பிரமநாயகத் தாத்தாவும், விஜயலலிதாவும்

சென்னைக்கு வந்த புதிதில் சாலிகிராமத்தின் காந்தி நகரில் குடியேறினேன். அம்மா அப்போது இருந்தாள். எங்கள் வீட்டோடு இன்று வரை இருந்து சமையல் வேலைகளை கவனித்துக் கொள்ளும் செல்வராஜ் அண்ணன் பரபரப்பாக சாமான்களை இறக்கி அடுக்க, வீட்டை சுத்தப்படுத்த, பால் காய்ச்ச என்று அம்மாவுக்கு ஒத்தாசையாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். நான் வழக்கம் போல சும்மா இருந்தேன். அந்த பெரிய வீட்டின் வாசலில் ஒரு நீள சிமெண்ட் பெஞ்ச் உண்டு. அதில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, கேட்டைத் திறந்து கொண்டு ஒரு பெரியவர் ‘உள்ள வரலாமா?’ என்று கேட்டபடி நின்று கொண்டிருந்தார். யாரென்றே தெரியாத அவரை ‘வாங்க வாங்க’ என்றழைத்தபடி எழுந்து நின்றேன். அடிப்பிரதட்சணம் செய்வது போல் நடந்து என்னருகில் வந்தார். உடல்நலமில்லாதவர் என்பது தெரிந்து, ‘உக்காருங்க’ என்றேன். ‘நாராயண நாராயண’ என்று முனகியபடி சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

நெற்றியில் காய்ந்து அழிந்திருந்த திருநீறு திட்டு திட்டாக ஒட்டியிருந்தது. முழுக்கைச் சட்டையை மடிக்காமல் பட்டன் போடாமல் விட்டிருந்தார். கறுப்பாக, குட்டையாக இருந்தார். முகத்திலும், தலையிலும் ஒருசில முடிகளே. களைப்பாக மூச்சு வாங்கியபடி இருந்ததால் அவராகப் பேசட்டும் என்று அமைதியாக அவரைப் பார்த்தபடி இருந்தேன். கொஞ்ச நேரம் குனிந்தே அமர்ந்திருந்தவர், சற்று நேர ஆசுவாசத்துக்குப் பின் நிமிர்ந்து என் முகம் பார்த்து சிரித்தபடி பேச ஆரம்பித்தார். ‘அம்மன் சன்னதி பெரிய வீட்டுப் பிள்ளதான நீங்க? எனக்கும் திருநவேலிதான்’ என்றார். சென்னைக்கு வந்த முதல் நாளே ஊர்க்காரரைப் பார்த்துவிட்ட சந்தோஷத்துடன் ஆச்சரியமும் சேர்ந்து கொள்ள ‘ஆமா. ஒங்களுக்கு எங்கெ?’ என்றேன்.

‘ஒங்க எதுத்த வீட்டுல தெய்வநாயகம் இருக்காம்லா, ஐ ஓ பில வேல பாக்கானெ?’

‘ஆமா. தெய்வு மாமா.’

‘அவன் அம்மை எனக்கு மதினில்லா?’

‘யாரு, ஆராம்புளியாச்சியா?’

‘அவளேதான்’.

நான் அவரை தாத்தா என்றழைக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து பிரமநாயகத் தாத்தாவை நான் பார்க்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இரவு வெகுநேரம் கழித்து வந்து படுத்திருக்கும் என்னை காலையில் பிரமநாயகத் தாத்தாவின்‘நாராயண நாராயண’தான் எழுப்பும். எழுந்து வாசலுக்கு வருவேன். சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர், என்னைப் பார்த்ததும் ‘ராத்திரி ரொம்ப லேட்டாயிட்டோ?’ என்றபடி படித்துக் கொண்டிருந்த பேப்பரை ஒழுங்காக மடித்து என்னிடம் நீட்டுவார்.

