சந்திராவின் சிரிப்பு

திருநெல்வேலியில் நான் இருக்கும் வரை எந்த சினிமாவுக்குப் போவது என்பதிலிருந்து எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்பது வரை எல்லாவற்றையும் எப்போதுமே குஞ்சுதான் முடிவு செயவான். பதின்வயதின் இறுதியில் ஓர் இலக்கில்லாமல் கண்ணில் தென்படுகிற பெண்களையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்தோம். இப்படியே போனால் சரியில்லை என்று ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் காதலிக்கத் தொடங்குவோம் என்றான் குஞ்சு. அப்படி அவன் தேர்ந்தெடுத்த பெண்தான் சந்திரா. சந்திரா எங்கள் காதலியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை குஞ்சு என்னிடம் சொன்னவுடனேயே நான் அவளைப் பார்க்கத் துடித்தேன். ‘அவசரப்படாதே, சாயங்காலம் நாலரை மணிக்கெல்லாம் எங்க வீட்டு வாசல்ல நிப்போம். கரெக்டா க்ராஸ் பண்ணுவா. அப்போ காட்டுதென்’ என்றான். சொல்லிவைத்த மாதிரி சரியாக நாலரை மணிக்கு கல்லணை ஸ்கூல் இள,கருநீல பாவாடை தாவணி யூனி·பார்மில் இரட்டை ஜடை போட்டு சிரித்தபடியே நடந்து வந்த சந்திராவை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன். இருந்தாலும் இந்த முறை பார்த்த போது காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருந்தது. இருந்தாலும் அவள் இனிமேல் எங்கள் காதலி அல்லவா? கோதுமை நிறத்திலிருக்கும் அவள் எங்களைக் கடந்து செல்லும் வரை ரொம்ப நாட்கள் பழகியவள் போல, கன்னத்தில் குழி விழச் சிரித்தபடியே சென்றாள். எனக்கு ஆரம்பமே நல்ல சகுனமாகத் தோன்றியது.

எங்கள் தெருவுக்கு மிக அருகில்தான் சந்திராவின் வீடு இருந்தது. இத்தனை நாளும் அந்த வீட்டை கவனிக்காமல் போனோமே என்றிருந்தது. ஆனாலும் கொஞ்சம் உதறல் எடுத்தது. காரணம், சந்திராவின் தகப்பனார் ராமையா பாண்டியன். அவர் ஒரு வஸ்தாது. கட்டப்பஞ்சாயத்துகளில் அதிக நேரம் செலவழிப்பவர். சொளவு சைஸில் கையில் பெரிய மோதிரம் போட்டிருப்பார். அதில் முத்தமிழறிஞர் சிரித்துக் கொண்டிருப்பார். ராமையா பாண்டியனுக்கும் அவரது ஆசைநாயகிக்கும் பிறந்த மகளே சந்திரா. அடிக்கடி சந்திராவின் வீட்டில் ஆசாரி வேலை நடந்து கொண்டிருக்கும். அவ்வப்போது ஒரு புது வாசற்கதவைப் பொருத்துவார் ஆசாரி. நள்ளிரவில் குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டும் ராமையா பாண்டியனுக்கு கதவைத் திறப்பதில்லை சந்திராவின் அம்மா. உடனே கதவை அடித்து நொறுக்கி உடைத்து உள்ளே சென்று விடுவார் ராமையா பாண்டியன். இத்தனைக்கும் அந்தக் கதவுக்கான சாவி அவர் சட்டைப்பையில்தான் இருக்கும்.

