நான்காவது புத்தகம் . . .

image‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை.  ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.

அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’.
பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல)

புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’.
அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’.

மூங்கில் மூச்சு வாசகர்கள் . . .

 

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஃபோன் வந்தது.

‘சுகாவாவே?’

எடுத்த எடுப்பிலேயே இப்படித்தான் கேட்டது எதிர்முனைக்குரல்.

தயக்கத்துடன் ‘ஆமாங்க’ என்றேன்.

‘என்னவே! எந்த ஊர்ல கேட்டாலும் மூங்கில் மூச்சு இல்லெங்கான்? மெட்ராஸ்ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும்?’

இடைவிடாமல் பேசித் தள்ளிய அந்த மனிதர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொன்னதன் மூலம் அவர் ஒரு ஓய்வு பெற்ற தாசில்தார் என்பதாக அறிந்து கொண்டேன். புத்தகம் எழுதியவனுக்கு அந்தப் புத்தகத்தின் விற்பனை மற்றும் பிரதி குறித்த விவரங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் பேசிய அந்தப் பெரிய மனிதருக்கு என் பதிலில் திருப்தி ஏற்படவில்லை.

‘என்னவே தெரியாதுங்கேரு? புஸ்தகம் எளுதினது நீருதானே?’

‘அண்ணாச்சி! மூங்கில் மூச்சு தொடர் எளுதினது நான். புஸ்தகம் போட்டது விகடன். அவங்கக்கிட்ட வேணா கேட்டு சொல்லுதென்’.

இந்த பதிலுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையிடையே சரளமாக ‘சிலம்பரசரையும், அநிருத் ரவிச்சந்திரரையும்’ சிக்கலுக்குள்ளாக்கின வார்த்தையைப் போட்டுப் பொரிந்துத் தள்ளினார்.

‘மூங்கில் மூச்சுக்குப் பொறவு நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை ரெண்டு மூணு எளுதுனேரு! இப்பம் அதயும் காங்கலயெ! அதுவும் போன மட்டம் வெறும் சுகாவா நம்ம ராயல் டாக்கீஸப் பத்தி எளுதுன கததான் கடைசி’.

‘அண்ணாச்சி! நட்சத்திர எழுத்தாளர்னு போட்டதும், வெறும் சுகான்னு போட்டதும் நான் இல்ல. இல்லென்னாலும் நான் எப்பமும் வெறும் சுகாதான்’.

தாசில்தார் அண்ணாச்சிக்கு சிரிக்கத் தெரிந்திருந்தது. லேசாகச் சிரித்தபடி, ‘சரி சரி. சீக்கிரம் விகடன்ல கேட்டு சொல்லும். என் மச்சினன் வேற புஸ்தகம் கேக்கான்’.

 

moongilmoochu

 

மேற்படி உரையாடல் ஒரு சின்ன உதாரணம்தான். மூங்கில் மூச்சு எழுதி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது குறித்து என்னிடம் பேசுபவர்களை இன்னும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதி, மறந்த பல விஷயங்களை அவர்கள் சொல்லிக் காட்டும் போதுதான் எனக்கே நினைவு வருகிறது. மறக்காமல் எல்லோரும் என்னிடம் நண்பன் குஞ்சுவை விசாரிக்காமல் இருப்பதில்லை. மூங்கில் மூச்சின் தீவிர வாசகரான கிரேஸி மோகன் சந்திக்கும் போதெல்லாம் குஞ்சுவைப் பற்றி விசாரிப்பார். சமீபத்தில் கமல் அண்ணாச்சியின் அலுவலகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என்னா கேரக்டர் சுகா, உங்க ஃபிரெண்ட் குஞ்சு! ஒரு நாள் அவர மீட் பண்ணனும்’ என்றார். ரொம்ப நாட்களாக சொல்கிறாரே என்று குஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி, இருவரையும் பேச வைத்தேன் . முதலிலேயே கேட்டால் குஞ்சு ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் எதுவுமே சொல்லாமல், ‘ஒரு நிமிஷம் இரு’ என்று சொல்லிவிட்டு,கிரேஸி மோகனிடம் கொடுத்தேன். அருகில் இருந்த எழுத்தாளர் இரா.முருகனும் குஞ்சுவிடம் பேசினார். பேசி முடித்த பின் குஞ்சுவிடம் சொன்னேன்.

‘பாத்தியா! இவங்கல்லாம் ரொம்ப நல்ல டைப்பு!’

‘பாபநாசத்துல நடிச்ச ஆஷா ஷரத்து நல்ல டைப்பாலெ?’ குஞ்சுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘அப்புறம் பேசுதென்’ என்று ஃபோனை வைத்தேன்.

மூங்கில் மூச்சு வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் குஞ்சுவின் மனைவி உறவினர்களுடன் நாகர்கோயிலில் ஒரு வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அங்கிருந்த ஒரு வயதான மாமி, ஆனந்த விகடன் வாசகி. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது குஞ்சுவின் மனைவிக்கு திருநெல்வேலி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த மாமி, ‘விகடன்ல மூங்கில் மூச்சு படிக்கிறியோ?’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ! அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி! இவ ஆம்படையான் தான் குஞ்சு. அந்த சுகாவும், இவ ஆம்படையானும் சைல்ட்ஹுட் ஃபிரெண்ட்ஸ்’ என்றிருக்கிறார்கள். தனது உணர்ச்சிகளைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ள முயலாமல், ‘இண்டெரெஸ்ட்டிங் ஃபெல்லோஸ். ரெண்டு பேரயும் நான் ரொம்ப விஜாரிச்சேன்னு சொல்லுடியம்மா’ என்றிருக்கிறார். மேற்படி சம்பவத்தை என்னிடம் சொன்ன குஞ்சுவின் மனைவி பானு, ‘நல்ல வேள. பக்கத்துல இருந்த அக்கா சட்டுன்னு நாந்தான் குஞ்சு ஒய்ஃப்ன்னு சொல்லிட்டா. இல்லென்னா அந்த மாமி இன்னும் என்னெல்லாம் சொல்லிருப்பாளோ’ என்றாள்.

மூங்கில் மூச்சு பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரையின் தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் நேரம். கடைசிப் பாடலின் போது நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சிலர் மைதானத்தை விட்டு வெளியே எழுந்து வரத் துவங்கினர். வழியில் நின்று அப்படி கடந்து சென்றவர்களில்  இரண்டு இளைஞர்களும், அவர்களது தாயும் என்னைப் பார்த்ததும் அருகில் வந்தனர். இளைஞர்களில் ஒருவர், ‘நீங்க சுகா அண்ணந்தானே?’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா! எங்களுக்கு மாஞ்சோலை பாத்துக்கோ! எங்க வீட்ல பைபிள் போக மூங்கில் மூச்சு புஸ்தகமும் இருக்கும். தம்பி ஏதோ ஒரு கல்யாண வீட்ல கொண்டு போயி உன் புஸ்தகத்தக் குடுத்துட்டான். இன்னொரு புஸ்தகம் நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிட்டென். எப்பிடி புஸ்தகம்யா, அது! என்னமா எளுதிட்டே!’ என்றபடி என் கன்னத்தைப் பிடித்து முத்தினார், அந்தத் தாய். சட்டென்று நிலைகுலைந்துப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தாயின் மூத்த மகனான ராபர்ட் சந்திரகுமார் ஒரு வழக்கறிஞர் என்பதையும், அவரும் எழுதுபவர் என்பதையும் அதன்பின்னர் அறிந்து கொண்டேன்.‘எழுதப்படாத சட்டங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் என்னை சந்தித்த முதல் கணத்திலேயே ‘அண்ணே’ என்று உரிமையுடன் அழைக்க வைத்த அன்பையும், தன் மகன்களில் ஒருவனாகவே என்னைப் பார்த்த அவரது தாயாரின் பாசத்தையும் ‘மூங்கில் மூச்சு’ தந்தது.

புத்தகம் படிப்பவரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதென்றும், கணினி, ஐ பாட், கைபேசி திரையில் வாசிப்போர்தான் எதிர்கால வாசகர்கள் என்றும் சில படித்த ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசு நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள், பத்திரிக்கைகள் படிப்பவர்கள் இன்னும் படித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு வருகிறேன். ‘பாபநாசம்’ திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றின் சில பகுதிகளை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குற்றாலத்திலிருந்து படக்குழுவினர் அனைவரும் கார்களில் கிளம்பி நான்குநேரிக்குச் சென்றோம். நண்பர் ஜெயமோகனும், நானும் சற்று முன்னதாகவே கிளம்பி வானமாமலை பெருமாள் கோயில் வாசலில் இறங்கினோம்.

“புல்லின் வாய் பிளந்தாய் மறுத்து இடை போயினாய்

எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே

தெள்ளியார் திரு நான்மறைகள் வள்ளலார்மலி தன சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய்

அருளாய் உய்யமாறு எனக்கே’ என நம்மாழ்வார் பாடிய ஶ்ரீ வானமாமலைப் பெருமாளைப் பார்க்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். பிற்பகல் நேரமாதலால் நடை சாத்தியிருந்தது. உள் பிரகாரத்தில்தான் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனும், அவரது உதவியாளர்களும் சட்டையைக் கிழற்றி விட்டு லைட்டிங் செய்யத் துவங்கினர்.

‘ஏன் மோகன்! இப்போதைக்கு நடை திறக்கப் போறதில்ல. நாம எதுக்கு தேவையில்லாம சட்டயக் கெளத்திக்கிட்டு! அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா?’

ஜெயமோகனும், நானும் அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கத் துவங்கினோம். இதற்குள் பக்கத்து ஊர்களிலிருந்து ஜனங்கள் கமலஹாசனைப் பார்க்கக் கூடத் துவங்கினர். அவசர அவசரமாக  தேவர் பேரவை பேனர்கள் கட்டப்பட்டு, ‘விருமாண்டியே வருக’ என்று எழுதப்பட்டது. இன்னொரு பக்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் நவரச நாயகன் எம். ஆர். கார்த்திக் படம் போட்ட பேனர்களுடன் , கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் சாயலுள்ள ஓர் உருவம் வரைந்து, அதில் மீசை பொருத்தி ‘தேவர் மகனே வருக வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. திமு திமுவென சில இளைஞர்கள் வானமாமலை பெருமாள் கோயிலின் மேற்கூரை வழியாக ஏறி கோயிலுக்குள் குதித்தனர். அக்ரஹாரத்து வீட்டு வாசல்களில் சில பெண்கள் முகம் கழுவி, கோகுல் சேண்டல் பௌடர் போட்டு, நெற்றியில் திலகமிட்டு, அழகாக உடுத்தி, தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நெற்றியில் திருநாமமிட்ட சில போஷாக்கான மாமாக்கள், ‘சாயங்கால பூஜை நேரத்துல ஷூட்டிங்குக்கு பெர்மிஷன் குடுத்தது யாருன்னுத் தெரியல! அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா?’ என்று ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தனர். சொல்வனம் மின்னிதழில் முன்பு நான் எழுதிய ‘நட்சத்திரம் பார்த்தல்’ கட்டுரை நினைவுக்கு வந்து ஜெயமோகனிடம் சொன்னேன். சிரித்தபடியே ‘ஞாபகம் இருக்கு’ என்றார்.

ஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் வாசலுக்கு வந்தோம். உதவி இயக்குநர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கோயிலுக்கு வெளியே காட்டப்படும் காட்சியின் பின்னணியில் நடக்க வேண்டிய ‘அட்மாஸ்ஃபியர்’ செயல்களை கவனிக்கவும் ஆரம்பித்தனர். நடிக, நடிகையர் இன்னும் வந்து சேரவில்லை. நானும், ஜெயமோகனும் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். தலையிலும், முகத்திலும், மார்பிலும் நரைத்த முடியுடன், தோளில் சுருட்டிப் போடப்பட்ட அழுக்குத் துண்டும், கட்டம் போட்ட சாரமும் உடுத்திய ஒரு கிராமத்து மனிதர் எங்கள் அருகில் வந்து வணங்கினார். நானும், ஜெயமோகனும் பதிலுக்கு வணங்கினோம். கூப்பிய கைகளை இறக்காமல் அந்த மனிதர் என்னிடத்தில், ‘மூங்கில் மூச்சின் வாசத்தை எங்களுக்கும் வழங்கி, எல்லா ஊர்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு, பதில் எதிர்பாராமல் திரும்பிச் சென்றார். ஒரு உணர்ச்சியுமில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.’அடப்பாவி! மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு!’ என்றார், ஜெயமோகன்.

 

12659794_118497291872777_924633615_n-crop

 

‘ஆங்! ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவாட்டி பொஸிஷன் வாங்க. ஒரு ரிஹர்ஸல் பாத்திரலாம்’. அசோஸியேட் டைரக்டர் சுதீஷ் ராமச்சந்திரனின் குரல் மைக் மூலம் ஒலித்து, கவனம் கலைத்தது. கோயிலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து நாறகாலிகளை இறக்கி தம் தோளில் சுமந்தபடி சென்று கொண்டிருந்தார், ஜூனியர் ஆர்ட்டிஸ்களோடு ஒருவராக ‘மூங்கில் மூச்சு’ வாசகர்.

 

ராயல் டாக்கீஸ் . . .

காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால் காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதிக்கு, இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான்.

தம்பியின் உண்மையான பெயரான கணபதிசுப்பிரமணியம் என்பது அவனது சர்ட்டிஃபிக்கேட்டில் மட்டும்தான் உள்ளது. சுந்தரம் ஸார்வாள் சொல்வார். ‘ஒண்ணு கணவதின்னு வச்சிருக்கணும். இல்லென்னா சுப்ரமணின்னு வச்சிருக்கணும். அதென்னடே ஒருத்தனுக்கு ரெண்டு பேரு?’ வீட்டிலும் சரி. நண்பர்கள் மத்தியிலும் கணபதிசுப்பிரமணியம் எப்போதும் தம்பிதான். தாத்தா பெயரைச் சொல்லக் கூடாதென்று ஆச்சிதான் ‘தம்பி’ என்று விளிக்கத் தொடங்கினாள். ஆச்சி ஒன்றைச் சொல்லிவிட்டால் அதுதான் சட்டம். யாரும் அதை மீற மாட்டார்கள். ‘அதென்ன சாவி? தொறவோல்னு சொல்ல மாட்டேளோ?’ என்பாள். ‘ஆமா! ஒலகமே சாவின்னுதான் சொல்லுது. ஒங்க அம்மைக்கு மட்டும் எங்கெருந்துதான் வார்த்த மொளைக்கோ?’ லோகு பெரியம்மை முனகுவாள். ‘ஏட்டி! திறவுகோல்ங்கறது சுத்தமான தமிள்வார்த்த. அதச் சொல்றதுக்கு ஒங்களுக்குல்லாம் வலிக்கி. என்னா?’. சண்முகப் பெரியப்பா ஏசுவார்.

லோகநாயகியும், சண்முகமும் தம்பிக்கு பெரியம்மை, பெரியப்பா என்பது வெறும் முறைக்குத்தான். ஆனால் தம்பிக்கு அவர்கள்தான் அம்மையும், அப்பாவும். தம்பி அவர்களை அழைப்பதும் அப்படித்தான். லோகுவை அம்மா என்றழைப்பவன், சண்முகத்தை சண்முகப்பா என்பான். தம்பியைப் பெற்ற ஒருசில தினங்களிலேயே அவன் அம்மை போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏற்கனவே கொஞ்சம் அப்படி இப்படி இருந்த தம்பியின் அப்பா, சொத்தைப் பிரித்துத் தரச் சொல்லி சண்டை போட்டு வாங்கிக் கொண்டு யாரோ ஒரு பெண்ணுடன் எங்கோ காணாமலேயே போனார். அதற்குப் பிறகு தம்பியை வளர்த்தது, ஆச்சியும், லோகநாயகியும், சண்முகமும்தான்.

‘இப்பதாம்ல மதுரயத் தாண்டுதான்’. தம்பியின் வாட்ஸ் அப் மெஸேஜைப் பார்த்துவிட்டு காசி லேசாகச் சிரித்துக் கொண்டான். ஏற்கனவே டிரெயின் இரண்டுமணிநேரம் தாமதம் என்னும் அறிவிப்பைக் கேட்டிருந்தான், காசி. வீட்டுக்குப் போய்விட்டு வருவானேன் என்று ஸ்டேஷனிலேயே காத்திருந்தான். தம்பி திருநெல்வேலியை விட்டுப் போய் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆச்சி இறந்ததற்குக் கூட வரவில்லை. அந்த சமயத்தில் தம்பி எந்த ஊரில் இருக்கிறான் என்றே தெரியவில்லை. காசிதான் கூடமாட நின்றுகொண்டு எல்லா வேலைகளையும் செய்தான். ‘இந்த வீட்ல நீ வேற, அவன் வேறயா? இந்தா பிடி’ என்று வெளித் தெப்பக்குளத்தில் ஈரவேட்டியுடன் நின்று கொண்டிருந்த சண்முகப் பெரியப்பா, காசியின் கைகளில் நெய்ப்பந்தத்தைக் கொடுத்தார். ‘முங்கி எந்திடே! திருநாறு விட்டுக்கோ. அப்புறமா அவன் கைல பந்தத்தக் குடுக்கலாம் சம்முவம்’ என்றார், டெய்லர் மகாலிங்கம் மாமா. ‘ஐயா அரசேன்னு வளத்த பய இல்லாம அவளக் கொண்டாந்து எரிக்கோம். அவ நெஞ்சு வேகும்ன்னா நெனைக்கெ? மூதிக்கு அப்படியாய்யா ஊரும், மனுசாளும் அத்துப் போச்சு?’ கருப்பந்துறையில் வைத்து பேச்சியாபிள்ளை தாத்தா சொல்லும் போது, காசிக்கு அழுகையுடன், தம்பியின் மேல் கோபமும் வந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. மனசு முழுக்க தம்பியைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும்தான்.

ரயிலிலிருந்து இறங்கும் போது தம்பி வேறு ஆளாகத் தெரிந்தான். ஏற்றி வாரப்பட்ட தலைமுடி, பிடரி முழுக்க அடர்ந்துத் தவழ்ந்தது. தடித்த ஃபிரேமில் மூக்குக் கண்ணாடி. கையில் ஒரு பெட்டி, தோளில் ஒரு பை. அவ்வளவுதான். காசியைப் பார்த்தவுடன் லேசாக ஒரு குறுஞ்சிரிப்பு மட்டுமே தம்பியின் முகத்தில் காண முடிந்தது. கண்களில் நீர் துளிர்க்க காசி, தம்பியைக் கட்டிக் கொண்டான். ‘பையக் குடு’. வாங்கிக் கொண்டு வேகவேகமாக நடக்கத்தொடங்கினான். காசியின் வேகத்துக்கு தம்பியால் ஓடித்தான் வர வேண்டியிருந்தது. காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யவும் காசி சொன்னான். ‘உன்னயப் பாத்தா கல்கத்தால இருந்து வாரவன் மாரியே தெரியல’.

‘ஏம்ல?’

‘பொறவு?என்னமோ சஷ்டிக்கு திருச்செந்தூர்க்கு போயிட்டு வாரவன் மாரி ஒரு பொட்டி, பையோட வந்து எறங்குதெ!’

பதிலேதும் சொல்லாமல் சிரித்த தம்பி, ரோட்டைப் பார்த்தபடி ‘தானா மூனா ரோடே மாறிட்டெல!’ என்றான்.

பதில் சொல்வதைத் தவிர்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காசி மேற்கொண்டு ஏதும் கேட்காமல் வண்டியை ஓட்டினான். ‘நெல்லை லாட்ஜுல்லாம் மாறவே இல்ல’. மேம்பாலத்தில் போகும் போது தம்பி சொன்னான். ‘சென்ட்ரல்ல இப்பம்லாம் பளைய படம்தானா? இந்த கிரவுண்ட்ல தட்டான் புடிப்பமே! விளாமரம் நிக்கால? வாசல்ல சவ்வுமிட்டாய் வித்த ஆத்தால்லாம் இப்பம் செத்திருப்பாள்லா?’ சாஃப்டர் ஸ்கூலைத் தாண்டும் போது வரிசையாகக் கேட்டுக் கொண்டு வந்தான் தம்பி. பதிலேதுமே காசி சொல்லவில்லையென்றாலும், அதற்காகக் காத்திருக்காமல் அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தாவிக் கொண்டிருந்தான், தம்பி. ‘நல்ல வேளடே. ஆர்ச்ச விட்டு வச்சிருக்கிய. எங்க ரோட்ட அகலப்படுத்த இடிச்சுத் தள்ளியிருப்பேளோன்னு நெனச்சேன்’.
திருநெல்வேலி டவுணின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஆர்ச்சைக் கடக்கும் போது, தம்பியின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு. அதற்குப் பிறகு தெற்குப்புதுத் தெரு வரும் வரையிலும் தம்பி ஏதும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை.

வாசல்கதவு திறந்தே கிடந்தது. தம்பியைப் பார்த்தறியாத நாட்டுநாய் ஒன்று கட்டில் கிடந்தது. தம்பியைப் பார்த்ததும் கழுத்துச் சங்கிலி இறுக, வாஞ்சையுடன் வாலாட்டிச் சிரித்து வரவேற்றது. அதனருகில் நின்று அதன் தலையை சில நொடிகள் தடவிக் கொடுத்தான் தம்பி. கையில் பையுடன் நின்று கொண்டிருந்த காசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

‘மூதிக்கு இன்னும் நாய்க்கோட்டி போகல’.

பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சின்னப்பெண் வாசலுக்கு ஓடி வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன் ஒரு முழி முழித்து மீண்டும் வீட்டுக்குள் ஓட எத்தனித்தவளைத் தடுத்து நிறுத்தினான், காசி.

