பொங்கப்படி

மார்கழி மாதம் பிறக்கும் முன்பு, கார்த்திகை மாதத்தின் இறுதியிலேயே பொங்கல் பண்டிகைக்கான ஆயத்தங்கள்ஆரம்பமாகிவிடும். அவற்றில் முக்கியமானது வெள்ளையடிக்கும் பணி. வெள்ளையடிக்கும் மட்டைகளைச் சுமந்த இரும்பு வாளிகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஆட்கள் நடமாடுவார்கள். பெரும்பாலும் பழைய பேட்டை, பாட்டப்பத்து பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களே வெள்ளையடிப்பு வேலைக்கு வருவார்கள். ராமையா பிள்ளை தனது சிஷ்யர்கள் இரண்டு பேரை எங்கள் வீட்டு வெள்ளையடிப்புக்கு அனுப்புவார். அவர்கள் இரண்டு பேரின் பெயர்களுமே முருகன். முருகா என்றால் இயல்பாக இருவருமே திரும்பிப் பார்ப்பார்கள். வித்தியாசத்துக்காக சின்ன முருகன், பெரிய முருகன் என்றழைப்பதை அவர்கள் இருவரும் அனுமதிப்பதில்லை. இருவரில் யார் பெரியவன் என்பதில் எப்போதுமே ஒரு குழப்பம் நிலவி வந்தது. அதனால் அவர்கள் இருவரும் அறியாத வண்ணம் உருவ அமைப்பின்படி சீனா.முருகன், பேனா.முருகன் என்றழைக்கப்பட்டனர்.

புறவாசலில் தொழுவத்துக்கு அருகிலுள்ள தொட்டியில் சுண்ணாம்பு நீற்றும் போது குமிழ் குமிழாகக் கொப்பளித்து வருவதைப் பார்ப்பதற்காகவே சின்னப் பிள்ளைகள் நாங்கள் போய் நிற்போம். ஆச்சி இருக்கும் வரை அந்தத் தொட்டி, மாடுகளின் கழனித் தொட்டியாக இருந்தது. ஆச்சிக்குப் பிறகு மாட்டுத் தொழுவத்தில் நாய்களே வசித்தன. குறைந்தது ஒருவாரகாலம் சீனா.முருகனும், பேனா.முருகனும் எங்கள் வீட்டு வெள்ளையடிப்பில் ஈடுபட்டிருப்பார்கள். உயரமான பகுதியில் வெள்ளையடிக்கும் போது கீழே ஏணியைப் பிடிக்கும் வேலையை ஏற்றுக் கொள்பவன் ’நெட்டை’ அம்பி. அம்பிக்கு உயரமென்றால் பயம். ஏணியைப் பிடிக்கும் போதும் கூட தலை குனிந்து உடல் நடுங்கியே நிற்பான். இது தெரிந்து வேண்டுமென்றே இரண்டு முருகன்களும் அம்பியை வம்புக்கிழுக்கும் விதமாக ஏதாவது பேச்சு கொடுப்பார்கள். அப்போதும் நிமிராமலேயே பதில் சொல்வான் அம்பி. அதற்கு வேறொரு காரணமும் உண்டு. . . . நிற்க. மற்றொரு காரணம். அசந்து மறந்து அம்பி மேலே பார்த்தால், தற்செயலாக மட்டையைத் தெளிப்பது போல அம்பியின் முகத்தில் சுண்ணாம்பபிஷேகம் செய்து விடுவான் சீனா.முருகன்.

அவரவர் வசதிக்கேற்ப சில வீடுகளில் காவியும், வெகு சிலர் வீடுகளில் டிஸ்டெம்பரும், அநேக வீடுகளில் நீலம் கலந்த சுண்ணாம்புச் சுவர்கள் ஊரெங்கும் மினுங்கத் தொடங்கும். வெள்ளையடிப்புக்கு அடுத்ததாக பொங்கலை ஊருக்குள் கொணர்பவை பனங்கிழங்குகள். பனங்கிழங்கின் வாசனை பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் வரை ஊரை விட்டு லேசில் போகாது. அவிக்கப் பட்ட, அவித்து காய வைத்து பின் உரலில் போட்டு இடிக்கப்பட்ட, ஆச்சிமார்களின் கைவண்ணத்தால் தேங்காய், இஞ்சி சேர்த்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பனங்கிழங்குகள் இன்னும் இன்னும் என் நினைவில் மின்னுகிறவை.( ஒரு வாரம் வரை பல்லில் சிக்கியிருக்கும் பனங்கிழங்கின் நாரும் இதில் அடக்கம்.) பனங்கிழங்குகளின் பலாபலன்களும் விசேஷமானவை.

‘பனங்கெளங்க யாராவது வேண்டாம்பானாவே? ஒண்ணே ஒண்ணு தின்னு பாரும். காலைல நீரு எந்திரிக்கவே வேண்டாம். அதே எந்திரி எந்திரின்னு சொல்லிரும்லா!’

பிற்பாடு சென்னையில் ஒரு டிஸம்பர் மாதத்தில் வாத்தியார் பாலுமகேந்திராவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது வடபழனி மார்க்கெட் அருகே ‘ நிறுத்து நிறுத்து’ என்றார். டிரைவரும் காரை நிறுத்தினார். ‘என்ன ஸார்?’ முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவன் குழப்பமாகத் திரும்பிப் பார்த்தேன். ‘பனங்கிழங்குடா’ என்று இறங்க முற்பட்டார். அவர் இறங்குவதற்குள் நான் கடையை நோக்கிப் பாய்ந்தேன்.

திருநெல்வேலியில் பொங்கலையொட்டி கரும்புகளின் குவியல் பெருகியிருக்கும் போது ஓலைகளின் வருகை ஆரம்பமாகியிருக்கும். பொங்கலுக்கு முதல் நாள் சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகள் மற்றும் மண்பானைகளுக்கு மத்தியில் கைப்பிள்ளைக்கு பால் கொடுத்தபடி ஒரு பெண்மணி வியாபாரம் செய்து கொண்டிருப்பாள். வருடாவருடம் அவள் மடியில் உள்ள கைப்பிள்ளை மாறிக்கொண்டேயிருக்கும்.

