ரஹ்மான் என்ற ராஜசேகர் . . .

‘வணக்கம் ஸார்! நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே அண்ணன் சொன்னாவொ!’

ரயிலிருந்து இறங்குவதற்கு முன்பே கையிலுள்ள பெட்டியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வார் ரஹ்மான். மேலப்பாளையத்து இளைஞன். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கான திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் ‘லொக்கேஷன் மேனேஜர்’ ஜே கே’யின் உதவியாளர். கருத்த மினுமினுக்கும் மேனி. தொங்குமீசை.  படிய வாரியும் அடங்காமல் கலைந்து நிற்கும் சிகை. மினுமினுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் சட்டை அணிந்திருப்பார்.

‘ஸார்!சூட்டிங் வரும் போதுதான் இப்படி வாரான். கல்யாண வீட்டுக்குல்லாம் அவாள் போற தோரணயப் பாக்கணுமே! கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய?’ ஜே.கே சொல்வார்.

தூரத்தில் வரும் போதே   புனுகு வாசம் வீசி ரஹ்மானைக் காட்டிக் கொடுக்கும் வாசனைத் திரவியம்.

 

 

 

‘இந்த புனுகு செண்ட்டை மாத்தவே மாட்டியாடே?’

‘ஸார்! இது சவ்வாதுல்லா! நம்ம சர்வோதயாதானே சப்ளை! ’

திருநவேலியின் வட்டார வழக்கு சொற்களை அதன் மாறா ராகத்துடன் ரஹ்மான் பேசும் போது கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்கும்.

படப்பிடிப்புக்குத் தேவையான ‘Crowd’ ஏற்பாடு பண்ணும் பொறுப்பை பெரும்பாலும் ரஹ்மானிடம்தான் கொடுப்பார், ஜே கே. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமத்து ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி வகுப்பை மட்டம் போடும் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவார் ரஹ்மான்.

‘படிக்கிற பிள்ளேள ஷூட்டிங்குக்குக் கூட்டிட்டு வரலாமாடே? தப்புல்லா?’

‘ஸார்! நம்ம என்ன மாட்டக் கூட்டிட்டுப் போற மாரி க(ட்)ச்சிக் கூட்டதுக்குக்காக் கூட்டிட்டுப் போறோம்?! அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது!’

படப்பிடிப்பின் போது மைக்கில் யாரை பெயர் சொல்லி அழைத்தாலும் ஓடோடி வந்து முதலில் நிற்பது ரஹ்மான்தான். ‘ஸார் கூப்ட்டேளா?’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார்! சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார்?’ என்று கேட்கும் போது நாம் எதற்காக அழைத்தோம் என்பது மறந்து போயிருக்கும்.

அநேகமாக திருநவேலியைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் எல்லோரையும் ரஹ்மானுக்கும், எல்லோருக்கும் ரஹ்மானையும் தெரியும். அனைவருடனும் இணக்கமான உறவு. லொக்கேஷன் பார்க்கச் செல்லும் போது காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் திடீரென்று பரபரப்பு தெரிய வரும்.

டிரைவரிடம், ‘எண்ணே! கொஞ்சம் லெஃப்ட்ல ஒடிங்க. அங்கனதான் அந்தோணி ஸார்வாள் உக்காந்திருப்பாங்க. அவங்கக்கிட்டக் கேட்டா இன்னும் நாலு இடம் சொல்லுவாங்க!’.

‘இந்த ஊர்ல நம்ம மாமா ஒரு ஆள் உண்டு. பேரு ஞாவத்துக்கு வரல. வளத்தியா இருப்பாரு. மணிரத்னம் ஸார் படத்துக்கு நெறய எடம் காமிச்சாரு. ஓரமா நிப்பாட்டுங்க. முடி வெட்டுத கடைலதான் பேப்பர் படிச்சுக்கிட்டு இருப்பாரு.’

‘எல அவரு செத்து ஒரு வருசமாச்சு! நீ வண்டில ஏறு. அடுத்த ஊருக்குப் போவோம்’ என்பார் ஜே கே.