ராமையா பாண்டியனின் மகளை, அதுவும் அவர் ஆசைநாயகிக்குப் பிறந்தவளை நாம் காதலிப்பது நமக்கு சரிப்பட்டுவருமா என்று கவலையுடன் குஞ்சுவிடம் கேட்டேன். ‘காதல்ன்னு வந்துட்டா வேற எதப் பத்தியுமே யோசிக்கக் கூடாது’ என்றான். சரி நடப்பது நடக்கட்டும் என்று சந்திராவைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினோம். தினமும் காலையில் அவள் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பும் போது சரியாக அவள் வீட்டுக்கருகில் ஆளுக்கொரு சைக்கிளில் காத்து நிற்போம். நாளடைவில் நாங்கள் நிற்கிறோமா என்பதை சந்திராவே தேட ஆரம்பித்தது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. பின்னர் சைக்கிளை உருட்டியபடியே அவளுக்குப் பின்னாலேயே சென்று கல்லணை ஸ்கூல் காம்பவுண்ட் சுவர் வரை அவளை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு பிறகு சைக்கிளில் ஏறி நாங்கள் பள்ளிக்குச் செல்வோம். மாலையில் அவசர அவசரமாக பள்ளியிலிருந்து வேகமாக சைக்கிளை மிதித்து கல்லணை ஸ்கூல் பக்கம் மூச்சிரைக்கப் போய் நிற்போம். எங்களைப் பார்த்து சிரித்தபடியே சந்திரா வருவாள். அன்றைய இரவு இதைப் பற்றிய பல நினைவுகளோடு கழியும்.
சுமுகமாகச் சென்று கொண்டிருந்த எங்கள் காதலில் ஒரு வில்லன் புகுந்தான். அம்மன் சன்னதி பஜனை மடத்தில் சாய்ந்தபடி நானும், குஞ்சுவும் எங்கள் காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றிய தீவிரமான யோசனையில் இருந்தபோது லாரி ஓனர் சண்முகம் பிள்ளையின் மகன் மஹாதேவன் வந்தான். மஹாதேவன் பார்ப்பதற்குக் கொஞ்சம் போல்தான் ஆண் போல் இருப்பான். நடக்கும் போது ஆங்கில எழுத்து S போல ஒருமாதிரி வளைந்து நடப்பதால் அவனை S மஹாதேவன் என்றே அழைத்து வந்தோம். அவனது உண்மையான இனிஷியலும் S என்பதால் நாங்கள் அவனை கேலி செய்கிறோம் என்பதை அவன் உணர்ந்ததே இல்லை. நேரே எங்களிடம் வந்த S.மஹாதேவன் ‘ஏல, சந்திரா பின்னால சுத்துறத விட்டுருங்க’ என்றான். குஞ்சு எழுந்து நின்றான். ‘என்ன சொல்லுதெ’ என்றான். ‘நான் அவளுக்கு கவிதல்லாம் எளுதிருக்கென். அவளுக்கு என்ன ரொம்பப் புடிக்கும்’ என்று தொடர்ந்து சொன்னான். ‘இத எதுக்குல எங்கக்கிட்ட வந்து சொல்லுதெ’ என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டான் குஞ்சு. ‘எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைச்சேளோலெ. ஆள வச்சு உங்க ரெண்டு பேரையும் அடிச்சு போடுவேன்’ என்று S மஹாதேவன் சொல்லவும் குஞ்சு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். என் பங்குக்கு நானும் அவனை ஒரு அறை அறைய, எதுவும் பேசாமல் திரும்பிச் சென்ற S மஹாதேவன் கொஞ்ச தூரம் சென்று எங்கள் இருவருக்கும் இல்லாத எங்கள் மூத்த சகோதரிகளைத் திட்டிவிட்டு, ‘என்ன நடக்கப்போதுன்னு பொறுத்திருந்து பாருங்கலெ’ என்றான்.
இனிமேலும் நாம் தாமதிக்கக் கூடாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற குஞ்சு ஒரு வாழ்த்து அட்டை வாங்கினான். புதுவருட வாழ்த்து அட்டை அது. அதில் அழகாக தானும் கையெழுத்திட்டு, என்னையும் கையெழுத்து போடச் சொன்னான். ஸ்டைலாக என் பெயரை எழுதினேன். சந்திராவின் வீட்டு முகவரிக்கு போஸ்ட் பண்ணினோம். மறுநாளே அவளுக்குக் கிடைத்த விஷயம் எங்களுக்குத் தெரிய வந்தது. அன்று மாலை எங்களைக் கடந்து செல்லும் போது குவியலாக நாங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டையை எங்கள் முன்னே கீழே போட்டுவிட்டு எங்களைப் பார்த்து சிரித்துவிட்டும் சென்றாள் சந்திரா. நான் மனமுடைந்து போனேன். இந்த விஷயத்தில் எங்களுக்கு சீனியரான கணேசண்ணனிடம் போய் குஞ்சுவும்,நானும் கேட்டோம். ‘அட கூறுகெட்ட குப்பானுகளா! ஏல, அவ என்ன பாஞ்சாலியா, ரெண்டு பேரும் அப்ளிகேஷனப் போட்டா அவ என்னல செய்வா? கிளிச்சுதான் போடுவா’ என்றான் கணேசண்ணன். கணேசண்ணன் சொன்னதையும் விட வேதனையான விஷயம் அடுத்தமாதமே நடந்தது. வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு S மஹாதேவனுடன் சந்திரா ஊரை விட்டே ஓடிப் போனாள். பல ஊர்களில் சுற்றியலைந்து கொண்டிருந்த அவர்களை ஒருமாதிரியாக அவர்கள்வீட்டார் தேடி பிடித்தனர். சந்திராவின் படிப்பு நிறுத்தப்பட்டது. அடுத்த ஒருசில வருடங்களில் இருவீட்டாரின் சம்மதத்துடன் S மஹாதேவன் – சந்திராவின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. அன்று நாம் ஊரில் இருக்கக் கூடாது என்று என்னை குஞ்சு கன்னியாகுமரிக்கு இழுத்துச் சென்று விட்டான்.