‘ஏம் முப்பிடாதி! போன வருசத்த விட இப்பொ அநியாயமால்லா வெல சொல்லுதே!

நீங்களும் போன வருசம் சொன்னதையேதானே சொல்லுதியெ!’

சாமர்த்தியமான வியாபாரப் பேச்சுகளில் முப்பிடாதி மூழ்கியிருப்பாள். அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும், பானைகளையும் கொண்டு வந்து போட்டு விட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவனின் குரல் எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

பொங்கலுக்கு முந்தைய நாளில் திருநெல்வேலி டவுண் மார்க்கெட்டில் நுழைந்து வெளியே வருவது என்பது வீரதீரச் செயல்களில் ஒன்று. ஆண்களும், பெண்களுமாகக் கூட்டம் நிரம்பி வழியும். ஒரு முறை நண்பன் குஞ்சுவை அவன் வீட்டில் மார்க்கெட்டுக்குப் போய் இலை வாங்கி வரச் சொல்லி விட்டார்கள். வழக்கம் போல என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் சென்றான் குஞ்சு. மற்ற நேரங்களில் லேசாக கை பட்டாலே ‘எல, ஒடம்பு என்னமா வருது?’ என்று முறைக்கும் பெண்கள், தங்கள் மேல் வந்து மோதி உரசி அழுத்திச் செல்லும் ஆண்களை கண்டுகொள்வதற்கான அவகாசமில்லாமல் பொங்கல் சாமான்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்தார்கள். உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மூச்சு திணறி நான் தொலைந்து போய் விட்டேன். குஞ்சுவை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். மதியம் கணேசண்ணன் மஞ்சள் குலை வாங்க மார்க்கெட்டுக்குப் போகும் போது ‘தம்பி நீயும் வாயேன்’ என்று இழுத்துச் சென்றான். மார்க்கெட்டின் நுழைவிலேயே உள்ள புகாரி ஸ்டோர்ஸ் பக்கம் செல்லும் போது உள்ளுக்குள்ளிருந்து வேர்க்க விறுவிறுக்க குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தான். ஆச்சரியம் தாங்காமல் ‘ஏல, இன்னுமா நீ எல வாங்கிக்கிட்டு இருக்கே?’ என்றேன். ‘சே, பாத்தியா, மறந்தே போயிட்டேன்’ என்றபடி சந்தோஷமாக மீண்டும் கூட்டத்துக்குள் புகுந்தான் குஞ்சு.

சிறுவயதுப் பொங்கல் நினைவுகளில் முதல் இடம் பிடிப்பது பொங்கல் வாழ்த்து அட்டைகளே. ஏர் உழவன், பொங்கல் பானை, நெற்கதிர்கள், கரும்புத் தோரணம், வணங்கியபடி நிற்கும் நல்லதொரு குடும்பம், வர்ணம் பூசப்பட்ட கொம்புகளுடன் கூடிய காளை மாடுகள், தவிர்க்கவே முடியாத எம்.ஜி.ஆர், சிவாஜி, ப்ரூஸ் லீ, ரஜினிகாந்த் படங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளைத் தாங்கிய கடைகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மொய்த்திருப்பர். எங்கிருந்தோ பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமாக்கள், அத்தைகள், அவர்தம் மக்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு வரும் தபால் காரரை அன்றைக்கும் மட்டும் மதிக்கத் தோன்றும். எனக்கு எத்தனை, உனக்கு எத்தனை என்று அண்ணன் தம்பிகள் வீட்டில் போடும் சண்டைகள், அம்மாக்களுக்கு சந்தோஷம் தருபவையே. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து தாய் மாமாவின் மகனும், மகளும் தங்கள் பிஞ்சு விரல்களால் ‘அன்புள்ள அத்தானுக்கு . . .’ என்றெழுதி வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். காரணமில்லாமல் கண்ணீர் வரவழைத்த அட்டைகள் அவை. இப்போது பொங்கல் வாழ்த்தட்டைகள் இருக்கின்றனவா?

பொங்கலுக்கு முந்தைய நாள் இரவில் எங்கள் வீட்டின் பரந்த வாசல் முழுவதும் பொங்கல் பானைகள், சூரியன், கரும்பு, பூக்கள் என சித்திர வேலைகள் ஆரம்பமாகும். அம்மாவின் மேற்பார்வையில் விடிய விடிய நடைபெறும் இவ்வேலைகளில் பார்டரில் காவியடிக்கும் வேலையை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். எவ்வளவு கவனமாக செய்தாலும் முக்கிய சித்திரத்தில் காவி கலக்கச் செய்து எல்லை தாண்டி விடுவேன்.

‘ஒனக்குத்தான் ஒரு கோடு கூட போடத் தெரியாதெ! ஒன்ன எவன் இதெல்லாம் செய்யச் சொன்னான். போய் அங்கெ உக்காந்து பேசாம வளக்கம் போல வேடிக்க பாரு’.

இரவெல்லாம் விழித்திருந்து அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது பூஜைமணிச் சத்தத்துடன், அம்மாவின் குலவைச் சத்தமும் சேர்ந்து கொண்டு காதுகளில் ஒலிக்கும். பொங்கல் தினத்தன்று காலையில் பொங்கப் படி கொடுக்கும், வாங்கும் படலம் ஆரம்பமாகும். தபால்தந்தி, தொலைபேசி ஊழியர்கள் தொடங்கி துப்புரவு தொழிலாளர்கள் வரை பொங்கல்படி வாங்க வருவார்கள். வழக்கமாக அணியும் யூனிஃபார்மில்லில்லாமல் புத்தாடையுடுத்தியிருப்பதால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமாயிருக்கும். பெரியவர்கள் தயாராக சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள். சின்னப் பிள்ளைகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து திருநீறு பூசி பொங்கப் படியாக ஐம்பது பைசாவில் தொடங்கி இரண்டு ரூபாய் வரை பெற்றுக் கொள்வார்கள். வசதியானவர்கள் பத்து ரூபாய் வரை கொடுப்பார்கள். ஒரு முறை சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி அத்தை எனக்கு பொங்கல் படியாக நூறு ரூபாய் கொடுத்து விட்டார்கள். ரொம்ப நாட்களுக்கு அந்த நூறு ரூபாயைத் தாளை வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

