post

மக்களின் இசைக்கு வயது 71

இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.

நாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.

’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா!’.

பாளையங்கோட்டைக்காரரானபேஸ்கிதாரிஸ்ட்கிறிஸ்டோஃபர்ஸார்வாள்சொல்வார்.

நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோ!ஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.

தன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.

‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?’ என்று கேட்டேன்.

‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டிய!அம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.

இந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.

தீதும், நஞ்சும் . . .

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

மேற்கண்ட குறளை இன்றைய இளைஞர்கள் யாரிடமாவது சொன்னால், ‘தெலுங்குப் பட லிரிக்ஸா ஸார்? மியூஸிக் யாரு? டி.எஸ்.பி.யா? என்று கேட்கக் கூடும்.

இருபதாண்டுகளுக்கு முன்பு நான் சென்னைக்கு வந்த புதிதில் சில அறிவுபூர்வமான நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் அனைவருமே ‘அறிவுஜீவி’ என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களிடம் பழக ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே அறிந்து கொண்டேன். நாளை மறுநாள் வெளியாக இருக்கிற ஹாலிவுட் திரைப்படத்தை இணையம் வழியாக விருகம்பாக்கத்தில் அமர்ந்து பார்த்து விட முடிகிற வசதியெல்லாம் அப்போதில்லை. தீவிர திரைப்பட ஆர்வலர்கள் நடத்துகிற ஒருசில திரைப்பட விழாக்களில் மட்டுமே உலகின் முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க முடியும். ‘அறிவுஜீவி’ நண்பர்களுடன் திரைப்பட விழாக்களுக்குச் செல்லத் துவங்கினேன். லூயி புனுவல், குரசோவா, அண்டோனியோனி, ப்ரெஸ்ஸோன், பெர்க்மன் போன்றோரின் படங்கள் உவப்பை அளித்தன. படம் முடிந்ததும் அவை குறித்த விவாதம் திரையரங்கின் வாயிலிலேயே துவங்கும். அண்டோனியோனிக்கும் லா.ச.ராமாமிர்தத்துக்கும் முடிச்சு போட்டு சில கருத்துக்களை முன் வைப்பார், ஒருவர். கீஸ்லோவ்ஸ்கியை நகுலனுடன் ஒப்பிடுவார் மற்றொருவர். இப்படி பல திசைகளிலிருந்தும் பல்வேறுபட்ட கலைஞர்களின் பெயர்களும், அவர்களது ஆக்கங்களும் அலசி ஆராயப்பட, நான் திக்குமுக்காடிப் போவேன். இது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்வின் எத்தனை பொன்னான தருணங்களை வீணடித்திருக்கிறோம் என்று மனதுக்குள் குமைவேன்.