‘என்னண்ணே சொல்லுதிய? நல்லா பேசிப் பளகுவாரு. ஒரு வார்த்த சொல்லாமப் போயிட்டாரே! ச்சே! என்னய்யா ஒலகம் இது!’

இந்த மனிதன் சீரியஸான ஆள்தானா என்ற சந்தேகப்பட முடியாத முகபாவத்துடனே ரஹ்மானின் உதடுகள் முணுமுணுக்கும்.

படப்பிடிப்புக் குழுவினருடன் நெல்லையப்பர் கோயிலுக்குள் சென்றோம். எல்லோருக்கும் தலைமை தாங்குவது போல எங்களுக்கு முன்னால் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்த ரஹ்மானைப் பார்த்து எனக்கு திக்கென்றிருந்தது. சட்டென்று சமயோசிதம் தோன்றி ‘ராஜசேகர்! ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார்! ராஜசேகர் ஸார்! உங்களைத்தான் ஸார் கூப்பிடுதாங்க’ என்று அங்கு இல்லாத ராஜசேகர் ஸாரிடம் பேசிக் கொண்டிருக்க, எட்டி ரஹ்மானின் கையைப் பிடித்து, ‘கோட்டிக்காரப்பயலே! உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா?’ என்றேன். ஒரு மாதிரியான மகிழ்ச்சியுடன், ‘சரி ஸார்’ என்றான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்பு.

 

நான் ஏன் ரஹ்மானுக்கு ராஜசேகர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ர’னாவுக்கு ‘ரா’வன்னா சரியாக இருக்கும் என்று நினைத்தேனா அல்லது முந்தின நாள் தொலைக்காட்சியில் பார்த்த ‘திரிசூலம்’ படத்தின் திரிசூலங்களின் மூத்த சூலமான சிவாஜியின் பெயரான ராஜசேகரன் என்ற பெயர் என் மனதில் தங்கிவிட்டதா? ‘இந்த சிலைகளையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல விக்கறதும், நம்ம தாயாரைக் கொண்டு போய் விக்கறதும் ஒண்ணுதான்’ என்று நம்பியாரிடம் கர்ஜிக்கிற ‘திரிசூலம்’ ராஜசேகராகத்தான் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். குழுவினரிடமும் ரஹ்மானை கோயிலுக்குள் ராஜசேகர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். உதவி இயக்குநர் தியாகு அஜீரண முகத்துடன் அருகில் வந்துக் காதைக் கடித்தான்.

’ஸார்! தப்பா நெனச்சுக்காதீங்க! இந்த ராஜசேகர்ங்கற நேம் ரொம்ப ஓல்டா இருக்கு. எனக்கு வாய்லயே வர மாட்டேங்குது’.

‘கொஞ்ச நேரத்துக்கு நீ அவனைக் கூப்பிடாம இரு, தியாகு. படுத்தாதே’ என்றேன்.

திருப்தி இல்லாத முகத்துடன் தியாகு கடந்து சென்றான். ராஜசேகர் என்கிற புதிய பெயர் தந்த உற்சாகத்தின் காரணமாகவோ என்னவோ எல்லோருக்கும் முன்னால் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தான், ‘ரஹ்மான் என்ற ராஜசேகர்’.

நெல்லையப்பரை நெருங்கும் போது ராஜசேகர் என் பக்கம் திரும்பி, ‘ஸார்! நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே!’ என்பதாகவே இருந்தது, தியாகுவின் முகபாவம்.

தீபாராதனைத் தட்டுடன் கருவறைக்குள்ளிருந்து வெளியே வந்த கணேசப் பட்டர், விபூதியை வழங்கியபடியே வந்து ராஜசேகரைப் பார்த்ததும் சத்தமாக, ‘ஏய் ரகுமானு! ஒன்ன என்னடே ஆளயே காங்கல?’ என்றார்.