வருடங்கள் செல்ல சென்னை வாசத்துக்குப் பழகியபிறகு பொங்கல் பண்டிகை மெல்ல மெல்ல விலகி விடை பெற்றுக் கொண்டது. பத்தாண்டுகளுக்கு முன் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களை ஒரு பொங்கல் தினத்தன்று பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு நானும், கவிஞர் அறிவுமதி அண்ணனும் சென்றோம். அப்போது வண்ணதாசன் மேற்கு மாம்பலத்தில் குடியிருந்தார். வீட்டுக்குள்ளே நாங்கள் நுழையவும் சிரித்தபடி ‘பால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சான்னு பாக்க வந்தீங்களாக்கும்’ என்று வரவேற்றார். திருநெல்வேலிப் பகுதியில் இப்படி விசாரிப்பதுதான் வழக்கம். எனக்கு ஒரு நிமிடம் திருநெல்வேலியில் இறங்கிய மாதிரி இருந்தது. பிறகு அந்த கொடுப்பினையும் இல்லாமல் போனது. வண்ணதாசன் அண்ணாச்சி திருநெல்வேலிக்கே போய்விட்டார். கொடுத்து வைத்த மகராசன்.

இந்த வருடம் பொங்கலன்று முதல் நாள் இரவில் எனது நண்பர் அழகம்பெருமாளிடம் பேசியபோது, ‘எங்க ஊர்ல ஒரு வாரத்துக்கு முன்னாடியே கொண்டாட்டம் ஆரம்பமாயிரும். வீடு பூரா கரும்பு குமிஞ்சு கெடக்கும், பாத்துக்கிடுங்க. இந்தா பாரும். எம்ஜியார் நகர்ல ஒத்தக் கரும்புக்கு வெல பேசிக்கிட்டிருக்கென். தலையெளுத்த பாத்தேரா’ என்று அங்கலாய்த்தார். நாகர்கோவில்காரரின் நியாயமான புலம்பலைப் புரிந்து கொள்ள முடிந்தது. மறுநாள் நான் வழக்கம் போல காலையில் எழுந்து, கேஸ் அடுப்புக் குக்கரில் வைத்த பொங்கல் பானையை வேண்டா வெறுப்பாக வணங்கிச் சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தேன். திரை நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கைபேசியில் நண்பரொருவர் அழைத்து ‘ஸார், ஹேப்பி பொங்கல்’ என்றார். தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்து விட்டு ‘விஷ் யூ த ஸேம்’ என்றேன்.

சுந்தரம் ஐயங்காரின் கருணை

சில நாட்களுக்குமுன் குஞ்சு ஃபோனில் அழைத்தான்.

‘எல, இந்தப்பய பைக் ஓட்டுதான்’.

‘யாரு கௌரவ்வா?’

‘ஆமா. உனக்கு நான் சொல்லியே தீரணும்னுதான் சொல்லுதேன்’.

‘சரி சரி. அந்தாக்ல ரொம்பவும் சளம்பாதே. இப்ப என்ன? அவன் பின்னாடியும் உக்காந்து ஒரு ரவுண்டு போயிட்டா போச்சு.’

கௌரவ், எட்டாங் கிளாஸ் படிக்கும் குஞ்சுவின் மகன். எனது மருமகன். அவன் பைக் ஓட்டிய செய்தியை எனக்கு அவசர அவசரமாகச் சொல்லி இந்தப்பயல் குஞ்சு மகிழ்வதற்குக் காரணம், எனக்கு பைக் ஓட்டத் தெரியாது என்பதே.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது மெல்ல மெல்ல சைக்கிள் ஓட்டப் பழகினேன். அம்மன் சன்னதியில் A.M.சைக்கிள் மார்ட் என்னும் வாடகை சைக்கிள் கடை ஒன்று உண்டு. அங்கு என்னை விட குள்ளமாக ஒரு சைக்கிள் இருந்தது. அதை வாடகைக்கு எடுத்து எங்கள் வீட்டுக்குள்ளேயே ஓட்டிக் கற்றுக் கொண்டேன். அப்போது அம்மன் சன்னதி முழுக்க மாலை நேரங்களில் சைக்கிள்கள் நிறைந்திருக்கும். G.R.ஸாரிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களின் சைக்கிள்கள் அவை. அந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாகத்தை இழந்து ஊனமாக நிற்கும். G.R.ஸாரின் மகன் அந்த சைக்கிள்களை எடுத்து தினமும் ஓட்டி கீழே விழுந்து, வரிசையாக அவற்றை உடைத்து வந்தான். ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து விதவையாயின. வாத்தியாரின் மகன் என்பதால் ‘ இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ‘ ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே ‘ என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர். ஆனால் G.R.ஸாரின் மகனான குஞ்சு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நித்தம் ஒரு சைக்கிளுடன் வாழ்ந்து வந்தான். நான் சின்ன சைக்கிளிலிருந்து பெரிய சைக்கிளுக்கு வந்து சேர்வதற்குள் அவன் இரண்டு கைகளையும் விட்டு ஓட்ட ஆரம்பித்திருந்தான்.

பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருந்த புதிதில் தினமும் மாலை வேளையில் நானும், குஞ்சுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்ட் போவதை வழக்கமாக வைத்திருந்தோம். இருவருமே வெள்ளை நிற பேண்ட் துணி எடுத்து தைத்திருந்தோம். அதை அணிந்து கொண்டு சும்மா இருப்பதாவது? ஜங்ஷன் வரை சென்று வரலாம். அதுவும் சைக்கிளில் என்றான் குஞ்சு. (நாங்கள் இருப்பது திருநெல்வேலி டவுணில். ஜங்ஷனில்தான் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் எல்லாம் உள்ளது). நான் முதல் நாளே மனதுக்குள் சைக்கிளில் பலமுறை ஜங்ஷனுக்கு போய் வந்து விட்டேன். குஞ்சு வீட்டுக்கு நான் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போக குஞ்சு தயாராக இருந்தான். கல்லணை ஸ்கூல் பெண்கள் வருகிற நேரத்தை கணக்கு பண்ணி நாங்கள் கிளம்பவும் எதிரே வந்த சீதாலட்சுமி, ‘என்னல, வெள்ளையும், சொள்ளையுமா கலர் பாக்கக் கெளம்பிட்டேளா?’ என்றாள். குஞ்சுவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சீதாலட்சுமி எங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டாள். அவளை எங்களால் ஒன்றும் செய்யவும் முடியாது. குஞ்சுவின் தாயார் அவளுக்கு அத்தனை சுதந்திரத்தை கொடுத்திருந்தார். சீதாலட்சுமி இப்படி கேட்கவும் கடுப்பான குஞ்சு ‘எடுல வண்டியை’ என்றான், என்னமோ டாடா சுமோவை எடுக்கச் சொல்கிற மாதிரி. நானும் ஒரு வேகத்தில் சைக்கிளில் ஏறி மிதிக்கத் துவங்க, சீதாலட்சுமியின் மீது இருந்த கோபத்தில் துள்ளி ஏறி பின் சீட்டில் உட்கார்ந்தான் குஞ்சு. அப்போதுதான் நான் டபுள்ஸ் வைக்கப் பழகியிருந்தேன். இந்த மூதேவி உட்கார்ந்த வேகத்தில் வண்டி குடை சாய்ந்தது. ஜனநடமாட்டமுள்ள மாலை நேரத்தில் நடுரோட்டில் சைக்கிளோடு விழுந்தோம். சீதாலட்சுமி கை தட்டி சத்தம் போட்டு சிரித்தாள். ‘இவளுக்கு அம்மா ரொம்ப எடம் கொடுக்காங்கலெ’ என்றபடியே எழுந்தேன். எப்படியாவது அந்த இடத்திலிருந்து சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘மொதல்ல ஒக்காரு’ என்று கோபமாகச் சொல்லி சைக்கிளை ஓட்டத் துவங்கினான் குஞ்சு. குமரகுருபரர் ஸ்கூல் வரை சென்று சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு காலில் பட்டிருந்த அடிக்காகக் கொஞ்சமாக அழுதான். எனக்கு அவ்வளவாக அடியில்லை. வெள்ளை பேண்ட் அழுக்காகி விட்ட கவலை மட்டும் இருந்தது. அந்த சமயத்தில் அதை சொன்னால் குஞ்சு என்னைக் கொன்று விடுவான் என்பதால் சொல்லவில்லை.

ஆறாம் வகுப்பிலிருந்தே நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த சைக்கிளை பிளஸ்-ஒன் படிக்கும் போதுதான் எங்கள் இருவரது வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். அப்போது எங்களுக்கு சைக்கிள் மேலிருந்த காதல் முற்றிலுமாக வடிந்திருந்தது. இருந்தாலும் ஓட்டினோம். எங்களுடன் படித்த நண்பன் பொன்ராஜுக்கு அவனுடைய வீட்டில் சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. நான் எனது சைக்கிளை பொன்ராஜிடம் கொடுத்து ஓட்டச் சொல்லிப் பின்னால் உட்கார்ந்து கொள்வேன். பொன்ராஜை வைத்து நான் மட்டுமல்ல. தாராசிங்காலுமே ஓட்ட முடியாது. இரண்டு காரணங்களுக்காக பொன்ராஜ் ‘தக்காளி’ என்றழைக்கப்பட்டான். ஒன்று, பொன்ராஜின் தளதள உடம்பு. இரண்டு, பொன்ராஜின் அப்பா தச்சநல்லூர் காய்கறி மார்க்கெட்டில் ஹோல்ஸேல் தக்காளி கடை வைத்திருந்தார். பொன்ராஜை சைக்கிளை ஓட்டச் சொல்லி நான் பின்னால் உட்கார்ந்திருப்பதால் என் மீது வெயில் அடித்ததேயில்லை.

சைக்கிளிலிருந்து மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை வந்தது குஞ்சுவுக்கு. அவன் அப்பா ஒரு சுவேகா மொபெட் வைத்திருந்தார். அவருக்கு தெரியாமல் அதை எடுத்து வருவான். நாங்கள் இருவரும் ரவுண்ட் அடிப்போம். சுவேகா கம்பெனிக்காரர்களே தங்கள் தயாரிப்பை மறந்துவிட்ட பின்னரும் குஞ்சுவின் தந்தை அந்த வண்டியை விடாமல் போஷித்து வந்தார். பிறகு மனமே இல்லாமல் அதை கொடுத்துவிட்டு ஒரு சில்வர் பிளஸ் வாங்கினார். அதிலும் நாங்கள் ரவுண்ட் அடித்தோம். பிறகு குஞ்சு பைக் வாங்கினான். அதிலும் நான் பின்னால் அமர்ந்து போனேன். என்னைப் போலவே சைக்கிளோடு திருப்தியடைந்து விட்ட வேறு நண்பர்கள் சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி இருந்த நண்பன் ராமசுப்ரமணியன். ஒரு நாள் மீனாட்சியும், நானும் ராமசுப்ரமணியனுக்காகக் காத்துக் கொண்டு ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் ராமசுப்ரமணியன் ஒரு பைக்கில் சென்றான். கூப்பிடக் கூப்பிட எங்களை மதிக்காமல் வேகமாக எங்களைத் தாண்டிச் சென்றது வண்டி. ‘என்னலெ, ஒங்க மாமன் திமிர் புடிச்சு போயி போறான்?’ என்றேன் மீனாட்சியிடம். ‘ஒண்ணும் கவலப்படாதீங்க சித்தப்பா. அவாள் அந்த முக்குல விளுந்து கெடப்பாக. போய் பாப்போம்’ என்றான் மீனாட்சி. பயலுக்கு கருநாக்கு. பால்கடை பக்கத்தில் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டியிருந்த குழியிலிருந்து பைக்கையும், ராமசுப்ரமணியனையும் வெளியே எடுத்து அப்போதுதான் போட்டிருந்தார்கள். ‘எங்களை பாத்துட்டு பெரிய இவரு மாதிரி நிக்காம போனேளே. அப்படி என்ன அவசரம்? இது தேவைதானா மாமா?’ என்று கேட்டான் மீனாட்சி. ‘தூரப் போலெ. உங்களை பாத்துட்டு நிறுத்தனும்னுதான் நெனச்சேன். எது க்ளெட்ச்சு, எது பிரேக்குன்னு தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள இங்கே வந்து விளுந்துட்டேன்’ என்றான் ராமசுப்ரமணியன், வலியில் முனகிக் கொண்டே.