கன்னியாகுமரியில் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்து கண்ணீர் விட்டபடி ‘வாள்க்கைங்கறது . . . .’ என்று ஆரம்பித்து ‘அந்தப் பிள்ள நம்மகூட எப்படியெப்படில்லாம் இருந்தா’ என்றான். அவள் எங்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லையே என்று குழம்பினேன். இன்னும் என்னவெல்லாமோ குஞ்சு உளறினான். எனக்கும் அழுகை பொங்கி பொங்கி வந்தது. கால ஓட்டத்தில் நான் சென்னைக்கு வந்துவிட, குஞ்சு அவனது தொழிலில் மும்முரமாக, இருவருக்குமே திருமணமாகி பிள்ளை பிறந்து ஏதேதோ நடந்து விட்டது. சென்ற வருடத்தில் திருநெல்வேலி சென்றிருந்த போது எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு ஒரு பெண்மணி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வர வர அந்த பெண் என்னையே பார்த்தபடி வருவதை உணர்ந்தேன். தன் குழந்தையை டியூஷன் அழைத்துச் செல்கிறாள் போலத் தெரிந்தது. என்னை நெருங்கவும் என் முகத்தைப் பார்த்து சிரித்தாள். சந்திராவேதான். அதே சிரிப்பு. அந்த கல்லணை ஸ்கூல் யூனிஃபார்மும், ரெட்டை ஜடையும் மட்டும்தான் இல்லை. நான் சந்தேகத்துடன் அவளது பார்வையைத் தவிர்த்து ஓரக்கண்ணால் பார்த்தேன். எவ்விதத் தயக்கமுமின்றி என்னைப் பார்த்து நன்றாக சிரித்தபடியே கடந்து சென்றாள். வீட்டுக்குள்ளிருந்து யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டேன். தெருமுனை திரும்பும் போது ஒரு முறை திரும்பி மீண்டும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள் சந்திரா. குஞ்சு அப்போது அவனது அலுவலகத்தில் இருந்தான். தாமதிக்காமல் உடனே அவனுக்கு ஃபோன் பண்ணினேன்.

‘எல, நம்ம சந்திரா என்னயப் பாத்துச் சிரிச்சுக்கிட்டே போனா’ என்றேன்.

‘எந்த சந்திரா?’ என்று கேட்டான் குஞ்சு.