‘ஏட்டி! இதான் தம்பி மாமா’.

கண்களை அகல விரித்துப் பார்த்த அந்தப் பெண், ‘ஆச்சி! தம்பி மாமா வந்துட்டாங்க’ என்றபடி உள்ளே ஓடினாள்.

புருவம் தூக்கிய தம்பியிடம் ‘சுந்தரி மக’ என்றான், காசி. ஒரு கணம் தம்பியின் கண்களில் சின்னதாக ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது. இதற்குள் சண்முகப் பெரியப்பாவின் மகள் சுந்தரி வாசலுக்கு வந்தாள்.

‘வாண்ணே! சும்மா இருக்கியா?’

கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். சுந்தரியின் கைகள் குளிர்ச்சியாக இருந்தது.

‘ஏம்ணே ஒன் கை சுடுது?’ என்றாள், சுந்தரி.

பின்னால் தொடர்ந்த காசி, ‘ஒங்கண்ணனுக்குக் கை மட்டுமா சுடும்?’ என்றான்.

தம்பியிடம் அதற்கும் பதிலில்லை.

‘அப்பா பொறவாசல்ல இருக்கா’ என்றாள், சுந்தரி.

பின்வாசலில் மருதாணி மரத்துக்கருகே நாற்காலி போட்டு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், சண்முகப்பா. ‘எப்பா! தம்பியண்ணன்’ என்ற சுந்தரியின் குரல் கேட்டு பேப்பரை விலக்கிய சண்முகப்பாவின் தொடைகளைத் தொட்டபடி அவர் காலருகில் அமர்ந்தான், தம்பி. இருவர் தொண்டையும் சட்டென்று வறண்டது. பொங்கிய கண்ணீரை மறைக்கும் விதமாக இருமியபடி, ‘ஏட்டி! தொண்ட பொகயுதுல்லா. தண்ணி கேட்டாத்தான் கொண்டுட்டு வருவியோ?’ என்று சுந்தரியைப் பார்த்து ஏசினார். ‘நீ சாப்பிட்டியா?’. எதிரே படிக்கட்டில் உட்கார்ந்து கொண்ட காசியைப் பார்த்துக் கேட்டார். இதற்குள் தன் ஆச்சி லோகநாயகியின் கைகளைப் பிடித்து இழுத்தபடி பின்வாசலுக்கு வந்து சேர்ந்தாள், சுந்தரியின் மகள்.

வந்ததும், வராததுமாக தன் கணவரின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்த தம்பியின் அருகில் வந்து குனிந்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் லோகநாயகி.

‘வளி தெரிஞ்சுட்டோல ஒனக்கு? அம்ம இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தியோ? எறப்பாளி நாயே. என் சீவனப் புடிச்சுக்கிட்டாக்கும் இத்தன வருசம் இருந்தேன்’.

உடல் நடுங்க தம்பியின் அருகில் தரையில் கையை ஊன்றி உட்கார்ந்தவள், ‘என்னப் பெத்த ஐயா’ என்று தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறலானாள். இனி மறைக்க ஏதுமில்லை என்பது போல் சண்முகப்பாவும் பெருங்குரல் எடுத்து அழுதார். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்த சுந்தரியைத் தடுத்தான், காசி. ‘ஒங்கப்பாக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தண்ணி தவிக்காது’.

royal talkies

ooOoo

மறுநாள் காலை தூங்கி தம்பி எழுந்திருக்கும் போது நன்றாக விடிந்திருந்தது. மச்சு ரூம் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தட்டட்டியில் லோகம்மை கூழ்வற்றல் ஊற்றிக் கொண்டிருந்தாள். உடன் சுந்தரியும், அவள் மகளும்.

‘நீ இன்னும் இத விடலயா?’

ஜன்னலுக்குள்ளிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த லோகம்மை ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். காலையிலேயே குளித்திருந்த முகத்தில் துளிர்த்திருந்த புது வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

‘ஏன் கேக்க மாட்டே? நாங்கல்லாம் கேட்டா சலிச்சுக்கிடுவா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போகும்போதும் மணி ஐயர் கடைலதான் வாங்கிக் குடுத்தனுப்புவா. இப்பம் மகன் வந்திருக்காம்லா! அதான் இந்தத் தாளிப்பு’.

சுந்தரியின் செல்லக் கோபத்தை சிரிப்பால் கடந்து சென்றபடி தன் வேலையில் மும்முரமாக இருந்தாள், லோகம்மை. இதற்குள் கீழிருந்து சண்முகப்பாவின் குரல் கேட்டது.

‘ஏட்டி ஒங்கண்ணன் வாரானா இல்லயா? அவனுக்காகத்தான் இன்னும் ரெண்டாம் காப்பி குடிக்காம இருக்கேன்’.

சண்முகப்பாவின் தலைமுடி நரைத்ததைப் போல, லோகம்மையின் முகமும், உடலும் தளர்ந்ததைப் போல, திருநவேலியின் தோற்றத்திலும் சுருக்கங்களையும், மாற்றங்களையும் கண்டான், தம்பி. சிறுவயதில் சைக்கிளில் சுற்றிய பகுதிகளில் காசியுடன் நடந்தே சென்றான். நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்து வாசலில் வீசும் காற்றை நின்று வாங்கிக் கொண்டான்.

‘இந்த காத்து மாறல. வாட கூட அப்படியேதான் அடிக்கி’.

பக்தியே இல்லாமல் கோயிலைச் சுற்றுகிறான் என்பது காசிக்குப் புரிந்தது. நடையில் அப்படி ஓர் ஆவேசம். சந்நிதிகளில் திருநீறு, குங்குமம் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளவில்லை. காந்திமதி யானையிடம் மட்டும் சிறிது நேரம் செலவழித்தான். கோயிலைவிட்டு வெளியே வந்த பிறகு சாந்தமானான். தேரடியைத் திரும்பிப் பார்க்கும் போது, காசி பதற்றமடைந்தான்.

‘ராயல் தியேட்டர் பக்கம் போக வேண்டாமா? அப்படியே ஆரெம்கேவி, லாலா சத்திரமுக்கு, தொண்டர் சன்னதில்லாம் போலாம்லா?’

‘ஏன்? தேரடிப்பக்கம் அவங்க யாரும் இருக்காங்களா? அதான் எல்லாரும் போயாச்சே! அப்புறம் என்ன? சும்மா ஒரு நடை நடந்துட்டு போவோம்.’

இப்படித்தான் தேரடிப் பக்கமே கிடையாகக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு காசியும், தம்பியும் வருவார்கள். ஜோதீஸ் காப்பிக்கடையிலிருந்துப் பார்த்தால் பவானியின் வீடு தெரியும்.

பாளையங்கோட்டையில் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக இருக்கும் பவானியின் அப்பா, விடிந்து போனால், அடைந்துதான் வருவார். வீட்டுக்கு அருகில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும், மகளும் ராயல் தியேட்டரில்தான் சினிமா பார்ப்பார்கள். அநேகமாக கீழரதவீதி, வடக்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, சுவாமி சன்னதிகளில் வசிப்பவர்கள் வாராவாரம் ராயல் தியேட்டரில் சினிமா பார்ப்பது வழக்கம்.

’தில்லானா மோகனாம்பாள்’ பாக்காத படமாவே? அதான் சிவாஜிக்கு ஒரு மட்டம், பாலையாவுக்கு ஒரு மட்டம், நாகேசுக்கு ஒரு மட்டம், பத்மினிக்கு அஞ்சாறு மட்டம்னு வளச்சு வளச்சுப் பாத்தாச்சுல்லா! என்னமோ புதுப்படம் மாரி செகண்ட் ஷோக்குப் போவோமான்னுக் கேக்கேரு?’

‘வே! ராயல்ல போட்டிருக்கான். பாக்காம இருக்க முடியுமா? வீட்ல பாத்த மாரில்லா இருக்கும். சும்மா சளம்பாதீரும். நலந்தானான்னு நம்மள பாத்து கேக்கற மாரியேல்லா, புருவத்த வளச்சுப் பாடுவா. வாரும், போவோம்’. பட்டுப்பிள்ளை அண்ணாச்சி சொல்வார்.

மாலைநேரக் காட்சிக்கு பவானியும், அவள் தாயும் கிளம்பும்போது தம்பி படபடப்புடன் காத்திருப்பான். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் காசியை இழுத்துக் கொண்டு ராயல் தியேட்டருக்குச் செல்வான். மற்ற நேரங்களில் சோஃபா டிக்கெட்டில் படம் பார்ப்பவன், பவானி வந்தால் மட்டும் காசியை விட்டு பெஞ்ச் டிக்கெட்தான் எடுக்கச் சொல்லுவான். காரணம், பவானி தன் தாயுடன் பெஞ்ச் டிக்கெட்டில்தான் படம் பார்ப்பாள். ’அவ ஒருபக்கம் உக்காந்திருக்கோம். நாம எங்கயோ உக்காந்திருக்கோம். இதுல என்ன கெடைக்கோ, தெரியல. கேட்டா நீயும், அவளும் ஒண்ணா படம் பாத்ததா சொல்லுவே!’

இப்படி ஒன்றிரண்டு அல்ல. அநேகமாக எல்லா வார இறுதிகளிலும் ராயல் தியேட்டரில் பவானியுடன் படம் பார்ப்பான், தம்பி. இதுபோக தினமுமவள் டியூஷனுக்குக் கிளம்பும்வரைக்கும் காத்திருந்து அவளுடனேயே செல்வான். மீனாட்சிபுரத்தில் எஸ்.ஆர்.கே ஸார்வாளிடம்தான் பவானியும், தம்பியும், காசியும் மேத்ஸ் டியூஷன் படித்தார்கள். டியூஷன் தொடங்கும் முன், முடிந்த பின் இரண்டொரு வார்த்தைகள் தம்பியும், பவானியும் பேசிக் கொள்வார்கள்.

‘களுத்துல உத்திராச்சக் கொட்ட எதுக்கு? அத களட்டு. கூட படிக்கிற பிள்ளைள்லாம் அதச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கி’.

‘எங்காச்சி போட்டு விட்டது. களட்டுனா ரொம்ப வருத்தப்படுவா. அவட்ட வேணா சொல்லிட்டு சீக்கிரமே கெளட்டிருதென்’.

‘வேண்டாம்பா. என்னமாது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப்போது’.

ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகத்தான் செய்தது. அத்தனை புத்திசாலியான, படிப்பில் சிறந்து விளங்கிய பெண் ஏன் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் என்பது யாருக்குமே புரியாமல் போனது. தச்சநல்லூர் கணேசன்தான் அந்தக் கேமராவைக் கொண்டு வந்தான்.

‘ஃபாரின் மக்கா. எங்க அத்தான்குள்ளது’.

இரண்டு ரோல்களை எடுத்துத் தள்ளினார்கள். தனியாக எடுத்துக் கொள்ள சம்மதிக்காத பவானி, குரூப் ஃபோட்டோவில் மட்டும் வந்து நின்று கொண்டாள். முன்வரிசையில் பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் பையன்கள் நின்றபடி படம் எடுத்துக் கொண்டார்கள். சரியாக பவானிக்குப் பின்னால் தம்பி. பிரிண்ட் போட்டு காப்பி வாங்கிக் கொள்ள பவானியின் தாய் பணம் தர மறுத்தாள்.