பிரமநாயகத் தாத்தாவின் மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். இதய நோயாளியான தாத்தாவுக்கு அதன் பிறகு இரண்டாம் மனைவியின் மூலம் மேலும் நான்கு மக்கட்செல்வங்கள். காந்தி நகரில் என் வீட்டுக்குப் பக்கத்து வீடான தாத்தாவின் வீடு எப்போதும் ஜேஜேயென்று இருக்கும். சமையலும், சாப்பாடும் எந்நேரமும் நடந்து கொண்டேயிருக்கும். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முழுகி, பூஜை பண்ணி சாப்பிட்டுவிட்டு தாத்தா நேரே என் வீட்டுக்கு வந்து சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொள்வார்.

பிரமநாயகத் தாத்தாவுக்கு என்மீது ஊர்ப்பாசம் போக நான் சினிமாவில் இருப்பதால் ஒரு தனியீர்ப்பு இருந்தது. அது குறித்து என்னிடம் அதிகம் பேசுவதில்லையென்றாலும் நான் உணரும் வண்ணம் மனதுக்குள் பேசிக் கொண்டுதான் இருந்தார். தாத்தாவுக்கு சினிமா மீதும், அதைவிட அதிகமாக சினிமா நடிகைகள் மீதும் இருக்கும் அலாதி பிரியம் மெல்ல தெரிய வந்தது. அந்த பிரியம் அவர் தகப்பனாரிடமிருந்து அவருக்கு வந்திருக்க வேண்டும்.

‘நம்ம ஊர் அரசுப் பொருட்காட்சில ஒரு மட்டம் நாடகம் போட்டான். மெட்ராஸ்ல இருந்து ஒரு நடிகை வந்து நடிச்சா. அந்த காலத்துல் ஒண்ணு ரெண்டு சினிமால நடிச்ச பொம்பள அவ. எங்கப்பா அவள எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டால்லா’.

குதூகலத்துடன் சொன்னார்.

‘ஆனா நான் யாரையும் பெருசா பாத்ததில்ல. ஒரே ஒருமட்டம் நம்ம கீள்ப் பாலத்துல கே.பி.சுந்தராம்பாள் அம்மா கார்ல வந்தா. முன்னாடி கொண்டு போயி சைக்கிள விட்டுட்டேன்’.

‘அப்புறம் என்னாச்சு?’ கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டேன்.

‘அந்த அம்மா கண்ணாடிய எறக்குனா. நீங்க எனக்கு திருநாறு பூசுனாத்தான் இந்த எடத்த விட்டு போவேன்னுட்டென். சிரிச்சுக்கிட்டெ பூசிவிட்டா.’

பெரிதாகச் சாதித்து விட்ட களிப்பில் சொன்னார்.

காந்தி நகரில் நாங்கள் குடியிருந்த தெருவுக்கு அருகேதான் நடிகை விஜயலலிதாவின் வீடும் இருந்தது. போகும் போதும், வரும் போதும் அந்த வீட்டைக் கடந்துதான் நான் செல்வேன். பெரும்பாலும் வாசலிலோ, பால்கனியிலோ விஜயலலிதா நிற்பார். தாத்தாவின் மகன்களும் வேலைக்குப் போகும் போதும் வரும்போதும் அவரைப் பார்த்தபடி வந்ததை தன் தந்தையிடம் சொல்வார்கள்.

‘எனக்குத்தான்டே குடுத்தே வைக்கலெ’.

வருத்தத்துடன் ஒரு நாள் தன் இளைய மகனிடம் தாத்தா சொன்னது என் காதுகளில் விழுந்தது.

‘பைபாசுக்கு முன்னாடின்னா நானே நடந்து போயிருவேன். ஒங்க யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்.’

குரலில் கடுமையான துயரம் சொட்டியது.