 

புகைப்படம்:ராமலக்‌ஷ்மி ராஜன்

 

 

விளி

1655161_10153822749095089_1416723869_o
பள்ளித்தோழன் கோமதிநாயகம் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றவுடன் பிற பையன்கள் தங்களின் தகப்பர்களை பன்மையில் விளிப்பதைப் பார்த்து தன் வீட்டில் அதைப் பிரயோகித்துப் பார்த்தான். விளைவாக கன்னம் வீங்கி என்னைப் பார்க்க வந்தான்.

 

‘எங்கப்பாவ எப்பமும் நான் ‘நீ நான்’ன்னுதான் பேசுவேன். இன்னைக்கு மத்த பயலுவள மாரி ‘நீங்க’ன்னு சொன்னதுக்கு ‘நான் என்ன மூணாம் மனுசனாலெ? நீங்க நாங்கங்கென்னு அறை விளுந்துட்டு, மக்கா’ என்றான். எந்த உறவையும் ஒருமையில் விளித்து பேசும்போதுதான் இணக்கம் கூடுகிறது. அப்பாவை ஒருமையில் விளிக்கும் பிள்ளைகளை விட அம்மாவை ஒருமையில் விளிக்கும் பிள்ளைகளே அதிகம். அம்மாவை, அப்பாவைப் பெற்ற ஆச்சிகளை ஒருமையில் அழைத்தால்தான் அந்நியோன்யமாக இருக்கும். தாத்தாக்களையும்தான். எனது தாய்மாமன்களை நான் ஒருமையில்தான் விளிக்கிறேன். மாமன்களைப் பற்றிய பேச்சு வரும்போதும் கூட ‘பெரிய மாமா சொன்னான். சின்ன மாமா வந்தான்’ என்றுதான் வாயில் வரும். அப்படி சொல்லும் போது மாமன்களின் முகங்கள் புன்னகை பூத்து மகிழும். எங்கள் குடும்பத்தில் எங்கள் தலைமுறையின் மூத்த மகனான, எனது ஒன்று விட்ட சகோதரனுக்கும் எனக்கும் குறைந்தது பதினைந்து வருட இடைவெளி. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான பெரியண்ணனை ஒருமையில்தான் விளிக்கிறேன். சபைநாகரிகம் கருதி எங்காவது பொது இடத்தில் நான் அவனை பன்மையில் மரியாதையுடன் விளித்தால் தபலா வாசிக்கும் தன் கரங்களால் என் உடம்பில் ‘தனி’ வாசித்து விடுவான்.

கேரளத்தில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களைப் பார்க்கும் போது பெரியவர்கள் இயல்பாக உறவு சொல்லியே விளிக்கின்றனர். பெண்பிள்ளையாக இருந்தால் ‘மோளே’. ஆண்பிள்ளையாக இருந்தால் ‘மோனே’. அந்த உச்சரிப்பில் அத்தனை வாஞ்சையைப் பார்க்க முடியும். திருநெல்வேலியில் வயதில் மூத்த மனிதர்கள் எல்லோருமே அண்ணாச்சிதான். ஆனால் சென்னையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த திருநவேலிக்காரர்கள் மட்டும்தான் ‘அண்ணாச்சி’ என்பதாக ஒரு புரிதல் இருக்கிறது. அதுபோல ‘அவாள்’ என்கிற விளிசொல் ஏதோ சாதியக் குறியீடு என்பதான புரிதலும் எனக்கு ஆச்சரியமளிக்கும் ஒன்று. ஏனென்றால் பிற மனிதர்களை மரியாதையுடன் சொல்லும் போது ‘அவாள்’ என்ற விளிசொல்லை பாஷாபாய் அண்ணன், ஆல்பர்ட் வல்தாரீஸ் சித்தப்பா, புலவர் கிரகோரி பெரியப்பா, ‘தலையாரி’ வண்ணத்துரை அண்ணன், களக்காட்டு பத்தையைச் சேர்ந்த ராமச்சந்திரன் அண்ணன் இப்படி பலரும் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். ஒளிப்பதிவாளரும், கவிஞருமான நண்பர் செழியன் என்னுடன் அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட திருநவேலி பகுதிகளில் சுற்றி விட்டு சொன்னார்.