குஞ்சு பைக்கிலிருந்து ஜீப்புக்கு போனான். நானும் கூடவே போனேன். இந்த முறை எனக்கு பிரமோஷன். பின் ஸீட்டிலிருந்து முன் சீட்டுக்கு. பிறகு கார் வாங்கினான். ஒரு நாளும் அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியதே இல்லை. அவன் ஓட்ட நான் உட்கார்ந்து போவதிலேயே சுகம் கண்டு கொண்டேன். எங்கள் வீட்டுக் கார்களையும் விட நான் அதிகமாக பயணித்தது குஞ்சுவின் கார்களில்தான். சென்னையில் நண்பர்கள் பலரும் பைக், கார் ஓட்டுகிறார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சுந்தர்ராஜன் மாமா, மனோ,செழியன், திரைப்பட இணை இயக்குனர் பார்த்திபன், உதவி இயக்குனர் பத்மன் மற்றும் என் தம்பி சிவா போன்றோர் என்னை பின்னால் வைத்துக் கொண்டு பைக் ஓட்டுகின்றனர். நண்பர் ஷாஜி என்னிடம் பேசிக் கொண்டே எப்போவாவது சாலையைப் பார்த்து கார் ஓட்டுகிறார். ‘என்னைப் போல் ஒருவர்’ என்று நான் சந்தோஷமாக நம்பிக் கொண்டிருந்த வ.ஸ்ரீ அவர்களும் கார் ஓட்டி என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போடுகிறார். வாழ்க்கையின் பல கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது ஆருயிர் நண்பர் ஜெயமோகன்தான் இந்த விஷயத்தில் எனக்கு ஆறுதலாக இருக்கிறார். சைதன்யாவின் அப்பாவுக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது

சென்னைக்கு வந்த பிறகு நானும் மோட்டார் ஸைக்கிள் ஓட்டும் வாய்ப்பு வந்தது. கியர் இல்லாத மொபெட். டி.வி.எஸ்.50. அந்த மொபெட்டுக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு ஒரு இடமும் தெரியாது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் வாலிப வயது மகன் பைக் ஓட்டிக் கொண்டு போய் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அந்தத் துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு மனம் உடைந்த நிலையில் நண்பர் சீமான் என்னை தொலைபேசியில் அழைத்து அந்த செய்தியைச் சொல்லி வருந்தினார். ‘ஐயாமகனே, வண்டியெல்லாம் பாத்து ஓட்டுங்க. ஒண்ணும் சரியாயில்ல’ என்றார். நான் பதிலுக்கு, ‘அதெல்லாம் கவலைப்படாதீங்க அராஜகம். நம்ம வண்டி ஏ.வி.எம். ஸ்டூடியோவைத் தாண்டி திருப்பினாலும் போகாது’ என்றேன். அந்தச் சூழலிலும் வெடித்துச் சிரித்தார் சீமான்.

கியர் இல்லாத டி.வி.எஸ்.50 முன்பு ஓட்டினேன். இப்போது அவ்வப்போது வீட்டம்மாவின் டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் ஓட்டுகிறேன். இதற்கும் கியர் இல்லை. அந்த வகையில் டி.வி.எஸ் அதிபர் சுந்தரம் ஐயங்காருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். எங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்கு போகிறாரென்று என்னையும் மோட்டார் வாகனம் ஓட்டுவோரின் பட்டியலில் சேர்த்து என் மானம் காத்தவர் அவரே.

லோகநாயகி டீச்சரும் , லலிதா ராகமும்

“சயின்ஸ் எடுக்க வந்தவ சயின்ஸ் மட்டும் எடுக்க வேண்டியதுதானே. எதுக்கு தேவையில்லாத விஷயத்துலயெல்லாம் தலையிடுதா? நான் போயி அவ பாடத்துல புகுந்து பேசுதேனா? அவ அவ வேலையை அவ அவ பாக்கணும்”.

நான்காம் வகுப்பு படிக்கும் போது பாட்டு டீச்சர் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு ஆர்மோனியத்தைத் திறந்தது இன்னும் நினைவில் உள்ளது. லோகநாயகி மிஸ்ஸுக்கு இது காதில் விழுந்திருக்கும்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை. வீட்டுப்பாடம் செய்யாத, சுழிச்சேட்டை பண்ணுகிற
பிள்ளைகளையே கடிந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவர்கள் இதற்கு ஏதாவது பதில் சொன்னால்தான் ஆச்சரியப்படவேண்டும். அன்று பாட்டு டீச்சர் வருவதற்கு சற்று தாமதமானது. எட்டே எட்டு பேர்தான் என்றாலும், நாங்கள் போட்ட கூப்பாட்டில் ஸ்டாஃப் ரூமிலிருந்து லோகநாயகி மிஸ் வந்து விட்டார்கள். என்னப்பா, சினிமாக் கதையா? எனக்கும் சொல்லுங்களேன் என்றபடியே மிஸ்
உள்ளே வந்தார்கள். பேசுகிற முதல் வாக்கியத்திலேயே மற்றவர்களின் உள்ளம் கவர்கிற சிலரை பார்க்கும் போது இன்றும் எனக்கு லோகநாயகி மிஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். பாட்டு டீச்சர் வருவதற்கு முன்பே ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு வைத்து விட்டு சென்றிருந்தாள் ஆயா அக்கா. முதலில் மிஸ் அதை எடுத்து தூசியைத் துடைக்கிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். மெல்ல மிஸ்ஸின் விரல்கள் ஆர்மோனியத்தின் கட்டைகளில் தவழ ஆரம்பித்தன. ஒரு பத்து நிமிடம் டீச்சர் தலை நிமிராமல்
வாசித்தார்கள். மிஸ் அளுதாங்க என்றான் நண்பன் குஞ்சு. எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே!. என் எண்ணம் முழுக்க அவர்கள் வாசித்த ஓசையைத் தொடர்ந்தே செல்கிறது. மிஸ் தலை நிமிரும் வரை பேசாமல் இருந்தோம். என்னைப் பார்த்தால் கேட்டு விடுவது எனும் முடிவோடு நான்.

