உச்சிமாளி

மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைனி மஹாகாளி எப்படி திருநெல்வேலி வந்து சேர்ந்தாள் என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் அனேகமாக எல்லாத் தெருக்களிலும் ஒரு உஜ்ஜைனி மஹாகாளி கோயிலைக் காணலாம். ஆனால் உஜ்ஜைனி மஹாகாளியை உச்சினிமாகாளியாக்கி, பின் தாம் சொல்வதற்கு சௌகரியமாக உச்சிமாளியாக்கிக் கொண்டார்கள் நெல்லைவாசிகள். (திருநெல்வேலியை திருநவேலியாக்கியது போல) நூறாண்டுகளுக்குள்தான் உச்சிமாளி நெல்லை வந்து சேர்ந்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்து அம்மன் சன்னதியில் ஒரு உச்சிமாளி, கீழப்புதுத்தெருவில் ஒன்றுக்கு இரண்டு, தாமிரபரணி ஆற்றுக்குப் போகும் வழியில் திருப்பணி முக்கில் மற்றொருத்தி. பெரும்பாலும் பிராமணர்களல்லாதவரே உச்சிமாளி கோயில் விசேஷங்களில் கலந்து கொள்வர். குறிப்பாக வேளாளர்கள். அதற்காக பிராமணர்கள் உச்சிமாளியைக் கும்பிட மாட்டார்கள் என்றில்லை. போகிற போக்கில் உச்சிமாளியைப் பார்த்து ‘சௌக்கியமா’ என்று கேட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.

ஒவ்வொரு உச்சிமாளிக்கும் ஒரு சாமிகொண்டாடி உண்டு. பூசாரியும் உண்டு. கீழப்புதுத்தெரு உச்சிமாளியை கிருஷ்ணபிள்ளைதான் போஷித்து வந்தார். கிருஷ்ணபிள்ளையின் பெரிய தொந்திக்கு நடுவே உருண்டையாகக் கோலிக்காய் சைஸில் தொப்புள் இருக்கும். காய்ச்சல், மன உளைச்சல், வாந்தி பேதி, பேய் பிடித்தல் இவை எல்லாவற்றிற்கும் கிருஷ்ணபிள்ளையிடம் மருந்து உண்டு. முனிசிபாலிட்டிக் குழாயில் பிடித்து சொம்பில் வைத்திருக்கும் அசல் தாமிரபரணித் தண்ணீர்தான் அந்த மருந்து. சொடக்கு போட்டுக் கொண்டே ஒரு பெரிய கொட்டாவியை விட்டு புளீரென நோயாளியின் முகத்தில் செம்பிலிருந்து உள்ளங்கையில் சாய்த்த தண்ணீரை எறிவார். எல்லா வியாதியும் அந்தத் தண்ணி எறிதலில் ஓடிப் போகும். கிருஷ்ணபிள்ளைக்குப் பிறகு, அவள் மகளைக் கட்டின மருமகன், மாமனார் மாதிரியே தண்ணி எறிந்து வந்தார். கிருஷ்ணபிள்ளைக்கு நினைத்த மாத்திரத்தில் கொட்டாவி வரும். தன் மாமனார் போல எவ்வளவோ முறை முயன்றும் மருமகனுக்கு கொட்டாவிக்கு பதில் இருமல்தான் வந்தது. அவர் அளவுக்கு இவர் எறிதல் அவ்வளவு சுகமில்லை என்பதால் கீழப்புதுத் தெரு மக்கள் ராதாகிருஷ்ணன் டாக்டரிடம் போய்க் காட்டி ஊசி போட்டுக் கொண்டார்கள். இப்போது கிருஷ்ண பிள்ளையின் பேரன் தண்ணி எறிகிறான். தாத்தாவைப் போலவே இவனும் பெரிய தொந்திக்காரன். அந்த கோலிக்காய் தொப்புள்தான் இல்லை.