‘டியூஷன் படிக்கப் போன எடத்துல என்னத்துக்குட்டி போட்டொவும், கீட்டொவும்? மாசாமாசம் பீஸுக்கே ஒங்கப்பா மூக்கால அளுதுக்கிட்டெ குடுக்காக’.

தம்பிதான் பவானிக்கும் சேர்த்து பிரிண்ட் போட்டு ஒரு காப்பியை அவள் கையில் கொடுத்தான். வற்புறுத்திதான் திணிக்க வேண்டியிருந்தது.

‘எங்கம்மை ஏசுவா.’

‘நீ என்னத்துக்குக் காமிக்கெங்கென்?’

இத்தனைக்கும் நோட்டுப்புத்தகத்தில் மறைத்துதான் வைத்திருந்தாள். அப்படியே வைத்திருந்தால் கூட ஒன்றும் பிரச்சனை ஆகியிருக்காது. ஃபோட்டோவில் தானும், தம்பியும் இருக்கும் பகுதியை மட்டும் கத்தரித்து, தனியாக வைத்திருந்தது, பவானியின் தாய் கண்களில் சிக்கியது. படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன் கணவனுக்கு பயந்த பவானியின் தாய் உக்கிரமாகிப் போனாள். ஆத்திரமும், கோபமுமாக வசவைத் தொடங்கியவளிடம் ஒருகட்டத்தில் பவானி எதிர்க்குரல் எழுப்ப, அவமானத்தில் அடிக்கத் தொடங்கி, பின் அழுகையும் சேர்ந்து கொண்டு, மனம் பிசகி, கையில் மண்ணெண்ணெய்கேனைத் தூக்கினாள்.

‘ஒங்கப்பன் வந்து என்னைக் கொல்றதுக்குள்ள நான் கொளுத்திக்கிட்டுப் போயிருதேன்’.

பாய்ந்துப் பிடுங்கிய பவானி தாயின் கால்களில் விழுந்து, ‘நீ பயப்படுத மாரி என்னமும் நடக்காதும்மா. என்னய நம்பு’ என்று அழ, ஓரளவு நிலைமை சமாதானமானது. காலையில் பால் ஊற்ற வருகிற கோவிந்தன் சொல்லித்தான் தம்பியின் வீட்டுக்கு விவரம் தெரிய வந்தது.

’கம்பவுண்டரு ராயல்ல செகண்ட் சோ முடிஞ்சு வந்திருக்காரு. உள்ள இருந்து பொகஞ்சிருக்கு. அதுக்குள்ள சாமிசன்னதி பட்டர்மாருங்க எல்லாரும் ஓடி வந்து கதவ ஒடச்சிருக்காங்க. ரெண்டு பேரும் கரிக்கட்டயாக் கெடந்திருக்காங்க. யாரு அம்மை, யாரு மகன்னே தெரியலயாம்’.

‘யாருடே அது?’ ஜோதீஸ் காபிக்கடை ஆனந்தம் மாமா கேட்டார். காசியுடன் வந்த தம்பி, அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி, ‘என்ன மாமா? சும்மா இருக்கேளா?’ என்று கேட்கவும், ‘ஏ தம்பில்லா! எப்பிடி இருக்கே மாப்ளே’. வந்து அணைத்துக் கொண்டார். ‘எத்தன வருசம் ஆச்சு மாப்ளே ஒன்னப் பாத்து. காசி கூட முன்னமாரி வரமாட்டங்கான். காப்பி குடிக்கியா?’

தேரடிப் பக்கம் பவானி வீடு இருந்த இடத்தில் இப்போது வேறேதோ கடை ஒன்று நின்றது. சலனமேயில்லாமல் அந்தப் புதியக் கட்டடத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான், தம்பி.

ஆண்டிநாடார் கடையைத் தாண்டும் வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராயல் தியேட்டர் பக்கம் நிமிர்ந்துப் பார்த்துக் குழம்பியவன், காசியிடம் ‘எல! ராயல் டாக்கீஸ் இப்பம் இல்லயா?’ என்று கேட்டான்.

தம்பி இப்படித்தான். தியேட்டர் என்று அவன் வாயில் வராது. டாக்கீஸ்தான். ‘இந்தக் காலத்துப்பிள்ளேளு மாரியா அவன் பேசுதான். எல்லாம் ஒன் வளப்பு’. சண்முகப்பா அவர் அம்மையைப் பார்த்து சொல்லுவார். ‘எல! நானாது டாக்கீஸுங்கென். எங்கம்மைல்லாம் கொட்டகைன்னுல்லா சொல்லுவா’. பதிலுக்கு ஆச்சி சொல்லுவாள்.

இரண்டொரு நாட்களில் தம்பி கல்கத்தாவுக்கேக் கிளம்புகிறான் என்கிற செய்தி வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

‘கல்யாணமும் பண்ணிக்கிடலங்கான். பளய மாரி இல்லன்னாலும் சின்ன யூனிட் போட்டு மில்லும் ஓடிக்கிட்டுதான இருக்கு! அத கவனிச்சுக்கிட்டு இங்கன இருக்கலாம்லா! அப்பிடியே ஒரு தாலியும் கட்ட வச்சிரலாம். நான் இன்னும் எத்தன நாளைக்கு இருக்கப் போறென்! நீயாது கொஞ்சம் சொல்லுடே காசி’.

சண்முகப்பாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே காசிக்குத் தெரியவில்லை. தம்பியிடம் அவன் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கேட்கும் எதிர்க்கேள்விக்கான அர்த்தம் காசிக்குப் புரிந்தது. சண்முகப் பெரியப்பாவுக்கோ, லோகம்மைக்கோ அது புரிய வாய்ப்பில்லை. முகத்தில் உணர்ச்சியே இல்லாமல், அதே சமயம் சற்றே கலங்கிய கண்களுடன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த தம்பி, காசியின் முகம் பார்க்காமல் கேட்டான்.

‘ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடியுமால?’

நன்றி- ஆனந்த விகடன்

post

உள்காய்ச்சல்

‘எல, இப்பதானெ காலேஜு விட்டு வந்தே? அதுக்குள்ள எங்கெ கெளம்பிட்டெ? பதிலேதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி தலை சீவிக் கொண்டிருந்தான் திரவியம்.

’ஒன்ட்டத்தானெ கேக்கென்?’

சிவகாமி மறுபடியும் மகனைப் பார்த்துக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. செருப்பை மாட்டிக் கொண்டு, ‘சொக்கத்தானப் பாத்துட்டு வாரேன்’ என்று சொல்லிவிட்டு, கிளம்பினான் திரவியம்.

‘சொக்கத்தானாம்லா சொக்கத்தான். அவன் ஒன் வாள்க்கைல சொக்கட்டான் ஆடத்தான் போறான். விடிஞ்சு போனா அடஞ்சு வார மனுசன் காதுலயும் என் பொலப்பம் விளமாட்டெங்கு. இந்த வீட்ல யாரு என்னை மதிக்கா? எல்லாரும் பைத்தியாரின்னுல்லா நெனைக்கியொ! எக்கேடும் கெட்டுப் போங்கொ.’.

சிவகாமியின் வார்த்தைகள் திரவியத்தின் காதுகளில் தேய்ந்து விழுந்தன. அதற்குள் அவன் செக்கடியைத் தாண்டியிருந்தான்.
இனி ராத்திரி சாப்பாட்டுக்குத்தான் திரவியம் வீட்டுக்கு வருவான். அதுவரை அவனை நெல்லையப்பர் கோயிலின் சுவாமி சன்னதியிலுள்ள சொக்கலிங்கத்தின் வளையல் கடையில் பார்க்கலாம். நெற்றியில் பிறை போன்ற சந்தனக் கீற்றும், செந்தூரமுமாக, ஜவ்வாது மணக்க,கடும் கோடைக் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் வளையல்கடையில் உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கம், திரவியத்துக்கு தூரத்துச் சொந்தக்காரன். திரவியத்துக்கும், அவனுக்கும் எப்படியும் இருபது வயது வித்தியாசம் இருக்கும். திரவியத்துக்கு வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் கற்றுக் கொடுத்தவன். கொடுப்பவன். தான் இதுவரைக்கும் கேள்வியே பட்டிராத அபூர்வமான புத்தகங்கள் பலவற்றை சொக்கலிங்கம் மூலம் திரவியம் படித்திருக்கிறான். ’பெண்களை வசியம் செய்வது எப்படி?, மங்கையரை மயக்குவதன் ரகசியங்கள், பெண்களுக்கே தெரியாமல் பெண்களின் மனதை அறிவோம்’ போன்ற பொது அறிவுக் களஞ்சியப் புதையலே சொக்கலிங்கத்திடம் இருந்தது.

‘இந்த புஸ்தகத்துல எளுதியிருக்கிறதுல்லாம் நெசந்தானா அத்தான்?’

தொண்டையைக் கனைத்துக் கொண்டு ரகசியமாக திரவியம் பலமுறை, சொக்கலிங்கத்திடம் கேட்டிருக்கிறான். அதற்கெல்லாம் சொக்கலிங்கத்திடமிருந்து ஒரே பதில்தான் வரும்.

‘எல்லாத்தயும் அத்தான் டெஸ்ட் பண்ணியே பாத்திருக்கென். போதுமா?’.

எப்போதும் சிரித்த முகமாகக் காட்டும் தூக்கலான முன்பல்லுடன், மேலும் சிரித்தபடி சொல்லிவிட்டு, கண்ணடிப்பான், சொக்கலிங்கம். திரவியத்துக்குக் காதெல்லாம் சூடாகும். மேற்கொண்டு கேட்க தைரியமில்லாமல் அமைதியாகிவிடுவான்.

‘காலேஜ் படிக்கெ? இன்னும் நீ தனியாளா இருக்கக் கூடாது மாப்ளெ. ஒனக்கொரு ஏற்பாடு பண்ணியிருக்கென்’.

திடீரென்று ஒருநாள் சொன்னான் சொக்கலிங்கம். சொன்ன கையோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ‘வா, பெருமாள் சன்னதி தெருவரைக்கும் போயிட்டு வருவோம்’ என்று தன்னுடைய டி.வி.எஸ் 50யில் திரவியத்தை அழைத்துக் கொண்டு சென்றான். திரவியத்துக்கு எதற்காக பெருமாள் சன்னதி தெருவுக்கு செல்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் சொக்கலிங்கத்திடம் கேட்க முடியாது. ‘அத்தான் எது செஞ்சாலும் ஒன் நன்மக்குத்தான் செய்வென். குறுக்கெ பேசக் கூடாது’ என்று வாயை அடைத்து விடுவான். பெருமாள் சன்னதி தெருவிலுள்ள ஒரு வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு, ‘வா மாப்ளே’ என்று வீட்டுக்குள்ளே போனான் சொக்கலிங்கம். தயங்கியபடியே பின் தொடர்ந்த திரவியத்தை அந்த வீட்டிலுள்ள ஒரு வயதான பெண்மணியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.

