதமாக அவன் கைகளைக் கெட்டியாக பிடித்தபடி ‘என்ன அவமானப்படுத்ததெப்பா. நான் ஒண்ணும் பைத்தியமில்லெ’ என்று கதறினார், எல்லோரையும் போல கோட்டிக்காரன் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்த அந்த பெரியவர்.