ஆற்றுக்குப் போகும் வழியில் உள்ள உச்சிமாளியை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டவர் பரமசிவம் பிள்ளை. அவர்தான் பூசாரி, சாமி கொண்டாடி, தர்மகர்த்தா எல்லாமே. கொடை விழாவின் போது தீச்சட்டியும் அவரே எடுத்து வலம் வருவார். உச்சிமாளியின் பிரதம பக்தரான பரமசிவம் பிள்ளைக்கு லட்சுமி தியேட்டர் பக்கம் ஒரு ஆசை நாயகி இருப்பதாக ஒரு பேச்சு உண்டு. அந்தப் பெண்மணி, முனிசிபாலிடியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்யும் பேச்சியம்மை என்பதும் மற்ற பக்தர்கள் பொருமிக் கொண்டே அன்றாடம் கிசுகிசுக்கும் விஷயம். அவர்களது ரகசிய உறவு ஒரு கொடையின் போது வெளிச்சத்துக்கு வந்தது. மீனாட்சிதான் விவரம் சொன்னான்.

‘சித்தப்பா, பரமசிவம் பிள்ளை வைப்பாட்டி நம்ம கோயில் கொடைல வந்து முன்வரிசைல நின்னுட்டா கேட்டேளா! பொம்பளையள்ளாம் முணுமுணுன்னாளுவொ. அவ ஒருத்தரைப் பத்தியும் கவலப்படாம பிள்ளைவாள் சாமியாடிக்கிட்டிருக்கும் போது அவாள் களுத்துல முறுக்கு மாலை போட்டுட்டா.’

‘பெரிய பிரச்சனையாயிருக்குமேலெ? பிள்ளைவாள் கேவலப்பட்டிருப்பாரே!’

‘நீங்க வேற . . பரமசிவம் பிள்ளையைப் பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அவர் மண்டக்காரரு . . . வெவரமா சமாளிச்சிட்டாரு.’

‘அப்படி என்னல பண்ணினாரு?’

‘முறுக்கு மாலையில இருந்து ஒரு முறுக்கை எடுத்து கடுக்கு மொடுக்குன்னு கடிச்சு தின்னு எல்லார் வாயிலெயும் மண்ணப் போட்டுட்டாருல்லா.’

அம்மன் சன்னதி உச்சிமாளி எங்கள் வீட்டுக்கு நேரெதிரில் இருக்கிறாள். நான் சிறுவனாக இருந்த போது உச்சிமாளிக்கு முகம் மட்டுமே இருந்தது. அதன் பிறகு எங்கள் பெரியப்பாவின் முயற்சியால், வெங்கடாசல ஸ்தபதியின் கரங்களினால் உச்சிமாளிக்கு உடம்பு கிடைத்து இப்போது இருப்பவள் முழு உச்சிமாளி. பிறகு கோயிலைச் சுற்றி நிறைய சிற்பங்கள் அமைத்து வண்ணம் பூசினார்கள். அவற்றில் ஒன்றாக இடுப்பு வளைந்த முருகப்பெருமான் கொஞ்சம் கவர்ச்சியாக நிற்பார். அப்போதெல்லாம் உச்சிமாளிக்கு ‘குருக்களையாத் தாத்தா’ என்று நாங்கள் அழைக்கும் கோமதிநாயக தேசிகர்தான் பூஜை பண்ணி வந்தார். உச்சிமாளி கோயிலுக்கு முன்னால் முன்னங்கால்களை மடித்து அமர்ந்த நிலையில் ஒரு கருப்பு சிங்கமும், பளபளவென எண்ணெய்ப் பிசுக்குடன் வட்டமான ஒரு பீடமும் உண்டு. குருக்களையாத் தாத்தா அந்த பீடத்தில்தான் உச்சிமாளிக்கான நைவேத்தியத்தை வைப்பார். தாத்தா நைவேத்தியத்தை வைப்பதற்கு முன் உச்சிமாளி காத்திருப்பாளோ இல்லையோ, பேராச்சியக்காள் வளர்த்த ‘ஜம்பு’ என்ற குட்டைக் கருப்பு நாய் காத்து நிற்கும். நைவேத்தியத்தை தாத்தா பீடத்தில் வைத்த மறு நிமிடம் ஜம்பு ஜம்மென்று பீடத்தில் ஏறி நைவேத்தியத்தை நக்கி சாப்பிடும். ஜம்புவின் நாக்கினால் பீடமும் சுத்தமாகிவிடும். ஆரம்பத்தில் ஜம்புவை நைவேத்தியம் சாப்பிட விடாமல் எல்லோரும் விரட்டி வந்தார்கள். நான்கைந்து பேரின் தொடைகளை ஜம்பு பதம் பார்த்தது. விளைவு, கோயிலிலேயே ஒரு நாளின் பெரும்பகுதியைக் கழிக்கும் ஆரம்பப் பள்ளியாசிரியரான வள்ளிநாயகம் ஸார்வாள் ‘உச்சிமாளியேல்லா நெதமும் சாப்பிட வாரா’ என்று சொல்லி ஜம்பு என்கிற ஆண் நாயை உச்சிமாளியாக்கினார். வேறு வழியில்லாமல் ஜம்பு என்ற உச்சிமாளியை நைவேத்தியத்தை சாப்பிட அனுமதித்தார். கடைசியாக அவர்தான் ஜம்புவிடம் கடிபட்டிருந்தார்.