என் மூஞ்சி ஒரு தினுசாக இருப்பதை கவனித்து விட்டு, என்னடே முளிக்கே? என்றார்கள்.

‘நீங்க வாசிச்ச மாதிரியே எங்க பெரியப்பா பாடி கேட்டிருக்கேன். ஆனா அது வேற மாதிரியிருக்கும்’ என்றேன்.

‘அப்படியா? அது என்னதுடே? பாடு பாப்போம்’ என்றார்கள். சத்தியமாக அப்போது எனக்கு ஒரு இழவும் தெரியாது. இதே மாதிரிதான் இருக்கும். ஆனா அது வேற என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். மிஸ் சாதாரணமாக ஆர்மோனியத்தை வாசித்து, இதுதானே உங்க பெரியப்பா பாடுறது? என்றார்கள். ‘ஆமா மிஸ். இதேதான்’ என்றேன். ‘இது நான் வாசிச்சது இல்லியா!’. என் முழி அவர்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்க வேண்டும் . சிரித்தபடியே , “ரெண்டுமே பக்கத்துப் பக்கத்து ராகம் . நான் வாசிச்சது லலிதா. உங்க பெரியப்பா பாடுனது மாயாமாளவகெளளையா இருக்கும் ” என்றார்கள். அப்படித்தான்
சொல்லியிருக்க வேண்டும் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் அந்த வயதில் எனக்கு ராகங்களைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. இதற்குள் பாட்டு டீச்சர் வந்து விட மிஸ் அவசரமாக எழுந்து டீச்சரை வணங்கி வழி விட்டுச் சென்றார்கள். இதற்கு பின் தான் பாட்டு டீச்சர் முதலில் நான் குறிப்பிட்ட வரியைச் சொன்னார்கள்.

பாட்டு டீச்சரை பற்றி இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும் . இரண்டாண்டுகள் எங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள் . தீராத விளையாட்டுப் பிள்ளை, தாயின் மணிக்கொடி பாரீர் , இவை இரண்டைத் தவிர வேறு எந்த ஒரு புதிய பாடலையும் அவர்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததில்லை. அவர்கள் ஒன்றும் வைத்துக் கொண்டு வஞ்சனை பண்ணவில்லை என்கிற விவரம் ரொம்ப நாள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது .

இது நடந்து ரொம்ப வருடங்களுக்குப் பின், மேற்சொன்ன மாயாமாளவகெளளை – லலிதா வித்தியாச விவரம், இளையராஜா மூலமே எனக்குத் தெரிய வந்தது. உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடலை அட்டகாசமாக லலிதா ராகத்தில் அமைத்திருந்தார் ராஜா. இப்போது நான் ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். மெல்ல பிடிபட்டது.
மாயாமாளவகெளளையில் பஞ்சமம் இல்லையென்றால், அது லலிதா. அட . .இதுதானா! ஆச்சரியமும், சிறுவயதில் நடந்த சம்பவத்தின் நினைவுகளும், எல்லாவற்றுக்கும் மேல், அத்தனை வருடங்களுக்கு முன்பு லோகநாயகி மிஸ் வாசித்த அதே ராகத்தை இன்று நான் வாசிக்கிறேனே என்கிற சொல்ல முடியாத சந்தோஷமும் என்னை ஆட்கொண்டது. மாயாமாளவகௌளையையும், லலிதாவையும் சுமந்து கொண்டு எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரைப் பார்க்கப் போனேன்.

பொதுவாக எனது இசை வகுப்புகளில் கிருஷ்ணன் ஸார் எனக்கான பாடத்தை வயலினில் வாசிக்க, அதை அப்படியே வாங்கி ஹார்மோனியத்தில் வாசிப்பதோடு எனக்கான வகுப்பு முடிந்து விடும். அதன் பின் பொதுவாக ராகங்களைப் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு கிருஷ்ணன் ஸார் விளக்கமளித்து தெளிவுபடுத்துவார். அவர் முன்னால் கொண்டு போய் மாயாமாளவகௌளை, லலிதா இரண்டையும் வைத்தேன். ‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே. போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.

இளையராஜாவின் திரையிசைப்பாடல்களைக் கேட்டே ராகங்கள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் நான் . அந்த வகையில் லலிதாவிலிருந்து பஞ்சமத்தைத் தொட்டு மாயாமாளவகெளளையை வாசிக்கிறேன் . “மாசறு பொன்னே வருக” , தேவர்மகன் பாடல் பேசுகிறது . “மஞ்சள் நிலாவுக்கு” , முதல் இரவு படப் பாடல் குதியாட்டம் போடுகிறது . “மதுர மரிக்கொழுந்து வாசம்” , எங்க ஊரு பாட்டுக்காரன் பாடுகிறான் .(அதுவும் இந்த பாடலின் சரணத்தில் ராஜா விளையாடியிருக்கும் விளையாட்டு , அபாரமானது) . கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை “ஸரிகமபதநி” ஸ்வர வரிசைகளை சொல்லிக் கொடுக்கப்படும் இந்த ராகத்தில் ராஜா போட்டிருக்கும் பாடல்கள் எண்ணிக்கையிலடங்காதவை . ஒன்று வாசிக்க ஆரம்பித்தால் இன்னொன்று .வந்து விழுந்த வண்ணம் இருக்க , மீண்டும் லலிதாவுக்கு திரும்புகிறேன் . கண்களை மூடியபடி வாசிக்க ஆரம்பிக்கிறேன். லோகநாயகி மிஸ்ஸின் முகம் ஞாபகத்திற்கு வருகிறது. பாட்டு டீச்சரின் முகமும்தான்.