‘பெரியம்மை, இது யாரு தெரியுதா? பிரஸ்ல வேல பாக்காள்லா, கணவதி மாமா? அவாள் மகன் தெரவியம்’.

அந்த அம்மாளுக்குப் புரிந்த மாதிரியே தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, ‘காப்பி குடிக்கேளாடே?’ என்றபடி எழுந்து உள்ளே சென்றார். திரவியம் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். டி.விக்கு பின்னால் சுவற்றில் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றெழுதி எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்பட்டிருந்தது. ‘பெரியம்ம, நாங்க வெளிய உக்காந்திருக்கொம்’. உரக்கச் சொல்லிவிட்டு, திரவியத்தை சைகை காண்பித்து வெளியே அழைத்தான், சொக்கலிங்கம். வெளியே வந்து நிற்கவும், கோதுமை மாவு வாசனை மூக்கை அடைத்தது. ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டைக் காண்பித்து திரவியத்திடம் ஏதோ சொல்ல வந்தான், சொக்கலிங்கம். அதற்குள் இரண்டு தம்ளர்களில் காப்பி வந்தது. ‘லெச்சுமிய எங்கெ? கடைக்கு போயிருக்காளா?’. காப்பி தம்ளரை வாங்கியபடியே கேட்டான் சொக்கலிங்கம். ‘சேட்டு வீட்ல இருப்பா. இரி, கூப்பிடுதென்’ என்று சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டைப் பார்த்து ‘லெச்சுமி, லெச்சுமி’ என்று சத்தம் கொடுத்தார்கள். திரை விலக்கி லெட்சுமியும், செக்கச் செவேலென இன்னொரு பெண்ணும் வாசலுக்கு வந்தார்கள்.

’என்ன லெச்சுமி, எப்டி இருக்கெ?’ என்றான் சொக்கலிங்கம். ‘நேத்துத்தானெ பாத்தெ? அதுக்குள்ள எனக்கென்ன கொள்ள? நல்லாத்தான் இருக்கென்’. வெடுக்கென்று பதில் சொன்னாள் லெட்சுமி.

பெருமாள் சன்னதி தெருவிலிருந்து திரும்பும் போது, காந்தி சதுக்கத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, திரவியத்திடம் சொக்கலிங்கம் கேட்டான். ’அந்தப் பிள்ள எப்டி இருந்துது?’. திரவியத்துக்கு புரியவில்லை. ‘எந்தப் பிள்ள அத்தான்?’. எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக, திரவியத்தின் தோளைப் பிடித்தபடி, ‘எங்க பெரியம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பிள்ள. பாக்கறதுக்கு சோனியா அக்ரிகால் மாரி இருக்கா பாத்தியா?’. பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி நின்றான், திரவியம். ‘என்ன மாப்ளே? சொல்லு. எப்டி இருந்தா?’ தோளைப் பிடித்து சொக்கலிங்கம் உலுக்கவும், திரவியத்துக்கு அந்தப் பெண்ணின் உருவம் மனதில் தோன்றி மறைந்தது. தொண்டை வறண்டது. ‘ரொம்ப அளகா இருந்தா அத்தான்’. சத்தமாகச் சிரித்தான் சொக்கலிங்கம். ‘பொறவு? அத்தான் செலக்சன் சாதாரணமா இருக்குமா? இத்தன நாளா அந்தப் பிள்ள ஜங்க்ஷன்ல இருந்திருக்கு. போன மாசந்தான் டவுணுக்கு வந்தாங்களாம். நேத்து நெல்லையப்பர் கோயிலுக்கு போகும் போது நம்ம கடவாசல்ல வச்சு பாக்கும் போதெ முடிவு பண்ணிட்டெம்லா அந்தப் பிள்ள ஒனக்குத்தான்னு’. திரவியத்தின் தொண்டை மேலும் வறண்டது. எச்சில் முழுங்கி, ‘எத்தான்’ என்றான்.

‘மேலு சுடுத மாரி இருக்குமெ?’

‘ஆமா அத்தான்’

‘அப்ப ஒர்க்ஸ் அவுட் ஆயிட்டு. இதான் உள்காய்ச்சல். வெளியெ தெரியாது. ஆனா நீ மட்டும் ஃபீலிங் பண்ணலாம். இனிமெ எல்லாம் கரெக்டா நடக்கும் மாப்ளெ’.

வண்டியை ஸ்டார்ட் செய்தான் சொக்கலிங்கம்.

அதற்குப் பிறகு எல்லா சனிக்கிழமை மாலைகளிலும், சொக்கலிங்கத்தின் கடையில் அந்த சேட்டுப் பெண்ணுக்காகக் காத்திருந்தான் திரவியம். அவள் பெயர் சொப்னா என்பது தெரியவே பதினொறு சனிக்கிழமைகள் ஆனது. ஒருநாள் கூட அந்தப் பெண் சொப்னா திரவியத்தை ஏறிட்டுப் பார்த்ததில்லை. ஆனாலும் அவள்தான் திரவியத்தின் காதலி என்று சொக்கலிங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள், சொக்கலிங்கத்தின் கடையைத் தாண்டிச் செல்லும் போதும் திரவியத்துக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். ஆனால் சொப்னா எந்த சலனமுமில்லாமல் கோயிலுக்குள் நுழைவாள். திரும்பி வரும் போதும் அதே நிலைமைதான். அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் சொப்னாவைப் பற்றிய தகவல்களை சேகரித்துச் சொன்னான் சொக்கலிங்கம்.

‘சாரதா காலேஜ்ல பி.காம் மூணாம் வருசம் படிக்கா. அப்பா எலக்ட்ரிக் சாமான் கட வச்சிருக்காரு. இந்திக்காரின்னாலும் தமிள் தெரியும். ஆனா விஜய் ம்யூசிக்கல் கடைல போயி இந்திப் படம் கேசட்டா வாங்குதா. இந்த சட்டயக் கெளட்டி போட்டு ஆடுவானெ! அவன் பேரென்ன! ஆங், சலாம்கான். அவன் ரசிக. வேறென்ன டீட்டெயில்ஸு வேணும் மாப்ளெ?’

மனமுடைந்து நம்பிக்கை இழந்தான் திரவியம்.

‘நான் பி.ஏ மொத வருசம்தானெத்தான் படிக்கென்?’

‘அட கோட்டிக்காரா? நீதான் ஏளாப்புலயும், ஒம்பதாப்புலயும் பெயிலானெல்லா?’

‘ஆறாப்புலயும்ந்தான் அத்தான்’.

‘பொறவு என்ன? அப்பம் அவள விட நீ ஒரு வயசு மூப்புல்லா.’

ஆனாலும் திரவியத்துக்கு எதுவுமே சரியாக இல்லை. ‘திரும்பிக் கூடப் பாக்க மாட்டக்காளெ அத்தான்? ஒரு ஆளு நிக்குற உணர்வே இல்லாமல்லா அவ பாட்டுக்கு நம்மளத் தாண்டிப் போறா.’

‘மாப்ளெ’. கொஞ்சம் சீரியஸான தொனியில் பேச ஆரம்பித்தான் சொக்கலிங்கம். ‘அவ ஒன்னைய க்ராஸ் பண்ணும் போது ஒனக்கு மேலு சுடுதா இல்லயா?’

‘அதெல்லாம் சுடத்தான் செய்யுது? அவளுக்கும் சுடணும்லா?’

‘நீ கண்டயா? அவளுக்கும் சுடத்தான் செய்யும். நீ தொட்டுப் பாத்தாலும் தெரியாது. உள்காய்ச்சல்லா? எத்தனயோ பிள்ளைள பாக்கெ. எல்லாரப் பாக்கும் போதுமா மேலு சுடுது. அத்தான் சொன்னா சரியா இருக்கும். தைரியமா இரி. ஒங்க அம்மைக்கு சொப்புனா சப்பாத்தியா சுட்டு போடத்தான் போறா, பாரேன்’.

அதோடு விடவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை திரவியத்தை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள ராஜஸ்தான் ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று சப்பாத்தியாய் வாங்கிக் கொடுத்தான்.

‘நாளைக்கு கல்யாணத்துக்கப்புறம் அந்த பிள்ள இதத்தான் செஞ்சு போடப் போகுது. இப்பவெ பளகிக்கோடே.’

மூன்று வேளையும் சோற்றைத் தின்று பழகிய திரவியத்துக்கு சப்பாத்தி ஒத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் ராஜஸ்தான் ஹோட்டலுக்குப் போகும் வழியில், சாலைக்குமார கோயிலுக்கு முன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தாங்க முடியாமல் சொக்கலிங்கத்தின் கையைப் பிடித்துக் கெஞ்சி விட்டான். ‘தப்பா நெனைக்காதெ அத்தான். நீ என் நல்லதுக்குத்தான் செய்தே. இல்லேங்கல. ஆனா எனக்கு கொஞ்ச நாளா சரியா மோஷன் போக மாட்டெங்கு. சொன்னா புரிஞ்சுக்கொ’. உடைந்து அழுதே விட்டான்.

‘இதத்தான் மாப்ளெ கண்ணதாசன் எளுதுனாரு, பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்னு’. வயிற்று உபாதையையும் விட சொக்கலிங்கத்தின் இந்த பொருந்தா உதாரணம் திரவியத்தைக் கொடுமைப்படுத்தியது. கேட்டால், குறுக்கெ பேசக்கூடாது என்று சொல்வான் என்பதால் அமைதியாகவே இருந்தான்.

‘மாப்ளே. மஞ்சன வடிவம்மனுக்கு ஒரு சுலோகம் இருக்கு. நான் பசிஃபிக்கா ஒனக்காக அதச் சொல்லி வேண்டியிருக்கென். கூடிய சீக்கிரம் ஒனக்கு நல்லது நடக்கும், பாரேன்’ என்றான்.

‘அத்தானுக்குத்தான் நாப்பது வயசாகியும் கல்யாணம் ஆகல. ஒனக்காவது காலாகாலத்துல எல்லாம் நடக்கணும். அதுக்குத்தானெ நான் இப்படி கெடந்து எல்லாம் செய்தென்.’. திரவியத்துக்கு அழுகை வந்தது. இத்தனை நல்ல மனமுள்ளவனைப் புரிந்து கொள்ளாமல் அம்மை ஏசுகிறாளே என்று மனதுக்குள் வருந்தினான். ‘அவன் வயசென்ன? ஒன் வயசென்னல? ஐஸ்கூலுக்குக் கூட போகாத பய, கூட, காலேஜு படிக்கிற பயலுக்கு அப்படி என்ன சகவாசம்ங்கென்?’ திரவியத்தின் அம்மா மட்டுமல்ல, சொக்கலிங்கத்தின் அப்பாவுமே அவனை கடுமையாக ஏசி வந்தார். ‘என் காலத்துக்கப்புறம் நீ இந்த கடய தூக்கி நிறுத்துவேன்னு எனக்கு நம்பிக்க இல்ல. இப்பவெ கடன்காரனுக்கு பதில் சொல்ல முடியாம நான் கெடந்து தட்டளியுதென். நான் மண்டயப் போட்டுட்டென்னா நீ சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும், தெரிஞ்சுக்கோ’. அந்த மாதிரி சமயங்களில் திரவியம்தான் , சொக்கலிங்கத்துக்கு ஆதரவாய் இருப்பான்.