ஒரு நாள் அவசர அவசரமாக பிரமநாயகத் தாத்தாவின் மகன்களில் ஒருவன் சைக்கிளை ஏறி மிதித்தபடி வந்தான். ‘எப்பா, சீக்கிரம் வாங்க. அந்த அம்மா அவங்க வீட்டு வாசல்ல நிக்காங்க’ என்றான் மூச்சிரைத்தபடி. வாயெல்லாம் பல்லாக தாத்தா தத்தித் தத்திச் சென்று சைக்கிளின் கேரியரில் உட்கார்ந்து கொண்டார். மகன் சைக்கிளை கவனமாக மிதிக்க, கொஞ்சம் வெட்கமும், சிரிப்புமாக பின்னால் கெட்டியாகப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த தாத்தா என்னைப் பார்த்து ‘போய் பாத்துட்டு வந்திருதேன்’ என்றபடி போனார்.
போன வேகத்தில் வாடிய முகத்துடன் தந்தையும், மகனுமாகத் திரும்பினர். இவர்கள் செல்வதற்குள் விஜயலலிதா வீட்டுக்குள் போய் விட்டாராம். ‘இன்னைக்கில்லேன்னா இன்னோரு நாள் பாத்துக்கிட்டா போச்சு’. தன்னைத் தானே தாத்தா சமாதானப் படுத்திக் கொண்டார். ஒரு நாள் யதார்த்தமாக தாத்தாவிடம்,’எலந்த பளம் பாட்டுக்கு அந்த அம்மாதானெ ஆடுவாங்க’ என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். தாத்தாவின் முகம் அவ்வளவு கடுமையாக மாறியதை அன்றுதான் பார்த்தேன்.

‘என்ன பேரப்பிள்ள, வெவரமில்லாம கேக்கியெ? அது விஜயநிர்மலால்லா?’ என்றார். ‘என்னத்த நீங்க சினிமால இருக்கியெ? சே . . .’ என்று அலுத்துக் கொண்டார். தாத்தாவின் முகபாவத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி ஃபெயிலான மாதிரி கூனிக் குறுகிப் போனேன்.

இத்தனை சினிமா ஆசை இருந்தாலும் தாத்தா கண்டிப்பான சில விருப்பு வெறுப்புகள் கொண்டிருந்தார். குறிப்பாக மைக்கேல் ஜாக்ஸன், பிரபுதேவா இருவரது நடனத்தையும் குடும்பப் பெண்கள் பார்த்தால் கெட்டுப் போவார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார். அதற்கு அவர் ஒரு அந்தரங்கமான காரணமும் சொன்னார்.

‘மேற்படிய பிடிச்சுக்கிட்டெ ஆடுதானுவொ. இத பொம்பளப் பிள்ளைய பாக்கலாமா. நீங்களே சொல்லுங்க’.

நேரடியாக தாத்தா என்னிடம் என் தொழில் சார்ந்த விஷயங்களைப் பற்றி விசாரிக்காமல் கவனமாக இருந்தார். ஒரே ஒருமுறை அவரது கட்டுப்பாட்டையும் மீறி ‘குஷ்புவ நீங்க நேர்ல பாத்திருக்கேளா?’ என்று கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

நான் காந்தி நகருக்கு வந்த ஒன்றிரண்டு வருடங்களிலேயே தாத்தா குடும்பச் சூழல் காரணமாக திருநெல்வேலிக்குப் போய்விட்டார். போகும் போது என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கினார். எனக்குமே அது தாங்க முடியாத பிரிவாகத்தான் இருந்தது. திருநெல்வேலிக்கு அருகில் மேலப்பாளையத்தில் வாடகை குறைவாக உள்ள ஒரு பழைய பெரிய வீட்டில் குடியேறிவிட்டதாகக் கடிதம் எழுதினார். எப்படியும் இரண்டு வாரங்களுக்கு ஒரு கடிதம் வரும். ஒவ்வொரு கடிதத்திலும் மறக்காமல் என்னை மேலப்பாளையத்துக்கு அழைப்பார்.