’நாளைக்கு மிக முக்கியமான விவாதம் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க பிரதர். புதுமைப்பித்தனும், ரித்விக் கட்டக்கும்தான் டாப்பிக்’. தாம்பரம் அருகே ஏதோ ஒரு பகுதியின் ஒரு மொட்டைமாடி. தரையில் ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்தோம். பச்சையும், பழுப்புமாகக் காட்சியளித்த ஒரு பெரிய பாட்டிலை நடுநாயகமாகக் கொண்டு வைத்து, அதற்குத் துணையாக சில கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் தம்ளர்கள். ‘டேய் தம்பி. இது உனக்குடா’. ஒரு பொட்டலம் நிறைய காராபூந்தி எனக்கு வழங்கப்பட்டது. ஒருவரை ஒருவர் அத்தனை பிரியமும், வாஞ்சையுமாக மதித்து, வியந்து அவரவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து விவாதம் தொடங்கியது. புதுமைப்பித்தன் ஒரு எழுத்தாளரே அல்ல என்றார் ஒரு அண்ணன். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. புதுமைப்பித்தனை அவர் சிறுமைப்படுத்துகிறாரே என்கிற அதிர்ச்சியை விட, தீவிர புதுமைப்பித்தனின் வாசகரான இன்னொரு அண்ணன் இப்போது என்ன சொல்லப் போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் பொறுமையாக மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், ‘அவரோட கருத்த அவர் சொல்றாரு. அவரோட பார்வைல புதுமைப்பித்தன் அவருக்கு ஒண்ணுமில்லாம இருக்கலாம் இல்லியா! அது மூலமா நமக்குத் தெரியாத கோணங்கள் கெடைக்க வாய்ப்பிருக்கு. கவனி’ என்றார். மாற்று அபிப்ராயம் சொல்கிறவர்களை மதித்து செவிசாய்க்கும் அடிப்படை நாகரிகமெல்லாம் எனது சிற்றறிவுக்கு அப்போதுதான் தெரிய வந்தது. எத்தனை உயர்ந்த மனிதர்களின் தொடர்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியில் மனதும், தொடர்ந்து தின்ற காராபூந்தியால் வயிறும் நிறைந்தது. ஆனால் எனது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே புதுமைப்பித்தனின் ஆதரவாளர், புதுமைப்பித்தனை ஒத்துக் கொள்ளாத நண்பரின் தாயார் குறித்து சொன்ன ஒரு தகாத வார்த்தையில் துவங்கியது ஆரோக்கியமான விவாதத்தின் அடுத்த கட்டம். பதிலுக்கு அவர், இவரது சகோதரியின் கற்பு குறித்த தனது நியாயமான சந்தேகத்தை அந்த சபையில் முன்வைத்தார். விவாதத்தின் அடுத்த நிலையில் ஒரு வேட்டியும், சில சட்டைகளும் கிழிந்தன. ஒரு நண்பரின் பல் உடைந்து லேசாக ரத்தம் வந்தது. அவர்தான் விவாதத்துக்கு ஏற்பாடு செய்தவர். அடுத்து சாப்பிடலாம் என்று நான் ஆசையுடன் பார்த்து வைத்திருந்த மசாலாக் கடலைகள் தரையில் சிதறி உருண்டன. உச்சக்கட்டமாக பாட்டிலை உடைத்து ஒருவரின் இருதயத்தைக் குறி வைத்து ஒரு சஹிருதயர் குத்த முயன்ற போது நான் அந்த இடத்தை விட்டுக் காணாமல் போயிருந்தேன். அதற்குப் பிறகு அந்த கும்பலில் இருந்த ஒரு மனிதரை பல வருடங்களுக்குப் பிறகு, நரைத்த தாடியும், அழுக்கு உடையுமாக வடபழனியில் இருபத்து நான்கு மணிநேர மருத்துவமனையில் பார்க்க நேர்ந்தது.

நான் வாழ்க்கையில் முதன் முதலில் பார்த்த, குடிக்கிற மனிதர் யார் என்பதை யோசித்துப் பார்த்தால் நாகு அண்ணன் தான் நினைவுக்கு வருகிறார். ஒரு விற்பனை நிறுவனத்தின் வேன் ஓட்டுனரான நாகு அண்ணன் சட்டை பித்தான்களைத் திறந்து விட்டபடி தனது மைனர் செயின் வெளியே தெரிய வேன் ஒட்டுவார். யாரிடமும் அதிர்ந்தோ, இரைந்தோ பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் புன்னகைக்கிற முகம். வேன் ஒட்டிச் செல்லும் போது, கண்ணில் படுகிற நடக்க சிரமப்படுகிற வயோதிகர்கள், பள்ளிக்கூடப் பை சுமந்து செல்லும் சிறுவர் சிறுமிகள் போன்றவர்களை வேனை நிறுத்தி ஏற்றிச் செல்வார். என்னையும் அப்படி ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டதுண்டு. அதே நாகு அண்ணன் ஒரு மங்கிய மாலைப் பொழுதில் தந்திக் கம்பத்துக்குக் கீழே வேட்டி இல்லாமல் எச்சில் ஒழுக விழுந்து கிடந்தார். தெரு விளக்கில் அவரது மைனர் செயின் டாலடித்தது. மறுநாள் போதை தெளிந்து அவர் வீடு திரும்பிய பிறகுதான் தனது தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்த விவரம் அவருக்குத் தெரிய வந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள்.

கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் மது அருந்துவதில் உள்ள நியாயங்களை பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பின் போது, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளி சொன்னது வேறு மாதிரியாக இருந்தது. ‘எனக்கு எழுதப் படிக்கத் தெரியும் ஸார். அதான் குடிக்கறதில்ல’. முதலில் எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘அதான் பாட்டில்லயும், கடையுலயுமே எழுதியிருக்குதே ஸார், குடி குடியைக் கெடுக்கும்’னு. நம்மள நம்பி வீட்ல மூணு பேரு இருக்காங்க. நாம நல்லா ஸ்ட்ரெங்த்தா இருந்தாத்தானே ஸார் அவங்களும் நல்லா இருப்பாங்க’ என்றார்.இவர் இதை சொல்லிக்கொண்டிருக்கும் போது சக தொழிலாளிகள் கடுமையாக கேலி செய்தனர். ‘இவன் வேஸ்டு ஸார். இவன்கிட்ட போயி இதல்லாம் கேக்கிறியே! எங்கக்கிட்டெ கேளு. நாங்க சொல்றோம். எந்தெந்த சரக்கு அடிச்சா என்னென்ன எஃபெக்ட்டுன்னு’. வேடிக்கைப் பேச்சுகள் தொடர்ந்தன. அவரவர் நியாயம் அவரவர்க்கு. சாகித்ய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்கிறார். ’திரும்பத் திரும்பச் சொல்ல வருவது மதுப்பழக்கம் என்பது ஒழுக்கம் சார்ந்தது, தனிநபர் விருப்பம் சார்ந்தது என்பதும் அஃதோர் அறச்சார்பு பற்றியதல்ல என்பதுவும், மேலும் எனது கட்டுப்பாடில் இருக்கும் சகல மூல பலத்தோடும் சொல்ல விழைவது, குற்ற உணர்வுடன் செய்ய வேண்டிய காரியம் அல்ல அதுவென்பது’.

ஆனால் குடிப்பது குறித்த கூச்சத்தை, அதை ஒரு குற்றமாகக் கருதி, வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருந்த முந்தைய தலைமுறையினரைப் பார்த்திருக்கிறேன். நெருங்கிய உறவினரான மாமா ஒருவருக்குக் குடிப்பழக்கம் உண்டு என்பது அவர் மறைந்த பிறகு எனக்குத் தெரிய வந்த நம்பவே முடியாத செவிவழிச் செய்தி. ஒரு நாளும் அவர் தள்ளாடியோ, வேட்டி விலகியோ, வார்த்தை தவறியோ பார்த்ததில்லை. ஆனால் இப்போது அதை எதிர்பார்க்கவே முடியாது. கலைஞர்கள், குறிப்பாக திரைப்படத்துறையில் இருப்பவர்கள் அனைவருமே குடிப்பழக்கம் உடையவர்கள் என்பதாக ஆணித்தரமாக நம்புகிறவர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது. அது குறித்து வருத்தமடைந்ததில்லை.

சில வாரங்களுக்கு முன்பு சாலிகிராமத்துத் தெரு ஒன்றில் பள்ளிச் சீருடையிலிருந்த ஒரு சிறுவன், தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனது நண்பரொருவனைப் பார்த்து உரத்த குரலில், ‘மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்’ என்று புகழ் பெற்ற ஒரு தமிழ்த்திரைப்படத்தின் வசனத்தைச் சொல்லிக் கத்தினான். எனது மகனை விட ஓரிரு வயதே அதிகமாக உள்ள அந்தச் சிறுவன்தான், கடந்த இருபதாண்டுகளில் முதன் முறையாக நான் திரைப்படத்துறையில் இருப்பவன் என்பதை நினைத்து என்னை வெட்கித் தலைகுனியச் செய்தவன்.