 

‘ஒங்க ஊர்ல அல்வாவும் அவாள்தான். ஆட்டுக்குட்டியும் அவாள்தான். ஆச்சரியம்யா!’.

 

திருநவேலி பகுதிகளில் அதிக காலம் இருந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட அனுபவத்தில் நடிகர் இளவரசுவும் செழியனின் அபிப்ராயத்தை ஆமோதித்தார்.

 

தெற்கே, குறிப்பாக திருநவேலியில் ஒரு பெரிய மனிதரை ‘அவர்’ என்று சொல்வதே முன்பெல்லாம் அவமரியாதை. இன்றைய ஃபேஸ்புக் காலத்தில் இதைச் சொன்னால் நம்மை கேலி செய்து அரை நொடியில் மீம்ஸ் தயார் செய்து நமக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பி வைப்பார்கள். இன்றைக்கும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த, பழகிய, தெரிந்த பெரியவர்களைப் பற்றிப் பேச வரும் போது ‘அவர்’ என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை. பெரியவர்கள் எல்லோரும் எனக்கு அவாள்தான். சென்ற நவம்பர் மாதம் புதுவையில் உள்ள கி.ராஜநாராயணன் பாட்டையாவின் இல்லத்துக்குச் சென்று பேசிக் கொண்டிருக்கும் போது, ‘ஒங்களால அலைய முடியாதுன்னு சொன்ன உடனயே ‘அப்பம் நாம கெளம்பிப் போயிருவோம்னு’ இவாள் சொல்லிட்டா’ என்று அருகில் இருந்த கமல்ஹாசன் அவர்களைக் காட்டி பாட்டையாவிடம் சொன்னேன். கி.ரா பாட்டையாவிடம் பேசும் போது இயல்பாக எங்கள் பகுதி பேச்சுதான் எனக்கு வந்தது. மற்றவர்களுக்கு அது அந்நியமாகவும், கேலியாகவும் கூட தோன்றலாம்.

 

மதுரையில் எல்லோரும் ‘அண்ணே’தான். ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதண்ணே’ என்று சொக்கநாதனையே மதுரைக்காரர்கள் ‘அண்ணே’ என்றுதான் விளிப்பார்கள்.

 

தமிழகத்திலேயே சகமனிதர்களை மரியாதையுடன் விளிப்போர் கொங்கு நாட்டுக்காரர்கள்தாம் என்பதில் சந்தேகமில்லை. வளர்ப்பு பிராணிகளைக் கூட அவர்கள் மரியாதையுடன் தான் விளிப்போர்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

 

‘ஏனுங்க டைகர்? வாசல்ல ஏதோ சத்தம் கேக்குதுங்க. போயிக் கொஞ்சம் குலைக்கறீங்களா?’

 

 

தமிழகத்தில் மரியாதை மிகுந்த பகுதி கொங்கு பகுதி என்றால், சகமனிதர்களை மரியாதை இல்லாமல் விளிக்கும் ஊர் சென்னை என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. அதுவும் தென்மாவட்டக்காரர்களுக்கு சென்னையைப் பற்றிய மனச்சித்திரம் அதுதான். சென்னைவாசிகள் சகமனிதரை கொங்கு நாட்டைச் சேர்ந்தவரைக் காட்டிலும் பிரியமும், வாஞ்சையுமாக விளிப்பவர்கள் என்பதே என் புரிதல். குறிப்பாக ஆட்டோ, கார் ஓட்டுநர்களிடம் நான் இதை உணர்ந்திருக்கிறேன்.

 

‘பத்து ரூபாக்குல்லாம் யோசிக்காதே ஸார். ஏறி ஒக்காரு. ஷார்ட் கட்ல பூந்து போயிரலாம். வா ஸார்’!

 

சமீபத்தில் ஒருநாள் கைபேசியிலுள்ள செயலி மூலம் காருக்கு பதிவு செய்து விட்டுக் காத்திருந்த போது ஓட்டுநர் அழைத்தார்.

