ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்

அம்பாசமுத்திரம் வழியாகச் செல்லும் போது ஆம்பூர் வந்துவிட்டாலே ஆழ்வார்குறிச்சி வந்துவிட்டதாகத்தான் அர்த்தம். காதுகளில் பாம்படங்கள் தொங்க ‘ஆம்பூர் ஆச்சி’ எங்காவது தென்படுகிறாளா? என்று காரிலிருந்து எட்டிப் பார்ப்பேன். ‘ஆம்பூர்’ ஆச்சி ஆம்பூரில் இருப்பதில்லை என்னும் விவரமெல்லாம் அந்தச் சின்ன வயதில் எனக்கு தெரிந்ததில்லை.ஆற்றுப் பாலத்தைக் கடந்து இரண்டு பக்கமும் பச்சைப் பசேலென்ற வயல்கள் நிறைந்த நேர் ரோட்டில் கார் செல்லும் போதெல்லாம் அம்மா மறக்காமல் ‘இந்த ரோட்லதான் என்.எஸ்.கிருஷ்ணன் மணமகள் படம் எடுத்தாரு’ என்று சொல்வாள். ‘இத எத்தன தடவதான் சொல்லுவே?’ என்று நான் சலித்துக் கொள்வதை அவள் பொருட்படுத்தியதே இல்லை. ஊருக்குள் நுழைந்து தெப்பக்குளம் தாண்டி, செண்பக அண்ணனின் சைக்கிள் கடைப் பக்கம் வரும் போது அதுவரை திருநெல்வேலிக்காரியாக அம்மா முழுக்க முழுக்க ஆழ்வார்குறிச்சிக்காரியாக மாறிவிடுவாள். வழக்கமாக அவள் பேசும் பேச்சு, நடை, உடை, பாவனையெல்லாமே கூட மாறிவிடும். தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து அம்மா கூடவே ஆழ்வார்குறிச்சிக்கு வரும் சித்திக்கும் செண்பக அண்ணன் கடைதான் இலக்கு.

ஆழ்வார்குறிச்சிக்கு அம்மா வந்துவிட்டால் அதுவரைக்கும் ஆச்சி வீட்டுக்கு அவ்வளவாக வந்து எட்டிப்பார்க்காத ஜனங்களெல்லாம் வருவார்கள். முதலில் ‘குட்டை’ ஆச்சி வருவாள். பிறகு ‘பசு’ஆச்சி. இவர்களில் ‘குட்டை’ ஆச்சிக்கான பெயர்க் காரணம் அவளது உயரத்தைப் பார்த்தாலே நமக்கு தெரியும்.நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னை விட குட்டையாக இருந்தாள்.

‘ஏச்சி, பாத்தியா! நான் ஒன்ன விட ஒயரம்’ என்பேன்.

‘இருக்கட்டுமெய்யா. இதுலதான் பேத்தியாமாருகளுக்கு சந்தோசம். நீ பொறந்த ஒடனெ பார்வதிம்மா என் கைலதானெ ஒன்னய குடுத்தா’ என்று சொல்லி எட்டி என் கன்னத்தைப் பிடித்து முத்திக் கொள்வாள். ஆழ்வார்குறிச்சியில் அப்போதெல்லாம் பிரவசத்துக்கு மருத்துவமனைக்கு யாரும் செல்வதில்லையாம். பார்வதியம்மாள் வீட்டுக்கு வந்து பிரசவம் பார்த்தாலே போதும். (இத்தனைக்கும் சிம்ஸன் கம்பெனியினர் ‘பரமகல்யாணி மருத்துவமனை, பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி, பரமகல்யாணி கல்லூரி’ என ஆழ்வார்குறிச்சி மக்களுக்குக்காக நிறைய செய்திருக்கிறார்கள்.) தன் தாயின் வயதுடைய பார்வதியம்மாளை அம்மாவும், சித்தியும் ‘பார்வதிம்மா’ என்று அழைத்ததில் ஆச்சரியமில்லை. எங்களுக்கும் ‘பார்வதிம்மா’ என்றே சொல்லிக் கொடுத்தார்கள். பார்வதிம்மா அதிகம் பேசுவதில்லை. பதிலையே எதிர்பார்க்காத தொனியில் ‘என்னடே படிக்கே?’ என்று கேட்பதோடு சரி. பார்வதிம்மா பக்கத்தில் வந்தாலே ஊசிமருந்து வாசனையடிக்கும். அதனாலேயே கொஞ்சம் பயமாகவும் இருக்கும்.