‘நான் இதுக்கெல்லாம் கலங்கல, மாப்ளெ. எனக்கு அம்மயும் இல்ல. இவாள் ஒரு ஆளுக்காகத்தான் திருநவெலில கெடக்கென். இவாள் போயிட்டான்னா டக்குன்னு போயி மிலிட்டரில சேந்துருவென்’.

‘நாப்பது வயசுக்கு மேலல்லாம் மிலிட்டரில ஆள் எடுக்க மாட்டாங்கத்தான்’. வாய் தவறி திரவியம் சொல்லி விட்டான்.

‘அதெல்லாம் எக்ஸ்ப்ரஷன் உண்டு மாப்ளெ’. திரவியம் மனதுக்குள் சொக்கலிங்கம் அத்தான் சொன்ன எக்ஸ்பிரஷன், எக்ஸெப்ஷனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

‘ஆனா அதுக்கு முன்னாடி ஒன் கல்யாணத்தப் பாத்துரணும், மாப்ளெ’.

தனக்காக இல்லையென்றாலும், சொக்கலிங்கம் அத்தானுக்காகவாவது சொப்னாவைக் காதலித்து திருமணம் செய்து விட வேண்டும் என்கிற ஆசை நாளுக்கு நாள் திரவியத்துக்கு அதிகமாகிக் கொண்டே வந்தது. வீட்டில் அம்மா சொல்லி, திரவியத்தின் அப்பாவும் சொக்கலிங்கத்தின் கடைக்கு திரவியம் போவதற்கு தடை விதித்தார். ‘ஒளுங்கா மரியாதயா காலேஜ் படிப்ப முடிக்க பாரு. எங்க மொதலாளி மேலப்பாளையம் கடைல ஒன்னைய எடுத்துக்கிடுதென்னு சொல்லியிருக்காரு. இனிமேலும் அந்த வளயல்கடக்காரப் பய கூடப் பாத்தேன்னா, ஒன்ன ஒண்ணும் செய்ய மாட்டென். நேரே அவன் கடைக்குப் போயி ஆடு ஆடுன்னு ஆடிருவென், பாத்துக்கொ’.

தன்னால் சொக்கலிங்கம் அத்தான் அசிங்கப்படுவதை திரவியம் விரும்பவில்லை. சில நாட்கள் சொக்கலிங்கத்தின் கடைக்குப் போகாமல் தவிர்த்தான். இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. காலேஜில் இருந்து கோயில் வாசல் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டுக்குக் கூட போகாமல் நேரே சொக்கலிங்கத்தின் கடைக்குப் போனான். கடை பூட்டியிருந்தது. பக்கத்துக் காப்பித்தூள் கடையில் கறைபடிந்த உள்பனியனோடு உட்கார்ந்திருந்த பாப்பையா அண்ணாச்சி, இவனைப் பார்த்து, ‘போயிரு போயிரு’ என்று சைகை செய்தார். ஒன்றும் புரியாமல், திரவியம் முழித்தபடி வீடு வந்து சேர்ந்தான். வாசலில் செருப்பைக் கழட்டும் போது அம்மா சொன்னாள்.

‘சொக்கத்தான் சொக்கத்தாம்பியே? ஒங்க சொக்கத்தான் செஞ்ச காரியம் தெரியுமா? பெருமாள் சன்னதி தெருல யாரோ ஒரு சேட்டுப்பிள்ளய இளுத்துக்கிட்டு ஓடிட்டானாம். போலீஸு கேஸாயிட்டு. ஒளுங்கா மரியாதயா வீட்டுக்குள்ள கெட’.

திரவியத்துக்கு மேல் சுடுகிற மாதிரி இருந்தது.

ஓவியங்கள்: ஸ்யாம்
நன்றி, ஆனந்த விகடன்

post

கன்னி

தடிவீரன்கோவில்தெருவிலிருந்த ஒரு தாழ்ந்த வீட்டின் கதவை நீண்ட நேரமாகத் தட்டிக் கொண்டிருந்தான், கைலாசம். எதிர்வீட்டிலிருந்து ஒரு அம்மா எட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு உள்ளே சென்று விட்டார். ’சாயங்காலம் நாலு மணிக்கு மேலயுமா தூங்குவாங்க?’. ஒரு கையில் பையும், இன்னொரு கையில் வேட்டிநுனியையும் பிடித்துக் கொண்டு நின்ற சங்கரண்ணனிடம் கேட்டான். ‘இன்னும் அஞ்சு நிமிசம் பாத்துட்டு கெளம்பிருவொம். எவ்வளவு நேரந்தான் தட்டிக்கிட்டிருக்க!. பாரு, எதுத்தவீட்டு பொம்பள யாரோ என்னமோன்னு பாத்துட்டு போறா!’ சலிப்புடன் சொன்னான், சங்கரண்ணன். இதற்குள் கதவு திறந்தது. பாதி திறந்த கதவுக்கு அந்தப் பக்கம் லெச்சுமண தாத்தா நின்று கொண்டிருந்தார். நெற்றியைச் சுருக்கி முகத்துக்குள் வந்து உற்றுப் பார்த்தார். ‘யாரு?’. அவர் உடம்பிலிருந்தோ, கசங்கிய வேட்டியிலிருந்தோ நார்த்தங்காய் வாசனை வந்தது. ‘நாந்தான் தாத்தா, கைலாசம். பெரியவீட்டு பேரன்’ என்று கைலாசம் சற்று உரக்கச் சொல்லவும், அடையாளம் தெரிந்து கொண்டதற்கு சாட்சியாக ஒரு சின்னச் சிரிப்பு, லெச்சுமண தாத்தாவின் முகத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்தது. ‘வா, சும்ம இருக்கியா?’ சுவர் பிடித்து ஊர்ந்து சென்றார். ‘சின்ன அக்காக்கு கல்யாணம். அதான் பெரியம்ம ஒங்களுக்கு காயிதம் குடுத்துட்டு வரச் சொன்னா’ என்ற படியே கைலாசம், தாத்தாவைத் தொடர சங்கரண்ணனும் வீட்டுக்குள்ளே நுழைந்தான்.

வீட்டின் அடுத்த கட்டுக்கு இவர்கள் செல்லவும், ஏதோ ஒரு துணிப்பொட்டலத்தை வாரிச் சுருட்டியபடி இரண்டு பெண்கள் அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தார்கள். படுத்துக் கிடந்த ஆச்சி மட்டும் எழுந்து உட்கார்ந்தாள். பெரியம்மை ஏற்கனவே சொல்லி அனுப்பியிருந்தாள். ‘அங்கன ரொம்ப நேரம் நிக்காத. போனமா, காயிதத்த குடுத்தமா, வந்தமான்னு இரி. தாத்தாவத் தவிர யாரும் பேச மாட்டாங்க. கண்ணுலயும் பட மாட்டாங்க’. பையிலிருந்து சங்கரண்ணன் எடுத்துக் கொடுத்த திருமண அழைப்பிதழை தாத்தாவிடம் கொடுத்த போது, உணர்ச்சியே இல்லாமல் ஆச்சி பார்த்துக் கொண்டிருந்தாள். கைலாசத்தை ‘வா’ என்றும் கேட்கவில்லை. அழைப்பிதழைக் கொடுத்து விட்டு கிளம்பும்போது, ‘போயிட்டு வாரென் ஆச்சி. கல்யாணத்துக்கு வந்துரு’ என்று கைலாசம் சொன்னபோது ‘சரி’ என்று தலையைக் கூட ஆட்டவில்லை. ‘ஏம்ணெ இப்பிடி இருக்காங்க?’ திரும்பி வரும் வழியில் சங்கரண்ணனிடம் கைலாசம் கேட்ட போது, ‘இன்னைக்கு நேத்தால? நம்ம பெரிய தாத்தா போட்ஸா இருந்த காலத்திலயெ இவாள வளிக்கு கொண்டு வர முடியலியெ? இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்பொறம் இந்த வீடும் போயிரும். இவாள் காலத்துக்கப்பொறம் என்ன ஆகப்போதோ? ச்சை, என்ன மனுசங்கடே.’ தெருவோரச் சாக்கடையில் காறித் துப்பியபடி சொன்ன போது, சங்கரண்ணனின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

கைலாசம் பிறந்த சில மாதங்களிலேயே அவனது தாத்தா காலமாகிவிட்டார். அவன் தாத்தா என்று பார்த்தது, அவனது சின்ன தாத்தாவான லெட்சுமண தாத்தாவைத்தான். அவரையுமே தூரத்தில் பார்ப்பதோடு சரி. அருகில் போய் பேசினாலும், ‘சும்ம இருக்கெல்லா?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். அவரது உருவத்தை கைலாசத்தால் முழுமையாக நின்று பார்க்கக் கூட முடிந்ததில்லை. அவரை நன்றாக அருகில் இருந்து அவன் பார்த்ததே, பெரிய ஆச்சி இறந்த வீட்டில்தான். வாசலிலுள்ள பந்தல்காலைப் பிடித்துக் கொண்டு, ஈனஸ்வரத்தில் ‘மதினி, மதினி’ என்று மூக்கொழுக முனகிக் கொண்டிருந்தார். அதோடு சரி. பாடை கிளம்பிப் போகும் போது ஆள் காணாமல் போனார். ஆற்றுக்கும் வரவில்லை. கருப்பந்துறை மண்டபத்தில் ஆச்சி எரிந்து கொண்டிருக்க, எல்லோரும் துக்கம் மறந்து ஊர்க்கதை பேச ஆரம்பித்தனர். லெச்சுமண தாத்தா பற்றிய பேச்சு வந்த போது, அவரது வயதையொத்த அந்தோணி தாத்தா கோபமாக இரைந்தார். ‘எல்லாத்தையும் வித்து, காரச்சேவும், ஓமப்பொடியுமா தின்னே தீத்துட்டானெய்யா! பஞ்சபாண்டவங்க மாரி ஒண்ணுக்கு அஞ்சு பொம்பள புள்ளய. ஒண்ணயாது கெட்டிக் குடுக்கணும்னு இன்னைய வரைக்கும் அந்த சவத்துப்பயலுக்குத் தோணலயே! நானும் எத்தன மாப்பிளவீடு சொன்னேங்கிய! எல்லாத்தையும் தட்டிக் களிச்சுட்டான். பெரிய பிள்ளைக்கே நாப்பத்தஞ்சு வயசிருக்காது? என் ரெண்டாவது மகளும், அவளும் ஒரே செட்டு. இப்ப என் பேத்திக்கு மாப்பிள பாக்க ஆரம்பிச்சாச்சு. என்னத்தச் சொல்ல?’. ஏற்கனவே அறிந்ததுதான் என்றாலும் கைலாசத்துக்கு அந்தோணி தாத்தா குரலில் அவற்றைக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது. ஆச்சி இறந்ததை சுத்தமாக மறந்து போயிருந்தான். அவனது மனசு முழுக்க லெச்சுமண தாத்தாவும், அவன் அதுவரை பார்த்தேயிராத, திருமணமாகாத அவரது ஐந்து மகள்களுமே சுற்றி சுற்றி வந்தனர்.