தாயார் சன்னதி

அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் தனது இறுதி நாட்களை அம்மா கழித்துக் கொண்டிருந்த போது அங்கு அவளுக்கு பல ஸ்நேகிதிகள் கிடைத்தனர். எல்லோரும் அம்மாவைப் போலவே. நோயின் தன்மையும், தீவிரமும் மட்டுமே மாறுபட்டிருந்தது. அவர்களில் சிலர் அம்மாவின் வயதை ஒத்தவர்கள். ஒரு சிலர் மூத்தவர்கள். தங்களின் நோய் குறித்த கவலைகளை மறந்து ஏதோ பிக்னிக் வந்தது போல அவர்கள் பழகிக் கொள்வதைப் பார்க்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவருக்குமாக சேர்த்து வேதனை மனதைப் பிசையும். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்திலிருந்து வந்தவர்கள். அங்கிருந்த நாட்களில் அநேகமாக ஒருவரின் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்திருந்தது. தங்களின் நோய் போக அவரவர், தங்களின், மற்றவரின் குடும்பங்களுக்காகவும் கவலைப்பட ஆரம்பித்தனர். அது போலவே சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் தவறவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவரும் அம்மாவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு முஜிபுர் என்று ஒரு மகன். இருபது வயது இருக்கலாம். சட்டையும், கைலியும் அணிந்திருப்பான். மண்டை சின்னதாகவும், உடம்பு குண்டாகவும் இருக்கும். கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன். என் தகப்பனாரைப் பார்த்தால் ‘மாமா, சும்மா இருக்கேளா’ என்பான். பதிலுக்கு ‘மருமகனே’ என்று என் தந்தை அழைக்கும் போது சந்தோஷமாகச் சிரிப்பான். என்னிடமும் நன்றாக பழகினான். முஜிபுரின் தாயார் தன மகன் யாரிடமும் பேசுவதை கட்டுப்படுத்தியே வந்தார்கள். அவனது மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் யாரும் அவனையும், தன்னையும் காயப் படுத்தி விடுவார்களோ என்ற பயம் அந்தத் தாய்க்கு. ஆனால் எங்களிடம் முஜிபுர் பழகுவதை நாளடைவில் அவர்கள் தடுக்கவில்லை. முஜிபுருக்கு எந்த நேரமும் சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்தனை. ‘மெட்ராசுல ஒரு ஹோட்டல்லயும் சின்ன வெங்காயத்தையே கண்ணுல காணோம். எல்லாத்துக்கும் பல்லாரி வெங்காயத்தத்தான் போடுதானுவொ. இட்லியை ஒரு கடையிலயும் வாயில வைக்க வெளங்கலையே. திருநெவேலி அல்வான்னு போர்டு போட்டிருக்கான். ஆனா வாயில போட்டா சவுக்குன்னு சவுக்குன்னு சவைக்கவே முடியலே’ . . இப்படி பல புலம்பல்கள். ஒரு நாள் அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன். மனது அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. முஜிபுர் அருகில் வந்து உட்கார்ந்தான். ‘அண்ணே, இங்கனக்குள்ளெ நல்ல மீனு எந்த கடையில கிடைக்கும்’ என்று கேட்டான். ‘எனக்கு தெரியாதே முஜிபுர். நான் சாப்பிடறதில்லையே’ என்றேன். ‘நீங்க ஐயரா? கருப்பா இருக்கீங்க?’ என்றான். நான் பதிலேதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனேயே ‘மன்னிச்சுக்கிடுங்க. உங்களை கருப்பா இருக்கீங்கன்னு சொல்லிட்டேன்’ என்று எழுந்து சென்றான். வருகிற, போகிற எல்லோரிடமும் போய் பேசிக் கொண்டே இருக்கிறான் என்று முஜிபுரை அவன் தாயார் மனமே இல்லாமல் சில நாட்களிலேயே ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.