ஆழ்வார்குறிச்சியில் ஆச்சியிடமே வளர்ந்த தம்பிக்கு சின்ன வயதில் ரத்தத்தில் உப்பின் அளவு கூடிப் போய் ரொம்பவும் சங்கடப்பட்டான். முகமும், உடலும் வீங்கிப் போனவனுக்கு பாளையங்கோட்டையிலுள்ள சுப்பையா டாக்டர்தான் மருத்துவம் பார்த்தார். கண்டிப்பாக சாப்பாட்டில் உப்பு சேர்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். இட்லி, தோசையில் கூட உப்பில்லாமல் பார்த்து பார்த்து பத்தியம் செய்து கண்ணும் கருத்துமாக கவனித்து அவனை வளர்த்தாள் ஆச்சி. உப்பில்லாத பத்தியச் சாப்பாடு போக சுப்பையா டாக்டர் தவறாமல் முட்டை அவித்துக் கொடுக்கச் சொல்லியிருந்தார். முட்டை என்று உச்சரிக்கக் கூட தயங்கும் ஆச்சி, அதற்கென்று ஒரு தனி இருப்புச் சட்டி, கரண்டி, தம்ளர், மற்றும் அடுப்பு ஒதுக்கி ‘குட்டை’ ஆச்சி கையில் ஒப்படைத்து விட்டாள். தம்பி உடல்நலமடைந்து தேறும் வரை அவனை ‘குட்டை’ ஆச்சி அப்படி பார்த்துக் கொண்டாள்.

‘சின்னவன ஒங்க அம்ம பாதி, குட்ட பாதில்லா வளத்தாங்க’. அம்மாவிடம் சொல்வாள் ‘பசு’ ஆச்சி. ‘பசு’ ஆச்சியைப் பார்த்தாலே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். ‘பசு’ ஆச்சிக்கும் எங்கள் ஆச்சியின் வயதுதான். ஆனாலும் அம்மாவுக்கு அவள் தோழி. ‘அவளுக்கு பசுன்னு பேரு வச்சதே ஒங்க அம்மைதான்.
தெரியும்லா?’ என்றாள் சித்தி. பசுவந்தனையை சொந்த ஊராகக் கொண்ட ‘பசு’
ஆச்சி வாழ்க்கைப்பட்டது ஆழ்வார்குறிச்சியில். பசுவந்தனையைச் சுருக்கி ‘பசு’வாக்கிவிட்டாளாம் அம்மா. அவளை ‘பசு’ என்று அம்மா அழைப்பதிலும், நாங்கள் ‘பசு’ ஆச்சி என்றழைப்பதிலும் மகிழ்வாள். வாயெல்லாம் புகையிலையாக சிதம்பரம் ஜெயராமனின் குரலில் பேசுவாள். ‘திருனோலிலேருந்து இந்த ஆச்சிக்கு என்ன கொண்டாந்திருக்கியெ’ என்பாள்.

யாராவது மண்டையைப் போட்டால் மட்டுமே தாமிரபரணிக்குச் செல்கிற திருநெல்வேலிக்காரர்களாகிய எங்களுக்கு ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் தினமும் ஆற்றுக் குளியல்தான். தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்து பெரிய எவர்சில்வர் தூக்கில் இட்லியும், சட்னியும், சோறும், குழம்புமாகச் சுமந்து கொண்டு ஆற்றுக்கு அழைத்துச் செல்வார்கள் அம்மாவும், சித்தியும். அப்போது கீழ்வீட்டாச்சியும் சேர்ந்து கொள்வாள். நடந்து செல்லும் போது மீண்டும் மணமகள் என்.எஸ்.கிருஷ்ணன் புராணம். ஆழ்வார்குறிச்சி ஆற்றில் வெள்ளம் எப்போதுமே கரைபுரண்டு ஓடும். தலைகீழே உள்ளே பாய்ந்தாலும் கழுத்து நனையாது. மணலில் குழியைத் தோண்டி சௌகரியமாக அமர்ந்து சிந்தித்து கவிதை எழுதலாம். சோப்பு நுரைகளுக்கு மத்தியில் துணியைத் துவைத்துக் கொண்டே அம்மாவுக்கும், சித்திக்கும் கீழ்வீட்டு ஆச்சி ஊர்க்கதைகள் சொல்லுவாள்.

‘பெத்த அம்மைய பூட்டி போட்டு தொறவோல கைல எடுத்துட்டு ஆச்சியும் ஐயரும் சினிமா கொட்டகைக்கு போறாங்க. இவன் வாத்தியான் வேலைக்கு படிச்சு என்னத்துக்குங்கென்?’

இடையில் அண்ணன் தம்பிகள் எங்கள் பக்கம் திரும்பி ‘எல, இந்த ஆத்துலதான் பளனி படம் எடுத்தாங்க. கணேசனும், முத்துராமனும் ஆறோடும்னு பாடுவாங்கல்லா!’ என்பாள். வருடாவருடம் கோடை விடுமுறைக்கு அங்கு செல்லும் போதெல்லாம் இந்தத் தகவலை மறக்காமல் சொல்வதில் அவளுக்கு அப்படி ஒரு பெருமை.