வள்ளிநாயகம்பிள்ளை எப்போதுமே படபடப்புடன் இருப்பார். பள்ளி விட்டு வந்தவுடன் வீட்டுக்குப் போய் காபி குடித்துவிட்டு கோயிலுக்கு வந்துவிடுவார். வேக வேகமாகவே எல்லா காரியங்களையும் செய்வார். ஞாயிற்றுக்கிழமையன்று கூட ஓய்வெடுக்க மாட்டார். கேட்டால் ‘அவ எங்கெ நம்மள வீட்டுல இருக்க விடுதா’ என்று உச்சிமாளியைச் சொல்வார். சாமிகொண்டாடி அருணாசலம் பிள்ளையும் இப்படித்தான். நாவல்டி ரெடிமேட்ஸில் துணி கிழிக்கும் வேலை செய்யும் அவரும் கடை அடைத்து வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு நேரே உச்சிமாளி கோயில்தான். (இதே போல் சென்னை வடபழனி பாஷா பேப்பர் மார்ட்டில் இன்றைக்கும் வேலை செய்யும் வேம்பு அண்ணன், பங்குனி மாதம் நடைபெறும் கீழப்புதுத் தெரு உச்சிமாளி கோயிலின் கொடைவிழாவில் சாமி ஆடுவதற்காக எப்படியாவது திருநெல்வேலி சென்று விடுவான்.) அருணாசலம் பிள்ளைக்கு முன்பல் பாதி உடைந்திருக்கும். சாமி வந்து ஆடும் போது அவர் அந்தப் பல்லை இளித்து நாக்கைத் துருத்திக் கொண்டு முறைப்பார். அப்போது உச்சிமாளியே வந்து ஆடுவது போல இருக்கும். குழந்தைகள் பயப்படுவர். ஆடும் போது குறியும் சொல்லுவார். ஆசிரியர் வள்ளிநாயகம் ஸார்வாள் க்கு பத்து வயதில் ஒரு பெண் இருந்தாள். அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டி உச்சிமாளியிடம் கோரிக்கை வைத்தார். உச்சிமாளியும் ஒரு கொடையின் போது சாமி கொண்டாடி அருணாசலம் பிள்ளை ரூபத்தில் வந்து ‘அடுத்த வருடம் உனக்கு ஆண்பிள்ளை பிறக்கும்’ என்று குறி சொன்னாள். அடுத்த வருடம் வள்ளிநாயகம் ஸார்வாளுக்கு ராஜலட்சுமி பிறந்தாள். மனம் தளறாமல் பிள்ளைவாள் மேலும் முயல அதற்கு அடுத்த வருடம் காந்திமதி அவதரித்தாள். அதன் பிறகு வள்ளிநாயகம் ஸார்வாள் குறி கேட்பதை(யும்) நிறுத்தினார்.