சொக்கப்பனை

கார்த்திகை தீபத்துக்கு முந்தின நாள் காலையிலேயே அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீட்டுக்கு முன்பாக நெல்லையப்பர் கோயில் ஊழியர்கள் வெட்டப்பட்ட ஒரு பனைமரத்தை கொண்டு போட்டுவிடுவார்கள். இதேபோல் சுவாமி சன்னதி முக்கிலும் ஒரு பனைமரம் போடப்படும். சுவாமி சன்னதி முக்கு இன்றைக்கும் ‘சொக்கப்பனையடி முக்கு’ என்றே அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபம் வரை ஒட்டுமொத்த திருநெல்வேலி ஊரிலுள்ள மக்களனைவரும் இவ்விரண்டு சொக்கப்பனைகளையும் பற்றி பேசிக் கொண்டிருப்பர்.

‘மக்கா, இந்த வருசம் அம்மன் சன்னதி சொக்கப்பானை சாமி சன்னதிய விட சைசு கூட .. பாத்தியா?’

‘வருசா வருசம் இதையேத்தான் சொல்லுதெ . . . எனக்கென்னமோ ஒரே மாதிரிதான் தெரியுது.’

‘ஒனக்கு மயிரத் தெரியும் . . நான்லாம் ஒரு தடவ பாத்தெம்னா அளவ மனசுலயே குறிச்சுருவென். தெரியும்லா!’

சொக்கப்பனையை சொக்கப்பானை என்று சொல்லும் மனிதர்கள் இன்றும் திருநெல்வேலியில் இருக்கிறார்கள். கார்த்திகை தீபம் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் அது சிறுவர்களுக்கு விசேஷமானது. தீபாவளிக்கு வாங்கிய பட்டாசில் மிஞ்சியதை கார்த்திகை தீபத்துக்காக சிறுவர்கள் சேமித்து வைத்திருப்பர். அவற்றை மிஞ்சியது என்று சொல்வதுகூட தவறுதான். பெற்றோர்தான் அவற்றை பிள்ளைகளுக்குத் தெரியாமல் எடுத்து வைத்திருப்பார்கள். தீபாவளியன்று வெடிக்கும் போதே சிலர் சொல்லிப் பார்ப்பார்கள்.

‘ஏ மூதி . . எல்லாத்தையும் கொளுத்தி கொண்டாடிராதெ. கார்த்தியலுக்கு இருக்கட்டும்’.

கார்த்திகையை ‘கார்த்தியல்’ என்றே திருநெல்வேலி மக்கள் உச்சரிப்பார்கள். ‘என்ன அண்ணாச்சி! கார்த்தியல்லாம் செறப்புத்தானா?’ என்று கேட்கும் திருநெல்வேலி மக்களை இன்றைக்கும் பார்க்கலாம். தீபாவளிக்கு துணியெடுக்கும் போதே கார்த்திகைக்கும் சேர்த்து துணியெடுப்பவர்களும் உண்டு. அப்படி எடுக்காதவர்கள் கண்டிப்பாக கார்த்திகை தீபத்தன்று தீபாவளிக்கு எடுத்த உடையையே அணிந்திருப்பார்கள்.

கார்த்திகைக்கு முதல் நாள் போடப்பட்ட பனையின் மேலேறி விளையாடுவதற்கென்றே சிறுவர் கூட்டம் கிளம்பி வரும். காலையிலிருந்து அன்று இரவு வரை கீழே கிடக்கும் பனையை சுற்றி வந்து ஏறி மிதித்து விளையாடுவார்கள். நள்ளிரவில் பனை தனியாக கவனிப்பாரின்றி இருட்டுக்குள் கிடக்கும். மறுநாள் காலையிலேயே பனையில் துளை போடப்படும் சத்தம் கேட்கத் துவங்கும். நன்கு சீவப்பட்ட மூங்கில் துண்டுகளை குறுக்குவாக்கில் போடப்பட்ட துளைகளில் பொறுத்தி அடிப்பார்கள். அம்மன் சன்னதி முக்கில் தோண்டப்பட்ட குழியில் பனை இறக்கப்பட்டு அதைச் சுற்றி ஓலை கட்டப்பட்டு அதன் மேல் நீளமான மஞ்சள் நிறத் துணி போர்த்தப்படும். அதுவரை வெறும் பனையாக இருந்த பனை எல்லோரும் வணங்கிச் செல்லும் சொக்கப்பனையாகி விடும்.

கார்த்திகை தீபத்தன்று மாலையில் வீடுகளில் எப்போதும் ஏற்றும் குத்துவிளக்கு போக சிறுசிறு விளக்குகள் ஏற்றப்பட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும். அரிசி மாவுடன் வெல்லம் கலந்து உருட்டி, அதில் குழியிட்டு எண்ணெய் ஊற்றி, பஞ்சுத்திரியிட்டு ஏற்றிய ‘மாவிளக்கு’, மற்ற விளக்குகளுக்கு தலைமை தாங்கும். அன்று இரவே அந்த மாவிளக்கு, ‘பிரசாதம்’ என்னும் பெயரில் பலகாரமாகிவிடும். அதில் ஒன்றை தின்றாலே வயிறு திம்மென்று ஆகிவிடும். ராமையா மாமா அதிலுமே மூன்று தின்பார். நான்காவது வைக்கும் போதுதான் அரைகுறையாக மறுப்பார். ‘வேண்டாம் மாப்ளே, வீட்ல வேற ரெண்டு தின்னேன். வச்சிருங்க, காலையில வேணா வந்து சாப்பிடுதென்’.

காய்ந்த கோரப்புல்வகையைச் சேர்ந்த ‘சுளுந்து’ எனப்படும் சூந்துக்கட்டை கொளுத்தி கையில் பிடித்துக் கொண்டு சிறுவர்களின் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் அணையாமல் அவ்வப்போது எண்ணெய் ஊற்றிப் பார்த்துக் கொள்வதற்காக அநேகமாக எல்லா வீட்டு கன்னிப் பெண்களும் தத்தம் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் அவர்களின் உடை பட்டுப்பாவாடை, பட்டுச்சேலைதான். ஒருசிலர் தரைச்சக்கரமும், புஸ்வாணமும் கொளுத்துவதுண்டு. அம்மன் சன்னதியிலும், சுவாமி சன்னதியிலும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ஓரக்கண்ணால் மேய்ந்தபடியே இளைஞர்களின் ஊர்வலம் ஆரம்பமாகும்.