அம்மாவின் வார்டிலேயே பாப் ஹேர்கட்டிங்கில் ஒரு பெண்மணி இருந்தார்கள். நீண்ட காலம் டெல்லியில் வாழ்ந்த அவர்களுக்கு சாந்தமான முகம். மெல்லப் பேசுவார்கள். நன்கு படித்தவர்கள் என்பது அவர்களின் தோற்றத்திலேயே தெரிந்தது. சில வேளைகளில் ப்ரீத்தி ஜிந்தா சாயலில் உள்ள அவர் மகள் அவருக்கு சாப்பாடு எடுத்து வருவாள். எப்போதும் பேண்ட் ஷர்ட்தான் அணிந்திருப்பாள். தன் தாயாருக்கு நேரெதிராக முகத்தில் ஒரு துளி சிரிப்பு இருக்காது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவிடம் ‘அந்தப் பொண்ணுக்கிடே ஏதோ சோகம் இருக்கும்மா’ என்பேன். ‘எல்லா ஆம்பிளைப் பயல்களும் பொம்பளைப் பிள்ளையைப் பாத்து சொல்றது இது. உளறாதே’ என்பாள் அம்மா. ஒரு நாள் அம்மாவின் அறைக்கு சென்ற போது அந்தப் பெண்ணின் தாய், அம்மாவிடம் அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். நான் வெளியே வந்துவிட்டேன். பிறகு அம்மா சொன்னாள். ‘நீ சொன்னது சரிதான். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட புருஷனோட வாழலியாம். இன்னிக்கு அவளோட கல்யாண நாளாம். தான் போறதுக்குள்ளே அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி பாத்துரணும்னு சொல்லுதாங்க’ என்றாள். இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அந்தப் பெண் ப்ரீத்தி ஜிந்தாவை என்னால் இயல்பாகப் பார்க்க முடியவில்லை.

கீமோதெரபி என்னும் கதிரியிக்கச் சிகிச்சையை அம்மாவுக்குக் கொடுக்கத் துவங்கினார்கள். அம்மாவுக்கு எப்போதுமே நீண்ட கரு கரு கூந்தல். கீமோதெரபியின் விளைவாக முதலில் கடுமையான வாந்தியும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி உதிர்வதும் ஆரம்பிக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்தது. சில நாட்களிலேயே மொட்டையாகிப் போனாள். அம்மாவின் உடன்பிறந்த தங்கையான என் சித்தி சிறு வயதிலிருந்தே அம்மாவின் தலைமுடியைப் பார்த்து சொல்வாள். ‘ உனக்கு முடியும் உதிர மாட்டேங்குது. நரைக்கவும் இல்லையே’ என்று. அம்மாவின் மொட்டைத் தலையைப் பார்த்து தாங்க மாட்டாமல் கதறி அழுதவள் சித்திதான். திரையுலகின் பிரபல விக் மேக்கரான ரவியிடம் சொல்லி ஒரு நல்ல விக் ஏற்பாடு செய்து அம்மாவுக்குக் கொடுத்தேன். ஓரிருமுறை அதை அணிந்திருப்பாள். பிறகு அவள் அதை விரும்பவுமில்லை. அதற்கு அவசியமும் இல்லாமல் போனது.

அந்த கொடுமையான கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாகவே இருந்தாள். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அம்மாவுடன் சிகிச்சை பெற்று வந்த ஒரு பிராமணப் பாட்டி. சதா சிரிப்பும், கேலியுமாக சந்தோஷமாக மருத்துவமனையில் வளைய வந்து கொண்டிருந்தார் அந்த பாட்டி. பார்ப்பதற்கு மூன்றாம் பிறை படத்தில் கமலின் வீட்டுக்கு அருகில் ஒரு பாட்டி இருப்பாரே! அவரை அப்படியே உரித்து வைத்திருப்பார். நான் விளையாட்டாக இதை அவரிடம் கேட்டு வைக்க, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘என் ஆட்டோகிரா·ப் வேணுமா’ என்பார். தீவிர கிரிக்கெட் ரசிகையான பாட்டியைப் பார்க்க அவரது மகன் வருவார். அவருக்கு ஒரு நாற்பது வயதிருக்கும். ‘இன்னிக்கு மேட்ச் இருக்காடா?’. மகனைக் கேட்பார் பாட்டி. ‘ஆமாமா. எப்படியும் இந்தியா தோத்திரும். ஆஸ்திரேலியா definiteஆ win பண்ணிருவான்’. . . வம்பு பண்ணுவார் மகன். ‘அடேய் தேசத் துரோகி’. . . சிரித்துக் கொண்டே மகனை கடிந்து கொள்வார் அந்த வயதான தாய்.

முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்து விட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. அம்மாவுக்கு தெரிந்திருக்கும்.