தீச்சட்டி எடுத்து வலம் வரும் போது தெருவே நின்று வணங்குவதால் அருணாசலம் பிள்ளை கம்பீரமாக நடந்து வருவார். உடம்பெங்கும் மாலைகள். வீட்டுக்கு வீடு அவரை நிறுத்தி உடலிலும், காலிலும் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றுவார்கள். மற்ற நேரமென்றால் பிள்ளைவாளுக்கு ஜன்னி வந்துவிடும். அப்படி ஒன்றும் அவர் பலசாலியல்ல. ஆனால் ஊரே தன்னை வணங்கும் தெம்பில் அவர் உடம்பு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும். அதுவும் அவரைவிட வயதில் மூத்தவர்கள், வசதி படைத்தவர்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் காலில் விழுந்து எழுந்திருப்பார்கள். நாவல்டி ஸ்டோர்ஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சாதாரண ஊழியரான பிள்ளைவாள் அவர் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் அடைவது அந்த சொற்பத் தருணத்தில்தான். அன்று அவர் மனம் அடைந்த நிறைவை அவரது முகம் நமக்குக் காட்டும்.

அருணாசலம் பிள்ளை சாமியாடும் போது அவருக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ரைஸ்மில்லில் வேலை செய்த நடராஜனும் ஆடி வந்தான். இவர்கள் ஆடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் காசியா பிள்ளையின் மகன் பிச்சையாவும் இருந்தான். பிச்சையாவுக்கு அருகில் இருந்த வின்ஸென்ட் கண்ணன் சமயம் பார்த்து பிச்சையாவை சாமி ஆடும் இடத்துக்குள் தள்ளி விட, குப்புற விழுந்த அவமானத்தை சமாளிக்கும் விதமாக உடனே எழுந்து பிச்சையா கண்டபடி ஆடினான். அருணாசலம் பிள்ளை பிச்சையாவை உச்சிமாளிதான் கொண்டு வந்து தன்னிடம் சேர்த்திருப்பதாக அறிவித்தார். பிச்சையாவின் சட்டை பறிக்கப் பட்டது. உடம்பெங்கும் சந்தனம் அள்ளிப் பூசப்பட்டு கையில் மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. அன்றிலிருந்து பிச்சையாவும் சாமி கொண்டாடி ஆனான்.

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு திருநெல்வேலி போயிருந்தேன். அம்மன் சன்னதியில் நானும், குஞ்சுவும் நடந்து செல்லும் போது தன் வீட்டு வாசலில் தளர்ந்து உட்கார்ந்திருந்த அருணாசலம் பிள்ளையைப் பார்த்தேன். அருகில் போய், ‘தாத்தா, சும்மா இருக்கேளா’ என்றேன். காற்றில் கைகளை அலைய விட்டு, ‘யாரு, பெரிய வீட்டுப் பேரப் பிள்ளையா? மெட்ராஸில இருந்து வந்திருக்கேரா? பேத்தி சும்மாருக்காளாவே?’ என்று குஞ்சு இருந்த திசை பார்த்து கேட்டார். அருணாசலம் பிள்ளைக்கு கொஞ்ச நாட்களாகவே கண்பார்வை சரியில்லை என்றார்கள். நாவல்டி ரெடிமேட்ஸிலும் கணக்கு முடித்து அனுப்பி விட்டார்களாம். வீட்டிலேயேதான் இருக்கிறார். சாயங்காலமானால் வீட்டு வாசலில் இப்படி உட்காருவதோடு சரி.

‘இவாளாவது பரவாயில்லெ. வள்ளிநாயகம் ஸார்வாள் வெளியவே வாரதில்ல. அப்படியே வாரதா இருந்தாலும் கம்பு ஊனிக்கிட்டுதான் வாரா’ என்றான் குஞ்சு.

இப்போது உச்சிமாளி கோயிலைச் சுற்றி மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலில் முகம் தெரியாத புதியவர் கூட்டம். நிறைய உபய விளம்பரங்கள். மைக் ஸெட், வண்ண வண்ண விளக்குகள் என ஏக தடபுடல். ஆடம்பர அலங்காரத்தில் உச்சிமாளியே அடையாளம் மாறியிருக்கிறாள். வயதாகிவிட்டதாலோ என்னவோ அருணாசலம் பிள்ளையையும், வள்ளிநாயகம் ஸார்வாளையும் அவள் தொந்தரவு செய்வதில்லை.