‘வெள்ளத்துல அடிச்சுட்டு வந்த மாதிரி எல்லாவளும் வெளியெ வந்துட்டாளுவொளெ.’

‘ஆமாடே. நமச்சிவாயம் பிள்ள பேத்தி சமஞ்சு மூணு வருசத்துக்கப்புறம் இன்னைக்குத்தானெ வெளியெ வந்து நிக்கா’.

‘அவளவிட அவ அம்மல்லா கெடந்து ரொம்ப நெளியுதா. கவனிச்சியா?’

ரகசிய கேலிப் பேச்சுக்களுடன் நகர்ந்து சொக்கப்பனை பக்கம் கூடத் துவங்குவர். ஒன்பது மணியளவில் ஆட்கள் நடமாட முடியாதபடி சொக்கப்பனை முன் கூட்டம் நிரம்பி நிற்கும். பத்துமணியை நெருங்கும் போது மேளதாளத்துடன் பட்டர் வந்து சேருவார். சரியாக மின்சாரம் துண்டிக்கப்படும். இருட்டுக்குள் பனையின் உச்சியை நோக்கி ஒரு சிறு வெளிச்சம் செல்வது தெரியும். மேலே சென்று தீபாராதனை காட்டப்படும்போது பட்டரின் முகம் லேசாகத் தெரியவரும். பட்டர் தீபாராதனையை மூன்று சுற்று சுற்றிவிட்டு நெல்லையப்பர் இருக்கும் திசை நோக்கி காட்டிவிட்டு பனையின் உச்சியில் வைத்த மறு நொடியே கீழே ஓலையில் தீ வைக்கப்படும். திகுதிகுவென எரியத் தொடங்கும் நெருப்பின் வெக்கை தாங்காமல் ஜனங்கள் சில அடிகள் பின்னோக்கி நகருவார்கள். எங்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்கும் போது கீழே நின்று கையைக் காட்டுவான் குஞ்சு. என்னமோ அவன் ஒருவனே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் அவனது கையசைப்பு இருக்கும். எரிந்து முடிந்த சொக்கப்பனை, அரைமணிநேரம் போராட்டத்துக்குப் பிறகு, கோயில் ஊழியர்களால் வெட்டிச் சாய்க்கப்படும். பனை வீழ்ந்தவுடன் ஆளாளுக்குப் பாய்ந்து அதில் சொருகப்பட்டிருக்கும் மூங்கில் துண்டுகளை பிடுங்கி எடுப்பார்கள். அந்தக் குச்சியில் கொடி படர்ந்தால் நன்கு வளரும் என்று ஒரு நம்பிக்கை.

சொக்கப்பனை கொளுத்தி முடிந்தவுடன் உச்சினிமாகாளி அம்மன் கோயில் பூஜை மணி அடிக்கத் துவங்கும். கோயிலின் முன் ஒரு சிறிய பப்பாளி மரம் நடப்பட்டு அதில் ஓலை சுற்றி கொளுத்தப்படும். பெரிய சொக்கப்பனையின் குட்டி போல இதையும் அம்மன் சன்னதி மக்கள் வணங்குவர். எரியும் போதே ஓலைப்பட்டாசு போல சின்ன வெடிகளை தீக்குள் போட்டு வெடிக்கச் செய்யும் இளைஞர்களை ‘சவத்து மூதிகளா’ என்று பெரியவர்கள் ஏசுவார்கள். ஆனாலும் இந்தச் சேட்டையைச் செய்ய இளைஞர்கள் தவறுவதில்லை.

வருடாவருடம் சொக்கப்பனையின் போது ஒரு பட்டரை கொளுத்திவிடுவார்கள் என்றே நான் வெகுகாலம் நம்பி வந்தேன். எனது சந்தேகத்தை குஞ்சுவும் ஊர்ஜிதம் செய்தான். ‘ஒனக்கு தெரியாதா? அதுக்குன்னே கோயில்ல இருந்து பட்டர்களை வளக்காங்க’ என்று கூசாமல் சொல்லியிருந்தான். விவரம் தெரிந்த வயதில் கார்த்திகை தீபம் முடிந்த ஓரிரு நாளில் நானும், குஞ்சுவும் போத்தி ஹோட்டலில் ரவா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணேச பட்டர் வந்து எங்களருகில் உட்கார்ந்து பன்னீர் பக்கோடா ஆர்டர் பண்ணி சாப்பிட்டார். அந்த வருடம் அவர்தான் சொக்கப்பனை கொளுத்தியவர். நான் மேஜைக்கடியில் அவர் கால்களையே பார்த்தேன்.

பல வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் கார்த்திகை தீபத் திருநாளன்று திருநெல்வேலியில் இருக்க நேர்ந்தது. ஊர் முழுக்க முதல் நாளிலிருந்தே ‘கார்த்தியல்’ பேச்சை கேட்க முடிந்தது. பனை வந்து இறங்கியதிலிருந்து, மறுநாள் இரவுவரை நான் பார்த்து, கேட்டு வளர்ந்த அதே விஷயங்கள் என் கண் முன்னாடி மறுபடியும் நடந்தேறின. ஒன்பது மணிவாக்கில் மாடிக்குச் சென்று நின்றபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆண்களும், பெண்களுமாக கூட்டம் நெருக்கியடித்தபடி நின்று கொண்டும், ஆங்காங்கே வீட்டு வாசல்களில் உட்கார்ந்தபடியும் பட்டரை எதிர்பார்த்தபடி காத்திருந்தனர். சினிமா தியேட்டரில் படப்பெட்டி வரும் போது இருக்கும் பரபரப்பு, பட்டர் வரும் போது இருந்தது. மின்சாரம் சரியாகத் துண்டிக்கப்பட, சில நொடிகளில் சொக்கப்பனை கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. வெக்கை கலந்த வெளிச்சத்தில் கண்களை சுருக்கியபடி நின்று கொண்டிருந்தேன். கீழே கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘மாமா’ என்றது. குரல் வந்த திசையை பார்த்தேன். தானே சொக்கப்பனை கொளுத்திய தோரணையில் குஞ்சுவின் மகன் என்னைப் பார்த்து கையசைத்தான்.