post

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.

மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!