சின்ன அக்காவின் திருமண அழைப்பிதழ் கொடுக்கப் போன பிறகு, அண்ணனின் திருமணத்துக்கு லெச்சுமண தாத்தா வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ‘அவங்கதான் வாரதில்லையெ? அப்பொறம் என்னத்துக்கு காயிதம் குடுக்கச் சொல்லுதிய?’ கோபமும், சலிப்புமாக கைலாசம் கேட்ட போது, ’அவங்க எப்பிடியும் இருந்துட்டு போறாங்க. நாம செய்றத சரியா செஞ்சுரணும்’ என்றாள், பெரியம்மை. இந்தமுறை கதவைத் திறந்தது, லெச்சுமண தாத்தாவின் ஐந்து மகள்களில் மூத்தவள். அப்படித்தான் இருக்க வேண்டும். கைலாசம் முதல் முறையாக அவளைப் பார்த்தான். தலைமுடி நரைத்து, குண்டாக இருந்தாள். சூரியனே பார்த்திராத, வெளுப்பான முகத்தில், கண்ணைச் சுற்றி கருப்பு இறங்கியிருந்தது. ‘நீ கைலாசம்தானெ?’ கதவைத் திறந்தவள் கேட்டாள். ‘ஆ . . .மா’ என்று தயங்கியபடியே எச்சிலை முழுங்கிச் சொன்னவன், வேறு வார்த்தை வராமல் அவளையே ஒருவித பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘உள்ள வா. இப்ப யாருக்கு கல்யாணம்?’ என்றபடியே உள்ளே சென்றாள். உள் அறையில் இன்னும் இரண்டு பெண்கள் உட்கார்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தனர். எல்லாமே அழுக்குத் துணிகள். கைலாசத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. வேறு ஏதோ உலகத்துக்குள் பிரவேசித்துவிட்ட குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் நின்று கொண்டிருந்த கைலாசத்தை, கதவைத் திறந்தவளின் குரல் கலைத்தது. ‘தாத்தாவும், ஆச்சியும் தூங்குதாங்க. காயிதத்த என்ட்ட குடுத்துட்டு போ’ என்றாள். பையிலிருந்த அழைப்பிதழை எடுத்து கொடுத்தான். அதை பார்க்கக் கூட இல்லை. வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, கைலாசத்தின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இனி அங்கு நிற்கக்கூடாது என்பதை உணர்ந்தவனாக, கைலாசம் நகர்ந்தான். ‘அப்ப நான் கெளம்புதென்’ என்று அரைகுறையாகச் சொன்னான். ‘அத்தன்னு சொல்லு. நான் ஒனக்கு அத்ததான். சுசீலா அத்த’ என்றாள்.

அதற்குப் பிறகு கைலாசம் அந்த வீட்டுக்குப் போனது, அடுத்தடுத்த இரண்டு மரணங்களுக்கு. சொல்லிவைத்தாற்போல ஆச்சியும், லெச்சுமண தாத்தாவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் காலமானார்கள். இரண்டாண்டுகளில் சுசீலா அத்தையின் உருவத்தில் முதுமை அடர்ந்து படர்ந்திருந்தது. அதுவும் தாத்தா இறந்த வீட்டில் கைலாசம் அவளைப் பார்த்தபோது அவன் கண்களுக்கு சுசீலா அத்தை, அவள் அம்மாவைப் போலவேதெரிந்தாள். ஆச்சி தன் உருவத்தை தன் மகளுக்குக் கொடுத்து விட்டுப் போய்விட்டதாகவே கைலாசம் நினைத்தான். அப்போதுதான் சுசீலா அத்தையின் மற்ற சகோதரிகளையும் கைலாசத்தால் பார்க்க முடிந்தது. அதில் ஒருத்தியின் தலைமுடியில் நிறைய சடை விழுந்திருந்தது. அநேகமாக அவள்தான் சுசீலா அத்தைக்கு அடுத்து பிறந்தவளாக இருக்க வேண்டும். தன் தகப்பனாரின் பிணத்தின் முன் உட்கார்ந்து வாய்விட்டு அழும்போது, அவளது முன்வரிசைப் பற்களில் பாதி இல்லை என்பதை கைலாசம் கவனித்தான். லெச்சுமண தாத்தாவின் பிணத்தைத் தூக்கும் போது, வாசலில் வந்து நின்று கொண்டு, தலைவிரிகோலமாக நெஞ்சில் அறைந்தபடி சுசீலா அத்தையின் சகோதரிகள், ‘எப்பா, நாங்களும் ஒன் கூடயே வந்திருதோம்’ என்று உரத்த குரலில் கதறினார்கள். சுசீலா அத்தை மட்டும் கண்களில் கண்ணீர் காய்ந்து, ஏனோ இறுக்கமாகவே இருந்தாள்.. அன்றைக்கு கூடியிருந்த தெரு ஜனங்கள் அனைவரும், முதன்முறையாக இந்தப் பெண்களைப் பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்தார்கள். பாடையின் பின்பக்கம் தோள் போட்டு சுமந்திருந்த கைலாசம், பின்னால் திரும்பித் திரும்பி சுசீலா அத்தையையும், அவளது சகோதரிகளையும் பார்த்துக் கொண்டே சென்றான். ‘எல, பின்னால இருக்கவன் ஒளுங்கா புடி. பாட லம்புதுல்லா’. முன்பக்கத்திலிருந்து, வேம்பு மாமா சத்தம் போட்டார்.

தாத்தாவும், ஆச்சியும் போன பிறகு சுசீலா அத்தை மட்டும் வெளியே நடமாடத் தொடங்கினாள். நேரில் பார்க்க நேர்ந்தால், லெச்சுமண தாத்தா போலவே அவளும் ‘சும்ம இருக்கெல்லா?’ என்றபடி நகர்ந்து சென்று விடுவாள். ஒரே ஒருமுறை மட்டும் அதிசயமாக நெல்லையப்பர் கோயிலின் ஆறுமுகநயினார் சன்னிதியில் வைத்து, வழக்கமான ‘சும்ம இருக்கெல்லா’வைக் கேட்டுவிட்டு, ‘ஒங்க வீட்டுக்கு ஒருநாள் வாரென், என்னா?’ என்று சொன்னாள். ‘கண்டிப்பா வாங்க அத்த’ என்று கைலாசம் பதிலுக்கு சொன்னபோது, அவள் திரும்பிப் பார்க்காமல் வெளி பிரகாரத்துக்குச் சென்று விட்டாள்.

இவள் எங்கே வரப் போகிறாள் என்று நினைத்த கைலாசத்துக்கு, அவன் அம்மா இறந்த வீட்டுக்கு சுசீலா அத்தை வந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ஒங்க அம்மை கல்யாணம் ஆன புதுசுல ஒங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் இப்பொதான் வாரேன்’ என்று சுசீலா அத்தை சிரித்தபடி சொன்னாள். கைலாசத்தைத் தவிர எல்லோருக்கும் அவளது வருகையும், செய்கையும் பிடிக்கவில்லை. கைலாசத்துக்கு அந்த சூழலிலும் அவளைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக கைலாசத்துக்கருகில் அமர்ந்து கொண்டு அவனிடம் பேசிக் கொண்டே இருந்தாள், சுசீலா அத்தை. ‘எப்ப எடுக்கப் போறிய? வெளியூர்லேருந்து யாரும் வரணுமோ? பொறவாசல்லதான் ஆக்குப்புர போட்டிருக்கேளோ? தவுசுப்பிள்ள யாரு? சாம்பார் கொதிக்கற மணம் அடிக்கெ?’. சங்கரண்ணனும், சோமு சித்தப்பாவும் கைலாசத்தைத் தனியே அழைத்தார்கள். ‘எல, இவள வெளிய போகச் சொல்லுதியா, இல்ல நானே அவள வாரியலால அடிச்சு அனுப்பட்டுமா?’. சோமு பெரியப்பா பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். ‘இவன்ட்ட என்ன மயித்துக்கு கேக்கணுங்கென்? செறுக்கியுள்ளய நாலு இளுப்பு இளுத்து அடிச்சு வெளிய தள்ளிருவோம்’. சங்கரண்ணன் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான். ‘மேற்கொண்டு அவ பேசாம நான் பாத்துக்கிடுதென். அமைதியா இரிங்க’. கைலாசம் அவர்களை சமாதானப்படுத்தினான். எத்தனையோ முறை சுசீலா அத்தையையும், அவளது சகோதரிகளையும் பற்றி கண்ணீர் மல்க அம்மா அவனிடம் சொல்லியிருப்பது நினைவில் வந்தது. ‘கொஞ்சம் சொன்ன பேச்ச கேட்டாங்கன்னா, நாமளே அவங்க எல்லாருக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணி வச்சிருந்திருக்கலாம். அவங்கதான் வீட்டுக்குள்ளயே யாரையும் விட மாட்டக்காங்களெ! எந்த ஜென்மத்து பாவமோ, சாபமோ! அது நம்மளையும் சேந்ததுதான்’.

அம்மா இறந்த பிறகு சென்னைக்கு வந்துவிட்ட கைலாசத்துக்கு திருமணம் நிச்சயமானபோது, சுசீலா அத்தைக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் எண்ணம் அவனுக்கே வரவில்லை. ‘நீ குடுக்கணும்னு நெனச்சாலும் முடியாது. அவ்வொல்லாம் ஊர விட்டே போயாச்சு’. சங்கரண்ணன் சொன்னான். ‘அப்ப தடிவீரன்கோயில்தெரு வீடு?’ பதற்றத்துடன் கைலாசம் கேட்டதற்கு, ‘ஆமா, பெரிய தடிவீரன்கோயில்தெரு வீடு? அரமண மாரி இருந்த சாமிசன்னதி வீட்டையெ கமிஷன் கடக்காரருக்குத் தூக்கிக் குடுத்தாச்சு’. எரிச்சலான குரலில் மேலும் சொன்னான், சங்கரண்ணன். திருமணம், குழந்தை, வேலைமாற்றம் என ஆண்டுகள் நிமிடங்களாக, நொடிகளாக ஓடியபிறகு சுசீலா அத்தை பற்றிய நினைப்பு எப்போதாவது கைலாசத்துக்கு வருவதுண்டு. ஆனால் எத்தனை முயன்றும் அவனால் சுசீலா அத்தையின் மற்ற சகோதரிகளின் உருவங்களை மனதுக்குள் கொண்டு வரமுடியவில்லை. லெச்சுமண தாத்தாவின் உருவமே நாட்கள் ஆக ஆக நினைவில் மங்க ஆரம்பித்தது. திருநெல்வேலிக்கு வருவதும் குறைந்து போனது.