தாத்தா மேலப்பாளையத்துக்குப் போய் சுமார் ஆறேழு மாதங்கள் கழித்து நான் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். எதிர் வீட்டு தெய்வுமாமா மூலம் தாத்தாவுக்கு விஷயம் தெரிந்து விட்டது. தன் மகனை சைக்கிளில் அனுப்பினார். ‘நாளைக்கு மத்தியானம் ஒங்களுக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு. அப்பா சொல்லிட்டு வரச் சொன்னா’. கண்டிப்பாக வருவதாகச் சொல்லி அனுப்பிட்டு மறுநாள் மேலப்பாளையம் சென்றேன். கார் அவர்களின் தெருவுக்குள் நுழையும் போதே தாத்தா வாசலில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கார் நெருங்கி வரும் போது தன் மனைவியின் தோளைப் பிடித்துக் கொண்டு தாத்தா எழுந்து நின்றார். முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க காரிலிருந்து இறங்கிய என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

அமாவாசை தர்ப்பணம் பண்ணும் போது சாப்பிடுவது மாதிரியான விசேஷச் சாப்பாடு ஏற்பாடாயிருந்தது. பெரிய வாழை இலை போட்டு உப்பு வைத்து, அதன் மீது சுண்டவத்தல் பரப்பி, பொரியல், துவரம், அவியல், மசியல், கூட்டு என முறையான பரிமாற்று முறை. பருப்பு வைக்கும் போது கவனமாக அதை இலையின் வலது கீழ்ப்பகுதியில்தான் வைக்கிறார்களா என்று தாத்தா உன்னிப்பாகப் பார்த்தார். சோறும், அப்பளமும் வைத்த பின் ‘பாயாசமும், வடையும் யாரு வப்பா?’ என்று கொஞ்சம் உயர்த்தின குரலில் கேட்டார். அவை வந்த பின் தாத்தா நைவேத்தியம் பண்ணி முடிக்கும் வரை பொறுமையாக சோற்றில் கைவைக்காமல் காத்திருந்தேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் தாத்தா விட்டுவிடவில்லை. ‘போலாம் போலாம். இப்ப என்ன அவசரம்? இரிங்க’ என்றபடி நாற்காலியில் என்னை அமரச் செய்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு விஜயலலிதாவின் பக்கம் திரும்பியது.

‘அத ஏன் கேக்கிய பேரப் பிள்ள! நம்ம கோமு இருக்காம்லா? நீங்க பாத்திருப்பிய! வளுக்கத் தல.’

‘ஆமாமா. டைட்டா சட்ட பொடுவாளெ. அவாள்தானெ?’

‘அவனேதான். கரெக்டா சொல்லிட்டேளே. அவனும் அன்னைக்கு எலந்த பளம் பாட்டுக்கு ஆடுனது விஜயலலிதாங்காம்யா. இவனுவளையெல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்ண? சவத்து மூதியெ’.

நான் பதிலே சொல்லவில்லை. நான் காந்தி நகரிலிருந்து சாலிகிராமத்துக்குள்ளேயே வேறு பகுதிக்குச் சென்று விட்டதை மட்டும் தாத்தாவிடம் சொன்னேன். தாத்தாவுக்கு ரொம்பவும் வருத்தமாகப் போய்விட்டது.

‘நல்ல ஏரியால்லாய்யா அது? அத விட்டுட்டு ஏன் போனியெ?’

‘நீங்க இங்கெ வந்துடேள்லா? அதான்.’

சமாளிக்கும் விதமாகச் சொன்னேன். தாத்தா இதற்கு ஏதும் சொல்லவில்லை. ஆனால் மனதுக்குள் ‘நான் வந்துட்டா என்ன? அதான் விஜயலலிதா இருக்காளெ?’ என்று சொன்னார் என்றுதான் நினைக்கிறேன். அவர் முகம் அப்படித்தான் இருந்தது. இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நான் மீண்டும் காந்தி நகருக்கே வந்துவிட்டேன். அதுவும் விஜயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே. நைட்டி அணிந்தபடி வாசலிலும், பால்கனியிலும் நின்று கொண்டு தன் வீட்டுக்கு எதிரே துணிகளை இஸ்திரி போடுபவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் விஜயலலிதாவை தினமும் பார்க்கிறேன். பிரமநாயகத் தாத்தா இருந்திருந்தால் சொல்லியிருக்கலாம். சந்தோஷப்பட்டிருப்பார்.