 

‘ண்ணா! மேப்ல ஒன் அட்ரஸ தப்பாக் காட்டுதுண்ணா! டென் மினிட்ஸா ஒரே எடத்துல சுத்திக்கினே இருக்கேன்’!

 

‘இல்லியே பிரதர்! கரெக்டா டைப் பண்ணியிருக்கேன். நேத்து கூட ஒங்க ஆள் வந்து பிக் அப் பண்ணினாரே! நான் வெளியேதான் வந்து நின்னுக்கிட்டிருக்கேன். பொறுமையா வாங்க’!

 

‘ஐயோ என்னண்ணா இது? நீ ஏண்ணா ரோட்டாண்ட வந்து நிக்கறே? நீ வீட்ல இருண்ணா! நான் எப்படியாவது கண்டிபுடிச்சு வந்து கால் பண்றேன்’.

 

உற்ற உறவின் குரலாக ஒலித்தது, எடுத்த எடுப்பிலேயே ‘ண்ணா’ என்றழைத்துப் பேசிய, முகமறியா அந்த இளைஞனின் வாஞ்சையான வார்த்தைகள்.

 

மாநிலம் தாண்டிய அனுபவத்தில் வாரணாசியில் கேட்க நேரும் தமிழ் விளிசொற்கள் வித்தியாசமானவை. வாரணாசியில் படகு ஓட்டுபவர்கள் , ‘குகா’ வகுப்பைச் சேர்ந்தவர்கள். (குகனொடு ஐவரானோம்) வாரணாசியிலுள்ள பிரமோத், ‘குகா’ வகுப்பைச் சேர்ந்தவர். பிரமோத்துக்கு தமிழ் பேச வரும். வட இந்திய ஊடகவியலாளர்களைப் போலவே பிரமோத்துக்கும் தமிழ் என்றாலே ‘பிராமண பாஷை’தான். தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா ஆண்களையும் ‘மாமா’ என்றே விளிப்பார், பிரமோத். வயது வித்தியாசமில்லாமல் எல்லா தமிழ்நாட்டு பெண்களும் பிரமோத்துக்கு ‘மாமி’தான். வாரணாசி ரயில் நிலையத்தில் என்னை வரவேற்ற பிரமோத், ‘வாங்கோ மாமா!’ என்றபடி கையிலிருந்த பெட்டியை வாங்கியபடி, ‘என்ன மாமி டல்லா இருக்கா? காஃபி வாங்கிக் குடுக்கலயா, மாமா?’ என்று சகபய ணியான யாரோ ஒரு மாமியைக் காண்பித்துக் கேட்டார். பிரமோத்துக்குத் தெரிந்த தமிழ் பாஷை புரியாத காரணத்தால், என் மூதாதையர்களை வடநாட்டு பாஷையில் ஏசாமல் விநோதப் புன்சிரிப்புடன் கடந்து சென்றார், அந்த ‘யாரோ’ மாமி.

 

ஆஷா

 

சில மாதங்களுக்கு முன் தெரியாத எண்ணிலிருந்து என் கைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. எண்ணைப் பார்த்தவுடனேயே ஏதோ வெளிநாட்டு எண் என்பது புரிந்தது. தயக்கத்துடன் எடுத்து, ‘ஹலோ’ என்றேன்.

 

‘எந்தா ஆஷானே! சுகந்தன்னே! இவிட ஆஷாவானு!’

 

‘பாபநாசம்’ திரைப்படத்தில் ஐ ஜி கீதா பிரபாகராக நடித்த ஆஷா சரத்.

 

சுதாரித்துக் கொண்டு, ‘ஆங் . . . ஆங் . . . ஆஷா! சௌக்கியமா?’ என்றேன்.

 

‘என்ன சுகா ஸார்! எந்து குழப்பம்? நீங்க என்னை மறந்துட்டியா?’ என்று ஆஷா கேட்டதை மரியாதையான விளித்தலில் வைக்கவா, தோழமையாக எடுத்துக் கொள்ளவா என்று புரியவில்லை.