‘ஒங்கப்பாட்ட கல்யாணம் ஆன புதுசுல கேட்டேன், திருச்செந்தூருக்குக் கூட்டிட்டு போங்கன்னு. வருஷம் பன்னெண்டாச்சு. நீ படிச்சு வேலைக்கு போயிதான் என்னைக் கூட்டீட்டு போவே போலுக்கு’. மகளிடம் கைலாசத்தின் மனைவி இடித்துக் காட்டுவது, ஒரு முடிவுக்கு வந்தது. விடுப்பு எடுத்து திருச்செந்தூர் வந்து இறங்கியபோது, சிறுவயதில் பார்த்த அதே திருச்செந்தூர், அதே விபூதி, சந்தன வாசத்துடன் வரவேற்றது. செந்திலாண்டவனிடத்திலும் மாற்றமில்ல. கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்து கைலாசம் சட்டையைப் போடும் போது, ‘அப்பா, Seaல குளிக்கணும்பா’. அடம்பிடித்தாள் மகள். ‘கோயிலுக்கு போறதுக்கு முன்னாடிதாண்டா குளிக்கணும்’. சமாதானத்தை ஏற்காத மகளுக்காகக் கடலில் இறங்கி சிறிதுநேரம் குளித்து விட்டு, பிரகாரத்தில் வீசும் காற்றில், கலைந்த தலையும், குளிர்ந்த உடம்புமாக கைலாசம் வந்து கொண்டிருந்தான். ‘ஏம்பா, சூடா வட போடறாங்க. வாங்குங்களேன்’. மனைவியின் குரலில் உள்ள ஆசை, இவனையும் தொற்றிக் கொள்ள, வடை போடும் ஆச்சியை நெருங்கும் போது, அந்த ஆச்சி சுசீலா அத்தையின் ஜாடையில் இருந்தாள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவள் உருவம் நம் மனதில் தங்கியிருக்கிறதா, என்ன? இவளை எப்படி நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது? திரும்பி விடலாம் என்ற நினைப்பு மூளையைச் சென்றடைவதற்குள், சுசீலா அத்தைக்கு, கைலாசத்தைத் தெரிந்து போனது. தினமும் பார்ப்பது போல் சாவகாசமாகச் சிரித்தபடி ‘சும்ம இருக்கியா’ என்றாள். வேறு பேச்சு வராமல் கைலாசம் தடுமாற, அருகில் நின்ற அவன் மகளைப் பார்த்து, ‘இதாரு, ஒன் மகளா?’ என்று கேட்டபடி நாலைந்து வடைகளை எடுத்து ஒரு பேப்பரில் சுற்றி அவள் கைகளில் கொடுத்தாள். யாரோ ஒரு வடை போடும் ஆச்சி தருவதை வாங்கத் தயங்கியபடி, கைலாசத்தின் மகள் தன் தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, ‘ஏட்டி, நான் ஒண்ணும் மூணாம் மனுசி இல்ல. வாங்கிக்கோ. ஒங்கப்பா சத்தம் போட மாட்டான்’ என்று சொல்லி கைகளில் திணித்தாள். கைலாசத்திடம், ‘நீ சொல்ல வேண்டியதானெ, நான் யாருன்னு’ என்றவள், ‘அதுக்காக ஆச்சி கீச்சின்னு சொல்லீராதெ. அக்கான்னே சொல்லு. நான் அப்பிடியேதானெ இருக்கென். இன்னும் கல்யாணம்கூட ஆகலெல்லா.’ சிரிப்பு மாறாமலேயே சொன்னாள் சுசீலா அத்தை.

[புகைப்படங்கள்: நன்றி (c) Oochappan]

(ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை)

post

சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்

’கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது.

ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்து நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய் விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியிலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, சமாதானபுரம் பஸ்ஸ்டாப் பக்கத்தில் ‘காதி வஸ்திராலயத்தில்’ சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால் உடனே இறங்கி விடுவேன். அருகில் போய் ‘மாமா’ என்றழைத்தாலும் உடனே ஏதும் பேசிவிட மாட்டார். ஒரு சின்ன சிரிப்பைக் கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டு கதரில் முழுக்கைச் சட்டையும், கதர் பேண்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடுமுதுகு வரைக்கும் புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், திருநவேலி ஊருக்குள் பேண்ட் சட்டையில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து பார்த்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசையைப் பார்த்து முகம் கோணி, நாணி பின்வாங்குவதை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன். மாமாவுடன் அவரது ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு பைக்கில் ஒரு இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்து கொண்டிருந்தான். இதை புரிந்து கொண்ட மாமா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணாபுரம் வந்தவுடன் மாமா, ஓரமாக பைக்கை நிறுத்தியபிறகு, வேறு வழியில்லாமல் கடந்து சென்றபடி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கி பறந்தான்.

அன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவைதான். ஆனால் அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவரது கேமரா கோணங்களில் பார்க்கும் போது, அச்சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம்புரியாத அழகும், உயிர்ப்பும் அடைந்து விடும். சிற்பங்கள் மட்டுமில்லை. மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலையோரத்தில் நுங்கு விற்பவர்கள், ரைஸ்மில்லிலிருந்து மரப்பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு சந்தனத் தலையோடு பேரூந்தின் ஜன்னலோரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தப்பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்து வரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.

கேமரா மட்டுமல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதார் என்றால் எனக்கு ’மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும், இன்னும் வேறு சில ஹிந்தி திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன, அவை என்னென்ன போன்றவற்றை சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமாவிடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ’இது அகௌஸ்டிக், இது எலக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது.

‘நம்ம ஊர்ல எல்லா பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்’.

மாமா திருத்துவார். தேவ் ஆனந்தின் ‘Guide’ படப்பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலையெல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறைய பழைய ஹிந்தி பாடல்களை கிதாரில் வாசித்து காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளெ . . இந்தப் படத்தயும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈரவிளிக்காவியங்கள்’. ஒவ்வொரு முறை அந்தப் பாடலை வாசித்து முடிக்கும் போதும் ’ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவதில்லை.

நான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் ஒரு மாடியறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும், அத்தைக்கும் பேச்சு வார்த்தை அறவே இல்லாமல் போனதற்கு அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒருமுறை இது பற்றிப் பேசும் போது மாமா தனக்குத் தானே சொல்வது போல, ‘எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தாச்சு. கம்ப்ளெயிண்ட் எண்ட்ட இல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுல ஒங்க அத்தைக்கு தாங்கல’ என்றார். அதற்கு ஏற்றாற் போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகைகள், நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்து வந்தார். மாமாவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவை விட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ‘என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்?’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு?’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா? அதான்’ . சிரித்தபடி சொன்னார்.

சஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவ குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்திலுல்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத்துக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு வந்தாலும் அவரது கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்து திண்ணைகள், ஆடுமாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை மாமாவுடன் சென்றிருந்த போது மாமா கோயிலுக்குள் வரவேயில்லை. ‘நீ போயிட்டு வாடே’ என்று சொல்லிவிட்டு கேமராவுடன் வாசலிலேயே நின்று கொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து

‘ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்

நீடுநின்றவை ஆடும் அம்மானே

அம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்

வெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே’

என்று உருகி வணங்கி விட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார், மாமா. ஒருசில தினங்களில் அவற்றை பிரிண்ட் போட்டு காண்பித்தபடி சொன்னார். ‘இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்கள பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்கின் டோன கவனி’.

***************** ******************** *********************

வழக்கமாக மாமா தென்படும் ‘காதி வஸ்திராலயம், காளி மார்க் கேண்டீன், வ.உ.சி மைதானம்’ போன்ற எந்த இடத்திலும் மாமாவை சில நாட்கள் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து விட்டு அத்தையிடமும் கேட்காமல் விட்டு விட்டேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்ற போது, மாமாவின் வீட்டில் ராஜ்தூத் நின்று கொண்டிருந்தது. உடனே மாமாவைப் பார்க்க சென்றால் அத்தை ஏசுவார் என்பதால் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாடியறைக்குச் சென்றேன். குமார் கந்தர்வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வடநாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ‘யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’. இந்தக் கேள்விதான் என்னிடமிருந்து வரும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவராக, ‘அவளேதான்’ என்றார், மாமா. ‘அவளேதான்’ என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை. சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவேதான் நினைத்தார்.

அருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலில் வைத்து சுமி அக்காவை முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதும் ‘இது ஸ்மிதா’ என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ‘எப்டி இருக்கெ மக்கா?’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா?’ என்றேன். சட்டென்று சிரித்தபடி ’அடப்பாவி’ என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்து போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.

சுமி அக்காவுக்கு திருச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு மாமா சென்றிருந்த போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ‘என்னடே ஆளையே காணோம்?’ என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, நான் அவரது புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் மாமாவின் மாடியறைக்கு வந்தேயறியாத அத்தை, மூச்சு வாங்க மாடியேறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த சுமி அக்காவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறேதும் பேசாமல் கீழே இறங்கி சென்று விட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க குனிந்தார். ‘நான் எடுக்கென் மாமா’. மாமாவைத் தடுத்து விட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ’பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்தும் விதமாக கழுத்திலும், காதுகளிலும் நகையணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப்படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிடார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்குமான உறவு குறைந்து போனது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவது போல தோன்றியது. அத்தை வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்திருந்தார். முன்பை விட உடல் கனம் கூடியிருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்து, சிநேகப் பார்வை பார்த்து ‘வந்துட்டியா? ம்ம்ம், போ. அங்கனயேதான்’ என்று மாடியை காண்பித்தார்.

சுற்றிலும் கிதார்கள்,பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவது போல கண்மூடி படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டிருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்திருந்தார். ‘வெயில் தாள எடுத்துரலான்னு இருக்கொம்’ என்றார். நான் பார்க்காத காலங்களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பலமுறை சொல்லுவேன்.

‘மெட்ராஸ்ல இருந்து?’ எதிர்க்கேள்வி கேட்பார்.

‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன்.

‘பெரிய ஆளுன்னா என்னதுடே?’. என்பார்.

அதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது. ‘நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா’.

அத்தையின் இன்னொரு சகோதரரின் குரலது. என்னருகில் இருந்தவர், ‘இந்தா வாரேன்’ என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்று கொண்டிருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பது போலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ‘எங்கெட்டி வந்தெ?’ என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர்களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட சுமி அக்கா, ‘மக்கா’ என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்த படி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ‘எல, இங்கெ வாங்க’ என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ‘மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டு போ’ என்றார்.

மூங்கில் மூச்சு

’ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் தொடராக வந்து கொண்டிருந்த ’மூங்கில் மூச்சு’ புத்தகவடிவில் வெளிவந்து விட்டது.

’மூங்கில் மூச்சு’ ஆன்லைனில் வாங்க,

http://udumalai.com/?prd=Mungil+Muchu&page=products&id=10435