சாயங்கால நேரங்களில் வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீ எரிவது தெரியும். இரவு நேரங்களில் மிருகங்கள் அண்டாமல் இருக்க அங்கிருக்கும் மலைவாசிகள் ஆங்காங்கே வைக்கும் நெருப்பு நம் கண்ணுக்கு மினுக்காம் பூச்சி போல புள்ளி புள்ளியாகத் தெரியும். அந்த நேரத்தில்தான் சைலுதாத்தா வீட்டாச்சி வருவாள். பொழுதுபோக்காகவே நிறைய பிள்ளைகள் பெற்றவள் அவள். அந்த களைப்பும், சோர்வும் அவள் கண்களிலும், உடல் தளர்ச்சியிலும் தெரியும். ஆனால் மனதுக்கு பிடித்த மனிதர்களைப் பார்த்தால் உற்சாகம் பொங்க சிரிப்பாள். ‘பிள்ளேளுக்கு லீவு விட்டுத்தான் ஒரு வாரம் ஆச்சுல்லா! அன்னைக்கே வராம அக்காளும், தங்கச்சியுமா சடைவார இப்பொ வந்திருக்கியெ! கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறைஞ்சா போயிருவியெ’. கொஞ்சம் குத்தலும், கிண்டலுமாகப் பேசத் தொடங்குவாள். ஆளாளுக்கு பேசப் பேச நேரம் போவதே தெரியாது. வீட்டுக்குள்ளிருந்து ஆச்சி சாப்பிட கூப்பிடும் போது நன்கு இருட்டியிருக்கும். மலையில் உள்ள தீ அப்போது அணையாமல் உருண்டையாகத் தெரியத் துவங்கியிருக்கும்.

ஆழ்வார்குறிச்சியில் மட்டுமே நான் குடிக்கிற காபியின் சுவைக்குக் காரணம் அங்குள்ள வேல்சாமி காப்பித்தூளா, இல்லை எங்கள் கண் முன்னே தொழுவத்தில் நிற்கிற மாட்டைக் கறந்து காய்ச்சி தருகிற சுத்தமான பசும்பாலா என்பது இன்றுவரை பிடிபடாத ஒன்று. ‘இங்க மட்டும் எப்படி இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு?’ ஒவ்வொரு முறை நான் இதை கேட்கும் போதும் பதிலேதும் சொல்லாமல் ஆச்சி சிரித்து கொள்வாள். சிவசைலம் பால்வாடி ஸ்கூல் டீச்சரான ‘மாம்பழத்தாச்சி’ ஒருமுறை சொன்னாள்.

‘வேல்சாமி காப்பித்தூளும் இல்ல. பசும்பாலும் இல்ல. ஒங்க ஆச்சி கைமணந்தான் அது’.

மாம்பழத்தாச்சியை பேரப்பிள்ளைகள் நாங்கள்தான் சிறு வயதிலேயே அப்படி கூப்பிட ஆரம்பித்து விட்டதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் அவள் எங்களுக்கு நிறைய மாம்பழங்கள் வாங்கித் தந்திருப்பாளாயிருக்கும். நிறைய படக்கதைகள் உள்ள புத்தகங்களைப் பரிசளிக்கிற மாம்பழத்தாச்சிக்கு குழந்தைகள் இல்லை. ‘அவளே பால்வாடி பிள்ள மாதிரிதானெ இருக்கா’ என்பாள் ஆச்சி. உற்றுப் பார்த்தால் ஆச்சி சொல்வதன் அர்த்தம் விளங்கும். ரொம்பச் சின்னதாகத்தான் இருப்பாள் மாம்பழத்தாச்சி. ஒரு கூடைநாற்காலியில் மாம்பழத்தாச்சி உட்கார்ந்திருக்க ரெட்டை ஜடை போட்டபடி அம்மாவும், சித்தியும் அவளருகில் நின்று கொண்டிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று இன்றைக்கும் ஆழ்வார்குறிச்சியில் ஆச்சி வீட்டின் சுவற்றில் தொங்குகிறது.

இப்போது நடமாட முடியாமல் இடுப்பொடிந்து படுக்கையிலேயே உட்கார்ந்திருக்கிற ஆச்சியிடம் அவளது தோழிகள் ஒவ்வொருவராக நினைவுபடுத்தி பேசிக் கொண்டிருந்தேன். பழைய நினைவுகளில் மூழ்கி நிறைய பேசினாள்.

‘குட்டையையெல்லாம் லேசுல மறக்க முடியுமா? பசு இப்போல்லாம் இருந்தா வீட்ல கெடப்பாளா? ஓடி வந்திரமாட்டா?’ பேசும் போதே அவளையறியாமல் மகிழ்ச்சி முகத்தில் படர்ந்தது. திடீரென்று குரல் உடைந்து அழத் துவங்கினாள்.

‘எல்லாளுவளுக்கும் வயசாயிட்டு. போயி சேந்துட்டாளுவொ. என்ன குத்த வைக்க வச்சுட்டு போயிட்டாளே ஒங்க அம்மை. போற வயசா அவளுக்கு! சண்டாளிக்கு ஒன் மகன பாக்க குடுத்து வைக்கலயே! அந்தப் பயலுக்கும்லா கொடுப்பின இல்ல! அப்பாவப் பெத்த ஆச்சிய போட்டோலெல்லா பாக்கான் ?’